வில்லியம் டி. வோல்மன்: இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

காலநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் இதழாளருமான வில்லியம் டி. வோல்மன் வெளியிட்டுள்ளார்.

“நீண்ட நாட்களாக காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு என்றைக்கோ மக்களை பாதிக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றி நான் அழுத்தம் கொண்டிருக்க விரும்பவில்லை” என்று வோல்மன் (William T. Vollmann) கூறுகிறார்.

நோபல் பரிசுக்கு தகுதிவாய்ந்த, திறமையான, தனித்துவமிக்க எழுத்தாளரான வோல்மன் காலநிலை மாற்றத்தின் மெய்மையில் (reality of climate change) தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார். ‘கரிபொருள் சித்தாந்தங்கள்’ (Carbon Ideologies) என்று பெயரிடப்பட்டுள்ள விவாதங்களைக் எழுப்பக்கூடிய நூலின் இரு பாகங்களில் முதல் பாகத்தை ஏப்ரல் 2018இல் அவர் வெளியிட்டுள்ளார். ‘உடனடி ஆபத்து இல்லை’ (No Immediate Danger) என்று தலைப்பிடப்பட்டு 600 பக்கங்களுக்கு விரியும் இந்த புத்தகம், ஆற்றல் நுகர்வு சித்தாந்தத்துடன் (ideology of energy consumption) நம் சமூகம் எப்படிப் பிணைந்துள்ளது என்று ஆராய்கிறது. “சூடான இருண்ட எதிர்காலத்தில்” (hot dark future) வாழவிருக்கும் மனிதர்களை நோக்கி எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் நிறைய தொழில்நுட்ப சொல்லாடல்கள், அட்டவணைகள், ஆய்வுகள், மற்றும் வோல்மனின் நூற்றுக்கணக்கான சொந்த புகைப்படங்களைக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக வோல்மன் உலகம் முழுக்க பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பயணித்திருக்கிறார். பதிப்பாளரின் பொறுமை சுருங்கி வரவே, தன்னுடைய சொந்தப் பணத்தில் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். “நான் என்னுடைய சொந்த பணத்தை செலவிட்டேன்”, என்று எழுதும் வோல்மன், “சுரங்க வேலை நடைபெறும் மலைகளில் ஏறுவதற்கு, கச்சா எண்ணெய்யை நுகர்வதற்கு, அநேக சமயங்களில் காமா கதிர்கள் என் முகத்தில் விழுவதற்கு என எப்போதாவது பிறர் பணத்தையும் செலவிட்டேன்” என்றும் தன் பயண அனுபவங்களை விவரிக்கிறார்.

கைபேசி, மின்னஞ்சல் போன்ற எதையும் உபயோகிக்காத வோல்மனை நியூ யார்க் நகரின் விடுதி ஒன்றில் சந்தித்தேன். அவருடைய புத்தக அறிமுகத்திற்காக வந்திருந்தார். தெளிவுக்காக சற்றே திருத்தப்பட்ட எங்களுடைய உரையாடல் கீழே.

‘உடனடித் ஆபத்து இல்லை’ (No Immediate Danger) எதிர்காலத்திற்கு ஒரு கடிதமாக எழுதப்பட்டுள்ளது. தற்கால வாசகர்களுகாக அல்லாமல் இந்த வகையில் இதை நீங்கள் உருவாக்க காரணம் என்ன?

நிகழ்காலத்திற்கு நான் எழுத வேண்டும் என்றால், ஒன்று மாற்றமடைந்தவர்களுக்குப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பேன் அல்லது மாற்றம் அடையாதவர்களிடம் என்னுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பேன். துரதிர்ஷ்டவசமாக, இவ்விரு விஷயங்களுமே கடினமானவை. ஆனால், எதிர்காலத்திற்காக எழுதுவதன் மூலம் இந்த நெருக்கடி அதிகரிப்பை நாம் ஏன் அனுமதித்தோம் என்பதை வாசகர்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன். இப்புத்தகம் எதிர்காலத்தில் கொஞ்சமேனும் மதிப்பைப் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.

குடியரசு கட்சியினரில் (Republicans) சிலர் காலநிலை மாற்றத்தை மறுப்பதற்கு அவர்களின் மோசமான நம்பிக்கைகள் (bad faith) காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒருவேளை, அது உண்மை என்று அவர்கள் நம்பத் தொடங்கும்போது அவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் திடீரென நின்றுபோகும் என்பதுகூட காரணமாக இருக்கலாம்.

