“துறைமுகத்தில் இறங்கி நிலத்தில் அடியெடுத்துவைத்த ஒடீசியஸ், மரங்களடர்ந்த பகுதியை நோக்கிச் செல்லும் கரடுமுரடான பாதையின் வழியே ஏதேனே கூறியிருந்த மலையின் உச்சியை நோக்கி நடந்தான்…”
கொஞ்ச நேரம் படித்தான் ரிச்சர்ட். இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் தன்னிடம் உண்மையாக இருந்த பன்றி மேய்ப்பவனின் வீட்டுக்கு ஒடீசியஸ் மேற்கொண்ட பயணத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தான். பன்றி மேய்ப்பவன் – என்ன ஒரு சொல்லாடல், என்ன ஒரு வாழ்க்கைமுறை! கூடவே அவனுக்கு ஒடீசியஸை அடையாளம் தெரியவில்லை என்பது வேறு. இந்தப் பழைய புத்தகங்களில் யாருக்கும் எவரையும் அடையாளம் தெரிவதில்லை. ஆனாலும் ஒடீசியஸுக்கு ஒரு வேளை உணவைக் கொடுத்துவிட்டு புகார் சொல்லியே அவனைச் செவிடாக்கிவிட்டான். அவ்வப்போது பக்கத்தில் படுத்திருந்த அனாவைப் பார்த்துக்கொண்டான் ரிச்சர்ட். அவள் விழித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவன் பக்கம் திரும்பி கைகளை நீட்டவேண்டும் என எதிர்பார்த்தான் – அதற்கு அதிர்ஷ்டமில்லை. பொறுமையிழந்து மனச்சோர்வுடன் ஒடிசியைப் படிக்கத் தொடங்கினான். படுக்கைக்குப் பக்கத்திலிருந்த மேசைமீது இந்தப் பக்கத்தைப் பிரித்து வைத்திருந்தாள் அனா. ரிச்சர்டுக்கு அலுப்பூட்டியது, கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை. வில்லுக்கு நாண் பூட்டி மற்ற மணமகன்களை ஒடீசியஸ் கொலைசெய்யும் பக்கத்தைப் புரட்டினான். சிறுவயதில் படித்திருந்த பிரதியைவிட இதில் இன்னும் அதிகமான அலங்காரச் சொற்களும் சொற்பொழிவும் நிறைந்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் கொலம்பியா பல்கலையில் புதிய மாணவனாக இருந்தபோது கட்டாயப் பாடங்களில் ஒன்றாக இதைப் படித்திருக்கவேண்டியது. அந்த வாரம் ஃப்ளூ வந்துவிட்டது.
இதை நூலகத்திலிருந்து எடுத்துவந்திருந்தாள். எந்தெந்த தேதிகளில் இரவல் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தான். கொஞ்சம் பேர்தான் எடுத்திருந்தார்கள்; அதுவும் அதிக நாட்கள் இடைவெளியில். புத்தகத்தை மூடிக் கீழே வைத்தான்.
விளக்கைப் போட்டதும் அனா கொஞ்சம் அசைந்தாள். உடனே அணைத்துவிட்டான். தலையணையை நகர்த்தினான் போர்வையை இழுத்துச் சரிசெய்தான், புரண்டுபடுத்தான். எதிர்பார்த்ததுக்கு மாறாக உறக்கம் கலையாமல் மெலிதாகக் குறட்டைவிட்டபடி சுவரைப் பார்த்தபடி தூங்கினாள். கட்டில் குறுகலாக இருந்தது. இருட்டில் அவளுடைய பின்பக்கத்திலிருந்து, குறிப்பாகக் கால்களிலிருந்து வெளிப்பட்ட கதகதப்பை நன்றாக உணரமுடிந்தது. அவளுடைய முட்டியின் மென்மையான பின்பக்கக் குழிவைத் தன்னுடைய முட்டியால் தொட்டான். அவள் அவனைவிட்டு அனிச்சையாக நகர்ந்ததும் எரிச்சலும் வருத்தமும் மண்டியது. கூடவே, தான் வருத்தம் கொள்வது சரியல்ல என்றும் புரிந்தது. அன்றைய இரவில் ஏற்கனவே இரண்டுமுறை தன்னை அவனுக்குத் தந்திருந்தாள். அவளுக்கு மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து நாள் முழுவதும் ஓடியாட வேண்டிய உணவகச் சிப்பந்தி வேலை காத்திருந்தது. அவனுக்கு ஒரேயொரு வகுப்புதான், அதுவும் மதியத்தில். ஆனால் இந்தப் புரிதல் அவனுடைய தேவையைக் குறைக்க எந்தவிதத்திலும் உதவவில்லை. அவளுடைய உடல் அவன்மீது படர்வதும் அவளுடைய திறந்த வாய் அவனுடையதை மூடுவதும் அவளுடைய விரல் நகங்கள் அவனுடைய முதுகில் ஆழப்பதிவதும் – எல்லாமே ஓர் அத்திவாசியமான தேவையாகவே தோன்றியது.
