வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை

வளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ்[1], ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம் வார்த்தைகளோ இலக்கணமோ இதுவரை உருவாக்காத எலிகளின் பாஷையே அவளின் மொழி. எலிகளுடைய இனத்தில் அவளுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாத காரணத்தால் அவளை வெள்ளைப்பாதம் என்றே விளிக்கிறேன்.

அவளுடைய நான்கு சிறிய கால்களும் உடலின் அடிப்பாகம் முழுவதும் தூய்மையான வெண்மை நிறத்தில் இருப்பதால் இந்தப் பெயர் ஒத்துப்போகிறது. அவளின் மேல் தோல் சிவப்பும் பழுப்பும் கலந்து வரிவரியாக இருந்தது. வசீகரமான வால், நீளமான நேர்த்தியான ஒரு ஜோடி மீசை, துல்லியமாக எப்போதும் கேட்கும் காதுகள், மிகவும் கருத்தோடு கவனிக்கிற மூக்கு, ஒளிரும் பார்வையுடன் கூடிய ஆழ்ந்து உற்று நோக்கும் கருமையான கண்கள். அழகாய் இருந்ததால் பெண்மைக்குரிய மகிழ்ச்சி அவளிடம் இருந்தது.

இலையுதிர் காலத்தில் அவள் பிறந்தாள். தற்போது குளிர்காலம் முடியப் போகிறது. வசந்த காலத்தில் தன்னுடைய எதிரிகள் பலரிடமிருந்தும் அவள் தப்பிவிட்டால், முதல் பிரசவம் காண்பாள். அதில் அநேகமாக ஆறு குட்டிகளை ஈனுவாள். வெள்ளை கருவாலி மரத்துடனோ அல்லது மனிதர்களுடனோ ஒப்பிடுகையில் அவள் வெகு நாட்கள் வாழப்போவதில்லை. ஒருவேளை ஓர் ஆண்டு வாழலாம், கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் இல்லை. ஆனால், தான் வாழும் குறுகிய நாட்களை அன்புடன் நேசித்தாள். இதுநாள்வரை தன்னை மிகவும் நன்றாகப் பார்த்துக்கொண்டாள். கொட்டைகள், விதைகள், பூச்சிகள் போன்றவற்றை திருப்தியாக சாப்பிட்டாள். தன்னையே சுத்தமாகப் பராமரித்துக்கொண்டாள். பெரிய உயிரினங்களின் பார்வையில் இருந்து தன்னைக் காத்திட மிகவும் கவனமாகவும் புத்திசாலியாகவும் செயல்பட்டாள். ஒரு சுண்டெலியாக இருப்பதில் அவள் மிகவும் கை தேர்ந்தவள்.

வில்லியம் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஓடையோர வடிநிலப் பகுதியில் பழைய கெய்த் எனப்படும் இடத்தில் கூர்மையான ஓரங்கள் உள்ள மரப்பொந்தில் அவள் வாழ்ந்தாள் – ஆனால் இது எதைப்பற்றியும் அவளுக்குத் தெரியாது. வெறும் சில நூறு அடி தூரத்தில் மரங்களடர்ந்த உயரமான கரைகளுக்கு இடையே ஆறு பாய்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவளின் சொந்த நாடு ஏறக்குறைய ஒரு ஏக்கர் பரப்பளவுள்ளது. புல்லின் இதழ்களும், களைச்செடியின் தண்டுகளும், சிறு புதர்களின் தண்டுகளும் இலைகளும், மரங்களின் மூட்டுக்களும் நிறைந்த ஏறக்குறைய ஒரு ஏக்கர் அளவுள்ள வானம் குறுக்கும் நெடுக்குமாக மேலிருந்து தொங்கியது.

தலைக்கு மேலே உள்ள இலைகள், தண்டுகள், மற்றும் கிளைகளால் ஏக்கர் அளவுள்ள அவளுடைய வானத்தில் தடம் விழுவது போலவே, அவள் வருவதும் போவதுமாக இருந்ததால் ஏக்கர் அளவுள்ள அவளுடைய நிலப்பரப்பிலும் தடம் விழுந்தது. தன்னுடைய பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடுவதற்குத் தேவையானதை எப்போதும் தேடிக்கொண்டே இருந்தாள். தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் எல்லா திசைகளிலும் திரிந்தாள். ஒருவேளை நீங்கள் அவளுடைய இடத்திற்குச் சென்றபோது உங்களை அவள் தெளிவாகப் பார்த்திருந்தால்கூட நீங்கள் கண்டிப்பாக அவளைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அந்தப் பகுதியில் வாழும் மற்ற விலங்குகளைவிட ஆழமான பகுதிக்குள் பெரும்பாலும் இரவு நேரத்தில் விரைவாகவும் சத்தம் இல்லாமலும் சென்றாள். சில நேரங்களில் தன்னுடைய உணவைத் தேடிச் செல்லும்போது மரத்திலோ அல்லது புதரிலோ பன்னிரெண்டு அடி உயரம்கூட ஏறினாள். ஆனால், எல்லா இடங்களிலும் தன்னைவிட பெரிய எந்த விலங்குகளின் பார்வையிலும் பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

வெள்ளைப்பாதத்தின் வாழ்க்கையையும் தீரத்தையும் கற்பனை செய்ய வேண்டும் என்றால் அவளுடைய உருவத்திற்கு ஏற்றாற்போல உங்கள் எண்ணத்தைக் கண்டிப்பாக குறுக்க வேண்டும். உங்கள் கட்டை விரலைவிட கனமான புல்தண்டுகள், மணிக்கட்டைவிட கனமான களைச்செடியின் தண்டுகள், அடியில் உங்களை மறைத்துக் கொள்ளத்தக்க மேப்பிள், கருவாலி மற்றும் வானத்தைத் தொடக்கூடிய மரங்களுக்கு இடையே தரையைவிட ஓர் அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் மேலே போவது போல நினைத்துக் கொள்ளுங்கள்.

உலகின் மையத்தில் அவள் வாழ்ந்தாள். இது, ஒவ்வோர் எலியும் அறிந்திருக்கும் தகவல்களில் ஒன்று. அவள் எங்கு இருந்தாலும், உலகின் மையத்தில் இருந்தாள். அதாவது, ஒருவர் உலகின் மையத்தில் வாழ்கிறார் என்பது மிகவும் ஆழச் செறிவுள்ள சிந்தனை. வெள்ளைப்பாதத்தின் மனதில் இது மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டது, இதைக் குறித்து அவள் யோசிக்க வேண்டியதே இல்லை. வாழ்வதற்கு வேறு உலகம் எதுவும் அவளுக்கு இல்லாததால், மனிதர்களைப் போலவே தான் அறிந்த சிறிய உலகிற்குள் அவள் வாழ்ந்தாள். ஆனால், தன்னுடைய உலகின் மையத்தில் எப்போதும் வாழ்ந்தாள். இதைக் குறித்து அவளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

*

பட்டுப்போன மரத்தின் வேர்களுக்குள் இருந்த ஒரு குழியில் தன்னுடைய பல்வேறு உறவினர்களுடன் குளிர்காலத்தை அவள் செலவிட்டாள். குளிராக இருந்தபோது வெதுவெதுப்பிற்காக ஒன்றோடு ஒன்று ஒட்டி அமர்ந்திருந்தார்கள். வெகுநேரம் தூங்கினார்கள். இலையுதிர் காலத்தில் அறுவடை செய்த சிறிய கருவாலிக் கொட்டைகளையும் மற்ற விதைகளையும் ஈரம் படாமல் பாதுகாத்து, தாங்கள் சேமித்து வைத்திருக்கிற ரகசிய குழிகளுக்கு, விழுந்து கிடக்கும் இலைகளுக்கும் புற்களுக்கும் கீழேயும், பனிக்கு அடியிலும் இருந்த மிகச்சிறிய பாதைகள், சுரங்கங்கள் வழியாகச் சென்றார்கள்.

