நானும் அவ்வாறே எழுதுவேன்- டோனி மாரிஸன்

ன்னை ஒரு கவித்துவ எழுத்தாளர் என அழைப்பதை மிகவும் வெறுக்கிறார் டோனி மாரிஸன், அவரது படைப்புகளின் கவித்துவத்திற்கு அளிக்கப்படும் அதிமுக்கியத்துவமானது, அவரது கதைகளின் வீரியத்தையும் ஒத்திசைவையும் ஓரம் கட்டுவதாக அவர் நினைக்கிறார். விமர்சன ரீதியாக கொண்டாடப்படுபவராகவும் பிரபலமாகவும் உள்ள வெகு சில எழுத்தாளர்களில் ஒருவரான அவருக்கு எந்தப் புகழுரையை ஏற்பது என்ற உரிமை இருக்கிறது. ஆனால் அவர் அனைத்து வகைப்படுத்தலையும் நிராகரிப்பதில்லை. உண்மையில் “கறுப்பின பெண் எழுத்தாளர்” என்ற பெயரை அவர் விரும்புகிறார். தனிநபர்களை பெரும் சக்தியாகவும் தனித் தன்மைகளை தவிர்க்க முடியாதவைகளாகவும் மாற்றும் அவரது திறமையைக் கொண்டு சில விமர்சகர்கள் அவரை “கறுப்பின உளவியலின் டி.எச்.லாரன்ஸ்” என்று அழைக்கின்றனர். மேலும் மனித இனங்கள், பாலினம், நாகரிகம் மற்றும் இயற்கை இடையிலான போராட்டங்களை தனது படைப்பின் வழி ஆய்வு செய்வதோடு ஆழ்ந்த அரசியல் நுண்ணுர்வோடு தொன்மம் மற்றும் மிகுபுனைவையும் ஆய்வு செய்வதால் அவர் சமூக நாவலின் பிதாமகளாகக் கருதப்படுகிறார்.

ஒரு கோடைகால ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் செழுமையான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் டோனி மாரிஸனுடன் நாங்கள் உரையாடினோம். அவரது அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது.

Tony Morrison

 

நேர்கண்டவர்: விடியலுக்கு முன்பே எழுதத் துவங்கிவிடுவேன் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இந்தப் பழக்கம் ஏதாவது நடைமுறைக் காரணத்திற்காக ஏற்பட்டதா அல்லது அதிகாலை நேரம் உங்களுக்கு மிகப் பயனுள்ள நேரம் என்பதாலா?

டோனி மாரிஸன்: விடியலுக்கு முன்பே எழுதுவது என்பது தேவை கருதி ஏற்பட்டது. நான் எழுதத் துவங்கும் போது எனக்கு சிறிய குழந்தைகள் இருந்தனர். அவர்கள் எழுந்து அம்மா என்று அழைக்கும் முன்னர்- பெரும்பாலும் காலை 5 மணிக்கு முன்பு- உள்ள நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தில் பணியாற்றுவதிலிருந்து விலகிய பிறகு ஒருசில ஆண்டுகள் நான் வீட்டிலேயே இருந்தேன். அப்போது நான் என்னைப் பற்றி அதுவரை சிந்திக்காத விஷயங்களை எல்லாம் கண்டறிந்தேன். நான் எப்போது உணவு உண்ண விரும்பினேன் எனத் தெரியவில்லை, ஏனென்றால் நான் எப்போதுமே காலை நேரம், மதிய நேரம், இரவு நேரம் என்றே உணவு சாப்பிட்டிருக்கிறேன். எனது பழக்கங்கள் அனைத்தையும் எனது வேலையும் குழந்தைகளுமே கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். வார நாட்களில் எனது வீட்டின் சப்தம் கூட நான் கேட்டதில்லை.

1983-ல் நான் Beloved நாவல் எழுதும் பணியில் இருந்தேன். அப்போது காலை நேரங்களில் நான் தெளிந்த சிந்தனையும் அதிக நம்பிக்கை உடையவளாகவும் புத்திசாலியாகவும் இருப்பதாக உணர்ந்தேன். எனது குழந்தைகளால் உருவான காலையில் நேரமே எழும் எனது பழக்கம், இப்போது எனது தேர்வாக மாறியிருக்கிறது. சூரியன் மறைந்த பின்னர் நான் மிகத் தெளிவானவளாகவோ அறிவாற்றல் உடையவளாகவோ இருப்பதில்லை. சமீபத்தில் ஒரு எழுத்தாளருடன் பேசிக் கொண்டிருக்கையில், அவர் தனது மேசைக்கு எழுதச் செல்லும் போதெல்லாம் அவர் செய்யும் வித்தியாசமான செயலைப் பற்றிக் கூறினார். அவரது உடலசைவு என்ன என்று சரியாகத் தெரியவில்லை- ஆனால் அவர் கணினி விசைப் பலகையைத் தொடும் முன்னர் அந்த மேசை மீதுள்ள ஏதோ ஒரு பொருளைத் தொடுவாராம். பிறகு எழுதுவதற்கு முன்னர் ஒருவர் பின்பற்றும் சடங்குகள் பற்றி நாங்கள் உரையாடினோம். முதலில் நான் எந்தச் சடங்கையும் நான் பின்பற்றுவதில்லை என நினைத்தேன். ஆனால் நான் எப்போதும் பொழுது புலர்வதற்கு முன்பே- இருளாக இருக்க வேண்டும்- எழுந்து காபி அருந்தும் பழக்கம் கொண்டவள். காபி அருந்தியவாறே வெளிச்சம் வருவதைக் கவனிப்பேன். அப்போது அவள், “அது தான் சடங்கு” எனக் கூறினாள். இந்தச் சடங்கானது எனக்கான வெளிக்குள் செல்ல நான் செய்யும் முன் தயாரிப்பே- அதை நான் மதசார்பற்றது என்றே அழைப்பேன். அந்த வெளியை அடைவதற்கு, அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு அல்லது அந்த புதிரான இடத்தை அடைவதற்கு எழுத்தாளர்கள் பல்வேறு அணுகுமுறைகளை வகுத்திருப்பாரகள்.

