மனித குழுக்களில் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்களை நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதில் கை கழுவும் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், வன நாள் போலவே உலக ஆதிவாசிகள் தினமும் கொண்டாடிக்கொண்டாடி அதற்கும் கிழடு தட்டிவிட்டது. உலகத்தில் பல ஆயிரம் இனக்குழுக்கள் இருக்க பழங்குடி மக்களான ஆதிவாசிகளை மட்டும் ஏன் கொண்டாட வேண்டும் அதற்கென தனித்துவமான ஏதேனும் உள்ளதா?
‘உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சி மலை முகட்டு வரை சென்று விட்டது என்று பெருமை அடித்தாலும் நாம் வாழும் பூமி மனிதன் வாழவே தகுதியற்றதாக மாறிவிட்டது. காற்றும், குடிக்கும் தண்ணீரும், குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலும் நஞ்சாகி விட்டது. இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டும்’ என நெகிழியை தடை போடுகிறோம், வாகனங்கள் எரிபொருளுக்கு பதிலாக பேட்டரி பொருத்தவேண்டும். இதில் இன்னும் ஒருபடி மேலே போய் பதினைந்து ஆண்டுகள் பயன்படுத்திய மோட்டார் வாகனம் நன்றாக இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது எரித்து விட வேண்டும் என்கிறோம். குப்பையை அள்ளி வேற்றுக்கிரகத்தில் போடுவது போல் பூமிக்குள்ளே இருந்து பூமிகுள்ளே போட்டு சுத்தம் சுகாதாரம் என்கிறோம். மனிதகுலம் உப்பினை மட்டும் தின்று விட்டு தண்ணீரைத் தேடி தவியாய் தவிக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு வேறெங்கும் தேட வேண்டாம் நம்முடன் வாழும் நமது மூதாதையரான ஆதிவாசிகளின் வாழ்முறையைக் கற்றுக்கொண்டால் அதுவே போதும். அவர்களைப்போல் 20 விழுக்காடு கடைபிடித்தாலே இந்த பூமி பழைய நிலைக்கு மாறிவிடும். அதற்காகத்தான் ஆதிவாசிகளை கொண்டாடுகிறோம் என்று யாரும் பேசுவதில்லை எழுதுவதில்லை.
ஆதிவாசி
வாசி என்றால் குறிஞ்சி நிலமான மலையில் முல்லையும், மருதமும் கலந்த விளைநிலமாக உள்ள நல்விளைச்சல் தரும் இடம் இதுவே வாசி. இங்கு புலையர், பளியர், காடர் போன்ற குலத்தினர் வாழ்கிறார்கள். இவர்களே ஆதிவாசிகள். இம் மக்கள் வாழும் மலைகளில் பெரும்பாலான இடங்களில் வாசி மலை, தவசி மலை தளி மலை என்ற பெயர் இருக்கிறது. மலையிலும் மழை வளமும் மண வளமும் இருக்கும் இடத்தை கண்டறிந்து வேளாண்மை செய்தவனே மாறன் என்கிறது தமிழ் நிகண்டுகள். அவர்கள் வாழும் இடமே குடி, அதுவே ஆதிவாசி குடி. இங்கிருந்து கிளைகிளையாகக் கிளம்பி வந்தவர்களே நமது முதாதையர்.
இம் மக்களிடம் நாம் மறந்து தொலைத்த பழக்க வழக்கங்களை இன்னும் கட்டிக்காத்து வருபவர்கள். இவர்கள் நமக்கு துவக்க பள்ளியைப் போன்றவர்கள். இவர்களிடம் நாம் பாடம் படிப்பதற்காக அவர்களை கொண்டாடியாக வேண்டும். கொண்டாடுவது என்றால் அவர்களுடன் செல்பி எடுப்பதல்ல அவர்கள் பழக்க வழக்கங்களை குறைந்தபட்சம் கடைபிடிப்பது.
மொழி
அப்படி இவர்களிடம் என்னதான் இருக்கிறது……!