பல நாட்கள் கழித்து மார்ச் மாதம் வந்தது. அப்போது, எலிகளுக்கே உரித்தான குரலை வெள்ளைப்பாதம் தன் மனதினுள் கேட்கத் தொடங்கினாள். இதே குரல் தான் சில வேளைகளில், “விதைகள்! விதைகள்!” எனவும் வேறு சில நேரங்களில், “விழிப்பாய் இரு!” எனவும் அவளுக்குச் சொல்லும். தற்போது வசந்த காலம் நெருங்கி வந்ததால், “கூடு! கூடு!” என்று சொன்னது. எனவே, குளிர்காலத்தில் தான் தங்கியிருந்த தன்னுடைய சமூக வளையை விட்டு வெளியேறி தன்வழியே அவள் சென்றாள்.

தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வீடு கட்டுவதற்காக ஒரு உலர்வான பொந்தை அவள் தேடினாள். கடைசியில் ஒரு பொந்தைத் தேர்ந்தெடுத்தாள். அவளுடைய வரலாற்றையும் பழக்க வழக்கங்களையும் அறிந்ததன் வழியாக நீங்கள் எதிர்பார்த்தது போல் அல்லாத ஒரு பொந்து அது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்தபோது அவளுடைய ஏக்கர் அளவு நிலப் பகுதிக்குள் வந்த பெரிய உருண்டையான கண்ணாடி ஜாடி அது. ஜாடியின் மூடியானது இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. ஜாடியின் தோள் பகுதிக்கு கீழே எப்படியோ ஓர் ஓட்டை ஏற்பட்டிருந்தது. எலி ஒன்று நுழையக்கூடிய அளவு, ஒரு கண் வடிவத்திலான ஓட்டை அது. புதருக்கு மேலே புற்களுக்கும் காய்ந்த இலைகளுக்கும் நடுவே கிடந்த ஜாடியில் ஓட்டை தரையோடு கிடந்ததால் மழைநீர் உள்ளே செல்லவில்லை. ஜாடியானது ஒரு கூடு அளவுக்கு இருந்தது. இது அவளுக்குப் பழக்கமான ஒன்று இல்லை தான், இருந்தபோதிலும் முற்றிலும் வாய்ப்புகளைப் பயன்படுத்தியே சுண்டெலிகள் எப்போதும் வாழ்வதால், வெள்ளைப்பாதம் அதைத் தேர்ந்தெடுத்தாள். அதன் உள்ளே சென்று அவள் சுற்றிச் சுற்றி வந்தாள், மறைந்திருந்து பார்த்தாள், வெளியே வந்தாள், மறுபடியும் உள்ளே சென்றாள், வெளியே வந்தாள். இது எல்லா வசதிகளும் உடையது என முடிவு செய்தாள்.

“கூடு! கூடு!” என்று சொல்லிய குரலானது இப்போது, “சீக்கிரம்! சீக்கிரம்!” என்று சொல்லத் தொடங்கியது. மிகவும் அபாயகரமான சூழல் என்பதை உணர்ந்து தன்னுடைய ரகசியமான பாதையில் பாய்ந்து சென்று காட்டுக்குள் அவள் மறைந்தாள். உலர்ந்த புல், காய்ந்த சில இலைகள், மரப்பட்டைகள், பருந்து சாப்பிட்ட ஊதா நிற பறவைகளின் மெல்லிய இறகுகள் கொஞ்சம், பாசிக்கற்றை அனைத்தையும் சேகரித்தாள். மதிப்புமிக்க அவற்றைத் தன் வாயில் சுமந்து ஜாடி இருக்கும் இடத்திற்கு பல தடவைகள் பயணித்து உள்ளே வைத்தாள்.

“கூடு!” எனவும் “சீக்கிரம்!” எனவும் “விழிப்புடன் இரு” எனவும் அடிக்கடி சொல்லிய தன்னுடைய மனக் குரலைக் கேட்கவும், நுகரவும், கவனிக்கவும் அடிக்கடி நின்று நின்று மின்னல் வேகத்தில் சென்றாள். இலைகள் அவற்றின் மொட்டுகளிலிருந்து இன்னும் விரிவடையவில்லை. புற்கள் இன்னும் வளரத் தொடங்கவில்லை. தன் வேலையை திறந்தவெளியில் அடிக்கடி செய்தாள் – நரி அல்லது ஆந்தையின் பார்வையிலும் பட்டிருக்கலாம். வேகமாகச் செயல்பட்ட அதேவேளையில் அவள் கவனமாகவும் விழிப்பாகவும் இருந்தாள்.

தான் சேகரித்த அனைத்துப் பொருட்களாலும் தன் ஜாடியை நிறைத்த பிறகு, குழித்து உள்ளே சென்று, மையத்தில் தன் உடல் அளவுக்கு மிகச் சிறிய பள்ளத்தை உருவாக்கினாள். கைகள் போலவே தந்திரமான தன் முன்னங்கால்களால் அவளுடைய கூட்டின் கட்டுமானப் பொருட்களை வாரி அதனதன் இடத்தில் வைத்தாள். அவள் அவற்றைத் தன் பற்களால் கடித்துத் தூள் தூளாக ஆக்கினாள். தன் மூக்கினாலும் கால்களாலும் அவற்றை நகர்த்தி, நெருக்கமாக வைத்தாள். தன் உடலால் அழுத்தி கிண்ணம் போன்ற பகுதியை கூட்டில் மிகச் சரியாக உருவாக்கினாள். கதகதப்பாக சுகமாக இருக்கும்படிச் செய்தாள். போதும் என்றால் போதும் என்கிற தொன்மையான, மேன்மை வாய்ந்த கோட்பாட்டின்படி தன் வேலையைச் செய்தாள். ஆடம்பரம் இல்லாமலும் வீணடிக்காமலும் வேலைசெய்து வாழ்ந்தாள். அவளுடைய கூடு என்பது, அவள் தூங்கக்கூடிய அளவுக்கு சுத்தமான சிறிய கிண்ணம் அளவு இருந்தது. பகல் உறக்கத்துக்காக உள்ளே சென்றிருக்கும்போது கண்கள் மூடி, வாலின் நுனி அவள் மூக்குக்குக் கீழே இருப்பது போல் வாலைச் சுற்றி, பந்து போலச் சுருண்டு படுத்துறங்கினாள். அவளின் உறக்கம் ஜெபிப்பது போல, நன்றி சொல்வது போல இருந்தது.

*

கூடு இன்னும் புதிதாக இருக்கும் போதே மழை பெய்யத் தொடங்கியது. சூரிய ஒளி மறைந்தது. தாழ்வான மேகங்களால் வானம் இருண்டது. பெருமழை பெய்தது. மழை நின்றபோது காய்ந்த இலைகளின் மீது மரங்கள் பெருந்துளிகளைச் சிந்தின, பிறகு மீண்டும் மழை பெய்தது. சில வேளைகளில் மெதுவாக, சில நேரங்களில் வலுவாகப் பெய்தது. இரவின் ஈரமான இருளுக்குள் வெள்ளைப்பாதம் உணவு தேடிச் சென்றாள். பொழுது விடிந்து வெளிச்சம் பரவத்தொடங்கும்போது பழைய மயோனைஸ்[2] ஜாடியில் இருந்த தன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். கூட்டினுள் இருந்த மென்மையான கிண்ணத்தில் சுருண்டு படுத்து தூங்கினாள்.

