தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம். அங்கு நறுமணங்கள். துர்நாற்றங்கள். கடுங்குளிர். பொறி பறக்கும் வெப்பம். எண்ணற்ற ரகசிய அறைகள். இந்தப் பாதாள உலகத்தில் கைவிளக்கு ஒன்றை ஏந்தி தாஸ்தயேவ்ஸ்கி முன் செல்ல நாம் பின்தொடருகிறோம். குகையின் வழிகள், திருப்பங்கள், ரகசியங்கள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. எந்த இருள் திரை போல் கவிழ்ந்து நம் பார்வையை முடக்குகிறதோ அதே இருள் வாகனமாகி அவனைச் சுமந்து செல்கிறது. ஆழம் இதற்கு மேல் இருக்க முடியாது என்று நாம் முடிவு கொள்ளும் இடத்தில் தொடங்குகிறது ஒரு கிடுகிடு பள்ளம். அந்தகாரம் இதற்குமேல் அடர்த்தி கொள்ள இயலாது என்று நாம் உறுதி கொள்ளும் இடத்தில் இருளின் ஆகக் கரிய போர்வை ஒன்று சுருள் விரியத் தொடங்குகிறது. மண்ணின் மேல் ஜாலம் கொள்ளும் வாழ்க்கையை சதம் என்று நம்பிக்கொண்டிருக்கும் நம்மை பேரதிர்ச்சிகளும் திக்குமுக்காடல்களும் தாக்குகின்றன. அறிஞர்களையோ, விமர்சகர்களையோ அல்ல; தன் படைப்புகளில் வெளிப்படும் வாழ்வின் சுருள் அவிழ்ப்புகள் தன் வாசகனுக்கு அளிக்கும் பேரதிர்ச்சிகளையும் பெருமூச்சுகளையும் நம்பி காலத்தைத் தாண்டி வந்துகொண்டிருக்கிறான் தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்.

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

வாசிப்பு என்ற வார்த்தையை தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் நிராகரிக்கின்றன என்று சொல்லலாம். நாம் அவனைக் கற்கலாம், கற்று ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். நாம் பழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கும் வாசிப்பு என்னும் எளிய வித்தை – எடுத்த எடுப்பில் ஒரு சிருஷ்டியை விழுங்கி ஏப்பம் விடுதல் – அதிகம் அவனிடம் செல்லுபடி ஆகக்கூடியதல்ல. சிகை அலங்காரத்திற்கும், சிறிய மலை ஏறவும் பயிற்சி தேவைப்படுகிறது. அப்படியென்றால் பனியில் மூழ்கி வானத்தைக் கோதியபடி பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கும் மலைச்சிகரங்களில் யாத்திரை செய்ய எவ்வளவு கடுமையான பயிற்சி தேவைப்படும்! இதன் பொருள் தாஸ்தயேவ்ஸ்கியைக் கற்றவர்கள் அவனை முழுமையாக ஏற்றார்கள் என்பதோ, வாசித்தவர்கள் நிராகரித்தார்கள் என்பதோ அல்ல. அவனைக் கற்று நிராகரித்தவர்களும், வாசித்துப் புளகாங்கிதம் கொண்டவர்களும் உண்டு. ஆனால் ஏற்றவர்களும் சரி, மறுத்தவர்களும் சரி, அவனுக்கு அளித்த மதிப்பு அலாதியானது. எந்த மாக்சிம் கோர்க்கி இவனை ‘தீமையின் உருவம்’ என்று பழித்தானோ அவனே, ‘ஷேக்ஸ்பியருடன் ஒப்பிடத் தகுந்த கலைஞன் இவன்’ என்றும் கூறியிருக்கிறான். அவனை ஏற்றுக் கொண்டவர்களும் மேதை என்றார்கள். தூற்றியவர்களும் மேதை என்றார்கள். அரசியல் வாசிப்பு அவனைப் பழித்தது. நீசத்தனமாகப் பழிக்க மட்டுமே செய்தது.

தாஸ்தயேவ்ஸ்கியை ஒருவாறு நாம் புரிந்துகொள்ள அவனுடைய முக்கியமான நான்கு படைப்புகளையேனும் படிக்க வேண்டும். ஒன்று: கரமசோவ் சகோதரர்கள். இரண்டு: குற்றமும் தண்டனையும். மூன்று: மூடன். நான்கு: சைத்தான்கள்.

தாஸ்தயேவ்ஸ்கியைப் படித்திராத வாசகன் அவனைப் படிக்க முற்படும்போது இதுகாறும் தான் அனுபவித்தறியாத ஒரு விசித்திர ஆயாசம் தன் மனதில் படருவதை உணரலாம். மனித மனங்களின் ஆழங்களை ஊடுருவும் தாஸ்தயேவ்ஸ்கியின் கலைப்பதிவுகள், வாழ்க்கையைப் பற்றிய மாயக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் மனங்களை சம்மட்டி போல் தாக்கும். வாழ்க்கை என்றால் என்ன? அதன் குணம் எத்தகையது? மனித இனம் எந்த வகைப்பட்டது? மனித மனத்தின் கொள்ளிடம் எவ்வளவு? அது கடவுளின் அரண்மனையா? அல்லது சைத்தானின் குடியிருப்பா? வானத்தைத் துழாவுவதில் வெற்றி கண்ட மனிதன் ஏன் சாக்கடைகளில் புழுப்போல் நெளிகிறான்? கனவுகளின் ஆடைகளை முற்றாக உரித்து இந்த வாழ்க்கையை நிதர்சனமாக நம்மால் தரிசிக்க இயலுமா? எவற்றின் மீது நம்பிக்கை வைத்து நாம் வாழ்க்கையைக் கொண்டுசெலுத்த வேண்டும்? இவை போன்ற தீர்க்கமான கேள்விகள் முளைக்கின்றன.

நம் அஞ்ஞானத் தூக்கம் கலைக்கப்பட்டு அடிப்படையான கேள்விகளுக்கு விடைகள் தேடிக்கொண்டு போவது சுவாரசியமான காரியம் அல்ல. அதிகாரங்களுக்கும், ஆணவங்களுக்கும், அகங்காரங்களுக்கும், குறைவான அறிவின் அடிப்படையில் நிறைவான வாழ்க்கையைப் பற்றி கற்பனை செய்து கொண்டவர்களுக்கும், வாழ்க்கையின் சகல சிக்கல்களையும் விடுவிக்கும் ஒற்றை மூலிகைத் தத்துவங்களை விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கும் தாஸ்தயேவ்ஸ்கி மீது கடுங்கோபம் வரக் காரணம் தங்கள் மனங்களின் போதமைகளை, குறைகளை, வக்கிரங்களை, தாஸ்தயேவ்ஸ்கி என்ற கண்ணாடியில் இவர்கள் அம்மணமாகப் பார்த்ததின் விளைவே ஆகும். மனதின் திரைகள் ஆக சூட்சுமமானவை. அத்திரைகளை தாஸ்தயேவ்ஸ்கியைப் போல் கிழித்த கலைஞன் எவனுமில்லை.

2

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பியப் படைப்புலகத்தில் இரண்டு வேறுபட்ட அணுகுமுறைகள் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தன. ஒரு போக்கை விக்டர் யூகோவுடையது என்றும் மற்றொன்றை பால்சாக்குடையது என்றும் பொதுவாகச் சொல்லலாம். விக்டர் யூகோவின் போக்கு லட்சிய வேகமும் மனித குணங்களைக் கறுப்பு அல்லது வெள்ளை எனப் பிரித்து இரு குணங்களுக்கும் அழுத்தம் தந்து பார்ப்பதில் நம்பிக்கையும், உணர்வுகளை மிகைப்படுத்திக் கொள்ளும் பாங்கும் கொண்டவை. நம்பிக்கையின் அடிப்படையில் இவை மனித உன்னதங்களை வற்புறுத்துகின்றன. இந்த உன்னத மனங்களால் உன்னத வாழ்க்கை பரிணமிக்கும் என்று விசுவாசம் கொள்கின்றன. சமூக மாற்றங்களில் பொக்கான ஆசைகளும் இலக்கியக் கடல்களின் அலைகளில் அவ்வப்போது கால் நனைப்பும் கொண்ட அரசியல் ஜென்மங்களுக்கு இந்த வகையைச் சேர்ந்த படைப்புகள் கனவுகளின் புல்லரிப்பை ஏற்படுத்துகின்றன. எவை சுலபம் அல்லவோ அவை சுலபம் என்று வற்புறுத்தப்பட்டதில் ஏற்பட்ட புல்லரிப்பு, தத்துவங்களைச் சுலோகங்களாக முடக்கி, சுலோகங்களைத் தத்துவங்களாகக் காட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதி, தங்களைக் கலைஞர்களும் ஆமோதித்திருப்பதாக அடிபலம் தேடிக்கொள்ளும் தந்திரங்கள் இவை. கலை எப்போதும் சிக்கலின் சூட்சுமங்கள் பற்றிய கவலை கொண்டது. சூட்சுமங்களின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவக்கூடியது. கடினங்களைக் கடினங்களாகக் கண்டு மொழியால் அவற்றைத் தாக்கி வசப்படுத்த முன்னுவது. மனிதனை ஆதாரமாக வைத்தே இந்த வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதால் மனித மனங்களின் உள்ளறைகளைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டது .மனிதனுக்கும் மிருகத்திற்குமான வேற்றுமைகளை, அதாவது இருப்புக்கும் வாழ்க்கைக்குமான வேற்றுமைகளைப் பதிவு செய்வதில் மிகுந்த கவனம் கொண்டது. கலையின் ஆகப்பெரிய ஆற்றலை உணருவதும், தாஸ்தயேவ்ஸ்கியை இனம் கண்டுகொள்வதும் இரண்டு வேறுபட்ட காரியங்கள் அல்ல. அதிகாரங்களுக்குத் துதி பாடி, அந்த துதி பாடலையே இலக்கியத்தின் எல்லை என்று வரையறுக்க முன்னும் சக்திகளுக்கு தாஸ்தயேவ்ஸ்கி எனும் கலைஞன் அந்நியமாகப் போய்விட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

 

