பழனி ஊரில் இருந்து வந்தவன். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அவன் இந்த நகரத்தின் அடாவடிகளை புரிந்து கொள்ளத் திணறினான். அதிலும் இந்தத் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த நண்பர்களை மனதில் திட்டாத நாட்களே இல்லை. அவர்கள் சொன்னதில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்தது. இங்கே இருந்து கல்லூரிக்கு எளிதாக கிளம்பி சென்று சேர்ந்து விட முடியும். மற்றும் நகரின் மையப்பகுதி. உணவு உட்பட எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் கிடைத்து விடும். அவர்கள் இவனிடம் ரகசியமாக கிசுகிசுத்து சொன்ன வேறொரு விஷயமும் உண்டு. பொழுது போகவில்லை என்று வந்தால் இதோ இந்த பால்கனியில் வந்து அமர்ந்து கொண்டால் போதும், பத்து நிமிடத்தில் இருபது பெண்களைப் பார்க்கலாம். தயக்கம் எதுவும் இல்லாமல் துணிச்சலாக பார்க்கலாம். உண்மைதான். மயக்கமூட்டக் கூடிய சரக்குகள். எதிர்பாராத அளவில் பொழுது போயிற்று. பழனி விடுமுறை எழுதிக் கொடுத்து கூட இங்கே வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.
இதையெல்லாம் சொல்லி என்ன. ஊரில் இருந்து வந்த மாமாவை வீட்டிற்கு கொண்டு வர முடியாமல் அப்படியே நகர்த்தி ஒரு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து அப்படியே அனுப்ப வேண்டியதாயிற்று. இவர்கள் இருந்த வரிசையில் கடைசி வீட்டில் இருந்த கிழவன் அப்பு செத்துப் போய் விட்டான். தெருவே கூடிக் களிக்கிறது. விடுமுறை நாள் வேறு. மொத்த ஜனமும் இங்கே தான். குடிகாரர்களின் ஆட்டம் எல்லாம் கூட சகிக்கலாம் போல, இந்த பெண்கள் என்ன சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறாள்கள் ? அவர்களை எல்லாம் சொல்லுவானேன்? அந்த கிழவனின் மகளே கூட உட்கார்ந்து ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறாள்.
பழனிக்கு, அவள் தனது அப்பனை தூக்கிப் போட்டு மிதித்த அந்த நாள் கோலாகலம் இன்னும் நெஞ்சை விட்டுப் போகவில்லை.
கீதாவின் முழுப் பெயர் கீதா ஸ்ரீ.
அவளுடைய உண்மையான பெயர் விலாசினி என்பதாகும். இளமாறன் தான் பெயரை மாற்றினார். மேடையில் ஒரு பெயரை சொல்லும்போது அது ஒரு முழக்கமாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. எல்லா பெண்களை விடவும் இவளுக்கு கிளாமர் ஜாஸ்தி என்பதால் நான்கு பாடல்கள் இவளுக்கு கூடுதலாகக் கிடைக்கும். அப்புறம் கடைசிப் பாடல் இவளுக்கு தான். அது ஒரு வகை மவுசு. நிகழ்ச்சியை முடிக்க சொல்லி துரிதம் செய்கிற காவல் துறையே கூட வாய் முழுக்க சிரிப்புடன் வேடிக்கை பார்த்திருப்பார்கள். அன்று அவளுக்கு தொடர்ந்தாற்போல எட்டாவது நாள் நிகழ்ச்சி. கால்கள் அப்படி வலித்துக் கொண்டிருந்தன. ஆடி ஆவணிகளில் எப்போதும் இப்படி வந்து கொட்டவே செய்யும். அந்த வலியிலும் தாமோதரன் என்கிற தர்மேந்திரா டண்டணக்கா அசைவுகளால் சிரிப்பு காட்டி ஜனங்களை விசிலடிக்க செய்யவே இவளும் குத்து குத்து என்று டப்பாங்குத்தி விட்டாள். வலி, வலியைத் தவிர வேறொன்றுமில்லை.
