அலங்காரப் பதுமை அரண்மனையில் பாட இருக்கிறாள்.

-எலோரா அரண்மனையில் பாட இருக்கிறாள் என்பதும் அந்தப் பாட்டு தயாராகிவிட்டது என்பதும் அவள் ஒவ்வொரு நாளும் அந்தப் பாட்டை சிறுமியர்கள் கூடியிருக்கும் சபையில் பல தடவைகள் பாடிக் கொண்டிருக்கிறாள் என்பதும் நிழற்குடை மர வீதியில் குடியிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும் (சிறுமியரின் சபையென்பது பச்சைப் புல் தரையால் ஆக்கப்பட்ட பாடசாலை மைதானத்தில் மாலைவேளை).

அவள் பாடி முடித்ததும் கைதட்டி ஆரவாரம் செய்வதற்கு எல்லாச் சிறுமிகளும் காத்திருப்பார்கள். பாட்டு முடிந்த கையோடு எலோரா கதை சொல்லப்போகிறாள். அந்தக் கதையைக் கேட்கவும் சிறுமிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எலோரா எப்போதும் வர்ணனைகளோடு சொல்லுகின்ற கதையும் சிறுமியர் கேட்க இருக்கின்ற கேள்விகளும், எலோரா அந்தக் கேள்விகளுக்கு அளிக்கவுள்ள பதில்களும் மிகவும் சுவாரஸ்யமாக  அமையும்.

‘அகன்று விரிந்த கடல் இருப்பதையும் கடலின் மத்தியிலே ஓர் அழகான தீவு இருப்பதையும் சொல்ல விரும்புகிறேன். (எலோராவின் கதை சொல்லல் இப்படித்தான் அமையும்). அந்தத்தீவு கடற்கரையிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதையும் சொல்லுகிறேன். அந்தத் தீவிலே இருக்கும் அலங்காரச் சுவர்களைக் கொண்ட அரண்மனையை வர்ணிக்க விரும்புகிறேன்; அது மிகவும் பிரமாண்டமானது; மாளிகையின் சுவருக்கு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஜன்னல்களில் தொங்கும் திரைச்சீலைகள் வானவில்லைப்போல் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன. கதவுகள் பூ வேலைப்பாடுகளோடு இருக்கின்றன.

அத்தாணி மண்டபத்தின் மத்தியில் போடப்பட்டிருக்கும்  சிம்மாசனத்தில் ராணி வீற்றிருப்பாள் என்பதையும்  அரசி பார்ப்பதற்கு பூமிக்கு இறங்கிவந்த தேவதை போலிருப்பாள் என்பதையும் சொல்லுகிறேன். அந்த ராணிக்கு என்மீது ரொம்ப ஆசை என்பதையும் என்னைக் கண்ட மாத்திரத்திலேயே வந்தனம் சொல்லி என்னைக் கட்டித்தழுவி வரவேற்பாள் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’.

இப்படி எலோரா பேசும் போதெல்லாம் மிகவும் எளிமையான அவளுடைய இரட்டை ஜடை ஆடும்; கண்கள் துறுதுறு என்று அங்குமிங்கும் அலையும்; நளினமான அபிநயத்துடன் சபையைப் பார்ப்பாள். அவர்கள் ஆரவாரித்து கைத்தட்டப் போவதை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பாள்.

இப்போது இவ்வளவு நேரமும் வாயை ஆவென்று பிளந்தபடி இருந்த  சிறுமியர் இப்படிக் கேட்பார்கள். ‘நாங்கள் நிழற்குடை மரவீதியில் வசித்துவருகிறோம். நீயும் இங்கே தான் வசித்து வருகிறாய். கடல் இருப்பது உனக்கு எப்படித் தெரியும்? கடலிற்கு நடுவிலே இப்படியொரு தீவு இருப்பது உனக்கு எப்படித் தெரியும்? தீவிலே அரண்மனை இருப்பது உனக்கு எப்படித் தெரியும்? அரசியை எப்போது சந்தித்தாய்?’ என்றுவரும்  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இதைவிட வேகமாக வரக்கூடிய கேள்விகளுக்கெல்லாம் எலோரா சிரித்துக் கொண்டே மைக்கில் பேசுவது போல் கையால் பாவனை செய்துகொண்டே பின்வருமாறு பதில் சொல்லுவாள்;

‘நீங்கள் நாளாந்தம் பாடசாலை போய் வந்தீர்கள்; சாப்பிட்டீர்கள்; விளையாடினீர்கள்; இரவானதும் ஓடிப்போய் நித்திரை கொண்டீர்கள்; அத்தோடு உங்கள் வாழ்க்கை முடிந்து விடுகிறது. நானோ சோம்பிக் கிடப்பவள் அல்லள். எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவள். நான் கனவு கண்டேன்.  ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய நிறைய கனவுகள் கண்டேன்; அதுவும் கலர் கலராக ஆயிரக்கணக்கான கனவுகளைக் கண்டேன் என்பதையும் சொல்லுகிறேன். கனவிலே தேவதைகள் வந்தன. ஓரிரவு வந்த தேவதைகள் அரண்மனைக்கு என்னை வாவா என்றழைத்தன. ஒரு தேவதையின் கையிலே தீவின் படமும் அரண்மனையின் படமும் இருந்தது. தேவதைகளுக்குள்ளே ஓர் அழகான தேவதை என்னிடம் ஓர் அழைப்பிதழை ஒப்படைத்து தீவின் வருடாந்திர களியாட்டத்திற்கு நான் தெரிவு செய்யப் பட்டுள்ளதாகவும் என்னை அங்கு வந்து பாடுமாறும் கேட்டுக் கொண்டது’

எலோரா இப்படிச் சொன்னதும் சிறுமியொருத்தி விழிகளில் பேரார்வம் மின்ன ‘எலோரா எப்போது களியாட்டம் நடக்கப் போகிறது?’ என்று கேட்டாள். இன்னுமொருத்தி ‘எங்களையெல்லாம் கூட்டிப் போவியா?’என்று கேட்டாள். இன்னுமொருத்தி ‘ அங்கே எங்களைப் போல சிறுமிகள் இருக்கிறார்களா விளையாடுவதற்கு’ என்று கேட்டாள். இன்னுமொரு புத்திசாலிச் சிறுமி, கடல்தீவு அரசி என்ன மொழியில் பேசுவாள்?’என்று கேட்டாள்.

