கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன்

புனை பெயர்: கே. சுரேந்திரன்

இலக்கியச்சேவை:

சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’, ‘சக்தி’, ‘காட்டுக்குரங்கு’, ‘மரணம் துர்பலம்’, ‘தீபஸ்தம்பம்’ முதலியவை குறிப்பிடத்தக்கவையாகும். ‘தஸ்தாயேவ்ஸ்கிவுடெ கத’ என்னும் வாழ்க்கை வரலாறுக்கு சாகித்யஅகாடமி பரிசும் ‘மனுஷ்யாவஸ்த’ என்னும் உபன்யாசங்கள் புத்தகத்துக்கு சாகித்யஅகாடமி பரிசும் ‘மரணம் துர்பலம்’ என்னும் நாவலுக்கு ‘ஓடக்குழல்’ பரிசும் பெற்றுள்ளார்.

நான் அவ்வளவு பெரிய விசேஷமான சில நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் சொந்தக்காரன். நான் அறிந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக என்ன வேண்டுமென்றாலும் கொடுப்பதற்குச் சிலர் தயாராகவே இருந்தார்கள். முத்துச்சிப்பியை மூழ்கி எடுப்பவர்களைப் போல் என்னைத் தேடி சிலர் வந்தார்கள். அவர்களில் நான் மதிக்கும் சில நபர்களும் அறிவாளிகளும் கூட இருந்தார்கள். அவர்கள் முத்துச்சிப்பியை எடுப்பதற்கும், பிளப்பதற்கும், அதன் உள்ளே இருக்கும் முத்துக்களைக் கவர்வதற்கும் தயாராகவும் இருந்தார்கள். ஆனால்,  அந்த முத்தை எடுப்பதற்குள் முத்துச்சிப்பியின் உயிர் அழிவதைப் பற்றி யார் நினைத்துப் பார்க்கிறார்கள்?… ஆமாம். முத்தெடுக்கும் போது முத்துச்சிப்பிகள் கொல்லப்படுவதுதானே உண்மை! மனித மனதை யாரும் அறிந்து கொள்ளலாம். அது அதியற்புதமான வெளித்தோற்றம் உடையதுமாகும். ஏழு பூமியும் ஏழு ஆகாயமும் அதில் அடங்கும். திருமாலின் பாற்கடலும் சிவனின் காளைக்கூடமும் (கைலாயம்) அதில் பத்திரமாக ஒதுங்கி நிற்கும், ஆனால், ஒரு தடவை அந்த மனதைத் திறந்து சொல்லிவிட்டால் அது சமுதாய தளத்திலுள்ள ஒரு தொழிலாக மாறிவிடுகிறது. எந்தவொரு தொழிலுக்கும், அதற்கேயுரிய பிரதிபலன்கள் உண்டு. அதேபோல், என் உள்ளத்தில் உள்ளதை நான் சொல்லிவிட்டால் நான் எனது சமுதாய தனித்துவத்தை முளையிலே கொன்றுவிட்டவனாவேன்.”

     “வாழ்க்கையைப் பற்றி – சுயமான – யாதொரு தாத்பரியமும் என்னிடம் இனி மீதமொன்றுமில்லை. அதனால், தனித்துவத்தின் சுயநல தோற்றத்தை சக்தியற்றதாக்கிவிட்டு, யாராவதொரு தனிமனிதனால் சிந்திக்க முடியுமென்றால், அந்த சிந்தனைக்கு நானும் உரிமை கொள்வேன். என் மனதை வயோதிகம் பாதித்ததில்லை, இது என் வாழ்க்கையில் கால்நூற்றாண்டு காலத்தின் வரவை எதிர்கொள்ளாத, சீர்படுத்தாத, பரிணாம ரகசியமாக மனதில் நிற்கிறது. அதனுள்ளே, அன்றைய நினைவுகளும் பசுமை மாறாமல் கிடக்கின்றன,”

“இதயத்தைக் கனல்போல் சுட்டெரிப்பதும், சஞ்சீவி மூலிகையைப்போல் மீண்டும் பசுமைப் பிடிக்கவைக்கக் கூடியதுமான நினைவுகளிலிருந்து விடுபடுவதும், சொர்க்கம் வரை உயரச் செய்து, தன்னையே வருத்திக்கொள்ளும்வரை தாழ்த்தக்கூடியதுமான நினைவுகளிலிருந்து விடுபடுவதும், என்னுடைய விடுதலைக்கு மட்டும் இல்லை. முன்னமே கூறியதுபோல் சத்தியத்திடம் எனக்குள்ள கடமையைத் தீர்ப்பதற்குத்தான் நான் இந்த நினைவுகளைத் திறந்து காட்டுகிறேன்.”