பேமேன்ட்டை வாங்கிக் கொண்டு அவர்கள் பிடித்துக் கொடுத்த ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்த போது அச்சாவும் நிமிஷாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவள் அப்பாவின் லுங்கியை சரியாக எடுத்துப் போட்டு நிமிஷா என்கிற சௌமியாவின் ஆடைகளையும் சரி செய்து விட்டாள். ஆத்திரம் பொங்கிற்று. மேட்டுத் தெரு பையனோடு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறங்குகிறாள் என்று கேள்விப்பட்டு என்ன என்று கேட்டது தான் ஆயிற்று, நான்கு நாளில் வந்து நாங்கள் ரிஜிஸ்தர் பண்ணிக் கொண்டோம் என்று அறிவித்தாள் அவள். அந்த பொறுக்கி தனது வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கிய உடன் கிளம்பி விடுவாளாம். இவளின் எலும்பு முறித்தால் என்ன, உலகம் நன்றி கெட்டது. அவ்வளவு தான்.
முலையிடுக்குகளில் இருந்த ஜிகினாக்களை பிடுங்கிப் போட்டே நேரம் போயிற்று, சாயந்திரம் போட்ட கொரியன் சென்டு பின் வாங்கியிருக்க இரண்டு கட்ஷங்களிலும் தாங்க முடியாத வியர்வை நாற்றம் வந்து கொண்டிருந்தது. குளிக்க தண்ணீர் இல்லை, நேரமும் இல்லை. பேய்ப்பசி. என்ன வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தாள். குஸ்கா. கொஞ்சம் நெத்திலி வறுவல். இருந்த கோட்டர் பாட்டிலில் முதலில் ஒரு நைன்டி போட்டுக் கொண்டு ஒரு நைன்டியை வைத்துக் கொண்டாள். அதேதான், வாரி விழுங்கியதால் ஒருகணம் தொண்டையடைத்துக் கொண்டு உயிர் போவது போல பிதுங்க வேண்டி வந்தது. சற்றே சாவு பற்றி பிரமித்து விட்டு பிராந்தியை எடுத்து கவிழ்த்துக் கொண்டு கொஞ்சம் இருமினாள். இது வழக்கம் தான், சாப்பிட்டு முடித்து விட்டு கட்டையை சாய்த்தாள். ஐயோ, இத மாதிரி பிழைப்பு எவ்வளவு நாள் போகும், டேன்சர் கார்டு எடுத்துக் கொண்டு என்று இந்த பொறியில் இருந்து வெளியேறுவேன் என்று பயந்து கொண்டே இருக்கும்போது தூக்கம் வந்து விட்டது. மறுநாள் மதியம் தான் கண்களைத் திறந்து பார்க்க முடிந்தது.
முதலில் புறப்பட்டு வந்தது கால் வலி. அப்புறம் மறுபடியும் அதே பசி.
அப்பா மட்டன் பிரியாணி வாங்கி வைத்திருந்தார்.
அவரும் தங்கையும் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டார்கள்.
எங்கிருந்தோ அவர் ரெண்டு குடத்துக்கு நான்கு குடம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரவும் செய்தார்.
அருமையான குளியலுக்குப் பின்னர் ஒரு பட்டுபுடவை எல்லாம் கட்டி இருக்கிற இமிடேஷன் நகைகளை எல்லாம் மாட்டிக் கொண்டு சாயந்திரம் கீதா கோவிலுக்குப் போனாள். அர்ச்சனை முடிந்தது. அது முடிந்த கையுடன் ஆளற்ற சிவன் கோவிலில் அவளுக்காக எதிர்பார்த்து அமர்ந்திருந்த சுல்தானாவை சேர்ந்து அவளும் ஒரு அடி அடித்தாள். இருவரும் வாழைப்பழம் தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டார்கள். பல கதைகளில் ஓன்று, சுல்தானாவின் காதலன் பஷீர் தனது காதலை மீண்டும் மீண்டும் சொல்லுவது அவ்வளவு உருக்கமாயிருக்குமாம். விரலைக் கூட தொடுவதற்கு அஞ்சுவான். நான் உன்னோடு இனிமேல் பேசப் போவதில்லை என்று இவளால் சீண்டாது இருக்க முடியாது. அவன் அழுவதைப் பார்க்க வேண்டுமே என்று சுல்தானா பெருமிதப்பட்டுக் கொண்டது கீதாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவளுக்கு பஷீரைத் தெரியும். சமீபத்தில் தாயை இழந்த பிள்ளையைப் போல நம்மைப் பார்ப்பான். அவனைப் பார்க்கும்போது கீதாவிற்குள் துடிக்கும். மூச்சு முட்ட தனது மார்பில் அணைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறாள். என்ன செய்வது, நல்ல பிணைப்பை போற்றிக் கொண்டு செல்ல சிலருக்கு அருகதையில்லாமல் இருக்கிறது. அந்த கசப்பு பரவுவதற்குள் சுல்தானா நான்கு வரிகள் பாட ஆரம்பித்தாள். என்ன ஒரு குரல்? அதிர்ஷ்டம் வரவில்லை. இப்போது கோரஸ் பாடத்தான் சென்று கொண்டிருக்கிறாள். போகிற போக்கில் மெதுவாக மெல்லிய குரலில் கீதாவே கூட ஒன்றிரண்டு பாடல்களை பாடினாள். மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே என்று கீதா பாடியபோது மன்னவனின் பசியாற, மாலையிலே பரிமாற என்று சுல்தானா பாடியது பிரம்மாண்டமாக இருந்தது.
