வரலாற்றின் வழித்தடங்களில்… குமிழியையும், நீண்ட காத்திருப்பையும் முன்வைத்து-டி சே தமிழன்


“History is unkind to those it abandons, and can be equally unkind to those make it.”

-Salman Rushdie (Two Years Eight Months and Twenty-Eight Nights)

1.
ரஷ்யப் புரட்சி பற்றியும், அதன் முன்னணிப் புரட்சி வீரர்களான செம்படை (red army) பற்றியும் நாம் விரிவாக அறிந்திருப்போம். அவர்களின் புரட்சிக்கால நினைவுகள், உலக மகா யுத்தங்களில் அவர்களின் மிகப்பெரும் பங்களிப்புக்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களினூடாக நாங்களும் செம்படைகளில் ஒருவராக மாறியிருப்போம். புரட்சி முடிவடைந்த பின், செம்படையினர் நெடும் மலைகளுக்கும், கொடும் பனிப்பாலைகளுக்கும் இடையிலிருந்த குக்கிராமங்களுக்கும் சேவையாற்ற அனுப்பப்பட்டதையும் வியந்து பார்த்திருப்போம்.

புரட்சி நடக்கும் வரை தொழிலாளர்களாலும், விவசாயிகளும் வழிநடத்தப்பட்ட இப்படையை பின்னர் லியோன் டிராஸ்கி உழைப்பாளிகளுக்கு இருக்கும் ‘அதிகாரத்தை’ விலத்தி, முறைப்படுத்தப்பட்ட ‘இராணுவமாக’ அமைப்புப்படுத்துகிறார். அவ்வாறு ஒழுங்குபடுத்திய டிராஸ்கியையும், உள்கட்சி சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டி பல்லாயிரக்கணக்கான செம்படைகளையும், ஸ்டாலின் பின்னாட்களில் இல்லாமலும் செய்தார் என்பது வேறு கதை. புரட்சியின்போது லெனின், ஜார் மன்னனை மட்டுமில்லை,  அவரது குடும்பத்தினரையும் கழுவிலேற்றியதை அவ்வாறு எளிதில் வரலாற்று மறக்கவில்லை ஸ்டாலினது குலாக் கடுழீயச் சிறை, உள்ளிருந்தவர்களையும் எதிராளியாக்கப் பார்த்ததன் விளைவென எடுத்துக்கொள்ளலாம். இப்போது ரஷ்யப்புரட்சி, புரட்சியின் பின் அங்கே நிகழ்ந்தவற்றை, அதன் அரசியல் சரி/பிழைகளைச் சற்று ஒதுக்கிவைப்போம்.

ஒருகதைக்கு ரஷ்யப் புரட்சி தோற்றிருந்தால், நாம் இன்னும் வியந்துகொண்டிருக்கும் செம்படைகளின் வீரம்/அர்ப்பணிப்பு என்பவற்றுக்கு இன்று வரலாற்றில் என்ன இடம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? அப்படித் தோல்வியடைந்திருந்தால் நாம் வாசித்த புத்தகங்களில் எழுதப்பட்டவை எல்லாம் வேறு விதத்தில்தான் எழுதப்பட்டிருக்குமா அல்லது அப்படி எழுதியிருந்தாலும் நாம் அதை வாசிக்கும்போது – வெற்றியடைந்த புரட்சி/உலகமகாயுத்த எதிர்ப்பு- என்ற வாசிப்பை விடுத்து வேறு விதமாகத்தான் செம்படைகளை வாசித்திருப்போமா?

அதை வேறுவிதமாக, இன்று நமது ஆயுதமேந்திய ஈழப்போராட்டம் வெற்றியடைந்திருந்தால் அல்லது ஆகக்குறைந்தது சுயநிர்யணத்துடன் கூடிய அதிகாரப் பரவலாக்கத்துடன் சுமுகமாய்  நமது ஆயுதப்போராட்டங்கள் முடிந்திருந்தால் நாம் எழுதும் ஈழப்போராட்ட வரலாறுகள் வேறு விதத்தில் எழுதப்பட்டிருக்குமா? அல்லது இவ்வாறு எழுதப்பட்டிருந்தாலும் – வெற்றியடைந்த யுத்தத்தின் முன் – இதெல்லாம் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்குமா? இன்றைக்கு ஸ்டாலினின் கொடுங்காலம் பேசப்பட்டாலும் ‘என்னவென்றாலும் ரஷ்யாவை இறுக்கமான தேசியத்துக்குள் கட்டமைத்தவர், ஹிட்லரின் பாஸிச நாஸிப்படைகளுக்கு ஸ்டாலின்கிராட்டின் சமாதி கட்டியவர்’ என்று ஸ்டாலினும் ஏதோ ஒரு தருணத்தில் வியந்து பலரால் நினைவுகூரப்படுகின்றார் அல்லவா?

