கோவிந்தன்-விவேகானந்தன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

த்தரிக்கோல்களின் சப்தம்: ஃபோர்ஸெப்ஸ்களின் சப்தம்: பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சப்தம்: கத்தரிக்கோல்களும், ஃபோர்ஸெப்ஸ்களும் இரும்புப் பாத்திரத்தில் விழும்போது எழுகின்ற ஒரு சங்கீத சப்தம்: இந்த சங்கீத சப்தம்தான் இதயத்திற்கு ஒருபோதும் இதமளிக்காத, மனதிற்கு ஒருபோதும் அமைதியளிக்காத பயங்கரமான சப்தமாகும். இது பெருமூச்சுக்களின் உலகம். இதனுள் ஆயிரக்கணக்கானோர் படுத்து மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சுவாசம் எப்போது நிற்கும் என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உயிர் உடலை அணிகிறது. உயிர் அஸ்தமிக்கிறது. வாழ்க்கை நசுங்கிப் போகிறது. விசித்திரமான விதத்தில் வந்து விழும் நிசப்தத்தின் மூடுதிரை, சுவாசத்தையே தடைசெய்யும் பயங்கரத்தையும் படைக்கிறது.

அந்தப் பயங்கரத்தை மலையாள வாசகர்களுக்கு அனுபவப் படுத்திய, வேதனைகள் மட்டுமே நிறைந்துள்ள அந்த அற்புத உலகத்திற்கு வாசகர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற பிரபல கதாசிரியரான ஜி.விவேகானந்தனை, ‘கள்ளிச் செல்லம்மா’ என்ற முதல் நாவலினாலேயே மலையாள இலக்கியவாதிகளின் வரிசைக்குச் சென்றுவிட்ட ஜி.விவேகானந்தனை, வாசகர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்த அவசியமில்லை. நான் இங்கே அறிமுகப்படுத்த முயல்வது, மனித வேதனைகளையும் வேதனை தருபவற்றையும் தெளிவு படுத்துவதில் அசாதாரணமான திறமையை அறிவிக்கும் விதத்தில், வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய விவேகானந்தனிடம் உள்ள உண்மையான மனிதனைத்தான்.

“நான் பார்த்தவற்றில் அதிகமானதும் துன்பங்கள்தான். அனுபவத்திலும் முக்கால் பங்கும், துன்பங்கள்தான். என்னை வளர்த்ததும் அறிவாளியாக்கியதும் துன்பமேயல்லாது வேறொன்றுமில்லை.”

ஒருசமயம் விவேகானந்தன்தான் மேற்கண்டவாறு சொன்னார். அந்தத் துன்பத்தின் நீண்ட வழியில் நாமும் ஒருமுறை சென்று பார்ப்போமே.

ஒரேயடியாக நெடுங்குத்தாக வளர்ந்த ஒரு வாழ்வு அல்ல, விவேகானந்தனுடையது. சமவெளியில் ஓடிய ஆறு அல்ல, அவருடையது. பல இலக்கியவாதிகளும் அனுபவங்களைத் தேடிக்கொண்டு போனதாக நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், விவேகானந்தன் அனுபவங்களின் வழியாகவே நடந்து முன்னேறிக் கொண்டிருந்தார். விவசாயி, கூலியாள், பீடித் தொழிலாளி, கொத்தனார், பெயிண்டர், ராணுவ வீரர், கம்பௌண்டர் என்னும் நிலைகளில் வாழ்ந்து, மலையாள மொழியில் விரல்விட்டு எண்ணக்கூடிய இலக்கியவாதிகளில் ஒருவராக மாறிய வரலாறு விவேகானந்தனுக்கு மட்டுமே உள்ள உரிமையாகும். பிற்பாடு, அவர் மக்கள் தொடர்பு இயக்குநராகவும் இருந்துள்ளார். ஆனால், பேச்சுக்கிடையே பழைய கொத்தனாரையும், கூலியாளையும் அபிமானத்துடன் அவர் நினைக்க முயல்வதிலும் தவறில்லை. அந்த நினைவுகளின் சுமைதான், அந்த மனிதரின் விலைமிகுந்த செல்வம் என்று நான் கருதுகிறேன். ஜி.விவேகானந்தனை ஓர் இலக்கியவாதியாக்கியதும்  கூட இந்த சுமைதான்.

192 ஜூன் மாதம் 30-ம் தேதி கோவளத்திற்கு அருகே உள்ள கோளியூரில், ஒரு சாதாரண குடும்பத்தில்தான் விவேகானந்தன் பிறந்தார். என்.கோவிந்தன் – எல்.லட்சுமி ஆகியவர்களுக்குப் பிறந்த ஒன்பது பிள்ளைகளுக்கும் இவர் தலைமை தாங்கியவர். தகப்பனாரின் முக்கிய தொழில் விவசாயம். வைத்தியர் என்னும் பேரில்தான் அவர் அதிகமாக மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தார். காரணமில்லாமல் அந்தப் பெயரை அவ்வூர் மக்கள் கொடுக்கவில்லை. ஜி.வி. யின் பாட்டனார் ஒரு புகழ்பெற்ற வைத்தியராக அங்கே இருந்ததால்தான் இவருடைய தகப்பனாருக்கும் அந்தப் பெயரை அவர்கள் சூட்டினார்கள்.

