“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்


எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது வசன கவிதைகளைத் தாண்டி, ‘புதுக்கவிதை’ என்று அடையாளம் கூறப்பட்ட நவீன கவிதைகளை முதலில் எழுதியவர் ந.பிச்சமூர்த்தி. ந.பிச்சமூர்த்தியிடமிருந்து தொடங்கும் நவீன கவிதையை அவரிடமிருந்து தொடங்காமல், தற்காலத்தில் எழுதிவரும் யவனிகா ஸ்ரீராமிடமிருந்து தொடங்கி பின்னோக்கிச் சென்று ந.பிச்சமூர்த்தியைச் சென்றடையலாம் என்று எனது நண்பரும், கவிஞருமான விக்கிரமாதித்யன் கூறினார். அவரது யோசனை எனக்குப் பிடித்திருந்தது. எனவே நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கிச் செல்வது என்று முடிவு செய்தேன்.

‘கவிதை’ என்பது என்ன?

தமிழ்க்கவிதை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுத் தொடர்ச்சியுடையது. சங்கக் கவிதை என்ற வளமான கவிமரபு தமிழுக்கு இருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காப்பியங்களும் தமிழில் ஏராளமாக உள்ளன. கம்பர் ராமகாதையைத் தமிழில் தந்துள்ளார். ‘பக்தி இலக்கியம்’ என்ற தனிவகையும் தமிழில் உள்ளது. இவை தவிர ஏராளமான தனிப்பாடல் திரட்டுகளும் தமிழில் குவிந்துகிடக்கின்றன. திருவள்ளுவரின் தனிவகையான கவிதை வடிவமும் புதுமையானதுதான். நமது கவிச்செல்வம், பெருஞ்செல்வம்.

அன்றைய கவிதைகளையும் சரி, இக்காலக் கவிதைகளையும் சரி, தொடர்ந்து வாசிக்கும்போது, மூன்று முக்கிய உறுப்புகளைக் கவிதைகள் கொண்டிருப்பதாக அவதானிக்க முடிகிறது. அவை தருணம் (இதைக் ‘காலம்’ என்றும் கருதலாம்.) காட்சி, உணர்வு என்று கருதுகிறேன். இம்மூன்றும் இல்லாமல் கவிதை இல்லை. இவற்றில் ஏதாவது ஒரு உறுப்பு மட்டுமோ, அல்லது இரண்டு உறுப்புகள் மட்டுமோ கூட அமையலாம். ஆனால் இவை – தருணம், காட்சி, உணர்வு – இல்லாமல் கவிதை அமையமுடியாது என்றே தோன்றுகிறது.

இந்த மூன்றையும் ‘மொழி’ என்ற சரடு இணைக்கிறது. கவிஞனது அக, புற உலகுகளை மொழி என்ற சரடைக் கொண்டு மேற்கண்ட மூன்று உறுப்புக் கண்ணிகளையும் இணைப்பதன் மூலம் கவிதை பிறக்கிறது என்று நான் விளங்கிக் கொள்கிறேன். அமானுஷ்ய, பெருங்கற்பனைகளாக இருந்தாலும் சரி, கவிதையில் மேற்கூறிய செயல்கள்தான் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. இது கவிதை உருவாகும் அடிப்படைச் சட்டகம்.

என்றாலும், பெரும்பாலான கவிதைகள் காட்சி, உணர்வு அல்லது உணர்ச்சி என்ற இரு உறுப்புகளைச் சார்ந்தே அமைகின்றன. அகநானூற்றில் ஒரு கவிதை. மகள் தன் காதலனுடன் ஓடிப் போக, தாய் அழுது புலம்புவது இன்று போல் அன்றும் நடந்துள்ளது. மாமூலனார் என்ற கவிஞர் எழுதியது.

காலம் – வெயில் காலம். காட்சி – கோடைகாலக் காட்சி.