எனக்கு ஒளி தான் அறிகுறி. ஒளியில் இருப்பது அல்ல, ஒளி வரும் முன்பே அங்கிருத்தல். அது என்னை செயல்பட வைக்கிறது.

நான் என் மாணவர்களுக்குச் சொல்லும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் எப்போது படைப்புரீதியாக சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிவது தான். ஒரு சிறந்த அறை எவ்வாறு இருக்க வேண்டும்? அங்கு இசை தவழ வேண்டுமா? மௌனம் நிலைக்க வேண்டுமா? அறைக்கு வெளியே குழப்பம் நிலவ வேண்டுமா? அல்லது அமைதி நிலவ வேண்டுமா? எனது கற்பனையை வெளிப்படுத்த என்ன தேவை? என்பது போன்றவை.

 

நேர்கண்டவர்: நீங்கள் எழுதும் வழக்கத்தினைப் பற்றி…

மாரிஸன்: இதற்கு முன் அனுபவித்திராத மிகச் சிறந்த அனுபவம் என்னவெனில், தொடர்ந்து ஒன்பது நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமலும் தொலைபேசி அழைப்புகள் கூட எடுக்காமலும் எந்த இடையூறும் இன்றி எழுதியதுதான். பெரிய இடம் வேண்டும்- நான் வைத்திருக்கும் மேசையில் பெரிய இடம். என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஏனெனில் எப்போதும் நான் ஒன்பது முதல் ஐந்து மணி வரையிலான பணியிலேயே இருந்தேன். நான் அந்த நேரங்களிலோ அல்லது வார இறுதியிலேயோ அல்லது விடியலுக்கு முன்போதான் எழுத வேண்டியிருந்தது.

 

நேர்கண்டவர்: உங்களால் ராபர்ட் ஃப்ராஸ்ட் ரயில் பயணங்களில் காலணியின் அடிப்பாகத்தில் எழுதியது போல எழுத முடியுமா? விமானப் பயணத்தில் உங்களால் எழுத முடியுமா?

மாரிஸன்: சில இடங்களில், சில நேரங்களில் சொற்களின் தொடர்ச்சியால் பிரச்சினை ஏற்படும் போது குப்பைக் காகிதங்களில் எழுதியுள்ளேன். மேலும் விடுதிகளில் வழங்கப்படும் காகிதங்களிலும், வாகனங்களிலும் எழுதியுள்ளேன். அது வந்தால் நீங்கள் அறிவீர்கள். அது உண்மையில் வந்துவிட்டது என நீங்கள் அறிந்தால், நீங்கள் எழுதத் தான் வேண்டும்.

 

நேர்கண்டவர்: நீங்கள் எதில் எழுதுவீர்கள்?

மாரிஸன்: நான் பென்சிலால் எழுதுவேன்.

 

நேர்கண்டவர்: எப்போதாவது கணினியில் எழுதுவீர்களா?

மாரிஸன்: ஓ…நான் அதையும் செய்வேன். ஆனால் எல்லாவற்றையும் எழுதி முடித்த பிறகே அதில் எழுதுவேன். கணினியில் அதைத் தட்டச்சு செய்த பின்னர் அதை திருத்தம் செய்யத் தொடங்குவேன். ஆனால் முதலில் எழுதுவது பென்சிலில் தான், பென்சில் இல்லாவிட்டால் பால் பாய்ண்ட் பேனாவில் எழுதுவேன். லீகல் அளவிலான மஞ்சள் காகிதத்தில் இரண்டாம் எண் கொண்ட பென்சிலால் எழுதுவேன்.

 

நேர்கண்டவர்: நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பை எப்போதாவது வாசகர்களுக்காக வாசித்துக் காட்டியிருக்கிறீர்களா?

மாரிஸன்: வெளியாகும் வரை செய்ததில்லை. அவ்வாறு செய்து காட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறு செய்யும்போது அது கொஞ்சம் கூட நன்றாக இல்லாவிட்டாலும் கூட அது மிக நன்றாக உள்ளது என்பது போன்ற தோற்றங்களை நான் பெறக்கூடும். எழுதுவதில் எனக்கு உள்ள சிக்கல்- சிக்கல்களில் ஒன்று – எதையும் கேட்காத ஒரு வாசகனுக்காக அந்தப் பக்கத்தில் அமைதியாக செயல்படும் விதமான மொழியைக் கையாள்வதுதான். அதற்காக ஒருவர் மிகக் கவனமாக சொற்களுக்கு இடையில் எழுத வேண்டும். சொல்லாத ஒன்றை. எது அளவு எது சந்தம் என்பது போல. எனவே நீங்கள் எதை எழுதவில்லையோ அதுவே உங்களுக்கு நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ அதற்கான வலிமையைத் தரும்.