சூங்குளம் பள்ளியில் ஆரம்பப்படிப்பு. அடுத்து வெங்கானூர் நடுத்தர ஆங்கிலப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்துவிட்டு, அருகில் எங்கும் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் நெய்யாற்றின் கரை நெல்லிமூடு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அனுதினமும் வளர்ந்து படுபயங்கரமாகிவிட்ட செல்வத்தின் இழப்பினால் படிப்பைத் தொடர முடியவில்லை. வாழ்வதற்கான வழிதேடி திருவனந்தபுரத்துக்கு வந்தார். கூலி வேலை செய்தும், பீடி சுற்றியும், பாறை உடைத்தும் சில நாட்கள் சிரமத்துடன் வாழ்ந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் சுவர் ஓவியராகவும் இருந்தார். ஒரு ஓவியத்துக்கு ஒரு ரூபாய் கிடைத்தது. சில நாட்கள் கழிந்ததும் ஓவியம் வரைவதும் தீர்ந்துவிட்டது. அதனால், சிலநாட்கள் காடுகள் வெட்டினார். அங்கேயும் நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. இறுதியில் வீட்டுக்கே திரும்பிச் செல்லத் தீர்மானித்தார். அதை விட்டால் வேறு வழியும் தெரியவில்லை.

அதன் பிறகு, ‘கம்பௌண்டிங்’ தேர்வுக்குப் படித்தார். படிப்பதற்கு இடையில் கவிதைகள் எழுதினார். தினந்தோறும் ஒவ்வொரு கதை எழுதுவார். எழுதிய கவிதைகளை எல்லாம் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்புவார். ஆனால் ஒன்று கூட பிரசுரிக்கப்படவில்லை. கவிஞர் ஏமாற்றமடைந்தார். அப்போதுதான், யாரோ அந்த ரகசியத்தைச் சொன்னார்கள். நாயர்களின் கவிதைகளை மட்டும்தான் பிரசுரிப்பார்கள் என்று. அதனால்தான், ‘கோளிக்கல் ஜி.வி. கிருஷ்ணபிள்ளை‘பிறந்தார். இறுதியில் ஒரு கவிதை ‘மலையாள ராஜ்யத்’தில் வெளிவந்தது. – ‘ஓணமே நீ போகவில்லையா!’ அதன் மூலம் உற்சாகம் ஊற்றெடுத்தது. ‘லதிகா’ என்ற பெயரில் ஒரு கவிதையை சொந்தப் பெயரில் அச்சடித்தார். அந்த லதிகாவின் வரலாற்றை விவேகானந்தனே சொல்கிறார், கேளுங்கள்!

“அச்சடித்தபின்தான் விற்பனையைப் பற்றி யோசித்தேன். ஒரு பிரதியைக்கூட யாரும் வாங்கவில்லை. இறுதியில் நண்பர்களுக்கெல்லாம் அப்புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியை நட்புடன் என்று நீட்டி கையெழுத்திட்டு அனுப்பிதான், அந்தப் புத்தகத்திலிருந்து விடுபட்டேன்.”

அந்தத் தப்பித்தலுக்குப்பின் பட்டாளத்தில் ஒரு கம்பௌண்டராகச் சேர்ந்தார். சூப்பரப்பாட்டா, கோஹதி, இம்பால், கோஹிமா, தமு என்னும் இடங்களிலெல்லாம் ‘எதிரொலி’க்காரர் வாழ்வைத்தேடி அலைந்தார். பட்டாளத்திலிருந்து பிரிந்து திருவனந்தபுரம் ஃபோர்ட் ஆஸ்பத்திரியில் இருபது ரூபாய் சம்பளத்தில் ஒரு கம்பௌண்டரானார். கவிதையோ கதையோ எழுதி ஒரு எழுத்தாளனாக வேண்டுமென்ற மோகத்தில் குழப்பமுண்டாயிற்று. இலக்கியவாதியாக உயர வேண்டுமென்றால் வெறும் ஒரு கம்பௌண்டராக மட்டும் இருந்தால் போதாதென்றும், உண்மையான டாக்டராக வேண்டுமென்றும் விவேகானந்தன் உளப்பூர்வமாகக்கருதி, அதற்கான ஆரம்ப முயற்சியாக மதராஸ் மெட்ரிக்குலேஷனில் தேறினார். தொடர்ந்து எல்.எம்.பி. தேர்வுக்கு மைசூரில் சேர்ந்து படிக்க அனுமதி கொடுக்க வேண்டுமென்று, ஒரு விண்ணப்பத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பினார். பண்டிட் ஜவஹர்லால் நேருதான் அன்றைய பிரதமராக இருந்தார். இருபத்துநான்கு மணிக்குள் இதற்குச் சமாதானம் கூற வேண்டுமென்று தலைமைச் செயலகத்திலிருந்து கிடைத்த மெமோதான். அதற்குப் பதிலாக இருந்தது. அந்தச் சிக்கலான பிரச்சனையிலிருந்து தப்பிக்க ‘குருடன் நீலாண்டனி’ன் தந்தை செய்த சாகசங்களை நேரில் கேட்டால்தான் தெரியும்.

