இந்தியா ஒரு திரையரங்காக ஆகிவிட்டது, இங்கு மாயையே தேசியக் கொள்கையாக இருக்கிறது; கைதட்டலுக்குத்தான் காசு கொழிக்கிறது… நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அறிவியல் அறிஞர்களுக்குக் கனவாக இருக்கிறது. அரசியல்வாதிகள் கடவுளர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். மட்டைப் பந்து வீரர்களே நாட்டின் தார்மீக வழிகாட்டிகளாக ஆகியிருக்கிறார்கள்.. நாம் முரண்பாடுகளின் குடியரசில் வாழ்கிறோம். இங்கு மெய்ப்பொருளைவிடப் பிம்பமே முன்னிறுத்தப்படுகிறது. தோற்ற மயக்கமே கொண்டாட்ட வணிகமாக ஆகிவிட்டது.
இது வெறுமனே கலாச்சாரச் சிதைவு மட்டுமல்ல. இங்கு மாயக் கவர்ச்சி ஓங்கி நிற்கிறது, அறவொழுக்கம் வீழ்ந்து கிடக்கிறது. ஓர் அறிவியல் ஆராய்ச்சியாளர் வாழ்நாளெல்லாம் ஈட்டுவதைவிட மிகுதியாக ஆடம்பர ஆடையில் நடனமாடும் நடிகர் ஒரே நாளில் சம்பாதிக்கிறார். நாம் அவர்களுடைய திறமை என்ன என்பதைவிட நமது கூட்டு மனப்பிறழ்வைத்தான் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். நமது போற்றுதல் ஏலம் விடப்படுகிறது, நம்முடைய மதிப்பீடுகள் பணமாக்கப்படுகின்றன, நமது தேசிய மனச்சாட்சி ஒப்புதல்களாகக் குறுக்கப்பட்டுவிட்டது.
கரவொலியைச் சாதனையாகக் கருதுகிற நாடு வெறும் நிகழ்த்துதலை முன்னேற்றமாகக் குழப்பிக் கொள்கிறது.
மனப்பிறழ்வின் கணிதம்.
பெரும் புள்ளிகள் குற்றவாளிகள் அளவுக்கு அபத்தமானவர்களாக இருக்கிறார்கள். பாலிவுட் திரைப்பட உலகின் நடிகர் ஒருவர் ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் கேட்கிறார். ஒரு மட்டைப்பந்து வீரர் விளம்பர வணிகத்தில் ஆண்டுக்கு 15 இலிருந்து 20 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அவரை ஆண்டுக்கு 25 இலட்சம் ஈட்டுகிற இந்திய அறிவியல் ஆராய்ச்சி மைய அல்லது பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதுநிலை அறிவியலாளருடன் அல்லது ஆண்டுக்கு வெறும் 7 லட்சம் மட்டுமே ஈட்டுகிற பள்ளி ஆசிரியருடன் ஒப்பிடுங்கள். இவை வெறும் எண்கள் அல்ல. அவை நமது வக்கிர முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கின்றன.
செல்வம் தான் தகுதிக்கான அளவீடு என்றால், பொழுதுபோக்கு ஆட்டக்காரர்களே நாட்டை இரட்சிப்பவர்கள், கல்வியாளர்கள் அல்ல. அறிவை பெருக்குவோருக்கும் திசைதிருப்புவோருக்கும் இடையிலான பொருளாதார வேறுபாடு நவீன இந்தியாவின் மிகவும் அருவருப்பான புள்ளி விவரமாக இருக்கிறது. இங்கு ஆராய்ச்சிக்கு (research) போதுமான நிதியில்லை, குறுங்காணொளிகளுக்கு (reels) வெகுமதியளிக்கப்படுகிறது. தேசிய ஆய்வகங்கள் ஒரு திரை ஆளுமையின் திருமணச் செலவை விடக் குறைவான நிதி ஒதுக்கீட்டில் தான் செயல்படுகின்றன.
மாயத் தோற்றம் அறிவைவிடச் செல்வம் ஈட்டுகிறது என்பதுதான் நமது நாகரிகமாக இருக்கிறது.
சினிமா மக்களுக்குப் புதிய அபினாக இருக்கிறது.