“ஆண் பெண் உறவுகளை அவைகளின் ஆழத்திலும், தீட்சண்யத்திலும் உள்ள அலங்காரத்தோடு சித்தரிக்கப்பட்ட ‘தேவதாஸி’னுடைய, மலையாள இலக்கியத்தில் மரணத்தைத் துர்பலமாக்கிய அப்பெரிய கதாபாத்திரத்தின் ஆத்மாவினுடைய எதிரொலிகளில் கிருஷ்ணன் சுரேந்திரன் எல்லா அர்த்தங்களிலும் வாழ்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“நேர்மையுள்ள, வியாபாரமில்லாத எல்லா கலைப்படைப்புகளும் ஓர் அர்த்தத்தில் சுய கதாபாத்திரங்கள்தான்” என்று நம்பும் கே.சுரேந்திரன், “ஆகக்கூடி எனக்கு இப்போதுள்ளது எனது மனம் மட்டும் தான்” என்று கருதி, ‘அதை ‘தேவதாஸி’ல் காணலாம்” என்று அவர் கூறுவதில் எந்த முதிர்ச்சியில்லாமை உள்ளது?

கே.சுரேந்திரனில், நாவலாசிரியரான கே.சுரேந்திரனில் ஓர் எழுத்தாளரின் அழகையோ அழகற்றவற்றையோ அல்ல நான் பார்ப்பது: அதில் ஒரு சக்தியைத்தான் நான் பார்க்கிறேன். அந்த சக்திதான் அவருடைய கதாபாத்திங்களுக்கு எல்லாவற்றையும் தேடிக்கொடுத்துள்ளது.

“சென்ற இருபதாண்டுகளுக்கிடையே மலையாள வாசகர்களை மிக அதிகமாகக் கவர்ந்த இரண்டோ மூன்றோ மிகப்பிரபலமான நாவலாசிரியர்களில் சுரேந்திரனும் ஒருவர்” என்று கூறிய ஸி.பி.ஸ்ரீதரன், இந்தச் சக்தியை முழுமையாக அங்கீகரித்ததால்தான் அப்படிக் குறிப்பிட்டார் என்று நான் நம்புகிறேன்.

குடும்ப வாழ்க்கையின் குழப்பமான பிரச்சினைகளிலும், உறவென்னும் பிணைப்புகளிலும் சம்பந்தப்பட்டு உழலும் மனிதர்களுக்கிடையிலும், நட்புறவுகளுக்கிடையிலும் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, விலகவும் நெருங்கவும் முடியாமல், மூச்சுமுட்டி அவதிப்படும் தனிமனிதர்களுக்கிடையிலும், எல்லா உறவுகளிலிருந்தும் விலகி நிற்க ஆசைப்படும் மனிதர்களுக்கிடையிலும் ஆரம்பிக்கவோ, முடிக்கவோ முடியாத கதைகள் கே.சுரேந்திரனுடைய நாவல்களில் ஏராளமாக உள்ளன. ஆனால், கே.சுரேந்திரனிடமுள்ள இலக்கியவாதியல்லாத மனிதனில், இப்படிப்பட்ட குழப்பமானதொரு நடவடிக்கையையும் காண முடிவதில்லை. சப்தங்கள் உண்டென்றாலும் அமைதியாக இருக்கும் ஒரு கடல்போன்றது அவருடைய வாழ்க்கை. அந்த கடலுக்குள் நான் கொஞ்சம் இறங்கிச் சென்று பார்க்கின்றேனே!

1922 பிப்ரவரி 11-ந்தேதி பிறந்த கிருஷ்ணன் சுரேந்திரனின் பிறந்த இடம் ஓச்சிரை அம்பநாடு. சுரேந்திரனின் தந்தை பெயர் கிருஷ்ணன், தாய் பெயர் குஞ்ஞுகுஞ்ஞு. ஐந்து குழந்தைகளில் சுரேந்திரனுக்கு இரண்டாம் இடம்.

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருந்த கிருஷ்ணனின் சகோதரர்கள், சமூகத்தில் உயர்ந்த இடங்களில் இருந்தார்கள். அவர்களின் எல்லை கடந்த இலக்கிய வாசனை, சுரேந்திரனின் இளம்பருவ மனதைப் பிரத்தியேகமாகப் பக்குவப்படுத்தி எடுக்க உதவிற்று. வேலைச்சேரி ஓச்சேரையில் உள்ள பிரபலமான குடும்பங்களில் சுரேந்திரனின் பாட்டனார் வீடும் ஒன்றாக இருந்தது. அங்கே தினந்தோறும் இலக்கிய விவாதம் நடப்பது வழக்கமாகவும் இருந்தது. டாகூர், ஷெல்லி, குமாரன் ஆசான் ஆகியோருடைய எத்தனையெத்தனையோ புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விவாதங்களைக் கேட்டு சுரேந்திரன் திக்பிரமையடைந்ததுண்டு. ‘வின்ட்சர்’  மாகஸின், ஒய்.எம்.ஸி.ஏ. மாகஸின் என்பவற்றை வேலைச்சேரியில் தவறாமல் வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். சிறிய தந்தைமார்களிடம் டைரி எழுதும் பழக்கம் கூட சாதாரணமாக இருந்தது. சுரேந்திரன் அந்த டைரிகளை ரகசியமாகப் படித்துமுள்ளாராம். இந்த இலக்கியச் சூழல்தான் சுரேந்திரனிடம் எட்டு வயதிலேயே ஒரு சுவைஞனை உருவாக்கியது.