இப்போது அவற்றை அவர் சுவையாக விவரிக்கிறார் என்றாலும், அவை நிகழ்ந்த காலத்தில் விவேகானந்தனின் நிலமையையே தவறச் செய்துவிட்ட ஒரு சுவையான நிகழ்ச்சியாகக் கூட அதைச் சொல்லலாம். அரசாங்க வேலையிலிருக்கும்போதே விடுமுறை எடுக்காமல், பெருந்தாணிக் கல்லூரியில் இண்டர்மீடியட்டில் சேர்ந்தார். அதைப் பற்றி யாரோ ஒருத்தர் மொட்டைக் கடிதமும் அனுப்பினார்கள். அதை அங்கீகரித்து கோட்டை ஆஸ்பத்திரிக்கு அன்றைய சுகாதார அமைச்சர் ‘ஆனிமங்கரீன்’ திடீரென்று ஒருமுறை வந்தார். அவர் அந்த மொட்டைக் கடிதத்திற்குப் பேசும் சக்தியை அளித்தார். மீண்டும் சமாதானம் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தப்பிப்பதற்கு அரசியல் பிரமுகரின் சிபாரிசு தேவைப்பட்டது. இவர் வேலை செய்த கோட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டராக இருந்த எஸ்.நீலகண்ட ஐயர், அன்று ஒரு அரசியல் பிரமுகரின் டாக்டராக இருந்ததால் தப்பிக்க முடிந்தது.

திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.-வுக்கு சேர்ந்து படிக்கும்போது நாடகங்கள் எழுதத் தொடங்கினார். ‘ஆம்பல் பூ, ‘மழை வில் நீல ஆகாசம்‘போன்று எழுதிக்கொண்டிருந்த நேரத்தில்தான், “நாடகத்தில் சிறப்படைந்து விட வேண்டுமென்று தீர்மானித்தேன்” என்று கூறினார் விவேகானந்தன்.

ஸ்ரீ.என்.கிருஷ்ணப்பிள்ளையுடன் உள்ள நெருக்கம்தான் நாடகம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளவும். அதைப் பற்றி உயர்வாகச் சிந்திக்கவும் பிரேரபித்தது. அதனால், விவேகானந்தனின் நாடகமோகத்திற்கும் திரை விழுந்தது. அதிக சுதந்திரம் சிறுகதையில்தான் உள்ளதென்னும் நினைப்பு அவரை சிறுகதைக்குத் திரும்பவைத்தது. ‘பதிநாலு தீர்ந்நு’ என்னும் இவருடைய இரண்டாம் கதை பலராலும் மிகவும் கவனிக்கப்பட்டது. தனக்கு இந்த காட்சியில் தாக்குப்பிடித்து நிற்க முடியுமென்ற தன்னம்பிக்கை விவேகானந்தனிடம் வலுவாகப் புகுந்து வந்ததும், அவர் தலைமுறையின் விரல்விட்டு எண்ணக்கூடிய கதாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டுவிட்டார். பட்டாளக் கதாசிரியராக விவேகானந்தனே கூறியதைக் கேளுங்கள்;

“நான் கொஞ்சம் அதிகமாகவே ஆஸ்பத்திரி பற்றிய கதைகளை எழுதினேன். ஆஸ்பத்திரிகளுடன் நீண்ட நாள் நீண்டிருந்த ஆழ்ந்த உறவுதான் இதற்குக் காரணமாக இருக்கும். அது, என்னால் சில கதைகளை எழுதிக் கொண்டதோடு அல்லாமல், என்னுள்ளிருந்த மனிதனைக் கண்டுபிடிக்கவும், வளரச் செய்யவும் மற்றவற்றை விட அதிகமாக ஆஸ்பத்திரியை நேசிக்கவும் செய்தது, அந்த உறவுதானென்று நான் நம்புகிறேன். அங்கிருந்துதான் மின்னும் முகமூடிகள் கழன்று விழுந்து, முற்றிலும் மறைக்கப்படாத உண்மை மனிதனைப் பார்க்கவும், நெருங்கித் தெரிந்துகொள்ளவும் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மற்ற எல்லா மோகங்களையும் பாவங்களையும் கீழே இறக்கிவிட்டு உயிர் பாதுகாப்பு என்னும் ஒரேயொரு ஊசி முனையில் கண்களைச் செலுத்தி, மனிதன் தங்குகின்ற காட்சிதான் அது! அதைக் கண்டால், எந்தவொரு ஜட மனிதத்துவமும் துள்ளி எழுந்திருக்காதா, என்ன!”

‘வெள்ளி மேக’த்தில் வரும், கவிழ்ந்து விழுந்து மூக்கும் தலையும் சிதறிப்போன பதினெட்டு வயதுள்ள பையனின் பிணத்தைக் கண்டவர்களுக்கு, ‘காக்கைக்குஞ்சி’ ஜானகி அம்மாவின் ஆத்மாவிற்கு ஆசுவாசம் கொடுத்த மேரியைக் கண்டவர்களுக்கு, ‘பெண்ணரசு நாட்டி’ல் பெயர் சொல்லாத அந்த மருத்துவமனையின் உட்புறங்களில் மெர்க்குரோ குரோமி’-ன் சிகப்பிலும், ‘அக்ரிபிளேவனி’ன் மஞ்சளிலும், ‘ஜென்ஷன் வயலிட்டி’ன் பிங்க் கலரின் அழகிலும் நிரபராதியாக வெளிப்படும் சிஸ்டர் பிலோமினாவை அறிந்துள்ளவர்களுக்கு, விவேகானந்தனின் மேலே சொன்ன வரிகளைக் கொஞ்சம் கூடுதலான ஆவேசத்துடன் ஆத்மார்த்தத்துடனும் ஜீரணிக்க முடியும்.