தமிழன் இன்று ஜல்லிக்கட்டு தமிழனாக அடையாளப்படுத்துகிறான். பலரது முகநூல் முகப்பில், அணியும் ஆடைகளில், பேருந்தில், உணவு விடுதிகளில், இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்புகளில், பிளக்ஸ் போர்டில் ஜல்லிக்கட்டு படங்களே உயிர்பெற்றுள்ளது. இப்படி நாம் தமிழன் எனச் சொல்லிட மொழி முக்கியம் அந்த மொழி அழியாமல் இருப்பது ஆதிவாசிகளிடம் மட்டுமே. ஜல்லிக்கட்டுக்கு மஞ்சுவிரட்டு, ஒவ்வாமை, ஓங்கரிக்க, கொம்பை இதை கிராமத்தில் இருப்பவர்கள் கூட மறந்து விட்டோம். சோளம், கம்பு பயிர்கள் பால் பிடிப்பதற்கு முன் பெருத்து காணப்படும். அது தான் கொம்பை இப்படியான சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதை இம் மக்கள் பேச்சு வழக்காக பல நூறாயிரம் சொற்கள் இருப்பதை நிலகிரியில் உள்ள மய்ய அரசின் பழங்குடிகள் ஆய்வு மய்யம் தனது ஆய்வறிக்கையில் பதிவிட்டுள்ளது. நமது மொழியின் வளத்தை காக்கும் இம்மக்களுடன் நாம் செல்பி எடுக்க வேண்டாம் தலைமுறை தமிழ் மொழியோடு வாழ இவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.
நுகர்வு கலாச்சாரம்
இப்போதெல்லாம் இரண்டு பிள்ளைக்களுக்கு மேல் யார் வீட்டிலும் இல்லை. சில வீடுகளில் ஒன்றே போதும் என அரசுக்கு முன்னோடி திட்டமாக வாழ்கிறார்கள். இப்படி மூன்று பேர் நான்கு பேர் வாழும் வீட்டில் வீடு இரண்டு செண்டில் கட்டினால் கூட்டி பெருக்கி கழுவவே நேரம் போதாது. ஆனால் நடுத்தர வகுப்பினர் வீடு செட்டி நாட்டு வீடுகளை மிஞ்சுகிறது. பத்து செண்டில் வீட்டை கட்டி எந்த அறைக்குள் யார் இருக்கிறார்கள் எனத்தெரியாமல் வீட்டுக்குள்ளே இருந்துகொண்டே புருசனும் பொண்டாட்டியும் ‘எங்க இருக்கீங்க ‘ என செல்போனில் கூப்பிடுவதைப் பார்த்து வருகிறோம்.
இப்படி ஒவ்வொரு தனிமனிதனும் அரண்மனை போல வீட்டைக்கட்டினால் செங்கல், மணல், கல், இரும்பு, மரம் அனைத்தும் இந்த பூமியிருந்து தானே எடுத்தாக வேண்டும். இந்த நுகர்வு கலாச்சாரம் என்ற கன்றாவி இல்லாத ஒரு இனக்குழு நம்மளோடு இருக்கும் ஆதிவாசி மக்கள் மட்டுமே.
சரி,…. சிமிண்ட் காங்கிரட் வீடு கட்ட வேணாமா? வேண்டும் தான். சிமிண்டில் கட்டிய வீடும் சுண்ணாம்பு காரையில் அல்லது சுட்ட மண் உருண்டையால் சுவற்றில் ஊணாங்கொடி வைத்து கட்டிய வீட்டின் வாழ்நாளினை பாருங்கள். எல்லா ஒத்த வயதில் தான் வரும். நாம் செம்மண்ணில் வீடுகட்ட வேண்டாம் அரசாங்க கைடு லைன் கொடுத்திருக்கும் இரண்டு சென்ட்டில் வீடும் கட்ட வேண்டாம் நாழு பேர் வாழ மூன்று செண்ட்டில் வீடு கட்டினால் போதும் தானே. அரண்மனை போல் கட்டியுள்ள செட்டி நாட்டு அரண்மனை வீடுகளில் யார் இருக்கிறார்கள் என்பது கட்டியவர்களுக்கும் அதன் வாரிசுதாரர்களுக்கும் தெரியாதளவிற்கே அந்த வீடுகள் உள்ளன. இப்படி கட்டப்பட்ட வீடுகள் தற்போது யாருக்காக பயன்படுகிறது ?