3

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த ரஷ்யாவுக்கும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வந்துவிட்ட இந்தியாவுக்கும் பல ஒற்றுமைகள் காணக் கிடைக்கின்றன. இன்றைய இந்தியா மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் போலி செய்வது போல் அன்றைய ரஷ்யா, ஐரோப்பியக் கலாச்சாரத்தைப் போலி செய்து கொண்டிருந்தது. ரஷ்யாவில் அன்று சீமான்கள், சீமாட்டிகள், சமூக மின்னா மினுக்கிகள், போலி அறிவுவாதிகள், சாய்வுநாற்காலிப் புரட்சிவாதிகள், அதிகாரத்தின் துதிபாடிகள் எல்லாரும் ருஷ்யமொழியை தாழ்ந்த மொழியாகக் கருதி பிரெஞ்சு மொழியின் மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவிலும், முக்கியமாகத் தமிழகத்திலும் நாம் பார்க்கும் ஆங்கில மோகத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இங்கு ஆங்கிலம் அறிந்தவர்களே அறிவாளிகள் என்று கருதப்படுவது போலவும், ஆங்கிலம் அறிந்தவர்களே படைப்புலக சாதனைகள் உள்ளிட்ட வேறு பல சாதனைகளையும் நிகழ்த்த முடியும் என்று கருதப்படுவது போலவும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ருஷ்யாவில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்களே அறிவாளிகளாகவும், உன்னத நாகரிகத்தின் பிரதிநிதிகளாகவும் கருதப்பட்டு வந்தனர். தாஸ்தயேவ்ஸ்கியின் குடும்பப் பின்னணியோ சின்னாபின்னப்பட்டது. சகல துன்ப சோதனைகளையும் ஒரே குடும்பத்திற்குள் நிகழ்த்திப் பார்க்கவேண்டும் என்று விரும்பிய கடவுளின் வக்கிரத்திற்குப் பலியானது போல் இருக்கிறது அந்தக் குடும்பம். நோய்கள், கொலைகள், அவமானங்கள், துர்மரணங்கள், சிறைத்தண்டனை ஆகிய எண்ணற்ற அவலங்களுக்கு ஆட்பட்ட குடும்பம். ஆக போலி நாகரிகத்தின் தளுக்கு பால்கனியில் தாஸ்தயேவ்ஸ்கிக்கு நாற்காலி இல்லை என்பது தெளிவு. இந்த ருஷ்யப் பின்னணி அளித்த தாழ்வு மனப்பான்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவனே தாஸ்தயேவ்ஸ்கி. தாழ்வு மனப்பான்மை என்ற நோய்க்குப் பலியானவர்கள் சரிந்துபோவது ஒரு வகை. வீறு கொண்டு எழுந்து, தங்களை உக்கிரமாக வெளிப்படுத்திக்கொண்டு, தங்கள் உன்னத ஆளுமைகளை உறுதிப்படுத்தி உறவையும் சுற்றத்தையும் திணறடிப்பது மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகைக்கு தாஸ்தயேவ்ஸ்கியைப் போல் ஒரு சிறந்த உதாரணத்தைப் பார்க்கக் கிடைப்பது அபூர்வம்.

ருஷ்ய இலக்கிய வானில் இவான் துர்கேனெவ் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த காலம். உயர்குடிப்பிறப்பு. பிரெஞ்சு மொழி லாவகம், நடை உடை பாவனைகளில் கடைந்தெடுத்த சீமான். கலை உலக நுட்பங்களை விவாதிப்பதில் – முக்கியமாக நாவல் கலை பற்றிய விவாதங்களில் – மதிநுட்பம் மிகக் கொண்டவன் என்ற புகழ். உலகக் கலாச்சாரத் தலைநகரமான பாரிஸை தன் கருத்துலகத் தலைநகரமாகவும் மாற்றிக் கொண்டிருந்தான். அவன் கலந்துகொள்ளும் விருந்துகளில் உலக எழுத்தாளர்கள் கலந்துகொண்டு அவன் கருத்துக்களைக் கூர்ந்து கேட்டிருக்கிறார்கள். துர்கேனெவின் இந்த விசேஷ ஆளுமையைப் பற்றிய எளிய செய்திகள் தாஸ்தயேவ்ஸ்கியை வந்து அடையும்போது அவன் வார்த்தைகளில் திகைப்பும் பதற்றமும் கூடுகின்றன. ‘அவர் அதிகம் கற்றறிந்தவர். சீமான்களுக்கே உரித்தான உதவுபடிகள் அவருக்கு இருக்கின்றன, அவரைப் போல் சாதனைகளை நிகழ்த்த என்னால் கூடாது; என்கிறான். துர்கேனெவ் மீது தாஸ்தயேவ்ஸ்கி கொண்டிருந்த ஏக்கத்தை தாகூர் மீது பாரதி கொண்டிருந்த ஏக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இன்று துர்கேனெவ் ஒரு குன்று. தாஸ்தயேவ்ஸ்கி ஒரு மலைச் சிகரம். சீமான்களின் ஜிகினா பவிஷூகள் காற்றோடு போக, மேம்பட்ட கலைஞனின் கொடி, கம்பம் இன்றி காலத்தின் அந்தரத்தில் பறந்துகொண்டிருக்கிறது.

ஒரு படைப்பாளி தன்னைச் சுற்றி கூடும் ஜால்ராக்களின் சத்தங்களுக்குத் தொடர்ந்து செவி மடுப்பதினாலோ, நோயுற்ற அகங்காரத்தினாலோ, மிதமிஞ்சிய தாழ்வு மனப்பான்மையினாலோ அல்லது தாழ்வாகவோ கூறிக்கொள்ளும் சொற்களை ஆமோதிக்கும் பொறுப்பைக் காலம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. தாகூரை தாண்டிச் சென்றுவிட்ட[i] கலைஞன் பாரதி என்ற வரையறுப்புகளும் இன்று உண்டு. இக்கூற்றுகளில் மிகை அல்லது சுய அபிமானம் கலந்திருக்கும் என்று நாம் கருதுவோம் என்றால் இவற்றை விட்டு, தாகூருடன் சாதகமாக ஒப்பிடத் தகுந்த கலைஞன் பாரதி என்ற முடிவுக்கு வருவதில் பாதுகாப்புக் குறைவில்லை. ஒன்று நிச்சயம். பாரதி தன்னைத் தாகூருடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவன் மனதிலிருந்த பெரிய இடைவெளியைக் காலம் ஆமோதிக்கவில்லை.

தாஸ்தயேவ்ஸ்கி எதிர்கொண்ட சமூகப் பின்னணியும் பாதகமானது. அன்று ருஷ்யாவின் கலாச்சாரத் தலைநகரம் பீட்டர்ஸ்பர்க்[ii]. வேரற்ற நாகரிகத்தின் துள்ளல்கள் நீக்கமற நிறைந்திருந்த இடம். இந்த வெளிப்பாடுகளுக்கு நேரெதிர் திசையில் பிழைப்பின் கொடிய கரங்களால் குதறப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள். கொடிய வறுமை, மிக மோசமான அடக்குமுறை. வேசிகளுக்கு மஞ்சள் அட்டை கொடுத்து வரி வசூலிக்கிறது அரசாங்கம். (மலிவு விற்பனைச் சாராயத்தில் துட்டடிப்பதை விடக் கேவலமானது அல்ல.)

ஜார் நிக்கோலஸ் முதல்வன் தன் விசித்திரமான கல்விக் கோட்பாடுகளை வெளிப்படுத்திய காலம். சமூகத்தில் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து கல்வி கற்கக்கூடாது என்கிறான் அவன். அரசாங்கத்தை மென்மையாக விமர்சித்தால் கூட அது கொடிய குற்றம். அதற்குத் தண்டனை மரணம். ஜாரின் கொடுங்கோன்மையைத் தகர்க்க 1825-இல் ஒரு கலகம் வெடித்தது என்றாலும் அது வெற்றி பெறவில்லை. அன்றைய புரட்சிவாதிகளும், அறிவுவாதிகளும் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். எதேச்சதிகாரம் தலைவிரித்து ஆடிற்று. தணிக்கைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. ரகசியக் காவல் படையினரின் சிலந்தி வலைகள் பல இடங்களிலும் வியாபகம் பெற்றன.

தாஸ்தயேவ்ஸ்கியின் மனம் லட்சிய வேகத்தில் துடித்துக் கொண்டிருந்த காலம் அது. என்ன செய்ய வேண்டும் என்பதில் அவனுக்குத் தெளிவில்லை. ஆனால் அவனுடைய உணர்வுகள் ஏழ்மையின் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தன. ஐரோப்பிய நாகரிகத்துடன் அவனால் இணைந்துசெல்ல முடியவில்லை[iii]. ருஷ்ய மொழி மீது அவன் மிகுந்த பற்றுக் கொண்டவன். ஐரோப்பாவை நகல் செய்ய வேண்டியதில்லை என்றும் ருஷ்யக் கலாச்சாரத்தைத் தட்டியெழுப்பி புனர்வாழ்வுக்கு அதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஏங்குகிறான். ருஷ்யா கடந்து வந்திருக்கும் பாதையில், காலத்தின் ஏதோ ஒரு மூலையில், உலகத்தை உய்விக்கும் ஆத்மீக ஞானம் இருக்கக்கூடும் என்றும் அதனைத் தட்டியெழுப்பி, பேணிக்காத்து, மேற்கும் கிழக்கும் உய்ய வழி காண முடியும் என்றும் அவன் நம்புகிறான்.

4

இங்கு தாஸ்தயேவ்ஸ்கியின் முழு வாழ்க்கையையும் ஆராய்வது நம் நோக்கமல்ல. அவன் வாழ்க்கையின் முக்கியமான பகுதிகளை – சமூகமும், அரசும், குடும்பமும் அவனுக்கு அளித்த வடுக்களை – பார்த்துக்கொண்டு போகிறோம். எந்த அனுபவங்கள் அவன் படைப்பைப் பாதித்திருக்கும் என்று நாம் நம்புகிறோமோ அவற்றைக் கவனிப்பதன் மூலம் அவன் வாழ்க்கைக்கும் படைப்புக்குமான உறவை அறிய முற்படுகிறோம்.

தாஸ்தயேவ்ஸ்கி 1821-இல் மாஸ்கோவில் பிறந்தான். அவனுடைய தந்தை ஒரு டாக்டர். மூர்க்க குணம் கொண்டவர். சற்றே வசதியாக இருந்து சரிந்துபோன குடும்பம் அது. தர்மாஸ்பத்திரியின் வளாகத்திற்குள் வசதிகளற்ற குடியிருப்புகளின் இடுக்குகளில் அவனுடைய இளமை கழிந்தது. நோயைப் பற்றியும், வறுமையைப் பற்றியும், மனித துக்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள மருத்துவச் சூழல் அவனுக்கு ஏற்ற இடமாக அமைந்தது. மத போதனைகளை அழுத்தும் குடும்பம் அவனுடையது.

தனது தாயை தாஸ்தயேவ்ஸ்கி தன் பதினாலாவது வயதில் இழந்தான். தாயை இழந்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அவன் தந்தை கொலை செய்யப்பட்டார். அவருடைய குரூரம் தாங்காமல் பண்ணையாட்கள் அவரைக் கொன்றனர். (குதிரை வண்டியோட்டி அவரைக் கொன்றதாகவும் ஒரு உரை இருக்கிறது) ஏழு குழந்தைகளில் ஒருவனான தாஸ்தயேவ்ஸ்கி தன் அண்ணன் மிக்கேல் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தான். தான் காட்டிய அன்புக்கு இணையான அன்பை அண்ணன் தன்னிடம் காட்டவில்லை என்ற குறையும் அவனுக்குக் கடைசி வரையிலும் இருந்தது. இருவரும் படைப்பிரிவு பொறியியல் கல்லூரியில் ஒன்றாகக் கல்வி கற்றார்கள். தாஸ்தயேவ்ஸ்கி தேர்வுகளில் முதல் மாணவனாக வெற்றி பெற்று வந்தான் என்றாலும் இறுதித் தேர்வில் ஏதோ ஒரு குளறுபடியால் அவனது பெயர் வெகுவாகப் பின்னால் போய்விட்டது. (விளங்காத குளறுபடியால் பின்தள்ளப்படும் விதி, தாஸ்தயேவ்ஸ்கியை அவன் வாழ்க்கை முழுவதும் தொந்தரவு செய்துகொண்டிருந்த ஒரு விஷயம் ஆகும்). அண்ணன் வெற்றி பெற்றிருந்தான் என்றாலும் அவன் உடல்நிலை சீராக இல்லை என்பதால் அவன் பெயர் நீக்கப்பட்டது. இதனால் தாஸ்தயேவ்ஸ்கியின் மனதில் மிகுந்த தனிமை சூழ்ந்தது.

