2021க்கான சுற்றுச்சூழல் நீதி அறிக்கை என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?: நித்யானந்த் ஜெயராமன்

சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன், தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க பின்வரும் அறிக்கையைத் தயாரித்துள்ளார். ‘தி வயர் சயின்ஸ்’ இணைய இதழில் வெளியான அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது.

அரசியல் தத்துவம்: சுற்றுச்சூழல் நீடித்ததன்மை + சமூக நீதி + தலைமுறைகளிடையே சமத்துவம்

“வளர்ச்சி”யின் சுற்றுச்சூழல், சுகாதார விளைவுகளான சுற்றுச்சூழல் சீரழிவுகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் சுமை ஏழைகள், விளிம்புநிலை மக்கள், மற்ற உயிரினங்கள், வருங்காலத் தலைமுறையினர் மீதான பெருஞ்சுமையாக ஆகிவிடாமல் தடுப்பதை இந்தக் கொள்கை உறுதி செய்யும். மாறாக, இந்தக் கொள்கை சார்ந்த எல்லா இடையீடுகளும் வாழ்க்கைத் தரத்தைக் கண்கூடாக மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும். வளர்ச்சி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்குச் சமூக அளவிலும் நிதி சார்ந்தும் கொடுக்க வேண்டிய விலையை அதைத் தாங்கக்கூடிய வசதிபடைத்த பிரிவினர் ஏற்றுக்கொள்வார்கள். இதன் பயன்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து தொடங்கி மேலே செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

சுற்றுச்சூழல் ஆளுகையின் நெறிமுறைகள்

பணிகளும் வாழ்வாதாரங்களும்: புதிய பணிகளை உருவாக்குதல் என்பது மரபான இயற்கை வளம் சார்ந்த வாழ்வாதாரங்களை நீக்குவதாகவோ சீரழிப்பதாகவோ இருக்காது. புதிதாக உருவாக்கப்படும் பணிவாய்ப்புகள் ஏற்கெனவே இருக்கும் வாழ்வாதாரங்களுக்கு துணையாகவும் குறிப்பிட சமூகப் பிரிவினரை வறுமைக்குள் தள்ளாமல் அனைவருடைய வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துபவையாகவும் இருக்கும்

வளங்குன்றா வாழ்வாதாரங்கள்: வேளாண்மை, மீன்பிடித் தொழில் உள்ளிட்ட இயற்கை சார்ந்த வாழ்வாதாரங்களிலும் அவற்றின் மதிப்புக்கூட்டல் நடவடிக்கைகளிலும் முதலீடு (பணம், பயிற்சி, உள்கட்டமைப்பு, சந்தை வளர்ச்சி) செய்யப்படும். புதிய ஆரோக்கியமான வாழ்வாதாரங்களை உருவாக்குதல், இந்தத் துறைகளுக்கு அதிக நபர்களை ஈர்த்து வாழ்வாதாரங்களின் தரத்தை மேம்படுத்துதல், வளங்குன்றா நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தத் துறைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைத்தல் ஆகியவையே இதன் நோக்கம்.

வெளிப்படையான, அறிவியல்ரீதியான, பங்கேற்பு ஜனநாயக முறையிலான முடிவெடுத்தல் நடைமுறை: பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு அவர்கள் பங்கேற்புக்கு வழிவகுக்கப்படுவதோடு, முடிவெடுத்தல் நடைமுறைகள் அறிவியல்ரீதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் அமைப்புகளிடமிருந்தும் சமூகங்களிடமிருந்தும் பெறப்பட்ட மரபான நிபுணத்துவம் உள்ளிட்ட நிபுணத்துவங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் திறன் வளர்ப்பும் பொதுமக்களுக்கு பதில் கூறும் பொறுப்பும்: சுற்றுச்சூழல் மீது தாக்கம் செலுத்தக்கூடிய உள்ளாட்சி அமைப்புகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், வனத்துறை முதலானவற்றில் பணிபுரியும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு அதிகாரிகள் திறன், சுயசார்பு, பதில்கூறும் பொறுப்பு ஆகியவற்றில் பின் தங்கியுள்ளனர். அவர்களின் திறன்களை வளர்க்கவும் பதில்கூறும் பொறுப்புக்கான ஏற்பாடுகளை வளர்த்தெடுக்கவும் முதலீடுகள் செய்யப்படும்.

காலநிலையைத் தாக்குப்பிடித்தல்

செயல்பாடுகளும் வளர்ச்சித் திட்டங்களும் காலநிலையால் விளையும் அதீத வானிலை மாற்றங்களை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பதற்கான உள்ளூர் சமூகங்களின் இயற்கையான திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருப்பது உறுதிசெய்யப்படும். இதன் மூலம், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் காலநிலையால் நிச்சயமற்றதாக ஆகியிருக்கும் எதிர்காலத்தின் மாறிய யதார்த்தங்களைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்.

முடிவெடுத்தலில் அனைத்துக் கொள்கைகளிலும் சுகாதாரத்தின் முக்கியத்துவம்: அனைத்துக் கொள்கைகளும் ஒவ்வொரு நிலப் பகுதியும் தொழில்துறையும் அரசின் அதிகார மட்டமும் சுகாதாரப் பார்வையில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படும். “பொதுமக்களின் சுகாதாரத்தையும் சுகாதார சமத்துவத்தையும் மேம்படுத்தக் கொள்கை முடிவுகளின் சுகாதாரத் தாக்கங்களை கவனத்தில் கொண்டு கூட்டு விளைவுகளை நாடுவதும் கேடான சுகாதாரத் தாக்கங்களை தவிர்ப்பதுமான அணுகுமுறை பொதுக் கொள்கை வகுப்பில் அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட வேண்டும்” என்று உலக சுகாதார மையம் வரையறுத்துள்ளது.

வருங்காலத்தில் அக்கறை கொண்ட தொழில்துறை வளர்ச்சி: இருக்கும் வாழ்வாதாரங்களுக்கு இடையூறு செய்யாத, சுற்றுச்சூழலை பாதிக்காத, மற்ற உயிரினங்கள், வருங்காலத் தலைமுறையினரின் உரிமைகளில் சமரசம் செய்துகொள்ளாத, சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் அக்கறைமிக்க தொழில்மயமாக்கத்தில் இந்தியாவுக்குத் தமிழகம் முன்னோடியாக இருக்கும்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு அப்பால் (MoEFCC Plus): வணிகத்துக்கு இசைவான சூழலை உருவாக்குகிறோம் என்னும் பெயரால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப்போகச் செய்கிறது. தமிழகத்தில் சட்டப்படியான தொழில்களுக்குத் ஏதுவான சூழல் உருவாக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலான விதிமுறைகள் மாநில அளவில் அமல்படுத்தப்படும்.