 

நேர்கண்டவர்: ஒரு பத்தியை இந்த அளவு தரமான ஒன்றாக எழுதுவதற்கு எத்தனை முறை நீங்கள் திருத்தி எழுத வேண்டியிருக்கும்?

மாரிஸன்: நல்லது, மீண்டும் எழுத வேண்டிய தேவை முடியும் வரை நான் எழுதுவேன். அதாவது, நான் ஆறுமுறை திருத்தி எழுதி உள்ளேன். சில சமயங்களில் ஏழுமுறை, பதிமூன்று முறை கூட. ஆனால் திருத்துவதற்கும் தேய்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. எப்போது அதைத் தேய்த்து இல்லாமல் செய்கிறீர்கள் என்பதை அறிவது முக்கியம். அது சரியாக வரவில்லை என மாற்றி அமைக்க வேண்டியிருந்தால், அதைக் கிழித்துப் போட வேண்டியதுதான்.

நேர்கண்டவர்: படைப்புகள் வெளியான பிறகு எப்போதாவது அதை மாற்றி எழுதியிருக்கலாம் என நினைத்திருக்கிறீர்களா?

மாரிஸன்: ஆம். நிறைய. எல்லாவற்றையும்.

 

நேர்கண்டவர்: பதிப்பாசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றியது ஒரு எழுத்தாளராக எந்த அளவிற்கு உங்களை பாதித்துள்ளது என நினைக்கிறீர்கள்?

மாரிஸன்: எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பதிப்பகத் தொழில் மீதான எனது பிரமிப்பை அது குறைத்துள்ளது. சில நேரங்களில் பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே நிலவும் பகைமை உறவு எனக்குப் புரிந்தாலும் அது எவ்வளவு முக்கியமானது, பதிப்பாசிரியர் எவ்வளவு முக்கியத்துவம் உடையவர் என்பதைக் கற்றுக் கொண்டேன். அதற்கு முன்னர் அதை நான் அறிந்திருக்க மாட்டேன்.

 

நேர்கண்டவர்: நீங்கள் குழந்தையாக இருந்த போதே எழுத்தாளராக வேண்டும் என விரும்பினீர்களா?

மாரிஸன்: இல்லை. நான் ஒரு வாசகியாக வேண்டும் என விரும்பினேன். எழுத வேண்டியதெல்லாம் எழுதப்பட்டுவிட்டது அல்லது எழுதப்படும் என நான் நினைத்தேன். நான் ஏன் எனது முதல் நூலை எழுதினேன் என்றால், அதைப் போல ஒருநூல் இல்லை. அதை நான் வாசிக்க விரும்பியதால் தான். நான் ஒரு நல்ல வாசகி. நான் அதை விரும்புகிறேன். அதைத் தான் நான் உண்மையில் செய்கிறேன். எனவே அதை நான் வாசிக்க முடிந்தால், அதுவே எனக்கு மிகப் பெரிய பரிசு என நினைக்கிறேன். நான் எனக்காகவே எழுதுகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். அது மோசமானதாகவும் அகந்தையும் மமதையும் தற்புகழ்ச்சி உடையதாகவும் உள்ளது. ஆனால் உங்கள் சொந்தப் படைப்பை எவ்வாறு வாசிப்பது என நீங்கள் அறிந்து கொண்டால், சரியான விமர்சனத்துடன் அதைச் செய்தால்- அது உங்களை சிறந்த எழுத்தாளராகவும் பதிப்பாசிரியராகவும் மாற்றும். படைப்பாக்கம் பற்றி பாடம் நடத்தும் போது, உங்களது சொந்தப் படைப்பை எப்படி வாசிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வது குறித்து கற்பிப்பேன்- நீங்கள் எழுதியதால் அதில் வாசிப்பின்பம் காண வேண்டும் எனச் சொல்லவில்லை. அந்தப் படைப்பிலிருந்து தள்ளிச் சென்று, இப்போதுதான் அதை வாசிப்பது போலச் செய்ய வேண்டும் என்கிறேன். அப்படி அதை விமர்சிக்க வேண்டும். உங்களது எழுத்தின் மகத்துவத்திலும் உணர்ச்சி ததும்பும் சொற்றொடர்களிலும் சிக்கிக் கொள்ளாமல் அதைச் செய்ய வேண்டும்.

 

நேர்கண்டவர்: உங்களது மணமுறிவுக்குப் பின்னர் எழுந்த தனிமையைத் துரத்தவே நீங்கள் எழுதத் தொடங்கியதாக நான் படித்த நினைவு. அது உண்மையா? நீங்கள் இப்போது வெவ்வேறு காரணங்களுக்காக எழுதுகிறீர்களா?

மாரிஸன்: அது அவ்வளவு எளிமையான விஷயமாக இல்லை. நான் அந்தக் காரணத்திற்காக எழுதுகிறேனா அல்லது வேறு காரணத்திற்காகவா என்பது எனக்குத் தெரியவில்லை- அப்படி ஒன்று உள்ளது என்பதைக் கூட நான் ஐயமுறவில்லை.