ஒருநாள் அவள் தூங்கும்போது மாற்றம் நிகழத் தொடங்கியது, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது. மரக் கிளைகளின் மீதும் தரையில் கிடந்த இலைகளின் நனைந்த அடுக்குகள் மீதும் விழுந்த மழைத் துளிகளின் சத்தத்திற்கு மத்தியில் தண்ணீரில் விழுகிற மழையில் புது சத்தம் கேட்டது. சத்தம் பெரிதாகி வெள்ளைப்பாதம் தூங்கும் இடத்திற்கு அருகில் கேட்டது. அவள் அறிந்த உலகம் எவ்வளவு பெரியதோ அந்த அளவுக்கு பெரிய வித்தியாசமான கனவு ஒன்று தூக்கத்தில் அவளை நடுங்கச் செய்தது.

பிறகு மத்தியானம் வாக்கில் கண் விழித்தாள். அவளுடைய ஜாடியின் அடிப்பகுதியானது ஏற்கெனவே இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் மேலே வந்திருந்தது. உறக்கத்தில் இருந்தவளிடம், “விழிப்பாய் இரு” என்றும், “சீக்கிரம்!” என்றும் மனக்குரல் சொன்னது.

ஜாடியின் உடைந்த வாசலுக்குச் சென்று சுற்றிலும் பார்த்தாள். அந்த நாள் மூடுபனியால் வெள்ளி போன்று காட்சியளித்தது. கருநிறத்தில் இருந்த மரத்தின் உடற்பகுதி அதில் மறைந்திருந்தது. மூடுபனியின் ஊடே மழை விழுந்து கொண்டிருந்தது. தூரத்தில், மூடுபனிக்குள் மறைந்து, பாய்போல் விரிந்த தண்ணீரானது மங்கலான பகல் வெளிச்சத்தில் மின்னியது. சிதறிக்கிடந்த பொருட்கள் மிதந்தன. மெல்லக் கசிந்த தண்ணீர் வெள்ளைப்பாதத்தின் ஜாடிக்குள் புகுந்தது. அவள் வெளியே பாய்ந்து வந்தாள், மூழ்கினாள். அவள் மனக்குரல் சொன்னது,“எழு!” உடனே அவள் நீந்தத் தொடங்கினாள். ஜாடிக்கு அப்பால் உள்ள நிலம் இன்னும் மேடாக இருப்பதைப் பார்த்தாள். உயரமான மேடு நோக்கி நீந்தத் தொடங்கினாள்.

தண்ணீரை விட்டு கரையேறும்வரை அவள் நீந்தினாள், பிறகு நடந்தாள். அவளைச் சுற்றியுள்ள மழை நீரின் ஓசை மாறியது. அவள் பாதுகாப்பாக இல்லை. சில அடி தூரம் மட்டுமே இருந்த ஒரு தீவின் மீது அவள் இருந்தாள். அந்தத் தீவு குறுகிக்கொண்டே வந்தது. ஒடுங்கி, ஈரத்துடனும் குழப்பத்துடனும் நீர் ஊறிய இலைகளின் மீது அவள் இருந்தபோது நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. கடைசியில், சிறிய மரக்கட்டையின் மீது குதித்து ஏறும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். இதைச் செய்ய அவளுக்கு விருப்பம் இல்லை, ஏனென்றால் யார் கண்ணிலும் அவள் படலாம், ஆனாலும் வேறு வழியில்லை. அவளால் முடிந்தவரை தன்னைக் குறுக்கிக்கொண்டு அப்படியே மரக்கட்டையுடன் ஒட்டி பதுங்கிக்கொண்டாள். அந்தப் பக்கம் நடந்த மற்ற விலங்குகளைப் பார்த்து தற்போதைக்கு பயப்பட வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை. அவளைப் போலவே அவையும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் பரபரப்பாக இருந்தன. விலங்குகளையும் பறவைகளையும் தின்று வாழும் மரநாய்கள், மென் மயிர்த்தோல் கொண்ட மிங்க் எனப்படும் விலங்கு, பூனைகள், பாதுகாப்பிற்காக துர்நாற்றம் பரப்பும் ஸ்கன்க், ராக்கூன், மற்றும் நரிகள் அனைத்தும் உயர்ந்துவரும் நீர்மட்டத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற வெள்ளைப்பாதத்தைப் போலவே முயற்சி செய்தன. அவளுக்கு எதிரிகளும் இருந்தார்கள். யார் அந்த எதிரிகள்? உதாரணமாக, பகல் நேரத்தில் பருந்துகள், இரவு நேரத்தில் ஆந்தைகள். மரக்கட்டையில் ஒட்டிக்கிடந்தபோது நனைந்த ஈரத்தினாலும் குளிரினாலும் நடுங்கினாள், பயந்தாள். பொறுமையோடு காத்திருந்தாள். அவளால் செய்ய முடிந்தது அது மட்டும்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவளுடைய மரக்கட்டை மிதக்கத் தொடங்கியது.

இதற்கு முன்னால் ஒருபோதும் அவள் மிதந்தது கிடையாது. இருப்பினும், தரையில் இருந்த மரக்கட்டை நீருக்கு மேலே வந்த உடனேயே தான் மிதக்கிறோம் என்பதை அறிந்துகொண்டாள். தரையில் இருந்து விடுபட்டவுடன் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதற்காக மரக்கட்டை கொஞ்சம் உருண்டபோது, தான் விழுந்துவிடாமல் இருக்க மீண்டும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளைச் சுற்றி இருந்த தண்ணீரில் மழை விழுந்ததால் எழுந்த சத்தம் அவளுக்கு முற்றிலும் புதிது. மரங்களின் உச்சியைக் கடந்துசென்ற காற்று சத்தம் எழுப்பியது.

*

காற்று வீச வீச வெள்ளைப்பாதத்தைச் சுமந்திருந்த மரக்கட்டையானது ஏக்கர் அளவுள்ள அவளின் சொந்த நிலத்தில் இருந்து மெல்ல அவளை வெளியே சுமந்து சென்றது. தண்டுகளும் சிறிய புதர்களும் அவ்வப்போது ஏற்படுத்திய எதிர்பாராத இடையூறுகளைக் கடந்து, காற்று உருவாக்கிய சிறிய அலைகளில் மிதந்து மரக்கட்டையானது ஆற்றை நோக்கி அவளைக் கொண்டு சென்றது.

அவள் அசையவில்லை. அவளால் செய்ய முடிந்த பாதுகாப்பான செயல் என்னவென்றால் மரக்கட்டையில் போடப்பட்ட முடிச்சுப் போல இருப்பதுதான், அதை அவள் செய்தாள். மரக்கட்டை மட்டுமே சென்றது. காற்று வீசுவதற்கும், நீரின் அசைவுக்கும் ஏற்ப அது சென்றது.

வெள்ளைப்பாதம் மிதந்து சென்றதை சிவப்பு நிற வயிறுடைய மரங்கொத்தி லோகஸ்ட் மரத்தில் இருந்த தன்னுடைய பொந்தில் இருந்து பார்த்தது. மரங்கொத்தியின் பொந்துக்கு மேலே வீட்டு தாழ்வாரம் போல, அடைப்புக்குறி போல பூஞ்சைக் காளான்[3] படர்ந்திருந்தது.