ஆகவேதான் வரலாறு குழப்பமானது மட்டுமில்லை வரலாற்றை எழுதுவது என்பதும் சிக்கலானதுதான். நமது ஈழப்போராட்டத்தின் ஆயுத வரலாறு என்பது தொடக்கத்திலேயே உள் இயக்க/ சகோதரப் படுகொலைகளுடன் தொடங்கியிருக்கின்றது. ஆகவே தொடக்கமே சிக்கலானது. அப்போது இயக்கத்தைத் தொடங்கியவர்களும் இருபதுகளிலும் இருந்தவர்கள்.  இவர்களை சரியாக வழிநடத்தாமல் ஒருபக்கம் எமது தமிழ் அரசியல்வாதிகள் உசுப்பேத்தினார்கள் என்றால், இன்னொருபுறம் இந்திய அரசு தனது நலன் சார்ந்து ஆயுதங்களையும், பயிற்சிகளையும் அள்ளியும் கொடுத்தது. இயக்கங்கள் வீக்கமடையத் தொடங்கிய காலத்துக்கு முன்,ஒரளவு இடதுசாரி/களப்பணிகளுடன் இயங்கியவர்களும் பின்னர் அமைதியாக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்களத்திலிருந்து அகற்றப்பட நமது இயக்கங்கள் அனைத்தினதும் தலைமைகள், அதிகாரம் குவிந்த மையங்களாக  இயக்கங்கள் தொடங்கிய காலங்களிலேயே மாறிவிட்டிருந்தன என்பதும் கசப்பான உண்மை.

2.

அன்று – எழுபது/எண்பதுகளில்- இருபதுகளுக்குள்ளும், இருபதையொட்டிய வயதில் இருந்தவர்களே இயக்கங்களைத் தொடங்கியவர்களும், இணைந்தவர்களாகவும் இருந்தார்கள். அந்த ‘முதிர்ச்சியற்ற’ வயதின் போதாமைகளும், எதையாவது செய்தாகவேண்டும் என்ற உத்வேகமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அன்றைய சூழல் அப்படிப் பலரை உந்தித்தள்ளத்தான் பலர் இயக்கங்களில் இணைந்துகொண்டார்கள். பிறகு நடந்தது எல்லாமே கசப்பான வரலாற்றுப் பக்கங்களாய் நம்முன்னே விரிந்துகிடக்கின்றன.

இவ்வளவு கசடான பக்கங்களாய் நமது ஆயுதப்போராட்டம் இருந்ததற்காய், ஒருவர் அன்று வளர்த்த கனவை- ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதல்- கொடுங்கனவாக நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. காலம் நம்மை இப்படி ஆக்கியது என்பதற்காய், அன்று துணிந்துகொண்ட இலட்சியத்தில் ஒரு அப்பாவித்தனத்தை ஏன் நாம் வேண்டுமென்றே ஒளித்துக்கொள்ளவேண்டும். ஆனால் இன்று நமது போராட்டச் சூழலை வைத்து எழுதப்படுகின்ற  தன் வரலாற்று பனுவல்கள் அனைத்துமே குற்றவுணர்வுடனேயே எழுதப்படுகின்றன. அதை ஒருவகையில் தன்னை எழுதித் தன்னிடம் வைத்திருக்கும் ஆற்றொண்ணவொண்ண துயரங்களைக் கடத்தல் என்பதென ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி எழுதுதல் பலருக்கு ஒரு தெரபியாக இருப்பதை நாம் மறுக்கத் தேவையில்லை. ஆனால் trauma இற்குள் இருப்பவர்க்கு traumaவைப் பேசுதல் முதல் கட்டமெனில், அவர்களின் கடந்தகாலத்தில் நடந்த நல்ல விடயங்களைப் பேசுவது என்பது அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியாகவும் இருக்கும்.