படைப்பிரிவு பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே தாஸ்தயேவ்ஸ்கி மிகுந்த இலக்கிய வேட்கை கொண்டிருந்தான். அவன் பசி அடங்காத வாசகன். தன் கையில் அகப்படும் எல்லாவற்றையும் படித்துக் கொண்டே போனான். ருஷ்ய மொழிப் படைப்புகள், ஜெர்மன் படைப்புகள், உலக இலக்கியங்கள், கொலை வழக்குகள் பற்றிய விசாரணைகள், உளவியல், தத்துவம், சமய ஆராய்ச்சிகள், சோசலிசச் சிந்தனை சார்ந்த அலசல்கள் எல்லாவற்றையும் படித்தான். இந்த வாசிப்புப் பசி கடைசி வரையிலும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. பெரிய கலைஞன் பெரும்பாலும் பசி தீராத வாசகனாக இருப்பதைப் பார்க்கிறோம். படிப்போ, அனுபவமோ தேவையில்லை என்றும், சரஸ்வதி கடாட்சத்தினாலே எழுதிவிட முடியும் என்றும் நம்பிக்கை கொண்டவர்களை பெரிய படைப்பாளிகள் மத்தியில் அதிகம் பார்க்க முடிவதில்லை.

தாஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல் ‘ஏழை எளியவர்கள்’. அன்றைய ருஷ்ய சமூகம் பற்றி அவன் கொண்டிருந்த கவலையை இந்த நாவல் பிரதிபலிக்கிறது. வாழ்வின் பின்பகுதியில் அவன் அடுத்தடுத்து உருவாக்கிய உன்னதப் படைப்புகளின் தரத்துடன் இந்த நாவலை ஒப்பிட முடியாது என்றாலும் லட்சியவாதியான தாஸ்தயேவ்ஸ்கியின் சமூக அக்கறைகளை அதிகம் பிரதிபலித்தது இந்த நாவல்தான் என்று சொல்லவேண்டும். அப்போது அவனுக்கு வயது இருபத்தைந்து. ஒரு படைப்பாளியாக மலர்வதில் மிகுந்த ஆசையும் ஆனால் அதன் நடைமுறைச் சாத்தியத்தில் மிகுந்த அவநம்பிக்கையும் கொண்டிருந்த காலம். படைத்தல் என்ற மாபெரும் கலை தனக்கு வசப்படாத ஒன்றோ என்ற கவலை அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

தாஸ்தயேவ்ஸ்கியின் நண்பன் ‘ஏழை எளியவர்களின்’ கையெழுத்துப் பிரதியை நிக்கலோ நெக்கரசோவிடம் காட்டலாம் என்று யோசனை கூறினான். அன்று நெக்கரசோவ் ‘சமகாலம்’ என்ற பெயர் கொண்ட மதிப்பு வாய்ந்த இலக்கிய இதழின் ஆசிரியர். அவ்விதழில் மதிப்புரை வெளியாவது உறுதியான இலக்கிய அங்கீகாரமாகக் கருதப்பட்டு வந்தது. நெக்கரசோவிடம் கையெழுத்துப் பிரதியைத் தந்தபின் கூச்சத்துடனும் வெட்கத்துடனும், அவநம்பிக்கையுடனும் படுக்கைக்குச் செல்கிறான்.

தாஸ்தயேவ்ஸ்கி, ‘என் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு அவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். விடியற்காலை நான்கு மணி வாக்கில் தாஸ்தயேவ்ஸ்கியின் அறையை அவன் நண்பனும், நெக்கரசோவும் தட்டி, நாவல் மிகத் தரமாக வந்திருக்கிறது என்றும், மாலையில் படிக்கத் தொடங்கிய கையெழுத்துப் பிரதியை முடிப்பது வரையிலும் கீழே வைக்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். தாஸ்தயேவ்ஸ்கி மிகுந்த மன நிறைவு கொள்கிறான். நுட்பமான சிந்தனையாளன் என்றும் ஆழமான இலக்கிய விமர்சகர் என்றும் பெயர் பெற்றிருந்த பெலின்ஸ்கி, தாஸ்தயேவ்ஸ்கியின் ‘ஏழை எளியவர்களை’ப் படித்துவிட்டு ‘மற்றொரு கோகோல் நம்மிடையே தோன்றிவிட்டான்’ என்கிறான்[iv].

இக்காலங்களில் புரட்சிகர இயக்கங்களோடு தாஸ்தயேவ்ஸ்கிக்கு எளிய தொடர்புகள் ஏற்பட்டன. திட்டவட்டமான தத்துவங்களில் அவநம்பிக்கையும் மனித துக்கங்களில் உருகும் மனமும் கொண்டவன் அவன். 1849-இல் பெற்றஷேவ்ஸ்கியின்[v] வட்டத்தைச் சேர்த்த அனைத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டபோது வட்டத்தினரின் கூட்டங்களுக்குச் சென்றுகொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கியும் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு இடுக்குப் பிடித்த அறையில் அடைபட்டுக்கிடந்தான் அவன். உடம்பில் உயிர் தரிக்கப்போதுமான உணவு. யாரையும் சந்திக்க முடியாது. கடிதங்கள் பெறவும் முடியாது. எழுதவும் கூடாது. விசாரணை ஐந்து மாதங்கள் நடந்தன. அதன் பின் திடீரென்று ஒருநாள் எல்லாக் கைதிகளையும் மூடிய வண்டியில் ஒரு மைதானத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு பார்வையாளர்களாக பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மைதானத்தின் நடுவில் ஒரு மேடை. சுற்றிவர கைதிகளைக் கட்டிப்போடத் தூண்கள். சுட்டுக் கொல்வதற்கான தீர்ப்பு வாசிக்கப்பட்டது. ஆத்மாக்களின் கடைத்தேறல்களுக்காக புரோகிதர்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு நீளமான அங்கிகள் அளிக்கப்பட்டன. அப்போது தாஸ்தயேவ்ஸ்கிக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு சில வினாடிகள்தாம் இருந்தன. மரண துக்கத்தையும் அவன் முழுமையாக அனுபவித்து ஆயுற்று. திடீரென்று வெண் கைக்குட்டையை வீசிக்கொண்டு ஒரு சேவகன் வந்தான். சக்கரவர்த்தி மரண தண்டனையை சிறைத் தண்டனையாகத் தளர்த்திவிட்டார் என்கிறான். இந்தச் செய்தி அளித்த அதிர்ச்சியில் ஒரு கைதிக்கு புத்தி பேதலித்துவிட்டது என்றும், மற்றொரு கைதியின் தலைமயிர் பொட்டென நரைத்தது என்றும் சொல்லப்படுகிறது.

கொடுஞ்சிறையில் மிகக் கேவலமாக தாஸ்தயேவ்ஸ்கி நடத்தப்பட்டான். கிறிஸ்மஸ் தினம். அவன் காலில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டன. சங்கிலியின் இரு நுனிகளும் கணுக்காலில் சுற்றப்பட்ட மையம் இடுப்புப் பட்டையில் கோர்க்கப்பட்டிருந்தது. சங்கிலி மட்டுமே பத்து பவுண்டு எடை கொண்டது. நான்காண்டுகள் அவன் அதைச் சுமந்து தீர்க்கவேண்டும். சிறையில் தாஸ்தயேவ்ஸ்கியுடன் இருந்த சக கைதிகள் மோசமான குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வந்தவர்கள். திருட்டு, கொலை போன்ற சமூகக் குற்றங்கள். அவர்களிடையே வாழ்ந்து வந்தது தாஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரு விதத்தில் மன ஆறுதலைத் தந்தது. சிறையில் தாஸ்தயேவ்ஸ்கி தொடர்ந்து படித்து வந்த நூல் பைபிள். துன்பத்தில் உழல்வதன் மூலம் விடுதலை பெற முடியும் என்ற கருத்தாக்கம் தாஸ்தயேவ்ஸ்கியின் மனதில் அப்போது படர்ந்தது. தனக்கு முற்றிலும் அருகதையான தண்டனைதான் தனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறான் அவன். தன்னைப் போன்ற நொந்த இதயங்கள் மீது அவனுக்கு மிகுந்த பரிவும் நெகிழ்ச்சியும் உண்டாயிற்று.

கொடிய குற்றங்களுக்கு ஆட்பட்டு மனம் புழுங்கி விமோசனத்திற்காகவும் புதிய வாழ்க்கைக்காகவும் ஏங்கும் சகக் கைதிகள் மீது அவன் மிகுந்த தோழமை உணர்வு கொண்டான். வாழ்வுக்கு ஆதாரமான நற்செய்தி ஒன்றை அவர்கள் மூலம் பெறமுடியும் என்றும் நம்பத் தொடங்கினான். குற்றவுணர்ச்சியும், பாவ எண்ணங்களும், விமோசனத்திற்கான ஏக்கமும் சதா அலையடித்துக் கொண்டிருந்த மனம்தான் தாஸ்தயேவ்ஸ்கியுடையது என்று பல உளவியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

1854-இல் தாஸ்தயேவ்ஸ்கி சிறையிலிருந்து வெளியே வந்தான். அதன்பின் நாலாண்டுகள் அவன் ராணுவத்தில் கட்டாய ஊழியம் ஆற்றவேண்டும்: ருஷ்யாவுக்குள், சீன எல்லையை ஒட்டிய ஒரு இடத்தில், அவன் பணியாற்றச் சென்றான். இங்கேதான் அவன் தன் முதல் மனைவியான மேரியைச் சந்தித்தான். மேரி திருமணம் முடிந்தவள். எட்டு வயதுச் சிறுவனின் தாய். மேரியின் கணவன் ஒரு பெருங்குடியன். அதனால் மேரியின் வாழ்க்கை துன்பமயமாக இருந்தது. மேரி மீது தாஸ்தயேவ்ஸ்கி கொண்ட இரக்கம்தான் பின்னர் காதலாகப் பரிணமித்தது மேரியின் கணவன் மூன்றாண்டுகளுக்குப் பின் இறந்துவிடவே தாஸ்தயேவ்ஸ்கி மேரியைத் திருமணம் செய்துகொண்டான். துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். தாஸ்தயேவ்ஸ்கியின் கொடிய நோய் – அந்த மோசமான காக்காய் வலிப்பு – அவனுடைய தேனிலவு நாட்களில் மிக பயங்கரமாக வெளிப்பட்டு மேரியை நிலைகுலையச் செய்தது. ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டதான குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுகிறான் தாஸ்தயேவ்ஸ்கி.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் கொடுங்கோன்மை அரசு தாஸ்தயேவ்ஸ்கியை மன்னித்தது. அவன் பீட்டர்ஸ்பர்க் திரும்பினான். அப்போது அவனுக்கு வயது முப்பத்தேழு. சொல்லும்படி ஒன்றும் அவன் அதிகம் எழுதியிருக்கவில்லை. ‘ஏழை எளியவர்கள்’ என்ற நாவலின் திறமையான ஆசிரியரை ருஷ்ய வாசகர்கள் அநேகமாக அப்போது மறந்து ஆயிற்று. தன் துறையில் வேகமாகச் செயல்பட வேண்டும் என்ற கனவு அவனை அரித்துக் கொண்டிருந்தது. ருஷ்ய எழுத்தாளன் எவனுக்கும் – ஒருக்கால் உலக எழுத்தாளர்களுக்குக் கூட வாய்த்திராத பேரனுபவங்கள் அவன் மனதில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையின் ஆழமும் அகலமும் இப்போது அவனுக்குத் தெரியும். மரணம் பற்றி அவனுக்குத் தெரியும். மனித மனங்களின் இருட்குகைகள் பற்றி அவனுக்குத் தெரியும். இப்போது அவன் ஆளுமை விழிப்பான பார்வை கொண்டாயிற்று. விமர்சிக்கவும், ஆராயவும், சிந்தனையைத் தூண்டவும், திக்பிரமை கொள்ளச் செய்யவும் அவனிடம் விஷயங்கள் இருக்கின்றன. காலம் உடனடியாக அவனை ஏற்றுக்கொள்ளும் என்று கற்பனை செய்யக்கூட முகாந்திரம் இல்லை. ஆனால் வாழும் காலத்தில் வீசும் காற்றை அவதானித்து அதற்கேற்ப தன் முகத்தைத் திருகிக் கொள்வது தன்னுடைய வேலை அல்ல என்று அவன் நம்புகிறான். அது அரசியல்வாதியின் அற்ப தந்திரம். பதவிக்கு மோப்பம் பிடித்துத் திரிபவனின் பிழைப்பு. காலத்தின் சாராம்சங்களைப் பற்றிய தன் கணிப்புகளைக் கலைஞன் பதிவு செய்ய வேண்டும். அவன் பதிவுகளில் பொருள் இருந்தால், ஆழம் இருந்தால், அர்த்தம் இருந்தால் வாழும் காலம் அவனை மறுத்தாலும் எதிர் வரும் காலம் அவனை அணைத்துக் கொள்ளும். எதிர்வரும் காலம் அவனை நிராகரித்தாலும் அந்த நிராகரிப்பையும் பரிசாக ஏற்று காலத்தின் நீட்சியில் அவன் கரைந்து போய்விடவேண்டும்.