இரவு நகர்ந்திருந்தது.
படமெல்லாம் பார்த்து சுல்தானாவை அனுப்பி வைத்த பிறகு திரும்பினது என்பதால் நேரம் பதினொன்று இருக்கலாம்.
பழனி உள்ளிட்ட பையன்கள் குடித்துக் கொண்டிருக்கிற இடத்தைக் கடந்து தான் வந்தாள்.
அப்பா தனது குறியைப் பற்றியவாறு கழிவறையில் நின்றவாறே தூங்கிக் கொண்டிருந்தார்.
அது எந்த மாதிரி குடி என்று அவளுக்கு தெரியும்.
மனம் திடுக்கிட்டது. பீரோவில் பர்சைத் துழாவினாள். வழிக்கப்பட்டிருந்தது. கடவுளே ! அவரை உலுக்கினாள்.
“ காலத்து மூணு பேருக்கும் புட் மேடிச்சில்லே? “
“ அப்புறம்? “
“ கீழ டிபன் அக்காக்கு பேலன்ஸ் மூவாயிரம் கொடுத்து ! “
“ அப்புறம்?” ”
“ நிமிஷாக்கும் அந்த தெம்மாடிக்கும் சிக்கன் பப்ஸ் ! “
“ அப்புறம் ? “
“ எனிக்கு கொறச்சு செலவு இல்லே? “
அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் தூங்குகிற தங்கைக்கு அருகே படுத்துக் கொண்டார். வெறித்துக் கொண்டிருந்த அவளை அவர் சட்டை செய்யவே மாட்டார், தெரியும். மனம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு விதமான கோணல் சிரிப்புடன் பையன்களின் வெறிப்பைத் தாண்டி டிபன் அக்கா கடைக்கு வந்தாள். கடை அடைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய வீட்டுக்குப் போனாள். சட்னி சாம்பார் இல்லை. தோசை வார்த்துப் போட்டு கொடுத்து வீட்டிலிருந்த கருவாட்டுக் குழம்பைக் கொடுத்தார்கள். அப்பா அவர்களுக்கு மூவாயிரம் ரூபாய் பேலன்சைக் கொடுக்கவில்லை.
படுக்கும் போது அப்பா எழுந்து கொண்டார்.
“ என்தெங்கிலும் கழிச்சா? “
“ இல்ல. என்ன இப்ப? பேசாம படுங்க அச்சா. “
“ நைட் பாக்ஸ் ரெஸ்டாரென்ட் இல் பரோட்டோ கிட்டும். பிஷ் மசாலா கூட. மேடிச்சிட்டு வரட்டே? “
“ காசு? “
“ அவிட கிஷோர் உண்டு. அவன் கிட்ட மேடிக்காம் ! “
கீதா எழுந்து கொண்டாள். கிஷோர் ஒரு பெண் தரகன். இந்த ராணித் தெரு பெண்களுக்கு கஷ்ட காலம் பார்த்து உதவுகிறவன். என்ன செய்வது, நிமிஷாவிற்கு கல்லூரியில் பணம் கட்ட வேண்டி வந்த போது பலரையும் போல கீதாவும் சேர்ந்தாற்போல ஒருவாரம் தொழில் செய்திருக்கிறாள்.