முன்பொரு காலத்தில் சினிமா சமுதாயத்தைப் பிரதிபலித்தது; இப்போது கானல் நீரைக் காட்சிப் படுத்துகிறது. கதை சொல்லியாகத் தொடங்கியது உளவியல் காலனியாக்கமாக ஆகியிருக்கிறது. ஆடம்பரம், வன்முறை, தற்புகழ்ச்சி ஆகியவற்றை இளைஞர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. திரைப்படங்கள் மக்களைப் பிரதிபலிப்பதில்லை, மாறாக அவர்களைத் திசைதிருப்புகின்றன.
நடிகர் கடவுளாகிறார், பார்வையாளர்கள் வழிபடுகிறார்கள், வசூல் அலுவலகம் ஆலயக் கருவூலம் ஆகிறது. குழந்தைகள் சினிமா உரையாடலை ஒப்புவிக்கிறார்கள், ஆனால் ஓர் அறிவியல் வரையறையை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் பாரத் ரத்னாக்களை விடப் பிரபல நிறுவன விளம்பரத் தூதுவர்களை நன்றாகத் தெரிந்திருக்கிறார்கள். காட்சி ஊடகம் மனசாட்சியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.
பாலிவுட் திரையுலகம் காலனியம் கூடச் செய்யத் தவறியதைச் செய்து விட்டிருக்கிறது – அது நமது ஓட்டாண்டித் தனத்துக்காக நம்மை பெருமைகொள்ளச் செய்துள்ளது.
மட்டைப்பந்து வணிக நம்பிக்கையை வழிபாட்டுக்கு உரியதாக ஆக்கியிருக்கிறது.
மட்டைப்பந்து உத்வேகமிக்க ஒரு விளையாட்டு. இப்போது அது புரவலர்களின் சர்க்கஸாக ஆகியிருக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியும் விளையாட்டுத் திறமையைவிடப் பங்குதாரர்களின் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. விளையாட்டு அரங்கங்கள் பங்குச் சந்தைகள் ஆகிவிட்டன, அங்கு உணர்வுகள் பண்டங்களைப் போல வியாபாரமாக்கப்பட்டுள்ளன.
இந்த முரண் மனதை உறையவைப்பதாக இருக்கிறது – மட்டைப்பந்து உத்வேகமிக்க ஒரு விளையாட்டு. இப்போது அது புரவலர்களின் சர்க்கஸாக ஆகியிருக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டியும் விளையாட்டுத் திறமையைவிடப் பங்குதாரர்களின் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. விளையாட்டு அரங்கங்கள் பங்குச் சந்தைகள் ஆகிவிட்டன, அங்கு உணர்வுகள் பண்டங்களைப் போல வியாபாரமாக்கப்பட்டுள்ளன.
வீரரின் மட்டைக்கு விவசாயியின் வயலை விடச் சந்தை மதிப்புக் கூடுதலாக இருக்கிறது. போட்டியில் வெற்றியை நிர்ணயிப்பது, பந்தயம் கட்டுவது, முத்திரை ஒப்பந்தம் செய்வது தேசியப் பெருமையை வரையறுக்கிறது. தேசபக்தி இன்னொரு சந்தைப் பிரச்சாரமாக ஆகிறது. ஒரு காலத்தில் இந்தியாவை ஒன்றிணைத்த விளையாட்டு இப்போது பணத்தை வழிபடுவோருக்கும் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டோருக்கும் இடையில் அதைப் பிளவுபடுத்துகிறது.
“இதற்கு மேல் விளையாட்டு எங்களுக்குப் பெருமிதமல்ல, நாங்கள் பணத்துக்காக விளையாடுகிறோம்.
அரசியல்: அபத்தமான விளையாட்டு அரங்கமாக இருக்கிறது.
சினிமா கனவுகளை விற்கிறது; மட்டைப்பந்து பரவசத்தை விற்கிறது. அரசியல் அச்சத்தை விற்கிறது. ஒவ்வொரு தேர்தலும் பெரியதொரு திரைப்பட வெளியீடாக, கதை, உரையாடல், வில்லன்கள், திகிலூட்டும் திருப்புமுனைகள் கொண்டதாக இருக்கிறது. ஆனால் திரைக்குப் பின்னால் இரக்கமற்ற ஒரு சூழ்ச்சித் திறன் செயலாற்றுகிறது. அரசியல்வாதிகள் இன்று பொதுமக்களின் சேவகர்களாக இல்லை, மாறாக நடிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்கள் தொடர்பு முகாமைகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள், தேர்தல் அவர்களை முடுக்கி விடுகிறது, கார்பொரேட்டுக்கள் அவர்களுக்கு நிதியளிக்கின்றன.