அரண்மனை என்றவுடன் அரபுமன்னர் அல்லது ஜமீன்தார் வாழ்ந்த வீடு என்பது மட்டும் நினைவிற்கு வரும். மக்களின் அரணாக பயன்பட்டதால் அரண்மனை என்று பெயர். அது பெரிதாக இருந்தால் தான் படைகள் நிர்வாகப்பணியாளர்கள் இருக்க பயன்படும். அதனால் தான் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் வந்த போது அரண்மனைகளை அரசு கையகப்படுத்தியது நம்மிடம் உள்ள நுகர்வு கலாச்சாரத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகள் செட்டிநாட்டு அரண்மனைகளைப்போல் உங்களின் மன நிறைவுக்கு மட்டுமே பயன்தரும். ஆனால் இந்த வீடுகளை கட்ட பயன்படும் இடுபொருள்களால் சுற்றுச்சூழலை கெடுக்கும் என்பதை நாம் உணர முடியாதபடி நுகர்வு கலாச்சாரத்தை அரசு நம்மிடம் விதைத்து விட்டது. இதன் விளைவு பூமி வெப்ப மயமாகி மழை மாரி தவறி விட்டது.
வீடு கட்டப் பயன்படும் சிமிண்ட் செய்திட தேவையான சுண்ணாம்பு, பவளப்பாசிகள் எங்கிருந்து எடுக்க்கப்படுகிறது. எல்லாம் பூமிக்குள்ளிருந்து தானே. சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றால் நாம் நுகர்வு கலாசாரத்திலிருந்து விலக வேண்டும் அல்லது குறைக்கவேண்டும். நுகர்வற்ற வாழ்வை கொண்டுள்ளாவர்களான ஆதிவாசிகளை நாம் கொண்டாடுவது என்பது அவர்களைப் போல் வாழ முயற்சிப்பதே.
நம் வீட்டில் இருக்கும் நான்கு பேருக்கு சமைக்க தேவையான பாத்திரங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை எண்ணிப் பாருங்கள். ஊரரறிய திருமணம் நடத்தி ஐஞ்சு குண்டால் அரிசியைப் போட்டு ஆக்கி அதில் வித விதமாக சமைத்து திருமணத்தை நடத்தி ரெட்டை சீர் கொண்டு வந்து ஊரார் மாமியார் வீட்டை அசத்தி, சீர் கொண்டு வந்த அந்த சட்டி பானையில் மணப்பெண் பெயரை பொறித்து வீட்டில் மூலையில் கவிழ்த்து வைக்கிறார்கள். அதை வருடா வருடம் விளக்கி விளக்கி கழுவி மறுபடியும் கவிழ்த்து வைப்பதே நாம் கற்ற நுகர்வு கலாச்சாரம். இந்த பகுமானம் எதற்காக? யாருக்காக.? சட்டி பானை செய்திட எடுக்கப்படும் கனிமங்கள் பூமிக்குள்ளிருந்து என்பதை நாம் உணராமல் நம் கண்களை கட்டி வைத்ததே நுகர்வு கலாச்சாரத்தின் வெற்றி.
பழங்குடி வீடுகளில் பாருங்கள் கஞ்சி காய்ச்சிட, தண்ணீர் எடுக்க, குழம்பு வைக்க, சாப்பிட எல்லாம் சேர்த்து அதிகபட்சமாக பத்து பாத்திரம் கூடத் தேறாது. நான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த மக்களை பார்க்கச் சென்ற போது அதிலும் பாதியே இருந்தது.
அப்போது யாரும் வீடு கட்டவில்லை. ஒருபக்கம் கேளையாடு வரையில் படுத்திருக்கும், சிறுத்தை குகையில் இருக்கும், கரடி கீழ் பள்ளத்திலிருக்கும் இயற்கையாக அமைந்த மலைக்குகையில் இந்த மக்கள் கணகணக்கப்பான வீடாக பயன்படுத்தி வாழ்ந்தார்கள். இவர்களைப்போல் வாழ வேண்டாம் தேவையில்லாமல் வாங்கிக் குவிக்கும் தன்மையை இந்த மக்களிடம் கற்றுக்கொண்டாலே இவர்களை நாம் கொண்டாடியதாக அர்த்தம்.