மரங்கள் ஏதுமில்லாத பகுதியில் சிறிது நேரத்திற்கு மரக்கட்டை மிதந்தது. சோள வயலின் ஒரு பகுதி முழுவதும் காற்று வீசியது. வயலில் மேய்ந்துகொண்டிருந்த காட்டு வான்கோழிகள், உயர்ந்துவரும் நீரைவிட்டு மெல்ல விலகிநடந்தன. வெள்ளைப்பாதத்தின் வாழ்க்கையில் இந்த நாள் மகிழ்ச்சியற்ற நாள் என்பது உண்மையாக இருந்தாலும், நீரில் மூழ்கிய சோளப் பயிர்களின் வரிசைகளில் ஒரு ஜோடி மர வாத்துக்கள்[4] மகிழ்ச்சியாக குதித்தாடின. ஆற்றுக்கு அருகே, கம்பு போல் அசையாமல் நின்றுகொண்டிருந்த மிகப்பெரிய நீல நிற கொக்கு, தன்னுடைய நீளமான அலகினால் தண்ணீருக்குள் கொத்தி மீன் பிடித்து விழுங்கியது.

சற்று நேரத்தில், வெள்ளைப்பாதம் இருந்த மரக்கட்டைக்குக் கீழே தண்ணீர் அதிகமானது. ஒரு கஸ்தூரி எலி ‘V’ வடிவத்தின் முனைபோல நிலப்பரப்புக்குப் பக்கமாக நீந்திக்கொண்டு போனது. அது தண்ணீருக்குள் தலைகீழாகப் பாய்ந்தபோது, ஒரே ஒரு நொடி, அதன் வால் மட்டும் கேள்விக்குறி போல வளைந்து தெரிந்தது, பின் அதுவும் மறைந்துபோனது.

பறக்கவும் முடியாத, நீந்தவும் விரும்பாத வெள்ளைப்பாதம் மீண்டும் மரங்களுக்கு இடையே, காற்று தள்ளத்தள்ள ஆற்றை நோக்கி மிதந்து சென்றாள். குளிர் நடுக்கத்தைத் தவிர வேறெதற்கும் அவள் அசையவில்லை. மரக்கட்டை மிதந்ததை, தடைகளின் மீது மோதியதை, சிறிதுநேரம் நின்று, வளைந்து பின்னர் மிதந்து சென்றதை மட்டுமே பார்த்தாள். நீங்கள் அவளைப் பார்த்திருந்தால் அவள் பொறுமையாக இருப்பதாக நினைத்திருப்பீர்கள். பொறுமையாக இருக்கும் ஆற்றல் அவளுக்கு உள்ளது என நான் நினைக்கிறேன், ஆனால் இப்போது எதுவுமே செய்யாமல் இருந்தாள், அவளால் செய்ய முடிந்ததும் இது மட்டும் தான்.

அவளிருந்த மரக்கட்டை, நிலப் பகுதியையோ அல்லது ஏதாவது பெரிய மரக்கட்டையையோ மறுபடியும் தொடவில்லை. அவள் குதித்துத் தப்பிப்பதற்கு ஏதுவாக எதன் மீதும் மோதவில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்றாற்போல் மெல்ல சென்றது. அசைகின்ற நீர் ஏற்படுத்திய மிதந்து செல்லுகின்ற உணர்வு வெள்ளைப்பாதத்திற்கு முற்றிலும் புதிது. இந்த உணர்வு அவளை விழிப்புடன் வைத்திருந்தது. அவளுக்கு இது பழக்கப்படப் போவதில்லை.

பிறகு மாற்றத்தின் வெளிச்சம் அவள் மீது படர்ந்தது. ஒருவழியாக, திறந்தவெளி ஆற்றில் மரக்கட்டையைக் காற்று தள்ளியது. ஆழமான நீரில் கரைகள் போல இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்று கொண்டிருந்த மரங்களுக்கு இடையில், அதுவரை வெள்ளைப்பாதம் பார்த்திராத மிக நீளமான வானம் திடீரென்று அவளுக்கு மேலே திறந்தது. தற்போது அவளின் மரக்கட்டைக்குக் கீழே உள்ள தண்ணீர், காற்றினால் மட்டுமல்ல, மாறாக நீரோட்டத்தில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான வெவ்வேறு சுழல்களாலும் வேகமாகச் சுழன்று பதற்றத்தை ஏற்படுத்தியது. தண்ணீரில் ஒளி இறங்கியது, ஒளிரும் பிரதிபலிப்புகளால் விரைவாக காற்றை நிரப்பி, தண்ணீர் மீண்டும் வெளிச்சத்தை மேலே அனுப்பியது. தண்ணீரில் விழும் மழை, கிளைகளில் உள்ள காற்றின் சத்தங்கள் இவைகளுடன் சேர்த்து மரங்களின் தண்டுப் பகுதியில் மோதிச் செல்லும் நீர்ச்சுழலின் பெருஞ் சத்தமும் தற்போது அவளைச் சுற்றிக் கேட்டது.

*

ஆற்றில் இருந்தபோது, ஓடிய தண்ணீர் கொண்டு சென்றதைவிட மெதுவாகவே காற்று மரக்கட்டையைத் தள்ளியது. ஒரே நீரோட்டத்தில் தண்ணீர் பாய்வதை நினைப்பது எளிது. ஆனால், இங்கே வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு திசைகளில் இருந்து குறுக்கும் மறுக்குமாக சுழன்று வலைபோல பின்னிப் பாயும் பல்வேறு நீரோட்டங்களால் இந்த நீரோட்டம் உருவானது.

தொடக்கத்தில், வெள்ளைப்பாதத்தின் மரக்கட்டை தன் போக்கில் சென்றது, போகிற போக்கில் நீரோட்டம் அதைத் திருப்பியது. காற்றும் நீரும் மைய நீரோட்டத்தில் இருந்து எப்போது கால்வாய்க்குள் அதைத் தள்ளியதோ அப்போது இலைகள், கிளைகள், காய்ந்த புற்களின் துண்டுகள், சோளத் தட்டைகள், குச்சிகள், வெட்டப்பட்ட மரத்தின் துருவல்கள், தகரக் குவளைகள், புட்டிகள், மரக் கட்டைகள், மரத்தின் மூட்டுகள், நுரைம நெகிழிகளின் சிறு துண்டுகள், பீப்பாய்கள், பழைய டயர்கள், கூடைப்பந்து, பெரு மரங்கள் என காடு மற்றும் வயல்களின் சிதைவுகள் மற்றும் மனிதக் குப்பைகள் என மிதக்கும் மற்றப் பொருட்களோடு அதுவும் பயணித்தது. இந்தப் பொருட்கள் தனியாகச் சுழன்று சென்றன அல்லது மிதக்கும் விரிப்பு போல மிதந்து சென்றன.

இந்த விரிப்புகள் பல அடி தூரம் கடந்து சென்ற பிறகு ஒன்றாகச் சேர்ந்து, சிலவேளைகளில் தெப்பம் போல் ஆகின. அதன் பிறகு நீரோட்டம் அவற்றைத் தனித்தனியாக உடைத்தது அல்லது சுழற்றி அடித்தது. அதன் பிறகு அவை புதிய உருவத்தில் ஒன்று சேர்ந்தன. அதேவேளையில், மரக்கட்டைகளில் சில அல்லது பெரிய மரங்களின் உடல் பாகங்கள் மற்றும் மூட்டுக்களில் சில ஒன்றாக நெருக்கி ஒட்டிக்கொண்டன. கடைசியில், உடைந்த கரை வழியாக எதிர்த்துவந்த பழைய மேப்பிள் மரத்தின் வேர்களிலும் பரந்த கிளைகளிலும் சிக்கிக்கொண்ட ஒரு தெப்பத்தில் வெள்ளைப்பாதத்தின் மரக்கட்டையும் சிக்கியது. முனைகளைத் தொடர்ந்து பற்றிப் பிடித்திருந்தாலும், நீரின் வேகத்திற்கு ஏற்ப அதன் அடிப்பகுதி மேலே செல்வதும் கீழே வருவதுமாக இருந்தாலும் பெரிய மரமாக இருந்ததால் மிதந்து கொண்டிருந்த இந்தத் தெப்பம் மற்ற அனைத்தையும்விட இறுகப் பிணைந்திருந்தது. அது ஒரு மிதக்கும் தீவு போல இருந்தது. பொன்னிறக் கண்கள் கொண்ட எண்ணற்ற கருங்குருவிகள் நம்பிக்கையுடன் அதன் மேல் நடந்து சுற்றிலும் பார்த்தபடி உணவு உண்டன.