அதற்காகத்தான் ‘குமிழி’யையும், ‘The long watch’ (தமிழில் நீண்ட காத்திருப்பு) என்ற இரண்டு தன் வரலாற்றுப் பனுவல்களை எடுத்துக்கொள்கின்றேன். குமிழி புளொட்டில் 1985-1986 இல் இணைந்து அதன் உள்ளே இயங்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பார்த்து அந்த இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய ஒருவருடைய (பல்வேறு பாத்திரங்களுள்ள தன்னிலைகளால் இங்கே நான் என்னும் கதைசொல்லி இவற்றைச் சொல்கின்றார்) அனுபவங்களை புனைவின் மொழியில் சொல்கின்றது. ‘நீண்ட காத்திருப்பு’ என்பது ஒரு இராணுவக்கப்பலுக்குப் (சாகரவர்த்தனா) பொறுப்பான அதிகாரியான ஒருவர்,  அவரின் கப்பலைப் புலிகள் தகர்த்து அவரை எட்டு வருடங்கள் சிறை வைத்த அனுபவங்களைப் பேசுகின்ற ஒரு நினைவுகளின் தொகுப்பாகும்.

இந்த இரண்டு நூல்களையும் அடுத்தடுத்து வாசித்து தற்செயலானது என்றாலும் இரண்டுமே  trauma பற்றிச் சொல்கின்றது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ‘குமிழி’யில் ஒருவர் இரண்டு வருடங்கள் இயக்கம் ஒன்றில் பார்த்த அனுபவங்கள் என்றால், ‘நீண்ட காத்திருப்பில்’ ஒருவர் எட்டு ஆண்டுகள் சிறையில் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகும்.

இவ்விரு அனுபவங்களும், ஒருவருக்கு பல்வேறு உளவியல் சிக்கல்களைக் கொடுத்திருக்கின்றது என்றாலும், ‘நீண்ட  காத்திருப்பில்’ அஜித் போயகடா அதை மீள நினைத்துப் பார்ப்பதினூடாக அந்தத் துயரத்தை ஒருவகையில் கடக்கமுயல்கின்றார் என்பதை அவர் கதை சொல்லும் தொனியில் கண்டடைய முடியும்,  தனக்கு நிகழ்ந்த கடும் விடயங்களைக் கூட எந்தப் பக்கமும் சாராது (அல்லது அளவுக்கதிகமாய் அந்த நிகழ்வுகளில் அரசியல் சரிபிழைகளைப் பேசாது) தான் உணர்வதைச் சொல்வதால் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக விரிகின்றது.

இப்போது ‘குமிழி’ உள்ளிட்ட நமது ஆயுதப்போராட்டம் பற்றிய இவ்வாறான நூல்களில் ஏன் அளவுக்கதிகமாய் குற்றவுணர்வு மேலோங்கி நிற்கின்றது என்பது குறித்து யோசித்துப் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஏன் அஜித் போயகொடா இராணுவத்தை விமர்சித்தாலும், தான்  தனித்த ஒரு மனிதன் என்கின்ற ரீதியில் கதை சொல்லும்போது, நமக்கு இராணுவம் செய்த கொடும் நினைவுகள் உடனே நிகழ்வுக்கு வராது அதனோடு ஒன்றிப்போகமுடிகின்றதே? அது ஏன்? எப்படி அவரால் இவ்வாறான மனதைத் தொடும் ஒரு கதையை – எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை- பெற்றபோதும் சொல்லமுடிகின்றது என்ற திசையில் வைத்து நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

அஜித் போயகொட புலிகளால் விடுவிக்கப்படும்போது கிட்டத்தட்ட அவரவர் கால அளவுக்கு ( 8 ஆண்டுகள்) இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கியஸ்தவரான கெனடி என்பவரும் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்படுகின்றார். இன்று அந்தக் கெனடி இருந்திருந்தால் எப்படி தன் சிறைக்கால அனுபவங்களை எழுதியிருப்பார். அவரும் தோற்றுப்போன போரின் சாட்சி என்ற குற்றவுணர்வுடந்தான் அவரது தன் வரலாற்று சிறை அனுபவங்களை எழுதியிருப்பாரா?

இவ்வாறு சிந்திக்கக் கோருவதன் நோக்கம், நமது இயக்கங்களின்/ஆயுதப்போராட்டங்களின் கொடூரங்களைப் பேசுவதைத் தவிர்ப்பதோ அல்லது அவை சென்று சேர்ந்து திசைகளின் துயரங்களைப் பேசாமல் இருக்கவேண்டுமோ என்பல்ல அர்த்தம். ஆனால் நாம் எல்லோரும்  ஏன் ஒரேமாதிரியான வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பதற்காக இதைச் சொல்கின்றேன்.

