வழித்துணை

கன்னத்தில் செல்ஃபோனின் ’விர்ர்’ என்ற அதிர்வை உணர்ந்தேன். தூக்கத்தின் அரைமயக்கத்தில் அது கைக்குள் பொத்திப்பிடித்த குருவியின் சிறகதிர்வைப் போல நேராக நெஞ்சில் படபடத்தது, பதறி சற்று கைவிலக்கினால் பறந்துவிடும் என்பது போல.

நெடுநேரமோ அல்லது சில நொடிகளோ அந்த அதிர்வு நீண்டு பின் நிலைத்தது. என்னால் கண்களை முழுதாகத் திறக்க முடியவில்லை. சற்று முயன்று தலையைக் குலுக்கி அது மறுபடியும் அதிரத் துவங்குவதற்கு முன் விரலால் தீண்டி எடுத்து காதில் வைத்துக்கொண்டேன். அரை நொடி மீண்டும் தூக்கத்தில் விழுந்தபோது மறுபுறம் அக்காளின் குரல் கேட்டது. நான் அஞ்சியிருந்த குரல்.

“ஹலோ நவீனு லே மக்கா”

“ஆன் சொல்லுக்கா”

“ஆஸ்பத்திரில இருக்கோம், அம்மைக்கு ரொம்ப கிரிட்டிக்கல் இங்காவ லே”

”அப்டியா?”

”ஆமா நீ கெளம்பி வா, அண்ணனும் நானும் எல்லாம் இங்க தான் ரூம் எடுத்து நிக்கோம்”

“ம்ம் செரி, நான் வாரேன்”

“இன்னையோட சொல்லிடுவாங்களாம். ஒன்னும் தெரியலல” அவள் குரல் லேசாகத் தழுதழுத்தது.

“ஒன்னும் ஆவாதுக்கா. சர்ஜரி முடிஞ்சா அதுக்க எஃபெக்ட் கொஞ்ச நாள் இருக்கும். அண்ணன் இருக்கானா?”

“இருக்கான்” அவளது விசும்பல் ஒலி கேட்டது. ”நீ ஏம்ல கிளம்பிபோனா? ரெண்டு நாள் கூடுதலாட்டு இங்க நின்னுருக்க கூடாதா?” அவள் அதற்குள் வழக்கம்போல எல்லாவற்றுக்கும் காரணம் நான் தான் அல்லது பிறர் தான் என மாற்றத் துவங்கிவிட்டாள்.

“செரி நீ சலம்பாத. ஃபோன அண்ணன்ட்ட கொடு”

அண்ணன் எப்போதும் போல நிதானமாகப் பேசினான். அவனிருந்தால் எல்லாவற்றையும் அவனே கவனித்துக்கொள்வான். அக்காளைச் சமாளிக்க அவனால் மட்டுமே முடியும்.

“அண்ணே, நான் உடனே கிளம்பி வாரேன். இப்ப கிளம்புனா ஏழுமணிக்கூறு ஆவும் திருநெல்வேலி வர.”

”நீ பய்ய வா மக்கா. நான் பாத்துகிடுகேன்”

ஃபோனை அணைத்துவிட்டுப் படுக்கையை விட்டு வேகமாக எழுந்தேன். எழுந்து சில அடிகள் சென்று கழிப்பறை மின்விளக்கை இடும்போதே தலைகனத்துக் கால் முட்டுகள் உலைந்தன. நெஞ்சு படபடக்கத் தரை சுழல்வதுபோலத் தோன்றி அங்கேயே சரிந்தமர்ந்துவிட்டேன். கடும் உறக்கத்தில் கண்கள் மீண்டும் மீண்டும் சென்று பின்னால் செருகிக்கொண்டது. கழிப்பறையின் செம்மஞ்சள் நிற பிளாஸ்டிக் கதவு ஒளி ஊடுருவ ஒரு தோல் பரப்பைப் போல அறையின் இருளுக்குள் ஒளிர்ந்தது. குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து அக்கதவின் வெம்மையில் தலைசாய்த்தேன், ஒரு உயிருள்ள பரப்பைப்போல அது அதிர்ந்து என்னை ஏற்றுக்கொண்டது. கண்களுக்குள் செவ்வொளி ஊடுருவ அதன் அணைப்பில் சற்றுநேரம் அப்படியே உறங்கிவிட்டேன்.