உபயோகமற்ற இந்தப் பொருள்களின் மேல் கெட்டியான தரையில் நிற்பது போல தன் நீளமான விரிந்த கால்களை ஊன்றி பாதுகாப்பாக நின்று, தேவையென்றால் தன்னைக் காத்துக்கொள்ள பறக்கவும் கூடும் இந்தப் பறவைகள் போல வெள்ளைப்பாதமும் செய்வாள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. தன்னுடைய சிறிய பாதத்திற்கு கொஞ்சம் கெட்டியான தரை இருந்தால் நல்லது என்பதை வெள்ளைப்பாதம் அறிந்திருந்தாள் என நினைக்கிறேன். அவள் முயற்சி செய்திருந்தால், அச்சம் தரும் தண்ணீருக்கு மிக அருகில் இல்லாமல் தாவி மேலே வந்திருக்கலாம், ஆனால் அவள் நகரவே இல்லை.

மழை நின்றபோது, ஆற்றின் நீர்மட்டம் ஒளிர்ந்தது. சிதறியத் துளிகளுடனும் பிரதிபலிக்கும் சிதறிய வெளிச்சத்துடனும் நீரோட்டத்தில் உருவான மடிப்புகளும் சிறு அலைகளும்கூட ஒளிர்ந்தன. மழை மீண்டும் பொழிந்தபோது கரளை கட்டினாற்போல தரை கரடுமுரடாகிப்போனது. அதிகரித்துக்கொண்டே வந்த தண்ணீர் நாள் முழுவதும் ஏறக்குறைய பதினைந்து மைல் தூரத்திற்குக் கொண்டுசென்ற போதிலும் வெள்ளைப்பாதம் அசையவே இல்லை. கனமான தரையுடன் ஏக்கர் அளவுள்ள அவளுக்குப் பழக்கமான உலகத்தில் இருந்து, நீரும், காற்றும் வெளிச்சமும் ஒருபோதும் ஓய்வறியாத, எப்போதும் எல்லாமும் மாறிக்கொண்டிருக்கும் இந்த விசித்திரமான உலகிற்கு வந்தாள். அவள் நனைந்து, குளிர்ந்து, பயந்து, தடுமாறி, இப்படியே இருப்பதுதான் பாதுகாப்பு என நினைத்தாள்.

சற்று நேரம் எண்ணற்ற நாமக்கோழிகள் தெப்ப விரிப்புகளின் இடையில் பறந்தும் நீரில் மூழ்கியும் உற்சாகமாய் இரைதேடின. சிற்றோடையின் முகத்துவாரத்தில் நீர் வேகமாகப் பாய்ந்த இடத்தில் ஒரு நீர்க்கீரி குடும்பமானது, நீர் அமைதியாக இருந்த இடத்தில் இருந்து எதிர்நீச்சலில் தடம் போட்டுக்கொண்டே வந்தது. வெள்ளைப்பாதத்தின் கண்கள் அனைத்தையும் பார்த்தன. ஆறு அவளைச் சுமந்து சென்றபோது கண்ணில் பட்டதையெல்லாம் பார்த்தாள். மாலையில், முதலாவது ஆற்றின் முகத்துவாரத்தைக் கடந்து மிகவும் அகலமான ஒன்றில் நுழைந்தபோது அவளைச் சுற்றிலும் இருந்த வெளிச்சம் மாறியது.

*

எளிதில் உடையக்கூடிய அவளின் தீவைச் சுமந்துவந்த நீரோட்டம், பெரிய ஆற்றின் நடுப்பகுதியில் அவளைக் கொண்டு சென்றபோது முழுதும் தண்ணீர் பொங்கிவழியும் உலகிற்குள் தான் இருப்பதாக வெள்ளைப்பாதம் நினைத்தாள். கரையோரங்களிலும் நீர்வடியும் தாழ்நிலங்களிலும் இருந்த மரங்கள் இருபுறமும் வெகுதொலைவில் இருந்தன. மூடுபனியாலும் மழையாலும் அவை மூடப்பட்டிருந்தன. தான் எப்போதும் வாழ்ந்த, மரங்களால் சூழப்பட்ட உலகத்திற்குள் பழக்கப்பட்ட வெள்ளைப்பாதத்தின் கண்களுக்கு தொலைதூரத்தில் இருப்பதைப் பார்ப்பது கடினம். தூரத்தில், தண்ணீரின் ஓரத்திற்கு அந்தப்பக்கம் உயரமான நிலங்கள் இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவு. இப்போது அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஓடும் தண்ணீர், தண்ணீரில் மாறி மாறி வரும் வெளிச்சம், மழை, காற்று. நீரோட்டத்திற்கு எதிராக பெரிய அலைகளை காற்று உருவாக்கியது. தனக்குக் கீழே அலை சுருண்டு சென்றபோது விரிப்பு மேலே எழுந்து கீழே விழுந்தது.

வெள்ளைப்பாதத்தின் மனக்குரல் பேசியது, “விழிப்பாக இரு! விழிப்பாக இரு!” ஆனால் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை, போவதற்கு வழியும் இல்லை, உள்ளே நுழைந்து பாதுகாப்பாக இருக்கவும் தன்னை உலர்த்திக்கொள்ளவும் வெதுவெதுப்பாக இருக்கவும் தூங்கவும் காய்ந்த பொந்து எதுவுமே இல்லை. சிறிய மரக்கட்டை தண்ணீரில் அலைக்கழிக்கப்படுகையில் பற்றிப்பிடித்து, வளைந்து, நடுங்கியபடி பெரும் வெளிச்சத்தையும் வளைவுகளையும் இங்கும் அங்கும் அது தண்ணீரில் அலைவதையும் பார்த்தபடி இருந்தாள்.

மாலை வேளையில் காற்று நின்று தண்ணீர் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பியது. இன்னும் ஈரத்துடன், குளிருடன், பயத்துடன் இருந்தாலும் வெள்ளைப்பாதத்திற்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. அவள் பசியுடனும் இருந்தாள். மாலை மயங்கி கிழக்கே உள்ள மூடுபனியினூடாக இரவு உதித்தபோது வழக்கமாக அவள் தூங்கி எழும் நேரத்திற்கு வந்தாள். எழுந்து அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய வேண்டிய நேரம் அது.

நீங்கள் அங்கே இருந்திருந்தால், உங்களால் இருளில் பார்க்க முடிந்திருந்தால் ஆற்றில் இரவு கவிழ்ந்ததும் வெள்ளைப்பாதத்திற்குள் ஏற்பட்ட மாற்றங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறிய, பற்றிப் படுத்துத் தூங்கும் விலங்கு என்பதில் இருந்து முற்றிலும் புதிய விலங்காக அவள் மாறினாள். பகல் வெளிச்சமும் ஓடுகின்ற ஆறும் தனக்குக் காட்டியதை மட்டுமே பார்த்த அவளின் கண்கள் இப்போது காரணத்தோடு பார்த்தன. அவளைச் சுற்றி உள்ள தெளிவற்றச் சூழலையும் தண்ணீர் சிதறி விழுவதையும் அவளின் காதுகள் கவனித்தன. அவளின் மூக்கு புத்திசாலித்தனமாக மோப்பம் பிடித்தன. அவளின் மயிரிழைகள்கூட விழிப்படைந்தன. அவள் இன்னும் நகராவிட்டாலும், நகர்வதற்குத் தயாராக உள்ள விலங்குதான் என்பதில் சந்தேகம் இல்லை. அவளது மனக்குரல் சொன்னது, “விதைகள்! விதைகள்! சுற்றிப் பார்!”