கடவுளே! வேறு எதையாவது பற்றி நினைத்துக் கொள்ளவேண்டும்.
என்ன செய்வது? வேறு எதையாவது நினைத்துக்கொண்டால் கவனத்தைத் திருப்பிக் கொள்வதற்காகத்தான் அதைச் செய்கிறோம் என்பது தெரியும்போது நினைவு முழுவதும் மீண்டும் இந்தப் படுக்கைக்கும் பக்கத்தில் படுத்திருக்கும் அனாவின் உடலுக்கும் மூச்சுக்கும் உடலின் கதகதப்புக்கும்தான் வந்து சேர்கிறது. ஆனாலும் இன்னும் கொஞ்ச நேரம் கவனத்தை வேறு எங்காவது செலுத்தினால் போதும், தூங்கிவிடுவான். அல்லது அவளுடைய அலாரம் அடிப்பதற்கு முன்னால் எழுந்து தயாராக இருப்பான். அவளுக்கு எந்த அழுத்தத்தையும் தரமாட்டான். அவர்கள் பரபரப்பாக இயங்காவிட்டால், அவளுக்கு அது பிடிக்காது, அவள் காலை உணவைச் சாப்பிடாமலோ குளிக்காமலோதான் வேலைக்குப் போகவேண்டியிருக்கும். அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் காயப்பட்டவனைப்போல நடந்துகொள்ளமாட்டான். இந்த முறை நிச்சயமாக அப்படி நடந்துகொள்ளமாட்டான்.
வேறு எதையாவது பற்றி நினைத்துக்கொள். சரி. “தி எக்ஸ்சார்சிஸ்ட்’ – இந்தப் பழைய நாவல் மாணவர் விடுதியின் வரவேற்பறையில் கிடந்தது. பேய்பிடித்த பெண்ணின் தலை கழுத்துக்கு மேலே பம்பரம்போலச் சுழலும் காட்சியைத் திரையில் பார்த்திருக்கிறான். ஆனால் அது ஒரு புத்தகத்திலிருந்து வந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. அது பெரிய இலக்கியம் எல்லாம் அல்ல. இருந்தாலும் ஆர்வமூட்டுவதாகத்தான் இருந்தது. எழுத்தாளர் பேயோட்டுவது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருந்தார். அதில் குறிப்பிட்டிருந்த சில நிகழ்வுகள் குறைந்தபட்சம் நாவலைப் படிக்கும்போது மட்டுமாவது பேய் இருக்கிறது என்று நம்பவைக்கக் கூடிய அளவு அச்சமூட்டுவதாக இருந்தன. பேய் ஓட்டுவதில் சிறப்புத் தகுதி பெற்றிருந்த பாதிரியார்கள் இருப்பதும் தெரியவந்தது. அதுதான் அவர்கள் தொழில், சந்தையில் அவர்களின் சிறப்புத் தகுதி. அபாய மணி ஒலிப்பதற்காகக் காத்திருக்கும் தீயணைப்பு வீரர்களைப்போலக் காத்திருப்பார்கள். ஐடஹோவில் இருக்கும் குடும்பத்தலைவிக்குப் பிசாசு பிடித்தது. டெலாவேரில் இருக்கும் பேருந்து ஓட்டுனருக்குப் பிசாசு பிடித்தது. எத்தனை விசித்திரமான விஷயம்? உள்ளபடியே பாதிரிமார்கள் அதிசயப்பிறவிகள்தான். ரிச்சர்ட் இளவயதில் பக்திமானாகத்தான் இருந்தான். உணவுக்கு முன்னாடி பிரார்த்தனை செய்வான். ஞாயிற்றுக்கிழமை விவிலியப் பள்ளிக்குச் செல்வான். தாடிவைத்த ஆண்களின் படத்தை வெட்டியெடுத்து வெல்வெட்டுப் பின்னணியில் ஓட்டுவான். சர்ச் பரவாயில்லைதான், அது நடந்துமுடிந்த பிறகு நல்ல உணர்வு ஏற்படும். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, வயதான பிறகு, தான் மீண்டும் பக்திமானாக மாறிவிடுவோம் என்று தோன்றியது. ஆனால் பெண்களை மறப்பது என்பது? பெண்ணுக்கு முத்தம் கொடுக்காமல் இருப்பது, பெண்ணின் கால் தன் உடலை வளைத்துக்கொள்ள இடம் தராமல் இருப்பது –