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புக்களின் தரம் இந்நாட்களில் அவ்வளவு மேலாக இல்லை. அவனுடைய கவனம் இதழியல் பக்கம் திரும்பிற்று. தன் அண்ணன் மிக்கேலுடன் இணைந்து ‘காலம்’ என்ற இதழைத் தொடங்கினான். இந்தக் காலத்தில் அவன் மீண்டும் ஒரு காதல் தொடர்பில் சிக்கிக் கொண்டான். அப்போது அவனுக்கு வயது நாற்பது. ஹோலினாவுக்கு வயது இருபது. இருவரும் ஐரோப்பியப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் உறவு நீடிக்கவில்லை. மனம் சோர்ந்து தாஸ்தயேவ்ஸ்கி ருஷ்யா திரும்பும்போது மேரி மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தாஸ்தயேவ்ஸ்கி அவளுக்குப் பணிவிடைகள் செய்தான். மேரி இறந்துபோனாள். சில நாட்களுக்குள்ளாகவே தாஸ்தயேவ்ஸ்கியின் ‘காலமு’ம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அவன் ‘யுகம்’ என்ற புதிய இதழைத் தொடங்கினான். ‘யுகம்’ நொண்டி நடைபோட்டுக் கொண்டிருக்கும்போதே தாஸ்தயேவ்ஸ்கியின் அண்ணன் மிக்கேலும் இறந்துபோனான். இதழைத் தொடர்ந்து நடத்துவதில் பெரும் கடன் சுமையும் ஏறிற்று. குறுக்கு வழியில் பணம் தேட முற்படுகிறான் அவன். சூதாட்ட வெறி அவனைப் பேய் போல் பிடித்தாட்டுகிறது. தன் கையிருப்பையும், கடன் வாங்கிய தொகைகளையும் சூதாடித் தொலைக்கிறான் அவன். வெவ்வேறு புத்தகங்கள் எழுதித் தருவதாக வாக்களித்து, வெளியீட்டாளர்களிடம் இருந்து முன்பணம் பெற்று, ஒப்புக்கொண்ட தேதிகளில் புத்தகங்களை முடித்துத் தர இயலாமல் திணறுகிறான். கடன்காரர்கள் அவன் கழுத்தில் சுருக்கைப் போட்டு இழுத்தார்கள். துன்பத்திலும், துயரத்திலும், வறுமையிலும், தனிமையிலும் உழன்றான் அவன். அப்போது அவன் எழுதத் தொடங்கிய நாவல்தான் ‘குற்றமும் தண்டனை’யும்.

ஒரு காரியதரிசியை அமர்த்தி நாவலை எழுதச் செய்தால் குறைந்த நேரத்தில் அதிகப் பக்கங்கள் எழுதிவிட முடியும் என்று அவனுடைய நண்பர்கள் யோசனை கூறினார்கள். இந்தக் காரியதரிசியின் வேலைக்கு வந்தவள்தான் அன்னா. தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட ஒரே விளக்கு என்று இவளைச் சொல்லிவிடலாம் காரியதரிசியாக வந்தவள் தன் மனைவியான பின் அவன் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது தாஸ்தயேவ்ஸ்கிக்கு வயது நாற்பத்தைந்து. அன்னாவுக்கு வயது இருபது. வயதின் இடைவெளி அதிகம். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி என்ற மாபெரும் கலைஞனை மனதார நேசித்த அன்னா தன் திறமையால், விவேகத்தால், பொறுமையால், சாதுர்யத்தால் தாஸ்தயேவ்ஸ்கி என்ற மாபெரும் சிடுக்கை ஒரு கண்டில் சுற்றத் தொடங்குகிறாள். தன் சிக்கல்களை அன்னா ஒழுங்குபடுத்திய விதத்தைப் பார்த்து தாஸ்தயேவ்ஸ்கியே ஆச்சர்யப்படுகிறான். அவன் நிம்மதியாகப் படைப்பாக்கங்களில் ஈடுபட்டிருந்த காலம் இது ஒன்றுதான். ‘ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு மிகப்பெரிய நாவலை – அவன் மனதில் ஐந்து பாகங்களாக உருக்கொண்டிருந்தன இவை – எழுதத் திட்டமிடுகிறான். இந்தத் தலைப்பில் இவன் படைப்பு வெளிவரவில்லை என்றாலும், காலத்தின் போக்கில் அவன் யோசனைகள் மாற்றம் அடைந்து, வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு நூல்களாக இவை உருவாகியிருக்கின்றன. ‘கரமசோவ் சகோதரர்கள்’ வெளிவந்ததும் தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ் உச்சக் கட்டத்தை எட்டுகிறது. ருஷ்யாவின் தேசியக் கவியான புஷ்கினின் ஆண்டு விழாவின்போது, அக்கவிஞனின் ஆண்டு விழாவின்போது அக்கவிஞனின் சிலை மாஸ்கோவில் நிறுவப்பட்டது. அக்கூட்டத்தில் தாஸ்தயேவ்ஸ்கி ஆற்றிய உரை அற்புதமாக அமைந்தது என்று அவன் படைப்புக்களை ஏற்காதவர்கள் கூட – பாராட்டியிருக்கிறார்கள். கரமசோவ் சகோதரர்களை எழுதி முடித்த மூன்று மாதங்களுக்குப் பின் 1881 ஜனவரி 21-ஆம் தேதி இரவு எட்டரை மணிக்கு தாஸ்தயேவ்ஸ்கி இறந்து போகிறான்.

5

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகத்தின் பொதுப்போக்கைப் பற்றியும் நாம் சிறிது தெரிந்துகொள்ளவேண்டும். அவனுடைய சிறந்த நாவலான கரமசோவ் சகோதரர்களின் ஊடுபாவுகளை நாம் கவனிப்பதன் மூலம் அவன் படைப்புக் குணத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். இவன் எழுதியுள்ள நாவல்களில் ஆகச் சிறந்தது இதுதான் என்றும் இன்றுவரை உலகத்தில் தோன்றியுள்ள நாவல்களிலேயே இதுவே மேலானது என்றும் கூறும் விமர்சகர்கள் உண்டு. நான்கு பெரிய பகுதிகளும், பன்னிரெண்டு உப பகுதிகளும் கொண்ட இந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் வரும். ஆகவே இந்த நாவலின் கதையை சுருங்கக் கூறினால் அது இமயமலையின் சிகரத்தைத் தபால் பில்லையில் பார்ப்பது போல இருக்கும் மேலும் நாவல்கள் கதைகள் அல்ல. இந்த விதிகளை மீறி, முரட்டுத்தனமாக இந்த நாவலைச் சுருக்கிப் பார்த்தால், அது ஒரு கொலைக்கதை.

ஃபயோதர் பாவ்லோவிச் என்பவன் கொலை செய்யப்படுகிறான். நீதிமன்ற விசாரணையில் நிரபராதியான அவன் மகன் டிமிட்டிரி கொலைக் குற்றத்திற்கான தண்டனையைப் பெறுகிறான். இவ்வளவுதான் விஷயம். வாசகர்களை ஈர்க்கும் ஒரு கொலைக்குற்றக் கதையின் சரட்டை பின்னணியில் வைத்துக்கொண்டு மனக் குகைகளின் வாசல்களைத் திறந்துகாட்டும் அற்புத சாதனையை நிகழ்த்திக்காட்டுகிறான் தாஸ்தயேவ்ஸ்கி. மனித மனங்களின் ஆழங்களும், தத்துவப் பிரச்சனைகளும், உணர்ச்சிகளின் மோதல்களும் ஜீவநதிபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த நாவலில். ஆக இங்கு கொலைக்குற்றக் கதை என்பது தாஸ்தயேவ்ஸ்கி அவனுடைய தனி உலகத்தைப் படைத்துக் காட்டுவதற்கான முகாந்திரமே. மர்ம நாவல்களுக்குரிய சில்லறை உத்திகளில் மட்டுமே தாஸ்தயேவ்ஸ்கியின் மனம் குவிந்திருந்தால் மூன்றாம் தர நாவல்களுக்காகவே காலம் தோண்டி வைத்திருக்கும் பெரும் குழிகளில் அது பெருக்கித் தள்ளப்பட்டிருக்கும். தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளோ காலத்தைத் தாண்டி மட்டும் வரவில்லை. அவற்றுக்குப் பாதகமான கால வெள்ளத்தை எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டு, தாஸ்தயேவ்ஸ்கிக்கு சாதகமான காலம் அல்ல. அவனுடைய பார்வைக்கும், கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரானவர்களின் கை ஓங்கியிருந்த நூற்றாண்டு இது. உடல் ஒற்றுமைகளையும் லோகாயதத் தேவைகளையும் தாண்டி மனித மனங்களின் வேற்றுமைகளை நுட்பமாக உணர்ந்தவன் அவன். லோகாயதத் தேவைகளின் பொதுமைகளை முன் வைத்து, பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகள், மக்களைக் கவர்ந்து கொண்டிருந்த நூற்றாண்டு இது. தர்க்கம், பகுத்தறிவு போன்ற மூளை வலுக்களின் வரையறைகளைப் பற்றிச் சிந்தித்தவன் தாஸ்தயேவ்ஸ்கி. ஏனெனில் வாழ்க்கையின் அடர்த்தி அவனுடைய அனுபவத்தின் ஒரு பகுதி. தன் அனுபவங்களின் அனந்தகோடி முகங்களை அவன் ஒருபோதும் சிதைத்துக்கொள்ள விரும்பவுமில்லை. பிரச்சினைகளுக்கு ஆயத்தத் தீர்ப்புகள் அளிப்பது அல்ல; பிரச்சனைகளின் முழு ஆழத்தையும் புரிந்துகொள்வதே அவனுடைய முதன்மையான நோக்கமாக இருந்தது. சமூக மாற்றங்களுக்கு முன்வைக்கப்பட்ட ஒற்றை மூலிகைகள் எவற்றையும் அவன் ஏற்கவில்லை. மேலான தத்துவங்கள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. அந்தத் தத்துவங்களை வாழ்க்கையோடு அணைக்கப் பேரறிவும், பெரும் அனுபவங்களும் செழுமையான கற்பனைகளும் வேண்டும். அதிகாரத்தைப் படிக்க முன்னும் தீய சக்திகள் தங்களுடைய கீழான ஆசைகளை மறைக்கவும், மக்கள் கூட்டத்தை வசீகரிக்கவும் மேலான தத்துவங்களை வெற்றிகரமாய் பயன்படுத்திவிட்ட சாகசம் இன்றைய சரித்திரத்தின் ஒரு பகுதி ஆகிவிட்டது. ஆனால் தாஸ்தயேவ்ஸ்கியோ அரசியல்வாதிகளின் இனிப்பு மிட்டாய்களை குதப்பப் பிறந்தவன் அல்லன். அவன் மனித விமோசனத்தைப் பற்றிய மெய்யான கவலைகள் கொண்டவன். அந்த மெய்யான கவலைகள் காரணமாகவே அவனிடம் எளிய தீர்வுகள் இல்லாமல் போயிற்று. மனிதன் தன்னை அறிந்துகொள்ள வேண்டும். தன்னை அறியாதவன் தன் சக மனிதனையோ சமூகத்தையோ அறிய முடியாது. அவன் தனி மனிதனின் ஆளுமையிலும், வளர்ச்சியிலும், அந்த ஆளுமை வளர்ச்சிக்கான சுதந்திரத்திலும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான்.