அது ஒரு நிச்சயமான சாத்தியம்தான். ஆனால், நான் இதை மனித இயல்பு என்று நினைக்கிறேன். நீண்ட காலமாகவே காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். கவலைப்படுவதற்கு எனக்கு வேறு விஷயங்கள் இருக்கின்றன என்று நினைத்தேன். நான் இறந்துவிட்ட பிறகு என்றைக்கோ மக்களை பாதிக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றி நான் அழுத்தம் கொண்டிருக்க விரும்பவில்லை. இப்போதும்கூட அது ஒரு பிரச்சனை இல்லை என்று நினைக்க விரும்புகிறேன். ஏனென்றால், அதற்கு மாற்றுவழியும்கூட பரிதாபகரமானதாகவே இருக்கிறது. நன்னம்பிக்கையினால் (good faith) மக்கள் காலநிலை மாற்றத்தை மறுக்க முடியும் என்று நினைக்கிறேன். பலர் அப்படி மறுக்கிறார்கள். எண்களுடனான ஓரளவு பரிச்சயம், அறிவியல் முறைகள் மற்றும் நிபுணர்களின் மேல் நம்பிக்கை இவற்றைக் கொண்டுதான், “ஆம், இது ஒரு தீவிரமான பிரச்சனை” என்று சொல்லத் தொடங்க முடியும்.

நிபுணர்கள் அடிக்கடி தங்கள் நிலையைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கின்றனர், தெரியுமா? இளைபாறுதலுக்காகவும் மருத்துவத்திற்காகவும் மரியூவானா (marijuana) சட்டப்பூர்வமாக்கப்பட்ட கலிஃபோர்னியா மாகாணத்தில் வாழ்வதை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது. மரியூவானா ஆபத்தானது என்றும், மேலும் ஆபத்தான விஷயங்களுக்கு அது இட்டுச் செல்லும் என்றும் நிபுணர்கள் கூறுவதாக சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்டது நினைவிருக்கிறது. நிபுணர்கள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை.

சுயமாக கற்றறிந்தவர்கள் மற்றும் தங்கள் சொந்த அனுபவங்களின் பார்வையிலிருந்து இந்த உலகைக் காண்பவர்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். மேற்கு விர்ஜினியாவில் இருக்கும் நான் விரும்பும், போற்றும் ஒரு போதகரைச் சந்தித்தபோது, அவர் சொன்னார், “பில், இந்த பூமிக்கு மேலே நான் பறக்கின்றபோது, அனைத்து மரங்களையும் பார்க்கும்போது ‘மனிதன் உருவாக்கிய உபகரணங்கள் எப்படி இங்கு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கான புகையை வெளியிட முடியும்?’ என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்”. இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கு பதில் கூறுவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும், அல்லது நிபுணர்களின் மேல் ஏதாவது ஒரு நம்பிக்கை வேண்டும்.

சரசாரி நபர் ஒருவரிடம் பூமி சூரியனைச் சுற்றி வருவதை நிரூபியுங்கள் என்று கேட்டால், ‘செயற்கைக் கோள் புகைப்படங்கள் அல்லது நாசா வெளியிட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்’ என்று அவர் பதிலளிக்கக்கூடும். இப்படியான படங்கள் இல்லையென்றால், கோபர்நிகஸ் செய்ததையேதான் பெரும்பாலானவர்கள் ஜியோமிதியையும் அதையொட்டிய சாத்தியங்களையும் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஒக்லஹோமா வங்கியின் துணைத் தலைவர் என்னிடம் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் சித்தாந்தவாதிகள்தான். நீங்கள் மற்றொருவரின் சிந்தாந்தத்தை தாக்குகிறபோது, அவர் உங்களுடைய சித்தாந்ததை திருப்பித் தாக்குவார் அல்லது உங்களை விட்டு விலகுவார். அது மனித இயல்பு’. காலநிலை மாற்றத்தை நம்பாதவர்களுள் பெரும்பாலான மக்கள் நியாயமானவர்களே, அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.

இந்தப் புத்தகத்தின் மையக்கருத்து, நீங்கள் சொல்லும் ‘கரிபொருள் சித்தாந்தங்கள்’ – அதாவது புதைபடிவ எரிபொருளைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதற்காக மக்கள் சொல்லும் காரணங்கள்.