கொடிய கோடைக் காட்சி விவரிக்கப்படுகிறது. சூரியன் மலைகள் வெடிக்கிற அளவுக்கு வெப்பமாக இருந்தது. வெப்பத்தினால் மூங்கில்களெல்லாம் எரிந்து கரிந்துவிட்டன. அப்படிப்பட்ட காட்டின் வழியாக அந்தப் பெண் தன் காதலனுடன் செல்கிறாள்.

 

காய்ந்து செலற் கனலி கல்பகத் தெறுதலின்

ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள் இடை

உளிமுக வெம்பரல் அடிவருந் துறாலின்

விளிமுறை அறியாவேய்கரி கானம்

வயக்களிற்றன்ன காளையொடு என்மகள்

 

– என்று நிகழ்வு காட்சிப்படுத்தப்படுகிறது.

 

இனி, அத்தாயின் உணர்வு சொல்லப்படுகிறது.

 

கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்

ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ

வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு

கண்படைபெறேன் கனவ – ஒண்படைக்…

 

அவளை நான் பிரிந்து, உலை ஊதும் துருத்தி போல் மெலிந்து, தீயில் வேகுவது போல் வெந்து, தூக்கமின்றி, அவளையே கனவில் கூடக் காண்கிறேன் என்று அந்தப் பெண்ணின் தாய் தன் உணர்வுகளைக் கூறுகிறாள்.

 

– இதோ இக்காலக் கவிஞரான யவனிகா ஸ்ரீராம்:

 

ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு

திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு.

அனுதினமும்

அறைச்சுவர்கள் கூச்சலிட்டு என்னை

இறுக அணைக்கின்றன

கால்வீசி உறங்க இயலாதபடிக்கு

என் நித்திரை நின்றபடி நேர்கிறது.

 

ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு திரிகிற கஷ்டத்தை, உணர்வை யவனிகா கூறுகிறார். பின்னர் அறைச்சுவர்கள் கூச்சலிட்டு அவரை இறுக அணைக்கிற காட்சியையும், கால் நீட்டிப் படுத்துறங்க முடியாத நிலையையும் விவரிக்கிறார். (‘அனுதினமும்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் கவிதை இன்னும் இறுக்கம் பெறும்.)

 

எதை எழுதவேண்டும் என்ற பொறி மனதில் தட்டியதுமே மனதில் தோன்றும் மொழி, கவிஞனைத் தழுவியணைத்துக்கொள்ளத் தயாராகிவிடுகிறது. மொழிக்குள் ஆழ்ந்து மூழ்கித் திளைக்கத் திளைக்க, கவிஞன் சொற் சரட்டின் வழியே கவிதையை நிகழ்த்திக் கொண்டே செல்கிறான். மொழி அவனை இழுத்துக் கொண்டே செல்கிறது.

 

மெல்லிணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும்

புல்லிலை வெட்சியும் பிடவும் தளவும்

குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்

கல்லவும் கடத்தவும் – கமழ்க்கண்ணி மலைந்தனர்…

(முல்லைக்கவி, பாடல்: 3)

 

கற்பிதங்கள் அற்ற

முத்தங்கள் வேண்டி

உலர்கின்றன உதடுகள்

தீப்பற்றி எரியச் செய்யும்

பார்வைக் கணைகள்

உடல் முழுக்க

காயங்களாக…

–  அ.வெண்ணிலா

 

இக்காலக் கவிதைகளில் அர்த்தத்தையோ, பொருளையோ தேடிக்கொண்டிருக்க முடிவதில்லை. ஒன்றிரண்டு வரிகளில் துலங்கும் அர்த்தம், அதைத் தொடரும் அடுத்த வரிகளிலேயே குலைந்துபோகிறது. வெறும் சொற்கட்டு மட்டுமே எஞ்சுகிறது. அர்த்தத்தை மீறி மேவுகிறது மொழி. பெரும்பாலான இக்காலக் கவிதைகள் மொழியின் நயத்திற்காகவே எழுதப்படுகின்றன. கண்டராதித்தனின் கவிதை இது:

… இங்கிருந்து என் ஆணையேற்றுத்

தொடங்கிய பிரளயம்

தீராத மணிக் கதவுகளை தானே

திறந்து பொற்றேர் ஏறி

போவதைப் பாரேன்.

