ஸுவாங்ஸி*யின் கனவு
நடைப்பயிற்சிப் பாதைக் கற்களுக்கிடையில்
ஒரு வண்ணத்துப்பூச்சி துடித்துக்கொண்டிருந்தது
தன் இறுதி கணங்களில்.
தாண்டிச் செல்ல முடியவில்லை
ஆரஞ்சும் வெண்மையுமாக
நான்கு சிறகுகள்
வழி தேடிச் சுழன்றிருந்தன
ஒரு சருகில்
மெல்ல ஏந்தி
தோட்டச் செடியின் ஓரிலையில்
அதைக் கிடத்தினேன்
முடிவற்ற துயிலுக்குள்
அது
பைய நழுவிச் சென்றது
நான்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுக்குள்
என்றென்றைக்குமாக சிக்கிக் கொண்டேன்.
****
ஆறு டிகிரியில் இரவு
ஸ்தூலச் சிற்பமாக நின்று
வேடிக்கை பார்க்கிறது என்னைப்
போர்வைக் கதகதப்புக்குள் கிடந்து வெறிக்கிறேன்
மேஜை மேலிருக்கும் குறிப்புப் புத்தகத்தை.
குளிர் ஒரு தாம்புக் கயிறாகச் சுற்றி நெறிக்கிறது.
வாய்விட்டு மெதுவாகச் சொல்லத் தொடங்குகிறேன்
வெண் புகையாகக் காற்றில் எழுகின்றன
எண்ணங்கள்.
கைகளை உதறி
நோட்டுப் புத்தகத்தின் திசையில் திருப்புகிறேன்
திறப்புச் சொல்லொன்றை உதிர்க்கிறது வாய்
டெலிபத்திக் லிபியில்
எழுதப்படும் குறிப்புகளை வாங்கிப்
படக்கென்று தீப்பற்றுகிறது புத்தகம்
ஒரு மேஜிக் நிபுணராக
இந்தக் குளிரிரவை உதறி நீவி மடித்து வைக்கிறேன்.
****
பிறந்த கணம் முதல் கிட்டிய
சீராட்டுச் சொற்களையெல்லாம்
ஒரு சாக்குப் பையில் கட்டிக்கொண்டு
கனவுக்குள் புகுந்தேன் இன்றும்
காத்து நின்ற சிறு குருவி முன்
பையை உதறிக் கொட்டினேன்
காலேயரைக்கால் நெல்மணியை வைத்துக்கொண்டு
என்னமாய்ப் பசியாறுவது…
சீறி விழுந்தது அது.
பதறாதே…
காலேயரைக்கால் நெல்மணியைப்
பகிர்ந்து தின்றே நாம்
அரைநூற்றாண்டு உயிர்வளர்த்தோம்
கனவுறை குருவியே…
பால்வாசம் உலரும் முன்
பசியாறுவோம் வா.
கனவுக்குப் புறத்தே நமக்கொரு நாள்
கரைகாணா நெல் வயல்கள் திறக்கும் காண்.
****
உயிர்க் கோளின் துடிப்புக்கு
எத்தனையோ முகம்
பெயர்க் கூட்டங்களில் பதுங்கியுழலும்
சதா துடிதுடிப்பு
ஒரு கோளத்தின் முகத்தில்
நாம் ஒட்டிக் கொள்ளக்
களப்பலியொன்று போகிறது அதோ
காலத்தின் கூர்விளிம்பில் \
மெல்ல நகரும் நத்தை
சஞ்சலம் அமைதி
வாதையின் இரு விளிம்புகள்
எப்போதும் நீ ஒன்றையே தேர்கிறாய் நத்தையே
சலன நிச்சலனம்
வாதையை வெல்லும் ரகசியங்களை
நழுவிச் செல்லும் லிபியில் எழுதுகிறாய்
பின்
காலத்தின் வெளியே நிலைக்கும்
உன் ஓட்டுக்குள்ளிருந்து விரிக்கிறாய்
ஒரு பிரபஞ்சத்தை.