நாம் எல்லோருக்கும் நம்பிக்கைகள், உணர்ச்சிகள், மற்றும் விருப்புகள் இருக்கின்றன. நம்முடைய சொந்த வசதி மற்றும் இன்றைவிட நாளை சிறப்பாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே இவை அமைந்திருக்கின்றன. நினைத்த இடங்களுக்கு கார்களை ஓட்டிச் செல்ல முடியாது அல்லது நமக்குத் தேவையான நேரத்தில் வெப்பநிலையை அல்லது ACஐ அதிகரிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், நம் வாழ்க்கை மோசமாகும் என்பதே பெரும்பாலானோரின் நியாயமான எண்ணம்.

அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம். மிகக் குறைந்த வசதியிலும் ஒருவேளை குறைந்த பாதுகாப்பிலும்கூட நம்முடைய வாழ்க்கையை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா? நாம் அடைந்துள்ள வசதியான நிலையை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் அடைவதைத் தடுக்கும் கடும் சுபாவம் கொண்டவர்களாக நாம் இருக்கப் போகிறோமா? நம்முடைய தற்போதைய நடத்தையின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு இவை மிகவும் சக்திவாய்ந்த உந்துதல்களாக இருக்கின்றன. நீங்கள் விரும்பினால், இவையே அதற்கான சித்தாந்த அச்சாணியும் ஆகும்.

Image result for William T. Vollmann carbon ideologies

ஆனாலும், அத்தகைய சித்தாந்த அடித்தளங்கள் தவறானவை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்?

துரதிர்ஷ்டவசமாக, அப்படித்தான் நான் நினைக்கிறேன். சிறந்த தொழில்துறை செயல்முறைகள் மூலம் சில விஷயங்களை நிறைவேற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். 2012இல் பிரிட்டனைவிடவும் க்ரீஸ் 35 மடங்கு அதிகமான பசுங்குடில் வாயுக்களில் (greenhouse gases) மிகவும் ஆபத்தான நைட்ரஸ் ஆக்சைடை, நைட்ரிக் அமில தயாரிப்பின்போது வெளியிட்டது. போலவே, அமெரிக்கா 27 மடங்கு அதிகமான வாயுவை வெளியிட்டது. அப்படியென்றால், அவ்விஷயங்களைச் சிறப்பாக செய்ய முடியுமென்பதே அர்த்தம். சில விஷயங்கள் செய்யக்கூடியவையாகவும், சில செய்ய முடியாதவையாகவும் இருக்கும். சிலர் “அந்த மாற்றத்தைச் செய்ய நிறைய பணம் செலவாகும்” என்று சொல்லும்போது அதைச் செய்ய முடியாமல் போகும். அப்போது என்ன சொல்வீர்கள்? “ஆம், உன்னை நஷ்டப்படுத்தி அதைச் செய்வோம்”, என்று சொல்வோமா அல்லது, “பரவாயில்லை, அம்மாற்றத்தை நீ செய்வதற்கு உனக்குப் பணத்தைத் தரப் போகிறோம்” என்று சொல்வோமா? இதற்கு ஒரு பதில் இருக்கிறது என்று என்னால் நடிக்க முடியாது. என்னால் முடிந்ததெல்லாம் நிறைய நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன என்று சொல்வது மட்டுமே.

இது நுகர்வோர் சிலர் தங்களுடைய வீடுகளில் செய்யக்கூடிய காரியம் மட்டுமல்ல. முக்கியத்துவம் அற்ற சிறிய விஷயங்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஜப்பானில், ஏறக்குறைய 50 சதவீத மீத்தேன் வெளியேற்றம் (methane emission) – ஆபத்து மிகுந்த மூன்று பசுங்குடில் வாயுக்களில் மீத்தேனும் ஒன்று – அரிசி விளைவித்தல் மூலம் ஏற்படுக்கிறது. இவையெல்லாம் தீமையில்லாத ஒன்றாகத் தோன்றும். துரதிர்ஷ்டவசமாக ஒரு வகையான ஒழுங்குமுறை நரகத்திற்குள் மக்கள் இழுத்துவரப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கலாம். ஆனால், அப்படி ஒன்று எனக்குத் தெரியவில்லை.

ஒருவகையில், நவீன உலகின் வசதிகளில் இருந்து உங்களை நீங்கள் வரைமுறைப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். உதாரணத்திற்கு, இணையத்தையோ ஒரு செல்பேசியையோகூட நீங்கள் உபயோகிப்பதில்லை என்பது என்னுடைய புரிதல்.