எலோரா சளைக்காமல் கேள்விகளுக்கு விடை சொல்லுவாள். இந்தக் கேள்விகளை அவர்கள் பலநூறு தடவை கேட்டிருக்கிறார்கள். எலோராவும் திரும்பத் திரும்ப பதில் சொல்லியிருக்கிறாள். திரும்பத் திரும்ப இந்தக் கதையைக் கேட்டாலும் சிறுமியர் ஆசையோடு காது கொடுப்பார்கள். அவர்கள் தீவு மீதும், அரண்மனை மீதும் ராணியின் மீதும் அன்பு கொண்டார்கள். ராணியை ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டுமென்று ஆசைப் பட்டார்கள். அவர்கள் ஆசைப்பட்டதற்குக் காரணம் எலோராவின் இன்பம் ததும்பும் வர்ணனைதான். அவள் அரண்மனையின் அழகையும் ராணியின் அழகையும் பிரமாதமாக வர்ணிப்பாள். அந்த வர்ணிப்புகள் ரசமானதாகவும் ஆர்வத்தைக் கிளறிவிடுவதாகவும் இருக்கும்.

இனிமேல்தான் புதிதாக கட்டப்படுகின்ற மஞ்சள் மாளிகையைப் பற்றி எலோரா விஷேசமாக விவரிக்கப் போகிறாள். அந்த மாளிகையின் விசேசம் என்னவென்றால் அந்த மாளிகை அவளுக்காகவே கட்டப்படுகிறது என்பதையும் எலோரா மஞ்சள் மாளிகை என்று பெயர் சூட்டப் பட்டிருக்கிறது என்பதையும் அதற்குக் காரணம் தன்னுடைய வசீகரமான குரலில் ராணி மயங்கிவிட்டாள் என்பதையும் எலோரா சொல்ல இருக்கிறாள்.

எலோரா மஞ்சள் மாளிகையின் கூரையிலே முக்கோண வடிவத்திலே ஓர் அற்புதமான துளை இருப்பதையும் அதன் மூலம் சூரியனோடு நேரடியாக தொடர்பு கொள்வதற்கும், மழைக் காலங்களில் மாளிகைக்குள் இருந்தவாறு மழைத் துளிகளை ரசிப்பதற்கும் மழையைப் பாட்டாகப் பாடுவதற்கும் முடியுமென்பதையும் அவள் சொல்ல இருக்கிறாள். சிறுமியர் அப்போது வாவ் என்பார்கள். மேலும் தனக்காக தனியாக அறை இருக்கிறது என்பதையும் சொல்ல இருக்கிறாள். அங்கே தனக்கென வாங்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஆடைகள் அலங்கார பூவேலைப்பாடு செய்யப்பட்ட அலுமாரிகளிலே கண்ணைக் கவரும் விதத்திலே அடுக்கப்பட்டிருப்பதையும் தினம் தினம் அதனை அணிந்துகொண்டு நடனமாட இருப்பதாகவும் மகிழ்ச்சிப் பூரிப்போடு சொல்ல இருக்கிறாள். அப்போதும் சிறுமியர் வாவ் என்பார்கள்.

அந்த மாளிகையின் வரவேற்பறையில் கேசம் முற்றாக வெளுத்துப்போன ஒரு பாட்டி வர இருக்கிறாள் என்பதையும் அவள் சிறுமியர் மீது அளவற்ற அன்பு கொண்டவள் என்பதையும் தன்னுடைய தலையை ஆதுரத்துடன் தினம் தினம் வருடுவாள் என்பதையும் அவள் தன் இடுப்பில் முடித்து வைத்திருக்கின்ற பையிலிருக்கும் பணத்தை சிறுமியருக்கு பட்சணங்கள் வாங்குவதற்காக செலவழிக்க இருக்கிறாள் என்பதையும் எலோரா சொல்ல இருக்கிறாள். ‘அந்தப் பாட்டி தேவதைகளின் கதைகள் சொல்வாளா?’, ‘தூங்கும் அழகியின் கதையும் சொல்வாளா?’ என்று சிறுமியர் கண்களில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்பார்கள். ஆமாம் அதற்காகத்தான் அந்தப் பாட்டி இருக்கிறாள். அவளின் பெயர் என்ன தெரியுமா, கதைப்பாட்டி என்று பதிலளிப்பாள் எலோரா. அவள் என்னோடு விளையாடவும் வருவாள். எனக்கு மிகவும் பிரியமான பாட்டி என்றும் விவரிப்பாள் எலோரா.

அரண்மனையிலே விசாலமான அறைகள் இருக்கின்றன என்பதையும், எண்ணி முடியாத எண்ணிக்கையில் அவை இருக்கின்றன என்பதையும் சொல்லுகிறேன். என்னுடைய பெயரில் எலோரா என்ற அறை இருக்கிறது. அங்கே பஞ்சு மெத்தை இருக்கிறது. அது மஞ்சள் நிறமானது. தலையணை இருக்கிறது. அது மஞ்சள் நிறமானது. கதிரையும் மேசையும் மஞ்சள் நிறமானவை. நான் மன நிம்மதியுடன் அந்தப் பஞ்சு மெத்தையில் படுத்துறங்குவேன். மழையோ வெய்யிலோ என்னைத் தாக்காது என்பதையும் சொல்லுவேன்.

என்னுடைய அருந்தும் பானம் திராட்சை ரஸம் என்றும் அப்பால் சொல்லுவாள். நான் விளையாடுவது இளவரசியோடு என்றும் சொல்லுவாள். அரண்மனை பூங்காவிலே மாலையிலே காற்று வாங்குவேன் என்றும் காற்றிலே தீவுச் சிறுமியர் வண்ண வண்ணப் பட்டங்கள் பறக்கவிட்டு விளையாடுவர் என்றும் சொல்லுவாள். இப்படியே அரண்மனை சுகண்டிகளைப் பற்றி அவள் வாயோயாமல் வர்ணித்துக் கொண்டே இருப்பாள்.  எலோரா நிலவுப் பொழுதொன்றில் வானத்திலிருந்து இறங்கிவந்த தேவதை என்று சிறுமியர் நம்புமளவிற்கு அவளுடைய பேசும் தோரணையும், சொற்களின் உச்சரிப்பும் உடல்மொழியும் இருக்கும். தாங்களும் அவ்வாறே ஆக வேண்டுமே என்று சிறுமியர் எச்சில் ஊறுவார்கள்.

‘ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள தீவுக்கு நீ எப்படிப் போனாய்? படகிலே போனாயென்றால் உனக்கு படகோட்டத் தெரியுமா? படகோட்டத் தெரியுமென்றால் அந்தத் தீவுக்கு தனியே எப்படிப் போனாய்?’ என்று அவளுடைய சபையிலே இருக்கின்ற அதி புத்திசாலி சிறுமியர் சமர்த்தாக கேள்வி கேட்டவுடன் எலோரா கண்களிலே கண்ணீர் ததும்பும் அளவுக்கு ‘ஹாஹா’ என்று வாய்விட்டுச் சிரிப்பாள்; ‘இப்படித்தான் என்னுடைய ராணியும் சிரிப்பாள்’ என்று எரிகிற நெருப்பிலே எண்ணெயை ஊற்றுவாள் எலோரா. சிரிப்பு நின்றவுடன் இப்படிப் பதில் வரும் சீரியஸாக அவளிடமிருந்து.