சர்வாதிகாரங்களுக்கு எதிராக வந்த விமர்சனங்கள் அனைத்தையும் தனிநபர் வாதம் என்றும், பெரும்பான்மையான மக்கள் நலத்திற்கு எதிரானவை என்றும், முதலாளித்துவத்திற்குத் துணை போகக்கூடியவை என்றும் பழித்துரைத்து, முத்திரை குத்தி, அதிகார சக்திகள் வெற்றி பெற்ற இந்த நூற்றாண்டில் தாஸ்தயேவ்ஸ்கி புறக்கணிப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நிறுவனங்கள் சார்ந்த அழுகிப்போன மத நம்பிக்கைகளுக்கும் சகல ஜீவராசிகளின் பொதுத்தன்மையை உணர்ந்து இவ்வுணர்வை ஆத்மீகச் சக்தியாகப் போற்றிய கலைஞர்களின் குரல்களுக்குமான வேறுபாட்டைச் சிதைத்து, ஆத்மீகச் சக்திகளையும் மதவாதிகள் என்று பழித்துரைப்பதில் போலி அறிவுவாதிகள் வெற்றி பெற்ற காலம் இது. தாஸ்தயேவ்ஸ்கியோ அம்மணமானவன். வாழ்க்கை எனும் சகதியில் புரண்ட அம்மணம் அவனுடையது. மனிதனைப் பற்றிய மிக ஆழமான மதிப்பீடு ஒன்றை, படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் அல்ல; நாம் அனுபவித்து நம் உணர்வுகளின் பகுதியாக்கிக் கொள்ளும்படி கலையாக அவன் தந்துவிட்டுப் போயிருக்கிறான். வேஷங்கள், பொய் தாஸ்தாவேஜுகள், பொய்ப் பிரச்சாரங்கள், பொய் நீதிமன்றங்கள், பொய் வரலாறுகள், பொய் குற்றச்சாட்டுகள் ஆகியவை எதேச்சதிகாரங்களுக்கு துணை போன நூற்றாண்டு இது. அரசியல் அறிஞர்கள் என்று நெளிந்துகொண்டு இருந்தவர்கள் கலைஞர்களின் குரல்வளைகளை ஒடுக்க அதிகார சக்திகளுக்குத் துணை போய், பொய்யான நூல்களைத் தயாரித்துக் குவித்த நூற்றாண்டும் இதுதான். இன்று வரையிலும் அம்பலமாகிவிட்ட பொய்களை மட்டுமே அழிக்கும் தெய்வீக ஜுவாலை ஒன்று தோன்றுமென்றால், உலகத்திலுள்ள சகல நூல் நிலையங்களிலும் அரைப்பங்குச் சேமிப்பு தீக்கிரையாகிவிடும். தாஸ்தயேவ்ஸ்கியோ உண்மையின் ஜுவாலை. அந்தச் சுடரின் ஒளி போற்றப்படக் கூடிய காலம் இப்போதுதான் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும்.

ருஷ்ய மண்ணில் கடந்த முக்கால் நூற்றாண்டுகளாக தாஸ்தயேவ்ஸ்கி அவனுக்குரிய மதிப்பைப் பெறவில்லை என்பது தெளிவு. பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை நின்றும், சகல இழிவுகளிலும் பங்கு பெற்றும் அரசியல்வாதிகளின் அதிகார உணவுகளின் எச்சங்களைத் தின்றும் பிழைத்துக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் அவனைப் பலவாறு தூற்றிப் பேசியிருக்கிறார்கள். தாஸ்தயேவ்ஸ்கியை ஒரு பக்கமாகவும், அவனை இகழ்ந்தவர்களை மறுபக்கமாகவும் வைத்து, அவன் அலட்சியப்படுத்தப்பட்ட விதங்களையும், தூற்றல்களின் சாராம்சங்களையும் யோசிக்கும்போது இந்த மண்ணில் எந்தக் கொடுமையும் நிகழும் என்பதற்கு மட்டுமே அவை உதாரணங்களாக இருக்கின்றன.

ஆனால்  காலம் அவ்வளவு கொடுமையானது அல்ல. வரலாற்றுக்குள் பொய்மைகளைத் துப்ப முயன்றவர்கள் மீது வரலாறு சரிந்து பொய்மைகள் புதையுறும் காலம் தோன்றிவிட்டது. சூத்திரங்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது என்ற உண்மை இன்று மனித குலத்தின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பசி குடலைப் பிடுங்கும்போது உணவு மட்டுமே போதும் என்று சொல்லாத மனிதனும் இல்லை. ஆனால் சுலோகங்களோ பசியைக் கூட தீர்க்க முடியாதவை. இந்த பாதகமான நூற்றாண்டைத் தாண்டி வந்திருக்கும் ஒரு கலைஞன், இனி வரவிருக்கும் நூற்றாண்டுகளில், மறுபரிசீலனைகளுக்கும் ஆழமான புரிதல்களுக்கும் இடந்தரப்போகும் நூற்றாண்டில், எப்படி மதிப்பிடப்படுவான் என்பதைச் சிறிது கற்பனை உணர்வுகொண்டவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

6

கரமசோவ் சகோதரர்கள் வெளிப்படுத்தும் உலகத்தை இப்போது சிறிது பார்க்கலாம்.

ஃபயோதர் பாவ்லோவிச் கரமசோவ் பார்ப்பதற்கு மனிதன் போலவே இருக்கக் கூடியவன். ஆனால் அவன் சதை, காமம், இழிவு, துன்மார்க்கம், வெட்கம் கெட்டத்தனம் இவற்றின் கூட்டுத்தொகை. பெண் இவனுக்கு ஒரு போகப்பொருள். பெண்மையையும் வாழ்க்கையின் இதர இன்பங்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நம்புகிறான். உறவுகள் அவனுக்கு லாபத்தைத் தரக்கூடிய தொடர்புகள். அவனுடைய அசிங்கமான வாழ்க்கை சீழ்போல் அவனைச் சுற்றி ஒழுகிக் கொண்டிருக்கிறது.

ஃபயோதருக்கு இருமுறை திருமணம் முடிந்தது. மனைவியின் முன் வேசிகளை அழைத்து வந்து கூத்தடிப்பான். இவனை மணந்துகொண்ட பெண்கள் இருவரும் இவனால் எந்தச் சுகத்தையும் பெறவில்லை. இவர்கள் வாழ்க்கை நரக வேதனையாயிற்று. அவனுடைய மனைவி டிமிட்ரி என்ற குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு இவனை விட்டு ஓடிப்போகிறான். இரண்டாவது மனைவி மூலம் இவனுக்கு ஐவான், அலெக்சி என்று இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவியை தன் வீட்டை விட்டுத் துரத்துகிறான் ஃபயோதர். தன் குழந்தையை அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வேலைக்காரர்கள், உறவினர்கள் அல்லது தாயாதிகள் இவனை வளர்த்தார்கள். ஃபயோதருக்கு தன் கிழப்பருவத்தில் க்ருஷங்கா என்ற தாசி மீது கட்டுப்படுத்த முடியாத காமம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கிற்று. அவளுக்குரிய விலையைத் தந்து அவளைச் சொந்தமாக்கி விடலாம் என்று சப்புக்கொட்டத் தொடங்குகிறான். காமவெறி தலைக்கு ஏற ஏற அவன் ஒரு கோமாளி போலவே நடந்துகொள்கிறான்.

ஃபயோதரின் மூத்தமகன் டிமிட்டிரி களங்கமற்றவன். மேலானவை எவை என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் நியதிகளைச் சார்ந்து ஒட்டி ஒழுக அவனால் முடியவில்லை. அவன் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகிறான். இழிவுகளில் சரிவதும், சரிந்தமைக்காக வருந்துவதும், மீண்டும் சரிவதுமாக இருக்கிறது அவன் வாழ்க்கை. க்ருஷங்கா என்ற தாசியை அவனும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அவள் மீது தான் கொண்டிருக்கும் மட்டற்ற ஆசையை வெளிப்படுத்தி அவளை வசப்படுத்தி விடலாம் என்று நம்புகிறான். பணம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் க்ருஷங்காவை அடைய அது ஒரு உபயோகமான பொருள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே தன் தகப்பன் ஃபயோதரிடமிருந்து தனக்குரிய சொத்தைப் பெற முயல்கிறான். தகப்பன் அதற்கு இசையவில்லை. சொத்தை முன்னிட்டும் பெண்ணை முன்னிட்டும் தகப்பனுக்கும் மகனுக்குமான மோதல்கள் மிகக் கடுமையாக உருவாகின்றன. டிமிட்டிரிக்கு திருமணம் முடிக்க கத்தியா என்று பெண்ணை பேசி முடித்திருக்கும் தருணம் அது. ஆனால் அவளைப் பற்றிய நினைவே அவனுக்கு இல்லை. நேர்மையும் இங்கிதமும் கொண்ட அவளை, அறிவாளியும் எழுத்தாளனுமான தன் தம்பி ஐவான்தான் மணந்துகொள்ள ஏற்றவன் என்று கருதுகிறான். ஐவான் கத்தியாவை மணந்துகொண்டுவிட்டால் குறுக்கீடு எதுவும் இல்லாமல் க்ருஷங்காவுடன் உல்லாச வாழ்க்கை நடத்தலாம் என்று கனவு காண்கிறான்.

