நுண்கதைகள்

மஞ்சள் ரோஜாவில் தூங்குவதற்காகவே வந்தேன்.

போட்கிளப் பகுதியின் மூன்றாவது சாலையிலிருந்த அழகிய மாளிகைக்கு உள்ளே இருந்து, சுவர் ஏறி குதித்து, வெளியில் வந்து, ஓரமாக நிறுத்தியிருந்த என் வண்டியை எடுக்கப்போனபோது, நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரன் என்னைப் பிடித்தான். முதல் முறையாகப் பிடிபடுவதால், என்ன செய்வது எனத் தெரியாமல், சிரித்தபடியே அவனிடம் பேச முற்பட்டேன்.

“திருட்டு நாயே, ஸ்டேஷனுக்கு நட” என்றான்.

“Sir, Please understand me. I am not a thief. I came only to sleep in the beautiful yellow rose. understand me.”

“இங்கிலிஷில் பேசினால் விட்டு விடுவேனா, வண்டியில் ஏறுடா.”

“சார், அந்த பால்கனி தொட்டிச்செடியில் உள்ள மஞ்சள் ரோஜாப்பூவில்தான் இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு வருகிறேன். மாளிகைக்கு உள்ளே யாரும் இல்லை. நானும் உள்ளே போகவில்லை. வெளிப்புறச் சுவர் வழியாக மேலேறி போய், அப்படியே கீழிறங்கி வந்துவிட்டேன். ஒரு பெரிய கருப்பு வண்டு, என்னைப் பூவில் தூங்கவிடாமல், சுற்றிச்சுற்றி வந்து, கடித்துவிட்டது. அதனால்தான், பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன். என் நெற்றியைப் பாருங்கள். கடித்த இடத்தில் தடிப்பு இருக்கிறது.”

“ஸ்டேஷனில் போய் தூங்கலாம் வா.”

“சின்ன வயதிலிருந்தே எனக்கு இந்தப் பழக்கம் உண்டு சார். ‘ஆம்பளைப் பிள்ளை வீட்டுக்குள்ளேயா படுப்பாங்க. வெளியில் வந்து படுடா’ என்று ஊரில் தாத்தா வெளியில் திண்ணையில்தான் படுக்க வைப்பார். அது, அப்படியே பழகி, நான்கு சுவர்களுக்கு உள்ளே படுத்தால் ஏதோ சிறைச்சாலையில் படுப்பதுபோல இருக்கும். அதனால், கயிற்றுக் கட்டிலை வெளியில் போட்டுப் படுப்பது, லாரி மேலேறி படுப்பது, குளத்துப் படித்துறையில் படுப்பது எனப் பழகி, அப்புறம், சென்னைக்கு வந்த பிறகு மொட்டை மாடிகளில் ஏறிப் படுத்தால்தான் தூக்கமே வரும் எனும் நிலைக்கு வந்துவிட்டேன்.”

“அப்படியா, இதுவரை யார்யார் வீட்டு மொட்டை மாடியில் ஏறிப் படுத்து இருக்கிறாய்?”

“ஆரம்பத்தில், சின்னச்சின்ன வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏறித்தான் படுத்து, தூங்கி வந்தேன். ஆனால்,  போகப்போக அது பிடிக்காமல் போய்விட்டது. பிறகுதான் பெரிய பெரிய மொட்டை மாடிகளாகத் தேடிப் படுக்க ஆரம்பித்தேன். நிலத்தில் நடப்பதுபோல, இஷ்டத்துக்கு நடக்கக்கூடிய மொட்டை மாடியாக இருக்க வேண்டும். வள்ளுவர் கோட்டம் மொட்டைமாடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். இரவில் அங்குதான் அதிக முறை தூங்கியுள்ளேன். மேலேறி படுத்துத் தூங்கும்போது, காற்றும், குளிருமாக அத்தனை சுகமாக இருக்கும். கன்னிமாரா நூலக மொட்டை மாடியில் தூங்குவேன். அங்கேயே, அருங்காட்சியகத்துக்காக பல கட்டடங்கள் இருக்கிறது இல்லையா, அதில் உள்ள எல்லா மொட்டை மாடிகளிலும் தூங்கியிருக்கிறேன். தலைமைச் செயலக மொட்டை மாடி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மொட்டை மாடி, அப்புறம் எல்லாம் மால்களுடைய மொட்டை மாடிகளிலும் தூங்கியிருக்கிறேன்.”

 

“நீயே வழிக்கு வந்தாய் பாரு. பூவில் தூங்கினேன். அதில் தூங்கினேன். இதில் தூங்கினேன்னு கதை அளந்தாய். சுத்தி வளைச்சதும், மொட்டை மாடிக்கு வந்துவிட்டாய். ஸ்டேஷனில் வைத்து துவைத்தால், அப்படியே மொட்டை மாடி வழியாக கீழே இறங்கி வந்து, ஒவ்வொரு வீட்டிலும் கொள்ளை அடித்ததையும் சொல்லிவிடுவாய்.”