‘என் அன்புத் தோழியரே என் கதையைக் கேட்க வேண்டுமானால் நான் அரசியின் விருந்தாளி என்பதை மறந்து விடாமல் உங்கள் ஞானத்தைக் கூராக்கிக் கொள்ளுங்கள். அரண்மனையில் நடக்கக் கூடிய சாதனை விழாவிற்கு என்னைச் சாதாரண படகில் அனுப்பவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வெட்கக் கேடான விஷயம் அல்லவா நீங்கள் சொல்லுவது. ஏப்ரல் கொண்டாட்டத்திற்கு எல்லா நாட்டு ராஜாக்களும் வர இருக்கிறார்கள்;  ராஜகுமாரிகளும் வர இருக்கிறார்கள். அங்கே செல்லக் கூடிய முக்கிய கதாநாயகியாக நான்தான் இருக்கப் போகிறேன். ராணி எனக்கு கடற்குதிரையை பரிசாகத் தந்திருக்கிறாள். கடற்குதிரையின் மேலேறி கடல் தீவுக்கு செல்லப்போகிறேன்’ என்பாள்.

‘கடற் குதிரையின் மேலேறியா? நாங்கள் அதனைக் கண்டதே இல்லையே’

‘ஏப்ரல் மாதம் உங்களையெல்லாம் நான் கடற்கரைக்கு அழைத்துப் போவேன். ராணி எனக்கு அன்பளிப்பாகத் தந்த கடற்குதிரையைக் நான் காட்டுவேன். அதன் முதுகில் ஏறி நான் பறப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அந்தக் குதிரை காற்றிலும் வேகமாக என்னை கடல் தீவுக்கு அழைத்துச் செல்லும்’ என்பாள் எலோரா.

——–

சிறுவர்களின் நடத்தை மற்றும் மனோநிலை ஆய்வு அதிகாரி திருமதி ஸில்வியா பேர்ல் அவர்களுக்கும் எலோராவின் தகப்பனுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பாஷணைகள், எலோராவின் வீட்டில் நிகழ்ந்த சம்பவங்கள், தேநீர் உபசரிப்பு விபரங்கள், எலோராவின் தகப்பனின் முகத்தில் மற்றும் மனோநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பான விஸ்தாரமான தொகுப்பொன்று கீழே தரப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சம்பாஷணை இடம்பெற்றதற்கான காரணத்தை இறுதியில் தர இருக்கிறேன்.

எலோரா தன்னுடைய தகப்பனாரைப் பற்றி நிறைய முறைப்பாடுகளை திருமதி ஸில்வியாவிடம் கொடுத்திருந்தாள். சிறுமியரை வைத்துக்கொண்டு தான் கூட்டங்களில் பேசுவதை தகப்பன் விரும்பவில்லை என்றும் பலதடவைகள் அவளைக் குழப்பியடித்தாகவும் அவளுடைய பேசும் சபையில் இருந்த சிறுமியரை விரட்டியதாகவும்  சிறுமியர் பலரின் வெண்ணிறச் சீருடை கறுப்புக் கறையாகும் அளவிற்கு அவர்களின் கவுன்கள் மீது அழுக்குச் சாக்கடை நீரை விசிறியதாகவும் அந்தச் சிறுமியர் அழுதுகொண்டே வீடு சென்றதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் எலோராவினால் தரப்பட்ட முறைப்பாட்டுச் சுருக்கத்தை ஸில்வியா பெற்றோரிடம்  ஒப்புவித்தாள்.

‘’நீங்கள் சொன்னவை உண்மைதான். சம்பவங்கள் நடந்ததை ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய மகள் அரண்மனையில் பாடப்போவதை நான் அறிந்துகொண்டேன். அதனை நான் வெறுத்தேன். எலோரா பைத்தியம் பீடித்து அலைந்தாள். அவளைக் குணமாக்க நினைத்தேன். அவள் என்னுடைய வழிக்கு வர மறுத்தாள். வகுப்பிலே அவளுடைய புள்ளிகள் மிகவும் மோசமாகக் குறைந்துகொண்டே சென்ற ன. உதாரணமாக கணித பாடத்திலே கடைசியாக அவளுடைய புள்ளி இருபத்தைந்து என்பதை எடுத்துக் கொண்டு புள்ளி அறிக்கையோடு வந்தபோது அந்த புள்ளி அறிக்கையை அவள் முகத்தின் மீது வீசியெறிந்தேன்’

‘ நீங்கள் அந்தச் செய்திக்கு முன்னர் ஓர் ஆறுமாசம் பின்னால் செல்லுங்கள். ஒரு வெள்ளிக்கிழமை காலையில் எலோரா உங்களிடம் வருகிறாள். ஐந்து மாணவர்களுக்கிடையில் குரல்போட்டி வைத்ததில் நான்தான் ஜெயித்தேன் என்றும் நாடு தழுவிய போட்டியிலே பங்குபற்ற தன்னைத் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும்  அவள் சொல்லுகிறாள். அவளை நீங்கள் வெறுப்புமிழும் பார்வையோடு பார்க்கிறீர்கள். பாடங்களைச் சொல்லித் தந்து முன்னேறக்கூடிய வழியைக் காட்டாமல் உன்னைக் கெடுக்கக் கூடிய ஆசிரியர்களின் பின்னாலேயா செல்கிறாய் என்று அவளை மிகவும் மோசமாகக் கடிந்து கொண்டீர்கள். அவள் மீண்டும் மீண்டும் உங்களை நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். நீங்கள் மறுத்துக் கொண்டே இருந்தீர்கள். அதுவும் போதாதென்று ஒருநாள் அவளுடைய வகுப்பறைக்கே போய் அவளுடைய வகுப்பாசிரியையை அதட்டினீர்கள். அன்று தொண்ணூறாக இருந்த கணித புள்ளியின் பெருபேறு இப்போது இப்படி ஆயிற்று’ என்றாள் திருமதி ஸில்வியா.

‘அதற்காக கடலைக் கடந்து தீவுக்குப் போவதும், கடல் குதிரை மீதமர்ந்து பறந்து போவதும், அரண்மனைக்குப் போய் ராணியைச் சந்தித்துப் பேசுவதும், ஏப்ரல் கோடைக் களியாட்டங்களில் பங்குபெற்றலும் போன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளை நான் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று சொல்லுகிறீர்களா?’

சுவையாகத் தயாரிக்கப்பட்ட இலங்கைத் தேநீரையும் குக்கீஸ் பிஸ்கட்டுக்களையும், ஓர் ஒற்றை ஆப்பிள் பழத்தையும் கொண்டுவந்த எலோராவின் தாய் தானும் தன் பங்கிற்கு இடையீடு செய்து கணவனுடைய வாதங்களை ஆதரிக்கும் பலமான ஒரு சட்டவல்லுனரைப்போல நடந்துகொண்டாள்.