உண்மையில் அவை எல்லாம் வீணானவை என்று நான் நினைக்கிறேன். அந்தக் குப்பைகள் எல்லாம் எனக்குத் தேவையில்லை. அதற்காக நான் ஒரு புனிதர் என்பதோ அல்லது வேறு ஏதும் காரணங்களோ கிடையாது, ஆனால், எதற்காக உடனடித் தகவல்தொடர்பு எனக்குத் தேவைப்படுகிறது? தடையில்லாமல் வந்துகொண்டிருக்கும் தேவையற்ற குறுஞ்செய்தியோ அல்லது ஒப்புதலே இல்லாமல் வரும் மோசமான, இலக்குள்ள விளம்பரங்களையோ எதிர்கொள்ளும் அழுத்தம் மிகுந்த, அளவுக்கதிகமாக வேலை செய்யும் நண்பர்களை நான் பார்க்கிறேன். இவ்விஷயங்கள் எனக்கானவை அல்ல.

நீங்கள் அபாயமானவர் என்று சி.ஐ.ஏ (CIA) மற்றும் எஃப்.பி.ஐ (FBI) ஒருமுறை சந்தேகித்ததை தகவல் சுதந்திர சட்டத்தின் மூலம் கண்டுபிடித்து இரண்டு முகமைகளின் மீதும் வழக்கு தொடர்ந்தீர்கள். மேலும் அது குறித்து Harper’s இதழுக்கும் எழுதினீர்கள். உங்களைப் பற்றி அவர்களிடம் இருக்கும் ரகசிய ஆவணம் ஒன்றில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எதிரான கருக்கள் வோல்மனின் ஆக்கங்கள் முழுவதும் தொடர்ந்து வந்திருக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது. New Republicஇல் வெளியான உங்களைப் பற்றிய கட்டுரையில், நீங்கள் இதை முதலில் நகைப்புக்குரியதாகவும் பின்பு அதுகுறித்து கவலைப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.

அரசாங்க வெறுப்பாளர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? நான் அவர்களுள் ஒருவன் இல்லை; அவர்களில் ஒருவனாகவும் இருக்க விரும்பவில்லை. உதாரணமாக, காவல்துறையை மக்கள் எப்படி வெறுக்கத் தொடங்குகிறார்கள்? துன்புறுத்தல் போன்ற தோற்றமளிக்கும் ஒருமுறை இருக்கும்போது இது நிகழ்கிறது.

ஒருகாலத்தில் நான் எங்கு பயணப்பட்டாலும், என்னுடைய கைபெட்டியில் ஒரு பிளவு ஏற்படும். அடுத்த முறை நான் பயணிக்கும்போது, சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று சொல்லி அந்தப் பிளவை திறப்பதற்கு மேலும் வெட்டுவார்கள். சுவிட்சர்லாந்திலிருந்து என் தாயார் எனக்கு கடிதம் எழுதுவார். கடித உறைகளை ஒட்டுவதில் அவர் திறமையானவர் – எனக்கு கிடைப்பதோ காலியான ஒட்டப்படாத உறைகள்தான். என்னுடைய ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர் எனக்குக் கடிதம் எழுதுவதையே கைவிட்டுவிட்டார். ஓர் ஆண்டில் ஆறு கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை.

இப்போதும் எனக்கு வரும் அஞ்சல்கள் தாமதிக்கப்படுகிறது, இடைமறிக்கப்படுகிறது, சமயங்களில் எனக்கு அளிக்கப்படுவதே இல்லை என்று நான் நினைக்கிறேன். அது என்னை தனிமைப்படுத்துவதாகவும் சலிப்படையச் செய்வதாகவும் இருக்கிறது. அதே சமயம் இத்தகைய விஷயங்களுக்கு பலியான ஒரு நபராக என்னுடைய நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. என்னைவிட மற்றவர்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளப் போகிறேன், அதற்குள் சென்று என்னுடைய வாழ்க்கையை நான் பாழாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

காலநிலை மாற்ற மறுப்பாளரின் நேர்காணல் ஒன்றைச் சரியாக கொண்டுவரவில்லை என்று பிபிசி சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. காலநிலை மாற்றம் சார்ந்த ஒரு செய்தியைச் சொல்லும்போது ஊடகங்கள் எத்தகைய அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எரிக், நான் சொல்லப்போவது இதைத்தான். என்னுடைய பழைய இயற்பியல் பாடநூல்கள் எல்லாம் அறிவியல் கோட்பாட்டின் பண்புகள் குறித்து பேசியது. மற்றும், தொடர்புடைய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, எந்த கோட்பாட்டையும் நிரூபிக்க முடியாது; அது உண்மையில்லை என்று மட்டுமே சொல்ல இயலும். அடுத்த முறை என் கையை விரிக்கும் போது கையிலிருக்கும் கண்ணாடிக் கோப்பை தவறினாலும் கீழே விழாமல் போனால் புவியீர்ப்பு பொய்யாகலாம். எப்போதுமே அது ஒரு சாத்தியமாகும்.