“Sir, Please understand me. பூவில் தூங்கினேன் என்பது உண்மைதான். காலையில் இந்தப் பக்கமாகப் போகும்போது, அந்தப் பூவைப் பார்த்தேன். பார்க்க அழகாக இருந்தது. உன்னுள்ளே உறங்கலாமா? என்று கேட்டேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. திடீரென மாலையில் அந்தப் பூவிடம் இருந்து அழைப்பு வருவதை உணர்ந்தேன். அதனால்தான், இரவில் வந்து படுத்தேன். இந்த மாளிகையில் யாரும் இல்லாததால் துணைக்காகக் கூட என்னை அந்தப் பூ அழைத்திருக்கலாம். கருப்பு வண்டு வந்துதான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. அது வராவிட்டால் நான் பூவிலேயே தூங்கிக் கொண்டிருந்திருப்பேன். நீங்களும் அமைதியாக இந்தச் சாலையைக் கடந்து போயிருப்பீர்கள்.”

“இதுபோல எந்தெந்த வீட்டுப் பூவில் தூங்கியிருக்கிறாய்?”

“வீட்டுச் செடி பூக்களில் குறைவாகத்தான் தூங்கியிருப்பேன். யாரும் செல்லாத மலைக்குன்றுகள் இருக்கும் பாருங்கள். அங்கு போவேன். பெயர் தெரியாத ஏதாவது ஒரு பூவிடம் இருந்து தூங்குவதற்கு அழைப்பு கிடைக்கும். ஒரு தொந்தரவும் இல்லாமல், அந்தப் பூவுக்குள் நுழைந்து தூங்குவேன். எழுந்து வர மனமே இருக்காது. அதுபோல மாட்டுக் கொம்பு இருக்கிறது பாருங்கள். அதில் ஒரு பக்கக் கொம்பில் தலையையும், மறுபக்கக் கொம்பில் காலையும் சாய்த்துக் கொண்டு தூங்கினால் அதன் சுகமே தனி. எல்லா மாடுகளும் படுத்துத் தூங்க அனுமதிக்காது. மீறிப் படுத்தால், குத்தி குடலை உருவிவிடும். இசைவு அளிக்கும் மாட்டின் கொம்புகளில் மட்டுமே ஏறிப் படுக்க முடியும். ஓர் உண்மையையும் சொல்கிறேன். எந்தெந்த வீட்டுக்குள் போனாய்? என்று நீங்கள் குறிப்பிட்டு கேட்பதால் கூறுகிறேன். புத்தகங்கள் வைத்திருப்போரின் வீட்டுக்குள்ளும் நுழைவேன். ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து, பக்க அடையாளத்துக்காக வைக்கப்படும் நாடாவைப் போல அதில் படுத்துத் தூங்கிவிடுவேன். இதில், நான் அடையும் சுகத்தை உங்களுக்கு விவரிக்க முடியாது. சார், மன்னிக்க வேண்டும். புத்தகங்கள் சுகமானது என்று பொதுவாகக் கூறிவிட்டேன். ஒரு வீட்டில் மண்ட்டோ படைப்புகள் எனும் புத்தகத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து படுத்துத் தூங்கினேன். இந்த இடத்தில் தூங்கினேன் என்று சொல்ல முடியாதவனாக இருக்கிறேன். கனத்த இதயத்தோடும், கண்ணீரோடும் அதில்      உழன்றேன். அழுகிப் போன இந்தச் சமூக அமைப்பு முறையை                          மண்ட்டோவின் எழுத்துகளில் இருந்து அறிந்துகொண்டேன். அதிலிருந்து இந்த அமைப்பு முறையிலிருந்து விலகி, தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன். சரி அதைவிடுவோம். எனக்குத் தூங்குவதில் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறது சார். உங்களால் முடிந்தால் அந்த ஆசை நிறைவேற உதவி புரியுங்கள். அந்தரத்தில் நீண்டு போகும் மின் கம்பிகளில் ஏதாவது ஒரு கம்பியில் மல்லாக்கப் படுத்து, ஒற்றைக் காலை மட்டும் கீழே தொங்கவிட்டு தூங்க வேண்டும். மின் அலுவலர்களிடம் எத்தனையோ முறை மின்சாரத்தை நிறுத்தி உதவிப் புரியுமாறு கேட்டுப் பார்த்து விட்டேன். ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஒரு நாள் இரவு மட்டும் தூங்கினால் போதும். என் ஆசை நிறைவேறிவிடும். அனுமதிப் பெற்றுத் தாருங்கள் சார்.”