தேர்தலில் நிற்பதற்கு ஒழுக்கத்தைவிட, அதிகாரத்தை அடைவதற்காகச் செலவு செய்வதுதான் தகுதி என்னும் அளவுக்கு அது அருவருக்கத்தக்கதாக ஆகிவிட்டது. 2024 தேர்தல்களில் மட்டும் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து செய்த செலவு ரூபாய் 60,000 கோடி ஆகும். அதேவேளையில் சராசரியான ஒரு விவசாயியின் கடன் ரூபாய் 74000 ஆகும். ஜனநாயகம் வியாபாரமாக ஆகிவிட்டது, இதில் வாக்குகள் புதிய பணத்தாள்களாக ஆகிவிட்டன, உண்மை தான் இதற்கு முதல் பலி.
‘இந்தியாவில், அரசியல் இதற்குமேலும் மக்களுக்குச் சேவை செய்வதல்ல – அது வாய்ச் சவடால் பற்றியதாக இருக்கிறது.’
உருவச் சிலைகளை உற்பத்தி செய்வது.
நாம் இதற்கு மேலும் நமது நாயகர்களைத் தேர்வு செய்வதில்லை, நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிவோர் ஆகிறோம் ஒவ்வொரு சுட்டுதலும் ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு விருப்பக் குறியும் நவீனக் கடவுளரை உற்பத்தி செய்யும் இயந்திரத்துக்குச் சென்று சேர்கிறது. கலையை உணர்ச்சிகரத் தூண்டுதலாக ஊடகங்கள் முழு நிறைவாகச் செய்கின்றன – ஒன்றுமில்லாததைத் தெய்வீகமாக மாற்றுகின்றன. நாயகர்களாகக் கொண்டாடுவதற்கு நமது கவனமே எரிபொருளாகிறது.
கண்ணால் காண்பதை நாம் மெய்யெனக் கருதத் தொடங்கிய பின் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. ஒரு காட்சியில் ஒரு நடிகரின் கண்ணீர் வயலில் விவசாயி சிந்தும் கண்ணீரை விடப் பெரிதாகக் கருதப்படுகிறது. நமது வழிபாடு ஆலயங்களிலிருந்து தொலைக் காட்சிக்கும் இலட்சியங்களிலிருந்து இன்ஸ்டாகிராமுக்கும் இடம் பெயர்ந்துவிட்டது.
இந்தியாவின் புதிய கடவுளர்கள் நேர்மையிலிருந்து தோன்றவில்லை மாறாக வீண் பகட்டிலிருந்து தோன்றுகிறார்கள் அவர்கள் தியாகத்தால் செதுக்கப்படவில்லை மாறாக அவர்கள் மீது பாய்ச்சப்படும் ஒளிவெள்ளத்தால் செதுக்கப்படுகிறார்கள்.
போற்றுதல் அறவொழுக்கத்தின் வீழ்ச்சி.
போற்றுதல் ஒரு காலத்தில் நேர்மையானதாக இருந்தது; இப்போது அது பரிவர்த்தனையாக ஆகிவிட்டது. நமக்கு கிளுகிளுப்பூட்டுவோரைத்தாம் நாம் போற்றுகிறோம், நம்மை உயர்த்துவோரை அல்ல. “செல்வாக்கு” என்று “உச்சரிப்பதற்கு” கற்றுக்கொள்ளும் முன்பே குழந்தைகள் “செல்வாக்குச் செலுத்துபவர்களாக” (influencers) ஆக விரும்புகிறார்கள். அதன் விளைவாக ஒரு தலைமுறையே செல்லுபடியாவதைத் துரத்திச் செல்கிறது, மதிப்பைத் தேடுவதில்லை.