நான் எழுதுவதற்கு இங்கே எதுவும் இல்லை என்றால் நான் இங்கிருக்க விரும்பவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

 

நேர்கண்டவர்: இங்கே என்றால் எங்கே?

மாரிஸன்: இந்த உலகில் என்று பொருள். நம்பவியலாத வன்முறைகள், அலட்சியங்கள், மனிதர்களின் வேதனையை விரும்புவர்கள் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது எனக்கு இயலாத விஷயம். சில சமயங்களில்- நண்பர்களுடனான இரவு உணவு, வாசிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் நான் அதைப் பற்றி கவனமாகவே இருக்கிறேன். கற்பித்தல் என்பது பெரும் வேறுபாடுகளை அளித்தாலும் அது போதுமானதாக இல்லை. கற்பித்தல் என்பது தீர்வின் ஒரு பகுதியாக இல்லாத, கவலையற்ற, அறியாமையில் உள்ள ஒரு சிலரிடையே என்னை புகுத்துகிறது. எனவே என்னை இங்குள்ளவளாக உணரச் செய்வது, ஆசிரியராகவோ, தாயாகவோ, காதலியாகவோ உள்ளபோது அல்ல, என் மனதில் என்ன ஓடுகிறது என்பதை நான் எழுதும் போது தான். நான் இங்குள்ளவளாக ஆகும் போது அனைத்து குழப்பங்களும் ஒத்திணைந்து வராத எதுவும் பயனுடையதாக மாறும். பின்னர் எழுத்தாளர்கள் பாரம்பரியமாகச் சொல்லும் ஒழுங்கின்மையில் இருந்து ஒழுங்கை ஏற்படுத்தல் என்பதை நானும் செய்வேன். அந்த ஒழுங்கின்மையை பெருங்குழப்பத்தை நீங்கள் மீண்டும் ஏற்படுத்தினாலும் கூட அந்தப் புள்ளியில் நீங்கள் தனியுரிமையுடன் இருப்பீர்கள். ஒரு படைப்பை வெளியிடப் போராடுவதைவிட அப்படைப்பிற்குள்ளே போராடுவது என்பது எனக்கு மிக மிக முக்கியமானது.

 

நேர்கண்டவர்: அதை நீங்கள் செய்யாவிட்டால், ஒழுங்கின்மை என்னவாகும்?

மாரிஸன்: நான் அந்த ஒழுங்கின்மையின் ஒரு பகுதியாகிவிடுவேன்.

 

நேர்கண்டவர்: அந்தப் பதில், ஒழுங்கின்மை கோட்பாடு பற்றிய உரைக்கானதா அல்லது அரசியலுக்காகவா?

மாரிஸன்: எனக்கு அதற்கான ஆசிர்வாதம் இருந்தால்… என்னால் செய்ய முடிந்தது எல்லாம், நூல் வாசித்தல், நூல் எழுதுதல், நூல்களைத் திருத்துதல், நூல் விமர்சனம் செய்தல் தான். என்னால் ஒரு தொழில்முறை அரசியல்வாதியாகச் செயல்பட முடியும் என நான் நினைக்கவில்லை. நான் உற்சாகத்தை இழந்துவிடுவேன். அதற்கான ஆசிர்வாதம் எனக்கு இல்லை. மற்ற மனிதர்களை ஒருங்கிணைப்பவர்கள் இருக்கிறார்கள், என்னால் அது முடியாது. எனக்கு அது சலிப்பைத் தரும்.

 

நேர்கண்டவர்: உங்களுக்கு எழுதுவதற்கான ஆசிர்வாதம் உள்ளது என்பது எப்போது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது?

மாரிஸன்: ரொம்பத் தாமதமாகத் தான். நான் திறமையானவள் என நினைத்துக் கொண்டிருந்தாலும்- என்னைச் சார்ந்தவர்களும் அப்படித்தான் சொல்வார்கள்- அவர்களது அளவீடுகள் எனக்கானதாக இருந்ததில்லை. அதனால் அவர்கள் சொல்வதில் நான் ஆர்வம் செலுத்தவில்லை. அது ஒரு பொருட்டாகவும் இல்லை. எனது மூன்றாவது நூல் Song Of Solomon எழுதும் பொழுதே, இது தான் என் வாழ்வின் முக்கியமான பகுதி என்பதை நான் சிந்திக்கத் தொடங்கினேன். மற்ற பெண்கள் சொல்லவில்லை என்பதற்காக அல்ல,

ஒரு பெண்ணாக, நான் எழுத்தாளர் எனச் சொல்வது கடினமானது தான்.

 

நேர்கண்டவர்: ஏன்?