இப்படியாக சிறுவர்களை புரிந்து கொள்ள முடியாத தாய் தந்தையருக்கு திருமதி ஸில்வியா பேர்ல் ஒரு கட்டுரை எழுதிக் கொடுப்பாள். அந்தக் கட்டுரையை அவர்கள் இருவரும் தனித்தனியாகவும் சப்தமிட்டும் வாசிக்க வேண்டும். அதாவது அவர்கள் வாசிப்பதை அவர்களே செவிமடுத்துக் கேட்க வேண்டும். இந்த வாசிப்பு நிகழ்வை ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஸில்வியா  வீட்டைச் சுற்றிப் பார்ப்பாள். முக்கியமாக எலோரா இரவில் நித்திரை கொள்ளும் இடம், படிக்கும் அறை, பாடப் புத்தகங்களை வைக்கும் இடம், அறையிலுள்ள வெளிச்சத்தின் அளவு, காற்றோட்டம் தொடர்பான ஆய்வு, சிறுமியின் உணவுப் பழக்கவழக்கங்கள், ஆடை போன்ற விடயங்களைக் குறிப்பெடுத்துக் கொள்வாள்.

இவ்வாறாக ஸில்வியா நீண்ட நாட்களிற்கு முன்பே குறிப்பெடுத்து வைத்திருந்த மோசமான விடயங்களில் ஒன்றுதான் எலோரா செய்த சிறிய குற்றமொன்றிற்காக அவளின் முதுகில் விளாறாகச் சிவக்கும்வரை பிரம்பினால் அடித்து அவளின் முதுகில் காணப்பட்ட காயங்களின் வடுக்களும் ( அவள் அதனைப் புகைப்படமாகவும் எடுத்து வைத்திருந்தாள்) வரலாறு பாடத்தில் மிகக் குறைவான புள்ளிகள் எடுத்ததைத் தண்டிப்பதற்காக நாக்கைச் சூட்டுக்கு கோலால் சுட்டதும் (அதன் புகைப்படமும் இருந்தது). இரண்டாவது சம்பவத்தின் பின்னர் எலோரா இரண்டு வாரங்களாக சரியாகப் பேச முடியாமலும் சொற்களை உச்சரிக்க முடியாமலும் அவள் மனனம் செய்த அரண்மனைப் பாட்டின் ஒரு வரியைக் கூட பாட முடியாமலும் இருந்ததாக ஒரு குறிப்பும் இருந்தது.

Lottie எனப்படும் மூன்று விசேடமான பொம்மைகளை எலோரா வாங்கி வைத்திருந்ததை ஸில்வியா அவதானித்திருந்தாள். அந்த பொம்மைகள் சமையலறையின் ஒரு மூலையிலே கவனிப்பாரற்று ஒரு பழைய துணியினால் சுற்றப்பட்டுக் கிடந்தன. ‘நான்தான் இந்த கேடுகெட்ட பொம்மைகளை தூக்கி எறிந்தேன்’ என்று கர்வத்துடன் ஒப்புக் கொண்டாள் எலோராவின் தாய். (இந்த பொம்மைகள் பற்றி பிறகு வேறாக தர இருக்கிறேன்)

இதோ சில்வியா பேர்ல் எழுதிக் கொடுத்த கட்டுரையை எலோராவின் தாயும் தந்தையும் ஒவ்வொருவராக வாசிக்கிறார்கள்.

‘என்னுடைய மகளாகிய எலோரா தொடர்பான வர்ணனை

கடலுக்கு நடுவிலுள்ள தீவுக்குச் சென்று எலோரா ராணியின் அரண்மனையில் பாட இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அது உண்மையே அல்ல. கடலில் அப்படி ஒரு  தீவும் கிடையாது; அரண்மனையும் கிடையாது; ராணி என்று சொல்லப்படுபவளும்  இல்லை என்பதை இப்போது புரிந்து கொள்ளுகிறேன்.  இவையெல்லாம் எலோரா  புனைந்த மாபெரும் கற்பனையே என்பதையும் இப்போது புரிந்துகொள்ளுகிறேன். தன்னுடைய அதீத கற்பனை மூலம்  அரண்மனையினைப் பற்றியும் அங்குள்ள செளகரியங்களைப் பற்றியும் அவள் வர்ணித்துப் பேசியிருக்கிறாள்.

புதிதாகக் கட்டப்படுவதாகச் சொன்ன மஞ்சள் மாளிகையும் அவளுடைய அதீத கற்பனையே. அவளுக்கு சிறு வயதிலிருந்தே கற்பனை வளம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஒருமுறை காய்ந்த மரப்பட்டையிலே கவிதையொன்றைச் செதுக்கி என்னிடம் காட்டியபோது நான் கோபத்துடன் அதனை அடுப்பில் போட்டு எரித்தேன். அடிக்கடி காட்டுக்குள் செல்வாள் என் மகள். ஒருமுறை அவளை நான் பின்தொடர்ந்து சென்று  பார்த்தபோது ஒவ்வொரு மரத்திற்கும் வெவ்வேறு பெயர் சூட்டி மரங்களுடன் செல்லமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.  அதற்கு அவள் பெற்ற பிரதிபலன் என்னவென்றால் படித்து ஒரு வைத்தியராகவோ கணக்காளராகவோ சட்டத்தரணியாகவோ வருவதற்கு முயற்சிக்காமல் காலத்தை வீணாக்குகிறாயே என்று என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட ஏச்சுதான்.

எலோராவுக்கு மஞ்சள் பிரியமான நிறமாக இருந்தது. அதனால் தான் கற்பனையான மாளிகையையும் அங்கேயுள்ள அறைகளையும் அங்கே காணப்படும் அத்தனை சமாச்சாரங்களையும் சுத்தமான மஞ்சளாக்கி விட்டாள்.

அரண்மனையிலுள்ள அலமாரியில் அவளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளைப் பற்றி அவள் ஏன் புகழ்ந்து தள்ளினாள் என்றால் அவள் வாழுகின்ற இந்த உலகிலே அவளுக்கென்று ஓர் அழகான ஆடைகூட கிடையாது. வாங்குவதற்கான குறைந்தபட்ச வசதிகூட என்னிடம் கிடையாது. ஒவ்வொரு மாதம் ஆரம்பிக்கும் போதும் தனக்கு ஒரு மஞ்சள் நிறத்திலான ஆடை வாங்கித் தரும்படி வேண்டுகோள் விடுப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். சில நாட்கள் கடந்து, கேட்டது கிடைக்காது என்றவுடன் அவளாகவே மறந்துவிடுவாள். மீண்டும் அடுத்த மாதம் ஆரம்பித்ததும் அவள் மஞ்சள் ஆடையை என்னிடம் ஞாபகப்படுத்துவாள். சிலநாட்களில் மீண்டும் மறந்துவிடுவாள். அவள் இப்படி மறந்துபோவதை நான் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வேன்.