விவேகானந்தன் தற்செயலாகத்தான் நாவலுக்கு மாறினார். அந்த தற்செயலில் அன்பு கலந்த ஒரு உண்மைக்கதையும் உருகிக் கிடக்கிறது. ஆயிரத்துதொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

நுரையீரல் சம்பந்தப்பட்ட ஒரு நோயின் சிகிச்சைக்காக வேலூர் செல்லவேண்டிய கட்டம். அங்கே போவதற்கு முன் சில நாட்கள் குற்றாலத்தில் உள்ள தம்பியுடன் தங்கியிருந்தார் விவேகானந்தன். அங்கிருந்தபோது, தினசரி மாலை நேரங்களில் கொஞ்ச தூரம் நடந்து சென்று வருவது பழக்கமாயிற்று. ஒருநாள் ஆறடி இரண்டு அங்குல உயரமும், முகம் முழுவதும் ரோமமும் உடைய ஒரு பெண்ணை சாலையருகில் இருக்கும் ஒரு பெட்டிக் கடையில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பல நாட்கள் அந்த உருவத்தைக் காண்பதும் வழக்கமாயிற்று. அந்தப்பெண் ஆச்சரியப்படும் விதமாக விவேகானந்தனைக் கவர்ந்தாள். அவளை அவ்வூர் மக்கள் ‘ராமு’ என்றுதான் அழைத்தார்கள். ஐந்து ‘ஷெல்’ உள்ள ‘டார்ச் லைட்டை’க் கக்கத்தில் அமுக்கிக்கொண்டு, இடுப்பிலிருக்கும் முண்டை மடக்கிக் கட்டி, பீடி புகைத்துக்கொண்டு கடையின் தூணில் சாய்ந்து நிற்கும் அப்பெண்ணைப் பார்த்தால் யாருக்கும் பயம் தோன்றிவிடும்.

சிலநாட்களுக்குப் பின், விவேகானந்தன் பெட்டிக்கடைக்காரனிடம் சென்று அவளைப் பற்றி விசாரித்து ஆராய்ந்தார். தினந்தோறும் குடித்துத் திரியும் ராமு, அவ்வூரிலேயே மிகப்பிரபலமான ரௌடியாக இருந்தாள். அத்துடன் விபச்சாரியாகவும் இருந்தாள். அன்றிரவு முழுவதும் ராமுவைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. ஒரு பெண் தென்னைமரத்தில் ஏறித் தேங்காய் பறித்தாள் என்னும் பத்திரிக்கைச் செய்தி. ராமுவைப் பற்றி நேரிட்டு அறிந்திருந்ததால் உறுதிப்பட வைத்தது. மறுநாள் அதைப்பற்றி ஒரு கதை எழுதினார். குற்றாலத்தில் பெட்டிக்கடையில் மாலை நேரத்தில் பார்த்த அந்தச் சட்டாம்பிள்ளைத்தனமான பெண்ணின் உருவம் அந்தக் கதையில் இணைந்திருந்தது. அக்கதையை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தார். நன்றாக அமையவில்லை என்று தோன்றிற்று. அடித்து எழுதினார். அப்போது இரண்டு மூன்று கதாபாத்திரங்கள் அதிகமாக வந்தன. எழுதி முடித்ததும் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தார். அப்போதும் திருப்திகரமாக அமையவில்லை. அதனால், முழுவதையும் கிழித்துப் போட்டுவிட்டார். அடுத்து, அதையே நாவல் வடிவத்தில் மலரச் செய்ய முயன்றார். மனதில் எழும்பிய மாற்றத்தையும் ஆவேசத்தையும் நிலைநிறுத்தி, ஒருநாள் நடுநிசியில் கீழ்க்கண்டவாறு அதை ஆரம்பித்தார்.

“கள்ளியூர் அந்திச்சந்தையின் கீழ்ப்புறத்திலுள்ள இடைவழியில் இறங்கி, கோயில் குளத்தையும் மேடையையும் தாண்டியவுடன் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரோமன் கத்தோலிக்கக் கோயில் வரும். அதற்கு வடபுறத்தில் உள்ள சிமித்தேரியின் முன்பாக அரைமைல் தூரம் தெற்கே சென்றால், வெற்றிலைக் கொடிக்காலும், வாழை மரங்களும் நிறைந்த ஒரு இருளடர்ந்த தோட்டம் இருக்கும். தோட்டத்தின் இடது எல்லையை ஒட்டி சேறு நிறைந்த ஒரு வாய்க்கால் கரை தெரியும். அந்த வாய்க்கால் கரையின் மேலேதான் செல்லம்மாவின் வீடு உள்ளது.”

‘கள்ளிச் செல்லம்மா’வின் எட்டு அத்தியாயங்களை எழுதி முடித்தபோது வேலூருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தியாயிற்று. அதனால் மேலும் தொடர்ந்து எழுதி அதை முடிக்கவில்லை. எழுதிய அத்தியாயங்களை மட்டும் ‘கௌமுதி’யின் ஆசிரியர் கே.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பிய குறிப்பில் கீழ்வருமாறு எழுதினார்.