அவசரத்தில் எதை எடுத்துவைத்தேன் எதை வைக்கவில்லை என்றெல்லாம் நினைவில் இல்லை. அரைத்தூக்கத்தில் கையில் கிடைத்தவை எல்லாவற்றையும் பேகில் திணித்துக்கொண்டு நாலரை மணிக்கெல்லாம் அப்பார்ட்மெண்டில் இருந்து புறப்பட்டு விட்டேன். நேற்றிரவு நான் உறங்கச் செல்கையில் மணி இரண்டு. ஒரு வாரத்தின் ஆபீஸ் பணிச்சுமையில் இன்னமும் மீதம் இருக்கிறது. அதிகாலையில் அண்ணாநகரின் தெருக்கள் எல்லாம் பிரமை பிடித்தவை போலக் கிடந்தன. அதிகாலை மனிதர்கள் அதற்குள் தங்கள் வேலைகளைத் தொடங்கி விட்டிருந்தார்கள். பால்காரர்கள் அத்தனை நேரம் முன்பே தெருமாடுகளைக் கறக்க ஆரம்பிப்பார்கள் என நான் அறிந்திருக்கவில்லை.

காலித் தெருக்களை விரைவாக ஓட்டிக்கடந்து பதினைந்து நிமிடத்திற்குள் அண்ணா வளைவை எட்டினேன். நேராக கோயம்பேடு வழி மதுரவாயல் சென்றால் ’பைப்பாஸை’ பிடித்து விடலாம். பத்து மணிக்குள் மதுரையைக் கடந்து முன்மதியத்திற்குள் திருநெல்வேலி சென்றடைய வேண்டும்.

எங்கள் மூவரில் அம்மைக்கு என்மேல் தான் பிரியம் அதிகம். அவரைப் பிரிந்து நான் சென்னையில் வேலைக்கு வந்தது முதல் பலமுறை என்னுடன் வந்து தங்குமாறு அவரை அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் அருமனையில் எங்கள் சொந்த வீட்டைவிட்டு எங்கும் வர விரும்பவில்லை. பின்னர் எனக்கும் தோன்றியது, அங்குதான் அவரின் சுற்றமும் நட்பு வட்டமும் எல்லாம். அதைவிட்டு அவரை வரச்சொல்லுவது சரியல்ல. அப்பா இல்லாத எங்கள் வீட்டை முழுவதுமாகப் பார்த்துக்கொண்டது அவர்தான். சாலையை ஒட்டிய சிறிய பூந்தோட்டமும் அதன் பின் நெடுக்கு வாக்கில் வீடும் பின்னால் ரப்பர் தோட்டமும் என நீண்டது எங்கள் விளை. அம்மாவிற்குப் பின் அதை யாரும் பார்த்துக்கொள்ளப் போவதில்லை.

மெட்ரோ ரயிலின் மாபெரும் தூண்கள் இருளில் ராட்ஷசக் கால்கள் போல ஒவ்வொன்றாகக் கடந்து செல்ல, நெற்குன்றம் கடந்ததும் சாலை மேலும் காலியானது. மதுரவாயல் நாற்சந்திப்பு கடந்து சற்றுதூரம் செல்வதற்குள் தொலைவிலேயே செல்லும் வழியில் ஒரு மனிதர் வழியை மறிப்பது போல நடுரோட்டில் நின்றிருப்பதைக் கண்டேன். வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் கையில் ஒரு ஏர்பேகுமாக நின்ற அவரை நான் தவிர்க்க எண்ணி வண்டியை வளைத்தேன். அவர் அதற்கு ஏற்றாற் போல் தள்ளிவந்து மீண்டும் வழியில் நின்றார். நான் ஹார்ன் அடித்தபடி இடதுபுறமாக வளைக்க முயன்றேன். அவர் மீண்டும் மறித்தார். சட்டென்று அச்சம் தொற்ற நான் வேறு வழியின்றி காரின் வேகத்தை வெகுவாகக் குறைத்து அவரை நெருங்கினேன். சுமார் இருபது மீட்டர் தொலைவில் அவர் நின்றிருக்க நான் இடமும் வலமும் என மாறி மாறி காரை வளைத்துச்செல்ல முற்பட்டேன். அவர் விடுவதாக இல்லை. இரு கைகளையும் விரித்து ஒரு கோழியைப் பிடிக்க முற்படுபவர் போல அருகில் நெருங்கி வந்தார். நடையில் போதையின் தள்ளாட்டம் ஒன்றுமில்லை. கரிய அடர்ந்து சுருண்ட தலைமுடியும் சிறிய கண்களுமாகப் பார்க்க மிக விந்தையாகத் தெரிந்தார்.