இந்த தலைகீழ் ஒழுக்கத்தின் துயரம் என்னவென்றால், அது தேசத்தின் ஆன்மாவை மறுசீரமைக்கிறது. இப்போதெல்லாம் நேர்மை ஈர்ப்பதில்லை; அறிவாற்றல் ஈர்ப்பதில்லை, சிந்தனையாளர்களை உற்பத்தி செய்வதை நாம் நிறுத்திவிட்டோம், பின்பற்றுவோரை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டோம். நாம் நுகர்வோரை வளர்க்கிறோம், குடிமக்களை அல்ல.
நல்லதை விடுத்து கவர்ச்சியைப் போற்றுகிற ஒரு சமுதாயம் எப்போதும் தலைவர்களுக்குப் பதிலாகக் கோமாளிகளையே தேர்ந்தெடுக்கிறது.
மறக்கப்பட்டுவிட்ட தலைவர்கள்.
ஒவ்வொரு வானுயர்ந்த கட்டிடமும், ஒவ்வொரு தடுப்பூசியும், ஒவ்வொரு அறுவடையும் கண்ணுக்குத் தெரியாத உழைப்பினால்தான் கட்டியமைக்கப்படுகிறது. ஆனால் நாட்டைக் கட்டியமைப்பவர்கள் பெயர் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அறிவியலாளர், ஆசிரியர், செவிலியர், விவசாயி – இவர்கள்தாம் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள், ஆனால் நமது கலாச்சாரச் சீரழிவு அவர்களை நினைவிலிருந்து துண்டிக்கிறது.
அவர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாக ஆவதில்லை, அவர்கள் தாம் இந்த அமைப்பைச் சாத்தியமாக்குகிறார்கள். அவர்கள் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருவதில்லை; அவர்கள் கிராமப் பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வயல்களுக்கும் நடக்கிறார்கள். அவர்கள் தோற்கிறபோது, தேசம் வீழ்கிறது – பொழுதுபோக்கு தொழில் வீழ்வதில்லை.
“மெய்யான இந்தியா அழகு நடைமேடையில் நடப்பதில்லை; அது உழைப்பதற்கு நடக்கிறது.”
அறிவியலாளர்களும் கண்டுபிடிப்பாளர்களும்.
போலியோவை ஒழித்ததோ, மங்கள்யானை விண்ணில் ஏவியதோ நடிகர்கள் அல்ல – அறிவியல் அறிஞர்கள்தாம் பழமையான ஆய்வகங்களிலும் பற்றாக்குறை நிதியுடனும் பலநேரங்களில் மின்சாரம் கூட இல்லாத நிலைமைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய வெற்றி ஆரவாரமற்றதாக இருக்கிறது, அவர்களுடைய ஊதியங்கள் குறைவாக இருக்கின்றன, அவர்கள் பெரிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை
கொண்டாடப்படுவோர் அயல்நாட்டு முத்திரைப் பொருட்களுடன் பகட்டாக வலம் வருகின்றனர், நம்முடைய அறிவியலாளர்கள் இந்தியாவைச் சுயசார்புடையதாக ஆக்குவதற்கு உழைக்கிறார்கள். ஆனால் தேசத்தின் நன்றியுணர்வுக்குப் பதிலாக அவர்கள் அதிகாரவர்க்க இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள், பெயரளவுக்கு அடையாள வெகுமதிகளைப் பெறுகிறார்கள். அறிவாளிகளுக்கு கிரிக்கெட்டைப் போன்ற கவர்ச்சி இருக்குமானால் இந்தியா முன்பே வல்லரசாக ஆகியிருக்கும்.
இந்தியாவின் அறிவியலாளர்கள் தரவுகளில் கனவு காண்கிறார்கள், நவீன வடிவமைப்பு ஆடைகளை அல்ல. இருப்பினும் தேசத்தின் மிகவும் குறைவூதியம் அளிக்கப்படும் அற்புத உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.
ஆசிரியர்களும் கல்வியாளர்களும்.