எழுந்து உட்கார்ந்து அனா அவனுக்காக மேசைமீது வைத்திருந்த தண்ணீர் கிளாஸை எடுக்கக் கையை நீட்டினான். போன வாரம் அதைக் கீழே தட்டிவிட்டு அவளுக்கு விழிப்பு ஏற்படுத்திவிட்டான். அதேபோல மறுபடியும் செய்யக்கூடாது என நினைத்தான். கையில் எடுக்கும்போதும் குடித்துவிட்டுக் கீழே வைக்கும்போதும் கவனமாக இருந்தான்.
தலையணையில் சாய்ந்து படுத்தான். கண்ணை மூடியதும் அனா செறுமியபடி அவனருகே நகர்ந்தாள். அவள் உடலின் வெதுவெதுப்பு நறுமணம் வீசும் அலைபோல அவன்மேல் படர்ந்தது. படுக்கையில் இருக்கும்போது அவள் உடல் புத்தம்புது ரொட்டியைப்போல இனிமையான மணம் கொண்டதாக இருந்தது. படபடப்போடு காத்துக்கொண்டிருந்தான். ஆனால் அதற்கப்புறம் அவள் கொஞ்சமும் அசையவில்லை. கடிகார முள் நகரும் ஒலி கேட்டது. கூடவே அவனது சீரற்ற மூச்சின் கரகரப்பான ஓசையும் கேட்க ஆரம்பித்தது.
அறையின் உட்கூரையைப் பார்த்தான். திரைச்சீலையின் வழியே உள்ளே ஒழுகிய தெருவிளக்கின் மெல்லிய கம்பி போன்ற வெளிச்சத்தைப் பார்த்தான். இனி பாதிரிமார்களைப் பற்றி நினைக்கப் போவதில்லை. அது உதவவில்லை. சரி. அப்புறம் அந்த ஒடிஸி. மறுபடியும் படிக்க வேண்டும். இந்த முறை பெரியவர்களுக்கு எழுதப்பட்ட புத்தகத்தைப் படிப்பான்! பேச்சுகளையும் விவரிப்புகளையும் கடந்து சுவாரசியமான பகுதியைச் சென்றடைவான், முக்கியமாக இறுதியில் நடக்கும் கொலையை. அலைந்துதிரிந்து தவறுகளைச் செய்து பின் கலந்துரையாடலோ தேவையற்ற செயலோ இன்றி மனைவியையும் வீட்டையும் மீட்டெடுத்து எல்லாவற்றையும் நேர்செய்யும் ஒடீஸியஸின் வீடுதிரும்பல் அவனுக்குப் பிடித்திருந்தது.
அடுத்தது இலியட்டைப் படிப்பேன். போரும் சமாதானமும் கரமசோவ் சகோதரர்கள் இவற்றையும்கூட. அனாவின் அலமாரியிலிருந்த எல்லாப் புத்தகங்களையும், அவளுக்குப் பிடித்த எல்லாவற்றையும். ரிச்சர்ட் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகப் படித்தவன். மற்ற புத்தகங்களைப் படிக்க நேரமிருக்காது. அப்படி இருந்தாலும் துப்பறியும் கதை திகில் கதை என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வகையில் படிப்பான். சரி. அவன் ஒன்றும் பெரிய இலக்கியவாதி இல்லை – அதற்காக அவன்மீது வழக்குத் தொடுங்கள். பன்னாட்டுச் சூழலியல் பொருளாதாரக் கருத்தரங்கத்தில் அவன் கையாளும் விஷயங்களை உணர்ச்சிமிகும் உள்ளங்கொண்டவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்க விரும்பினான். குறைப்பு உத்தி அலகுகள். மாற்றுத் தேறுமதி கட்டளைகள். பொது சமநிலைமைத் தாக்கம் குறித்த ஆய்வு. எங்கே, படியுங்கள் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டான். என்னுடைய இடத்திலிருந்து பாருங்கள்.