கூரையிலே முக்கோண வடிவத்திலே ஒரு துவாரமிருப்பதாகவும் அதனூடாக வானத்தோடு நேரடியாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று எலோரா  சொன்னாள்  அல்லவா, அதற்கும் காரணம் இருக்கிறது. எங்கள் வீட்டின் கூரையிலும் முக்கோண வடிவத்திலே ஒரு இடைவெளி இருக்கிறது. மழை பெய்யும் வேளையில் அதற்கூடாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கும். அவள், அந்த அறைக்குள் தான் தூங்குபவள்  தெப்பமாக நனைந்து விடுவாள். பகலில் சுள்ளென்று அவளுடைய முகத்தில் வெய்யில் பட்டு சுட்டெரிக்கும்.

எனக்கு மிகவும் குழப்பத்தை உண்டாக்கிய ஒரு விஷயம் பறக்கும் கடற்குதிரை. எலோரா  அவள் கடற்குதிரை மீதேறி அடிக்கடி ராணியை சந்திக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பால் நீங்கள் கடற்குதிரையைப் பற்றி புட்டுப் புட்டுச் சொன்ன விஷயங்களால் நான் வெட்கித்து தலைகுனிந்து நிற்கிறேன்..

கடற்குதிரை என்பது குதிரையே அல்ல. அது குதிரை வடிவத்திலுள்ள ஒரு மீனினம் என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது. அது பெரிய உருவம் கொண்டதுமல்ல. மிகமிகச் சிறியது. யாரும் அதன்மீது அமரவே முடியாது. அது நெடும்பாட்டில் நீந்தும் என்பதைத் தவிர வேறு விசேஷம் கிடையாது. என்றெல்லாம் நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்.

அப்படியானால் என்னுடைய மகளான எலோரா எப்படி பறக்கும் கடற்குதிரையின் கற்பனை கதையை ஆரம்பித்தாளென்றால் நீங்கள் என்னிடம் சொன்ன அற்புதமான அந்தக் கதையை எலோரா நிச்சயம் எங்காவது வாசித்திருக்க வேண்டும்.

அந்தக் கதையிலே 1960ம் ஆண்டு Rafael Zamarripa Castaneda என்ற இளைஞன் கடற்குதிரை மீது அமர்ந்துள்ள சிறுவன் என்ற சிற்பத்தைச் செதுக்கி அவ்வாண்டிற்கான மெக்ஸிகோவின் சிற்ப விருதைப் பெற்றுக் கொள்ளுகிறான். இது லாஸ் பிலிட்டஸ் என்ற இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. எனினும் அந்தச் சிலை கடும் காற்றில் காணாமற் போகிறது. மீண்டும் அதேபோன்ற ஒரு சிலை மீண்டும் செதுக்கப்பட்டு 1976ம் ஆண்டு பியர்ட்டா வெலார்ட்டா என்ற இடத்தில திறந்து வைக்கப் படுகிறது. மீண்டும் பழைய சிலை கிடைத்தாலும் இந்தச் சிலை இப்போதும் கம்பீரமாக கடற்கரையிலே காட்சியளிக்கிறது.என்று நீங்கள் சொன்ன கதை மிகவும் அபூர்வமானது.

கட்டுரை வாசித்து முடிந்தது.

திருமதி ஸில்வியா உட்பட அதிகாரிகள் எலோராவின் வீட்டிற்கு வந்திருந்த காரணம் என்னவென்றால் பறக்கும் குதிரையின் மேலேறி ராணியை அரண்மனைக்குச் சென்று சந்திக்கப் போவதாக கிளம்பிச் சென்ற எலோரா பலநாட்கள் கடந்த பின்னரும் இதுவரை வீடு திரும்பவில்லை.

—————————————

எலோரா காணாமல் போகும்வரை நிகழ்ந்த சம்பவத் தொகுப்புக் கோர்வை வரிசைக் கிரமப்படி கீழே தரப்படுகிறது.

எலோரா கிராமத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள அடர்ந்த வனாந்தரத்துக்குச் செல்வதைப் பலர் கண்டிருக்கிறார்கள். நரிகளும் ஓநாய்களும் செறிந்து வாழும் வனாந்தரம் அது. எலோரா நரிகளை வேட்டையாடச் சென்றாள் என்று தனக்குத் தோன்றியமாதிரி சாட்சியமளித்தான் ஒரு பார்வையாளன். அது ஒரு வீணான முயற்சி என்றும் அந்தச் சம்பவத்தை வர்ணித்தான் அவன்.

எலோராவின் தகப்பனார் அவள் காணாமல் போனபின் முதலில் தேடித் சென்றது அந்த அடர்ந்த கானகத்திற்குள் தான்.

‘அவள் வேட்டையாடச் சென்றாளா?’ என்று எலோராவின் தகப்பனார் ஆச்சரியத்துடன் கேட்டார்.

‘ஆமாம், அவள் தன் கையில் மூங்கில் துப்பாக்கியொன்றை வைத்திருந்தாள். மூங்கில் துப்பாக்கியால் நரிகளை வேட்டையாட முடியுமா? அதனால் தான் அதனை முட்டாள்தனமான முயற்சி என்று சொன்னேன்’ என்றான் பார்வையாளன். மூங்கில் துப்பாக்கி வைத்திருந்ததை எலோராவும் ஒப்புக் கொண்டிருப்பாள். ஆனால் மூங்கில் துப்பாக்கி வேட்டையாடுவதற்கானது என்பதை அவள் முற்றாக மறுத்திருப்பாள். மூங்கில் துப்பாக்கி ஒன்றை தன்னோடு வைத்திருப்பது தன்னுடைய விருப்பத்துக்குரிய பொழுதுபோக்கு என்பதையும் , அதன் மூலம் பட்டாம் பூச்சிகளையோ, பொன்  வண்டுகளையோ அல்லது பூத்திருக்கும் பூக்களையோ தான் ஒருபோதும் குறிபார்த்தது கிடையாது என்பதையும் விளக்கிய பின் வாய்விட்டுச் சிரித்திருப்பாள்.