நான் வண்டியை நிறுத்திவிட்டு அவர் நெருங்கக் காத்திருந்தேன். அவர் மெல்ல அருகில் வந்து காரின் போனெட்டில் கைகளை ஊன்றி மூச்சிளைத்தார்.

நான் பொறுமையிழந்து கார் கண்ணாடியை இறக்கி ” என்னங்க வேணும்? ஏன் இப்படி வந்து விழுறீங்க?” என்றேன். அதைச் சொல்லும்போது குரல் சற்று உடைந்து அழுகை போல எனக்கு ஒலித்தது.

அவரது முகம் சற்று அதிகமாகவே வியர்த்திருந்தது. வயது ஐம்பதா எழுபதா என்று சட்டென்று சொல்ல முடியாத தெற்கத்தி முகம்.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்டே. ஏன் எல்லாவனும் இப்படி தேனீச்ச கூட்ட கொலச்ச மாரி கிர்ர் கிர்ர்ன்னீ பறக்கீங்கனு தெரிஞ்சா போரும்.”

எனக்கு அவர் சொல்வது முதலில் புரியவில்லை. “என்னது?” என்று சற்று குழப்பத்துடன் கேட்டேன்.

அவர் தன் ஏர்பேக்கை போனெட்டின் மீது வைத்துவிட்டு ஜன்னலருகே வந்தார். ”இல்ல ஏம்னு சொல்லுடே, நீ யேத்த வேண்டாம்.”

”சொந்தகாரங்களுக்கு உடம்பு செரியில்ல, அவசரமா போறேன்” என்றேன் சற்று தாழ்ந்த குரலில்.

”அப்ப செரி, வண்டி எடு.” என்று புன்னகைத்தபடி பேக்கை எடுத்துக்கொண்டார். நான் வண்டியை ஸ்டார்ட் செய்யும்முன் பின்கதவைத் திறந்து அதில் பேக்கை வீசிவிட்டு. ”எனக்கும் அவசரம்தான் கேட்டியா, நல்ல காலம்” என்றபடி மறுபுறம் வந்துவிட்டார்.

முன்புற சீட்டில் ஏறியமர்ந்து “வண்டி போட்டு” என்றார் உற்சாகமாக. எனக்கு அவரை அந்தச் சூழ்நிலையில் எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. மெல்ல காரை இயக்கி, வேகமெடுத்தேன்.

சற்று நேரம் பொறுத்து மெல்ல அவரிடம் ”உங்களுக்கு எங்க போணும்?” என்றேன்.

”நாகர்கோயிலு”

நான் சற்று அதிர்ச்சியில் அவரை திரும்பிப்பார்க்க அவர் சிரித்து, “நீ அங்க விடாண்டாம், பெருங்களத்தூர்ல பஸ் நிக்குமாம்லா? அங்கன விட்டா போரும்” என்றார். அவர் சிரிப்பில் சிறிய மஞ்சள் பற்களின் வரிசை சீராகத் தெரிந்தது.

அவராகவே மேலும் பேசத் தொடங்கினார். “கோயம்பேட்டுல ஏறினேம் பாத்துக்க, நைட் மூணரைக்கு பஸ் காரன் எறக்கி விட்டு போட்டான். ஒன்னர மணிக்கூறாட்டு கை காட்டுகேன். ஒருத்தன் நிக்கிறானில்ல.”

”ஏன் எறக்கி விட்டான்?”

”சொன்னா சிரிக்கப்பிடாது கேட்டியா?”

”இல்ல சொல்லுங்க” நான் சற்று ஆர்வமாக அவரைப் பார்த்தேன்.