அதைப் பற்றி அவர் கூறியதைக் கேளுங்கள்:

“…… அதனுடைய பாதிப்பால்தான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போதே நான் தாகூரின் ‘சித்ரா’ என்னும் நாடகத்தை மொழிபெயர்த்தேன். அதை நான் இப்போதும் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

முதுகுளம் ‘குமாரன் ஆசான் மெமோரியல் பள்ளி’ யிலும், காயங்குளம் உயர்நிலைப்பள்ளியிலுமாக படிப்பைத் தொடங்கினார் சுரேந்திரன். மங்கள ஸ்லோகங்கள் எழுதுவதில் மாணவனாக இருக்கும்போதே தனித் திறமையைக் காட்டியிருந்தார். ஒரு நாவலைக்கூட அக்காலத்தில் எழுதினார். இருபது பக்க நாவல் அது. அதை யாரிடமும் காண்பிக்காமல் விரிப்பின் கீழே வைத்துவிட்டார். ஒருமுறை மீனாட்சி அத்தை அந்த நாவலைக் கண்டுபிடித்து ஆவலுடன் படித்ததாக சுரேந்திரன் கூறினார். நாவலை முடிக்கும்வரை காத்தும் கிடந்தாராம். அந்த ஒன்பது வயதுள்ள நாவலாசிரியர். “ட்ராஜிடியா” என்ற மீனாட்சி அத்தை. தன் சிநேகிதியிடம் கூறிய முதல் எதிரொலியை செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு ஒட்டுக்கேட்டார். அந்தச் சிறுவனுக்கு, அந்த இரவில் ஏற்பட்ட மாற்றம் எப்படி இருந்திருக்குமென்று நாம் ஊகிக்கலாம் அல்லவா?

1938-ல் பள்ளியிறுதி வகுப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் சும்மாவே இருந்தார் சுரேந்திரன். திருவனந்தபுரத்தில் தங்கி வசித்த சித்தப்பா ஸி.ஓ.கேசவனிடம் சுரேந்திரனும் சென்று தங்கினார், எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் பயிற்சியில் சேர்ந்தார். அது மூன்று வருடப் பயிற்சி. பயம் தெளிந்து எழுதத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். ஸி.வி.குஞ்ஞிராமன் நடத்திவந்த ‘நவஜீவனி’லும், சுப்ரபாதம் கே.வி.கோஸினுடைய ‘சினிமா’விலுமாகத் தொடர்ந்து எழுதினார். தேவ், தகழி, அந்தர்ஜனம் போன்றவர்கள் எழுதும் ‘நவஜீவனி’ல் தனது கட்டுரையும் வருவதைப் பார்க்கும்போது அன்று அந்தச் சிறுவன் (சுரேந்திரன்) அபிமானத்தால் பூரிப்படைந்தார். அப்போது சினிமா விமர்சனங்களையும், கட்டுரைகளையும்தான் அதிகமாக எழுதினார். ‘சார்லி சாப்ளின்’ என்ற கட்டுரையையும் ‘ஞானாம்பிகா’, ‘பாலன்’ என்ற படங்களின் விமர்சனங்களையும் சுரேந்திரன் எப்போதும் நினைத்துக் கொள்வார்.

ஆரம்ப காலத்தில் கே.சுரேந்திரன் என்ற பெயரில் இவர் எழுதவில்லை. சொந்தப்பெயரில் எழுதுவதற்குத் தன்னம்பிக்கை இல்லாமையும், கூச்சமும் தான் காரணம். அதனால், ‘மிஸஸ் சரோஜா குமார்’ என்னும் ஒரு புனைபெயர் வைத்துக் கொண்டார். அந்த புனைபெயர் சுரேந்திரனை ஒருநாள் குழப்பமடைய வைத்துவிட்டது. ஒருநாள் மாலையில், ‘சினிமா’ பத்திரிகையின் ஆசிரியர் கே.வி.கோஸி, ‘மிஸஸ் சரோஜா குமாரை’க் காண சித்தப்பா வீட்டுக்கு வந்துவிட்டார். சுரேந்திரன் அப்போது சித்தப்பாவுடன்தான் வசித்துவந்தார். சுரேந்திரன் என்ன செய்வதென்று தெரியாமல் திக்பிரமை கொண்டார். கடைசியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அவர் ‘விமன்ஸ் ஹாஸ்டலி’ல் இருக்கிறார். நாம் அங்கே போகலாம் வாருங்கள்” என்றார். விமன்ஸ் ஹாஸ்டலில் மீனாட்சி அத்தை இருந்ததினால் கே. சுரேந்திரன், மிஸஸ் சரோஜாகுமாரின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்.

மனம் முழுவதும் எழுதுவது பற்றிய ஆவேசத்திலேயே இருந்ததால் படிப்பு கெட்டது. கடைசி பேட்சானதினாலும் தோல்வியை விரும்பாததினாலும்தான், தான் வெற்றியடைந்ததாக சுரேந்திரன் கூறினார்.