 

3.

குமிழியையோ, புதியதோர் உலகையோ, இன்னபிற நூல்களையோ வாசிக்கும்போது, இதில் கொடுமையானவர்களாக/சித்திரவதையாளர்களாக இருப்பவர்களின் நிலையிலிருந்து அவர்களின் சார்பிலிருந்து ஒரு நூல் எழுதப்பட்டால் எவ்வாறு இருக்குமெனவும் யோசித்துப் பார்த்தேன். அவர்களும் ஒருவகையில் எல்லோரையும் போன்று தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற ஒத்த கருத்தோடுதானே இயக்கங்களுக்குப் போயிருப்பார்கள். அவர்களுக்கு என்றும் ஒரு குரல் இருக்குமல்லவா? அவர்கள் ஏன் அந்த இடத்தைச் சென்றடைந்தார்கள் என்பதற்கும் ஒரு கதையிருக்கும் அல்லவா?

இதையெல்லாவற்றையும்விட, இந்தக் குற்றவுணர்வும், செய்துவிட்ட வாதையுணர்வும் அவர்களுக்கு அல்லவா எல்லோரையும் விட மிகுந்த தொந்தரவாக தொடர்ந்து அவர்களின் வாழ்விற்குள் சுழன்றாடியபடி இருக்கும். அப்படியெனில் அவர்கள் எப்படி தமது  traumaஇற்குள் இருந்து மீண்டிருக்கின்றார்கள் அல்லது மீளாமலே தமது வாழ்நாளைக் கழித்துக்கொண்டே இருக்கின்றார்களா? அவர்களும் தமது தன் வரலாற்றுக் கதைகளை எழுதவேண்டும். ஆகக்குறைந்தது தமது சொந்தப்பெயர்களிலோ/இயக்கப்பெயர்களிலோ எழுதாவிட்டால் கூட, அவர்கள் தமது குற்றங்களிலிருந்து நீங்குவதற்காய்/பாவமன்னிப்புக்களைப் பெறுவதற்காய் ஏதோ ஒரு புதிய புனைபெயரிலாவது எழுதலாம்.

உதாரணத்துக்கு அஜித் போயகொடா தம்மைச் சிறையில் வைத்த காலங்களில் இருந்த பதினம் விசாரணையாளன் ஒப்பிலான் என்பவரைப் பற்றி நமக்குக் கூறுகின்றார். அவர் புலிகளின் புலனாய்வளராக இருந்துகொண்டு இந்திய றோவினது உளவாளியாகவும் இருந்திருக்கின்றார். பின்னர் இலங்கையிலிருந்து தப்புவதற்காக இலங்கை அரசுக்கும் புலிகளுக்குள் இருந்து வேவுபார்த்தாகவும் கூறுகின்றார். இந்த ஒப்பிலான் (அவருக்கு வேறு ஒரு பெயரும் இருக்கின்றது. அது இங்கே வேண்டாம்) அஜித் போயகொட சிறையிலிருந்து வெளிவந்தபின் (அநேகமாய் போர் முடிந்தபின்னதாக இருக்கவேண்டும்) கனடாவிலிருந்து முகநூலில் தன்னைத் தொடர்புகொண்டதாகவும், ஒப்பிலான் தனது கதைகளைச் சொல்லித்தான் தப்பித்திருப்பார் என்றும் போயகொடா தனது நூலில் சந்தேகம் தொனிக்க எழுதிச் செல்கின்றார்.  இந்த ஒப்பிலான் தனது அனுபவங்களை எழுதினால் இன்னொருவகையாக இருக்கும் அல்லவா?