துல்லியமான கணிப்புகளை உருவாக்குவதற்கு கோட்பாட்டின் மற்றொரு அம்சம் உங்களை அனுமதிக்கிறது – அதாவது நான் தவறவிட்டால் கண்ணாடிக் கோப்பை தரையில் விழுந்துவிடும் என்பதை நான் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று உணர்கிறேன். காலநிலை மாற்றம் குறித்த கணிப்புகள் எந்தளவுக்குத் துல்லியமானவை என்பது குறித்த கட்டுரைகளை நாம் எழுதலாம். நான் புரிந்துகொண்டவரை, அவை மிகவும் துல்லியமான கணிப்பாகும்.

இதற்கிடையில் வெள்ளக் காப்பீடு, ஆயுள் காப்பீடு அல்லது அது போன்ற விஷயங்களில் நாம் செய்வதைப் போல, மோசமான சூழலுக்கு நாம் தயாராவது புத்திசாலித்தனமான காரியமாகத் தோன்றும், ஏனென்றால் அது மட்டுமே முடியும். நடக்காது என்று நம்புவோம். ஆனாலும், அது நடந்துவிட்டால் அதற்கு தயாராகவும் நாம் இருக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு சாத்தியமான தீர்வுகள் ஒன்றாக கரிபொருள் இல்லாத முதன்மை மூலமாக அணுசக்தி (Nuclear power) பார்க்கப்படுகிறது. ஜப்பானில் 2011 சுனாமியின்போது ஏற்பட்ட அணு உலை அழிவிற்கு பிறகான மாற்றங்களை இந்த புத்தகத்திற்காக ஆய்வு செய்ய ஃபுகுஷிமாவிற்கு ஐந்து முறை சென்றுள்ளீர்கள். இதிலிருந்து நீங்கள் கண்டுகொண்ட மிகப்பெரிய விஷயம் என்ன?

முதலில், மக்கள் நினைக்கும் அளவுக்கு அது கரிபொருள் இல்லாதது அல்ல; ஓரளவு கரிபொருள் இல்லாதது என்று சொல்லலாம். சுரங்கத்தில் யுரேனியம் எடுத்தல், செயலாக்க வசதிக்காக அதன் இடப்பெயர்வு, செறிவூட்டுதல் [(enrichment) (புது உலை கட்டமைக்க தேவை)] – இவையெல்லாம் கரிபொருளை எரிக்கின்றன. மேலும், அணு உலைகள் காப்பு ஜெனரேட்டர்களைக் கொண்டிருக்க வேண்டும். சாதாரண மின் இணைப்பில் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் எரிபொருள் கரைந்துவிடுதைத் தடுக்க இவை தேவையாகின்றன. ஃபுகுஷிமாவில் நிகழ்ந்தது இதுதான். டெம்கோவிடம் இருந்த எரிபொருளைக் கொண்டு செயல்படும் சாதாரண காப்பு ஜெனரேட்டர்கள் சுனாமியை எதிர்கொள்வதற்குத் தகுந்தவையாக இருக்கவில்லை. அதனால்தான் எரிபொருள் தண்டுகள் உருகின.

பல அமெரிக்கர்கள் உணராத இன்னொரு விஷயம், இக்கொடூரம் ஃபுகுஷிமாவில் தற்போதும் தொடர்கிறது என்பதுதான். மிகப்பெரிய முயற்சி மற்றும் செலவில், டோக்கியோவை மையமாகக் கொண்டிருக்கும் டெம்கோ (Temco) நிறுவனம், அணு உலைகளைச் சுற்றி பனிக்கட்டி சுவர்களை எழுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து உறைநிலையில் வைப்பதற்கு மிகப் பெரிய அளவிலான ஆற்றல் தேவையாகிறது. நிலத்தடி நீர் கடலில் கலந்துவிடாமல் இருப்பதே இதன் நோக்கம். அதன் ஓட்டத்தை அவர்கள் குறைத்திருந்தாலும், இப்போதும் சில டன்கள் கதிரியக்க நீர் கடலில் கொண்டுதான் இருக்கிறது.