மாரிஸன்: அது கடினமானது இல்லைதான், ஆனால் கண்டிப்பாக எனக்கும் எனது தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கும் எனது வர்க்கத்திற்கும் எனது இனத்திற்கும் அது கடினமான விஷயம் தான். இவை எல்லாம் அதற்குள் புதைந்திருக்கிறதா என எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை நீங்களே உங்கள் பாலினத்தில் இருந்து வெளியேற்றுகிறீர்கள் என்பதே அதன் சாராம்சம். நான் ஒரு தாய், நான் ஒரு மனைவி என நீங்கள் சொல்வதில்லை. அதேபோல சமுதாயத்தில் நான் ஒரு ஆசிரியை, நான் ஒரு பதிப்பாசிரியர் எனச் சொல்வதில்லை. ஆனால் ஒரு எழுத்தாளராக மாறும் போது அதற்கு என்ன பொருள்? அது ஒரு பணியா? உங்கள் வாழ்க்கையை வாழ அது ஒரு வழியா? உங்களுக்கு தொடர்பே இல்லாத அறிமுகமும் இல்லாத ஒரு பகுதியில் நுழைந்து பணியாற்ற வேண்டும். அந்த நேரத்தில் வெற்றிகரமாக இருந்த எந்தவொரு பெண் எழுத்தாளரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது. அது ஒரு ஆண்கள் பாதுகாப்பு இல்லம் போலவே இருந்தது. எனவே விளிம்பு நிலையில் நிற்கும் ஒரு சின்னஞ்சிறிய மனிதராகவே இருக்க முடியும். எழுத வேண்டும் என்றால் ஏறக்குறைய அனுமதி பெற வேண்டும். பெண்களின் வாழ்க்கை வரலாறு அல்லது தன் வரலாற்று நூல்களைப் படிக்கும் போது, நன்றியுரையில் ஏறக்குறைய எல்லா பெண்களுமே யாராவது ஒருவருக்கு அவர் அந்நூலை எழுதுவதற்கு அனுமதி அளித்ததற்காக நன்றி கூறிய நிகழ்வினை அறிந்தேன். ஒரு தாய், ஓர் ஆசிரியை, ஒரு கணவர்- என யாராவது ஒருவர்- சரி உன்னால் எழுத முடியும், எழுது எனக் கூறி உள்ளனர். அதற்காக ஆண்களுக்கு அவ்வாறு அனுமதியோ ஊக்கமோ தேவையில்லை எனக் கூறவில்லை. அவர்களுக்கும் அவர்களது இளமையில் யாராவது ஒரு குரு இருந்திருப்பார், உன்னால் முடியும், எழுது எனக் கூறுவதற்கு. அது எல்லாமே புதிதாக இருந்தது. எனது வாழ்வின் மையப் புள்ளியே எழுதுவதுதான் எனத் தெரிந்தாலும் அது சவால் மிக்கதாக மகிழ்ச்சிகரமானதாக இருந்தாலும் என்னால் சொல்ல முடியவில்லை. யாராவது என்ன செய்கிறீர்கள் என என்னைக் கேட்டால், நான் ஒரு எழுத்தாளர் எனக் கூறமாட்டேன். நான் ஒரு பதிப்பாசிரியர் அல்லது ஆசிரியர் என்றே கூறுவேன். ஏனெனில், ஒரு மதிய உணவிற்கு செல்லும் போது, அவர்கள் உங்களை என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க, எழுத்தாளர் எனச் சொன்னால், நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என அவர்கள் திரும்பக் கேட்பார்கள். அதற்கு நீங்கள் பதில் அளித்தால் அவர்கள் அதைப் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பார்கள். பிடிக்கும் அல்லது பிடிக்காது என்றெல்லாம் சொல்வதற்கு அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனது எழுத்தை வெறுப்பது என்பது சரிதான். அது அப்படித்தான் இருக்கிறது. எனது நெருங்கிய நண்பர்களின் எழுத்தைக் கூட நான் வெறுக்கத்தான் செய்கிறேன்.

 

நேர்கண்டவர்: அந்தரங்கமாகவே எழுத வேண்டும் என நீங்கள் உணர்ந்தீர்களா?

மாரிஸன்: ஆமாம். எழுத்தை அந்தரங்கமாக வைத்திருக்கவே விரும்பினேன். எனக்கே எனக்காக வைத்திருக்க விரும்பினேன். ஏனென்றால் ஒருமுறை நீங்கள் சொல்லிவிட்டால், மற்றவர்கள் அதில் உள் நுழைவார்கள். அதனால் தான், Random House-இல் பணியாற்றுகையில் நான் ஒரு எழுத்தாளர் என ஒருபோதும் சொல்லவில்லை.

 

நேர்கண்டவர்: ஏன்?

மாரிஸன்: அது மோசமானதாகி இருக்கும். முதலில், அவர்கள் என்னை எழுதுவதற்காக வேலைக்கு வைக்கவில்லை. அவர்களுள் ஒருவராக இருப்பதற்கு என்னை பணியில் அமர்த்தவில்லை. இரண்டாவதாக, என்னை பணிநீக்கம் செய்துவிடுவர் என நினைத்தேன்.

 

நேர்கண்டவர்: உண்மையாகவா?

மாரிஸன்: உறுதியாக. அந்தப் பதிப்பகத்தில் புனைவு எழுதும் பதிப்பாசிரியர்கள் எவரும் இல்லை. எட் டாக்ட்ரோவ் வெளியேறிவிட்டார். எந்தப் பதிப்பாசிரியரும் தனது நாவலை வெளியிட எந்தவொரு ஒப்பந்தப் பேச்சிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

 

நேர்கண்டவர்: எழுதுவதற்கு அனுமதி பெறுவது குறித்துக் குறிப்பிட்டீர்கள். உங்களுக்கு அனுமதி அளித்தது யார்?