“எழுதிய எட்டு அத்தியாயங்களை மட்டும் இத்துடன் அனுப்புகிறேன். தயவு செய்து படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். வேலூரிலிருந்து திரும்பி வந்தால் மீதியை எழுதலாம். திரும்பி வரவில்லை என்றால் துக்கப்பட வேண்டாம். இறந்தபின் என் உடல் ஏறக்குறைய வீட்டுக்கு வந்து சேரக்கூட சாத்தியம் இல்லை.”

மரணபயம் விவேகானந்தனை நிழல்போல் பின் தொடர்ந்தது. அதனால்தான், அவர் மேலே கூறியபடி எழுதினார். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக ‘கள்ளிச் செல்லம்மா’வை விளம்பரப்படுத்திய ‘கௌமுதி’ வார இதழின் ஒரு பிரதியும், ஒரு மணியார்டரும் வந்தன. மரணத்துக்குத் தயார்நிலையில் சென்ற விவேகானந்தனை வேலூர்க்காரர்கள் குணப்படுத்தி வெளியே தள்ளினார்கள்.

நன்கு பரிசோதித்த பின் வீட்டிற்குச் செல்லலாம் என்று டாக்டர் கூறினார். அதன் பின் திரும்பிவந்துதான் மீதி அத்தியாயங்களை எழுதினார். ஆரம்ப எட்டு அத்தியாயங்களின் கட்டுமானமும் அழகும்   அத்தியாயங்களுக்கு இல்லை என்றுகூட விவேகானந்தன் நம்பினார்.

“வாழ்க்கையில் எப்போதாவது தாங்கள் காதலித்ததுண்டா?” என்று திடீரென நான் கேட்டேன்.

பல ஆண்டுகளாக எங்களுக்குள் இருக்கும் நட்புறவின் நெருக்கத்தால்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அது விவேகானந்தனிடம் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது. ஆனால், அது அதிகநேரம் நீடிக்காமல் விரைவில் சமநிலையை அடைந்ததும் அவர் கூறினார்.

“வாலிபத்தில் சில ஆசைகள் உண்டாகியிருக்கலாம். காலம் சிந்தனை மாற்றத்தால் ஒழுங்கை உருவாக்கும் போது அவைகள் வேறுபட்டு மறைந்து விடும் அல்லவா?”

இந்த அமைதி நிறைந்த பதில் – விவேகானந்தன் எழுதிய கவிதைமயமான வரிகளுக்கு என்னை இழுத்துச் செல்ல பிரேரணைக் கொடுத்தது.

“வாழ்க்கை, காதலைப் போல் இனிமையாக இருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துவதுண்டு. ஆனால், நிச்சயமற்ற கவர்ச்சியானது, காதல் பேரரசை மறைத்துக் கொண்டு நிற்கிறது. வாழ்வு என்பது, எதிர்பாராத பலவற்றையும் நினைத்துப் பார்க்க முடியாத அலைகளுக்கு ஒப்பாகும். அந்த அலைகள் உங்களை விழுங்காமல் இருக்கட்டும்.”

“நீங்கள் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டீர்களா?” என்னும் என் அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

“உறுதியாகச் சொல்லமுடியாது!” என்று முன்னுரையாகக் கூறிய விவேகானந்தன் மேலும் தொடர்ந்தார். அப்போது, அந்த முகத்தில் மகிழ்ச்சி ததும்பும் புன்னகை வெளிப்பட்டது.

“வர்க்கலை டிரெயினிங் கல்லூரியில்தான் லலிதாவை (ஜி.வி.யின் மனைவி) – நான் முதன்முதலாகப் பார்த்தேன். நான் அங்கே அன்று ஒரு சொற்பொழிவாளனாகச் சென்றேன். முதல்வரிடம் அவள் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சில நாட்கள் கழிந்ததும் லலிதாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்து முதல்வருக்குக் கடிதம் ஒன்று எழுதினேன். அவர் லலிதாவின் தந்தையின் முகவரியை எனக்கு அனுப்பினார். என் ஆசையைத் தெரிவித்து லலிதாவின் தந்தைக்கும் கடிதம் எழுதினேன். பதில் வரவில்லை. அதனால் ஏமாற்றம் ஏற்பட்டது. பின் லலிதாவுக்கே எழுதினேன். தந்தையின் முகவரி மட்டுமே எழுதிய கடிதம்தான் அதற்குப் பதிலாக வந்தது. என்.கிருஷ்ணபிள்ளையிடம் எல்லா விவரங்களையும் கூறினேன். அவர், எனக்கு லோக்கல் கார்டியனாக இருந்து அவர்களுடன் கலந்து பேசினார். பிரத்யேக ஆட்சேபணைகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், திருமணம் உறுதிப்பட்டது. 1959-ல் லலிதா என் மனைவியானாள்.”

விவேகானந்தன் – லலிதா தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டும் ஆண்கள். ஹரி, ஸ்ரீகுமார் திருவனந்தபுரம் காட்டன் உயர்நிலைப் பள்ளியில் லலிதா ஆசிரியையாகப் பணியாற்றினார். பிரபல இலக்கியவாதியின் துணைவியானதில், அளவில்லாத மகிழ்ச்சியும் பெருமையும் அவருக்கு இருந்தது. அத்துடன், அவர் ஒரு நல்ல குடும்பப் பெண்ணும் கூட. கணவர் தன் உடம்பை மட்டும் நன்கு கவனித்துக்கொள்ளவில்லையே என்னும் குறை அவரிடம் மேலோங்கி நின்றது.