அறிக்கை

1. எண்ணூர்-மணலி தொழில் மண்டலம்

பின்னணி: வட சென்னையில் மணலியிலிருந்து எண்ணூர்வரை நீளும் இந்தப் பகுதி தமிழகத்தில் நச்சுவாய்ந்த தொழிற்சாலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் பகுதி. 34 பெரிய ‘சிவப்பு வகைமை’ தொழிற்சாலைகள், நகரின் மிகப் பெரிய குப்பை சேகரிப்புக் கிடங்கு, மூன்று நிலக்கரி-நெருப்பூட்டப்பட்ட மின் நிலையங்கள், நிலக்கரிக் கிடங்குகள், நிலக்கரி-சாம்பல் குவியல் பகுதிகள், மூன்று துறைமுகங்கள் ஆகியவை மக்கள் நெருக்கடி மிக்க தொழிலாளி வர்க்கத்தினர் நிரம்பிய இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றன.

மணலி, கொடுங்கையூர், சின்ன சேக்காடு, அத்திப்பட்டு, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் விகிதம் பொதுவான சராசரியைவிட அதிகம் என்னும் உண்மை தொழில்மயமாக்கலில் கடைபிடிக்கப்படும் பாரபட்சத்தை அடையாளம் காட்டுகிறது. சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு என்னும் அமைப்பு ஆறு பெரும் தொழிலகங்களில் அவற்றின் புகைப்போக்கி அடுக்கிலிருந்து வெளியேறிய உமிழ்வுகள் குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது அவற்றில் ஒரு தொழிலகம்கூடக் காற்று உமிழ்வு விதிகளைப் பின்பற்றவில்லை என்று தெரியவந்தது; போபால் விஷவாயுக் கசிவுக்குக் காரணமான வாயுவைப் போன்ற எந்நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய அபாயகரமான வாயுக்கள் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட சமயங்களில் கண்காணிக்கப்படுவதில்லை என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரியவந்தது.

அறிவிப்புகள்

* எண்ணூர்-மணலி பகுதியில் புதிய தொழிலகங்கள் கிடையாது.

* காற்று, நீர் ஆகியவற்றின் தரம், சுகாதாரம் ஆகியவற்றை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட செயல்திட்டம்.

* சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் தொழிலகங்கள் மீது கடுமையான நடவடிக்கை.

* தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரிய ஊழியர் எண்ணிக்கையை அதிகரித்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்தல், வாரியத்தைப் பதில் கூறும் பொறுப்பேற்க வைப்பதற்கான நடைமுறைகளை ஏற்படுத்துதல்.

2. எண்ணூர்-பழவேற்காடு காலநிலைச் சரணாலயம்

பின்னணி: கிழக்கே காட்டுப்பள்ளித் தீவோடு சேர்ந்து எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலங்கள், கடல்மட்ட உயர்வு, உப்புத்தன்மை ஊடுருவல், அலைகள் அதிகரிப்பு, வெள்ளம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு எதிரான இயற்கையான பாதுகாப்பாக அமைந்துள்ளன. தொழிலக ஆக்கிரமிப்பாளர்களால் 1,500 ஏக்கருக்கு மேற்பட்ட சதுப்பு நிலங்கள் பறிபோயுள்ளன. ஈர நிலங்களுக்குள் ஞெகிழி, இரசாயனத் தொழிலகங்களை உள்ளடக்குவதற்காகக் கூடுதலாக 2,000 ஏக்கர்களைத் தாரைவார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நிலக்கரிச் சாம்பலால் ஆயிரம் ஏக்கர் நிலம் சீரழிந்துள்ளது.

சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை எண்ணூர் சிற்றோடையை மறுசீரமைக்கப் போதிய இலக்கற்ற திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று எண்ணூர் சிற்றோடையின் பெரும்பகுதி சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஆதிக்க வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

அறிவிப்புகள்

* எண்ணூர் சிற்றோடையை மீட்பதற்கான சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட முன்மொழிவு எண்ணூர் சதுப்பு நிலப் பகுதிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதையும் சதுப்பு நிலங்களில் மேலும் ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

* சதுப்பு நிலங்களின் ஒட்டுமொத்த எல்லைகள் குறிக்கப்பட்டு விரிவான உள்ளூர் சமூகங்களுடன் சேர்ந்து விரிவான மீட்புத் திட்டம் உருவாக்கப்படும்.

* சதுப்பு நிலங்களும் காட்டுப்பள்ளி தீவுகளும் மறுசீரமைக்கப்பட்டு அது இந்தியாவின் முதல் காலநிலைச் சரணாலயம் என்று அடையாளப்படுத்தப்படும். இந்தச் சரணாலயத்தில் கைவினைஞர் மீன்பிடிப்பு, வேளாண்மை, தோட்டக்கலை, சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத சுற்றுலா ஆகிய மதிப்புக் கூட்டுச் செயல்பாடுகளின் வழியே வளர்ச்சிக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்தகு நடவடிக்கை காலநிலை அதிர்வுகளைத் தாக்குப்பிடிப்பதற்கான இயற்கையான உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு எண்ணூர்-பழவேற்காடு பகுதியில் வாழும் 10,000 மீனவ, விவசாய குடும்பங்களைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்

3. தூத்துக்குடியில் நீண்டகாலமாகத் தொடரும் ஸ்டெர்லைட் பிரச்சினை

* தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான முடிவு எடுக்கப்படும்.

* ஸ்டெர்லைட்டின் சட்ட விரோத கழிவுக் குவியலால் மாசடைந்துள்ள பகுதிகள் ஒரு வரைபடமாக இணைக்கப்பட்டு மாசு விளைவித்தவரின் செலவில் சுத்திகரிக்கப்படும்.

* நீர் சட்டம், காற்று சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழான குற்றங்களுக்காக வேதாந்தா நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவான உடல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுச் சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

* அந்தப் பகுதியில் இயங்கும் தொழிலகங்கள், அனல் மின்நிலையங்கள் சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தையும் பின்பற்றிச் செயல்படுகின்றனவா என்று கண்காணிக்கப்படும். சட்டங்களை மீறும் நிறுவனங்கள் மீது தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுச் சட்டங்கள் பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்படும்.