மாரிஸன்: யாருமில்லை. வெற்றி பெறுவதற்கே எனக்கு அனுமதி தேவைப்பட்டது. புத்தகம் முழுமை அடையும் வரை நான் யாரிடமும் ஒப்பந்தம் போட்டதில்லை. ஏனென்றால் அது ஒரு வீட்டுப்பாடம் போல மாறுவதை நான் விரும்பவில்லை. ஓர் ஒப்பந்தம் என்பது யாரோ ஒருவர் அதற்காக காத்திருப்பது. நான் அதைச் செய்தாக வேண்டும். அவர்கள் முடிந்துவிட்டதா என என்னை கேள்வி கேட்கவும் கூடும். அவர்கள் என்னிடம் முகத்தைக் காட்ட வேண்டிய நிலை ஏற்படுவதை நான் விரும்புவது இல்லை. ஒப்பந்தம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் கூட அவர்கள் விரும்பினால் அதைப் படிப்பதற்கு நான் அனுமதி அளிப்பேன். அது சுயமரியாதையுடன் செய்ய வேண்டிய விஷயம். இத்தனை ஆண்டுகளாக எழுத்தாளர்கள் தங்களது சுதந்திரம் என்ற ஒன்றை கட்டி எழுப்பியிருப்பதையும், அந்த சுதந்திரம் தன்னுடையது என்பதையும், தன்னால் மட்டுமே அதை எழுத முடியும் என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யுடோரா வெல்ட்டியை நான் அறிமுகம் செய்த போது அவர் எழுதிய கதைகளை யாராலும் எழுத முடியாது எனக் கூறியது நினைவுக்கு வருகிறது. பெரும்பாலான நூல்கள் ஏதோ ஒரு சமயத்தில் யாரோ ஒருவரால் ஏதாவது ஒரு வகையில் எழுதப்படும் என உணர்கிறேன். ஆனால் சில குறிப்பிட்ட கதைகள் எல்லாம் சில எழுத்தாளர்கள் இல்லாமல் எழுதப்பட்டிருக்கவே இருக்காது. நான் கதைக்களத்தையோ அல்லது மொழிநடையையோ சொல்லவில்லை- அவர்களது சார்பு நிலை உண்மையாகவே தனித்துவமானது.

 

நேர்கண்டவர்: அவர்களுள் சிலர் யார்?

மாரிஸன்: ஹெமிங்வே, ஃப்ளானரி ஒ கன்னர், ஃபாக்னர், ஃபிட்ஸ்ஜெரால்டு…

 

நேர்கண்டவர்: இந்த எழுத்தாளர்கள் எல்லாம் கறுப்பினத்தவர்களை சித்திரித்த விதத்தை நீங்கள் விமர்சனம் செய்யவில்லையா?

மாரிஸன்: நானா? விமர்சனமா? இல்லை. வெள்ளைக்கார எழுத்தாளர்கள் கறுப்பின மக்களை எவ்வாறு கற்பனை செய்தார்கள் என்பதை நான் வெளிப்படுத்தினேன். அவர்களில் சிலர் அதில் சிறப்பு வாய்ந்தவர்கள். ஃபாக்னர் அதில் சிறப்பு வாய்ந்தவர். சில இடங்களில் மோசமாகவும் சில இடங்களில் சிறப்பாகவும் எழுதினார் ஹெமிங்வே.

 

நேர்கண்டவர்: எவ்வாறு?

மாரிஸன்: கறுப்பின கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அல்ல, கறுப்பின அழகியலான குழப்பநிலை, விலகியிருத்தல், பாலியல் நிலை ஆகியவற்றை வெளிப்படுத்தியதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். ஹெமிங்வேயின் கடைசி நாவலான The Eden of Garden-இல் கதை நாயகி கறுப்பாகிக் கொண்டே செல்வாள். பைத்தியமாகிக் கொண்டு செல்லும் அவள் தனது கணவனிடம், நான் உனது சிறிய செல்ல ஆப்பிரிக்க ராணியாக விரும்புகிறேன் என்பாள். நாவல் இப்படித்தான் செல்லும்: அவளது வெள்ளை வெளேரென்ற கூந்தல் அவளது கன்னங்கரேலென்ற தோல்… ஏறத்தாழ மன் ரே புகைப்படம் போல. நான் வாசித்தவரை இனக் கொள்கை பற்றி வலிமையான, சொல்திறம் மிக்க வகையில் எழுதியவர் மார்க் ட்வைன். எட்கர் ஆலன் போ அவ்வாறு எழுதியவர் இல்லை. அவர் வெள்ளை மேட்டிமைவாதத்தை, ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளை வைத்திருந்த நிலபிரபுக் குடிகளை விரும்பியவர், ஒரு கனவானாக இருக்க விரும்பியவர். அதைத் தான் அவர் ஆதரித்தார். அவர் அதை எதிர்க்கவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை. Absalom, Absalom! நாவல் முழுவதும் இனவாதத்தை ஃபாக்னர் தேடுவதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. யாராலும் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன் கறுப்பின கதாபாத்திரத்தால் கூட கண்டறிய இயலாது. ஒவ்வொரு பக்கத்திலும் சொல்லிலும் அதன் தோற்றம், மறைபொருள் எல்லாவற்றையும் என் மாணவர்களுக்கு விவரித்தேன். எல்லோரும் தூங்கிவிட்டார்கள்! நான் விமர்சனம் செய்யும் போது, ஃபாக்னர் ஒரு இனவாதியா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படுவது இல்லை. தனிப்பட்ட முறையில் கூட அவ்வாறு கவலைப்படுவது இல்லை. ஆனால் இப்படி எல்லாம் எழுதப்படுவதன் பொருள் என்ன என அறிவதில் ஆர்வமாக இருப்பேன்.

