பூனைகளின் பூலோகம்- ஹருகி முரகாமி படைப்புலகம்

பூனை ஒன்றும் அப்படி முக்கியமான விஷயமில்லை… என்று துவங்கும்   ஆ.மாதவன் தனது பூனை சிறுகதையின் முதல் வரியிலேயே அதன் பிரதானப் போக்கை நிர்ணயிப்பது எது என்பதின் பூடகத்தை உடைத்திருப்பார்.

மனைவி வெளியூருக்குச் சென்றிருக்கும் நேரத்தில் அவள் செல்லமாக வளர்த்து வரும் பூனை கிணற்றில் விழுந்து விடுகிறது. தனக்குப் பிடிக்காத பரப்பிரம்மம்  தொலைந்தது என்று கணவனால் சமாதானமாக முடியவில்லை. மனைவியின் ஏச்சுப் பேச்சுகளை எண்ணி மருளுகிறான். இந்த சமயத்தில் உணவு பரிமாற வரும் பக்கத்துவீட்டுப் பெண்மணி மீதான மோகம்… மருட்சியை மறக்கடிக்கும் மோகம், மோகத்தைக் கலங்கடித்த பூனை என்பதாகச் சிறுகதையில் பூனையின் ஆளுமையே ஓங்கியிருக்கும்.

ஆ.மாதவனின் மீசைப்பூனை  சிறுகதையில் ஒரு பெண்மணிக்கும் பூனைக்குமான நேசமானது திடீரென நேரும் அதிர்ச்சியினால் அவள் ஆழ்மனதில் அழுத்தமான பிம்பங்களைத் தோற்றுவித்து விடும். மனிதர்கள் தங்கள் தற்காப்பு சுய வெறியாட்டத்தில் பூனைகளைக் கொன்று குவிப்பதே அதற்கான காரணமாகக்  கூறப்பட்டிருக்கும்.

செல்லப் பிராணிகள் வளர்ப்பில் முதலிடத்தில் நாயும் இரண்டாமிடத்தில் பூனையும் அங்கம் வகிக்கும் நிலையில் பூனை மனிதர்களை அச்சுறுத்தும் அபாயகரமான விலங்கா?

முரகாமியின் வாசகர்கள் அறிந்ததே, பூனை அவரது எழுத்துகளில் அச்சு மையைப் போல் பந்தப்பட்டிருக்கும். தவிர்க்க முடியாத அம்சமாக ஆளுண்ணும் பூனைகள் குறித்த செய்திகளை முரகாமி தனது சிறுகதைகளிலும் நாவலிலும் அடிக்கடி எழுதிவிடுகிறார்.

ஏதென்ஸின் புறநகர்ப் பகுதியொன்றில் கணவனையிழந்த மூதாட்டியொருத்தி தனிமையின் வெறுமையில் கரைந்துவிடாமல் இருப்பதற்காகத் தனது வீட்டில் நிறையப் பூனைகளை வளர்த்து வருகிறாள். ஒருநாள் சோபாவில் அமர்ந்திருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்து விடுகிறாள். அவளுக்கு நண்பர்களோ உறவினர்களோ கிடையாது என்பதால் உயிரில்லாத 70 வயது உடலை ஒருவாரம் கழித்தே கண்டறிந்திருக்கிறார்கள். அவளது இறப்பிற்குப் பின்னால் கதவும் ஜன்னலும் மூடப்பட்ட வீட்டிலிருந்து வெளியேற வழியில்லாது, பூனைகள் தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்வதற்குத் தங்கள் எஜமானியின் மென்மையானத் தசைகளை ருசி பார்த்திருக்கின்றன.

Sputnik Sweetheart ஸ்புட்னிக் இனியாள்

இந்நாவலில் மியுவும் சுமிரேவும் ஆளுண்ணும் பூனைகள் குறித்த செய்தியைப் பேசிவிட்டு அவர்கள் அறைக்குத் திரும்பிய அந்த இரவில் மியுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் சுமிரே ஒரு புகையைப் போன்று மாயமாக மறைந்து விடுகிறாள்.

நவம்பர் 3,1957 ஆம் ஆண்டு ரஷ்யர்கள் உருவாக்கிய முதல் செயற்கைக்கோள் முதல்முறையாகப் பூமியிலிருந்து ஓர் உயிருள்ள ஜீவனான லைகா என்கிற நாயுடன் வளிமண்டலத்திற்குப் பறந்து சென்றது. ஆனால் ஸ்புட்னிக் 2 லைகாவுடன் மீண்டும் பூமிக்குத் திரும்பவேயில்லை. அது விண்வெளியின் முதல் பலி.

ஸ்புட்னிக் இனியாள் நாவலில் மூன்று கதாபாத்திரங்கள். ஸ்புட்னிக் போல் தொலைந்துபோன சுமிரே, அவளது ஆண் நண்பரும் பள்ளி ஆசிரியருமான இந்நாவலை நம்மிடம் விவரிக்கும் கதைசொல்லியான கே,மூன்றாவது சுமிரேவின் காதலி மியு. ஆனால் மியுவிற்கு காதல் இல்லை.

சுமிரேவின் ஏக்கமெல்லாம் ஒரு நாவல் ஆசிரியராவது. அதற்குக் கதைசொல்லியான அவளது நண்பன் கொடுக்கும் வித்தியாசமான ஆலோசனை பலிகொடுப்பது.

சீனர்கள் தொன்மையான முறையில் தங்கள் வீட்டினை அமைக்கும் பழைய வழக்கத்தில்  போர்க்களங்களில் சிதறியிருக்கும் வெளுத்த எலும்புகளைச் சேகரித்து தங்கள் பெரியக்கதவுளை அலங்கரிப்பார்கள். இது இறந்த வீரர்களின் ஆன்மா தங்கள் வீடுகளைக் காக்கும் என்கிற நம்பிக்கை. மேலும் ஆன்மாக்கள் உயிர் பெறுவதற்காகப் பல நாய்களை இழுத்து வந்து கழுத்தை அறுத்து ரத்தத்தைக்  காய்ந்த எலும்புகள் மீது தெளிப்பார்கள். நாவல் எழுதுவதும் அப்படித்தான் என்கிறான் சுமிரேவின் நண்பன்.

” நீ எலும்புகளைச் சேகரித்து உன் கதவை அமைக்கிறாய். ஆனால் கதவு எத்தனை அழகாக இருந்தாலும் அதுமட்டும் உயிர் கொண்டு சுவாசிக்கச் செய்துவிட முடியாது. கதை என்பது இந்த உலகம் சார்ந்தது அல்ல. ஒரு நிதர்சனமான கதை என்பதற்கு அற்புதமான ஞானஸ்நானம் தேவைப்படுகிறது. புவியின் இந்தப் பக்கத்தை அதன் மற்றொரு பக்கத்துடன் இணைக்க…”

இதுவொரு உருவகம். சுமிரே தான் எழுதுவதற்காக எதையும் கொல்லத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்கிறாள். காலமும் – அனுபவமும் எழுத்தைத்  தீர்மானிக்கும் சங்கதிகள். சுமிரே வித்தியாசமானவள். அவளிடம் உனக்கு எது தெரியும்? என்று கேட்டாள்… ‘நான் எதில் சிறந்து விளங்குகிறேன் என்பதைவிட என்னால் முடியாதது என்னவென்று சொல்வது எளிது.’ என்கிறாள்.

‘என்னால் சமைக்கவோ வீட்டைச் சுத்தம் செய்யவோ முடியாது. எனது அறை ஒரு குப்பைக்கூளம். எனது பொருட்களை எப்பொழுதும் தொலைத்துக் கொண்டே இருப்பேன். எனக்குத் இசை பிடிக்கும் ஆனால் கொஞ்சம்கூட பாட வராது. என் நிலை தடுமாறும். ஒரு தையல்கூட சரியாக தைக்கத்தெரியாது. எனக்கு திசைகள் குளறுபடி, எனவே இடம் வளம் சொல்லத் தெரியாது. கோபத்தில் பொருட்களை உடைப்பேன், பிறகு வருந்துவேன். எனது சேமிப்பில் பணம் இல்லை. நான் கூச்சச் சுபாவம் கொண்டவள். எனக்கு அதிகமான நண்பர்கள் கிடையாது…”

சுமிரேவின் இத்தகைய வெளிப்படையான அணுகுமுறை மியுவிற்கு பிடித்து அவளைத் தனது அலுவலக உதவியாளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். ஆனால் சுமிரேவிற்கு மியுவின் மீது ஏற்படும் கவர்ச்சி, காதலாகவும் காமமாகவும் மாறும் வேளையில் இசையின் துவக்கத்தில் அதிருப்தியளிக்கும் ஒரு அபஸ்வரத்தைப் போன்று, அது மியுவின் அருமையான கோடையின் மீது அச்சுறுத்தும் நிழலாக விழத் தொடங்கியது.

முரகாமியின் நாவல்கள் கலையார்வம் நிரம்பிய பொற்கொல்லன் நுட்பத்துடன் உருவாக்கும் ஆபரணத்தைப் போன்றது. ஆபரணத்தின் பிரகாசத்தைக் கூட்டுவதற்குத் தரமான கற்கள் சரியான வடிவத்தில் தேவையான இடங்களில் பொருத்தப்படுவது போல ஸ்புட்னிக் இனியாள் நாவலில் முரகாமிப் பொருத்தியுள்ள கீழ்க்கண்ட விவரணைகள் விழிகளை உயர்த்துகின்றன.

  • கல்லூரியில் இலக்கியம் படிப்பது வெள்ளரிக்காயின் கசப்புப்பகுதியை கடிப்பது போல…
  • சேவல் கூவக்கூட ஆரம்பிக்காத வேளையில், பரிதாபமான இந்த நிலா இன்னும் கிழக்குவானில் அயர்ந்த சிறுநீரகம் போல் தொங்கிக்கொண்டிருக்கிறது.
  • இந்த காபி கடையிலேயே அமர்ந்து, நகரத்தின் நறுமணத்தை நாய்போல் முகர்ந்து கொண்டு, குரல்களையும் சத்தங்களையும் கேட்டுக்கொண்டு, என்னைத் தாண்டிச் செல்லும் முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்க நினைக்கிறேன்.
  • என் மனம் காலியாயிருந்தது. அடர் மழையில் நெல் வயல் போல். எனக்கு என்ன நடக்கிறது என்று புலப்படவில்லை, படுக்கை இன்னும் மதியப் புணர்தலின் ஞாபகத்தைத் தேக்கியிருந்தது. நிஜமோ அதற்கு நேர்மாறாகப் பொருந்தாத பொத்தான்  போட்ட ஒரு சட்டை போன்றது.
  • ஒவ்வொரு கதையும் சொல்லப்பட வேண்டும். இல்லையென்றால் நீ உன் ரகசியத்திடம் கைதியாக இருப்பாய்.
  • தனிமையில் இருப்பதென்பது நீ ஒரு பெரிய நதி முடியும் இடத்தில் மழை பெய்யும் மாலை வேளையில் நின்றுகொண்டு அந்த நதி கடலில் கலப்பதைக் காண்பது.