நமக்கு முதல் எதிரியாய், பல தசாப்தங்களாய் நம்மை ஒடுக்கிய/சித்திரவதைகள் செய்த அரசை/இராணுவத்தை இன்று ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிட்ட, அவர்களையும் சக மனிதர்களாய் மதித்து, எமக்கு இழைத்த எல்லாக் குற்றங்களுக்கும் மேலாய் பழகத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், சகோதரப்படுகொலைகளைச் செய்தவர்களும்/சித்திரவதையாளர்களாக மாறியவர்களும் ஓடி ஒளிந்துகொள்ளத்தேவையில்லை. இற்றைக்கு இவ்வாறு சித்திரவதைக்குட்பட்டவர்களோ, இவர்களினால் தமது குடும்ப உறவுகளைப் பலிகொடுத்தவர்களோடு ‘கண்ணுக்கு கண்’ கேட்கும் பழிவாங்கும் நிலையில் இருக்கப்போவதில்லை. அவர்கள் தமக்கும் தமது உறவுகளுக்கும் ஏன் இவ்வாறு நடந்தது எனக் கேட்கவும் அந்தத் துயர்களுக்கு ஓரிடத்தைக் கொடுத்துவிட்டு நகரக்கூடியவர்களுமாகவே பெரும்பாலும் இருப்பார்கள். ஒருவகையில் நெல்சல் மண்டேலா சொன்னதுமாதிரி ‘ உங்களை மன்னிக்கின்றோம், ஆனால் நடந்தவற்றை மறக்கமாட்டோம்’ என்ற மனோநிலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் வந்திருக்கவும் கூடும்.

இன்றையகாலத்தில் நம் ஆயுதப்போராட்டம் சார்ந்து எழுதப்பட்டும் தன் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவை  இன்னொரு போராட்டத்தைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைத் தராவிட்டாலும்,  இனியும் ஆயுதப்போராட்டங்களைத் தொடங்க விருப்பமுள்ளவர்க்கு  எவ்வளவு ஒடுக்குமுறை ஈழத்தில் இருந்தாலும் ஆயுதங்களைத் தூக்குவதற்கான காலம் இனியெப்போதுமே வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கின்றன என்பது முக்கியமானது. அத்துடன் ஆயுதங்களைத் தூக்கிய எந்தப் போராட்டத்துக்கும் இவ்வாறு உட்படுகொலைகளையும், எதிரியென/உளவுபார்ப்பவர்களை உறுதியான தகவல்களே இல்லாது போட்டுத்தள்ளிய வரலாறுகளும் இருப்பதை, உலகப் புரட்சி வரலாறுகளை சும்மா மேய்ந்து பார்த்தாலே நம்மெல்லோருக்கும் புரியும். ஆகவே நமது ஆயுதப்போராட்டங்கள் தவறான பாதையில் போனது என்றாலும் அதை உலகப் புரட்சிப் போராட்டங்களின் முன்வைத்துப் பார்த்து இவ்வாறு தன் வரலாற்று புதினங்களை எழுத முயற்சி செய்யும்போது அவை நமக்கு வேறொரு பரிணாமத்தைத் தரவும் கூடும்.

இவ்வாறு தன் வரலாற்றை எழுதுபவர்கள் அல்லது அனுபவங்கள் உள்ளவர்களிடம் நான் தனிப்பட்ட உரையாடல்களில் ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. நீங்கள் அன்றைய 20களில் அவ்வளவு முதிர்ச்சியற்றுத்தான் இருந்தீர்கள், இப்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலே ஆனபின்னர் என்னமாதிரியான போராட்டவடிவத்தின்/வடிவங்களின் மூலம் நாம் உரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கலாம் என நம்புகின்றீர்கள் எனக் கேட்பேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழிகளைத் தங்களால் இயன்றளவு சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கே இது hypothesis என்ற சந்தேகம் இருப்பதை அவர்களின் பதில்களால் அறியமுடியும். ஒரு தெளிந்த பாதை இவ்வாறான விடயத்துக்கு இருப்பதுமில்லை.

தத்துவத்திற்கும், கனவுக்கும், செயற்பாட்டுக்கும் ஒரு பெரும் தொலைவு இவற்றுக்கிடையில் இருப்பதை நாம் அறிவோம். ஏற்கனவே நடந்துவிட்ட  கியூபாப் புரட்சியைப் பார்த்துவிட்டு  சேகுவேராவின் ‘கொரில்லாப் போரை’ வாசித்து மட்டும் அந்தப் பாதையை நம்பிச் செல்லவும் முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதிய மார்க்ஸ் கூட புரட்சி இன்னொரு நாட்டில் நடக்குமென எதிர்வுகூற,  வேறொரு நாட்டில், வேறொரு சூழலில் ரஷ்யாவில் புரட்சி நிகழ்ந்து முடிந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும் விட்டது. ஆக, நாம் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றன. எதைச் சரியாகச் செய்வது என்பதற்காக மட்டுமில்லை, சிலவேளைகளில் நமது பாதைகள் தவறாகச் செல்கின்றது என்பதைக் கற்றுக்கொள்வதற்காவும் கூட, வரலாறு நமக்குத் தேவையாக இருக்கின்றது.

டி சே தமிழன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.