 

இதுவரை ஒரு அர்த்தத் தொடர்ச்சி கவிதையில் தென்படுகிறது. ஆனால் அடுத்துவரும் வரிகள் வேறொரு காட்சிக்குத் தாவி அர்த்தத் தொடர்ச்சி நிகழவொட்டாமல் செய்கின்றன.

 

நிகல லோகத்தின் சூன்ய திசையிலும்

செந்தழல் பற்ற

மலைகள் உருகி நதிவழியோடி

கருகி மடிந்தன

 

-என்று வேறொரு காட்சியைக் கண்டராதித்தன் முன்வைக்கிறார். இந்தக் கவிதா யுக்தி தர்முசிவராமின் காலத்திலிருந்து தொடர்கிறது. இரண்டொரு அல்லது மூன்று வரிகளுக்கொரு காட்சி மாறிக் கொண்டே இருக்கிறது. முந்தைய வரிகளின் அர்த்தத் தொடர்ச்சியைக் குலைக்கிறார்கள். இதை நான்-லீனியர் தன்மை என்றும் கூறலாம். ஆகவே, இக்கால வாசகன் கவிதை முழுவதும் செம்பொருளைத் தேடிச் சலிக்க வேண்டியதில்லை. அவன் கவிதைக்குள், மொழி நிகழ்த்தும் கிளர்ச்சியை, அவை தரும் லகரியை அனுபவித்தால் போதும். ‘இப்படிக் கவிதை எழுதுவது சரியா’ என்ற கேள்விக்கு இடமில்லை. கலை சுதந்திரமானது. கட்டுகளற்றது. தனது கற்பனை வீச்சுக்கு ஏற்றவாறு மொழியை இலக்கியகர்த்தா பயன்படுத்திக் கொள்வதைக் குறைசொல்ல முடியாது. ஆனால் தேவையில்லாமலேயே பெண்களின் மறைவுறுப்பைப் பற்றி எழுதுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

 

இக்காலக் கவிஞர்களில் சிலர் தங்களுடைய எல்லாக் கவிதைகளையும் ஒரே மாதிரி, ஒரே தொனி, நடையில் எழுதுவதில்லை. பாராவுக்குப் பாரா கூட நான்-லீனியராய் சொல்லும் முறையை மாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். இதனால் தங்களுடைய தனித்துவமான நடை என்று இவர்கள் எதையும் முன்வைப்பதில்லை. ‘தனித்துவம்’ என்பதை இறுகி கெட்டித்தட்டிப் போனதாகவும் காணமுடியும். ஒரே மாதிரியான நடைச் சட்டகத்தில் எழுதிச் செல்வது அக்காலத்தில் ‘தனித்துவம்’ என்று சிலாகிக்கப்பட்டது. ஒரே மாதிரி எழுதி அயர்வுறச் செய்யாமை இன்றைய கவிஞர்கள் சிலரிடம் இருக்கிறது. இதுவும் சரிதானா – இல்லையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.


 

  • வண்ணநிலவன்

1 COMMENT

  1. ஜெயமோகனையும், வண்ணநிலவனையும், கனலி பக்கங்களில் பார்க்கையில் மகிழ்வும், பரவசமும் ஏற்படுகிறது. ஒன்று மீள் பதிவு, மற்றொன்று புதியது. இரண்டுமே இத் தலைமுறையினர் அவதாநித்து உள்வாங்க வேண்டிய கருகளம். கங்கைப் பருந்தின் சிறகுகள் போன்ற காவியங்கள் குறித்து ஜெயமோகன் தொடர் சுனை நீரின் சில்லிப்பைத் தருகிறது. பனை ஓலை பட்டையில் குளிச்சியான பதநீர் அனுபவம் வழங்கும் கனலிக்கும் எழுத்து ஆளுமைகளுக்கும் நெகிழ்வான வாழ்த்துக்களும் நன்றிகளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.