ஜப்பன் மொழியில் 1999இல் வெளியான முரகாமியின் (Sputonic no Koibito) Sputnik Sweetheart ஆங்கிலத்தில் ஜேம்ஸ் பிலிப் கேப்ரியல் (James Philip Gabriel) மூலம் 2001-ல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது. 2023இல்  எதிர் வெளியீடு பதிப்பகத்தின் வழியாக முனைவர் ர.லக்ஷ்மி ப்ரியா மொழிபெயர்ப்பில் தமிழில் “ஸ்புட்னிக் இனியாள்” வெளிவந்தது. தமிழில் இதுவரை வெளியான முரகாமியின் படைப்புகளில் சிறப்பான மொழிபெயர்ப்பு நூலாக இதனைச் சொல்ல முடியும். இரண்டாவது மொழியாக்கத்திலிருந்து மீண்டும் வேறொரு மொழிக்கு மொழியாக்கம் செய்வதில் இயல்பாக உண்டாகும் விலகல் ர.லக்ஷ்மி ப்ரியாவின்  மொழிபெயர்ப்பில் எங்கும் உருவாகவில்லை. மூலநூலின் படைப்பு சுருதிக்கு நெருக்கமாக இயைந்து செல்லும் அதேவேளையில் அவரது மொழிபெயர்ப்பு தமிழ் வாசகப் பரப்பு வட்டத்திற்குள் லயத்துடன் பயணிக்கிறது . “அவளுடைய உடல் ஒரு மடந்தைக்கு உண்டான சில கூறுகளோடும் காலத்தின் வலி மிகுந்த ஓட்டத்தால் கண்மூடித்தனமாகச் சடாரென்று திறக்கப்படும் ஓர் அரிவைக்கு உண்டான சில கூறுகளோடும் இருந்தது.” இப்படியான மொழிபெயர்ப்பாளரிடம் தமிழ் வாசகர்கள் அதிக உலக இலக்கியங்களை எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை.

Kafka on the shore காஃப்கா கடற்கரையில்;

முரகாமியின் பெருநாவலான இதிலும் பூனைகள் மாயத்தின் வாசத்தடத்தை உருவாக்கிச் செல்கின்றன. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் நுட்பமான நுண் பிம்பங்களைக் கூர்ந்து நோக்கும்போது விரியும் கதையில் நகாடா என்கிற கிழவர் தனக்கு விருப்பமான விசித்திரமான வேலையின் மூலம் நம்மை ஈர்க்கிறார். குடும்பத்தில் செல்லமாக வளர்ந்து  தொலைக்கப்படும் பூனைக்குட்டியைக் கண்டுபிடிப்பதுதான் அவரது வேலை. பிற பூனைகளின் உதவியுடன் தொலைந்துபோன பூனைகளின் தடம் தேடி அலைவார். இப்பணி திருப்தியான வாழ்க்கையை ஒரு துண்டை போல் தன்தோளில் அணிந்திருப்பதான தோற்றத்தைக் கிழவருக்குத் தருகிறது. அவரது வாழ்வின் முன்வரலாற்று தரவுகளின் பிரமிப்பு எதிர்காலப் பிரமாண்டத்தின் புதிர்களை  விடுவிக்கிறது.

போர் நிலப்பரப்பின் மீது களமாடினாலும் அது மக்கள் வயிற்றின் மீதான முரட்டுத் தாக்குதலாகி வலியைத் தரவல்லது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் பள்ளி சுற்றுலா என்பது வனப்பகுதியில் சிறார்கள் தங்களுக்கான உணவு தேடுதலுக்குப் பயிற்சியளிக்கும் முறையாகப் போதிக்கப்பட்டது. உண்ணக்கூடிய காளான்களைச் சேகரித்துக் கொண்டிருந்த பதினாறு சிறுவர்கள் ஒட்டு மொத்தமாக மயங்கி விழுகிறார்கள். போர் மேகம் சூழ்ந்த காலமென்பதால் இதற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையை இராணுவம்  மேற்கொள்கிறது. விஷக்காளன், ஆழ்நிலை மயக்கம், காற்றில் விஷம், போர்த்தளவாட ஆய்வு, கூட்டு அறிதுயில் நிலை … இப்படிப் பல கோண விசாரணையில் காரணத்திற்கான  தடயங்கள் எதுவுமே சிக்கவில்லை. ஆனால் ஒரே அதிருஷ்டம் சில மணி நேரங்களுக்குப் பிறகு சிறுவர்களுக்கு நினைவுத் திரும்பி விடுகிறது. அந்தவொரு சிறுவனைத் தவிர… அவன் மேல்சிகிச்சைக்காக உயர்நிலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறான். முடிவில்லாத விசாரணையும்  தொடர்கிறது. சிறிது காலம் கழித்து நிகழ் நினைவிற்குச் சிறுவன் திரும்பும்போது மனிதரோடு தொடர்பு கொள்ளும் மொழியை மறந்து  விடுகிறான். அவனது பதிவுகளில் பழைய சங்கதிகள் எல்லாமே அழிபட்டுவிட்டன. பொதுவாக அவன்  பெயர், ஊர் உட்பட எல்லாமே… ஒட்டுமொத்தமாய் நினைவிழிந்த  வெறுமை நிலையில்தான் அவன் வாழ்வு துவங்குகிறது. அவன்தான் நகாடா. பூனைகளின் மொழி தெரித்து அவைகளுடன் பேசும் கிழவன்.

நகாடா தனது எல்லைக்கோட்டின் வழக்கத்திற்கு மீறிய சூழ்நிலைகளைத் தவிர அதைத் தாண்டி ஒருபோதும் பயணிப்பதில்லை. தனது வட்டத்திற்குள் இருக்கும் வரையில் மட்டுமே பாதுகாப்பையும் திருப்தியையும் உணர்பவர். அவருக்கு மனக்குறைகள் கிடையாது. எதன்மீதும் கோபம் கிடையாது. தனிமைச் சார்ந்த உணர்வுகளும், பாலியல் சுமைகளும், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளும், தனது வாழ்க்கையை கஷ்டமானதாக அல்லது அசௌகரியம் மிகுந்திருப்பது குறித்தும் அவருக்குப் புகார்கள் கிடையாது. கிழவர் நகாடா தனது வாழ்க்கைப் பாதையில் எது வந்தாலும் அதை நிதானமாக அனுபவித்தவாறு சென்றுக் கொண்டிருப்பவர். எதிர்பாராத விதமாக ஜானிவாக்கர் என்கிற பூனை கொலைகாரனைச் சந்திக்கும் வரையில் பிரச்சனையில்லை. 

பிராணிகளைக் காப்பற்றும் தனது தன்னியல்பைக் கடந்து,  ஜானிவாக்கரைக் கொல்லும்படியான சூழல் நகாடாவிற்கு ஏற்படுத்தப்படுகிறது. நகாடா தான் கொலை செய்ததாக முன்வந்து சொல்வதை இளம் காவலன் அலட்சியம் செய்கிறான். அவரை பைத்தியகார கிழட்டு முண்டமாக அசட்டை செய்யும்போது கிழவர் முன்னறிவித்தபடி நகரத்தில் மீன்மழை பொழிகிறது. காவலன் அரண்டு போகிறான். நகரம் அதிர்விலிருந்து மீள்வதற்குள் உள்ளுணர்வின் வழிகாட்டுதலைப்  பின்பற்றி  கிழவர் அந்நகரத்தை விட்டு வெளியேறுகிறார். பலரின் உதவியால் அவரது பயணம் தொடர்கிறது. வானிலிருந்து அட்டைகள் மழையாகப் பொழிகின்றன. மின்னல்கள் ஒரு பற்றியெரியும்  கயிறுகள் போல் பூமியைத் தொடுகின்றன.ஹோஷினோ என்கிற இளவயது சரக்குந்து ஓட்டுநர் மாயக் கிழவரால் கவரப்பட்டு அவருடனான மாய நினைவுத் தடங்களில் சேர்ந்து பயணிக்கிறான். 

நகாடாவின் தூக்கம் ஒரு மாரத்தான் தூக்கம் போன்றது. அசைவின்றி ஒரே இடத்தில்  அவரால் மூன்று நாட்களுக்கு மேல் தூங்க முடியும். இது போன்ற முரண் குவியலைச் சுமந்து செல்லும் கிழவரை சவ்வுமிட்டாய் விற்பவன் பின்னால் மயங்கிச் செல்லும் சிறுவன் போல் வாசகனும் பின் தொடர்கிறான். இறுதியில் ஒருநாள் அவரது முடிவற்ற தூக்கம் தன்னை சிக்க வைக்கப்போவது தெரியாது அதுவே விடுவிக்கவும் போகிறது என்பதை உணராது, அந்தச் சரக்குந்து ஓட்டுநர் தத்துவம் பேசும் மாய விலைமாதுவுடனான களிப்பிற்கு பிறகு இரவொன்றின் மாய வெளியில் நிழல் அங்கமாகிப் போவது தவிர்க்க முடியாதது.

நாணயத்தின் மறுபுறத்தில் இருப்பவன் பதினைந்து வயது சிறுவன் காஃப்கா டமூரா. சுயவிருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறும் காஃப்கா  முரகாமியின் சாயலைப்  பிரதிபலிக்கிறான். டோக்கியாவுக்கு வெகுதூரத்தில் இருக்கும் ஷிகோகு போவதாகத் தீர்மானிக்கிறான். தந்தையைக் கொன்றுவிட்டு தன் தாயையும் சகோதரியையும் தேடிச் செல்லும் பதற்றம் அவனிடம் சிறிதுமில்லை.