மேலும் அவள் அடர்ந்த கானகத்தை நோக்கிச் சென்றது உண்மையே. அங்கே அபூர்வமான தங்க நரிகள் ஜீவிப்பதாக அவள் கேள்வியுற்று அதனை நேரில் காண்பதற்காகவே சென்றிருந்தாள். மேலும் அந்த நரிகள் பழங்கள் சாப்பிடுகின்றன, வால்களில் ரோமம் அடர்ந்து காணப்படுகிறது. மேனியிலுள்ள ரோமங்கள் தங்க நிறத்தில் பளபளவென்று மின்னுகின்றன போன்ற செய்திகள் அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டேயிருந்தன. தவிரவும் கருநீலம் தோய்ந்த நரியின் கதையையும் அதன் முடிவையும் எலோரா பஞ்சதந்திரக் கதைப் புத்தகத்தில் வாசித்து அந்த நிறத்தில் நரி எப்படியிருக்கக் கூடும் என்று ஏடாகூடமாக  கற்பனை செய்துபார்த்தாள். என்றாலும் நரிகள் பகல் வேளைகளில் புதர்களுக்குள் ஒளிந்து கொள்வதாகவும், மாலைக் கருக்கலில் அல்லது இரவு வேளைகளில் மாத்திரமே அவை இரைகளைத் தேடி வெளியே வருவதாகவும் புத்தகங்களில் வாசித்திருந்ததால் காட்டில் நரிகளைச் சந்திக்க முடியும் என்று அவள் கிஞ்சித்தேனும் எதிர்பார்த்திருக்கவில்லை. முக்கியமாக அவள் நாய்களின் தாடைகளையும் நரிகளின் தாடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினாள்.

எலோராவின் தகப்பன் அடர்ந்த கானகத்தில் இரவு பகலாக ஒரு சதுர அடியைக் கூட விடாது சல்லடை போட்டுத் தேடினான். அவளை உயிரோடு கண்டோமென்றால் எப்படி அவளைக் கடிந்து கொள்வது என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து எலோராவைத் தேடியவர்களோ அவளின் சடலத்தையோ அல்லது காட்டு மிருகங்களால் குதறப்பட்டு எஞ்சியுள்ள எலும்புகளையோ காண்பதற்காக எதிர்பார்த்திருந்தார்கள்.

அவ்வாறு தேடிக்கொண்டிருக்கும் போது கிராமத்தின் தூர்ந்துபோன கிணற்றடியில் எலோரா அடிக்கடி அரண்மனைப் பாட்டை பாடிப்பாடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. ‘ஏன் மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள இந்த பாழடைந்த ஸ்தானத்திற்கு நீ போனாய்?’ என்று எலோராவைக் கேட்டிருந்தால் அவள் வீட்டிற்குள் பாடுவதானது தன் தாயையும் தகப்பனையும் கோபப்படுத்தும் என்பதனையும் அங்கே சுதந்திரம் இல்லை என்பதையும் அண்டை வீட்டாரை எரிச்சல் படுத்தும் என்பதையும் பதிலாகச் சொல்லியிருப்பாள்.

மேலும்  சொல்லுவாள், அங்கே  சிறகடித்துக் கொண்டிருக்கும் பட்டாம் பூச்சிகளைப் பார்த்து என் பாட்டைப் பாட முடியும்; அவைகள் சிறகை அடித்து அடித்து ரசிப்பதை என் கண்களால் பார்த்து சந்தோஷமடைவேன். என் கைகளை அசைத்து இன்னும் இன்னும் பட்டாம் பூச்சிகளோடு பேசிக் கொண்டிருப்பேன். அல்லது சேஷ்டை செய்யும் குரங்குகளோடு கும்மாளமிடுவேன். ஆனாலும் எலோராவின் தகப்பன் தேடியபோது இந்த இடத்திலும் அவள் இருக்கவில்லை. தூர்ந்து போன கிணற்றிற்குள்ளும் இறங்கி ஆட்கள் தேடினார்கள்.

ஓரளவு பித்துப் பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்த அவளுடைய தந்தை உட்பட எல்லோரும் எலோராவின் சடலமாவது கிடைக்கட்டும் என்று தேடிக் கொண்டிருந்தபோதுதான் இன்னுமோரிடத்தைப் பற்றிய தகவல் மூன்றாம் சாட்சியிடமிருந்து வந்தது. அந்தச் சாட்சி Lottie பொம்மைகளுடன் எலோரா விளையாடியதை கண்டதாக விபரித்தான். அவள் அப்போது கம்பீரமான இராணுவப் பயிற்சி வீரனைப் போல் காட்சியளித்தாளாம். நெஞ்சை நிமிர்த்தி இடம் போ, வலம் போ, முன்னால் போ என்று சப்தமிட்டவளாக கைகளை வீசி வீசி நடந்தாளாம். சிறுமிகள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கக் கூடாது என்று வீட்டில் கிடைத்த எச்சரிக்கைக்கு எதிர்வினை ஆற்றியது தானாம் அவளின் இந்தப் போக்கு. சிறிதளவு நகைச்சுவை போலத் தெரிந்தாலும் அவள் lottie பொம்மைகளுடன் ஆங்கிலத்தில் பேசினாள் என்றும் lottie பொம்மைகள் அவளின் பேச்சைக் கேட்டு அணிவகுத்துச் சென்றன என்றுகூட சாட்சி சொன்னான் (இது புனைந்துரைக்கப் பட்ட பொய்யாகக் கூட இருக்கலாம்)

அவள் lottie பொம்மைகளுடன் விளையாடிய அந்த இடம் மிக நீண்ட தொலைவில் ஓர் இராணுவப் பயிற்சி முகாமிற்கு பின் பக்கத்திலுள்ள கைவிடப்பட்ட  நிலமாக இருந்தது. அவள் கட்டளைத் தளபதி போல் கட்டளையிட்டது சிலவேளை இராணுவ வீரர்களுக்குக் கேட்டிருக்கக் கூடும். அத்தனை கூப்பிடு தொலைவில் அந்த இடம் இருந்தது. அங்கு சில lottie  பொம்மைகள் வீசப்பட்டுக் கிடந்தன. ஆகவே அவள் அங்கு வந்து சென்றிருக்கிறாள் என்பது நிஜம்.

எலோராவின் தகப்பன் அப்படியே நிலத்தில் குந்தி தலையைக் குனிந்து கொண்டான். துயரம் அவன் மனத்தைக் கவ்வியது. கண்களை மூடிக் கொண்டான். எலோராவின் பேச்சு, கலகலக்கும் சிரிப்பு, கட்டளைத் தொனி அனைத்தும் மணித்தியாலக் கணக்கில் அவன் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன. எஞ்சியிருந்த lottie பொம்மைகள் அவன் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவளை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கு அற்றுப் போயிருந்தது. முகாமுக்குள் நுழைந்து எலோராவைக் கண்டீர்களா என்று கேட்டபோது அங்கிருந்த இராணுவ வீரன் உயரமான முட்கம்பி வேலியால் பாதுகாக்கப் பட்டிருந்த இடத்தைக் காட்டி ‘அவள் நுழைவதற்கு எந்த மார்க்கமும் இல்லை’ என்று சொன்னான்.