இரண்டாவது மகனான ஐவான் ஒரு பகுத்தறிவுவாதி, புத்தி, தர்க்கம், யுக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகத்தைப் புரிந்துகொண்டுவிடலாம் என்று நம்புகிறான் தத்துவச் சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். கடவுள் இல்லை என்பது அவனுக்கு உறுதியாக இருந்தது. ஆனால் அவன் மனதில் வெறுமையும் தத்தளிப்பும் நிரம்பி இருக்கின்றன. தத்துவப் பிரச்சினைகள் அவனுக்குச் சாய்வு நாற்காலியில் முடங்கிக் கிடக்கும்போது மட்டும் வந்துபோகும் தொந்தரவுகள் அல்ல. வாழ்க்கையை எதன் மீது கட்டுவது? என்ற வினா சார்ந்த ஆதாரமான பிரச்சனைகள் அவை. கடவுள் இல்லை என்றால் இந்த வாழ்க்கையின் பொருள் என்ன? அப்படியென்றால் நம் செயல்பாடுகள் நம் விருப்பம் மட்டுமே சார்ந்தவைதானா? வாழ்க்கைக்கும் தன் பிறப்புக்குமான இணைப்பு அவனுக்குத் தெளிவுபடவில்லை. பிறந்துவிட்டதினாலேயே அபோதமாக வாழ்ந்துகொண்டிருக்கும் துர்விதியை அவன் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தன் தம்பி அலெக்சியிடம், ‘நான் என் இளமை முடிந்ததும் என் கிண்ணத்தைக் காலி செய்துவிடுவேன்’ என்கிறான்.

இதன் பொருள் தனக்கு விடைகள் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என்பதே. கடவுள் இல்லை என்றால் சகல காரியங்களையும் நியாயப்படுத்தி விடலாம். அப்போது வாழ்வுக்கும் சாவுக்கும் வேற்றுமை இல்லை. உண்மைக்கும் பொய்க்கும் முரண்பாடு இல்லை. ஆனால் அதே சமயம் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதுதான் ஐவானின் பிரச்சினை.

ஐவானுக்கு தன் தகப்பன் மீது மதிப்பு இல்லை. அவன் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று நினைக்கிறான். அது போல் டிமிட்டிரியின் வாழ்க்கையையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அதில் அறிவின் கால் சுவடுகள் ஒன்றுகூட அவனுக்குத் தென்படவில்லை. இரு புழுக்களாகவே இருவரையும் பார்க்கிறான். ‘ஒரு புழு மற்றொரு புழுவை விழுங்கிச் சாகும்’ என்று அலெக்சியிடம் வெளிப்படையாகவே சொல்கிறான்.

ஐவானின் பாத்திரப்படைப்பு மகத்தானது. உலக இலக்கியங்களின் உன்னத பாத்திரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது கூட இவனுடைய பாத்திரப் படைப்பு மகோன்னதமானது என்று பல விமர்சகர்களும் கருதுகிறார்கள். மாறிவரும் வாழ்க்கை உருவாக்கும் புதிய மதிப்பீடுகள் காலத்தின் தொடர்ச்சியாக நிற்கும் மனிதனுக்கு எண்ணற்ற சவால்களை விடுகின்றன. இந்தச் சவால்களின் மனித உருவமாக நிற்கிறான் ஐவான். தாஸ்தயேவ்ஸ்கியின் கைகளில் ஐவான் சதையும் ரத்தமும் கொண்ட பெரும் ஆளுமையாக உருக்கொண்டு ஓங்கும்போது, புற உலகில் இவன் நிஜ சொரூபமாகவே நிற்பது போலவும் தன் ஆற்றலுக்கே சவால்விட்டு தொடைதட்டி நிற்பது போலவும் தாஸ்தயேவ்ஸ்கிக்குத் தோன்றுகிறது. தன் படைப்புலகங்களில் முற்றாக மூழ்கிவிடும் மேலான கலைஞர்களுக்குத் தோன்றும் பிரமை இது. தன் நாட்குறிப்பில், ‘ஐவான்தான் எனக்கு பெரிய சவால்’ என்று எழுதுகிறான் தாஸ்தயேவ்ஸ்கி. ‘நான் எழுதியிருக்கும் முழு நாவலும் இவனுக்கான பதில்தான்’ என்கிறான். ‘நான் நம்பியதை விடவும் இவன் அதிகத் திறமைசாலி’ என்கிறான்.

மூன்றாவது மகன் அலெக்சி, ஆத்மீக ஞானத்தில் மிகுந்த தேட்டம் கொண்டவன். கிறிஸ்துவ சாமியார்களுடன் மடத்தில் தங்கி வருகிறான். அங்கு ஞானி சோஸிமாவை தன் குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். அலெக்சி மிக மென்மையான குணம் கொண்டவன். வாழ்க்கையின் மீது ஆழ்ந்த பற்றும் சகல ஜீவராசிகள் மீதும் மிகுந்த பரிவும் கொண்டவன். தெய்வ நம்பிக்கை ஒன்றையே தன் பலமாக எண்ணுகிறான். தன் மனதிற்குப் படும் உண்மையை எப்போதும் முன்வைப்பதும் சகல ஜீவராசிகளிடத்திலும் மாறாக அன்பு கொண்டிருப்பதும் அவனுடைய இயற்கைக் குணங்களாக இருக்கின்றன. ஞானி சோஸிமாவின் வாக்குகள் மூலம் அவன் மனதிற்கு மிகுந்த செழுமை சேர்ந்து வருகிறது. இயல்புகளிலும் சிந்தனைகளிலும் ஐவானுக்கும் டிமிட்டிரிக்கும் முற்றிலும் மாறான போக்குக் கொண்டவன் அலெக்சி. ஆனால் தனக்கு முற்றிலும் வித்தியாசமானவர்களுடன் கூட நல்லுறவு கொண்டிருக்கிறான். முக்கியமாக ஐவான் தன் சிந்தனைகளையும் சங்கடங்களையும் இவனுடனேயே பகிர்ந்துகொள்கிறான். ஒருமுறை ஐவான் இவனை சந்தித்துப் பேசும்போது, தான் ஆக்கியிருக்கும் வசன கவிதையை இவனிடம் தருகிறான். நாவலின் அச்சாணி என்று இந்த வசன கவிதையைச் சொல்ல வேண்டும். இந்தப் பகுதியை மட்டுமே ஆராய்ந்து பல்வேறு அறிஞர்கள் கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதியிருக்கிறார்கள். ஐவானின் வாதங்களை மௌனமாகவும் பொறுமையாகவும் கேட்டுக் கொண்டிருக்கும் அலெக்சி தன் கவித்துவ மனம் உணரும் உண்மைகளைப் பதிலாகக் கூறுகிறான்.

ஐவான் தன் வாதத்தை முன்வைத்த அன்று தாஸ்தயேவ்ஸ்கி தன் நாட்குறிப்பில் எழுதுகிறான்: ‘ஐவான் நான் நினைத்ததை விடவும் திறமையாகத் தன் வாதங்களை முன்வைத்துவிட்டான். பாவம், அலெக்சி! நாளை ஐவானை எப்படிதான் அவன் எதிர்கொள்ளப் போகிறானோ?’ படைப்பாளி உருவாக்கிய கற்பனை உலகம் அவனுக்கே நிஜ உலகம் போல் காட்சியளிப்பதை இங்கு மீண்டும் பார்க்கலாம். உண்மையில் கற்பனை உலகம் என்பது கற்பனை உலகமும் அல்ல; நிஜ உலகம் என்பது நிஜ உலகமும் அல்ல. நிஜ உலகத்தை அறிந்துகொள்ளப் பொறிகளுக்கு வசப்படும், உலகத்தைத் தாண்டி ஊடுருவிச் செல்ல வேண்டியிருக்கிறது. படைப்பில் அனுபவம், கற்பனை, அழகுணர்வு ஆகியவற்றின் துணையால் இந்த ஊடுருவல் நிகழும்போது படைப்புலகம் உண்மையான உலகமாக மாறுகிறது. படைப்பு நிஜ உலகத்திற்கு எதிராக நின்று தன் ஊடுருவல்களை நிஜ உலகத்தின் மீது வீசி அதன் உள்ளார்த்தங்களை உணரத் துணை போகிறது. படைப்பாற்றலால் நிஜ உலகம் உள்ளார்த்தம் கொள்ளும்போது அது வாசகன் மனதைக் கவ்வுகிறது.

தாஸ்தயேவ்ஸ்கி பரிவு கொள்வது போல் அலெக்சி ஒன்றும் அவ்வளவு சாது இல்லை. அவன் சாது போல் தோற்றமளிக்கக் கூடியவன். படைப்பே இதை நிரூபிக்கிறது. ஐவானின் வாதங்களின் முன் அவன் ஒன்றும் துவண்டு போய்விடவில்லை. ஐவானிடம் இருக்கும் ஆயுதங்கள் அவனிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஐவானிடம் இல்லாத வலுக்கள் அவனிடம் இருக்கின்றன. முக்கியமாக அலெக்சி கவி மனம் கொண்டவன். சகல ஜீவராசிகள் மீதும், காட்சிப் பொருள்கள் மீதும் அவனுடைய அன்பு வழிந்து கொண்டிருக்கிறது. தன் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஜீவ இயக்கத்தின் பகுதியாகவே அனைத்தையும் அவன் பார்க்கிறான். உயர்வு தாழ்வு என்ற பிளவு அவனிடம் இல்லை. கருப்பும் வெள்ளையும் அவனிடம் இல்லை. பிளவுபட்டுக் காட்சியளிப்பவற்றிற்கு அப்பால் பிளவுபடாத சக்தி ஒன்று இயங்குவதாகவும் அவன் நம்புகிறான். அறிந்தவற்றைப் பற்றிய அறிவு ஐவானுக்கு முழுமையாக இருக்கிறது என்றால் அறியாதவற்றைப் பற்றிய ஞானம் முழுமையாக அலெக்சிக்கு இருக்கிறது. கற்றவனின் மனநிலையில் இருந்து ஐவான் பேசும்போது கற்றுக் கொள்பவனின் மனநிலையில் நின்று அலெக்சி பேசுகிறான். இது அவனுக்கு மிகுந்த வலுவைச் சேர்க்கிறது.

ஃபயோதர் பாவ்லோவிச்சின் மூன்று பிள்ளைகளில் மூத்தவன் டிமிட்டிரியும் இளையவன் அலெக்சியும் தாஸ்தயேவ்ஸ்கியின் வெவ்வேறு பகுதிகளைப் பிரதிபலிப்பவர்கள். தாஸ்தயேவ்ஸ்கி எப்படி வாழ்ந்தான் என்பதற்கு டிமிட்டிரி உதாரணம். தாஸ்தயேவ்ஸ்கி எப்படி வாழ நினைத்தான் என்பதற்கு அலெக்சி உதாரணம். ஒன்று உணர்ச்சி. மற்றொன்று ஆத்மா. ஆனால் ஐவான் அவன் ஏற்றுக்கொண்ட பகுதி அல்ல. அவன் தன் நம்பிக்கைகளினால் நிராகரித்த அறிவின் பகுதி. ஆனால் நாவலில் தன் ஆளுமையின் பகுதியை தாஸ்தயேவ்ஸ்கி எவ்வளவு அற்புதமாக உருவாக்கியிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் நிராகரித்த பகுதியையும் அற்புதமாக உருவாக்கியிருக்கிறான். ஒரு பெரிய கலைஞனின் பேரறிவு இது. இந்தப் பேரறிவு அவனிடம் செய்தி ரூபமாக இல்லாமல் அனுபவத்தின் ஒரு பெரும் பகுதியாக இருக்கிறது. கலைஞனும் பிரச்சாரகனும் விடைபெற்றுக் கொள்ளும் சந்திப்பு இதுதான்.