டகமாட்சு போகும் பேருந்தில் சகுரா என்ற யுவாதி அவனுக்கு அறிமுகமாகிறாள்.  டகமாட்சுவில் ஒரு மலிவான விடுதியில் தங்குகிறான். தினசரி நவீன உடற்பயற்சிக் கூடத்தில் தீவிரமான உடற்பயிற்சியும் பிறகு கொமூரா நினைவு நூலகம் மூடும் வரையில் நாள் முழுவதும் அங்குப் படிப்பது, நிறைய உண்பது, சுத்தமாகத் தன்னை வைத்துக் கொள்வது… அவனது குறுகிய கால ஏகாந்த இயந்திர ஓட்டத்தில் திடீர்தடை ஏற்படுகிறது. அப்போதைக்கு அதிலிருந்து சிறு அளவில் மீள்வதற்கு சகுரா உதவினாலும் பலனில்லாமல் நூலகத்தின் இளநூலகர் ஒஷிமாவிடம் உதவிக் கேட்கிறான். தற்காலிகமாகச் சில நாட்கள்  வனப்பிரதேசத்தில் இருக்கும்  அவரது பூர்வீகக் குடிலில் தனிமையை அனுபவித்துத் தங்குகிறான். தீவிரமாக நிறையப் புத்தகங்களை வாசிக்கிறான். பிற்பாடு ஒஷிமாவின் உதவியால் நூலகத்தில் வேலையும் அங்குத் தங்கிக் கொள்வதற்கான அறையும் கிடக்கிறது. நூலகத்தின் தலைமை நிர்வாகி மிஸ் செய்கியின் கடந்த கால வாழ்வின்  வசீகரக் கதைகளில் தானும் பிணைக்க முடியாத ஓர் அங்கம் என்பதை அவன் அறியும் தறுவாயில் மிகப் பெரிய அகக்குமிழியில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து அவன் வெளிவருவதை அகன்ற மாயவெளியாக முன்னிறுத்தும் இக்கதை நம்மை ஒரு சூறாவளி உருவாக்கத்தின் மையத்தில் பிடித்து வைக்கிறது.

முரகாமியின் கதைகளில் நீங்கள் முடிவைத் தேடுவீர்களானால் நீங்கள் தொலைந்துபோக நேரிடும். இல்லையெனில் உங்களை நீங்களே விவாதமாக்கக் கூடும். எப்படியென்றாலும் ஒரு புனைவுவெளி தொடக்கத்துக்கும் இறுதிக்கும் இடையே மிதந்து கொண்டியிருக்கிறது. நாம் வெறுமனே மட்டுமல்லாது வெறுமையாகவும் இருக்கும் பட்சத்தில்  மிதக்கத் தொடங்கி விடுவோம். ஒருமுறை ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்கான வனப்பயிற்சியில் தொலைந்த இரண்டு வீரர்கள் இப்போது வரை அதே இளமையோடு காட்டில் வாழ்வது போன்றது அது. நீங்கள்  தொலைந்து போக வேண்டும் அவ்வளவே. அதற்கு முதலில் காஃப்கா கடற்கரையில் காலடி எடுத்து வைக்க வேண்டும்.

800 க்கும் மேற்பட்ட பக்கங்களில் விரிவடையும் காஃகா கடற்கரை நாவல்  வந்தே பாரத் அதிவிரைவுத் தொடர் வண்டியின் 180 Kmph வேகத்தில்  வாசிக்க வைக்கிறது.

காஃப்கா ஆன் தி ஷோர் (Umibe no Kafuka) 2002 ஆம் ஆண்டில் ஜப்பானில் வெளியானது. 2005 ஆம் ஆண்டு வெளியான பிலிப் கேப்ரியேலின் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தி டைம்ஸ் ஆஃப் நியூயார்க்கின் 2005 ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்கள் பட்டியலில் இடம் பிடித்ததோடு 2006 ஆம் ஆண்டுக்கான உலக பேண்டஸி விருதையும் பெற்றது. மெட்டா பிசிக்ஸ், கனவுகள், ஆழ்மனப் பதிவுகள் என விரிவடையும் மேஜிக் ரியலிசம் வகைமையிலான இந்நாவல் புரிதலுக்காக வாசகர்களிடம் பெறப்பட்ட 8000 கேள்விகளில் தணிக்கை செய்யப்பட்ட 1200 கேள்விகளுக்குத் தனது தனிப்பட்ட பதில்களை முரகாமி அளித்துள்ளார். அவர் சொல்வதெல்லாம் புதிர்களை விதைத்துச் செல்லும் நாவலின் உலகத்தை முழுமையாகத் புரிந்து கொள்வதற்குச் சரியான வழி அதைத் திரும்பத் திரும்ப வாசிப்பதுதான். தீர்வுக்கான களமாகவோ அதை விளக்குவதற்குகாகவே நாவல் எழுதப்படுவதில்லை. இந்நாவலில் பல புதிர்கள் ஒன்றிணைந்து, அவற்றின் தொடர்பு மூலம் தீர்வுக்கான சாத்தியக்கூற்றின் வடிவத்திற்கருகில் வாசகனை அழைத்துச் செல்கிறது.  தீர்வுகள் எடுக்கும் வடிவம் ஒவ்வொரு வாசகனுக்கும் மாறுபடும். நிதர்சனத்தில் புதிர்கள் தீர்வின் ஒரு பகுதியாகச் செயல்படுகின்றன. முரகாமியின் எழுத்துகள் இதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.

காஃகா கதாபாத்திரம் சிறுவயதில் வீட்டைவிட்டு வெளியேறிய பிரபல எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃகாவின் செயலின் மீது முகாமிட்டிருக்கும் முரகாமியின் ஆர்வத்தின் வெளிப்பாடாகவும் சடோரு நகாடா கதாபாத்திரம் இரண்டாம் உலகப்போரின் மீதான அவரது ஆழ்மனத் தாக்கத்தின் பிரதிபலிப்பாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நேர்முறையான விமர்சனங்கள் சந்தித்திருக்கும் காஃப்கா ஆன் தி ஷோர் தமிழில் கார்த்திகை பாண்டியன் மொழிபெயர்ப்பில் “காஃப்கா கரையில்” என்ற பெயருடன் எதிர் வெளியீடு பதிப்பில் 2021ஆம் வெளிவந்தது.

ஜப்பானின் கலாச்சாரம், யதார்த்தவாதம், மாயாஜாலம், பகடை, காமம், மீறல், எப்பொழுது வேண்டுமென்றாலும் ஏதோவொன்று நிகழலாம் என்கிற எதிர்பார்ப்புகள் இவற்றுடன் ஜப்பானிய ஷின்டோ மதமரபுகளும் கலந்து தர்க்க இயற்பியலின் படகில் பயணம் செய்யும் இந்நாவலில் கோமா, ஒட்சுகா, கவமுரா, மிமி ஒகாவா, டோரா போன்ற பூனைகளும் கதாபாத்திரங்களாக வருவது விசித்திரத்திலும் விசித்திரம்.

Norwegian Wood நோர்வீஜியன் வுட்

சிறியதொரு கல் பட்டால் நொறுங்கிப் போகும் கண்ணாடியைப் போன்றது பதின்பருவம். நொறுங்கி பொடிப்படுவது அவர்களது எதிர்கால வாழ்விற்கான அடித்தளம் மட்டுமல்ல. மீண்டும் ஒன்றிணைக்க முடியாத அவர்களது நுட்பமான உணர்வுகளும். உணர்வுகளின் ஒழுங்கு முறையைக் காட்டுவதற்குப் பதிலாக அதன் ஒழுங்கற்ற மறுபக்கத்தை இந்த நாவல்  பேசுகிறது. கதைக்கான சுவராஸ்யங்கள் எப்போதும் மறுபக்கத்தில்தான் மறைந்துள்ளன. இந்நாவல் முரகாமி படைப்புலகத்தின் மையிற்கல்.

ஜப்பான் பதின்பருவ இளைய  சமூகத்தின் புறவாழ்வு செயல்கள் அவர்களது உளவியலை எவ்வாறு ஊடறுத்துப் போகிறது என்பது முரகாமி அழைத்துச் செல்லும் 1960 ஆம் ஆண்டில் மட்டுமல்ல இன்றைய காலத்திற்கும் பிசிறில்லாது பொருந்துக் கூடியது. ஜப்பானின் வரலாற்று அனுபவமும் கலாச்சார விழுமியங்களும் நமக்கு முற்றிலும் பொருந்தாதது. அப்படியொரு மாறுபாடு இருப்பதால் என்னவோ அதன் மீதான ஆர்வம் மேலேழுகிறது.

முடிவற்ற இசை பிரவாகத்தினூடே  காமமும் மதுவும் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கின்றன. ஒளிவுமறைவற்ற வகையில் பாலியல் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் இளைய சமூகம் இயல்பான வாழ்வோடு தங்களைப்  பொருந்திக் கொள்வதற்கு முயன்றாலும் மனச்சிக்கல் என்பது அதன் நீட்சியாகவே தொடர்கிறது.  அதன் நிழலுருவங்களுக்கு அவர்கள் புரியும் எதிர்வினைத் தற்கொலை.

தீவிர மனவழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஜப்பானில் அதிகம். தற்கொலை பட்டியலில் ஜி7 வளர்ச்சி நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கும் ஜப்பானில் லட்சத்திற்கு பதினேழு நபர்கள் சராசரியாகத்  தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் எழுபது சதவீதத்தினர் ஆண்கள் என்பதும் அவர்கள் 20 – 44 வயதினர் என்பதும் (புள்ளி விபரத் தரவுகள் 2022 அறிக்கைகளின்படி) இந்நாவலுக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இந்நாவலின் ஒட்டு மொத்தக் கூறுகளின் விளைவுகளை யோக கலாச்சாரத்தில்  சொல்லப்படும் ஒரே வார்த்தையில் அடக்கி விடலாம். ஆம், அது “ருணானு பந்தா” இதன் பொருள் உறவுகளின் கர்மப் பந்தம். கட்டுப்பாடு என்பதை  சுய ஒழுக்க போதனைகளின் மூலமாகவோ சமூகம் வரையறுக்கும் நியதிகள் வழியாகவோ திணிக்க இயலாது. இது ஒருவர் பொறுப்பெடுத்துக் கொள்வது பற்றிய பிரச்சினை. ஒருவருக்கொருவர் மட்டுமல்லாது தனக்கும் சேர்த்து.