உங்களால் இருளில் பார்க்க முடிந்தாலும், அவள் செல்வதைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் விரைவாகப் பார்க்க வேண்டும். அவள் இருந்த மரக்கட்டையின் மத்தியில் அவளை நீங்கள் பார்த்திருக்கலாம், பிறகு அதன் ஏதாவது ஒரு முனையில் அவளை நீங்கள் பார்த்திருக்கலாம். அதன் பிறகு, கட்டையின் மற்றொரு முனைக்குச் செல்வதற்கு முன்பாக பல இடங்களில் நின்று நின்று போனதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் அவள் துள்ளிக் குதித்துப் போனாள். சும்மா ஓர் இடத்தில் மறைந்து இன்னோர் இடத்தில் அவள் தோன்றுவது போல உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். உணவுக்கான தன்னுடைய இரவு வேட்டையை அவள் தொடங்கினாள், அங்கு உணவு இல்லாததால் மரக் கட்டையில் இருந்து அவள் தப்பியாக வேண்டும். மரக் கட்டையின் முனைக்கு முதல்முறை அவள் சென்றபோது அவளின் மெல்லிய எடையைத் தாங்கக் கூட அங்கே ஏதும் இல்லை. மெல்லிய, அற்பத்தனமான, நீர் ஊறிய புல் விரிப்பு, இலைகள், மற்றும் சிறிய கிளைகள் மட்டுமே அங்கே இருந்தன. மறுமுனைக்கு அவள் வந்தபோது, அலைகள் அவளின் மரக்கட்டையை ஏதோ ஒன்றின் மீது மோதும்படி செய்தன. அது ஏதோ கனமான பொருள் என உள்ளுணர்வு சொன்னது. அது ஒரு பழைய டயர். அதன் மீது அவள் தாவி ஏறினாள்.

முன்பு போலவே டயரைச் சுற்றியும் துள்ளிக் குதித்தாள். அதன்பிறகு ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பகுதியை மறுபடியும் சுற்றினாள். உடைந்த துடுப்பின் மீது குதித்து ஏறினாள், அங்கிருந்து ஒரு கை உள்ள ஞெகிழி பொம்மை மீதும், அங்கிருந்து மற்றொரு மரக்கட்டையின் மீதும் தாவி ஏறினாள். இந்தப் புதிய மரக்கட்டையின் நீளத்தை ஆராய்ந்தாள், ஒரு காலத்தில் பழைய மேப்பிள் மரத்தின் உச்சியாக இருந்த கிளையை அது தொடுவதைக் கண்டறிந்தாள். வெள்ளைப்பாதம் மீண்டும் தாவி போராடி வெற்றிபெற்று கிளைகள் வழியாகச் சென்றாள். அவள் ஏறும்போது தன்னுடைய வாலினால் அணைத்து, சமநிலை ஏற்படுத்திக்கொண்டாள்.

பழைய மரத்தில் உள்ள மொட்டுக்கள் பெருத்து உடைந்து மலரத் தயாராக இருந்தன. கிளைகளுக்கிடையே தாவும்போது இந்த மொட்டுக்களைச் சிறுகச் சிறுக கொரித்துத் தின்ன இங்கும் அங்குமாக நின்றாள். அப்படித் தாவித்தாவி மரக்கட்டையின் மையப் பகுதிக்கு அருகில் சென்றாள். வலுவான கிளைக்கு வந்தவுடன் அதன்வழியாக தண்டுப்பகுதிக்குச் சென்றாள். இதற்கு முன்னால் இருந்ததைவிட இப்போது தான் பாதுகாப்பாக இருப்பதாகப் புரிந்தது. பெரிய மரம் நீரோட்டத்தின் போக்கில் நகன்றது. பெரிய அலைகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை, சிறிய அலைகள் பாதிக்கவே இல்லை.

நீரில் பாதிக்கு மேல் மூழ்கியிருந்த தண்டின் மீது ஏறிய வெள்ளைப்பாதம் புதிய எல்லைக்குள் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் கவனமாக ஆய்வுசெய்த அதேவேளை உணவு இருக்கிறதா எனவும் தேடினாள். மரத்தின் இடுக்குகளிலும் மரப்பட்டைகளுக்கு அடியிலும் ஆராய்ந்தாள். பெரிய கிளை ஒன்று வெட்டப்பட்டதன் காயம் தண்டில் இருந்தது. மரம் அழுகத் தொடங்கிய இடத்தில் இரண்டு வண்டுகளைப் பார்த்தாள், அவற்றைச் சாப்பிட்டாள். மற்றோர் இடத்தில் விட்டில் பூச்சியின் முட்டைப்புழுக்களைக் கண்டு அதைச் சாப்பிட்டாள். தண்டு வழியாக வேர்வரை முன்னோக்கிச் சென்று அங்கேயும் வேட்டையாடினாள். சாப்பிடுவதற்குத் தேவையான சில பொருட்களைப் பார்த்தாள், ஆனாலும் வயிறு நிறையுமளவுக்கு போதுமான உணவு எங்குமே கிடைக்கவில்லை.

நள்ளிரவு. வாளி நிறைய தார் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் நமக்கு அது. ஆனால் வெள்ளைப்பாதம் உணவு தேடிச் சென்றபோது, அவளின் தொடுகையும், நுகர்தலுமே கண்கள் போல செயல்பட்டன. கண் கொண்டு பார்க்க வேண்டிய அவசியமே அவளுக்கு இல்லை.

வெகுநேரமாக அவள் கேட்ட ஒரே சத்தம், ஆறு ஓடுகிற சத்தமும் நீரில் மழை விழுகிற ஓசையுமே. அதன் பிறகு, தூரத்தில் ஓடும் தண்ணீரின் ரீங்காரம் மெல்ல புறப்பட்டு பெரிய ஓசையாக வளர்ந்தது. மேலும், பிரகாசமாக வளர்ந்த ஓர் ஒளியைக் கண்டாள். தண்ணீர் மற்றும் இருளைப் போலவே, படபடவென்ற சத்தமும் அதிகரித்துக்கொண்டே போனபோது, வெளிச்சத் துகள்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பிரகாசமான ஒளிக்கற்றையாக ஆற்றில் ஒளிர்ந்தது. இரைச்சல் மிக அருகில் மிகவும் சத்தமாக கேட்டது. வெளிச்சம் வெள்ளைப்பாதத்தின் மரக்கட்டையின் மீது விழவும் அவள் மறுபடியும் அசைவற்று, பயத்தில் உறைந்துபோனாள்.

மிக அதிகமான ஓடங்களை ஏற்றிவந்த மீட்புப் படகு மிகவும் சத்தத்துடன் சென்ற பிறகு வெள்ளைப்பாதத்தின் மிதக்கும் தீவு மறுபடியும் இருளில் மூழ்கியது. கடந்து சென்ற படகு உருவாக்கிய அலைகள் மேப்பிள் மரத்தை மேலும் கீழுமாக அசைத்தன. தண்ணீர் சம நிலைக்கு வரும்வரையிலும், மறுபடியும் படகின் எந்திர சத்தம் ரீங்காரமாக மாறும்வரையிலும் பயம் போகும்வரையிலும் வெள்ளைப்பாதம் அப்படியே அசையாமல் இருந்தாள். பிறகு மீண்டும் இரைதேடத் தொடங்கினாள்.