“கடைசியில் ஒன்பது பேர்கள்தான் இருந்தார்கள். செய்முறைத் தேர்வு. எம்.வி.ராமவர்மராஜாதான் எக்ஸாமினர். என் முறை வந்தபோது மணி 12.45 ஆகிவிட்டது. எக்ஸாமினர் ராஜவம்சத்தைச் சேர்ந்தவராதலால் சாப்பாட்டு வேளையைத் தவறவிடுவாரோ?.. அது எனக்கு நன்மையாகிவிட்டது. மேஜை மேலிருந்த எலக்ட்ரிக் பெல்லை சரிசெய்யச் சொன்னார். இரண்டு நிமிடத்திற்குள் நான் மணி சப்தத்தை ஏற்படுத்தினேன். அவர் ஓ.கே கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அப்படித்தான் நான் அந்தத் தேர்வில் தேறினேன்.”

வேலையில்லாத நாட்கள். பொது நூலகத்தில் உறுப்பினரானார் சுரேந்திரன். பைத்தியத்தைப்போன்ற வாசிப்பு. வேலை தேடும்போதும் மிஸஸ் சரோஜாகுமாரியினுள்ளேதான் வாழ்ந்து கொண்டிருந்தார். கே.சி.சக்காரியா எடிட் செய்து பிரசுரிக்கப்பட்ட ‘சித்திரோதய’த்திற்கு ஒரு கட்டுரையை அனுப்பினார். உடனே அது சித்திரோதயத்தில் பிரசுரிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தப் பத்திரிகையின் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. “வாசகர்களுக்குக் கட்டுரை மிகவும் விருப்பமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எதிர்காலம் உண்டு.” அதுதான், கே.சுரேந்திரனின் வாழ்க்கையிலேயே முதன்முதலாகப் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து வந்த கடிதமாகும்.

‘பிரசன்ன கேரளம்’ சுரேந்திரனால் மறக்கமுடியாத ஒரு பிரசுரமாகும். முதன்முதலாக சன்மானம் அளித்த பத்திரிகையை எந்த இலக்கியவாதியால் நினைக்காமலிருக்க முடியும்? டி.சி.கிழக்கே முறியும், சி.ஜே.தாமஸும்தான் அந்த வாரப் பத்திரிகையின் சிற்பிகள்.  சி.ஜே.தாமஸின் வேண்டுகோளுக்கிணங்க சுரேந்திரன் கட்டுரைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். சுரேந்திரன் அப்போது, பத்திரிகை அலுவலகத்திலிருந்து கட்டுரைகள் கேட்டுக் கடிதம் வரும் அளவிற்குப் பிரபலமாகி விட்டிருந்தார். டி.சி அனுப்பிய 10ரூபாய்தான் சுரேந்திரனுக்கு கிடைத்த முதல் சன்மானத் தொகை ஆகும். டி.சி. கிழக்கே முறியிடம் அதிக மதிப்பு வைத்து, அந்த மதிப்பை இறுதிவரை பாதுகாத்த ஒரே இலக்கியவாதி கே.சுரேந்திரன் என்றால் அது மிகையாகாது. நல்ல எழுத்தாளர்களை இனம் கண்டு ஆதரித்து அங்கீகரிக்கின்ற ஒருவர், ஒழுங்கு முறையுடனும் தவறில்லாமலும் நல்ல நிர்வாகம் செய்யும் ஒருமனிதர், இந்தியப் புத்தகப் பதிப்பாளர்களில் டி.சி.யைத் தவிர வேறு யாரும் இல்லையென்றே கூறலாம். ‘ஸாகித்திய ப்ரவர்த்தக ஸஹகரண சங்க’த்திலிருந்து (மலையாள எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கூட்டுறவு சங்கம்) பிரிந்து செல்வதற்கு முன்பு, டி.சி. கையொப்பமிட்டு அனுப்பிய கடைசி ‘செக்’ தனக்குத் தானென்று மகிழ்ச்சியுடனும் அபிமானத்துடனும் என்னிடம் சுரேந்திரன் நினைவு கூர்ந்தார். ‘பிரசன்ன கேரளம்’ நின்றுவிட்ட பின்பும் தனக்குச் சேரவேண்டிய சன்மானமான 10 ரூபாயையும் அனுப்பி வைக்க மறக்காத டி.சி.யினுடைய வாழ்க்கையின் வெற்றி இந்த வகையில்தான் என்று அவர் மேலும் கூறினார்.

இளம்பருவத்தில் சுரேந்திரன் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். ஆனால், அவர் தந்தை ஒரு பகுத்தறிவாளராக இருந்தார். வீட்டிலுள்ள மற்றவர்களும் கூட அப்படியொன்றும் பெரிய கடவுள் பக்தியுள்ளவர்களாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் தனக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட ஒரு கடவுள் நம்பிக்கை ஏற்பட்டது என்பது ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது என்றார் சுரேந்திரன்.

“அன்று என் கூட்டாளிகள் எல்லாம் முற்றிலும் கீழ்த்தரமானவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் இருக்கும் போதும் நான் ஒரு உண்மையானவனாக இருக்க முடிந்ததுதான் இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அப்போது, சூரியோதயம் பார்ப்பதும்கூட எனக்கு வழக்கமாக இருந்தது. மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தபின்தான் இளநீர் குடிக்கவும் என்னால் முடிந்தது.”