தனது பால்யத்தில் இருந்தே உடனிருந்த காதலன் பதின்பருவத்தில் திடீரெனத்  தற்கொலை செய்து கொள்கிறான். அவன் இறப்பிலிருந்தும் பழைய நினைவுகளிலிருந்தும் மீளமுடியாமல் தனது கல்வியைப் பாழ்படுத்தி குடும்பத்தாரையும் சோர்வாக்கி மன நோயாளியாகும் நவோகோ Naoko அவனது தோழியான டோரு வதனாபே (Watanabe Tōru) மூலம் ஆறுதலடைகிறான். அவள் மீது அவனுக்குக் காதலும் இருக்கிறது. அவளுக்கும் அது தெரியும். அவள் அதை நிராகரிக்கவுமில்லை, முழுமையாக ஏற்கவுமில்லை. சில பிரச்சனைகள் இருக்கலாம், பழைய நினைவுகள் அவள் மீதும் ஏறி அமர்ந்து பெரும் பாறையைப் போல் அழுத்துகின்றன. வாழ்வில் ஓர் ஆழ்ந்த சிரமமில்லாத சுவாசத்திற்கு அது தடையாக இருக்கிறது, அதிலிருந்து அவள் குணம் பெறுவதற்கான விழைவுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மருத்துவப் புத்துணர்ச்சிச் மையத்திற்கு செல்கிறாள்.

நோயாளியை நோயாளியாகப் பார்ப்பதென்பது சரியானது அல்ல. அது குணமாக்குதலின் பெரும் தடை. என்னைப் பொறுத்தவரை  உற்சாகத்தை மட்டுமே அவர்கள் மீது பிரதிபலிக்க வேண்டும். அதற்கு முதலில் சிகிச்சையளிப்பவர்கள் உற்சாகத்தால்  நிரம்பியிருக்க  வேண்டும். மாறாக நமது சிகிச்சையாளர்கள் தங்கள் பரிதாபங்களால் நோய்த்தன்மையை நீட்டித்து விடுகிறார்கள்.

வாட்டனபி மீள்நினைவாகத் தன் கதையைச் சொல்கிறான். அவன் மற்றவரை திருப்திப்படுத்தவோ கவனத்தை ஈர்க்கவோ செய்வதில்லையென்றாலும் இத்தகைய இயல்பு மற்றவர்கள் அவனை நெருங்குவதற்கான தடையை எடுத்து விடுகிறது. நிதர்சனத்தின் ஆழத்தைக் கூராய்வு செய்தால் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் தனது சொல் அல்லது செயல்கள் மூலம் மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ளவே முயல்கிறான்.

மிடோரி கோபயாஷி வாட்டனபியை விரும்புகிறாள். அவனுக்கும் அவளைப் பிடிக்கிறது இதில் உறுத்தல் எதுவென்றால் நாவோகோ மீதான நினைவுகளில் உழலும் மனம். அவளோ பால்யத்தில் தற்கொலை செய்து கொண்ட  காதலனின் நினைவு மூட்டையை சுமந்தபடி திரிகிறாள். இருவரிடமும் இருக்கும் பொதுத்தன்னமை காதலும் சுயநலமும். முடிவெடுத்து விட வேண்டிய உணர்ச்சிக் கொந்தளிப்பின் நிர்ப்பந்தத்தை நோக்கி காட்டாற்று வெள்ளம் போல் கதைப் பாய்ந்தோடுகிறது.

நீங்கள் ஒரு விஷயத்தால் பாதிப்படைவது என்பது அவ்விஷயத்தில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள் அவ்வளவே. அதிலிருந்து வெளியேறும் வழி இயல்பானதாகவே இருப்பினும் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ உங்களை நீங்களே பைத்தியமாக்கிக் கொள்கிறீர்கள்.  தற்போது அதைச் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, அரசியல், மதம், கொள்கைகள், நுகர்வுகள் எனப் பலவிதமான உபக்காரணிகளும் விரைவுப்படுத்துகின்றன.

தாமஸ் மாண்னின் “தி மேஜிக் மவுண்டன்”  வாசகனான 19 வயது வாட்டனபிக்கு (வதனாபே) அந்த தலைப்பிற்குப் பொருத்தமான 39 வயது ரெய்கோ என்கிற பெண்மணியால் வாழ்வின் கீதம் புலனாகிறது. அசாத்தியத்துடன் துரதிர்ஷ்டமும் நிறைந்த பியனோ இசைக் கலைஞரும் கீட்டார் வாசிப்பாளருமான ரெய்கோ அவளுக்காகவே இசைத்துத் திளைக்கும்   நுட்பத்தைக் கொண்டவள்.

ரெய்கோ Norwegian wood, Yesterday, Michelle, Here comes sun, And I love Here, Wedding blue bells… என 51 இசைக் கோர்வைகளை இடைவிடாமல் தொடர்ந்து இசைக்கும்போது புத்தகத்தை வாசிப்பவர்களும் அவளுடன் இணைகிறார்கள். வாசிப்பின்  பின்னணியில் ஏதோவொரு விதத்தில் தி.ஜா வின் “அம்மா வந்தாள்” நாவல் நினைவோடையாகப் பிணைந்து வருவதையும் தமிழ் வாசகர்களால் தவிர்க்க முடியாது.

மனிதனின் கடந்தகால நினைவுகள்  நிகழ்கால உயிர்ப்பை மறித்துப்போகச் செய்கின்றன.  நினைவு சேகரிப்புகளில் சிக்கிப்போகும் வாழ்வு ஒரு சூதாட்டம் போன்றது. காலத்தின் போக்கில் வாழ்பவனுக்கு அலையாக மோதும் நினைவுகளால் வாழ்வை இலகுவாக்கிக் கொள்வதும் சிக்கலாக்கிக் கொள்வதும் அவனது ஆளுமையைப் பொறுத்தே அமையும். இது சுய நிர்வாகத்திறன். திறமையுடன்  நிர்வகிக்காமல் விடுவதிலும் பிரச்சனை இல்லை. தவறாகக் கையாள்வதுதான் மோசமானதை நோக்கிய அதிவிரைவு பாதையில் நிறுத்துகிறது

1987இல் நோர்வீஜியன் வுட் வெளியான பிறகு இந்நாவலின் தூக்கலான பீட் போலவே முரகாமியின் வாசகர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் எகிறியது. மேற்கத்திய இலக்கிய ஆர்வமும் இசையின் மீதான தீராத வெறியும் கொண்ட ஹருகி முரகாமியின் மிகவும் எளிமையான வாசகம்  “ஒரு நல்ல படைப்பாளிக்குப் படைப்பு மனநிலையை நிர்வகிப்பதற்கும் அதற்குத் தேவையான உறுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் நல்ல உடல்நலம் அவசியம்” வாய்ச் சொல்லோடு நின்றுவிடாமல் நான்கு அல்லது ஐந்து மணி வரையிலான தொடர் எழுத்தாக்கத்திற்குப் பின்பு அதே அளவு நேரத்தை நீச்சலிலும், நடை ஓட்டத்திலும் உடற்பயிற்சிகளிலும் செலவிடுகிறார்.

நார்வேஜியன் வூட் (Noruwei no Mori) 1987இல் ஜப்பானில் வெளியானது.1989, 2000 ஆண்டுகளில் இரு ஆங்கிலமொழி பதிப்புகள் முறையே ஆல்ஃபிரட் பிர்ன்பால், ஜே ரூபின் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் பங்காற்றியுள்ளனர். ஜே ரூபினின் மொழிபெயர்ப்பு சர்வதேச அளவில் பிரபலமானது. குருட்டு வில்லோ – தூங்கும் பெண் Blind Willow, Sleeping Woman தொகுப்பில் பிற்பாடு சேர்க்கப்பட்டு 1983 இல் முரகாமி எழுதிய ஃபயர்ஃபிளை (Firefly) சிறுகதையின் தழுவலே நார்வேஜியன் வூட். இயக்குநர் Tran Anh Hung முரகாமியின் இந்நாவலை 2010இல் திரைப்படமாக்கினார்.

இளைஞர்களது இழப்பின் ஏக்கம் கட்டமைக்கும் நவீனப் புறவழிச் சாலைகள் மனித உள் இருப்பின் வரைபடத்தைத் தெளிவாகக் காட்டும். எனவே இந்நாவலுக்குள் ஒவ்வொரு வாசகனும் எளிதில் பயணிக்க முடியும். மூலநூலின் வாசிப்பு அனுபவத்தைச் சிதையாமல் தமிழில் தந்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு.க.சுப்பிரமணியன். தமிழ்ப்  பதிப்பு எதிர் வெளியீடு மூலம்  2014ஆம் ஆண்டு வெளியானது.

ஹருகி முரகாமியின் சிறுகதை உலகம்

முரகாமி Blind Willow, Sleeping Woman என்கிற (1980-2005 வரையிலான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு) சிறுகதைத் தொகுப்பொன்றின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

“நாவல் எழுதுவதில் ஒருவிதஹருகி முரகாமியின் சிறுகதை உலகம்

முரகாமி Blind Willow, Sleeping Woman என்கிற (1980-2005 வரையிலான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு) சிறுகதைத் தொகுப்பொன்றின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

“நாவல் எழுதுவதில் ஒருவிதஹருகி முரகாமியின் சிறுகதை உலகம்

முரகாமி Blind Willow, Sleeping Woman என்கிற (1980-2005 வரையிலான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு) சிறுகதைத் தொகுப்பொன்றின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

“நாவல் எழுதுவதில் ஒருவிதச் சவாலையும், சிறுகதைகள் எழுதுவதில் உடனடி மகிழ்ச்சியையும் காண்கிறேன். நாவல் படைப்பது காட்டினை உருவாக்குவதைப் போன்றது, சிறுகதை படைப்பதென்பது தோட்டத்தில் ஒரு மரக்கன்றினை நடுவது.” 

முரகாமி தனது எழுத்துப் பயணத்தில் 1979 துவங்கி 2023 வரையில் 15 நாவல்களை எழுதியிருக்கிறார். அதேவேளை தோட்டத்தில் மரக்கன்றுள் நடுவது போன்று 65 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவை ஆறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவர் எழுதிய சிறுகதைகளில் பலவும் ஒரு பூந்தோட்டத்தில் இருக்கும் மரத்தின் தென்றல் தரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.

பெரும்பாலான சிறுகதைகள் நெடுங்கதைகளாகவும் சில குறுநாவலாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தளத்தில் இயங்கினாலும், ஏதோவொரு ஒற்றை இழையுடன் பிணைக்கப்பட்டுள்ளதைக் கண்டுணர முடியும். இவை இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட புதிய படிமங்களை வெளிப்படுத்தினாலும் அந்நிய மனங்களுக்கு அந்த உணர்வுகளைக் காட்சிகளாக விரித்துக் கொள்வதில் எந்தவிதச் சிரமமும் இல்லை. இதனாலேயே அவரதுச் சிறுகதைகள் பிரபலமான உலக இலக்கிய இதழ்களில் மறுப்பின்றி உடனுக்குடன் ஆங்கில மொழியாக்கத்தில் பிரசுரமாயின. மேலும் சர்வதேச ரசிகர்களையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளன.