தாஸ்தயேவ்ஸ்கி உருவாக்கியிருக்கும் உலகத்தில் டிமிட்டிரியும் அலெக்சியும் எவ்வளவு சுதந்திரமாக உருவாகிறார்களோ அந்த அளவுக்கு ஐவானும் சுதந்திரமாக உருவாகிறான். அவனைப் படைத்த ஆசிரியனுக்கே அறைகூவல் விடும் அளவுக்கு அவனுடைய ஆளுமை ஓங்குகிறது. அலெக்சி மீது ஆசிரியன் கொண்டிருக்கும் பரிவு ஐவானின் விகாசத்திற்குத் தடையாக நிற்கவில்லை. ஐவான் அவனுடைய ஆளுமையின் எல்லைக்குச் சென்றாலும் அந்த ஆளுமையையும் தாண்டிச் செல்ல முடியும் என்ற கலைஞனின் எல்லையற்ற நம்பிக்கையிலிருந்துதான் ஐவான் இந்த அளவிற்குச் சுதந்திரம் பெறுகிறான். தாழ்வு மனப்பான்மை என்ற நோயினால் வாழ்வின் தளத்தில் நிரந்தரமாகப் பீடிக்கப்பட்டிருந்த கலைஞன், படைப்பின் தளத்தில் இமயங்களைத் தாண்டிக்கொண்டு போகிறான். படைப்பின் உத்வேகம் அவனாலேயே இனம் கண்டுகொள்ளமுடியாத ஒரு ஜீவ சக்தியை அவனுக்கு அளிக்கிறது.

பரிபூரணமான மனிதனை உருவாக்க வேண்டும் என்பது தாஸ்தயேவ்ஸ்கியின் பெரிய கனவாக இருந்தது. பல்வேறு நாவல்களில் பல்வேறு கதாபாத்திரங்களைப் பரிபூரணத்தை நோக்கி நகர்த்த அவன் முயல்கிறான். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி ஆசைகளால் ஆட்டுவிக்கப்பட்டும் பக்தியுக காவியகர்த்தா அல்லன். அவன் ஒரு நாவலாசிரியன், மற்றொரு விதத்தில் சொன்னால் யதார்த்த வாழ்க்கையைக் கண்டு சொல்ல வந்தவன். அதன் ஆழத்தையும் ஒளியையும், இருளையும், மனிதனின் பார்வை இன்றுவரையிலும் படாத மூலைகளையும் பதிவு செய்ய வந்தவன். கரமசோவ் சகோதரர்களில் அலெக்சியையோ, அல்லது ‘மூடன்’ என்ற நாவலில் இளவரசன் மிஸ்கின் என்ற கதாபாத்திரத்தையோ பரிபூரணத்தின் ஜீவ இயக்கமாக உருவாக்குவதில் அவன் வெற்றி பெறவில்லை. இந்தத் தோல்வி யதார்த்தத்தைப் பற்றிய அவனுடைய அறிவின் வெற்றியாகும். யதார்த்தத்தில் பரிபூரணம் என்பது இல்லாத வரையிலும் படைப்பிலும் பரிபூரணம் என்பது சாத்தியமில்லை. உண்மையின் பாரத்தைச் சுமந்து செல்லும் கலைஞன் வாழ்வின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டே தொழில் புரிகிறான்.

நாவலில் டிமிட்டிரியின் பலகீனங்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. அவை அப்பட்டமானவை. அவனுடைய தாழ்வுகள் அனைத்தையும் அறிந்த பின்னும் நாம் அவன் மீது மிகுந்த பரிவு கொள்கிறோம். ஏனெனில் அவன் தாழ்வுகளில் சரிகிறானே தவிர தாழ்வுகளை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவனுடைய செயல்பாடுகளிலிருந்து அவனுடைய எண்ணங்களைப் பிரித்துப் பார்ப்போம் என்றால் அவன் அலெக்சியை விடவும் மேலானவன். எந்த உணர்ச்சி அவனை ஆகக் கீழ் நிலைக்குத் தள்ளுகிறதோ அந்த உணர்ச்சியே அவனை உன்னத நிலைக்கும் எடுத்துச் செல்கிறது. இதற்கு மாறாக உன்னத பாத்திரமான அலெக்சியிடம் கரமசோவ் குடும்பத்தினருக்கே உரிய தீய குணங்கள் அவ்வப்போது வெளிப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. நாவலில் ஒரு இடத்தில் ரெத்தீன் என்ற கதாபாத்திரம் அலெக்சியைப் பார்த்துக் கூறுகிறான். ‘நீயும் ஒரு கரமசோவ்தான். உன் தகப்பன் வழியில் நீ ஒரு சிற்றின்பப் பிரியன். உன் தாயின் வழியில் நீ ஒரு அசட்டுக் குழந்தை’ என்கிறான். எப்படி நீர்க்குமிழிகளைக் கோர்த்து ஒரு மாலையைத் தொடுக்க முடியாதோ, எப்படி வெள்ளைச் சாயத்தை மட்டுமே பயன்படுத்தி ஒரு ஓவியத்தைத் தீட்ட முடியாதோ, அதுபோல் யதார்த்தத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஒரு படைப்பு மனத்தால் பரிபூரணத்தையும் சிருஷ்டி செய்து தர இயலாது.

சந்நியாசிகளின் மடத்தில் அலெக்சி தன் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர் ஞானி சோஸிமா. ஞானி சோஸிமாவுக்கும் அலெக்சிக்கும் நடக்கும் சம்பாஷனைகள் மிக முக்கியமானவை. ஒருமுறை ஞானி சோஸிமா அலெக்சியிடம் கூறுகிறார்: ‘நீ இங்கிருந்து வெளியேற வேண்டிய காலம் வரும். அன்று நீ தெருக்களில் அலைந்து மக்கள் கூட்டத்தைச் சந்தித்து அதிக ஞானம் பெறுவாய்’ என்கிறார். இதேபோல் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் கூறும் வார்த்தைகளும் மிக முக்கியமானவை. ‘உலகத்தில், எல்லா மனிதர்களும், சந்தேகத்துக்கு இடமின்றி ஒவ்வொருவருமே பொறுப்பாளிதான். ஒவ்வொருவரும் தனிமனிதன் ஒவ்வொருவனுக்கும் மனித குலத்திற்கே பொறுப்பாளி’ என்கிறார். ஏசு தன் முதுமையை எட்டியிருந்தால் எவ்வாறு மலர்ந்திருப்பார் என்று தாஸ்தயேவ்ஸ்கி கற்பனை செய்தது போல் இருக்கிறது ஞானி சோஸிமாவின் பாத்திரம். பக்தர்களின் மனங்களில் அவர் அவதார புருஷனாக இருக்கிறார். இவரை ஒத்த அவதார புருஷர்கள் இயற்கை எய்தினால் அவர்கள் உடலிலிருந்து நறுமணம் கமழும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் ஞானி சோஸிமா இறந்தபின் அவரது உடல் அழுகத் தொடங்குகிறது. துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகிறார்கள். தன் நாவலில் முழுப் பிரக்ஞையுடன் மட்டுமே ஒரு கலைஞன் இப்பகுதிகளை உருவாக்கியிருக்க முடியும். லோகாயத உலகம் சார்ந்த உண்மைகள் தன் நம்பிக்கைகளின் கண்களைக் கட்ட தாஸ்தயேவ்ஸ்கி மறுப்பதை இப்பக்கங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் ஸ்மர்டிக்கோ. லிசவேதா, தெருவில் அலையும் அநாதை. குள்ளமானவள். அருவருப்பானவள். அவளுக்குப் பேச்சு வராது. ஃபயோதர் ஒரு நாள் தெரு வழியாக வந்து கொண்டிருந்தான். அவனுடைய முதல் மனைவி காலமான செய்தி அப்போதுதான் அவனை வந்து எட்டியிருந்தது. திடீரென்று ஃபயோதர் தன் நண்பர்களைப் பார்த்து தெருவில் தூங்கிக் கொண்டிருக்கும் லிசவேதாவுடன் தான் உடலுறவு கொள்ளப்போவதாகச் சொல்கிறான். நண்பர்கள் ஊக்குவிக்கிறார்கள். லிசவேதா கர்ப்பமாகிறாள். அவள் பெற்றெடுக்கும் குழந்தைதான் ஸ்மர்டிக்கோ.

ஸ்மர்டிக்கோ மிகப் பயங்கரமான தோற்றம் கொண்டவன். சோனியான உடலமைப்பு. காக்காய் வலிப்பு நோய் கொண்டவன்: அகங்காரத்தின் உருவமாகவும், அன்பற்ற மனம் கொண்டவனாகவும் இருக்கிறான்.

நன்றி உணர்வு என்பது அவனிடம் அறவே கிடையாது. நன்மை செய்தவர்கள் மீது மிகுந்த துவேஷம் கொண்டு அவர்களின் அழிவுகளுக்கு மனதால் ஏங்கும் தீய குணம் கொண்டவன். ஃபயோதரின் வீட்டிலேயே ஊழியம் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறான்.

ஐவானுக்கும் ஸ்மர்டிக்கோவுக்குமான உறவு நாவலின் ஒரு சூட்சுமமான அம்சம். ஐவான் தனது சிந்தனைகளால் மறைமுகமாக ஸ்மர்டிக்கோவை பாதித்தான் என்பதற்கான சமிக்ஞைகள் நாவலில் தரப்பட்டிருக்கின்றன. ‘கடவுள் இல்லை; எனவே எவ்வித செயல்பாடுகளையும் தேர்ந்தெடுக்கலாம்’ என்ற ஐவானின் முடிவு ஸ்மர்டிக்கோவின் மனதில் ஊடுருவுகிறது: ஸ்மர்டிக்கோ சிந்திக்க முடியாதவன். தகப்பன் ஃபயோதர் மூலம் மிகுந்த அவமானத்திற்குத் தான் ஆட்பட்டுவிட்டதாக அவன் கருதுகிறான். அவன் பிறப்பும் பிழைப்பும் அவனிடம் மிகுந்த கசப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தன் தகப்பனை அவன் கொலை செய்கிறான். தவறு, சரி என்ற தளங்கள் அவன் மனதில் இல்லை.

லட்சியவாதியும், பகுத்தறிவுவாதியும் ஆன ஐவான் ஏன் தகப்பன் வீட்டில் குடிபுகுந்தான் என்பதே ஒரு கேள்விக்குறி. அவன் ஒப்பும் மதிப்பீடுகள் ஒன்று கூட அங்கு இல்லை. தன் தகப்பனை அவன் முற்றாக வெறுக்கவும் செய்கிறான். அத்துடன் தன் அறிவுத் தளத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஸ்மர்டிக்கோவுடன் ஒரு உறவை வைத்துக்கொண்டும் இருக்கிறான். பண்பிலும் படிப்பிலும் முற்றாக அவர்கள் வெவ்வேறு அலைவரிசையைச் சேர்ந்தவர்கள். ஆனால் இருவருக்கும் பொதுவான ரகசிய ஆசை ஒரு மெல்லிய கோடுபோல் அவர்களை இணைத்திருக்கிறது. டிமிட்ரிக்கோ, அலெக்சிக்கோ, ஸ்மர்டிக்கோவுடன் எந்த உறவும் இல்லை.