அனா ஒன்றும் கர்வம் கொண்டவளில்லை. நிச்சயம் அப்படிப்பட்டவளல்ல. அவளுக்கு இந்தப் புத்தகங்களை உண்மையாகவே பிடித்தது. அவளைப் பொறுத்தவரை அவை முக்கியமானவை. இருவரும் முதலில் சந்தித்தபோது ரிச்சர்ட் தன்னுடைய ரசனை பற்றிய முழு உண்மையைச் சொல்லவில்லை. தனக்கு இலக்கியம் பிடிக்குமென அவள் எண்ணும் வகையில் நடந்தான். கொலம்பியா பல்கலை மாணவர்கள் திறமையானவர்கள் நல்ல பண்பும் மரியாதையும் தெரிந்தவர்கள் கொழுத்த சம்பளம் தரும் வேலை கிடைக்கும் என்பதற்காக அல்லாமல் அறிவையும் ஞானத்தையும் பெறுவதற்காகவும் நல்ல மனிதர்களாக மாறுவதற்காகவும் பல்கலைக்குப் போனார்கள் என்ற எண்ணம் கொண்டிருந்ததால் அவனை நம்பினாள். அந்த விதத்தில் அவள் குழந்தை உள்ளம் கொண்டவள். அவளுடைய களங்கமின்மை ரிச்சர்டுக்குப் பிடித்தது. தன்னைவிட வயதில் குறைந்தவர்களிடம் காட்டக்கூடிய இரக்கம் சுரக்க அது காரணமாக இருந்ததும் பிடித்தது. அவனைவிடச் சில வருடங்கள் மூத்தவள் அவள். அவளுக்கு வருத்தமேற்படுத்தாமல் கவனமாக நடக்கவும் அவளுடைய கருத்துக்களை உள்ளது உள்ளபடியே இருந்துவிட்டுப்போகட்டும் என்று நினைக்கவும் முதலில் ஒரு வகையில் எல்லாவற்றையும் சமன்செய்யும் விஷயமாக அது இருந்தது.
முதலில் அப்படித்தான் நினைத்தான். இப்போது அப்படியில்லை. அனாவுடன் பழகிய இந்த இரண்டு மாதத்தில் அவன் தான் பச்சை மண் என்பதைப் புரிந்துகொண்டான். அவள் குடும்பம் ரஷியாவைச் சேர்ந்தது என்றாலும் பல வருடங்கள் செச்சன்யாவில் வசித்தனர். அங்கே அவளுடைய அப்பா உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றை நடத்திவந்தார். போரின்போது தொழிற்சாலை நாசமாக்கப்பட்டது. அனாவின் மூத்த சகோதரன் கொல்லப்பட்டான். அவள் குடும்பம் எல்லாவற்றையும் இழந்திருந்தது. தெல் அவீவில் இருந்த அவளுடைய அம்மாவின் அம்மாவிடம் அனுப்பிவைக்கப்பட்டாள். அவள் ஒரு விதவை. தேவதைக் கதைகளில் வரும் சூனியக்கிழவியைப் போல மோசமானவள். இப்போது இங்கே க்வீன்ஸில் மாமியோடு வசித்து வருகிறாள். ஆம்ஸ்டெர்டாமில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பாக வேலைசெய்து வந்தாள். அங்கேதான் ரிச்சர்ட்அவளைச் சந்தித்தான். வேறொரு உணவு பரிமாறும் பெண்ணிடம் அவள் ரஷிய மொழியில் பேசுவதைக் கேட்டான். அவனுடைய மேசைக்கு அவள் வந்தபோது உயர்நிலைப் பள்ளியில் கற்றுக்கொண்ட ரஷிய மொழியின் சில வாக்கியங்களைப் பேச முயன்றான். அவள் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் அழுதே விட்டாள்.