வளர்ந்த நாடுகள் ஒவ்வொன்றும் அதன் ஆசிரியர்களை மதித்துப் போற்றுகிறது. இந்தியா அவர்களுக்குச் சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு ஊதியத்தைக் கூடத் தாமதமாகக் கொடுக்கிறது. அறிவார்வத்தைத் தூண்டும் ஆசிரியர்களே அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடித்தளமாகும். இருப்பினும், தனிப் பயிற்சி மையங்கள் கொழிக்கிற, பிரபலங்களைக் கொண்டாடுகிற ஒரு நாட்டில் உண்மையான கல்வியாளர்கள் மறைந்து வருகின்றனர்.
தொலைதூரக் கிராமத்தில் உள்ள ஓர் ஆசிரியர் தனது மாணவர்களைச் சென்றடைவதற்குப் பல மைல்கள் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது., ‘கடின உழைப்பு’ பற்றி நேர்காணல்கள் கொடுக்கும் எந்த ஒரு நடிகரையும் விட ஓர் ஆசிரியர் தேசத்தைக் கட்டியமைப்பதற்குப் பெரும் பங்காற்றுகிறார் ஆசிரியர்கள் மோசமாக இருப்பதால் நமது கல்விமுறை தோற்பதில்லை மாறாகச் சமுதாயம் அவர்களை மதிக்க மறுப்பதால்தான் தோற்கிறது.
எந்த ஒரு சினிமா நட்சத்திரம் கட்டியெழுப்பிய எதிர்காலத்தைவிட ஆசிரியரின் கரத்தில் உள்ள எழுது குச்சி (சாக்பீஸ்) பெரிய எதிர்காலத்தைக் கட்டியமைக்கிறது
மருத்துவர்களும் மருத்துவ நலப் பணியாளர்களும்.
நாயகப் பிம்பத்திற்கு ஒரு முகம் இருக்கிறது, அது ஒரு முகமூடியை அணிந்துகொள்கிறது, முகப்பூச்சை அல்ல. பெருந்தொற்றின் போது மருத்துவர்களும் செவிலியர்களும் வெற்றுக் கரங்களுடன் சோர்ந்துபோன இதயங்களுடன் அதை எதிர்த்துப் போராடினார்கள். நோயாளிகள் இறந்துபோவதை அவர்கள் கண்ணால் கண்டார்கள், அதேவேளையில் கோடீஸ்வரர்கள் தொலைக்காட்சியில் புரவலர்களின் இசைக்கச்சேரிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நட்சத்திர நடிகரின் ஆடம்பர வாகனத்திற்குக் கிராமப்புற மருத்துவமனையைவிடக் கூடுதல் செலவு செய்யப்படுகிறது. ஆனாலும் நெருக்கடி வரும்போது, கவர்ச்சி நடிகர்கள் நம்மைக் காப்பாற்றவில்லை மாறாகப் பெயர் தெரியாதவர்கள் தான் கைவிட்டுவிடாமல் உதவிக்கு வந்தார்கள்.
உண்மையான நாயகர்கள் புகைப்படக் கருவி முன்பு காட்சியளித்துக் கொண்டிருப்பதில்லை மாறாக அவர்கள் உயிர் மூச்சுக்காகப் போராடுகிறார்கள்.
விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும்.
அவர்கள் நாட்டுக்கு உணவளிக்கிறார்கள், அவர்களுக்கு உணவில்லை. செய்தித்தாள்களில் இந்தியா கொழுத்த அறுவடையைக் கொண்டாடுகிறது அதேவேளையில் விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள். அவர்கள் மரணம் முக்கியச் செய்தியில் இடம் பிடிப்பதில்லை, அவர்களுடைய போராட்டங்கள் தொல்லைகளாக முத்திரை குத்தப்படுகின்றன.
மட்டைப்பந்து வீரர் ஆறு ஓட்டங்களுக்குப் பந்தை அடித்தால் கரவொலி எழுகிறது, விவசாயி நியாய விலைக்குப் போராடினால் கைது செய்யப்படுகிறார். சிலமணி நேரம் நமக்குப் பொழுதுபோக்கு காட்டுவோரை நாம் வழிபடுகிறோம், நமது உயிர் வாழ்க்கையை நீடிக்கச் செய்வோரை நாம் புறக்கணிக்கிறோம்.
நன்றியுணர்வே நாணயமாக இருக்குமானால், ஒவ்வொரு விவசாயியும் கோடீசுவரராக இருப்பார்.