கீதா தனது கண்ணுக்குள் பார்ப்பதைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொள்கிறவர் முனகலாக “ மண்டே நல்ல பார்ட்டி வருந்து எந்து அவனானு பறஞ்சது. அட்வான்ஸ் சோதிக்கட்டே ? “
அவளது மனக்கண்ணில் ஒரு சினிமாவே ஓடிற்று.
வெட்டுக்களாக, வெட்டுக்களாக மின்னல்கள்.
அன்று இருந்த ஒரு பிரபல நடிகைக்கு எடுபிடியாக இருந்த அம்மா. டிரைவராக இருந்த இந்த மனிதன். சொந்த புருஷனை அனுப்பி வைத்து விட்டு இந்த ஆளை சேர்த்துக் கொண்டதில் வந்த அடிதடிகள். அம்மாவைக் கூட்டிக் கொடுக்க இந்த மிருகம் எத்தனையோ தடவை முனைந்திருக்கிறது. இதோ இப்போது என்னையும்.
அவள் அவரை அடிக்க ஆரம்பித்தாள்.
அவர் மல்லாக்க விழுந்த போது துடப்பக்கட்டையை எடுத்துக் கொண்டு மேலும் அடித்தாள்.
அந்த மனிதன் ரோட்டுப் பக்கம் ஓட துரத்திக் கொண்டு சென்று அடித்தாள்.
தங்கை தடுக்க முயல அவளை அறைந்து விட்டுத் திரும்ப, அவளைத் தாக்குவதற்கு அவர் ஒரு அரை செங்கல்லை எடுத்துக் கொண்டிருந்தார். ஒரே கணத்தில் பாய்ந்த அவள் அவரிடமிருந்த கல்லை பிடுங்கி வீசி விட்டு அவரைத் தள்ளி விட்டு அவரது முழங்கால்களின் மீது ஏறி உட்கார்ந்து கொட்டைகளைப் பிடித்து நசுக்க அந்த ஆள் வீறிட்டது அவ்வளவு பயங்கரமாக இருந்தது. மேலும் எழுந்து அவள் அவரது வயிற்றை மிதித்தாள். பழனி மட்டுமல்ல அவனது நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையில் இதுபோல எல்லாம் பார்த்தது இல்லை. ஒரு பெண்ணின் வாயில் இருந்து என்னென்ன வார்த்தைகள் விழும்?
இப்படியா? இப்படியெல்லாமா?
சவ ஊர்வலம் கிளம்பிப் போயிற்று.
பெண்களின் வளவளப்பு எல்லாம் அடங்கி சந்தடிகள் அன்றுடன் முடிந்து இருபது நாளைக்குள் கீதா ஒன்றிரண்டு பெண்களுடன் ஆட்டோவில் ஏறிச் செல்வதை பழனி பார்த்தான். கொஞ்சம் ஓய்வு எடுத்ததாலோ என்னமோ கொஞ்சம் மினுங்கலாக தெரிந்தாள். முயற்சி செய்தால் கிடைப்பாளோ என்னமோ? வீடு பூட்டியிருந்தது. தங்கை அந்தப் பையனுடன் சென்று விட்டாள்.
இரவு.
குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது.
இறங்கி படியேறி வந்த கீதா இவர்களைத் தாண்டிப் போனாள்.
நமுட்டு சிரிப்பில் துவங்கி அப்புறம் அவளைப் பற்றின வர்ணனைகளை இவர்கள் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த போது அவள் தனது வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து அச்சா என்றாள்.
அனைவரும் திடுக்கிட்டார்கள்.
என்ன கூத்து இது? ஒரு தகப்பன் செத்துப்போனது கூட மறக்கும் அளவிற்கா ஒரு பெண் குடித்து விட்டு வருவாள்?
கதவு அடைந்து கொண்டது.
ஒரு நொடி தான். அதற்கு அப்புறம் அச்சா, அச்சா, அச்சா என்ற கதறல் கேட்டுக்கொண்டே இருந்தது.
பழனி தனது ஆழ்ந்த உறக்கத்தில் கூட அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
-எம்.கே.மணி
ஆட்டம் கதை படித்தேன். நன்று, ஆனால் சில பச்சையான சொல்லாடல்களைத் தவிர்த்திருக்கலாம். நானும் விரைவில் எழுதுகிறேன்
mani sir super! I enjoyed the story. but this, not your usual writing style.