பொதுவாக அனா போன்ற தோற்றம் கொண்டவர்களை அவனுக்குப் பிடிக்காது – கொஞ்சம் கனத்த உடம்புடனும் வட்ட வடிவமான முகத்துடனும் இருந்தாள். நெற்றியில் அம்மைத் தழும்புகள் வேறு. நல்ல ஆங்கிலம் பேசினாள் என்றாலும் அயல்நாட்டைச் சேர்ந்தவள் என்பது உச்சரிப்பில் தெரிந்தது. அவளை வெளியே அழைத்துச்செல்ல வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. ஆனால் அடுத்த நாளிரவே வெளியே போகலாமா என்று கேட்டுவிட்டான். அடுத்த வாரத்தில் அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவளுடைய மாமியின் வீட்டின் மேல்மாடியிலிருந்த சின்ன அறை. இருவரும் உல்லாசமாக நேரத்தைக் கழிக்கக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்றும் அப்புறம் அவரவர் வழியில் போய்விடுவோம் என்றும்தான் முதலில் நினைத்தான். அவர்கள் வயதையொத்தவர்கள் அதைத்தான் செய்தார்கள். ஒரு வாழ்க்கை முழுவதும் கையில் இருப்பவர்கள் அதைத்தான் செய்தார்கள். அடுத்து யாரைச் சந்திப்போம் எந்தக் கதவு திறக்கும் என்ன வாய்ப்புகளும் சாகசங்களும் காத்திருக்கும் என்பது தெரியாத இந்த வயதில் ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
அதுதான் திட்டமே. எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம். ஆனால் ஒரே மாதத்தில் அனா அவர்களின் உறவைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுவிட்டாள் என்பது புரிந்தது. தான் அப்படி நினைக்கவில்லை என்று காட்டிக்கொள்ள முனைகிறாள் என்பதும் தெரிந்தது. உறவை முறித்துக்கொள்ள முடிவுசெய்தான். அவளுடைய நிலைமையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது சரியல்ல. மாணவர் விடுதியில் இருந்து அவளிடத்துக்குப் போகவும் வரவும் மேற்கொள்ளவேண்டியிருந்த நீண்ட தூர சப்வே பயணம் அயர்ச்சியூட்டியது. ஆனால் உறவை முறித்துக்கொள்ள முடியவில்லை. நண்பர்களோடு இருக்கும்போதும் மற்ற பெண்களிடம் பேசும்போதும் அவளுக்காக ஏங்கினான். அவளுடைய ஆழ்ந்த கரகரப்பான குரலுக்காக ஏங்கினான். எதைப் பற்றியும் நேரடியாகப் பேசும் அவளுடைய வினோதமான பழக்கத்துக்கு ஏங்கினான். அவளுக்கு இன்பம் தரமுடியாததையும் அந்த இன்பத்தை அவள் கண்களில் பார்க்க முடியாததையும் நினைத்து ஏங்கினான். விடுதியில் கழிக்கவேண்டியிருந்த தனிமையான இரவுகளில் எதையோ இழந்தவனைப்போலத் தவித்தான்.
வெளியே உரத்த குரல்கள், ஆண் குரல்கள், ஸ்பானிய மொழியில் பேசிக்கொண்டன. அனா முனகியபடியே புரண்டாள். அந்தக் குரல்கள் நகர்ந்தன. அமைதி நிலவியது. ரிச்சர்ட் எழுந்து உட்கார்ந்து மீண்டும் தண்ணீரைக் குடித்தான்.