4. காட்டுப்பள்ளியின் அதானி துறைமுக விரிவாக்கம் கூடாது

பின்னணி: அதானி துறைமுக நிறுவனம் 2,000 ஏக்கர் கடலிலிருந்தும் கூடுதலாக 1,500 ஏக்கர் கடற்கரைச் சதுப்பு நிலங்களையும் எடுத்துக்கொள்ள முயன்றுவருகிறது. இது காட்டுப்பள்ளி தீவின் வடக்கே அரிப்புக்கு வித்திடும். அதன் மூலம் பழவேற்காடு உப்பங்கழி வங்காள விரிகுடாவுடன் இணைக்கப்பட்டுவிடும்

அறிவிப்புகள்

* அதானி துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கப்படாது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

5. மீனவர்களுக்கான நீண்டகால குடியிருப்புத் திட்டங்கள்

பின்னணி: கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை 2011இன்படி அனைத்து மாநில அரசுகளும் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மீனவர்களுக்கான நீண்டகாலக் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால் இது இன்னும் நடைபெறவில்லை என்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அறிவிப்புகள்

* நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கடல்மட்ட உயர்வைக் கணக்கிலெடுத்து, கிராமங்கள் ஒவ்வொன்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகக் கடற்கரைப் பகுதி நெடுகிலும் மீனவர்களுக்கான நீண்டகாலக் குடியிருப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

6. வேடந்தாங்கல் வனவிலங்கு சரணாலயம்

பின்னணி: மார்ச் 2020இல் வேடந்தாங்கல் வனவிலங்குச் சரணாலயத்தின் முக்கியமான பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதி என்னும் வரையறைக்குள்ளிருந்து நீக்கி அங்கு வணிகச் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிப்பதற்கான முன்மொழிவை அரசு வெளியிட்டது

அறிவிப்புகள்

* வேடந்தாங்கல் வனவிலங்குச் சரணாலயத்தின் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லாமல் ஆக்குவதற்கான முன்மொழிவு திரும்பப்பெறப்படும்.

* நியாயமான நில-பயன்பாடு இடையீடுகள் மூலம் சரணாலயத்தை நல்ல முறையில் நிர்வகிப்பதற்கான வனவிலங்கு செயல்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாய-சதுப்பு நிலக் கூட்டமைவைப் பேணுவதிலும் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத சுற்றுலா ஆகியவற்றை வளர்த்தெடுப்பதன் மூலம் உள்ளூர்ப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

7. கொடைக்கானல் பாதரச மாசு நீக்கம்

பின்னணி: இந்துஸ்தான் யூனிலிவரின் பாதரச மாசுமிக்க பகுதி கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயத்தின் பாம்பர் ஷோலா காடுகளின் உச்சியில் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் மீன்பிடிப் பகுதிக்குள் இந்தக் காடுகள் அமைந்துள்ளன கொடைக்கானல் வனவிலங்குச் சரணாலயத்தைப் பாதுகாப்பதற்கும் முறையாகச் சுத்தப்படுத்தப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் பாதரசக் கசிவால் கீழோடைப் பகுதிகள் பதிக்கப்படாமல் இருப்பது உறுதிசெய்வதற்கும் உலகத் தரமான மாசு நீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

யூனிலிவர் நிறுவனத்தார், கொடைக்கானலில் தங்களது பாதரச மாசுகொண்ட தொழிற்சாலைப் பகுதியில் தரமற்ற சீராக்கப் (மாசுநீக்க) பணியை மேற்கொள்ள மாநில, மத்திய அரசுகள் அனுமதித்துவிட்டன. யூனிலிவரின் தலைமையகம் அமைந்துள்ள பிரிட்டனில் அனுமதிக்கப்படுவதைவிட 20 மடங்கு குறைவான கடுமை கொண்ட மண் சீராக்கத் தரநிலைகள் இங்கு அனுமதிக்கப்பட்டன. இரட்டை நிலையும் சுற்றுச்சூழல் பாகுபாட்டுணர்வுமே இதன் மூலம் வெளிப்படுகின்றன. உண்மையான சீராக்கப் பணி இன்னும் தொடங்கவில்லை.

அறிவிப்பு

* யூனிலிவரின் பாதரச மாசுகொண்ட தொழிற்சாலைப் பகுதிக்கான சீராக்கத் தரநிலைகள் அறிவியல் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு சர்வதேச தரநிலைகளுக்கும் சிறந்த நடைமுறைகளுக்கும் இணையானவையாக ஆக்கப்படும்.

8. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020

அறிவிப்புகள்:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 அதன் தற்போதைய வடிவிலேயே சட்டமாக நிறைவேறினால், பின்வரும் விஷயங்களை உறுதி செய்ய மாநில அளவில் சட்டங்கள் அமல்படுத்தப்படும்:

அ) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006இல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுச்சூழலிலும் வாழ்வாதாரங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய திட்டங்களும் அதைப் போன்ற மற்ற திட்டங்களும் கடுமையான சு.தா.ம செயல்முறைக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கும் உட்படுத்தப்படும்

ஆ) அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியால் நியமிக்கப்படும் சுயாதீனமான மூன்றாம்-தரப்பு ஆலோசகர்களே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பார்கள். திட்டத்தின் உரிமையாளர்களால் நியமிக்கப்படுபவர்கள் அல்ல.

இ) உரிய மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகே ஒரு திட்டம் ‘உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று வகைப்படுத்தப்படும். இப்படி வகைப்படுத்தப்பட்ட திட்டங்களும்கூடப் பொதுக் கருத்துக்கேட்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்; பொதுக் கருத்துக்கேட்பில் பகிரப்படும் தகவல்களின் முக்கியத்துவமும் விட்டுக்கொடுக்கப்படாது.

ஈ) ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் வசிக்கும் மக்கள், திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தினர் ஆகியோரின் நலன்களை மனதில் கொண்டு ஆலோசனை, முடிவெடுத்தல் ஆகியவற்றுக்கு உரிய நேரம் ஒதுக்கி, நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகள் நடத்திமுடிக்கப்படும்.

உ) தமிழ்நாட்டில் அட்டவணைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான சுகாதார தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளின் உள்ளார்ந்த பகுதியாக ஆக்கப்படும்.

ஊ) திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்துக்கும் அதன் விளைவான கடுமையான வானிலை பாதிப்புகளுக்கும் உள்ளூர் மக்களை மேலும் எளிதான இலக்கு ஆக்கிவிடாமல் அவற்றை எதிர்கொள்வதற்கான அவர்களின் வலிமையை அதிகரிப்பதாக இருக்கும்.

எ.) இந்த விவகாரம் தொடர்பாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு விதியும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக விளம்பரப்படுத்தப்படும்.

9. கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011 மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டலத் திட்டம்

பின்னணி: தமிழக அரசு, கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2018இல் கூறியுள்ளபடி கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கத் தவறிவிட்டது. உருவாக்கப்பட்டுள்ள திட்டம், மேற்படி அறிவிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு ஏற்ப அமையவில்லை. அது மீனவ மக்களின் நலன்களை விட்டுக்கொடுப்பதோடு கடற்கரைப் பகுதிகளில் வாழும் சமூகங்களை இயற்கைப் பேரிடர்களுக்கு எளிதாக ஆளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அறிவிக்கையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிவிப்புகள்

மீனவ மக்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களின் நலன்கள் சட்டப்படியான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் உருவாக்கப்படுவதன் மூலம் பாதுக்கப்படும். குறிப்பாகப் பின்வரும் விஷயங்களை அந்தத் திட்டம் உள்ளடக்கியிருக்கும்:

அ.) க.ஒ.ம 2011இன்படி மீனவ மக்களுக்கு கடற்கரைப் பகுதிக்கு உள்ளேயே நீண்டகால வீடுகளுக்கான திட்டம்.

ஆ.) கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011இன்படி கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 1991இன் கீழ் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அசலான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்டங்களைக் கண்டறிதல்.

இ.) கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2011இன்படி கடற்கரையில் பொதுப் பயன்பாட்டுக்கான கூடங்களையும் மரபு மற்றும் பழக்கவழக்கங்களுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பகுதிகளையும் கண்டறிந்து வரைபடம் தயாரித்தல்.

ஈ.) மாவட்ட அளவிலான கடற்கரை மண்டல நிர்வாகக் குழுக்களின் மீனவர் பிரதிநிதிகளை உள்ளடக்குதல்.

உ.) முக்கியமான மீன்பிடி மண்டலங்களின் வரைபடத்தை உருவாக்கி அந்தப் பகுதிகளில் மீனவர் வாழ்வாதாரத்துக்குப் பாதுகாப்பை நீட்டித்தல்.

10. அடிப்படைத் தகவல்கள்

பின்னணி: வலுவான அடிப்படைத் தகவல்கள் அறிவியல் அடிப்படையிலான முடிவெடுத்தலுக்கு அத்தியாவசியம்.

அறிவிப்புகள்

தரவுகள் கிடைக்காத இடங்களில் அவற்றைப் பெறுவதற்கான புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதிகாரப்பூர்வ வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தரவுகள் ஒன்றுதிரட்டப்பட்டும். இவற்றை வைத்துப் பின்வரும் அடிப்படை தரவு தொகுப்புகள் தயாரிக்கப்படும்.

* கரிம உமிழ்வு மூலங்கள், அந்த மூலங்களினால் வெளியிடப்படும் உமிழ்வின் அளவு

* சுற்றுச்சுழல் ரீதியான அழுத்தத்துக்குள்ளான பகுதிகள், மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மோசமான சுகாதார உள்கட்டமப்பு கொண்ட பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத் தொகுப்பு உருவாக்கப்படும்.

* இயற்கையான கரிமத் தொட்டிகள்: வகைரீதியான தாவரப் பரப்புகளின் வரைபடம் (புல்நிலம், சதுப்பு நிலக் காடுகள், கடற்புல், இயற்கைக் காடுகள், தோட்டங்கள், புதர்கள், மற்றும் பல).

* சதுப்பு நிலங்கள், கழிவுநீர்க் கால்வாய்கள்

* நிலத்தடி நீர் வரைபடம்

* தொழிலகப் பகுதிகள், பெரும் நிலத் திரட்டுகளின் பகுதியாக உள்ள நிலங்களின் வரைபடம்.

* சூரிய சக்தி கலன்கள் அமைப்பதற்காக (பொதுமக்களுடன் கலந்தாலோசித்து) பயன்பபடுத்தப்படாத, பயன்படாத நிலங்களின் வரைபடத் தொகுப்பை உருவாக்குதல்.

11. உயிரினப்பன்மை அடிப்படைத் தரவுகள்

பின்னணி: உயிரியல் பன்மைச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகள் அந்தப் பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகளை ஆவணப்படுத்தும் உள்ளூர் மக்களின் உயிரினப்பன்மைப் பதிவேட்டை உருவாக்க வேண்டும். மரபார்ந்த பயிர்வகைகள், கால்நடைகள், வீட்டு வளர்ப்புப் பிராணிகள் ஆகியவையும் அந்தப் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது போன்ற பதிவேடுகள் பங்கேற்புச் செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். 13,000 உள்ளாட்சிப் பகுதிகளில் இந்தப் பதிவேடு தயாராகிவிட்டதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

அறிவிப்புகள்

* பஞ்சாயத்து அல்லது உள்ளாட்சி அமைப்பு மட்டத்தில் உயிரினப்பன்மை மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் மக்களின் உயிரினப்பன்மைப் பதிவேடுகள் மக்களாலேயே தயாரிக்கப்படும்.

12. ஆற்றல், காலநிலை மாற்றம்

அ) காலநிலை மாற்றம்

* தேசிய அளவில் இருக்கக்கூடிய தலைசிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய பல்-துறை செயற்படை உருவாக்கப்பட்டு உள்ளூர் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று நிலத்தோற்ற அளவில் ‘ஐந்திணை’ காலநிலை தகவமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். புத்திசாலித்தனமான நிலப் பயன்பாடு, பொருளியல் செயல்பாடுகளை மாற்றி வடிவமைத்தல் ஆகியவற்றின் மூலம் மக்களின் தாக்குபிடிக்கும் திறனை வளர்த்தெடுப்பதே இதன் நோக்கம்.

(குறிப்பு: குறிஞ்சி (மலைப் பகுதிகள்), முல்லை (காடும் செடிகொடுகளும் நிறைந்த பகுதிகள்), மருதம் (விவசாய நிலங்கள்/சமவெளிகள்), நெய்தல் (கடற்கரைப் பகுதிகள்), பாலை (வெப்பத்தால் வறண்ட நிலம்) ஆகிய ஐந்து நிலத்தோற்றங்களின் பின்புலத்தில் மனித உணர்வுகளையும் நடத்தையையும் தொகுக்கும் தமிழ் இலக்கிய மரபின் ஒரு பகுதியே ‘ஐந்திணை’).

* சுற்றுச்சூழல் மாசை ஒழுங்குபடுத்துவதற்கும் காலநிலையால் விளைவிக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்குமான சுகாதார அடிப்படையிலான சட்டகத்தை அளிக்கும் வகையில் தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939இல் உரிய திருத்தங்களும் மேம்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டும்.

ஆ) காற்றின் தரம்

* காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் அதன் சுகாதாரத் தாக்கத்தையும் கட்டுப்படுத்த குவிமையப்படுத்தப்பட்ட நகர அளவிலான செயல்திட்டத்துடன் தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் சென்னை கொண்டுவரப்படும்.