எட்டு வயதிலேயே தான் இந்த விரதம் இருந்ததை சுரேந்திரன் கூறினார். அப்போதெல்லாம் சுரேந்திரனால் பசியை அடக்க முடியாமல் போகும்போது காரியஸ்தன் தளந்தன்தான் இவருடைய தாய் குஞ்ஞுகுஞ்ஞுவிடம் சென்று, “இளநீரைக் கொஞ்சம் முன்னாடியே குடிக்க வைக்கக் கூடாதா?” என்று கேட்பானாம்.

“ஐயோ! தெய்வக்கோபம் வருமே” என்று குஞ்ஞுகுஞ்ஞு மூக்கில் விரலை வைப்பாராம்.

தெய்வக்கோபத்தின் சுழலில் சிக்கிய மனதை, நாத்திகத்துவத்தின் முடிவற்ற உலகத்துக்கு அழைத்துச் சென்றதில் பிரதான பங்குதாரர் குற்றிப்புழை கிருஷ்ணப்பிள்ளை தானென்று சுரேந்திரன் மனப்பூர்வமாக நம்பினார்.

‘சுப்ரபாத’த்தில் ‘நினைவுப்புரட்சி’யைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனம்தான் கே.சுரேந்திரனை குற்றிப்புழையுடன் நெருங்கவைத்தது.

அதைப்பற்றி கே.சுரேந்திரன் கூறினார். “அன்று நான் ஒரு நாத்திகவாதியாக இருந்தேன். அந்தக்கட்டுரை எனக்கே மிகப்பிடித்தமாக இருந்தது. சரோஜாகுமார் என்னும் பெயரிலேயே அந்தக் கட்டுரையும் பிரசுரமாகி இருந்தாலும், பிரசுரமானபின் நான் குற்றிப்புழைக்கு அதைப்பற்றி நேரிடையாகவே ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் அனுப்பிய பதில் எனக்கு மேலும் உற்சாகமூட்டக்கூடியதாக இருந்தது. உண்மையைச் சொன்னால், என்னுடைய இலக்கிய ஈடுபாட்டில் என்னை மிகவும் உற்சாகமூட்டிய ஒரே நபர் குற்றிப்புழைதான் என்றும் கூறலாம். அந்த நிலையில் எனக்கு அவரிடம் ஏற்பட்ட கடமையை எப்படித் தீர்த்தாலும் தீராததாகத்தான் இருக்கும்.”

‘சாகித்ய பரிஷத்’திலும், ‘மங்களோதயத்’திலும் தொடர்ந்து விமர்சனங்களை எழுதிய கே.சுரேந்திரன், தலைக்கனம் உள்ள விமர்சகர்களின் அணியில் ஒருவராகத்தான் கருதப்பட்டார். படைப்பும் விமர்சனமும், நாவலும் இயற்கையும், எழுதுகோலும் சங்கிலியும், கலையும் சாதாரண மக்களும், தனிமனிதனும் சமூகமும், சுதந்திரமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதாகும். இந்த வாழ்க்கையில் சுழலும் விமர்சகரான கே.சுரேந்திரன் நாவலாசிரியராக மாறியது எதனால் என்ற கேள்விக்கு அவரே கூறிய பதில்:

“கலையையும் இலக்கியத்தையும் பிரேரிக்கும் சக்தி ஆத்மாவின் வெளிப்பாடுதானே? அதனால், என்னுடைய சிந்தனைகளாலும் உணர்ச்சிவேகத்தாலும் பயணக்கதைகளை ஓர் எல்லை வரைதான், என்னால் விமரிசன இலக்கியத்தின் வழியாக வெளிப்படுத்த முடிந்தது. அதனால், எனது ஆத்ம திருப்திக்காகவே நான் நாவலிடம் அபயம் தேடிச் செல்ல நேர்ந்தது.”

“எதற்காக நாவல்கள் எழுதுகிறீர்கள்?” என்று டி.என். ஜெயச்சந்திரன் கேட்ட ஒரு கேள்விக்கு சுரேந்திரன் கொடுத்த பதிலையும் இதனுடன் சேர்க்கப் பொருத்தமாக இருந்ததால், நான் இங்கே அதையும் சேர்த்துள்ளேன்:

“காலத்தின் பயணம் மனிதர்களிடம் உண்டாக்குகின்ற பரிணாமம்தான் இலக்கிய விஷயமாகும். அதைச் சாமர்த்தியமாகவும், அழகாகவும் சித்தரிக்கப்பட வேண்டுமென்றால், அது மகா காவியத்தினாலோ அல்லது நாவலினாலோ மட்டும்தான் முடியும். என்னால் மகா காவியம் எழுதமுடியவில்லை. அதனால், நான் நாவல் எழுதுகின்றேன். நாவல் என்பது கதை உருவிலுள்ள ஒரு மகா காவியம்தானே?”