அவள் பசியாக இருந்ததால் இரை தேடுவதைத் தொடர்ந்தாள். நாமாக இருந்தால் முறைப்படி வேட்டையாடியிருப்போம். அப்படியல்லாமல், மரத்தின் பெரிய தண்டில் அங்குலம் அங்குலமாக முன்னேறினாள். அவள் மட்டும் அதைச் செய்து முடித்திருந்தால் அவளுக்குத் தேவையானதெல்லாம் கிடைத்திருக்கும், ஆனால் எளிதாக சிக்கியிருப்பாள். சுற்றிப் பார்க்கவும் கவனமாக இருக்கும்படியாகவும் உள்ளுக்குள் இருந்து குரல் அவளை எச்சரித்துக்கொண்டே இருந்தது. முன்எப்போதும் போலவே, வேகமாகத் துள்ளிக் குதித்தாள், இங்கும் அங்கும் சிறிது நேரம் நின்று சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா என நுகர்ந்து பார்த்தாள், இருப்பினும் எங்குமே அதிக நேரம் நிற்கவில்லை.

இவ்வாறாக, துரிதமாகச் செயல்படுவது போலத் தெரிந்தாலும் போதுமான நேரம் எடுத்து வேர் பகுதியில் இருந்து மீண்டும் மேலே கிளைப் பகுதிக்கு வந்தாள். தண்டுப்பகுதியைப் போலவே மரத்தின் உச்சிப் பாதி மூழ்கி இருந்தது. ஆனாலும் எண்ணற்ற பெரிய கொப்புகள் காற்றில் கலந்து, பூவின் மொட்டுக்களும் இலையின் மொட்டுக்களும் உள்ள சிறு கிளைகளுடன் எங்கும் கிளைபரப்பி இருந்தன. வெள்ளைப்பாதம் இன்னும் கொஞ்சம் மொட்டுக்களைச் சாப்பிட்டாள். அதிகாலை வெளிச்சம் கிழக்கு வானத்தை வெளுப்பாக்கிய போது எல்லாவற்றையும்விட சிறப்பான இரண்டு விசயத்தைக் கண்டாள். ஒன்று, மழையிலும் காற்றிலும் இருந்து நனையாமல் பாதுகாக்கப்பட்ட மரத்தின் கணுவில் இருந்த ஆழமான பொந்து. இரண்டாவது, சிங்கபின்[5] மரக் கொட்டைகள், காட்டு செர்ரி பழங்களின் விதைகள், சோள விதை போன்றவற்றை பறக்கும் அணில்கள் ரகசியமாக சேமித்து வைத்திருந்த மரங்கொத்தியின் பழைய பொந்து. ஒரு வழியாக, வயிறு நிறைய சாப்பிட்டாள், பிறகு இரவு முடியப் போகும்போது மரத்தின் கணுவில் இருந்த பொந்தின் அடி ஆழத்திற்குள் மெல்ல கவனமாக நகர்ந்து சென்றாள். உளுத்துப்போன மரத்தின் மென்மையான காய்ந்த பொடிகளில் தன் படுக்கையைத் தயார் செய்தாள். அவளது வாலின் நுனியை தன் மூக்கிற்குக் கீழே வைத்து, கச்சிதமாக வளைந்து நாள் முழுவதற்குமான உறக்கத்தைத் தொடங்கினாள்.

*

ஆற்றின் மீது இருந்த மூடுபனியை காலை வெயில் ஒளிரச் செய்தபோது, ஒரு ஜோடி காட்டு வாத்துகள் எய்யப்பட்ட அம்புகள் போல் தண்ணீரை இரண்டாகப் பிளந்துகொண்டு வந்திறங்கின. அமைதியாக, கம்பீரமாக, விழிப்புடன் அவை நீந்திச் சென்றன. வெள்ளைப்பாதம் அவற்றைப் பார்க்கவில்லை. சேதமுற்ற படகுகளை இழுத்துக்கொண்டுச் சென்ற படகானது அந்தப் பழைய மரத்தை பலமாக அசைத்த போதும் அவள் விழிக்கவில்லை. மூடுபனியை கண் கூசச் செய்யும் வெள்ளைநிறமாக சூரியன் மாற்றியபோதும், மூடு பனி வழியாக ஒளிர்ந்தபோதும், நீரை மின்னச்செய்த போதும், பிரகாசிக்கச் செய்தபோதும் அவள் பார்க்கவில்லை. பச்சை இறகுடைய காட்டுவாத்து சிறிது நேரம் மரத்தின் தண்டு மீது நடந்து சென்றதையும், ஆண் வாத்தின் பச்சைநிறக் கண்கள் சூரியவெளிச்சத்தில் மின்னியதையும் அவள் பார்க்கவில்லை. கருப்பு வெள்ளை அலகு முக்குளிப்பான்[6] உறுதியாக நங்கூரம் இட்டதுபோல நின்று ஓடுகின்ற நீரில் மீன் பிடித்ததை அவள் பார்க்கவில்லை. ஆற்றின் மேற்புறத்தில் வேகமாக குதிக்கப் போகிற நேரத்தில் அதன் கழுத்து விரைவாக வளைந்ததை அவள் பார்க்கவில்லை. வாயைத் திறந்து, விழுங்குவதற்கு முன்னோக்கிப் பாய்ந்து மீனைக் கவ்விக்கொண்டு மீண்டும் அது தோன்றியதை அவள் பார்க்கவில்லை. நீரோட்டமானது, அவளைச் சுமந்தபடி பாலங்களைக் கொண்ட நகரத்தை எப்போது கடந்தது என்பது அவளுக்குத் தெரியாது.

அவள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவளது கதையில் இன்னுமொரு மாற்றம் நிகழ்ந்தது. உள்ளே வெள்ளைப்பாதம் தூங்கிக்கொண்டிருந்த பழைய மேப்பிள் மரம் தெற்குநோக்கி வெகுதூரம் போய்க்கொண்டிருந்தபோது மதிய வேளையில் கிழக்கில் இருந்து காற்று பலமாக வீசத் தொடங்கியது. மரத்தின் கணுக்களும் அதன் மொட்டுகளும்கூட காற்றில் சிக்கிக்கொண்டன. மிதந்துகொண்டிருந்த தீவானது தற்போது பாய்மர படகுபோல் ஆனது. நீரோட்டத்தில் இருந்து மேற்குத் திசை நோக்கி காற்று மெல்ல நகர்த்தியது, பிறகு ஆற்றில் இருந்தும் நகர்த்தி தாழ்வான பகுதிக்குள் இருந்த கழிமுகத்திற்குள் கொண்டு சென்றது.

இரவில் வெள்ளைப்பாதம் விழித்தபோது ஆறு பாயும் சத்தத்தை அவள் கேட்கவில்லை. மாறாக, மரத்தின் வெறுமையான கிளைகளுக்குள் காற்று கடந்துபோகும் சத்தத்தை மட்டுமே கேட்டாள். அலையோடு மிதந்து சென்றுகொண்டிருந்த தெப்பம் தற்போது மிகவும் சிறியதாகி, தனித்தனி கூட்டமானது. அதை, மரங்கள் அடர்ந்த பகுதியில் புதரின் ஓரத்திற்கு காற்று தள்ளியது. பழைய மேப்பிள் மரம் அங்கே கரை ஒதுங்கியது. வெள்ளைப்பாதத்தின் பயணம் முடிவுக்கு வந்தது, இதற்கு மேல் அவளது மரம் போகாது. ஆனால், இந்தக் கதை இன்னும் முடியவில்லை, ஏனென்றால், மரம் இன்னும் மணல் திட்டுடன் ஒட்டிக்கிடந்தது. அதுவரை அவள் இருந்த தீவிற்கு எந்த விதத்திலும் இது குறைந்தது இல்லை. இதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது. காற்று மோதியதால் பல ஏக்கரில் இருந்த நீரில் சிற்றலைகள் உருவாகின, அவை வளரும் நிலவொளியால் மின்னின.