“ஜப்பான் மனிதர்கள் ” என்பதை இடவாகுபெயராக மட்டும் எடுத்துக் கொண்டு கடந்து போக முடியாது. சமூகம் மற்றும் மனிதனுக்கான உறவு ஓர் ஆழ்ந்த தேடலின் ஒருங்கிணைப்பில் இயைந்து போகிறது. உலகில் யார் எழுதினாலும் அதற்குள் ஒருமை நிழலாடுவதைத் தேர்ந்த வாசகன் எளிதாக இனம் கண்டுக்கொள்கிறான்.

முரகாமியின் கதைகளில் மது அருந்தும் ஆண்களும் பெண்களும் தன்னுரிமையில் நிகராக இயங்கும்  இயல்பான அங்கம். இவர்களை இரண்டு வகையில் பிரிக்கலாம்.

1. தங்கள் ஆளுமையை அதிகரிக்கக் குடிக்கிறவர்கள்.

2.எதிலிருந்தாவது தம்மை விடுவித்துக் கொள்ளவதற்காகக் குடிப்பவர்கள்.

மனித மனம் விழிப்புக்காக காத்திருப்பதை விட விழிப்புக்கான ஒலியை உள்வாங்கிக் கொள்வதற்காக சதா நேரமும் அலைபாய்கிறது. ஆனால் முன்னரே கற்பிதமாக்கிக் கொண்ட பின்னணி இசையுடன் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் ஆழமான உறக்கத்தில் கேட்கும் பூனையின் திடீர் அழைப்பொலி நிஜத்திற்கும் நிழலுக்கும் மேலும் அவர்களை அலைபாய வைக்கிறது. சிறப்பானது என்னவெனில் முரகாமியின் சிறுகதைகள் விழித்தெழுவதற்கான ஒலி பெட்டகம்.

  • The Elephant vanishes (Zō no shōmetsu)

1993 இல் வெளியான 17 சிறுகதைகளின் தொகுப்பாகும். இதிலுள்ள கதைகள் 1980 – 1991 க்கு இடையில் எழுதப்பட்டன. பின்நவீனத்துவக் கலவையுடன் சர்ரியலிசம் எனப்படும் அடிமன வெளிப்பாடுகளின் மிகை யதார்த்தவாத கோட்பாட்டிற்குள் பொருந்தும் கதைகள் தனிமனிதனின் ஏக்கம், இழப்பு மற்றும் தனிமையின் கருப்பொருள்களை எடுத்தாள்கிறது.

  • Family Affair குடும்ப விவகாரம்

சமூகத்தின் அங்கமான குடும்பத்தின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் அந்தக் குடும்ப அங்கத்தினர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து கிளைக்கிறது. எங்குப் செல்கிறோம் என்பதில் மட்டுமல்ல அதைக் குறித்து ஆழமாகப் சிந்திப்பதற்கான திறனை இழப்பதுதான் பிரச்சனை. இந்தியரோ ஜப்பானியரோ, உலக மக்கள் அனைவரின் அடிப்படைத் தேவையாகவும் விழைவாகவும் இருப்பது உடல் நலமும் உளநலமும். மகிழ்ச்சியின் ஆணிவேராக இருக்கும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதை பொறுத்துத்தான் வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானின் வேகம் மற்ற உலக நாடுகளைவிட 25 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது.  இங்குத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் சமூகத்தின் தனிமனித சுதந்திரத்தையும் சேர்த்துக் கூறுகிறேன். உடல் இரசாயனத்தால் வெடித்தெழும் இளையச் சமூகம் அதன் எல்லைக்குள் இருப்பதையும் இயங்குவதையும் மட்டுமே சுதந்திரமாகக் கருதுகிறது. கட்டற்ற போதையும், முறையற்ற பாலியல் நுகர்வும் அவர்களை மனவழுத்தத்தின் பாழும் கிணற்றில் தள்ளுகின்றன. உடலும் அதில் பிரவாகமாகும் இரசாயனமும் எல்லைக்குட்பட்ட விவகாரங்கள் என்பதால் இளைர்களின் விரக்தி ஒத்தி வைக்கப்படுவதில்லை, உடனடியாக தற்கொலை முடிவில் நிறுத்துகிறது. இது இப்போது தனிமனிதச் சுதந்திரம் என்பதிலிருந்து விலகி குடும்ப விவகாரத்தையும் மீறி சமூகத்தின் பிரச்சனையாகி விடுகிறது. இத்தகைய ஆழமான பார்வைக்கு நகர்த்திச் செல்லும் Family Affair 1985 இல் எழுதப்பட்டது. முரகாமியின் The Elephant Vanishes தொகுப்பில் இருக்கும் சிறப்பான கதை.

  •  On Seeing the 100% Perfect Girl One Beautiful April Morning

நூறு சதவீதப் பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது

முரகாமி எழுதிய கதைகளில் கவித்துவம் மிகுந்த நீளமான தலைப்பு. முரகாமியின் பல சிறுகதைகள் நீளமான தலைப்புகள் கொண்டவை. இக்கதையைப் பொறுத்தவரை தலைப்பின் வசீகரம் கதையில் இல்லை. இது முரகாமியின் ஆரம்பக் காலச் சறுக்கல் கதையாகவும் இருக்கலாம். ஓர் எழுத்தாளரின் எல்லாப் படைப்புகளை வாசிக்கும்போது மட்டுமே அவரது பன்முகத்தின் முழுமையை தெரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்களைக் கடவுளாக குருவாகத் தலைவனாக கேடுகெட்டவனாக அல்லது வேறு ஏதேனும் கவர்ச்சியின் பிம்பத்திற்குள் பொருத்தி வைத்துக்கொள்ளும் அறியாமையின் வெகுமதிக்குச் சிலவேளைகளில் தேர்ந்தெடுத்து வாசிப்பவன் ஆட்பட்டு விடுகிறான். முழுமையான வாசிப்பு தெளிவான அறிதலைத் தரும். The Elephant Vanishes தொகுப்பில் வெளியான இக்கதையைத் திரு.ராஜகோபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

  • After the quake (Kami no Kodomo-tachi wa Mina Odoru)

நிலநடுக்கத்திற்குப் பிறகு என்கிற இத்தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. ஜப்பானில் 2000 ஆம் ஆண்டிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் 2002 ஆம் ஆண்டிலும் வெளியானது. முரகாமியின் மிகவும் வழமையான பாணியில் முதல் நபர் கதைசொல்லியாக இருப்பார் அதற்கு மாறாக இதிலுள்ள ஆறு கதைகளும் மூன்றாம் நபர் வழியாகச் சொல்லப்படுகிறது. இத்தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஜே ரூபின்.

  • Super-Frog Saves Tokyo டோக்கியவை காப்பாற்றிய தவளை

ஒரு கோப்பை தேநீரில் டோக்கியோவின் அழிவைப் பற்றிப் பேசும் ஆறடி உயரத் தவளையைக் கதாநாயகன் எதிர்கொள்கிறான்.

கற்பனைக்கும் நிஜத்திற்கும் பாலம் அமைக்கும் தருணங்களில் கண்ணால் காண்பதெல்லாம் நிஜமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. டோக்கியோவிற்கு நேரப்போகும் பூகம்பத்திலிருந்து காப்பாற்ற விழையும் பெரிய தவளை மனிதனைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ளும் இக்கதையைவிட எழுத்தாளரின் தனித்துவமான நகைச்சுவைக்குச் சிறப்பான எடுத்துக்காட்டு வேறொன்றும் இருக்க முடியாது. கதை நெடுகிலும் நிதானமான தொனி இருந்தபோதிலும், ஒரு விஷயத்தின் தீவிரத்தன்மையை எடுத்துரைத்தவுடன் வாசகரை மகிழ்விக்க வேண்டும் என்பதை முரகாமி உணர்கிறார்.மாய எதார்த்தத்துடன் டால்ஸ்டாயின் அன்னா கரீனினா, தஸ்தாவின் வெண்ணிற இரவுகள் எல்லாம் வாசகனுக்கு முரகாமியின் மீதான வசீகரிப்பைக் கூட்டுகின்றன. நியூயார்க்கிலிருந்து வெளிவரும், பத்துலட்சம் பிரதிகள் வரை விற்கக்கூடிய ஆண்களின் இதழ் என்று கூறப்படும் GQ (Gentlemen’s Quarterly)  இதழில் இக்கதை வெளியானது. பிறகு after the quake தொகுப்பில் சேர்க்கப்பட்டது. Jay Rubin ஆங்கில மொழிப்பெயர்ப்பிலிலிருந்து இக்கதையை திருசெழியன் தமிழாக்கம் செய்துள்ளார்.

  • Thailand தாய்லாந்து

ஒரு பெண் மருத்துவர் சுற்றலா பயணத்தில் கனவுகளின் நிழல் குறித்து விவரிக்கும் மனிதனைச் சந்திக்கிறார்.  இறந்தகாலத் கனவுகளிலிருந்து மீட்டெடுப்பதில் துவங்கி அவளைத் தனது எதிர்காலத் கனவுகளுக்காகத் காத்திருக்க வைப்பதுடன் கதை முடிகிறது. சூட்சமமான விவரிப்புகள். முரகாமியின்  வழக்கமான இசைக் குறிப்புகள். “கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வதும் இறப்பதும் ஒருவகையில் சமமான மதிப்புடையவை.” இக்கதை  முதலில் Granta இதழில் வெளியானது பின்னர் after the quake சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

  • Blind willow sleeping woman

குருட்டு வில்லோ, தூங்கும் பெண் தொகுப்பில் 24 கதைகள் உள்ளன. இவை 1980-2005க்கு இடையில் எழுதப்பட்டவை, இதன் ஆங்கிலப் பதிப்பு  2006இல் வெளியிடப்பட்டது ( ஜப்பானிய பிரதி பின்னர் 2009இல் வெளியானது). தொகுப்பில் இருக்கும் கதைகளை பிலிப் கேப்ரியல் மற்றும் ஜே ரூபின் இருவரும் சரி பங்காக மொழிபெயர்த்துள்ளனர்.

  • நான் அதை எங்கே காணக்கூடும் Where I’m Likely to Find It

மின்தூக்கிகளுக்குப் பதில் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் ஒருவர் 24க்கும் 26க்கும் இடையேயான தளங்களில் திடீரெனக் காணாமல் போகிறார். அவரை தேடும் துப்பறிவாளன் விவரிப்பில் நகரும் மாறுபட்ட  கதைக்களம். மையப்படுத்தப்படும் காரணிகளிலிருந்து வெளியேறுவது எல்லாராலும் இயலாது. [The New Yorker, May 2, 2005 / Blind willow sleeping woman]

  •  A Folklore for My Generation: A Prehistory of Late-Stage Capitalism என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம்: பிற்கால முதலாளித்துவத்தின் ஒரு முன் சரித்திரம்;

1989 இல் The New Yorker இதழில் வெளியானது. இளம் எழுத்தாளர்கள் கற்க வேண்டிய பல நுட்பமான குறிப்புகளை மறைத்து வைத்திருக்கும் இக்கதை ஒரு பொக்கிஷம்.