* தூய்மையான காற்றுக்கான செயல் திட்டங்கள் முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். மாநிலத்தில் மாசுபாடு மண்டலங்களில் காற்றின் தரம் படிப்படியாக மேம்படுத்தப்படும். குடிமக்கள் குழுக்கள், தனி நபர்கள் ஆகியோருடன் கூட்டணி அமைத்து மலிவு விலை காற்றுத் தர கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் குறிப்பிட்ட உள்ளூர்ப் பகுதிகளுக்கான தரவுகள் பெறப்படும்.

* சுகாதார அதிகாரிகளையும் சுகாதார அதிகாரப் படிநிலையையும் முடிவெடுத்தல், ஒழுங்காற்றுதல் ஆகியவற்றுக்கான கூடுதல் அதிகாரங்களுடன் வலுவூட்டும் வகையில் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்திலும் தனித்த மாநகராட்சி சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

பொதுப் போக்குவரத்து

* முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களில் ‘சாதாரண பேருந்துகளின் (புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கக்கூடிய மின் வாகனங்கள்) எண்ணிக்கையும் இயங்கும் நேரமும் அதிகரிக்கப்படும்.

* பயணக் கட்டணம் குறைக்கப்படும்.

இ) வெப்பச் செயல் திட்டங்கள்

பின்னணி: பல நகரங்கள்/மாநிலங்கள், உழைக்கும் மக்களையும் குறைவான வருமானம் கொண்ட மக்கள் பிரிவினரையும் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன.

அறிவிப்பு

* வெப்ப அழுத்தமும் ஈரப்பதமும் தமிழ்நாட்டில் மிக அதிகம் என்பதையும் அது உழைக்கும் மக்கள், குறைவான ஊதியம் பெறும் பிரிவினர் ஆகியோரையே மிக அதிகமாக பாதிக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு மாவட்ட அதிகாரிகளும் உள்ளாட்சி அமைப்புகளும் நடைமுறைப்படுத்தத்தக்க வெப்பச் செயல் திட்டங்கள் உருவாக்கப்படும், அந்தத் திட்டங்கள், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, குடிநீர் ஏற்பாடுகள், வீடற்றவர்களுக்குத் தேவையான வசதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் ஒவ்வொரு வார்டிலும் தாவரப் பரப்பு, “நகர்ப்புறச் சோலைகள்” ஆகியவற்றை அமைப்பதற்கான முன்கூட்டிய எதிர்வினை நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஈ) சூரிய சக்தி, காற்று சக்தி

பின்னணி: ராமநாதபுரத்தின் கமுதியில் உள்ள 648 மெகாவாட் அதானி பசுமைத் திட்டத்தைப் போல் பெரும் பயன்பாட்டு அளவிலான சூரிய சக்தித் திட்டங்கள், கொடும் வறுமையில் வாடும் மக்கள் தமது ஆடு மாடுகளை மேயவிடுவதற்காகப் பயன்படுத்தும் மிகப்பெரும் நிலப் பகுதிகளை (2,500 ஏக்கர்களுக்கு மேல்) எடுத்துக்கொள்கின்றன. வீடுகள், வணிக, தொழிலக நிறுவனங்களின் நுகர்வுக்காக அமைக்கப்படும் சூரிய சக்தி மின்கலன்களை அதிகரிப்பது தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அதன் மூலம் தமிழ்நாட்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வருவாய்க்குப் பங்களிக்கும் அதிக கட்டணம் செலுத்தும் நுகர்வோர் வேறு மின்சார ஆதாரங்களுக்கு திசைதிருப்பப்படுவார்கள். இதன் மூலம் மற்ற பிரிவினருக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண சலுகைகளும் பாதிக்கப்படும்.

தமிழகத்தில் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. காற்று விசையாழிகள் சூரிய சக்தி மின்சாரத்தைக் காட்டிலும் குறைவான நிலத்தையும் மெகாவாட்டையும் எடுத்துக்கொண்டு ஒரு மெகாவாட் திறனுக்கு அதிக மின்சாரத்தை அளிக்கவல்லது.

அறிவிப்புகள்

* பரவலாக்கப்பட்ட உள்ளூர் மின்நுகர்வுக்காக, உச்சி மேற்கூரைகளில் சூரிய சக்திக் கலன்களை அமைப்பது உள்பட சிறிய அளவிலான பரவலாக்கப்பட்ட சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பை அதிகரிப்பதற்கான கொள்கை வகுக்கப்படும்.

* காற்றின் மூலம் மின்சாரம் உருவாக்குவதற்குத் தோதான பகுதிகளில் காற்று சக்தி, சாத்தியப்படும் இடங்களில் சூரியசக்தியுடன் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.

* மகாராஷ்டிரத்தில் உள்ளதுபோல் சூரிய சக்தியால் இயங்கும் விவசாயக் குழாய்கள் (பம்பு செட்கள்) உருவாக்கப்படும். அதற்காக சில விளைநிலங்களை இணைத்து சூரிய சக்தி குழாய்களை இயக்குவதற்கான பரவலாக்கப்பட்ட சூரிய சக்திப் பூங்கா அமைக்கப்படும். விவசாயிகள் குறைந்த நீர்த்தேவை கொண்ட பயிர்களுக்கும் விவசாய நடைமுறைகளுக்கும் மாற வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம்தான் நிலத்தடி நீர் நீடித்து இருக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிசெய்யப்படும்.

* கைவிடப்பட்ட நிலக்கரிச் சாம்பல் மேடுகள், மூடப்பட்ட குப்பைக் கிடங்குகள் அல்லது அரசு கட்டிங்கள் போன்ற மற்ற தேவைகளுக்குப் பயன்படாத, பயன்படுத்த முடியாதவையாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே சூரியசக்தி மின்சார வலைப்பின்னல்கள் அமைக்கப்படும். விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சமூகம் மீதான தாக்கம் குறித்த ஆய்வு, பொதுமக்கள் கருத்துக்கேட்பு ஆகியவை நடத்தப்பட்டு சமூகத்தின் வறிய பிரிவினருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

உ) ஆரோக்கியமான வேலைவாய்ப்புகள்

பின்னணி: கோவிட்-19க்குப் பிந்தைய உலகில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிக அவசரத் தேவை. அதிகமாக இயந்திரமயமாக்கப்பட்ட மரபான ஆற்றல் மற்றும் உற்பத்தி துறைகளை ஒப்பிட காலநிலை தாக்குப்பிடி திறனை வளர்த்தெடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதுதொடர்பான செயல்பாடுகளுக்கு அதிக வேலையாட்கள் தேவை. எனவே அவை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. சூரிய உதயத் துறைகளில் (புதிய வகையான, விரைவில் கிடைக்கக்கூடிய பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் தொழில்கள்) 10,000 ‘ஆரோக்கியமான வாழ்வாதாரங்களை’ உருவாக்குவதன் மூலம் நீடித்து நிற்கும் சுற்றுச்சூழலை வளர்த்தெடுதற்கும் சமூக அளவில் நீதிசார்ந்த மாற்றத்துக்கும் தமிழ்நாடு வழி வகுக்கும்.