அலெக்சிக்கு தன் தகப்பன் மீது எவ்வித வெறுப்பும் இல்லை. இதனால் தன் தகப்பனைப் பற்றிய ஒரு மதிப்பீடு அவனுக்கு இல்லை என்பதல்ல. தகப்பனின் வழிமுறைகளை அவன் ஏற்கக் கூடியவனும் அல்லன். ஆனால் தன் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை இழிவு என முத்திரை குத்தி ஒதுக்குவது தன் வேலை அல்ல என்பது அவனுக்குத் தெரியும். அலெக்சிக்கு டிமிட்டிரி மீதும் கோபம் இல்லை. நேர்மாறாக டிமிட்டிரியின் உன்னத குணம் அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. அவனுடைய எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்குமான முரண்பாட்டை அலெக்சி வெகு நேர்த்தியாகப் புரிந்துகொண்டிருக்கிறான்.

நாவலில் ஐவான் மறைமுகமான குற்றவாளி. ஒரு ஆயுதமாகச் செயல்படுகிறான் அவன். ஸ்மர்டிக்கோ தற்கொலை புரிந்துகொண்டுவிடுகிறான். ஸ்மர்டிக்கோ தனக்குரிய தண்டனையைத் தானே தேடிக் கொண்டுவிட்டான் என்றால் குற்றம் புரிந்தும் தப்பித்துக் கொண்டிருப்பவன் ஐவான்தான். டிமிட்டிரியோ நிரபராதி. ‘தகப்பனைக் கொல்வேன்’ என்று சவடால்தனமாகச் சொல்லிக்கொண்டு திரிந்தவன். ஆனால் உண்மையில் அவன் தந்தையைக் கொல்லவில்லை. பழி அவன் மீது விழுந்து அவன் தண்டனை பெறுகிறான். ஐவான், ஸ்மர்டிக்கோ, அலெக்சி, டிமிட்டிரி ஆகியோரின் மனநிலைகளும் ஒரு பெரிய குற்றத்தின் நிறைவேற்றமும் இருபதாம் நூற்றாண்டு சரித்திரத்தின் சில சாராம்சங்களை தாஸ்தயேவ்ஸ்கி கரமஸோவ் சகோதரர்கள் மூலம் பதிவு செய்துவிட்டது போன்ற பிரமை நமக்கு ஏற்படுகிறது.

ஆக கரமசோவ் சகோதரர்களின் கதையைச் சுருக்கமாகப் பார்த்தால் ஃபயோதர், அவனுடைய நான்கு குழந்தைகள் – டிமிட்டிரி, ஐவான், அலெக்சி, ஸ்மர்டிக்கோ – சோஸிமா என்ற முனிவர், க்ருஷங்கா என்ற வேசி ஆகியோரின் கதைதான். துணைக் கதாபாத்திரங்களும் துணைச் சம்பவங்களும் மிக அதிக அளவில் இருக்கின்றன. இருப்பினும் நாவலின் ஆதார சுருதி நான் மேலே குறிப்பிட்டிருக்கும் கதாபாத்திரங்களைச் சுற்றியே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

7

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை ஒரு சில வார்த்தைகளில் சுருக்கிச் சொல்ல முடியாது. சுருக்கியும் சூத்திரங்களில் ஒதுக்கியும் கூறப்படும் வார்த்தைகள், அவன் படைப்புலகத்தின் பன்முகத் தன்மையை சிதைப்பதாகவே இருக்கும். தாஸ்தயேவ்ஸ்கியின் முக்கியமான நாவல்களை சிரத்தையுடன் படிக்கும் ஒரு வாசகன், சாகித்யத்தில் பல்லவி போல் அவனுடைய மொத்தப் படைப்புகளிலிருந்து சில பல்லவிகள் அழுத்தம் பெற்று வலுப்பெறுவதை உணர முடியும். ஒன்று தெளிவானது. வாழ்க்கையைப் பற்றிய மேலோட்டமான புரிதல்களிலிருந்து உருவாகும் அஞ்ஞானத் திருப்திக்கு அவன் முதல் எதிரி. இந்த மதிப்பீட்டில் கருத்து வேற்றுமைக்கு இடம் இல்லை என்றே கூறலாம். எப்போது மனிதன் எளிமையானவன் அல்லன் என்ற முடிவுக்கு வந்துவிட்டோமோ அப்போது வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் காரியமும் எளிமையானது அல்ல. மனிதனின் பலங்களையும் பலவீனங்களையும் மனித மனத்தின் அடியாழங்கள் சார்ந்து புரிந்துகொள்ளப்படும்போதுதான் ஓரளவேனும் மனிதன் தன்னிறைவுடன் வாழும் சமூகத்தை உருவாக்க முடியும். தத்துவங்களுக்கும், மனிதனின் வேட்கைகளுக்கும் ஆன இடைவெளி விரிவு பெற்றுவருகிறது. மையத்தில் வைக்க வேண்டிய மனிதனை மறந்து, தான் தழுவி நிற்கும் தத்துவத்தின் வெற்றியை அரசியல்வாதி புலம்பிக் கொண்டிருந்தபோது, துன்பத்திலும் துயரத்திலும் அல்லாடிய மனிதனின் கதையை வரலாறு பதிவு செய்துவிட்டது. இந்தப் பின்னணியில் முன்கூட்டிய தீர்மானங்களுக்கோ தத்துவ இறுக்கங்களுக்கோ ஆளாகாமல் மனிதனை, சமூகத் திரையின் பின்னின்று இயங்கும் அவன் மனதின் உள்ளறைகளைப் பதிவு செய்த தாஸ்தயேவ்ஸ்கியை, வரலாற்றின் போக்கை முன்கூட்டி உணர்ந்த தீர்க்கதரிசி என்று சொல்லவேண்டும்.

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். அவனுடைய வாழ்க்கையும் அவன் எழுதிய நாவல் போலவே இருக்கிறது. இதை மற்றொரு விதத்தில் சொன்னால் அவன் தன் வாழ்க்கை அனுபவங்களை ஆதாரமாக வைத்தே தன் முழு படைப்பையும் உருவாக்கி இருக்கிறான். அவன் வாழ்க்கையோ ஒரு நிரந்தர சோதனை. அவனைக் குதறிய கொடுமைகள் அவன் படைப்பிலும் பிரதிபலித்து உள்ளன. தீமையின் அடர்த்தியான நிழலுருவங்களை அவன் உருவாக்கியதில் வியப்பில்லை.

ஆனால் இந்தக் கரிய உருவங்களை உருவாக்கிய தாஸ்தயேவ்ஸ்கியே மனிதத்துவத்தின் உன்னத உதாரணங்களையும் படைத்திருக்கிறான். இதற்கான ஆற்றலை அவன் எவ்வாறு பெற்றான்? தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத் தாண்டி வாழ்க்கையின் முழுமையை எவ்வாறு அவனால் தரிசிக்க முடிந்தது? அன்பும், குரூரமும், சுதந்திரமும், அடக்குமுறையும், நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், ஒளியும், இருளும், நன்மையும், தீமையும், புனிதமும், மாசும் எவ்வாறு தம் படைப்பில் இடம்பெறச் செய்ய அவனால் முடிந்தது?

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகத்தை இலக்கியவாதிகள் கவனித்த அளவுக்கு – ஒருக்கால் அதை விட அதிகமாகக்கூட – பிற துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் கவனித்திருக்கிறார்கள். உளவியல், இறையியல், சமூக விஞ்ஞானங்கள், தத்துவம், குற்ற ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரும் சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகத்தை ஆழமாக ஆராய்ந்து, தங்கள் துறைகளுக்குக் கொடைகள் சேர்க்கும் எண்ணற்ற அவதானிப்புகள் அவனிடம் இருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சிகளைத் தூண்டிய பீஜங்களை அவனிடமிருந்து கற்றுக் கொண்டிருப்பதைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளாத எந்த உளவியல் அறிஞனும் அவனுக்குப் பின் உலகத்தில் தோன்றவே இல்லை. காலத்தின் நீட்சியில் வெளிப்படும் புதிய உண்மைகளின் முதல் கிரணங்களைத் தத்துவவாதிக்கும் விஞ்ஞானிக்கும் முன்னால் கலைஞனின் ஸ்பரிசக் கொம்புகள் பதிவு செய்துவிடுகின்றன என்பதற்குத் தலைசிறந்த உதாரணமாக தாஸ்தயேவ்ஸ்கி நின்று கொண்டிருக்கிறான். ஆனால் இந்த புதிய உண்மைகள் மீது சாய்ந்து நிற்பவை அல்ல, தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள். அவை மனிதன் மீது சாய்ந்து நிற்கின்றன. தன்னை அறிந்துகொள்ள விழையும் மனிதன், தன் காலத்தை அறிந்துகொள்ள விழையும் மனிதன், வாழ்க்கையின் எண்ணற்ற முகங்களைப் புரிந்துகொள்ள விழையும் மனிதன், இருக்கும் காலம் வரையிலும் அவனுக்கு தாஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இருந்துகொண்டுதானிருக்கும்.

பிற்குறிப்புகள்:

[i]  மிகுந்த ஆவேசத்துடன் இந்த மதிப்பீட்டை முன்வைப்பவராக இருவரைக் கூறலாம். ஒருவர் காலஞ்சென்ற தமிழ் எழுத்தாளரும் என் நண்பருமான கு.அழகிரிசாமி. மற்றொருவர் பி.கோவிந்தப்பிள்ளை. மலையாள விமர்சகர். மார்க்சீயவாதி. இடதுசாரி இலக்கியங்களை தன் சிந்தனைகளால் கடுமையாகப் பாதித்துக் கொண்டிருப்பவர்.

 

[ii]  பீட்டர்ஸ்பர்க்: பின்னாட்களில் பெட்ரோகிராடு என்றும் லெனின் மறைவுக்குப் பின் லெனின்கிராடு என்றும் பெயர் பெற்றது.

 

[iii]  தாஸ்தயேவ்ஸ்கிக்கும் பிரெஞ்சு மொழி தெரியும். அவன் பால்சாக்கை ருஷ்ய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறான்.

 

[iv]  தாஸ்தயேவ்ஸ்கியின் பின்வந்த நாவல்களை பெலின்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். ‘ஏழை எளியவர்களில்’ வெளிப்பட்ட சமூகத்தளம் பின் வந்த நாவலில் இல்லை என்பது காரணமாக இருந்திருக்கக்கூடும்.

 

[v]  மிக்கேல் பெற்றஷேவஸ்கி என்பவன் ஒரு அரசு ஊழியன். இவன் இல்லத்தில் இளைஞர்கள் கூடி சோஷலிசச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு வந்தனர். அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

 

****

“தனி நபர்களை எந்த அளவுக்கு வெறுக்கின்றேனோ அந்த அளவுக்கு சமுதாயத்தை நேசிக்கின்றேன்.”

  • ‘கரமசோவ் சகோதரர்கள்’

 

“தனிமையில் உன்னை அடைத்துக் கொள்ளாதே, இயற்கையிடம் உன்னைத் தந்துவிடு, உன்னையே விட்டுவிட – சிறிது மட்டுமே புற உலகிற்கும் புறவய நிகழ்வுகளுக்கும்.”

  • ‘முட்டாள்’

நன்றி :

கல்குதிரை தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழிற்கு,

காலச்சுவடு கண்ணன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.