அவளைவிட்டு விலகியிருப்பது இயல்பானதாக இல்லை. படுக்கையில் தனியாக இருக்கும்போது வகுப்பில் இருக்கும்போது பெற்றோருக்கு ஈமெயில் அனுப்பும்போது என எல்லா நேரத்திலும் அவளைப் பற்றியே நினைத்து அவளுக்காக ஏங்கினான். ஆனால் இது நீடிக்காது – அவனுக்குத் தெரியும். அவள்தான் உறவை முறிப்பாள் என்பதும் தெரியும். அனா தான் யாராக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தாளோ அப்படியே மாறிவிட்டிருந்தாள். அவனைப் பற்றி அப்படிச் சொல்லமுடியாது. அவள் ஒரு வளர்ந்த பெண்ணாக இருந்தாள். அவன் இன்னும் வளர்ந்த ஆணாகவில்லை. அவன் வளர்ந்த ஆணைப்போலத் தோற்றம் கொண்டிருந்தான். சுவாரசியமான ஆணாகவும் இருந்தான். கறுத்த திரண்ட மேனியைக்கொண்ட அழகனாக இருந்தான். எப்போதும் எதையாவது தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே இருப்பவனைப்போலத் தோற்றமளித்தான். ஆனால் அந்தத் தோற்றம், அவனுடைய உள்ளார்ந்த உணர்ச்சிகளையோ, தான் எப்படிப்பட்டவன் என்று அவன் தெரிந்துவைத்திருந்ததையோ எடுத்துக்காட்டுவதாக இல்லை. சில நேரம், சாலையில் நடந்து செல்லும்போது கடைகளின் கண்ணாடியில் தெரியும் அவனுடைய உருவத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியடைந்தான். தான் ஏதோ நாடகத்துக்கான உடையை அணிந்திருப்பதுபோல உணர்ந்தான்.
பெண்களுக்கு அவனைப் பிடித்தது. அவனைப் பற்றிச் சில விஷயங்களைக் கற்பனை செய்துகொண்டார்கள். அவனும் அதற்கேற்றாற்போல நடிக்கக் கற்றுக்கொண்டான். ஆனால் இதற்கு மேலும் அனாவோடு தாக்குப் பிடிக்கமுடியாது என்பது தெரிந்தது. அவள் அவனைவிடவும் மூத்தவள் என்பதால் அல்ல, அவனுடைய எண்ணங்கள் அவளுடையதைவிட சிறுமையானவையாக இருந்தன. அவளைப்போல ஆர்வமுள்ளவனாக இல்லை. வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டிருந்தாலும் அவளுக்கு மற்றவர்களை எளிதில் பிடித்தது, எல்லோரையும் நம்பினாள். அவன் அப்படியில்லை. எப்போதும் புகார் சொல்லிக்கொண்டே இருப்பான். அவள் எப்பொழுதுமே புகார் சொன்னதில்லை. அவளைவிட்டு விலகி இருப்பதை வெறுத்தாலும் இருவரும் ஒன்றாக வெளியே போகும்போது, மற்ற பெண்களை நோட்டமிட்டான். அவர்களை அனுபவிக்கும் கற்பனையை வளர்த்துக்கொண்டு படுக்கை வரையிலும் கூட்டிவந்தான். சில நேரங்களில் அனா எடையைக் குறைக்கவேண்டும் என்றோ அம்மைத் தழும்பை மறைக்க எதையாவது செய்யவேண்டுமென்றோ உணர்ச்சிகளின்றி அவன் அளவிடுவதைக் கவனித்து அவள் முகம் வெளிறும்போது தன்னுடைய சின்னத்தனத்தையும் அற்பத்தனத்தையும் உணர்ந்தான்.
விரைவிலேயே அவனைத் தெளிவாகப் பார்ப்பாள், தன்னுடைய தவறைப் புரிந்துகொள்ளுவாள். அவள் விலகுவதற்கான அறிகுறிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்: பொறுமையின்மை, வெறுப்பு, ஒருவிதமான அயர்ச்சி. இதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறான், இதற்கு முன்னால் நெருக்கமாக இருந்த அந்த ஒரேயொரு பெண்ணிடம். அனாவுக்கு இன்னும் புரிபடவில்லையா? எப்படித் தெரியாமல் போயிருக்கும்? அவன் அழகனாகவும் எப்போதும் தயாராகவும் இருக்கும் காரணத்தாலா?
ஒருவேளை அவன் அமெரிக்கன் என்பதாலா? வேறு ஏதாவது திட்டத்தில் உதவியாக இருப்பான் என்பதாலா?
இல்லை! அனா அப்படி நினைக்கவில்லை. அவளைப் பற்றி முழுமையாக அறிந்த பிறகும் அப்படிக் கற்பனை செய்ய ஓர் ஈனமான பிறவியால் மட்டுமே இயலும். கடவுளே! அவனுக்கு என்ன ஆச்சு? அனா ஒரு உயர்குணமுடைய பெண். சரி. ஏதோ புத்தகத்தில் எழுதியதைப் படிப்பதுபோல இருக்கிறது என்றாலும் அதுதான் உண்மை. அவனிடத்தில் அவள் சீக்கிரமாகவே வந்து சேர்ந்துவிட்டாள்.