  • Man-Eating Cats ஆளுண்ணும் பூனைகள்

The New Yorker இதழில்1991இல் வெளியானது. தமிழில் ஜி.குப்புசாமியின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் “பூனைகள் நகரம்” சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. மூடிய வீட்டில் மூன்று பூனைகளுக்கு உரிமையாளரான தனிமையிலிருக்கும் வயது முதிர்ந்த பெண்மணி இறந்து விடுகிறார். வெளியே வர வழியில்லாத கொலைப்பட்டினி பூனைகள் வளர்த்தவளின் சதையை பிய்த்துத்தின்ற நிகழ்வு. முரகாமி தனது படைப்புகள் பலவற்றிலும் இக்கதையைக் குறிப்பிடத் தவறுவதில்லை. இக்கட்டுரையில் ஸ்புட்னிக் இனியாள் நாவல் பகுதியிலும் இது விவரிக்கப்பட்டுள்ளது.

இக்கதை ‘உண்மையில் மனிதன் பூனைகள் நகரத்தில்தான் திரிந்து கொண்டிருக்கிறான்’ என்கிறது. ‘அப்படியா…?’ என்கிற வியப்பையும் தருகிறது. பூனைகளின் நகரமா? அடுக்கடுக்கான கேள்விகளை உருவாக்கி பதிலையும் தரும் இக்கதையை உடைத்துச் சொல்வதற்குப் பதிலாக வாசிப்பிற்கான ஆர்வத்தையூட்டும் முரகாமியின் வரிகளைத் தருகிறேன்.

  • என்னைப் போலவே காணப்பட்ட ஒரு பொருத்தமான சவுகரியமான ஸ்தூலத்துக்குள் என் மூளை தப்பாக மாட்டிக் கொண்டு விட்டது.
  • திரும்பிச் செல்லவே முடியாது. நான் தற்காலிகமாக கை கொண்டிருக்கும் இந்தத்  தசைப் பிண்டம் சாந்து கலவையால் ஆனது போலவே இருந்தது. என்னை நான் சொரிந்து கொண்டால் விள்ளல் விள்ளலாகக் கழன்று விழுந்துவிடும். அடக்கமுடியாமல் நான் நடுங்கத்  தொடங்கினேன்.
  • என் உடம்பு களிமண் பொம்மை. சூனியக்காரன் ஒருவன் மூச்சுக்காற்றும் ஊதி உயிர் கொடுத்திருக்கும் ஒரு பில்லி சூனியப் பொம்மை. நிஜவாழ்க்கையின் தணல் இதில் இல்லை.
  • The Seventh Man ஏழாவது மனிதர்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் பெரும் புயலைத் தொடர்ந்து வரும் பேரலைகளின் தாக்குதல் ஒரு  சிறுவனின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ஒருவேளை இப்படியான சந்தர்ப்பத்தை நேரில் எதிர்கொள்கையில் நீங்கள் பயத்தால் கண்களை இறுக மூடிக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு அதிகம்… அப்படிச் செய்வதால் அது நம்மிலிருந்து ஒரு முக்கியமான பகுதியைத் தனித்துப் பகுத்து விடுகிறது. லண்டனிலிருந்து வெளியாகும் சர்வதேச Granta இலக்கிய இதழில் (1996) இக்கதை வெளியானது.

  • Tony Takitani டோனி தகிதானி

ஜப்பானியர்கள் வாழ்வில் அமெரிக்காவின் பாதிப்பு பலவழிகளில்  துயரத்தை மட்டுமே தந்திருக்கிறது. தேவைக்கதிகமான நுகர்வு பிரதிபலிப்பானது அதில் ஈடுபடுவர்களை மட்டுமல்லாது சார்ந்தவர்களையும் உளவியல் ரீதியான நிறைவின்மைக்கு அழைத்துப் போகிறது. செயற்கையாகப் புகுத்தப்படும் நுணுக்கமான கட்டமைப்பைகளைப் பேசும் அருமையான கதை. Tony Takitani சிறுகதை ஆங்கில மொழியாக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் இதழில் 1990இல் வெளியானது. ஜப்பானிய இயக்குநர் Jun Ichikawa 2004இல் இக்கதையைத் திரைப்படமாக்கினார்.

  • The Kidney-Shaped Stone That Moves Every Day (2005)

இக்கதையை நகரும் சிறுநீரக வடிவக்கல் என்ற தலைப்பில் திரு.ஸ்ரீதர் ரங்கராஜ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். “ஓர் ஆண் தன் வாழ்நாளில் சந்திக்கும் பெண்களில் மூன்று பேர் மட்டுமே அவன் வாழ்வில் அர்த்தமுள்ள முக்கியமானவர்களாக இருப்பார்கள். அதற்கு அதிகமும் இல்லை. குறைவாகவும் இல்லை.” இது எழுத்தாளன் ஜூன்பேக்வின் தந்தை உதிர்த்த வாசகம். அவன் அமைதியான உளவியல் ரீதியான புனைவில்  சிறுகதை ஒன்றைக் கட்டமைக்கிறான். புனைவின் உளவியல், நிகழ் தளத்தில் பிரதிபலித்து அவன் சிறுகதையை முடித்து வைத்தாலும் கூடவே  அதிர்ச்சியொன்றையும் விட்டுச் செல்கிறது. அவன் மூன்றாவது வாய்ப்புக்காக முழுமனதுடன் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

  • A Shinagawa Monkey ஷினாகவா குரங்கு

இது மனிதர்களின் பெயரைத் திருடும் குரங்கு. இதனால் பாதிக்கப்பட்டவள் எதிர்கொள்ளும் சிக்கலும் அதற்கான தீர்வை நோக்கி நகர்த்துவதும் கதையாகிறது. இச்சிறுகதை தி நியூயார்க்கர் இதழில் 2005இல் வெளியானது.

  • Men without women Onna no inai otokotachi

பெண்கள் இல்லாத ஆண்கள் 2014இல் ஜப்பானிலும் வெளியாகி 2017இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தி வாஷிங்டன் போஸ்ட்டிற்கு எழுதும் ஹெல்லர் மெக்அல்பின் இச்சிறுகதைத் தொகுப்பின் விமர்சனத்தில் குழப்பமான சூழ்நிலைகளால் இயக்கப்படும் கதைகள் வளைந்து கொடுப்பதிலும் கதாபாத்திரங்களால் சிதைக்க முடியாத அந்நியப்படுதலின் மயக்கத்தை ஆழப்படுத்துவதாகவும் கூறுகிறார். இதே தலைப்பில் முரகாமிக்கு முன்பாகவே பெண்கள் இல்லாத ஆண்கள் என்ற பெயரில் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் சிறுகதைத் தொகுப்பொன்று 1927இல் வெளி வந்திருக்கிறது. ஜூலை 21, 1899 முதல் ஜூலை 2, 1961 வரையில் ஹெமிங்வே எழுதிய 14 கதைகள் உள்ளடக்கிய இதன் முதற்பதிப்பு அக்காலக்கட்டத்தில் தலா இரண்டு டாலர் மதிப்பில் 7600 பிரதிகள் வரை விற்பனையானது.

  • Samsa in Love ஸாம்ஸாவின் காதல்

காதல் எங்கிருந்து பிறக்கிறது? அதைக் காட்டும் கருவி எது? இதற்குச் சிலர் சிரிக்கலாம்… நானும் சிரித்தேன். நீங்கள் இந்தக் கதையைப் படித்ததும் உங்களது தடைகளை தகர்துடைத்து பெரும் சிரிப்பைக் கொணர்வீர்கள். மீனாகவோ சூரியகாந்தியாகவோ பிறக்க எண்ணி அது இயலாமல் மனிதனாகப் பிறந்துவிட்டால்…? மேலும் ஓர் இளைஞனின் உடலுக்குள் திடீரெனப் புகுந்து உயிர் கொண்டால்!? இக்கதையை வாசிப்பவர்கள் ஹாருகி முரகாமி என்கிற எழுத்தாளனை நிராகரிக்கவே முடியாது.  [The New Yorker / Men without women]

  • Drive My Car நீ என் காரை ஓட்டலாம்

மகள் வயதுள்ள பெண் ஓட்டுநரிடம்  தனது காதல் மனைவிக்கும் அவள் நிழல் காதலனுக்கும் முகிழ்ந்த நட்பு குறித்து உரையாடும் மனிதன். வித்தியாசமான களத்துடன் மாறுபட்ட உணர்வு வெளிப்படுத்தலையும்  தனதாக்கிக்கொண்ட சிறுகதை. நீ என் காரை ஓட்டலாம் சிறுகதை Men Without women தொகுப்பிலும் Freemans இதழிலும் வெளிவந்தது.

  • ஷெஹரசாத் Scheherazade

கதையின் தலைப்பு அவளது பெயர். ஆனால் உண்மையான பெயரல்ல!? இத்தகைய களமும் கதையாடலும் ஹருகி முரகாமியின் புனைவுகளில் மட்டுமே சாத்தியம். மற்றவர்கள் வீட்டிற்குள் யாருமறியாமல் நுழைவதற்கு அடிமையாகிப் போனவள்,  ஒவ்வொரு முறையும் கலவிக்குப் பின்பாக கதை சொல்வதில் அவளிடம் ஒரு முரணும் வியப்பும் கலந்திருக்கிறது. (Men Without Women /The New Yorker)

  • An Independent Organ தன்னியல்பான ஓர் உறுப்பு

ஹருகி முரகாமியின் எந்தவொரு கதையிலும் பிரம்மச்சார்ய விரதத்தை எதிர்பார்க்க முடியாது. 52 வயது முகமாற்று அறுவை மருத்துவரின் தொடர்புகள் ஒரு கோப்பையில் ஊற்றப்படும் மதுவை போல் நுரைத்து அடங்கி விட்டாலும், போதை எனும் காதல் உத்தரவாதமில்லா பாதையில் அவரை அழைத்துச்சென்று அழித்தும் விடுகிறது. (Men Without Women)

  • கினோ KINO

பாம்புகள் என்றால் அது எப்போதும் பாம்புகளே. இந்தியக் கலாச்சாரத்தில் அது தெய்வீகத்தின் குறியீடாகவும் இன்னொன்றில் அது சாத்தானின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. வளர்ச்சியும் வீழ்ச்சியும் கிளர்த்தும் தத்துவங்களில் நேர்மறையும் எதிர்மறையும் பிறக்கின்றன. வாழ்வும் ஒருவகையில் அப்படித்தான். பொதுவாகப் பாம்புகள் விழிப்புணர்வு கொண்டவை. நிலநடுக்கத்தின் முன்னறிவிப்பை அவை உணர்ந்து கொள்வதுடன் மரணத்தையும்.  இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே பாம்புகள் தனக்கு அருகில் எளிதாக அகப்படும் வகையில் கிடைக்கும் உணவுகளைக்கூட உண்ணுவதில்லை. அவை மரணத்திற்காகக் காத்திருக்கும் வேளையில் வாழ்வைக் குறித்து சிந்திப்பதில்லை. யானைகளுக்கும் மரணத்தின் மீது விழிப்புண்டு. இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு அவை கூட்டத்தைவிட்டு விலகிச் செல்கின்றன.