*

அந்த இரவில், முன்பு போலவே, வேர்களுக்கு மத்தியிலும், மரத்தின் தண்டு பக்கத்திலும், அலையும் மரத்தின் கிளைகளுக்கு நடுவிலும் அவள் உணவு தேடினாள். சாப்பிட்டாள். ஒவ்வொரு மணிநேரமும் தான் வாழ்வதற்கான வாய்ப்புக்களைத் தேடினாள். விடிந்ததும் தூங்குவதற்காக மரக் கணுவில் இருந்த பொந்திற்குள் மறுபடியும் சென்றாள்.

அடுத்த நாள் இரவும் அதற்கடுத்த நாள் இரவும் அப்படியே செய்தாள். ஆனால் நான்காம் நாள் இரவு கொடூரமான நிழல் வெள்ளைப்பாதத்திற்கும் நிலவுக்கும் இடையே விழுந்தது. “விழிப்பாக இரு!” என மனக்குரல் சொன்னது. உண்மையில் சரியான நேரத்தில் உள்ளே போய்விட்டாள் ஆனாலும் ஆந்தையின் குதிகால் நகங்களுள் ஒன்று அவளைத் தாக்கி மரத்தின் தண்டிலிருந்து இழுத்து தண்ணீருக்குள் போட்டது. வெகுநேரம் கழித்து மீண்டும் மரத்தின் மேல் ஏறுவதற்கு முன்பாக, கம்பளம் போன்று மிதந்துகொண்டிருந்த கம்புகளையும் இலைகளையும் பற்றிப்பிடித்து தடுமாறி அவள் நீச்சலடிக்க வேண்டியிருந்தது. பொழுது புலர்ந்தது, அவள் மீண்டும் தூங்கச் சென்றாள்.

அன்றைய நாளில் வெள்ளம் வடியத் தொடங்கியது. பழைய மரம் இடம் மாறியது, அதிர்ந்தது, அடியில் உள்ள மூட்டுக்கள் உடைய தரை தட்டி நின்றது. மரத்திற்கு கீழே உள்ள தண்ணீர் வற்றுவதற்கு பல இரவுகள் கடந்தாக வேண்டும். வேட்டையாடவும் தேடவும் வெள்ளைப்பாதம் மிகவும் ஆர்வமாக இருந்தாள் ஏனென்றால் அவளுக்குப் போதுமான உணவு இல்லை. இரவு முடியப் போகும் நேரத்தில் அவள் தூங்கப் போகும்போது பசியோடு இருந்தாள். மழை பெய்து மறுபடியும் சுத்தப்படுத்தியது, ஊர்களில் இருந்து தண்ணீர் வருவது மீண்டும் தொடர்ந்தது.

கடைசியில் முழுமையாக மரம் நிலத்தில் தங்கியதை வெள்ளைப்பாதம் அறிந்தாள். அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாலும் மிதக்கின்ற உணர்வானது அவளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பியது. மரக் கணுவின் பொந்தில் இருந்து அவள் வெளியே வந்தாள், இன்னும் முழுமையாக இருட்டவில்லை என்றாலும், சுற்றிலும் பார்த்தாள்.

பழைய மேப்பிள் மரத்தின் அடித்தண்டானது அதனுடைய வேர்களாலும் கிளைகளாலும் பிடித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்ப்பதற்கு கால்களால் நிற்பது போல் இருந்தது. அதனடியில் இன்னும் தண்ணீர் கொஞ்சம் தேங்கிக் கிடந்தது. தண்ணீரின் விளிம்புவரை கொண்டுசெல்லும் ஒரு கிளையைக் கடைசியாக வெள்ளைப்பாதம் கண்டாள், பிறகு அதைப் பின்பற்றி நீர் உலகை விட்டு வெளியேறினாள்.

அந்த இடங்களில் ஈரம் காய்வதற்கும் பழக்கமாவதற்கும் நாட்கள் எடுத்தது. ஆனாலும் அவள் ஏற்கெனவே நம்பிக்கையுடன் இருந்தாள். சேறு நிறைந்த பகுதியில் முதலில் தடம் பதித்து, காட்டின் ஓரத்தில் சேற்றுக்குள் வளைந்திருந்த புற்களுக்கு அடியில் ஈரக்கசிவான இடத்திற்குச் சென்றாள். அதன்பிறகு வெளியே வந்தாள். சுற்றிலும் பார்த்தாள். மீண்டும் காணாமல் போனாள். அவளின் மனக்குரல் அவளின் தேவைகள் குறித்து சொல்லிக்கொண்டிருந்தது. அவளுக்கு உணவு தேவைப்பட்டது. கூடடைவதற்கு சரியான ஓர் இடம் தேவைப்பட்டது.

உலகத்தின் மையத்தில், சேறும் சகதியுமான காட்டில், நிலவொளி இரவின் நிழல்களுக்கு மத்தியில் தான் உயிர் வாழ்வதற்காக அவள் இன்னும் முடிக்காமல் இருக்கும் வேலையைச் செய்வதற்குச் சென்றாள்.


அமெரிக்கரான வெண்டல் பெர்ரி 1934, ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிறந்தார். புதினம், கவிதை, கட்டுரை எழுதுகிறவராக அறியப்பட்டுள்ள இவர் ஒரு விவசாயி, மேலும், சுற்றுச்சூழல் களச்செயற்பாட்டாளர். வாழும் காலத்திலேயே Kentucky Writers Hall of Fame அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் எழுத்தாளர் இவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் இயக்கத்தின் முக்கிய ஏடாக விளங்குகிற The unsettling of America: Culture and Agriculture (1977) என்கிற இவரின் புத்தகம் நாகரீகத்தின், இயந்திர வாழ்வின் தோல்வியை பகுப்பாய்வு செய்கிறது. எண்ணற்ற பங்களிப்பு செய்து பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். National Books Critics Circle 2016-ஆம் ஆண்டு ‘இவான் சான்ராஃப் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி வெண்டல் பெர்ரியை பாராட்டியது.

தமிழில்: சூ..ஜெயசீலன்

குறிப்புகள்:

[1] Peromyscus leucopus

[2] Mayonnaise

[3] Bracket fungus

[4] Wood duck

[5] Chinquapin

[6] Pied-billed grebe

3 COMMENTS

  1. திகில்… திருப்பம்… வேகம்… விவேகம்…
    எலியாக அல்ல… மழையால் பாதிக்கப்பட்ட நம்மில் ஒருவராக நிகழ்வு விரிகிறது.
    கனமழை இது போன்ற சின்ன விலங்குகளுக்கு ஏற்படுத்தும் வாழ்வு போராடத்தை புரிய வைத்த ஆசிரியருக்கு… மொழி பெயர்ப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. நீண்ட நாளின் பின் புதிய தோற்றத்தில் அதிக திருப்புமுனையுடன் கூடிய வெள்ளைப்பாதம் , அருமை சிறந்த மொழிபெயர்ப்பு நல்வாழ்த்துகள்

  3. இதை முழுவதும் படித்தேன் …
    இது கண்டிப்பாக ஒரு எலியின் கதை மட்டுமே அல்ல என்பதை மட்டும் என்னால் கூறமுடியும் …
    1. இது குரலற்றவர்களின் குரலை
    2. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை
    3. அடிமைகளின் குரலை

    அழகாக பதிவு செய்துள்ளது …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.