காதல் என்பது நல்லதோ, கெட்டதோ, உண்மையோ, பொய்யோ, மனித மனதைப் பந்தாடுவதற்கான கருத்தை அதனால் எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியாது. பசியின் கூக்குரலைத் தவிர்த்தால் அதன் பின் இயற்கையின் கூக்குரல்களில் மிகவும் சக்தியுள்ள கூக்குரல் காதலினுடையதுதான். அதனுடைய கூக்குரல் கேட்கவில்லை என்று நடிக்கவோ, அதனை நிசப்தமாக்கவோ எந்தவொரு மனிதனாலும் இன்றுவரை முடியவில்லை. இனிமேலும் முடியுமென்றும் தோன்றவில்லை. ஆனால், ஒன்று மட்டும் செய்யமுடியும். அபினியைத் தின்று மயங்கி விழுந்து கடைக்காரனை கிலியடையச் செய்வது போல் மனிதத்துவத்தை மறைத்துவிட்டு காதலைக் கிலியடையச் செய்யலாம். ஆனால், அதுவொரு சுகமான வழியில்லைதானே? எதிர்க்கக் கூடிய தனிப்பட்டவர்களுக்கும், சமூகத்திற்கும் தலைகுனிவை உண்டாக்காமல், இரண்டிற்கும் சுகத்தை உண்டாக்கிக் காதலை வாழ்க்கையுடன் சமனப்படுத்த முடியுமா என்றுதான் நாம் பார்க்கவேண்டும். அவ்வாறு, காதலுடன் வாழ்க்கையைச் சமனப்படுத்த முடிந்த ஒரு வாழ்க்கைதான், வி.என்.ராஜம்மாவுடன் சேர்ந்து கே.சுரேந்திரன் வழுதக்காட்டிலுள்ள நவரங்கத்தில் வாழ்வதும்.

கேசவதேவின் முதல் மனைவியான கோமதி தேவினுடைய சகோதரன் மகள்தான் வி.என்.ராஜம்மா. அன்பு நிழலாடிய பார்வைகளும், இன்பம் சேர்ந்த சந்திப்புகளும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவருக்கு ஆசையை உண்டாக்கி, அதுவே தீட்சண்யமான ஒரு காதல் உறவிற்கும் அழைத்துச் சென்றது. மிக அதிகமான விவாதங்களை ஏற்படுத்திய இந்தக்காதல் உறவு, இறுதியாகப் பதிவுத் திருமணத்தில் முடிந்தது. எஸ்.குப்தன் நாயரும், புத்தூர் நாராயணன் நாயரும்தான் சாட்சிகள். இப்படிப்பட்ட விவாதத்தைத் தோற்றுவித்த இந்தத் திருமணத்தைப் பற்றி சுரேந்திரனே கூறுவதைக் கவனியுங்கள்:

“என்னை உச்சிமுதல் உள்ளங்கால்வரை பிடித்து உலுக்கிவிட்டது எனது திருமணம். வீட்டிலிருந்தும் வெளியிடங்களிலும் புறப்பட்ட ஒரு வலுவான எதிர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் நான் திருமணம் செய்து கொண்டேன். ஒருவேளை, ஓர் அனுபவம் என்ற நிலைக்கும் என்னை உயர்த்தி, எனக்கு முதன்முதலில் உணரச் செய்ததும் கூடி அதுதான்.”

இந்தக் காதல் உறவு மலையாள மொழிக்குச் சன்மானமாக அளித்த புத்தகம்தான் “பிரேமத்தைக் குறிச்சொரு புஸ்தகம்”. ‘தாளத்’தில் தொடங்கி ‘மரணம் துர்பலம்’ வரை நீண்டு நிற்கின்ற நாவல் பரம்பரைகளின் ஆத்மாவில், இந்தக்காதல் உறவின் அலையோசைகள் நிறைந்து நிற்கின்றன. முதல் நாவலான ‘தாளத்’தின் பிறப்பைப் பற்றி சுரேந்திரன் சொல்லியுள்ள வரிகளை இத்தருணத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

“காதல், திருமணம் என்ற கட்டங்களின் வழியாகப் புகுந்துசெல்லும் ஒரு வாழ்க்கையின் கதைதான் ‘தாளம்’. அதுவல்லாமல், மற்றொரு கதையை என் முதல் நாவலாக என்னால் வரவேற்க முடியவில்லை.”

1960  டிசம்பரில் இறந்த ஹரி உட்பட நான்கு பிள்ளைகள் சுரேந்திரன் ராஜம்மா தம்பதியருக்கு உள்ளார்கள். ஸ்ரீலதா மூத்தவர், அவர் கணவர் பெயர் வி.கே.மோகன், இரண்டாவது பையன் டாக்டராக உள்ளார். இளையவன் சுசீந்திரன். ஹரியின் மரணம் சுரேந்திரனுடைய வாழ்க்கையையே உலுக்கிய ஒரு நிகழ்ச்சியாகும். அப்போது ஏற்பட்ட அந்த நடுக்கம், பல ஆண்டுகள் கழிந்த பின்பும் நிற்கவில்லை. அந்த மாய ஹரியின் நினைவுச்சின்னமாக எழுதப்பட்ட, ‘ஸ்மாரகத்’தில் இந்த அழுகின்ற பிதாவைக் காணலாம்.

“பிரதி எடுக்கப்பட்ட அந்த சுந்தர உருவத்தின் ஒரு நினைவாகத்தான் மரணத்தினுடையதான இந்தக் கதையை, நான் மனதால் கற்பனை செய்கிறேன்”.