“நான் விடுமுறை எடுத்துக் கொண்டு கொஞ்ச நாள்கள் ஓய்வுகொள்ள வேண்டுமென்றாள். அப்படி அவள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து வெகுநாட்களாகி விட்டன.” என்று கூறிய விவேகானந்தன், “நெருக்கடி மிகுந்த வேலைகளுக்கிடையே எப்படி விடுமுறை எடுக்க முடியும்? மேலும், இப்போது நான் ஒன்றும் எழுதாமையாலும் மற்றவர்களை விட அவள் அதிகம் வருந்துகிறாள்” என்றார்.

மருத்துவமனையில் வேலை செய்த காலத்தில்தான் பி.ஏ தேறினார். எம்.ஏ.வுக்கு படித்துவிட்டார் என்றாலும் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை. அதற்கிடையே அகில இந்திய வானொலியில் வேலை கிடைத்தது, அங்கே, அறிவிப்பாளர், செய்தி வாசிப்பவர், செய்தி தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டியூட்டி ஆபிஸர் என்னும் படிகளில் எல்லாம் அவர் வேலை பார்த்துள்ளார். அகமதாபாத்துக்கு இடமாற்றம் ஏற்பட்டபோது வானொலியை விட்டுவிட்டு கேரள அரசின் கீழ் வேலை ஏற்றுக் கொண்டார். மீண்டும் வானொலி கிராமிய அமைப்பின் தலைமை அமைப்பாளராக வானொலிக்கே திரும்பி வந்தார், அதன் பிறகு குடும்பக் கட்டுப்பாட்டின் விளம்பர அதிகாரியானார். மக்கள் தொடர்பு இயக்குநராகவும் வேலை செய்துள்ளார். தான் ஒரு டாக்டராக வேண்டுமென்னும் பெரும் ஆசையை வயது குழப்பத்தினால் அடைய முடியவில்லை என்றாலும், இன்னும் கூட அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட இடமாக ஆஸ்பத்திரியைத்தான் நினைத்துக்கொள்கிறார்.

கேரளத்திலுள்ள அவருடைய எல்லா நண்பர்களுக்கும், அவரிடம் அன்பு செலுத்துபவர்களுக்கும் அவர் எப்போதுமே டாக்டர்தான். ஒரு டாக்டரிடம் கிடைக்கும் சிகிச்சையைவிட அதிக நன்மை, விவேகானந்தனிடம் கிடைக்கிறதென்று பல பேர்களும்  கூறுவதுண்டு. ஒரு விமர்சகர் குறிப்பிட்டதுபோல், முற்றிய அனுபவ அறிவை பிரகடனப் படுத்தும் பிரத்யேகமான ஒரு அனுபவ மண்டலம் அவருக்கு சொந்தமாக உண்டு. மருத்துவமனை வேதனைகளின் உலகை உருவகப்படுத்த தன் வாழ்வின் அனுபவம்தான் அவருக்கு உதவிற்று. அதனால், அவருடைய கதைகளில் பாதிக்கும் மேல் மருத்துவமனை கதைகளாகத்தான் இருக்கின்றன.

“ரத்தம் வேணுமா சார், ரத்தம்” என்று கேட்டுக்கொண்டே மருத்துவமனை வராந்தாக்களில் அலையும் பையனையும் ‘நான் இரத்தம் கொடுக்கிறேன் டாக்டர்’ என்று கூறி கையை நீட்டியவாறே ஓடிய – நட்பே உருவமான அந்த நர்சையும், ‘எங்களுக்கு ஒன்னும் தெரியலன்னுதானே சொல்றே. அதனால், தெரிஞ்சவங்களைக் கூப்பிட்டுக் காட்டிக்கோ’ என்று கூறி கோபம் மிகுதியால் காரில் ஏறி அவ்விடத்தை விட்டு வேகமாகச் சென்று விட்ட லேடி டாக்டரையும், விரித்திருந்த படுக்கைக்கு முன்னால் மரத்துப் போன ஆசைகளை மலர்த்திக் கொண்டு நிற்கும் ஒரு டாக்டரின் மனைவியான ராதாவையும், ஒரு குடும்பம் வாழ வேண்டுமானால் நடந்தவற்றைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கவேண்டும் என்று கூறிய, களங்கமற்றவளும் உதவியற்றவளுமான அந்த நர்சையும் யாரால்தான் மறக்கமுடியும்?

தான் ஒரு டாக்டராக முடியவில்லையே என்ற வருத்தத்தை மனதில் இருத்திக்கொண்டு திரியும் விவேகானந்தனிடம், ஒரு சொற்பொழிவைப் பதிவு செய்வதற்காக வானொலி நிலையத்துக்குச் சென்ற டாக்டர் ஸி.ஓ.கருணாகரன், ஒரு கேள்வி கேட்டார்:

“நீ ஒரு டாக்டராகப் போயிருந்தால் ‘கள்ளிச் செல்லம்மா’வையும், ‘கள்ளை’யும் எழுதிய ஒரு இலக்கியவாதி எங்களுக்குக் கிடைத்திருப்பாரா?”