துணி மணி
அரசு பணியாளர் அல்லது அவர் ஒத்த வருமானம் பெருபவர் வீட்டில் குறைந்தது 20 பேண்ட் அதுக்கு மேச்சாக சட்டை, அவரோட மனைவிக்கு 200 சேலைக்கு குறைவில்லாமல் இருக்கும். இதில் மேச்சிங் கணைக்கசன் இல்லாதவை கணக்கில் வராதவை. நாம் குவித்து வைத்திருக்கும் இந்த உடைகளை நமது வாழ்நாளில் ஒரு முறைதானே உடுத்த முடியும். இந்த உடைகளை நீங்கள் மறுமுறை கட்டுவதற்குள் அதன் காலம் முடிந்து தானாக கிழிந்து விடும் அல்லது சாயம் விட்டுவிடும் அல்லது நமது காலம் முடிந்து விடும். இந்த துணிகளை வைக்க பீரோ அதுவும் பற்றாது என சுவரில் செல்ப் அடித்து அடுக்கி,அடுக்கி வைத்திருக்கிறோம். நான்கு பேர் தங்குவதற்கு 2 செண்டில் வீடு இருந்தால் அதில் கார் நிறுத்தி சின்ன தோட்டம் போடலாம். ஆனால் நாம் கட்டிய அல்லது கட்ட நினைத்துள்ள வீட்டின் அளவை நினைத்துப் பாருங்கள்.
துணி என்பதில் சாயத்தை மறந்து விடவேண்டாம். வண்ண வண்ணமயமாக ஆடைபோட்டு பழகி விட்டோம் என்பதை விட பழக்கப்படுத்தப்பட்ட வீட்டு விலங்குகளைப்போல நாம் மாறிவிட்டோம் என்றே நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஆடை விசயத்தில் பழங்குடிகளைப்போல் இருக்க வேண்டாம் மாகாத்மா காந்தி சொன்னது போல் ஒரு ஆளுக்கு மூன்று டிரஸ் போதும் என்று கூட வேண்டாம். ஐந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த சிக்கனத்தை சொல்லிக்கொடுப்பவர்கள் ஆதிவாசிகள்
மணி
மணிகளான நகை நட்டு எங்கிருந்து கிடைக்கிறது இந்த பூமியை துளைப்போட்டு சுரங்கம் அமைத்து அங்குள்ள மண், கல், பாறைகளை வெளியேற்றி மலையாக குவித்த பின்னால் தான் தங்கம் எடுக்கிறார்கள். ஒரு கிராம் தங்கம் எடுக்க குறைந்தது அரை ஏக்கர் நிலத்தை தோண்டி சீரழித்தாக வேண்டும். இப்படி சீரழித்த பின்னரே நாம் அணியும் நகை வருகிறது. ஆட்டிகா விளம்பரத்தால் மயங்கி வாழும் நமக்கு தங்கம் எப்படி தோண்டுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நமது மூளை வேலை செய்யாது.
உலக மக்கள் தொகையில் அதிக நுகர்வு கலாசாரத்துக்கு ஆளானவர்கள் ஆசிய மக்கள். அதில் தெற்காசிய மக்கள் தான் நுகர்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். இதைப்பார்த்து மாகாத்மா காந்தியோ பெரியாரோ இருந்திருந்தால் ‘என் கட்சியில் இருப்பவர்கள் நான்கு ஆடைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு விலகுங்கள். இல்லை என்றால் நானே நீக்குவேன்’ என அவர்கள் நடத்திய குடியரசிலும் யங்இந்தியா பத்திரிக்கையிலும் தினமும் பத்தி பத்தியாக எழுதி நம்மை திருத்தி இருப்பார்.
பழங்குடிமக்கள் காட்டுக்குள் வாழ்ந்தாலும் தேவைக்கு அதிகமாக சுள்ளியைக் கூட எடுத்து சேமித்து வைக்க மாட்டார்கள். காடு அள்ள அள்ள குறையாது அது கொடுத்துக் கொண்டே இருக்கனும் என்றால் அதன் வளம் அதனிடம் இருக்க வேண்டும் என்ற காரணத்தை இம்மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அவர்களைத்தான் நாம் சட்டம் போட்டு காட்டை விட்டு விரட்டி நம்மளைப்போல நுகர்வு கலாச்சாரத்தில் சீப்பட வைக்க திட்டமிடுறோம்.