அறிவிப்புகள்

* சூரிய உதயத் துறைகளில் ஆரோக்கியமான வாழ்வாதாரங்கள்: நகர்ப்புற தோட்டக்கலை, உச்சி மேற்கூரை சூரிய சக்திகலன் அமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பதும் கண்காணிப்பதும், மழைநீர் சேகரிப்பு, நீராதாரங்கள், நீர்நிலைகளை மறுசீரமைப்பது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகளிலிருந்து வளங்களைப் பிரித்தெடுப்பது, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படக்கூடிய நெகிழிகளுக்கு மாற்று கண்டுபிடிப்பது ஆகியவை அதிக திறன்மிகு வேலையாட்கள் தேவைப்படும் துறைகளில் சில மட்டுமே. சூரிய உதயத் துறைகளில் திறன் வளர்ப்பு, சந்தை உருவாக்கம், கடனுதவி, தொழில்முனைவோர் உருவாக்கத்துக்கான உதவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டத்தைச் செயல்படுத்திக் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படும்.

ஊ) நிலக்கரி சக்தி

* தமிழ்நாட்டில் நிலக்கரியால் இயங்கும் அனல் மின் திட்டங்கள் எதுவும் இனிமேல் தொடங்கப்படாது.

* அனல் மின் நிலையங்களின் வாழ்நாள் 25-30 ஆண்டுகள் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நிறைவுசெய்துவிட்ட அனல் மின் நிலையங்களைப் புதிய உமிழ்வு விதிகளுக்கு உகந்தவையாக ஆக்குவதற்காக நீர்ப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, அதிக செலவிலான மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக அவை அனைத்தும் மூடப்படும்

* உப்பூர், உடன்குடி எண்ணூர் ஆகிய பகுதிகளில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களைப் போல் அதிக வளர்ச்சி பெறாத, சட்டச் சிக்கலில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கத் திறனை அதிகரித்தல், ஏற்கெனவே இருக்கும் அனல் மின் நிலையங்களில் அடிமட்ட நிலையில் இருக்கும் தாங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மின்சார விநியோகம் அதிகரிக்கப்படும்.

* டிசம்பர் 2021க்குள் அனைத்து அனல் மின்நிலையங்களும் புதிய உமிழ்வு, நீர் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படும்.

எ) ஆற்றல் பயன்பாடு: குறைப்பும் செயல்திறனும்

* அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்சாரம், ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அவை பழைய வடிவமைப்புக்கு மாற்றப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களிலும் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு படிப்படியாகத் தொடங்கப்படும்

ஏ) அணுசக்தி

* கூடங்குளம் அணு உலையின் அலகு 1, 2 இரண்டும் அடிக்கடி மூடப்படுவதோடு தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு பங்களித்ததில்லை. இந்த இரண்டு அலகுகளின் செயல்பாடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* தமிழ்நாட்டில் அணுசக்தி மேலும் விரிவுபடுத்தப்படாது: கூடங்குளத்தில் நாகர்கோவில் (மக்கள்தொகை 2.25 லட்சம்) போன்ற மக்கள்தொகை நெருக்கடி மிக்க பகுதிக்கு அருகில் ஆறு அணு உலை அலகுகளை (6×1,000 மெ.வா) அமைப்பது பேரிடரை வரவேற்கும் செயல். ஏற்கெனவே இருக்கும் அலகுகளின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய அலகுகளைத் தொடங்க அனுமதிக்கப்படாது. 3-6 அலகுகள் கூடங்குளத்தில் தொடங்க அனுமதிக்கப்படாது.

13. நீரும் சதுப்பு நிலங்களும்

அ) நிலத்தடி நீர்

* உள்ளூர் மக்கள், விவசாயிகள், வருங்காலத் தலைமுறையினர் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக அறிவியல் அடிப்படையில் உரிமம் வழங்குதல், விலை நிர்ணயித்தல் ஆகியவற்றில் உள்ளூர் நிர்வாகத்தின் ஈடுபாட்டை உறுதிசெய்யும் வகையில் விரிவானதும் கறாரானதுமான நிலத்தடி நீர் ஒழுங்குமுறைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

) சதுப்பு நிலங்கள்

* சதுப்பு நிலங்கள் சட்டம் 2017ஐ அமல்படுத்துதல்: சதுப்பு நிலங்கள் சட்டம் கால வரையறைக்குட்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அமலாக்கப்படும். தமிழகத்தின் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதியானது கடல்மட்டம் உயருதல், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் அதீதமான தட்பவெப்ப நிலை நிகழ்வுகள், ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்நிலையில், கோவளம் முகத்துவாரம் உள்ளிட்ட அலைகளால் உருவாகும் நீர் நிலைகள் உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்படும் சதுப்பு நிலமாக இனம்காணப்பட்டு முன்னுரிமை தந்து பாதுகாக்கப்படும். சதுப்பு நிலங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களைக் கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பு: பழவேற்காடு உப்பங்கழி, எடயந்திட்டு முகத்துவாரம்-கலுவேலி குளம், தெரூர்-மணக்குடி சதுப்பு நிலம் போன்ற சதுப்பு நிலங்கள் ராம்சர் மாநாடு முன்வைத்த தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சதுப்பு நிலங்கள் ராம்சர் மாநாட்டுத் தீர்மானங்களின்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் என அறிவிக்கப்பட்டு முன்மொழியப்படும்.

* அனைத்துச் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு, மீட்டெடுப்பு, பராமரிப்பு: சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றைச் சூழலியல் ரீதியாகப் பாதுகாப்பதற்கான மாநில அளவிலான சட்டம் இயற்றப்படும். சதுப்பு நிலச் சட்டத்தின் எல்லைக்குள் வராத ஏரி, தாங்கல், கண்மாய் ஆகிய நீர்நிலைகளும் இதில் இணைக்கப்படும். குளங்களை மீட்டெடுக்கும் பணி முழுத்தோல்வி அடைந்திருக்கிறது. ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுத்த பணம் வீணானது. அறிவியலுக்குப் புறம்பான விதத்திலேயே தூர்வாரும் பணி நடைபெற்றிருக்கிறது.