குடிமைப் பணியாளர்களும் அதிகாரிகளும்.
ஊழலிலும் குறைகூறித் திரிவோருக்கும் இடையே இன்னும் கூட இந்த அமைப்பை வாழ்ந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டு அமைதியாக இருந்துவரும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சேம நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள், பொறுப்புடைமையை நிறைவேற்றுகிறார்கள், அரசியல் அழுத்தத்தை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்கள் பிரச்சார ஆரவாரத்தில் காணாமல் போகிறார்கள், அரசியல்வாதிகளால் அழுத்தப்படுகிறார்கள்.
ஒரு நேர்மையான அதிகாரி 10 ஆண்டுகளில் 20 முறை இடம் மாற்றப்படுகிறார் என்றால் அதை நாம் அரசியல் என்கிறோம், ஆனால் அது உண்மையில் நேர்மைக்கு அளிக்கப்படும் தண்டனையாகும். அரசு இயந்திரம் தலைமையினால் அல்ல, மாறாகச் சமரசத்துக்கு ஒப்புக்கொள்ளாத சிலரின் மனச்சாட்சியால் தான் பிழைத்துவருகிறது.
ஒவ்வொரு நேர்மையான அதிகாரியும் இரண்டாம் தரத்தால் பீடிக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பில் கலகக்காரராக இருக்கிறார்
சமூக ஊழியர்களும் செயல்வீரர்களும்.
அவர்களுக்கு முத்திரை ஒப்பந்தங்கள் இல்லை, இரசிகர் மன்றங்கள் இல்லை, பாதுகாப்பு வாகனங்கள் இல்லை. இருப்பினும் அவர்கள் அதிகாரத்துடன் மோதுகிறார்கள், காடுகளைப் பாதுகாக்கிறார்கள், நீதிக்காகப் போராடுகிறார்கள், பசித்தோருக்கு உணவளிக்கிறார்கள். நேர்மையான பொருளில், அவர்கள் தாம் எஞ்சியிருக்கிற கடைசி குடிமக்கள்.
ஊழலை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தையும் அம்பலப்படுத்தும் ஒரு செயல்வீரர் அடிக்கப்படுகிறார். தேசபக்தியை மேடையேற்றும் ஒவ்வொரு அரசியல்வாதியையும் அம்பலப்படுத்தி ஒரு சமூக ஊழியர் அமைதியாக அதைத் தழுவிக்கொள்கிறார். தனிநபர்கள்தாம் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் புகழ்பெற்றோர் அதைத் தொலைக்காட்சிக்கு ஏலம் விடுகின்றனர்.
கொண்டாடப்படுவோர் கொடிகளுடன் காட்சி தருகையில் செயல்வீரர்கள் தேசத்தைத் தமது முதுகில் சுமக்கிறார்கள்.
ஒழுக்கச் சீர்கேடு.
நாம் கேட்க வேண்டும்: விளம்பரப்புகழை உயரிய விழுமியம் என்று தவறாகக் கருதிக் கொள்ளும் ஒரு தேசத்துக்கு என்ன நேரும்? அது அறநெறியை விற்கும் சந்தையாக ஆகிறது, அங்கு உண்மையை வாங்குவாரில்லை. நம்முடைய நாயகர்கள் பங்களிப்பைக் கொண்டு அளவிடப்பட வேண்டும், ஆதரவாளர்களைக் கொண்டு அல்ல. நேர்மையைக் கொண்டு மதிப்பிட வேண்டும் வருமானத்தைக் கொண்டு அல்ல.
மதிப்புக்குப் பதிலா பகட்டால் நமது குழந்தைகளின் கனவுகள் வடிவமைக்கப்படும் போது, நீதிக்குப் பதிலாகக் கைதட்டல் கோருகிற குடிமக்களை நாம் உருவாக்குகிறோம். இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டுக்கான செலவினம் ரூபாய்களில் செலுத்தப்படுவதல்ல, மாறாகத் தேசியப் பண்பின் மெதுவான சிதைவில் செலுத்துகிறோம்.
தனது மெய்யான நாயகர்களை (heroes) மறக்கிற ஒரு நாடு, ஒருநாள் நாயகம் (heroism) என்றால் என்ன என்பதையும் மறந்துவிடுவார்கள்
இந்தியாவின் உண்மையான நாயகர்கள் (heroes) யார்?