”நிக்க பஸ்ல கேறி உக்காந்தேன் மக்கா. எனக்க பக்கத்துல ஒருத்தன், காலையிலேயே பட்டைய போட்டுட்டு வந்தான், இருந்த வாக்குல எம்மேல சாரி படுத்தான். சின்ன பய பாத்துக்க, செரி போட்டும்னு நானும் சன்னல்ல சாரி தூங்கிபோட்டென். பஸ் எடுத்து, இன்னா இங்கன வரும்போ கண்டக்டர்காரன் ரெண்டுவேரையும் எளுப்பி டிக்கட் கேட்டாம். நான் காச எடுக்கேன், இந்தப்பய அதுக்கெடையில கண்டக்டர் மேல கேறி வாந்தி எடுத்துபோட்டான்.”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

”என்ன ஏதுன்னு நமக்க பாசையில சொல்லுகதுக்குள்ள அவனையும் என்னையும் சேர்த்து பத்தி விட்டானுவ.”

“பொறவு?” என்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

”பொறவென்ன அவன தூக்கி அன்னா அந்த பஸ் ஸ்டாப்ல போட்டேன். சுகமாட்டு கெடக்கான் மகராசன், அவனுக்கு என்ன? எளவு நமக்கு தான் சோலி கெடக்கு” என்றுவிட்டு சிரித்தபடி “தம்பி எங்க போற?” என்றார்.

”திருநெல்வெலி… சொந்த ஊர் நாகர்கோயில்தான்.”

”அது பின்ன மனசுலாச்சு டே, வேற எவனுக்கு நம்ம பாஷ புரியி? கிழக்க போனாலும் மேக்க போனாலும் ஒன்னுதான், இந்தியாக்க அற்றத்துல பிறந்து போட்டு நம்ம படுக பாடு.”

நான் புன்னகைத்தேன்.

“நாகர்கோவில்ல எங்க?”

“அருமனை”

“அதச்சொல்லுடே, நாகர்கோவிலுன்னா பின்ன என்னவாம்? நான் மண்டே மார்கெட்டு பாத்துக்க”

நான் சற்று ஐயத்துடன் பார்த்தேன்.

”திங்கள் சந்தை தெரியுமா?”

“ஆமாமா”

”பேரு என்ன சொன்னா?” என்றார் ஆர்வமாக.

“என் பேரு நவீன்.”

“ஓ செரிதான், எனக்க பேரு தங்கையன். வயசு 65 ஆவு”

ஆனால் முகத்தை மட்டும் பார்க்கையில் அவர் வயது நாற்பத்தைந்து என்றே சொல்ல முடியும். கன்னங்கரிய முகத்தில் சுருக்கங்கள் அவ்வளவாக இல்லை. அடர்ந்த ஸ்பிரிங் போன்ற கனமான தலைமுடியில் ஒன்றிரண்டு மட்டும் நரைத்திருந்தன.

”என்ன காரியமா சென்னை வந்தீங்க?”

”இங்க நமக்க அக்கா வீடு உண்டு பாத்துக்க, நுங்கபாக்கத்துல, மக்களுக்க கூட இருக்கா. ஊர்ல ஒரு விளைய விக்க போறேன், கூட்டு பத்திரமாக்கும், கையெளுத்து வேணும்லா? அதான் வந்தேன்.”

”ஏன் விக்கேங்க?”

”இவ சென்னையில வந்து நிக்க சொல்லுகா. ஊர்ல நம்ம சொந்தகாரப்பயக்க ஆரும் இப்ப இல்லல்லா”

”ஏன் என்ன ஆச்சு?”

”எல்லாம் ஒவ்வொருவனா செத்து போனாம்” என்றார் சாதாரணமாக. வெளியே இருளில் காலி வீடுகளை பார்த்தபடி “இங்க சிட்டில எல்லாம் ஒரு கூத்தாட்டுல்லா இருக்கு, செரி நின்னு போடலாம்னு செரீன்னேன்”

”ஓஹ்” நான் சற்று நேரம் பொறுத்து “கஸ்டமாட்டு இல்லயா?” என்றேன், அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து.

”ஏது?”

”எல்லாம் செத்து போனாங்கனு சொன்னேங்கள்லா?”

”அதுக்கு என்னடே செய்யமுடியும், எல்லாம் ஓரோ காரணம்.” சற்று நேர அமைதிக்குப் பின் “சாவுக்கெல்லாம் வருத்தப்பட்டது கிடையாது பாத்துக்க. எனக்க பதினஞ்சு வயசுல அப்பா செத்து போனாரு, தெங்குல கேறும்பொ தேளு கொட்டிருக்கு, இவரு மேலெருந்து ஒத்த சாட்டம்” என்று கைகளால் சுழன்று விழுந்ததைப் போலக் காட்டிவிட்டுச் சிரித்தார்.