எப்போதும் பூனையைப்போல் வீட்டில் ஒதுங்கி வாழ ஆசைப்படும் சுரேந்திரன், சமகாலத்திய இலக்கியவாதிகளிலிருந்து (எல்லா விஷயங்களிலும்) முற்றிலும் வித்தியாசமானவராக இருந்தார். பயணம் செய்ய ஆசைப்படுவதில்லை. பிரத்தியேகமான மோகங்களும் இல்லை. எல்லா அர்த்தங்களிலும் நூறு சதவிகிதமும் இவர் ‘Pessimist’ தான். எப்போதும் சுதந்திரவாதியாக இருக்க ஆசைப்படும் இந்தத் ‘தாளக்’காரர். தனக்குக் கடமைகள் ஏற்படாமலிருக்க பிரத்தியேகமாக கவனம் செலுத்துவதுண்டு. உதவிகளிலிருந்தும் சலுகைகளிலிருந்தும் ஒதுங்கி நிற்க அவசரம் காட்டுவதைக் காணும் போது, பல சமயங்களிலும் இந்த மேதையை நண்பர்கள் கூட ஆச்சரியத்துடன் தான் பார்க்கிறார்கள். தான் இலக்கியத்திற்குள் புகுந்து வந்ததும் நிலைத்து நிற்பதும் யாருடைய உதவியாலுமில்லை என்னும் உண்மை இந்த நிசப்தவாதியிடம் அபிமானம் கொள்ளச் செய்கிறது.

சுரேந்திரன் 1965-ல் தான் பணிபுரிந்த தபால்தந்தி துறையிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த ராஜினாமாவிற்குப் பின்னால் சுவையான ஒருகதையும் உண்டு. ஸாகித்ய ப்ரவர்த்த ஸஹரண டைரக்டர் போர்டை தேர்ந்தெடுக்கும் நேரம். அரசு ஊழியர்கள் இவ்வாறான தேர்தல்களில் பங்கெடுக்க, அரசின் பிரத்தியேக அனுமதி வேண்டுமென்னும் சட்டத்தை அனுசரிக்க சுரேந்திரன் தயாரானார். அன்றைய மேலதிகாரியாக இருந்த எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் அனுமதிக்காக விண்ணப்பத்துடன் அந்த மேலதிகாரியின் வீட்டிற்கே சுரேந்திரன் சென்று பார்த்தார். அங்கே சூடான ஒரு வாக்குவாதமும் நடந்தது. தன் கீழ் வேலை செய்யும் ஒருவன் இப்படிப் பேசுவதா என்பதை நினைத்துப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி கொடூரமாக, “You argue like a lawyer. Next time you will send lawers notice” என்று கூறினார்.

அடுத்தநாள், சுரேந்திரனின் இருமாத விடுப்பு விண்ணப்பத்தைத் தான் தன் மேஜைமேல் கண்டார் கிருஷ்ணமூர்த்தி. அந்த விண்ணப்பத்துடன் டாக்டர் ‘பை’யின்  மெடிக்கல் சர்டிபிகேட்டும் இருந்தது. அதனால், டைரக்டர் போர்டு தேர்தலில் பங்கெடுக்கக் கூடாதென்றும் மீறி கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது இருக்குமென்றும் கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

மலையாள நாவல் இலக்கிய உலகிலேயே ஓர் பண்புமிக்கவரான சுரேந்திரனா அந்த நோட்டீஸுக்குப் பணிவார்?  தேர்தலில் கே. சுரேந்திரன் கலந்துகொள்ளவே செய்தார். ஆனால், தொடர்ந்தாற்போல் சமாதானம் கேட்டுக் கேட்டு சுரேந்திரனுக்குக் கடிதங்கள் வந்து கொண்டேயிருந்தன. அவைகளை ‘இன்ஸல்ட்’  செய்வதற்காகவே ஒரு ராஜினாமா கடிதம் கூட எழுதிக்கொடுக்காமல் அந்த வேலையை அவர் உதறி எறிந்தார். கொஞ்சநாள் சென்றதும், டாக்டர் ‘பை’ சுரேந்திரனுக்காகக் கொடுத்த மெடிக்கல் சர்டிபிகேட்டையும் ரத்து செய்து திருப்பியனுப்பிய எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியை முழு அருவருப்போடுதான் யாராலும் நினைத்துப் பார்க்கமுடியும்.

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி! நீங்கள் இன்று வார்த்தைகளின் மூலமாக வாழ்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் சுரேந்திரனின் இந்த வாழ்க்கை வரலாறு வழியாகத்தான் என்பதையாவது இந்த வரிகளைப் படிக்க நேரும்பொழுது உங்களால் உணரமுடியுமோ?

“திருமணத்துக்கு முன்பு தாங்கள் யாரையாகிலும் காதலித்ததுண்டா?” – சுரேந்திரன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தான் அப்படிக் கேட்டேன்.