நாம் நேர்மையாகக் கூறினால், இந்தியாவை உண்மையாகக் கட்டியமைப்பவர்கள் படக்கருவிகளுக்கு உத்தரவிடுபவர்கள் அல்ல மாறாகப் பெரும் நெருக்கடியைச் சமாளிக்கிறவர்கள் தாம். அறிவியலாளர், ஆசிரியர், மருத்துவர், விவசாயி, நேர்மையான அதிகாரி ஆகியோர் தாம் கண்களுக்குத் தெரியாத கரங்களால் தேசத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளார்கள்.
அவர்களுடைய சாதனை ஒலிபரப்பப்படுவதில்லை, வாழ்கிறது. அவர்கள் பொழுதுபோக்கச் செய்வதில்லை, அறிவொளி ஊட்டுகிறார்கள். அவர்கள் மாற்றம் குறித்து வாக்குறுதி அளிப்பதில்லை, அவர்களே மாற்றமாக இருக்கிறார்கள். ஓர் அறிவியலாளரின் ஆய்வு, ஓர் ஆசிரியரின் பாடம், ஒரு மருத்துவரின் அறுவை மருத்துவம், ஒரு விவசாயி விளைவிக்கும் பயிர் — இவை தாம் இந்தியாவின் உண்மையான வெற்றிப் படைப்புக்கள்.
நம்முடைய நாயகர்கள் வெளிச்சத்தை நாடுவதில்லை, அவர்களே வெளிச்சமாக இருக்கிறார்கள்.
மனச்சாட்சிக்கு அழைப்பு.
இந்தியா அது வழிபடும் மாயைக்கும் அது புறக்கணிக்கும் நேர்மைக்கும் இடையில் முச்சந்தியில் நிற்கிறது. செயற்கையைப் போற்றுவதிலிருந்து நியாயமானதைப் போற்றுவதைத் திரும்பவும் அடையும் நேரம் வந்துள்ளது. நடிப்பை விட உழைப்பைக் கொண்டாடுவோம், விற்பதைவிடச் சேவை செய்வதைக் கொண்டாடுவோம்.
ஒரு தேசம் பொழுதுபோக்கு மூலம் உயர்வதில்லை, அறிவொளி மூலமே உயர்கிறது. கவர்ச்சியை உயர்வு என்று தவறாக எடுத்துக் கொள்வதை நாம் தொடர்ந்தால் நாம் கைதட்டுகிற நாடாகவே இருந்துவிடுவோம், சாதிக்கிற நாடாக அல்ல. பிரபலத்தை வழிபடுவதற்கு முன்பாக, விவசாயிக்கு வணக்கம் செலுத்தவும், ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கவும், மருத்துவரை மதிக்கவும் அறிவியலாளரைப் பெருமைப்படுத்தவும் நமது குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கிற போது மாற்றம் தொடங்குகிறது.
புகழுக்கு முன்பு மண்டியிடும் தேசம் ஒருபோதும் உண்மைக்காக நிற்காது.
_________________________________________________________
தமிழில்: நிழல்வண்ணன்
முனைவர் டாட்டா சிவய்யா: கணிதவியலாளர், புரட்சிகளை எண்ணுபவர், செல்வங்களை அல்ல. இந்தியாவின் புதைக்கப்பட்டுவிட்ட மனச்சாட்சியைத் தீவிர எள்ளலுடனும் வரலாற்று நெருப்புடனும் அம்பலப்படுத்துகிறார் — புத்தரின் அறிவொளி தொடங்கி அசோகரின் துயரம் வரை. பகுதியளவு கலகக்காரரும் பகுதியளவு ஆராய்ச்சியாளருமான அவர் ஒவ்வொரு கட்டுரையையும் ஓர் எழுச்சியாகவும் ஒவ்வோர் பத்தியயையும் ஓர் ஆர்ப்பாட்டமாகவும் மாற்றுகிறார். அவர் வரலாற்றை மாற்றி எழுதுவதில்லை மாறாக மாற்றி எழுதப்பட்ட பொய்களை அம்பலப்படுத்துகிறார்.
நன்றி: countercurrents.org