எனக்கு அதை ஒருவர் சிரிப்புடன் சொல்ல முடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரால் எதையுமே அப்படித்தான் சொல்ல முடியும் என்றும் தோன்றியது.

காரில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து சற்று தண்ணீரை அருந்தியபடி தொடர்ந்தார். ”கொஞ்ச நாளு கிடந்து அளுதேன், அப்பன்லா? பொறவு ட்ரைன் கேறி காசிக்கு போனேம். அங்க இந்த பொணத்த எல்லாம் எரிக்க ஒரு காட் உண்டு தெரியுமா? மணிகர்னிகா காட். அங்கன ரெண்டு நாள் நின்னா எல்லாம் தமாசா ஆயிரும்.” என்றுவிட்டு என்னைப் புன்னகையுடன் பார்த்தார்.

”நான் அங்க போன ரெண்டாவது நாள் பாத்துக்க, ஒரு சின்ன பையன், அப்பனுக்கு கொள்ளி வெக்க வந்துருக்கான், மொட்டையெல்லாம் போட்டு துருதுருனு நிக்கான். இந்த தர்ப்ப புல்லு இருக்குல்லா? அதுல தீய வெச்சி மூணு சுத்து சுத்தி விறவுக்க மேல வெக்கனும் செரியா? இவன் சுத்த தொடுங்கும்போ காத்து, புல்லு நல்லா புடிச்சிகிடுச்சு, பயலுக்கு கையில சுடுகு, அவனும் சுத்தி ஓடுகான், ஓட சமயத்துல காத்துல இன்னும் புடிக்கும்லா? இவன் ஓடி மூணாமது சுத்து சுத்தி டைவ் அடிச்சி புல்ல அப்பனுக்க மேல வீசி எரிஞ்சிபோட்டு சிரிச்சிட்டு போய் மாமாகிட்ட நிக்கான், பயலுக்கு ஒரே குஷி, முப்பத்திரெண்டு பல்லும் தெரியீ.”

நான் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.

”அத பாத்து நானும் சத்தமா சிரிச்சுபோட்டேன். வொடனே அம்மைக்க ஞாபவம் வந்துது, திரும்பி வந்துட்டேன். அப்பனுக்கும் சேர்த்து அவா இருந்தால்லா? தொன்னூத்தாறு வயசு.”

”தொன்னூத்தாறா? எப்பா…” எனக்கு அதை எங்கிருந்து கணக்கு போடத் தொடங்குவது என்று தெரியவில்லை. வியப்பில் என் முகம் விரிந்திருக்கவேண்டும்.

”ஆமா, என்ன நெனச்சா? அவா பழய ஆளுடே, சுதந்திரம் கெடக்கும்போ 25 வயசு, காமராசர சைட் அடிச்ச செட்டாக்கும். கெளவிக்கு நான் எட்டாமது, நான் பெண்ணுகெட்ட ஒண்ணும் செய்யல, நான்தான் அவளுக்க கூட இருந்தேன்.”

”ஏன்?” நான் அவரை திரும்பிப்பார்த்தேன். “ஏன் கெட்டல்ல?”

”நமக்கு பெண்ணும், மக்களும்லாம் செரி ஆவாது மக்கா, பாதி நேரம் ஊர்ல நிக்க மாட்டேன், இங்கன இருந்தாலும் கொடயும் கும்பாபிசேகம்னு சொல்லி கறங்குவோம்.”

”வெளிய எங்க போவீங்க? சும்மா வா?”

”எங்கயாம் போவேன், ஒரு மாதிரிப் பட்ட எல்லா ஊருக்கும் போயிருக்கேம். கிடைக்க எடத்துல படுத்து, என்னவா சோலிய பாத்து” சட்டென்று அமைதியானார். அந்த ஒரு கணம் அவர் தன் மொத்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதைப் போலத் தோன்றியது. அவருக்குப் பின்னால் அதிகாலையின் கருக்கிருட்டில் வீடுகளும் தெருக்களும் அர்த்தமில்லாமல் கடந்து சென்றன.