விவேகானந்தன் அக்கேள்விக்குப் பதிலொன்றும் கூறாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். உண்மையான மனிதனை இன்னும் மருத்துவமனையில்தான் காணமுடியும் என்ற அவர் பரிபூரணமாக நம்பினார். குட்டநாடு விவசாயிகளையும் தொழிலாளிகளையும் தகழி கண்டுபிடித்தது போல், எம்.டி. ‘புனர்ஜென்மம்’ அளித்துத் தகர்ந்த ‘நாலுகட்டி’ல் வரும் மௌன ஜீவன்களைப்போல், முக்கியத்துவம் உள்ளவைதான் விவேகானந்தனின் மருத்துவமனைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களும்.

மலையாள திரைப்பட உலகின் புகழ்பெற்ற நடிகரான சத்யனின் மிக நெருங்கிய நண்பராக ஜி.வி இருந்தார்.சத்யன் இத்தனை கடிதங்களை வேறு யாருக்காவது அனுப்பியிருப்பாரா என்பது சந்தேகம்தான். விவேக் என்று அழைக்கும் அந்தக் கடிதங்களில் கண்களைச் செலுத்தினால், சத்தியனிடம் பிரபல நடிகனை மட்டும்தான் இதுவரை கண்டுள்ளோம். ஆனால், சத்யனிடம் உள்ள வெறும் மனிதனைக்கண்டு பழகுவதற்கான வாய்ப்பு விவேகானந்தனுக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது. கோட்டைக்கு உள்ளே இருக்கும் போர்ட் ஆஸ்பத்திரியில் வேலையிலிருக்கும்போது ஆரம்பித்த பழக்கம் அது.

சத்யன் அன்று சென்ட்ரல் ரெக்கார்டு ஆபிஸில் எழுத்தராக வேலை செய்தார். இவ்விருவரையும் எப்போது ஒரு இணைபிரியாத சகோதரர் என்றுதான் நினைத்தார்கள். ஒன்றாகப் பட்டினி கிடந்த அவர்களை, காலம் குளிர்சாதன அறையில் ஒன்றாகப் பல்சுவை பலகாரங்களைச் சாப்பிடவைத்தது. சைக்கிள் சவாரிக்காரர்களான அவர்களை, காலம் தான் விமானத்திலும் ஒன்றாகச் சஞ்சரிக்கச் செய்தது.

தன்னுடைய நோய் ‘லுக்கேமியா’ தான் என்று சத்யனுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று விவேகானந்தன் கூறினார். ஏதோ ஒரு மாரகம் ஏற்படுத்தக்கூடிய வியாதிதான் தன்னைப்பீடித்துள்ளது என்பது மட்டும் சத்யனுக்கு சந்தேகம் இருந்தது. “மலையாள நாடு” பத்திரிக்கையின் பரிசளிப்பு விழா நடந்த இரவில் பதினொருமணி இருக்கும். எஸ்.கே.நாயரின் முண்டக்கலில் உள்ள பங்களாவில்தான் அந்தக் கேள்வி முதன்முதலாக உதித்தது. கூட்டமில்லாத பக்கமாக விவேகானந்தனை அழைத்துச் சென்று சத்யன் கேட்டார்.

விவேக், என்னுடைய நோய் ‘லுக்கேமியா’ன்னு சிலபேரு சொல்றாங்களே, அது உண்மைதானா?”

தன் வாழ்க்கையிலேயே முதன்முதலாக விவேகானந்தனுக்கு அன்றுதான் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது. அவர் அமைதியாகிவிட்டார்.

சத்யனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்னவென்று டாக்டர் “பை” உள்பட அநேக பிரபல டாக்டர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களின் பரிசோதனைக்குப்பின், ‘நோயாளியிடம் என்ன நோய் பீடித்துள்ளது என்று கூறக்கூடாது’ என்று தீர்மானிக்கப்பட்டது. அதனால் சத்யன் இறக்கும்வரையில் அந்தத் தகவலை யாரும் அவருக்குச் சொல்லவேயில்லை. இறக்கும்வரையில் யாருக்கும் அடிபணியாத அப்பெரிய நடிகரிடம் உள்ள சக்தியையும் ஆரோக்கியத்தையும் பற்றிக் கூறும்போதெல்லாம் விவேகானந்தனின் கண்கள் நனைந்திருப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

“கள்ளிச் செல்லம்மா”வைப் படமாக்கத் தீர்மானித்தபோது விவேகானந்தனிடம் இத்தனைக்கதிகம் மானசீக ஐக்கியம் உண்டாகியிருந்தும் அவைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்த அவர் தயாராக இல்லை. சோபனா பரமேஸ்வர நாயருடன் ஏற்பட்டிருந்த பிணக்குதான் அதற்கான காரணமாகும்.

சத்யன் ஜி.வி.யின் வாழ்க்கையில் ஒருபோதும் மறையாத ஒரு நட்சத்திரமாகிவிட்டார்

விமர்சகர்களும் வாசகர்களும் ஜி.வி.யின் மிக நல்ல படைப்பாக ‘கள்ளிச் செல்லம்மா’ வைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், விவேகானந்தனுக்குப் பிடித்தது ‘கள்ளு’தான். சுற்றிலும் நடந்த அநீதிக்கு எதிராக ஒரு காலகட்டத்தின் ஒளிமங்காத நிகழ்ச்சி என்றே அவர் கருதினார். கதை ஒரு காலகட்டத்தின் ஒளிமங்காத நிகழ்ச்சி என்றே அவர் கருதினார், கள் குடிப்பது தீய பழக்கம்தான். ஆனால் ‘கள்ளி’ல் வரும் பார்க்கவன் பிள்ளையை எல்லோருமே விரும்புவார்கள். மதுவின் போதை நான்கைந்து மணிகளுக்குள் தெளிந்துவிடும். ஆனால், அதனால் ஏற்படும் மனநோய் மரணம்வரை விட்டுச் செல்லாது என்று விவேகானந்தன் கருதினார்.