காடு
ஆனைகள் தந்தத்திற்காகவும், புலி தோலிற்காகவும் வேட்டையாடப்படுகிறது இந்த வேட்டையாடுபவர்கள் யாராவது பழங்குடி மக்களா? இந்தப் பொருள்களை இவர்கள் சீண்டிக்கூடப் பார்ப்பதில்லை. இவர்கள் வனத்தை அழிக்கிறார்கள் என்ற அபத்தமான பொய்யை விதைத்து விடுகிறோம்.
ஆனைகள் தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியேறுகிறது என்ற செய்தி திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. பழங்குடி மக்களிடம் பேசிப்பாருங்கள் ”சினையான ஆனை சவட்டுப்பு என்ற உவர் மண்ணைத் தேடி உப்பு விளையும் தரைக்காட்டுக்கு வரும். தண்ணீர் தேவையென்றால் தெள்ளுக்கொடியை ஒடித்து அதில் குழாய் போல் செய்து ஊற்றும். இரண்டு பானைத் தண்ணீரைக் குடித்து விடும். முந்தயக்காலத்தில் ஆனை சினைப்பருவத்தில் மலையை விட்டு இறங்காமல் இருக்க உப்பங்குழி தோண்டி உப்பு வைப்போம். அதை எங்க தாத்தா காலத்தில் உப்பு வைத்த போது வெள்ளைக்காரன் புடிச்சு ஜெயிலில் போட்டான் அதனால ஆனைக்கு உப்பு வைக்குறது போன தலைமுறையோடு போய் விட்டது” என சொல்லுகிறார்கள். ஆக இந்த நுட்ப அறிவை பழங்குடி மக்களிமிருந்து பெற்றிடவே நாம அவர்களை கொண்டாடுகிறோம்
காடு யாரால் அழிந்தது
பூண்டு, மிளகு, கறிவேப்பிலை, புளி, பட்டை, இந்துப்பு, அவ்வப்போது வேட்டை (not poaching, hunting), கல்மணிகள் (precious stone), உயிரைக் காக்கும் மூலிகைகள், சித்த வைத்திய மருந்துகள், வீடுகட்ட வேளாண்மை கருவிகள் செய்திடத் தேவையான மரம், இவை அனைத்தும் வனத்திலிருந்தே கிடைத்தால் வனம் சார்ந்த வாழ்வு தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த ஒட்டுறவு வாழ்வு பிரிட்டீஷார் கொண்டு வந்த வனச்சட்டத்தால் முறியத் துவங்கி படிப்படியாக வனத்திற்கும் நமக்குமாக உறவு ஈக்கோ டூரிசமாக மாறிவிட்டது. வெள்ளைக்காரன் வந்தான் தேயிலை, காபி போட வனத்தை அழித்தான். அடுத்து பெருமரங்களை அழித்தான். விடுதலை இந்தியாவில் விஸ்காஸ் நிறுவனத்திற்கு சாயம் தயாரிக்க பெரு மரங்களை அழித்து யூக்லிப்டஸ், பைன், சைப்ரஸ் மரங்களை நடவு செய்தார்கள். இப்படித்தானே வனம் அழிந்தது. கொடைக்கானலில் 930 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த புல்வெளி 2014ல் 300 சதுர கிலோமீட்டரானது. உலகின் முதன்மை உயிர்சூழல் மண்டலம் என ஐ.நா மன்றத்தால் அறிவிக்கப்பட்ட நீலகிரியில் 29875 ஏக்கரில் இருந்த புல்வெளி, 4700 ஏக்கராகக் குறைந்தது. நமது நுகர்வு கலாச்சாரத்தின் எதிர்ப்பு இயக்கமாக வாழ்ந்து கொண்டுள்ள ஆதிவாசிமக்களின் பழக்க வழக்கங்களை கடைபிடித்து பூமிப்பந்தினை காப்போம்.
-முத்துநாகு
கரடுதட்டாத கட்டுரை வாழ்த்துக்கள்