அவன் கடைசியில் பார்த்திருக்கவேண்டியவள் அவள் – வாழ்க்கையில் அடிபட்டு சில இழப்புக்களை எதிர்கொண்ட பிறகு; எல்லாம் நாசக்கேடாகி தாறுமாறாக ஆன பிறகு; வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது; அவனுடைய பிஞ்சு ஆன்மா கொஞ்சம் அடிபட்டு எதிர்ப்பட்டதையெல்லாம் தாங்கிக்கொண்டு வளர்ந்த மனிதனின் ஆன்மாவான பிறகு; அப்போது வளர்ந்த மனிதனின் முகமூடியை அணிந்த சிறுவனைப்போல உணராமல் தானாகவே இருந்திருப்பான். அப்போது இந்த வீணாகப்போன சந்தேகங்களையும் தேவைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நேரே வந்து வில்லில் நாண் பூட்டி அவளுடைய காதலை உரிமையோடு தன்னுடையதாக்கிக் கொண்டிருப்பான்.
விட்டத்தில் தெரிந்த ஒளிக்கம்பி மங்கலாகி மறைந்துபோனது. கீழே குழாய்கள் முனகும் ஓசை ரிச்சர்டின் காதில் விழுந்தது. மாமி குளியலறையில் இருந்தார். தெருவில் காரின் ஹார்ன் ஒலி கேட்டது. அனா அசைந்தாள், திரும்பி நகர்ந்து அவன்மீது படர்ந்தாள். அவனுடைய இடுப்பின்மீது அவளுடைய கை படுவதை உணரமுடிந்தது. அவனுடைய பேரை முணுமுணுத்தாள். அவன் கண்ணை மூடிப் படுத்திருந்தான், பதில் சொல்லவில்லை.
டோபியாஸ் வுல்ஃப்
தமிழில்: கார்குழலி
டோபியாஸ் வுல்ஃப் (பிறப்பு 1945) அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், மெமாயிர் எனப்படும் வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவுசெய்பவர். படைப்புகளை எழுதக் கற்றுத்தரும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். வரலாற்றுக் குறிப்புகளில் பல்வேறு குரல்களையும் உணர்ச்சிகளையும் உள்ளது உள்ளபடியே வடிப்பதில் வல்லவர் என அறியப்படுகிறார்.
இவரின் இளவயதிலேயே பெற்றோர் விவகாரத்துப் பெற்றுப் பிரிந்தனர். டோபியாஸும் அவரது மூத்த சகோதரரும் ஆளுக்கொருவராகப் பெற்றோரிடம் வளர்ந்தனர். டோபியாஸ் ஊரூராகப் பயணம்செய்த தாயுடனான வாழக்கையைப் பற்றியும் மாற்றாந்தந்தையிடம் பட்ட கொடுமையையும் நாவலாக எழுதினார். அது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது சகோதரர் ஜியோஃபிரே வுல்ஃப்பும் எழுத்தாளர். தொடர்ந்து எல்லாவற்றுக்கும் பொய் சொல்லும் உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையுடன் வளர்ந்ததைப் பற்றி அவரும் நாவலொன்றை எழுதியிருக்கிறார்.
டோபியாஸ் வியட்நாம் போரின்போது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பிறகு ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை முதுகலை பட்டபடிப்புகளைப் பயின்று எழுத்துத் துறையில் நுழைந்தார். சீரக்யூஸ் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். தன்னுடைய படைப்புகளுக்காகப் பெருமைமிக்க பென்/ஃபால்க்னர் விருது, ஸ்டோரி விருது, வைட்டிங் விருது, இலக்கியத்தில் வாழ்நாள் சாதனை படைத்ததற்கான ஸ்டோன் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். கலை இலக்கியத்துக்கான அமெரிக்கன் அகாடெமியில் இடம்பெறும் சிறப்பையும் பெற்றிருக்கிறார். தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலிஃபோர்னியாவில் வசிக்கிறார்.