எப்போதும் புன்னகையுடன் இருக்க முயற்சிக்கும் ஜி.வி. அமைதி நிறைந்த மனிதராவார். கோபம், அதன் முழுமையான சக்தியில் இந்த மனிதரை அநுகிரக்கிக்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மக்கள் தொடர்பு இயக்குநரும் பிரபல இலக்கியவாதியுமான இந்த மனிதரைப் பிரமிக்க வைக்கவும் மானசீகமாகத் தகர்க்கவும் ஒரு உண்மையற்ற விஷயமே போதும். இத்தனை தூரம் நடுங்கும் மனமுள்ள ஓர் எழுத்தாளரை வேறெங்கும் காணமுடியாது. மனைவியும், மகன்கள் ஹரி, ஸ்ரீகுமாரும் சேர்ந்த குடும்பம் என்னும் சூழலுக்குள் வரும்போது, விவேகானந்தனிடமுள்ள சாதாரண மனிதன் ஒதுங்கிவிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லம் ரெஸிடன்ஸி பங்களாவிலிருந்த ஓரிரவை நான் நினைத்துப் பார்க்கிறேன். ‘கள்ளிச் செல்லம்மா’வின் அன்பு மகள் ‘அம்மு’ மேற்கத்திய அறையின் விசாலமான ஹாலிலுள்ள மேஜை மேல் கிடந்த காகிதங்களில் கைகால்களை ஆட்டி அழுகிறாள். இரவு பத்து மணி இருக்கும். நானும் விவேகானந்தனும், பால் போன்ற நிலவை நோக்கிக்கொண்டு நின்றிருந்தோம். திடீரென ஒரு சப்தம் உயர்ந்து வந்தது – ‘நான் உடனே வீட்டுக்குப் போகணும்’ என்று. அதைத் தொடர்ந்து ஒரு விசும்பல். ‘பன்னிரண்டு மணிக்கு முன்னால் நான் உடனே வீட்டுக்குப் போகவில்லை என்றால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.’ என்று கூறினார் விவேகானந்தன். நான் என்னால் முடிந்தவரை சமாதானம் செய்தேன். புண்ணியமில்லை. கடைசியில் வண்டி வந்தது. பன்னிரண்டு மணிக்கு முன்பாகவே ‘கல்பனா’வை அடைந்துவிட்டார். வீட்டில் ஹரிக்கு ஒரு முத்தம் கொடுத்த பின்புதான் அந்த விசும்பல் நின்றது. இவர்தான், இலக்கியவாதியும் அதிகாரியுமில்லாத சாட்சாத் கோவிந்தன் விவேகானந்தனாவார்.

சங்ஙம்புழையும், இடப்பள்ளியும் இயற்றிய வேதனை புரண்ட சங்கீதம்தான் தன்னை இலக்கியத்துக்கு அழைத்து வந்தது என்று சொல்லும் விவேகானந்தனிடம் நான் கேட்டேன்:

“இன்னும் தங்கள் வாழ்க்கையில் மீதமுள்ளவை என்னவெல்லாம் உள்ளன?”

“நல்ல உருவும் உத்தியும் அழகுமுள்ள ஒரு நாவலை எழுதிவிட்டு இறக்க வேண்டும். அது முடியவில்லை என்றால் நான் மீண்டும் பிறப்பேன். அடுத்து, என் குழந்தைகள் நல்லதொரு வேலையில் அமர்ந்தபின், அதைக் கண்டுவிட்டு இறக்கவேண்டும்.”

கே.பாலகிருஷ்ணன் ஒரு சமயம் இப்படி எழுதினார்:

“மனித வாழ்வின் கண்ணீரைக் காண வைப்பதில் விவேகானந்தனைப்போல் திறமையுள்ள வேறு மலையாள இலக்கியவாதி இங்கு இல்லை. காகிதத்துக்குள் ஒதுக்கி நிறுத்தும் வரிகளில் மட்டுமல்லாமல், தினம் தினம் தன் வாழ்விலேயே மாற்றம் பெறும் இந்த நண்பர் பலருக்கும் சலனப்படுத்தும் ஒரு அற்புதமாக உள்ளார்.”

அன்பு நண்பரே! –

நீங்கள் ஒருபோதும் சலனப்படுத்தும் ஒரு அற்புதமாக இருக்கவில்லை. ஓர் அற்புதமாக ஆகவும் உங்களால் முடியாது. கோவிந்தன் விவேகானந்தன் எங்களுக்கு என்றைக்குமே ஒரு குளிர் நிலவாகவே உள்ளார், உரூபு சொன்னது போல், உங்களை சூரிய கிரகணமாக்க சிரமப்படுகின்றவர்கள் உண்மையான விவேகானந்தனைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்கொள்ள வேண்டியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.