நினைவுகளின் நீர்ச்சுழலில் மூழ்கித் தேடியபின், ஒரு முத்தை அவர் வெளியே எடுத்து வந்தார். “இதற்குக் காதல் என்று பெயரிடமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மனதின் ஓர் நினவை ‘ஆசை’ என்று சொல்லுவதுதான் சரி. அதற்குக் காரணமும் உண்டு. நான் அன்று ஐந்தாம்படிவ மாணவன். மெலிந்து, வெளுத்த அழகான ஒருபெண். பெயர் தங்கம்மா. அவள் எங்கள் வீட்டிற்குத் தினந்தோறும் வருபவளாக இருந்தாள். அதனால், அவளிடம் ஒரு நெருக்க உணர்வு தோன்றிற்று. இந்த மானசீகமான நெருக்க உணர்வு உண்டாவதற்கான காரணம் புரியாமல், அந்த தங்க விக்கிரகத்தைப் பார்த்துக்கொண்டே நின்ற நிமிடங்களை இன்னும் நினைத்துப் பார்க்கின்றேன்” என்று கூறிய சுரேந்திரனிடம், அந்த நினைவு இறுதிவரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சுரேந்திரன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்தான். ஆனால், ஒருபோதும் அது அவருக்கு ஓர் அத்தியாவசியமான பொருளாகத் தோன்றியதில்லை. நண்பர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் பலசமயங்களிலும் அவருக்குக் குடிக்கத் தோன்றியது. நண்பர்களை வெகுசீக்கிரம் தன்பக்கம் இழுக்கும் சுபாவம் அவரிடமில்லை. ஆனால் நெருங்கிப் பழகினால், சுரேந்திரனை விட இந்த அளவிற்கு நேசிக்கக் கூடியவர்கள் வேறு யாருமில்லை என்று தெரிந்து கொள்ளலாம். இவரின் நண்பர்கள் எண்ணிக்கை மிகமிகச் சுருக்கமானதாகும். நகரத்தின் எல்லா ஆர்ப்பாட்டங்களிடமிருந்தும், ஓசைகளிடமிருந்தும் ஒதுங்கி நிற்கத்தான் – அகந்தைக்கு வினயத்தின் உருவத்தைக் கொடுக்கும் இப்பெரிய மனிதர் முயன்றார்.

“ஓர் எழுத்தாளன் என்ற நிலையில் தங்களைப் பற்றிய ஒரு சுய அபிப்பிராயம் என்ன?” என்று ஒரு பத்திரிகை நிருபர் ஒருமுறை சுரேந்திரனிடம் கேட்டார். அதற்கு சுரேந்திரன் கொடுத்த பதில், அவரிடமுள்ள சலனமற்ற அசாதாரணமான தனித்துவத்தைப் பிரகாசப்படுத்துவதாக இருந்தது.

“நான் மோசமான எழுத்தாளன் என்று விமர்சகர்கள் சொன்னால், அதை நான் ஏற்கப்போவதில்லை. காரணம், கலைப் படைப்புகளைச் சரியான முறையில் விலைமதிப்பிடுவதற்குத் தேவையான காலத்தின் விரிவுக்குப் பின்தான் அதைச் சொல்லமுடியும். சுருக்கமாகச் சொன்னால் அவனவன் அவனுக்கு மிகமுக்கியமான மனிதன் என்ற கருத்தில், நான்தான் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளன். என் குணநலன்களை இன்னும் யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் எல்லா எழுத்தாளர்களைப் போல் நானும் நம்புகிறேன்.”

இப்படிப்பட்ட திறந்த அபிப்ராயங்களை மட்டும் சொல்லத்தான் சுரேந்திரனிடமுள்ள இலக்கியவாதியும் பச்சையான மனிதனும் ஏராளமான சந்தர்ப்பங்களில் மாறிமாறி வந்தார்கள், நட்பு, பந்தம், தயவு, உதவி ஆகிய இப்படிப்பட்ட எண்ணங்களில் ஒன்றாலும், அந்த அபிப்ராயங்களின் சக்தியை பலமற்றதாக்க முடியவில்லை.

“மலையுச்சியிலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு, அதனுடைய உயரத்தைக் காண முடிவதில்லை. அவன் அதை ஒரு பொருளாகக் காணமுடிவதில்லை என்பதுதான் அதற்கான காரணம். ஓர் அனுபவத்தை ஒரு பொருளாகக் காண வேண்டுமென்றால் அதனிடமிருந்து முற்றிலும் விலகி நிற்க வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்ளவும் வேண்டும். அதற்குத் துல்லிய காலஅளவைச் சொல்வதும் சாத்தியமில்லை. அது அனுபவத்தைச் சார்ந்திருக்கும் ஒன்று. பிரசவத்தைச் சித்தரிக்கும் ஒரு எழுத்தாளனுக்கு, குழந்தை பிறந்து சிறிது நேரம் சென்றபின்தான், அதனை ஓர் அனுபவமாகக் காணமுடியும். அதுவரை அது ஒரு வேதனையாக மட்டுமே இருக்கும்.”

பிரியமுள்ள சகோதரரே! உங்களுடைய வரிகள்தான் இவை. நான் தங்களை நெருங்கி நின்றா, இல்லை விலகி நின்றா, இல்லை எங்கே நின்று பார்த்துள்ளேன்? நான் எங்கே நின்றிருந்தாலும் இருக்கட்டும். எனக்கு ஒன்று மட்டும்தான் தெரிய வேண்டும். நான் எங்கே நின்றிருந்தாலும் இருக்கட்டும். நான் என்னுடைய இந்த எளிய முயற்சியில் ஒரு சதவிகிதமாவது வெற்றியடைந்துள்ளேனா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.