”எங்க போனாலும் கெளவிக்க நியாபகம் வந்தா உடனே கிளம்பி வந்துபோடுவேன்.” தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டார். “அவளுக்கு நாம ஒண்ணும் தேவை கிடையாது அவளே கஞ்சியும் காயும் வெச்சு என்னவாம் செய்துகிடுவா, ஒரு நேரம் சாப்பாடு, திளைக்குத வெண்ணில ஒரு குளி, அதுபோறும். பேச்சுத் துணைக்கு செத்து போன அப்பனும், அம்மையும், கெட்டுனவனும், மக்களும் எல்லாம் உண்டு.”

நான் சற்று அதிர்ச்சியுடன் “தனியா பேசிட்டு இருப்பாங்களா? டாக்டரக் காட்டலயா?” என்றேன்.

அவர் என்னைச் சற்று ’மார்க்கமாகப்’ பார்த்தார். அந்தப் பார்வையிலேயே அக்கேள்வியின் அபத்தம் எனக்குப் புரிந்தது. நாக்கை லேசாகக் கடித்துக்கொள்ள அவர் சிரித்தபடி சொன்னார். “அவளுக்கு என்னடே ரோகம்? தொன்னூறு வயசு கெளவி பேசலனாதான் கொண்டேய் காட்டனும். இதுக்கு கொண்டுபோனா என்ன கோட்டினு புடிச்சு உள்ள போடுவானுக.”

நான் சமாளிக்கும் விதமாக “இருந்தாலும் ஒரு பயம்…” என்று இழுத்தேன்.

”இதுல என்னடே? நீ இத சொல்லுகா, வீட்டுக்க பின்னாடி ஒரு யச்சி கிடக்கு பாத்துக்க, ராத்திரி விளக்கும் பிடிச்சு அங்கன போய் நின்னு அவளுக்க கூட பேசிட்டு நிப்பா, என்னவாம் பழய கத இருக்கும் போல.”

”ஐயோ, யக்‌ஷியா? வீட்டுக்கு வராதா?”

”அதல்லாம் வரமாட்டா, பின்னாடி மதில் இருக்குல்லா?”

”பேய்க்கு என்ன மதிலு?”

”அது பேய்க்கு. இது யச்சி. யச்சிலாம் நல்ல குடும்பத்துல பிறந்த பொண்ணுல்லா? மதிலெல்லாம் சாடாது.”

அவர் முகத்தில் லேசாக ஒரு முறுவல் தோன்றியது. ஒவ்வொரு முறையும் அவர் சிரிப்பது வரை அவர் சொல்பவற்றை என்னால் இன்னதென வகைபிரிக்க முடியவில்லை.

”அப்பறம் அம்மைக்கு என்னாச்சு? எப்ப இறந்தாங்க?”

”இன்னா இந்த மாசம்தான் மக்கா.”

சட்டென்று ஒரு அலை போல அந்த பதிலின் நிச்சயத்தன்மை என்னில் அறைந்தது. கைகள் சற்று நடுங்க ஸ்டீயரிங்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.

”நான் இங்க நிக்கல பாத்துக்க, என்னவோ தோனுச்சு, அந்தால கிளம்பி காசிக்கு போனேம். அங்க இங்கனு ஒரு பத்துநாள் கறங்கிட்டு திரும்பி வரும்போ எல்லாம் முடிஞ்சுபோட்டுது. செரீண்ணு ஒத்தையிலே வீட்ல கேறி கிடந்தேன். மறுநாள் காலையில பாக்கேன், பலாமூட்டுகிட்ட என்ன மக்கானு கேட்டுட்டு நிக்கா.”

அந்தக் காட்சியை அவர் சொன்னபோதே எனக்கு இயல்பாக புன்னகையெழுந்தது. அவர் நேராக ரோட்டைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார், இன்னும் கிழவியைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல.

”பிறவு பின்ன அங்கயும் இங்கயும் அவள பாப்பேன்.” என்னை நோக்கி “செரி அதான் கெளவிக்கு சென்னையையும் காட்டிபோடலாம்னு இங்க வர தீர்மானிச்சாச்சு” என்று சிரித்தார்.

”அம்ம வந்தா பரவால்ல, கூட அவங்களுக்க அம்மையும், அப்பனும், கூடபிறந்தவாளும், யக்‌ஷியும்லாம் சேர்ந்துல்லா வருவாங்க?” என்றேன்.