உள்ளுணர்வு, விழிப்புணர்வு, தொலைவில் உணர்தல் போன்ற பல படிமங்களை யாராலும் பேசமுடியும். இவற்றையெல்லாம் பேசும் கினோ போன்ற மனிதர்களுக்கு அவர்கள் மனைவி வேறொருவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதை உணர்ந்துகொள்ள முடியவில்லையே…

அசரரீ கேட்கலாம், வேறொருவரின் அசரரீயைக் கூட பின்பற்றலாம் அல்லது எதுவும் கேட்காமல் சூன்யமாகவும் இருக்கலாம். இக்கதையை வாசித்தவுடன் கினோ இதில் இரண்டாவது வகையைச் சேந்தவன் என்பீர்கள். அமெரிக்காவின் The New Yorker இதழில் வெளியான கினோ Men Without Women தொகுப்பிலிருந்து ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது.

  • பெண்களற்ற ஆண்கள் Men without women

பதினான்கு வயதில் மனதில் தேங்கி வழியும் படிமங்கள் பெண் வாசனையை நோக்கி நகர்த்தக் கூடியவை. வாய்ப்பிற்கான காலத்தின் விளிம்பு  தொலைதூரத்தில் இருந்தாலும் கற்பனையிலாவது நுகர்ந்திடத் துடிக்கும். ஒருவன் தன் வாழ்வின் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் ஒரு பெண்ணை இழப்பது என்பது அனைத்துப் பெண்களையும் இழப்பதுதான். கதையில் எண்ணற்ற இசைக் குறிப்புகள். ஒற்றைக்கொம்பு குதிரைக்கு மகிமைகள் பலதும்  இருக்கட்டும், தனித்த கொம்பு பயனற்ற விதத்தில் வானத்தைப் பார்த்தபடி மட்டுமே இருக்கும். பெண்களற்ற ஆண்களின் உலகம் சுமார் ரகம் என்பதை உரத்துக் கூறுகிறது. அது போலவே தொகுப்பின் மற்றக் கதைகளுடன் ஒப்பிடும்போது இதன் ரகமும் அவ்விதமே. இக்கதை 18 ஏப்ரல் 2014இல் வெளியான Men without women தொகுப்பின் தலைப்பாகவும் உள்ளது.

  • First Person Singular

தலைப்பிற்கேற்ற வகையில் தனது கதைச் சொல்லும் பாணியையும் வகுத்தமைத்துக் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு ஜப்பானில்  2020ஆம் ஆண்டிலும் வெளியானது. ஆங்கில மொழிபெயர்ப்பு 2021இல் வெளிவந்தது. இதில் எட்டு கதைகள் அடங்கியுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான இத்தொகுப்பு முரகாமியின் மாய யதார்த்தவாத கவர்ச்சியின் பிடியில் வாசகர்களை மயக்கியது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏப்ரல் 10, 2021இல் முடிவடைந்த வாரத்தில் தி நியூயார்க் டைம்ஸ் புனை கதைக்கான சிறந்த விற்பனையாளர் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்தது.

  • With the Beatles பீட்டில்ஸுடன்

இளம்பெண்- காதல் -தற்கொலை – பீட்டில்ஸ் இசை ஆல்பங்கள் – தூண்டுதல்கள்… உடல் வயதாகும் தன்மையுடையது என்பதை மனம் அனுமானிக்கத் தவறிவிடுகிறது.  ஆனால் நமக்கு எதிரில் அமர்ந்து இருப்பவரின் நரைகளையும் சுருக்கங்களையும் கவனிக்கத் தவறுவதில்லை. இளமைக் காலம்  பனிக்கட்டியை போல் விரைவில்  தொலைந்துபோகும் கனவு. இதைக் ஒப்புக்கொள்வது கடினம்தான். கனவின் மரணம் என்பது ஒருவகையில் உயிருள்ள ஒன்றின் மரணத்தைக் காட்டிலும் அதிக  துயரத்தை அளிக்கலாம். (The New Yorker ஜனவரி 28/ First Person Singular)

  • சாரம்  cream;

பியனோ இசைக் கச்சேரிக்கான அழைப்பிதழ் உடன் வெகுதொலைவு பயணித்துச் செல்லும் நாயகன் அதற்கான எந்தவொரு முகாந்திரத்தையும் காணாமல் தன்னை தனது பியனோ வகுப்பு பழையத்தோழி ஏமாற்றிவிட்டதாகக் கருதுகிறான். குழப்பங்களுக்கான தீர்வுகள் எப்பொழுதும் மையம் கொண்டதின் நடுவே இருப்பதால் இயல்பாகவே குவியல் மீது பார்வை திரும்புகிறது. ஆனால் அது நடுவில் நிற்பதில்லை. சிலருக்குப் பொறுமை என்பது அயர்ச்சி. இந்த உலகத்தில் எளிதாகக் கிடைக்கும் எதற்கும் எவ்வித மதிப்பும் கிடையாது. (The New Yorker ஜனவரி 28/ First Person Singular)

  • பூனைகள் நகரம் Town of Cats

வாழ்க்கையின் மாயங்களில் தொலைந்து போகும் மனிதர்களின் கதைகளைக் கட்டமைக்கும் முரகாமி  வாசகனை அதன் சாரத்திற்குள் எளிதில் இழுத்து ஆச்சரியப்படுத்தக் கூடியவர். மனிதர்கள் யாருமில்லாத ஒரு நகரத்தில் பொழுது சாய்ந்தால் பூனைகள் மட்டுமே உலாவுகின்றன. இரயில் பயணத்தில் திடீரெனத் தனக்கு பிடித்தமான இடத்தில் எந்தவொரு முன் திட்டமும் இல்லாமல் இறங்குபவன் பூனைகள் நகரத்தில் மாட்டிக் கொள்கிறான். [The New Yorker, September 5, 2011]

  • காற்றுக் குகை Wind Cave

இரத்த உறவுகள் மீதான வெளித்தோற்றம் பலருக்கு வெறுப்புகளால் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் உட்கூட்டில் பட்டு இழைகளால் சுற்றப்பட்டு அன்பு பந்தாகச் சுழலும். தங்கையின் மரணத்திற்குப் பின்னால் ஆட்கொள்ளும் பால்யத்தின் நினைவுகள். “அவள் படுத்திருந்ததைப் பார்க்கும்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது போல் இருந்தது. லேசாக அசைத்தால் போதும் அவள் எழுந்து விடுவாள் என்பது போல். ஆனால் அது மாயை. எவ்வளவு வேண்டுமானாலும் அசைத்துக் கொள்ளலாம் – அவள் மீண்டும் எழவே போவதே இல்லை” (The New Yorker, September 3, 2018)

இளைஞர்களுக்கான பல்வேறு கவர்ச்சிகளைத் தனது கதைகளில் பொதித்து வாழ்வில் ஏற்படும் சிடுக்குகளை அறுத்தெறியும் எளிய தத்துவங்களைத் தரும் முரகாமி, அன்னியமில்லாத உரையாடல்கள் வழியே புதுமையான களத்தையும் கதையாடல்களையும் உலக வாசகர்களுக்கு நெருக்கமான புனைவு வெளி ஆக்குவதில் சூத்திரதாரி. பெரும்பாலும் முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாகவே கதையோட்டம் விவரிக்கப்படும். கதாபாத்திரங்கள் நிஜத்திற்கும் நிழலுக்கும் அல்லாடும், அதுவே இறுதியில் அவர்களை ஒரு முடிவுக்கும் முற்றுப்பெறாத சிந்தனைக்கும் வித்திடச் செய்கிறது. 

ஜப்பானில் இருக்கும் இளைஞர் விடுதிகள் சென்னை யூத் ஆஸ்டலில் இருந்து பெரிதாக மாறிவிடுவதில்லை. முரகாமி தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் கொண்டுவரும் மனித உணர்வுகள் வெவ்வேறான பரிமாணங்கள் கொண்டதெனினும் அதன் சாயலில் பெரிதாக எதுவும் மாறுபடுவதில்லை. முரகாமி சிறுகதைகளின் உள்ளீடுகள் நாவலுக்கான நீட்சியைக் கொண்டுள்ளன.

தேர் தடத்தின் அழுத்தம் போன்று மிளிரும் எங்கள் காலத்து வழக்காறு கதையில் முரகாமிக் குறிப்பிடுகிறார்; “மனிதர்கள் வேறுபடுகின்றனர். அதற்கேற்ப விழுமியங்களும் வேறுபடுகின்றன. காலம் எதுவாக இருந்தாலும் பதின் பருவச் சிக்கல்கள் மாறுவதில்லை, ஆனால் வேறெந்த காலகட்டத்தையும்விட  அறுபதுகளில் இருந்த வித்தியாசம் என்னவென்றால் இந்த வேறுபாடுகள் தீர்க்கப்படக் கூடியவை என்று நாங்கள் நம்பினோம்.”

ஜப்பான் இரயில்களின் வேகம் அதிகம். இது அனைவரும் அறிந்தது. அங்குக் காலமும் அப்படியே என்பதை முரகாமியின் படைப்புகள் உறுதி செய்கின்றன. பதின் பருவத்தில் முளைவிடும் காதலை இரண்டுங்கெட்டான் நிலை என்போம். ஒருபக்கம் உடல் வேட்கையை உந்தும் சுரப்பிகள் மறுபக்கம் மனதை அலைக்கழிக்கும் காதலின் தெய்வீகம்… இதுவா? அதுவா? முடிவுக்கு வருவதற்குள் முடிந்து விடும். பதின்பருவ வாக்குறுதிகள் தேர்தல் காலத்தில் உதிர்க்கப்படுபவை போன்றதே. பூட்டப்பட்டக் காலத்தை யாரால் திறக்க முடியும்.