 

நேர்கண்டவர்: கறுப்பின எழுத்தாளர்கள் பற்றி, வெள்ளையின கலாச்சார ஆதிக்கம் நிறைந்த உலகில் அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள்?

மாரிஸன்: மொழியை மாற்றிட, அதை விடுவிக்க, கட்டுப்படுத்த அல்ல, அதைத் திறந்து விட முயற்சிக்கிறார்கள். இனவெறி மேலாடையை சிதறடிக்க விரும்புகிறார்கள். Recitatif என்ற ஒரு கதை எழுதினேன். அதில் ஒரு ஆதரவற்ற விடுதியில் இரு சிறுமிகள் இருப்பார்கள். ஒரு சிறுமி வெள்ளை, ஒரு சிறுமி கறுப்பினம். ஆனால் வாசகருக்கு யார் வெள்ளை யார் கறுப்பு எனத் தெரியாது. நான் வர்க்க குறியீடைப் பயன்படுத்தினேன். இனக் குறியீட்டை அல்ல.

 

நே.க.: நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை முழுவதும் உங்களது கற்பனையிலேயே உருவாக்குவீர்களா?

மாரிஸன்: எனக்குத் தெரிந்த எவரையும் கதாபாத்திரமாக பயன்படுத்துவதில்லை. The Bluest Eye-இல் எனது தாயின் பாவனை, பேச்சுநடை ஆகியவற்றை சில இடங்களில் பயன்படுத்தினேன். அதற்குப் பிறகு அது போல செய்யவில்லை. உண்மையில் நான் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவள். மற்ற எழுத்தாளர்கள் செய்வதைப் போல நான் செய்வதில்லை.

 

நேர்கண்டவர்: ஏன்?

மாரிஸன்: புனைவில், மிக அறிவார்ந்த, மிக சுதந்திரமான, மிக உற்சாகமான விஷயம் என்னவென்றால் கதாபாத்திரங்கள் கற்பனையாக உருவாக்கப்படுவதுதான். அது யாரோ சில உண்மையான நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் அது காப்புரிமைக்கு உட்பட்டதாக மாறிவிடும். அந்த நபருக்கு சொந்தமான வாழ்க்கை, உரிமை உள்ளது.

 

நேர்கண்டவர்: நீங்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் என்பதை விட மாபெரும் இலக்கியவாதி என அறியப்படுவதை விரும்பவில்லையா?

மாரிஸன்: எனது படைப்புகள் ஆப்பிரிக்க-அமெரிக்க கலாச்சாரம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனக்கு மிக முக்கியமானது. அது பொதுவான தளத்தில் ஒன்றிணைந்தால் நல்லதுதான். ஆனால் அவ்வாறு செய்யுமாறு என்னை வற்புறுத்தக் கூடாது.

அவ்வாறு எழுதுமாறு ஜேம்ஸ் ஜாய்ஸிடம் கேட்கவில்லை. தல்ஸ்தோயிடம் கேட்கப்படவில்லை. அதாவது, அவர்கள் எல்லாம் ரஷ்யர்களாகவோ, பிரெஞ்சுக்காரர்களாகவோ, ஐரிஷ்காரர்களாகவோ அல்லது கத்தோலிக்கர்களாகவோ எங்கிருந்து வந்தார்களோ அவ்வாறாகவே எழுதுவார்கள் என்றால் நானும் அவ்வாறே எழுதுவேன். எனக்கான வெளி ஆப்பிரிக்க-அமெரிக்க களம். அது கத்தோலிக்கமாகவோ மத்திய மேற்காகவோ இருக்கலாம். நான் அவையும் கூடத்தான். அவை எல்லாமே எனக்கு முக்கியம்.

 

நேர்கண்டவர்: ஜாய்ஸிடம் நீங்கள் அதிகம் பாராட்டும் அம்சம் என்ன?

மாரிஸன்: சில நேரங்களில் முரண்நகையும், நகைச்சுவையும் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது வியப்பாக உள்ளது. சில நேரங்களில் ஜாய்ஸ் களிப்படையச் செய்வார். நான் கல்லூரியில் படிக்கும் போது யாருடைய உதவியும் இல்லாமல் Finnegans Wake நாவலை வாசிக்கும் மிகப் பெரும் அதிர்ஷ்டம் அமைந்தது. அதை நான் சரியாக வாசித்தேனா எனத் தெரியாது, ஆனால் அது நகைச்சுவையாக இருந்தது.

 

நேர்கண்டவர்: நீங்கள் உங்களைப் பற்றிய விமர்சனத்தை வாசிப்பீர்களா?

மாரிஸன்: நான் அனைத்தையும் வாசிப்பேன்.