அதைக்கேட்டு அவர் சட்டென்று வெடித்துச் சிரித்தார். தொடையில் கையைத் தட்டி சத்தமாக ”செரிதான்டே வரட்டும்ங்கேன், நம்ம ஊருக்க ப்ரான்ஞ்ச இங்கன தொடங்க வேண்டியதுதான?” என்றுவிட்டு மேலும் சிரித்தார். நானும் அவருடன் சேர்ந்து சிரித்தேன்.

சற்று இடைவெளி விட்டு கொஞ்சம் மூச்செடுத்து அவர் சொன்னார் “நம்ம எங்க போனாலும் அதான் மக்கா ஊரு. செரிதான?”

“ஆமா” என்றேன் புன்னகையுடன்.

அதற்குள் நாங்கள் பெருங்களத்தூர் வந்திருந்தோம். சட்டென்று ரோட்டை பார்த்தவர் “ஏம்டே அது எஸ்.ஸி.டி.சி பஸ் தானா?” என்றார் முன்னால் எம்பியபடி.

”இருங்கண்ணே நான் திருநெல்வேலி வர கொண்டேய் விடுகேன்.”

”வேணாம் மக்கா, நமக்கு இந்த கவன்மெண்ட் பஸ்ஸுல குலுங்கி குலுங்கி போனாதான் ப்ரயாணம் பண்ண ’எஃபெக்ட்’ கெடக்கும் பாத்துக்க.” என்றபடி பின்னாலிருந்து ஏர்பேக்கை எடுத்துக்கொண்டார். ”நீ இன்னா இங்கன நிறுத்து. நான் அப்டியே ஏறிகிடுகேன்”

நான் காரைச் செலுத்தி பஸ்ஸுக்கு முன்னால் சற்றுத் தள்ளி நிறுத்தினேன். அவர் கதவைத் திறந்து வெளியிறங்கி ஜன்னல் வழியே தலையை நீட்டி “அப்ப பாப்பம்டே மக்கா, ஜாலியாட்டு இரு என்னா?” என்றுவிட்டு என் கன்னத்தை லேசாகத் தட்டிவிட்டுச் சென்றார்.

காரின் புறம்நோக்கும் கண்ணாடி வழியாக அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த சிறிய உருவம் பஸ்ஸை நோக்கி ஓடிச்செல்வதும், ஏறுவதற்கு முன் கண்டக்டரிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பதும் தெரிந்தது. அவர் ஏறியபின் பஸ் மெல்லப் புறப்பட்டு என்னைக் கடந்து சென்றது.

என் முகம் என்னையறியாமல் புன்னகையில் உறைந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். கன்னங்கள் வலிக்கும் அளவு நான் சிரித்திருந்தேன். செவ்வொளியுடன் காலை அப்போதுதான் விடியத் துவங்கியிருந்தது. சாலையும், வாகனங்களும், தூரத்து டீக்கடையில் நின்றிருந்த மக்களும், சாலையோரம் பெருக்கியிடப்பட்டிருந்த குப்பையும் கூட அந்த கணம் ஒரு ஓவியத்தின் ஒழுங்கமைதியுடன் தோன்றின. நான் சற்று முகம் கழுவ எண்ணி காரை ஒதுக்கி நிறுத்தினேன். தண்ணீர் பாட்டிலுடன் கதவைத் திறந்து இறங்கியபோது கார்முகப்பின் மேல் வைத்திருந்த என் செல்ஃபோன் வினோதமான ஒலியுடன் அதிரத்துவங்கியது.

2 COMMENTS

  1. வழித்துணை கதை சிறப்பு
    கருவறை திரும்பும்‌ சாமியைப்போல் சர்ப்ப நடையில் மனதில் அமர்ந்து
    கொள்கிறது மகிழ்ச்சி

  2. வழித்துணை அருமையான கதை,

    அலைப்பபேசி ஒலிக்க ,அண்ணாநகரில் புறப்பட்டு . இடையில் ஏறிய மனிதனுடன் காசி,மசானக்காடு,நாகர்கோவில்,,அம்மை,
    அம்மைக்கு அம்மை,அப்பன்,முக்கியமாக யக்க்ஷி ,பெருங்களத்தூர் சேர்ந்ததும் மீண்டும் தொலைபேசி ஒலித்தது.lighta சொல்லிட்டு சென்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.