தங்கள் சமூகத்தை இழந்த ஏராளமான மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடத்திற்கு திரும்புவதற்கான சாத்தியங்களே இல்லை, சமயங்களில் ஒரு கலிஃபோர்னியாவாசியாக இதை புரிந்துகொள்ள சிரமப்படுகிறேன். ஏனென்றால் கலிஃபோர்னியவாசிகளாகிய நாம் எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்போம். உங்கள் ஊரில் நிறைய மக்கள் தங்கள் பூர்வீக வீட்டில் வசிக்கலாம், ஆனால், ஃபுகுஷிமா விபத்தினால் வெளியேறியவர்களுடைய குடும்ப வரலாறென்பது 100 ஆண்டுகளுக்கு முந்திச் செல்லக்கூடும்.

திடீரென்று, அவர்கள் பிறந்த இடத்திற்கு செல்ல முடியாதென்பதும், முன்னோர்களுடைய கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த செல்ல முடியாதென்பதும் அல்லது அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைந்த அளவிலே இருத்தலும் – மிகவும் சோகமான விஷயமாகும்.

மேலும், 2011ஆம் ஆண்டில் இருந்த ஸீஸியம் சீர்கேடு [(cesium contamination) (ஃபுகுஷிமா விபத்தில் வெளியான கதிரியக்க பொருள்)] 300 ஆண்டுகள் வரை ஆகலாம். அதை அவர்கள் சரி செய்துள்ளனர். அதாவது சில இடங்களில் இலைகள், தளிர்கள், மண் ஆகியவற்றை சுத்தமாக அகற்றுவதன் மூலம் அதன் வீரியம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அநேக இடங்களில் ஸீஸியம் இன்னும் மண்ணிலேயே கிடக்கிறது. ஒரு மீட்டர் ஆழமுள்ள எந்த நீர் நிலையும் நியூட்ரான் கவசமாக செயல்படும் என்று சொல்லி அப்படியுள்ள இடங்களை தூய்மைப்படுத்த தேவையில்லை என்று சொல்கிறார்கள். காடுகளைக் கொண்டுள்ள மலைகளை என்ன செய்யப் போகிறார்கள்? மரங்களை வெட்டிவிடுவார்களா? ஆகவே, நடப்பிலுள்ள ஒரு கொடுங்கனவாக இது இருக்கிறது.

போலவே, சூரிய சக்தி (solar energy) மற்றும் காற்று சுழலி (wind turbines) போன்ற மாற்று வழிகளையும் கரிம சித்தாந்தங்கள் என்று நீங்கள் அடையாளப்படுத்துகிறீர்கள். அது ஏன்?

நம் காலத்தின் பிரதான சுற்றுச்சூழல் பிரச்சனை, கரிபொருள். இந்தக் கரிபொருள் சித்தாந்தங்கள் என்பது முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் போல: ஒரே அரசியல் விவாதம் ஒன்றின் இரு பக்கங்கள். உதாரணத்திற்கு, அணுசக்தி, கரிபொருள் பிரச்சினையைச் சமாளிக்க முன்வைக்கப்படும் வழி. போலவே, சூரிய சக்தியும். இந்த எரிபொருள் அல்லது சிந்தாந்தங்களில் நாம் என்ன முதலீடு செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து இவையனைத்தும் ஒன்றே.

சுருக்கமான புத்தகத்தைப் பதிப்பாளர் கேட்டதாகவும் அதை நீங்கள் கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஒப்புகைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இறுதியில் ஏன் உங்களால் அதைக் கொடுக்க முடியவில்லை?

எரிக், இரண்டு பாகங்களையும் நீங்கள் படித்துவிட்டீர்களா?

இல்லை, முதல் பாகம் மட்டும்தான், ‘உடனடி ஆபத்து இல்லை’.

சரி, இரண்டையும் வாசித்தால், நீங்கள் எதையெல்லாம் நீக்குவீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். இந்த புத்தகத்தை இன்னும் விரிவாக உருவாக்கி இருப்பதற்கான நேரமும் பணமும் எனக்கு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பதிப்பாளரிடம் பணமும் பொறுமையும் இற்றுப் போய்விட்டது. என்னிடம் பணமும் நேரமும் இல்லாமல் போனது. ஒரே மனிதால் ஆகக்கூடிய பெரும் காரியமும் அதுவே.


ஏப்ரல் 19, 2018 அன்று “Are we prepared to endure lives with less comfort?”: William T. Vollmann on climate change என்ற தலைப்பில் Vox இணையதளத்தில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் எரிக் ஆலன் பீன்.

தமிழில் சு. அருண் பிரசாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.