முரகாமியின் கதைகளில் பத்தொன்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் உலகம் கலைடாஸ்கோப் போன்றது. காமம் – மரணம்-பிரிவுத்துயிர் பற்றிய வகைமைகளைப் பிரித்து ஒரேயிழையில் பிணைத்து விடுவதால்  முரகாமியின் முத்திரைக்குக் கூடுதலான ஈர்ப்பு. அவர் சுட்டும் பதின்பருவப் படிமங்கள் ஏற்றிவைக்காத ஊதுபத்தியின் வாசம்போல் நாசிக்கு மிக அருகில் நகர்ந்து ஒருவிதமான உறுத்தலையும் ஏற்படுத்துகிறது. பதின் பருவத்து நினைவு பரப்பு வரையறுக்க இயலாதபடிக்கு விஸ்தாரமானது. வாழ்வின் பல்வேறு நிலைகளில் அவ்வப்போது அவை பீறிட்டுக் கிளம்புகின்றன. இது எதார்த்தம்.

ஹாருகி முரகாமி (சனவரி 12, 1949)

முரகாமி 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பேபி பூமர் தலைமுறையைச் சார்ந்தவர். (பேபி பூமர்: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கருவுறுதல் அதிவேகமெடுத்ததை இவ்விதம் குறிப்பர்.) தனது பெற்றோருக்கு ஒரேயொரு மகனாக கியோட்டோவில் பிறந்தவர். இவரது தந்தை சீனா – ஜப்பான் போரில் பங்கேற்றவர். எனவே போரின் எதிரொலிகளை முரகாமியின் பல நாவல்களில் கேட்க முடியும். முரகாமி டோக்கியோவின் வசடா பல்கலைக்கழகத்தில் நாடகவியல் பயின்றவர். பிற்காலத்தில் தனது படைப்புகளை வாசிக்கும் முதல் வாசகியான அவரது காதல் மனைவி யோகோவை (Yoko) அங்குதான் சந்தித்தார். ஆரம்பத்தில் (1974-1981) ஒரு காபி கடையையும் “பீட்டர் கேட்” என்கிற ஜாஸ் பாரையும் நடத்தி வந்தார்.

பாரம்பரிய ஜப்பானிய இலக்கியத்தில் குடும்பம் முக்கிய பங்கு வகிப்பதால், முரகாமியின் பெரும்பாலான படைப்புகளில் முதல் நபர் கதை சொல்லியாக செயல்படுகிறார்.

“புனைகதைகள் எழுதுவதில் உள்ள மகிழ்ச்சிகளில் ஒன்று அது எனக்காகவே எனது சொந்தத் திரைப்படத்தை உருவாக்குவதைப் போன்றது “ ஆம், முரகாமியின் படைப்புகளில் பல இன்று நிஜத்தில் திரைப்படங்களாகவும் ஆவணப் படங்களாகவும் உருமாறி உள்ளன.

முரகாமிக்கு ஓடுவதில் விருப்பம் அதிகம். அனுபவம் மிகுந்த ஓட்டப்பந்தய வீரர். தனது 33வது வயதிலிருந்து பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 100 கி.மீ அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தை தனது 45வது வயதில் சாதித்தார். ஓட்டம் அவரது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் நினைவுகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பு What I Talk About When I Talk About Running  2008இல் வெளியானது. புத்தகத்தில் ஓட்டம் தனது படைப்பூக்கியாக செயல்படும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நாவல்கள், சிறுகதைகள் மட்டுமல்லாது முரகாமியின் கட்டுரைகள் அடங்கிய 15 அபுனைவு புத்தகங்களும் வெளிவந்துள்ளன.

29வது வயதில் புனைவுகளை எழுதத் துவங்கிய முரகாமியின் முதல் நாவல் Hear the Wind Sing (1979). இந்நாவல் ஜப்பான் மொழியில் Kazuki Omori இயக்கத்தில்1981இல் திரைப்படமானது. முதல் நாவலைத் தொடர்ந்து எலியின் முத்தொடர் வரிசையாக 1973இல் Pinball நாவலும் 1982இல் Wild Sheep Chase நாவலும் வெளியாயின.

பேஸ்பால் விளையாட்டைப் பார்ப்பதும் ஜாஸ் இசைக் கோப்புகளை ரசித்துக் கேட்பதும் முரகாமியின் பெருவிருப்பம். 1979இல் வெளியான அவரது ஹியர் தி விண்ட் சிங்கிற்காக குன்சோ விருது பெற்றதற்குப் பிறகு, மற்ற எழுத்தாளர்கள் எவரையும் சந்திக்கப் போவதில்லை என்று தீர்மானித்து அதைச் செயல்படுத்தியும் வருகிறார். அவரது எழுத்துலக நண்பர்களான ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் மற்றும் டோனி மோரிசனுடன்  இணைந்து இயங்கும் முரகாமி, பெரும்பாலும் எழுத்தாளர்கள் சமூகத்திடமிருந்து விலகியே இருக்கிறார். சமகால எழுத்தாளர்களைப் பற்றி சிறிதும் அறியாதவர் என்கிற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு. சிலர் அவரை ஜப்பான் இலக்கிய உலகின் கருப்பு ஆடு என்கின்றனர். அதேவேளை தி கார்டியனின் ஸ்டீவன் பூல் முரகாமியை உலகின் மிகச்சிறந்த உயிருள்ள நாவலாசிரியர் என்கிறார்.

முரகாமி தனது அரசியல் நிலைப்பாட்டைக் குறித்துப் பேசும்போது தன்னை ஜார்ஜ் ஆர்வெல்லுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார். தன்னை அமைப்புக்கு எதிராக நிற்பவனாகப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார். 2011இல் நியூயார்க் டைம்ஸிடம் கூறுகிறார்; “நான் என்னை ஓர் அரசியல் நபராக நினைக்கிறேன், ஆனால் எனது அரசியல் செய்திகளை நான் யாரிடமும் கூறுவதில்லை.”

2009இல், இஸ்ரேலில் ஒரு விருதை ஏற்றுக் கொண்டபோது, ​​அவர் தனது அரசியல் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தினார்:

“உறுதியாக உயர்ந்திருக்கும் சுவருடன் மோதி உடையும்  முட்டையின் நோக்கம் தவறு என்றும் சுவரின் பக்கம் சரியென்றும் தீர்ப்புக் கூறினால் நான் முட்டைக்கு ஆதரவு தருவேன். ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு முட்டை, உடையக்கூடிய முட்டையில் அடைபட்டிருக்கும் ஒரு தனித்துவமான ஆன்மா. நாம் ஒவ்வொருவரும் ஓர் உயரமான சுவரை எதிர்கொள்கிறோம். உயரமான சுவர் என்பது தனிநபர்களாக நாம் சாதாரணமாகச் செய்யத் தகுதியற்ற விஷயங்களைச் செய்ய நம்மைத் தூண்டும் அமைப்பாகும்.”

தமிழில் வெளிவந்திருக்கும் முரகாமியின் நூல்கள்:

  • வேட்டைக்கத்தி (2-சிறுகதைகள்) – ச.ஆறுமுகம் / ஆதி பதிப்பகம் / முதல்பதிப்பு: டிசம்பர் 2012
  • நார்வீஜியன் வுட் (நாவல்) – க.சுப்பிரமணியன் / எதிர் வெளியீடு / முதல் பதிப்பு : ஜுன் 2014
  • பூனைகள் நகரம் (எட்டுச் சிறுகதைகள்) – ஜி.குப்புசாமி / வம்சி பதிப்பகம் / முதல் பதிப்பு : டிசம்பர் 2016
  • நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது (ஆறு சிறுகதைகள்) – ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் / வம்சி பதிப்பகம் / முதல் பதிப்பு: ஏப்ரல் 2016
  • கினோ (பத்துச் சிறுகதைகள்) – ஸ்ரீதர் ரங்கராஜ் / எதிர் வெளியீடு / முதல் பதிப்பு : டிசம்பர் 2017
  • காஃப்கா கடற்கரையில் (நாவல்) – கார்த்திகைப் பாண்டியன் / எதிர் வெளியீடு / முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
  • பெண்களற்ற ஆண்கள் (எட்டுச் சிறுகதைகள்) – ஸ்ரீதர் ரங்கராஜ் / எதிர் வெளியீடு / முதல் பதிப்பு : ஜனவரி 2022
  • ஸ்புட்னிக் இனியாள் (நாவல்) – முனைவர் ர.லக்ஷ்மி ப்ரியா / எதிர் வெளியீடு / முதல் பதிப்பு : ஜனவரி 2023

முரகாமி தனது தினசரி வாழ்விலும் சரி எழுதுவதிலும் சரி திட்டமிட்டுச் செயலாற்றக் கூடியவர். அவரது  படிப்படியான வளர்ச்சி அதனடிப்படையில் உருவானது. 1987இல் வெளியான Norwegian Wood நாவலுக்குப் பிறகு சர்வதேச இலக்கிய அரங்கில் தவிர்க்க முடியாத நட்சத்திர எழுத்தாளராக உச்சம் தொட்ட முரகாமியின் படைப்புகள் இன்றைக்கு ஐம்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதோடு சில மொழிகளில் அவரது புத்தக விற்பனை எண்ணிக்கை மில்லியனையும் கடந்து செல்கிறது.

பிப்ரவரி 2017 ஜப்பானில் வெளியான “கில்லிங் கமெண்டடோர்“ நாவலின் (ஆங்கில மொழிபெயர்ப்பு 2018இல் வெளியானது) முதல் பதிப்பு மட்டும் 1.3 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இத்தனைக்கும் இது ஹாங்காங்கில் கடுமையான தனிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டது. இந்நாவல் விமர்சகர்களிடமும் வாசகர்களிடமும் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகளைச் சம அளவில் பெற்றது. இறுதியாகக் கடந்தாண்டு ஜப்பான் மொழியில் எழுதி வெளியாகி இருக்கும் The City and its Uncertain Walls நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக என்னையும் சேர்த்து தற்போது பல மில்லியன் வாசகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானில் வசிக்கும் ஹருகி முரகாமியின் வயது 75.

1 COMMENT

  1. அருமை,, வாழ்த்துக்கள் சார்,, மிகவும் சிறப்பான, வாசிக்கத் தூண்டும் நூல்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.. 📖📚📒📗🇨🇭☕

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.