* ஏரி, கண்மாய் ஆகியவை, குறிப்பாக நீர்நிலை என்னும் அளவிலும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அடையாளம் காணப்பட்டுத் தமிழகத்தின் “பண்பாட்டுப் பாரம்பரிய”மாக அறிவிக்கப்படும். முக்கியமான உயிரி மண்டலங்களின் நீர் மட்ட அளவை மீட்கும் திட்டங்களைத் தீட்டுவதற்கான சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும்.

* நீர்பிடிப்புப் பகுதிகள், நீர்க் கால்வாய்கள் முதலானவற்றை வரையறுப்பதன் மூலம் நீர்நிலைகள், நீர்ப்பாசனக் குளங்களை மீட்டெடுக்கும் பணி முழுமையாகவும் அறிவியல்பூர்வமாகவும் மேற்கொள்ளப்படும். உள்ளூர் அமைப்புகளின் மேற்பார்வையின் கீழ் மீட்புப் பணிகள் நடைபெறும். பணிகளை முறையாக மதிப்பிடுதல், பணியை மேற்கொள்பவர்கள் பதில் சொல்லும் பொறுப்பைக் கொண்டிருத்தல் ஆகியவையும் இத்திட்டத்தில் இடம்பெறும்.

14. தொழில்மயமாக்கலும் மாசுபாடு மையங்களும்

பின்னணி: தொழில்துறையால் ஏற்படும் மாசுபாடு குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிகமாக உள்ளது. உள்ளூர் மக்கள் – பெரும்பாலும் விளிம்பு நிலைகளில் உள்ள பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் – மாசுபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது சுற்றுச்சூழல் சார்ந்த பாரபட்சம்.

அறிவிப்புகள்

* கும்மிடிப்பூண்டி, கடலூர் சிப்காட், மேட்டூர், காயல்பட்டினம் போன்ற மாசுபாடு மண்டலங்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும்.

* உள்ளூரிலுள்ள சமூகச் செயல்பாட்டாளர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியோரை உள்ளடக்கிய உள்ளூர் சுற்றுச்சூழல் குழுக்கள் மாசுபாடு மண்டலங்களில் அமைக்கப்படும். தொழிற்சாலைகள் விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் உட்பட்டுச் செயல்படுகின்றனவா என்பதை இவை கண்காணிக்கும்.

* தொழிற்சாலைகளின் வரைபடமும் பகுதி வாரியான திட்டமிடலும்: தொழிற்சாலைகள் குறித்த மாநில அளவிலான வரைபடத் தொகுப்பு உருவாக்கப்படும். தொழிற்சாலைகளின் அமைவிடம் குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முன்வைத்துள்ள விதிகளின்படி இந்தத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளனவா என்று பார்க்கப்படும். இத்தகைய திட்டங்கள் பிரசுரிக்கப்பட்டுப் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்ட பிறகு இறுதி வடிவம் பெறும்.

* ஒலி சார்ந்த விதிமுறைகளுக்குட்பட்டுத் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றனவா என்பதை அறிவதற்கான பெரும் திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும்.

15. வேளாண்மை

* இயற்கை சார்ந்த, குறைந்த இடுபொருள்களைக் கொண்ட வேளாண் முறைகளை முன்னெடுப்பதற்கான மாநில அளவிலான இயக்கம் உருவாக்கப்படும். இந்த இயக்கம் சிறு விவசாயிகளையும் உள்ளூர்ச் சந்தைகளையும் இலக்காகக் கொண்டிருக்கும்.

* சுற்றுச்சூழலுக்கு இசைவான சிறுதானிய, இயற்கை வேளாண் உற்பத்திகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.

* நிலத்திலிருந்து இல்லத்திற்கு என்னும் திட்டம் அறிவிக்கப்படும். சிறிய, வீட்டு அளவிலான இயற்கை வேளாண்மை, கோழிப்பண்ணை ஆகியவற்றின் மூலம் இல்லங்களின் வருமானத்தைப் பெருக்க இது உதவும்.

* எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் ஆகியவற்றுக்கான சிறு-ரகத் தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் வேளாண் செயல்பாடுகளின் மதிப்பு கூட்டப்படும்.

* காலநிலையைச் சார்ந்த வேளாண்மை: வேளாண் வருமானத்தைப் பெருக்கும் நோக்குடனும் வேளாண் துறையின் பலவீனங்களையும் காலநிலை மாற்றங்களில் அதன் பங்களிப்பைக் குறைப்பதற்காகவும் பொதுமக்களில் வெவ்வேறு பிரிவினர் பங்குபெறும் இயக்கம் அமைக்கப்படும். விவசாயிகளிடையே இருக்கும் நிபுணர்கள், நிறுவனம்சார் அறிவியலாளர்கள் ஆகியோர் இதில் இடம்பெறுவார்கள். தமிழகத்தின் வேளாண்மையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் பருவநிலையில் அதன் எதிர்மறைத் தாக்கங்களைக் குறைப்பதற்குமான திட்டத்தை இவர்கள் உருவாக்குவார்கள்.

16. காவிரி டெல்டா

பின்னணி: காவிரி டெல்டா பகுதியில் கடற்கரையை ஒட்டி 4,000 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு மேற்பட்ட இடத்தில் ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பாக் நீரிணை, மன்னார் வளைகுடா போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இந்தப் பரப்பில் அடக்கம். இது கடல்சார் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குழாய்கள் மூலமாக எண்ணெயும் எரிவாயுவும் டெல்டா பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுப் பதப்படுத்தப்படவிருக்கும் நிலையில் “சிறப்புப் பொருளாதார மண்டலம்” என்னும் அறிவிப்பே கேலிக்குரியதாகிவிடும்.

அறிவிப்புகள்

* காவிரி டெல்டாவின் இயற்கை வளம் மிகுந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஹைட்ரோகார்பன் ஆய்வு, ஹைட்ரோகார்பனைப் பிரித்தெடுத்தல் அல்லது பதப்படுத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காகவும் உண்மையான பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.

* நீர் மேலாண்மைத் திறம், இயற்கை வேளாண்மை, தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை, விவசாயிகள் சந்தைகளை எளிதாக அணுக வகைசெய்தல், நியாய விலை ஆகியவற்றை முன்னெடுப்பதற்காகக் காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலத் திட்டம் தொடங்கப்படும்.

17. திடக்கழிவு மேலாண்மை

* திடக்கழிவு மேலாண்மையில் அதிகபட்ச அதிகாரப்பரவல் உறுதிசெய்யப்படும்.

