1)சிறிது வெளிச்சம்
எண்ணும் போதெல்லாம்
எடுத்துப் பார்க்க
ஏதுவாகப்
பணப்பையினுள்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேன்,
கடந்தகால மகிழ்ச்சியின்
அடையாளமாக
அந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை.
மறதியின்
மஞ்சள் நிறம் படர்ந்து
மங்கிவிடாதிருக்க வேண்டி
மனதின்
இருள் மறைவில்,
நிதமும் அதை
நினைவின் ஈரத்தில்
கழுவியெடுத்துக்
காயவைப்பேன்.
வயோதிகத்தின் நிழல்கள் கவிந்து
கனவுகளின் வர்ணங்கள்
மெல்ல வெளிறத் தொடங்கும்
இம் மத்திம வயதிலும்
ஒரு பொழுது வாழ்ந்தேன் என்பதன் சாட்சியாய்
காட்சியளிக்கும்
அப்படத்தில்
புகைப்படக் கருவியை நோக்கிப்
புன்னகைக்க முயன்றபடி
சற்றே விறைப்பாக நிற்கும்
சிறுவனின் கண்களில்
பிறை போல மினுங்கும்
ஒளியின் பிணையில்தான்
புயலையும்
இருளையும் மீறி
இன்றுமென்
கலங்கள்
கடலினின்றும்
கரைக்குத் திரும்புகின்றன.
2) துலாபாரம்
எனக்கு
அவ்வப்போது
எவரெவராலோ
அணிவிக்கப்பட்ட
அன்பின் ஆபரணங்கள்
அனைத்தையும்
நினைவினின்றும்
ஒவ்வொன்றாய் கழற்றி
அடுக்கி வைத்தபிறகும்
எதிரில் நான்
ஏறி அமர்ந்திருக்கும் தட்டின்
எடை
தாழவேயில்லை.
ஈடு வைக்க
இனி ஏதுமில்லை
என்றானதும்தான்
அவ்வெண்ணம்
மின்னிட்டது.
உன் புறக்கணிப்பின்
தாளாத வெறுமையில்
உள்ளத்தில் கிளைத்திருந்த வலியைத்
துளி இலையெனக்
கிள்ளி வைத்தேன்.
தட்டுகளின் சமநிலை
சட்டென மாற
துலாக் கோல் நடுவே
அதுகாறும்
அல்லாடிக்கொண்டிருந்த முள்
அடுத்த கணமே
அசைவற்று நிலைத்தது.
3) ஆழி பெரிது
‘அவர் அடிக்கடி
அழைத்துப் பேசும்
அந்தவொரு எண்ணை மட்டுமல்ல
அலைவரிசை கிடைக்காத போது
அரிதாகத் தகவல் அனுப்பும்
இன்னொரு எண்ணையும் கூட
எனது அலைபேசியின்
நினைவகத்தினின்றும்
அறவே அழித்துவிட்டேன்!’
செயற்கரிய செயலொன்றைத்
தானாகத் தனியாகவே
செய்து முடித்த
சிறுமி ஒருத்தியின்
பூரிப்பு வழிந்தது
அவள் குரலில்.
அடுத்து எந்நொடியில்
உடைந்தழப்போகிறாளோ என்கிற
அச்சத்துடனே நோக்கினேன்
அவள் வதனத்தை.
முதல் முறை
அம் மனிதரின் பெயரை
அவள் உச்சரித்த கணம்
எனக்கு நினைவில் எழுந்தது.
நாங்கூழ் புழுவுடன் சேர்த்து
நாசியில் கோர்த்த
தூண்டில் முள்ளோடு
துடி துடிக்கக் கரையில்
தூக்கி எறியப்பட்ட
கனத்த மீனொன்று
நீருக்குத் தவிப்பதுபோல
அன்று
பேச்சுக்கு நடுவே
பெருமூச்சு விட்டவளாக
அவ்வப்போது
பேசாது நின்றாள்.
சொன்னதோடு அவள்
சொல்லாததையும் சேர்த்து
அந்த சித்திரத்தை நானாகவே
பூர்த்தி செய்துகொண்டேன்.
மௌனத்திலிருந்து
கண்ணீரின் ஊடாக
பேச்சிற்குத் திரும்பும்
நெடிய வழியில்
தனது
புன்னகையின் ஆழத்தில்
பொருக்கோடிப் போயிருக்கும் வடுவையும் வலியையும்
புரிந்துகொள்ள அவளென்னை
பொறுமையாய் பழக்கினாள்.
‘நான் செய்ததொன்றும்
தவறில்லைதானே?’
என்பதாக
ஏறிட்டுப் பார்த்தவளிடம்
தன்மையோடு சொன்னேன்,
‘தீர யோசித்து
தீர்க்கமாகப் பின்பற்றும் தீர்வுகளெல்லாம்
நமது நாளாந்த கடமைகளுக்கு
நன்மை பயக்கும்.
ஆனால்
உள்ளுணர்வின்
மெல்லிய குரலுக்குச்
செவி சாய்த்து,
நொடியும் சிந்திக்காது
செயல்படுத்துகிற முடிவுகள்தாம்
வாழ்க்கையைப்
பழகிய பாதையிலிருந்து
வழுவச் செய்து
புதியவொன்றாக்கும்!’
அகம் மகிழ்ந்தவளாக
முதுகிட்டுப் போகிறவளைப்
பார்த்தவாறிருந்தேன்.
கரையின்றும் எவ்வி
அலைகளை மேவி
ஆழத்து நீருள் நழுவிடும்
மீனென ஒரு கணம்
மின்னி மறைந்தது
மூக்குத்தி அணிந்திராத
அம்முகம்.