எலோராவின் வீடு சிறிதானாலும் அதற்கொரு முற்றமும் கொல்லைப்புறமும் இருந்தன. முற்றத்தில் தன் குடிகார நண்பர்களோடு எலோராவின் தகப்பன் அடிக்கடி தன் பொழுதுகளைக் கழித்தான். கொல்லைப்புறத்தில் எலோராவின் தாய் தன் ஊர்வம்பு நண்பிகளோடு பொழுதைக் கழித்தாள். எலோரா  அங்கே வேண்டாத வஸ்துவாக இருந்தாள் என்பதே சரியாக விவரிக்கும் வாக்குமூலம்.

சம்பவக் கோர்வையின் வரிசைக் கிரமத்தில் கடைசியாக வருவது அவ்வூரின் கடற்கரை. அதற்கு மேலே எந்தச் சாட்சியமும் இல்லை. அவள் இறுதியாக கடற்கரைக்கு வந்திருக்க வேண்டுமென்றும் அங்கிருந்து கடற்குதிரை மேலேறி அவள் அரண்மனைத் தீவுக்குச் சென்றிருக்க வேண்டுமென்றும் ஊர்மக்கள் உறுதியாக நம்பினார்கள். திருமதி ஸில்வியா சொன்ன விளக்கங்கள் அத்தனையையும் அவர்கள் முற்றாக நிராகரிக்கத் தயாராக இருந்தார்கள்.

—————

ஒருநாள் கடற்கரையிலே எலோராவின் சிலை தோன்றிற்று. சிலை எலோராவைப் போலவே மிக அழகாக இருந்தது. சிரிக்கும் போது அவள் கன்னத்தில் எப்படி கதுப்புகள் தோன்றினவோ சிலையின் முகத்திலும் கதுப்புகள் காணப்பட்டன.

சிலையை வடித்த சிற்பி யாரென்று தெரியாவிட்டாலும் கிராமவாசிகள் அதைச் சுற்றிக் குழுமி சிலையை மிகவும் ரசித்தார்கள். ஏனெனில் அது சிலை போன்றில்லாமல் அலங்காரப் பதுமையாக வீற்றிருந்தது. அந்த அலங்காரப் பதுமை எலோரா  கொண்டையை விரித்துச் சிலிர்த்தது போல் சிலிர்த்துக் கொண்டதாகவும் சில சாட்சிகள் சொன்னார்கள். அலங்காரப்  பதுமை நள்ளிரவில் அலறுவது போல் அல்லது கூக்குரலிட்டது போல் அல்லது விசும்பியது போல் ஒரு பிரமையான அரவம் கேட்டதாகவும் சிலர் விவரித்தார்கள்.

எலோரா என்ற அலங்காரப்பதுமையின் விழிகளை நீண்ட நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒருவன் சொன்னான், அவள் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அவள் விழிகளிலிருந்து சொட்டுச் சொட்டாய் கண்ணீர்த் துளிகள் நிலத்தில் வீழ்ந்து மறைகின்றன. ஆகவே அரண்மனைக்கு பறந்து செல்வதற்கு முன் அவள் பிரிவை நினைத்து அழுதிருக்க வேண்டும் என்றான்.

இந்தக் கூற்றைச் சொல்வதற்கு முன் அவன் அலங்காரப்  பதுமை கடற்கரை மணலில் எப்படித் தோன்றியது என்பதை அலங்கார அணிகலன்களோடு வர்ணித்தான். அந்த இரவில் ஒரு திருமண ஜோடி தங்கள் திருமண ஆண்டு விழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் என்றும் அவன் சொன்னான். அவன் சொன்னபடியே அவர்களால் கைவிடப்பட்டிருந்த அன்பளிப்புப் பார்சலின் ரிப்பன், மஞ்சள் நிறமான அலங்காரக் கடுதாசிகள், மணமகளின் கொண்டாய் ஊசி, முத்தத்தின் வாடை என்பன அங்கே கிடந்தன.

அலங்காரப்  பதுமை கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றியது; கால்கள் புதையப் புதைய சிறிது தூரம் நடந்தது; தன்னுடைய இடத்தை அடைந்ததும் அது சிலைநிலையை அடைந்தது. சிலையானபின் தான் அது எனக்கு சிலையாகத் தெரிந்தது.அதற்கு முதல் அலங்கார பதுமை இனிமையாகப் பாடிப் படித்தான் நடந்தது, அது எனக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அலங்காரப் புதுமையின் காதிற்குள் மெக்பீ ரொபின் Magpie பறவைகள் முணுமுணுப்பதாகவோ அல்லது தலைகீழாகத் தொங்கும் வௌவால் பதுமைக்குச் செய்தி அனுப்புவது போலவோ பதுமையின் நடத்தை இருந்தது; அது தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டு நடந்தது. அப்படி தலையை ஆட்டுகின்ற போதெல்லாம் அவளது கூந்தலிலே செருகப்பட்டிருந்த இரண்டு வெள்ளை ரோஜாக்கள் காற்றில் ஓர் ஒத்திசைவோடு ஆடின’.

அந்தச் சாட்சி இறுதி வசனத்தைச் சொன்னபின் எலோராவின் தந்தை அசந்தவராக ‘ அலங்காரப்பதுமை அவளேதான்’ என்று கூவினார். ‘இந்த வர்ணனைகளும் அவளின் கூந்தலில் ஆடும் இரண்டு வெள்ளை ரோஜாக்களும் அச்சொட்டாக எலோராவுக்குப் பொருந்துகின்றன. அவள் எப்போதும் தலையை ஆட்டி ஆட்டி நடப்பாள்; மணலில் கால் புதையப் புதைய நடப்பாள்; அண்ணாந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களை எண்ணியவாறு நடப்பாள்” என்றவர் அவர் கடற்கரையிலிருந்து சிலையை சுட்டிக்காட்டிச் சொன்னார், ‘ மேலும் அதோ பாருங்கள், அந்தச் சிலையின் கூந்தலிலும் இரண்டு வெள்ளை ரோஜாக்கள் இருக்கின்றன. தவிரவும் அவள் தனக்குத்தானே மருதோன்றி போடுவதில் திறமைசாலியாக இருந்தாள். இந்தச் சிலையின் உள்ளங்கைகளிலும் மருதோன்றி போடப்பட்டிருக்கிறது’

எலோராவின் தகப்பன் சிலைக்கருகில் அமர்ந்து  சிலையின் முகத்தை நெடுநேரமாக உற்றுப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். சிலவேளை கண்ணீர் உகுப்பான்; சிலவேளை கண்ணீர் வராத வேளைகளிலும் கண்களைத் துடைப்பதாகப் பாவனை செய்து கொள்வான். இப்போதெல்லாம் வாழ்க்கையில் முதற்றடைவையாக கிராமவாசிகள் எலோராவை மெச்சிச் சொல்லும் கதைகளைக் கேட்பதில் காலத்தைக் கடத்தி வருகிறான். அப்போதெல்லாம் அவள் தன்னுடனிருந்த காலத்தில் அன்பாக ஓரிரண்டு வார்த்தைகள் பேசாததைக் குறித்து தன்னைத்தானே நொந்துகொள்வான்.