* ஞெகிழிக்கான மாற்றுப் பொருள்களை வீடுகளிலும் தொழிலகங்களிலும் பெண்கள் சுய உதவிக் குழுக்களிலும் உற்பத்தி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஞெகிழிகளுக்கான தடை அமல்படுத்தப்படும்.

* மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியை 100% அமல்படுத்தப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

* குப்பை பொறுக்குபவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கக்கப்படும். அடையாள அட்டை, காப்பீடு, சுகாதாரப் பலன்கள் ஆகியவற்றை அளிப்பதன் மூலம் அவர்களைச் சமூகப் பாதுகப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்படும்.

* எதுவும் வீணாக்கப்படாத நிலையை 2025க்குள் எட்டுவோம் என்று அறிவிக்கப்படும். குப்பை மேடுகளும் குப்பை எரிப்பும் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.

* உயிரி கழிவுகளை உரம், உயிரி எரிவாயு (Biogas) ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவது முடிந்தவரை அதிகரிக்கப்படும். இதன் மூலம் பசுங்குடில் வாயுவாக மாறக்கூடிய மீத்தேன் வெளியிடப்படுவதைத் தவிர்க்க முடியும். (மீத்தேன் பசுங்குடில் வாயுவாக மாறுவதற்கான சாத்தியம் கார்பன் டை ஆக்சைடு அப்படி ஆவதற்கான சாத்தியத்தைக் காட்டிலும் 25 மடங்கு அதிகம். குப்பை மேடுகள் மீத்தேனை வெளியிடுவதில் முதலிடம் வகிக்கின்றன.)

* உரக்கழிவு, உயிரி எரிவாயுவின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வளங்குன்றா திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

* குப்பை எரிப்புக்கு அரசு மானியம் தரப்படாது.

* உயிரி கழிவுகளைப் பதப்படுத்தும் வசதிகள் மூலம் உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு குறைந்தபட்ச ஆதரவுத் தொகை வழங்கப்படும்.

* தங்கள் வளாகங்களுக்குள் கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் குடிமக்கள் சங்கங்கள், தனி வீடுகள் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

18. ஆட்சிமுறை

சுயசார்பு, திறன், பதில்கூறும்பொறுப்புடன் கூடிய அதிகாரத்தை வளர்த்தெடுத்தல்.

சுற்றுச்சூழல் சட்ட அமலாக்கம்

* காலிப் பணியிடங்களை நிரப்புதல்: தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலுள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பபடும்.

* சுதந்திரமும் சுயசார்பும்: சுதந்திரமும் சுயசார்பு முறையும் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) / இந்திய வனப்பணி (ஐ.எஃப்.எஸ்). அதிகாரிகள் (அ) ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளைத் தலைவராக நியமிக்கும் செய்முறை நிறுத்தப்படுகிறது. சமுதாயத்திலிருந்து (அ) தகுதி வாய்ந்த கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விதிமுறைப்படி முழுநேர தலைவராக பணியிலமர்த்தப்படுவர்.

* பதில்கூறும் பொறுப்பு: சுற்றுச்சூழல் மற்றும் வனப்பிராந்திய விதிமீறல்களை மீறுவோருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை மற்றும் கடலோர பிராந்திய மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் பணிபுரியும் சட்ட அமலாக்கம் செய்யும் அதிகாரிகள் தவறிழைக்கும்போது அவர்களைப் பதில்சொல்லும் பொறுப்பில் தள்ளும் உரிமை குடிமக்களுக்குக் கிடைக்கும் வகையில் மாநில அளவிலான ஒரு சட்டம் இயற்றப்படும்.

உரிமம் பெறுவதற்கான தேவைகளை மீறுவதைச் சிறிதும் சகித்துக்கொள்ளாத அணுகுமுறை:

* சட்டரீதியான ஒப்புதல் மற்றும்/அல்லது காற்று/நீர் சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986இன் கீழ் தேவையான ஒப்புதல்கள் பெறாமல் இயங்கிவரும் அல்லது அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், தொழிலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒளிவு மறைவற்ற, காலவரையறை கொண்ட ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு குடிமக்களின் புகார்களை விசாரணை செய்து அதன்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுற்றுச்சூழல் விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனை: சுற்றுச்சூழல் விதிமீறல் தொடர்பான குற்றங்கள் தண்டனைக்குரிய வகைக் குற்றங்களே; இத்தகைய குற்றம் புரிவோரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சட்டரீதியாக தண்டித்து அவ்வாறான குற்றம் புரிவோருக்குப் பாடம் புகட்ட வேண்டும். ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சட்டத்திறன் எல்லைக்குட்பட்டதாக இருப்பதன் காரணமாக இத்தகைய குற்றம் புரிவோருக்குச் சரியான தண்டனை அவ்வளவாகக் கிடைப்பதில்லை. இந்நிலைமையைப் பின்வரும் வழிமுறைகளால் சரிசெய்ய முடியும்:

* சட்ட அலுவலர்களை மாவட்ட ரீதியாக நியமித்து தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் மட்டத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கலாம்.

* சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் விதிமீறல் குற்றங்களைக் கையாளும் பொருட்டு தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகளின் அதிகாரத்தைக் கூட்டலாம்.

19. முடிவெடுத்தலில் அதிகாரப்பரவல்

பின்னணி: தமிழகத்தின் பஞ்சாயத்துச் சட்டம் பலவீனமானது. கிராம சபை அல்லது பஞ்சாயத்தின் ஆளுகைத் திறன் மீது இந்தச் சட்டம் எந்த நம்பிக்கையையும் வைக்கவில்லை. பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வலுவான பஞ்சாயத்து / உள்ளாட்சி அமைப்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு அவசியமானது.

அறிவிப்புகள்:

* கிராம சபை, வார்டு குழுக்கள், நகர்ப்புறங்களில் உள்ள இதே போன்ற அமைப்புகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த பல்வேறு சட்டங்கள் திருத்தப்படும்.

* திருத்தப்பட்ட சட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியமான முடிவுகளை எடுக்க அனுமதிக்கும். குறிப்பாக வளர்ச்சிப் பணிகள், நிலத்தடி நீர் மேலாண்மை, பல்லுயிர்ப் பாதுகாப்பு, பேரழிவை எதிர்கொள்வதற்கான முன்தயாரிப்பு, சூழலை மீட்டெடுத்தல் ஆகியவற்றில் முக்கியமான முடிவுகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வகை செய்யும்.


நித்யானந்த் ஜெயராமன், சென்னை ஒருங்கிணைப்புக் குழு

தமிழில் அரவிந்த கிருஷ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.