 

நேர்கண்டவர்: உண்மையாகவா?

மாரிஸன்: என்னைப் பற்றி எழுதப்பட்ட எல்லாவற்றையும் நான் வாசிப்பேன்.

 

நேர்கண்டவர்: ஏன் அப்படி?

மாரிஸன்: என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும்!

 

நேர்கண்டவர்: கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் போன்ற மாய எதார்த்தவாத எழுத்தாளர்களுடன் உங்களை ஒப்பிடுகையில் நீங்கள் வியப்படைவீர்களா?

மாரிஸன்: ஆமாம். ஆச்சரியமாக இருக்கும். அது எனக்கு எவ்விதத்திலும் பொருட்படுத்தும்படி இல்லை. இலக்கியம் பற்றி கற்பிக்கும் போது மட்டுமே எனக்கு சிந்தனைப் பள்ளிகள் குறித்து ஆர்வம். நான் ஒரு மாய எதார்த்தவாதியா? ஒவ்வொரு கதைக் களமும் ஒவ்வொரு வடிவத்தைக் கோருகிறது.

 

நேர்கண்டவர்: ஒரு எழுத்தாளராவதற்கு கல்வித் திட்டம் என்ற ஒன்று உள்ளது என நினைக்கிறீர்களா? வாசித்தல் போன்று…

மாரிஸன்: அதற்கு எல்லாம் மிகச் சிறிய பயன்பாடே உள்ளது.

 

நேர்கண்டவர்: உலகம் சுற்றுதல்? சமூகவியல், வரலாறு ஆகிய பாடங்களைப் படித்தல்?

மாரிஸன்: அல்லது வீட்டிலேயே இருத்தல்…. அவர்கள் எங்காவது செல்ல வேண்டும் என நான் நினைக்கவில்லை.

 

நேர்கண்டவர்: எந்த அனுபமும் பெறாமல், என் வாழ்வை வாழாமல் என்னால் எழுத முடியாது என்று சிலர் சொல்கிறார்களே…

மாரிஸன்: அது அவர்களால் முடியாமல் இருக்கலாம். தாமஸ் மன் போன்றவர்களைப் பாருங்கள். அவர் சில இடங்களுக்கே சென்றுள்ளார். சில நேரங்களில் உங்களுக்குத் தூண்டுதல் தேவைப்படும். ஆனால் எனக்கு உந்துதல் கிடைத்திட நான் எங்கும் செல்வதில்லை. நான் எங்கும் செல்லவும் விரும்புவது இல்லை. ஓரிடத்தில் அமர்ந்து எழுத முடிந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

 

நேர்கண்டவர்: நீங்கள் எப்போதாவது கோபத்திலோ அல்லது உணர்ச்சி வேகத்திலோ எழுதியிருக்கிறீர்களா?

மாரிஸன்: இல்லை. கோபம் என்பது மிக ஆழ்ந்த மிகச் சிறிய உணர்ச்சி நிலை. அது நீடிக்காது. அது எதையும் உருவாக்குவதில்லை. என்னளவில் அது படைப்பூக்கம் கொண்டதும் இல்லை. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் எழுத குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆனது!

 

நேர்கண்டவர்: கோபமாக இருப்பதற்கான காலம் இல்லை தான்.

மாரிஸன்: ஆம். அந்த விஷயத்தை நான் நம்புவதும் இல்லை. நான் தனிமையில் இருக்கிறேன்… ஓ.. கடவுளே… என்பது போன்ற சட்டென எழும் உணர்ச்சி நிலைகளை நான் விரும்புவது இல்லை. அந்த உணர்வுகள் எனக்கான உந்துதலாக இருப்பது எனக்குப் பிடிக்காது. அவை எனக்கு இருந்த போதிலும்…

 

நேர்கண்டவர்: அவை நல்ல சிந்தனை கிடையாது?

மாரிஸன்: இல்லை. உங்கள் மூளையால் அமைதியாக சிந்திக்க இயலாவிட்டால் எந்தவிதமான மனநிலைகளும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அது அமைதியாக, அமைதியான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் மூளையாவது அமைதியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

‘நானும் அவ்வாறே எழுதுவேன்’

டோனி மாரிஸன்

ஆங்கிலத்தில்: எலிஸா சேப்பல் மற்றும் கிளாடியா பிராட்ஸகி லேக்கர்

தமிழில்: க.ரகுநாதன்


ஆசிரியர் குறிப்பு:

டோனி மாரிஸன் (1931-2019): அமெரிக்க நாவலாசிரியர், பதிப்பாசிரியர் ஆவார். அவரது முதல் நாவல் The Bluest Eye 1970-ஆம் ஆண்டு வெளியானது. விமர்சன முக்கியத்துவம் பெற்ற Song of Solomon 1973-இல் வெளியாகி அமெரிக்க அளவில் புகழடையச் செய்தது. 1987-இல் வெளியான அவரது Beloved நாவலுக்காக 1988-இல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. கவிதைத் தொகுப்பு, குழந்தைகளுக்கான நூல்கள், கட்டுரைகள், நாடகங்களும் எழுதியுள்ளார். அவரது இலக்கிய பங்களிப்பிற்காக 1993-இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 The Paris Review இதழில் 1993ஆம் ஆண்டு வெளியான நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.