நான் இப்போது அவனுடைய நண்பனாக இருக்கிறேன். அவன் கடலில் தூரத்தைப் பார்த்து அங்கே எலோராவின் மஞ்சள் மாளிகை இருப்பதாகப் பாவனை செய்துகொண்டு ‘ கடற்குதிரை இப்போது வருமா, எப்போது வரும்?’ என்று என்னை நச்சரித்துக் கொண்டிருப்பான்.

சிலையைச் சுற்றி வடிக்கப்பட்டிருந்த அவளுடைய lottie பொம்மைகளைப் பற்றிய சில விஷயங்களையும்,  அவளுடைய சிலைக்கு அதிகாலைக் கருக்கலில் நடக்கும் ஓர் அபூர்வமான இரகசியத்தையும் கூறி இந்தக் கதையை முடிக்க விரும்புகிறேன்.

எலோராவின்  புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் இன்னுமொரு அடையாளம் தான் அவள் விளையாடுவதற்கென்று வாங்கிய Lottie பொம்மைகள் என்று சொல்லும் விதத்தில் எலோரா  இந்தப் பொம்மைகள் மீது அதீதப் பிரேமையுடனிருந்தாள். இந்தவகைப் பொம்மைகள் கம்பீரமாயிரு, துணிச்சலுடன் இரு, நீயாக இரு என்ற அர்த்தங்களைத் தருவதாகவும், இந்தப் பொம்மைகளுக்கு நகைகள் அணிவிக்க வேண்டுமென்றோ அல்லது குதிகாலணிகளை அணிய வேண்டுமென்றோ அல்லது அலங்காரங்களால் அழகுபடுத்த வேண்டுமென்ற அவசியமோ கிடையாதென்றும் எலோரா  தன்னுடைய நண்பிகளுக்கு விளக்கம் சொல்லியிருந்தாள். சுருக்கமாகக் கூறுவதாயின் தைரியமான சிறுமியின் சின்னமே lottie பொம்மையென்றாள். அவள் அதீத அன்பு கொண்டிருந்த இந்த பொம்மைகளைத்தான் எலோரா வீட்டுக்கு வெளியே தூக்கி எறிந்திருந்தாள். என்றாலும் சிலையை வடித்தவன் எலோரா ஆசைப்பட்டது போலவே லொட்டியை பிரதிபலிக்கும் சிறிய சிலைகளையும் சிருஷ்டித்திருந்தான்.

எலோரா காணாமற் போவதற்கு முன் நடந்ததாக நான் விவரித்த சம்பவக் கோர்வைகளின் இறுதி நிகழ்வு இந்தக் கடற்கரையில் அவளைக் கண்டதாக பார்வையாளன் அளித்த சாட்சிதான். அவள் அப்போது கடலை நோக்கி கூழாங்கற்களை எறிந்தவளாகவும் கடலலைகளில் கால்களை நனைத்தவளாகவும் விளையாடிக் கொண்டிருந்தாளாம்.

எலோராவின் தகப்பன் ஆவலுடன் கேட்டான், ‘அவளுக்கருகில் அவளுடைய பறக்கும் குதிரை நின்றதா?’

அவன் இல்லையென்றான்.

‘ஆனால் என்னைப்பார்த்து தன்னைப்போல் ஒரு சிலையை வடித்தீர்களென்றால் சந்தோஷப்படுவேன் என்றாள்.’ மேலும் அதற்கு அவள் அடிக்கடி தன்னுடைய முகம் பார்க்கும் கண்ணாடி உடைவதாகவும்  சிலையொன்று இருப்பின் அதிலே தன்னைத் தானே பார்க்க முடியுமென்றும் ஒரு வினோதமான காரணத்தையும் சொன்னாள்.

‘அவ்வளவுதான் அவளோடு என்னால் பேச முடிந்தது. அந்தச் சொற்பக் கணங்களுக்குள் அவள் புத்தி சாதுரியமுள்ள ஒரு சிறுமி என்பதை நான் உணர்ந்து கொண்டேன்’

‘அவளுடைய சிலையை நிர்மாணித்தது யார்? நீதானே’

‘இல்லை, நான் சிற்பியல்லன். என்றாலும் மிகைத்தோங்கிய ஆர்வம் காரணமாக ஒவ்வொரு நாளும் நான் இந்தக் கடற்கரைக்கு வந்து போனேன். அப்படி ஒருநாள் வந்தபோது சிலை இருந்தது. எங்கள் அருகிலிருந்த யாரோ எங்கள் சம்பாஷணையை கேட்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.’

சாட்சி மேலும் சொன்னான், ‘அந்தச் சிலை உண்மையில் சிலையே அல்ல. அது அவள்தான்.அத்தனை தத்ரூபமாக அது இருந்தது. அவளுடைய எல்லா அங்கலட்சணங்களையும் உள்வாங்கி அந்தச் சிலையை வடித்திருக்க வேண்டும். நிச்சயம் அவன் ஓர் அபூர்வமான சிற்பியாகத்தான் இருப்பான்’

அது சிலை அல்ல என்பதற்கு இன்னுமொரு காரணமும் சொல்வேன். இந்தச் சிலை ஆடை அணிந்திருக்கிறது. அவளின் இரு கரங்களிலும் அவள் எப்போதும் அணியும் பிளாஸ்டிக் வளையல்கள் இருக்கின்றன. அவளுடைய மூக்குத்தியுடன்  அவள் காணப்பட்டாள். பாதங்களில் மலிவான காலணிகள் காணப்பட்டன. இத்தனை விஷயங்களையும் நுணுக்கமாக அவதானித்தவன் ஓர் அபூர்வமான சிற்பியாகத்தான் இருப்பான்.

இறுதியாக நான் கூறப்போகும் அந்த விசித்திரமான செயற்பாடு இதுதான். கடற்கரையில் வீசும் அகோரமான காற்றின் காரணமாக சிலையிலுள்ள ஆடைகள் அனைத்தும் அகாலமான அதிகாலை வேளையில் அவிழ்ந்துவிடும். எலோராவின் தகப்பன் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே அதிகாலைக் கருக்கலிலேயே  ஓடோடி வந்து அந்த ஆடைகளைமீண்டும் அணிவித்துவிடுவான். இது நாள் தவறாமல் நடைபெறும். நான் சொல்லவுள்ள என்னுடைய இரகசியம் என்ன தெரியுமா? எலோராவின் சிலை ஆடைகளற்று இருக்கும் அந்தத் தருணத்தில் அவளுடைய தகப்பன் வருவதற்கு முன்பாகவே நான் ஓடோடிச் சென்று அவளைத்தழுவி ஒவ்வொருநாளும் முத்தமிடுவேன்.


-எம் எம் நெளஷாத்.

Previous articleநுண்கதைகள்
Next articleஆட்டம் !
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.