“ஸ்டேஷனுக்கு வா. நிச்சயம் உனக்கு அனுமதி வாங்கித் தருகிறேன்.”

“சார், என்னை நீங்கள் இன்னும் நம்பவில்லை எனத் தெரிகிறது. இப்போதுகூட எனக்கு ஓர் ஆசை துளிர்க்கிறது. தொப்பியை நளினமாக வலது கையால் எடுத்து, உச்சந்தலைப் பகுதியில் வைத்து அழுத்தி, கூம்புவடிவ முனைப் பகுதியை இப்படியும் அப்படியுமாக அசைத்து நேர் செய்வீர்களே… அந்த முனைப் பகுதியில் படுத்துத் தூங்க வேண்டும் போல் உள்ளது.           உங்கள் தொப்பியிடம் என் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன். அது, அழைப்பு கொடுத்ததும் வந்து தூங்குகிறேன்” என்று போலீஸ்காரனைக் கீழே தள்ளிவிட்டு, என் வண்டியை எடுத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் குடிநீர் வாரிய தண்ணீர் டேங்க் மேல் படுத்து தூங்குவதற்காக விரைந்தேன்.”

 


 

20 ஆயிரம் புத்தகங்களால் மூடிக்கொள்வேன்.

வாழ்வின் இறுதி அத்தியாயத்தில் இருந்த அவனி, திடீரென ஒருநாள் தன்னுடைய சொந்த சேகரத்தில் இருந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை ஒரு மினி லாரியில் ஏற்றிக் கொண்டு, தோப்புக்கு வந்தார்.

 

ஆலமரத்துக்கு அடியில் சிறிய பள்ளத்தைத் தோண்டி, கையில் அகப்பட்ட எலீ வீஸலின் ‘இரவு’ நூலை அதில் வைத்து மண்ணால் மூடினார்.

 

“ஆலமரமே, இந்தப் புத்தகத்தை நீ படிப்பதன் மூலமேனும் உலகிற்குப் பயன் உண்டாகட்டும்” என்றார்.

 

அரச மரத்தின் அடியில் யொஸ்டைன் கார்டெரின் ‘சோஃபியின் உலகம்;’ மாமரத்தின்

அடியில் லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு;’ கொய்யா மரத்தின் அடியில் ரெய்ச்சல் கார்சனின் ‘மெüன வசந்தம்’ புத்தகங்களை வைத்து, வாசிக்க கோரிவிட்டு, தென்னை மரம் பக்கம் நகர்ந்தபோது, ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு புத்தகம் என்று மூடிவைப்பது சரியான செய்கை அல்ல என்ற முடிவுக்கு வந்தார்.

தோப்பின் மையத்தில் எல்லாப் புத்தகங்களையும் மண்ணால் மூடிவைத்தால் தேவையான புத்தகங்களை மரங்களே தங்கள் வேர்களை நீட்டிப் படித்துக் கொள்ளும் என்று பெரிய பள்ளத்தைத் தோண்டி முடித்தார்.

முதல் புத்தகமாக ஃப்ரன்ஸ் காப்ஃகாவின் ‘உருமாற்ற’த்தை எடுத்து பள்ளத்தில் போட்டார். அப்போது மாமரத்தில் இருந்து குரல் வந்தது.

“வேடிக்கையான மனிதனாக இருக்கிறான் பாரேன். நாம் விடும் மூச்சுகள்தாம் யாரோ ஒருவர் மூலம் புத்தகங்களாக உருமாறியிருக்கின்றன என்பதைக்கூட அறியாமல் இருக்கிறானே. நம் முன்னோர்களின் மூச்சுகள் மூலம் டால்ஸ்டாயால் எழுதப்பட்டதுதான் ‘புத்துயிர்ப்பு’

என்றால், இந்த மனிதன் புரிந்துகொள்வானா?”

பள்ளத்துக்குள் குதித்து ‘உருமாற்ற’த்தை எடுத்துக் கொண்டு மேலேறி வந்த அவனி, லாரியை வேகமாக ஓட்டிக் கொண்டு ஒரு மலைப் பகுதிக்கு வந்தார். ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் புத்தகங்களை உண்ணக் கொடுப்பதற்காக அவற்றைத் தேடினார். ஒரு வரையாட்டைக் கண்டதும், வைக்கம் முகம்மது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ நூலின் கட்டுமானத்தைக் குலைத்து, “உன் வாசிப்பின் மூலமாவது உலகிற்குப் பயன் உண்டாகட்டும்” என்றவாறே, அதற்கு அதை உண்ணக் கொடுத்தார்.

ஆனால், அந்த ஆடு அதை வாங்கிக் கொள்ளாமல், “புத்தகங்கள் எங்களால்தான் எழுதப்படுகின்றன என்று பஷீரால் குறியீடாகச் சொல்லப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பதை, அதைப் படித்த பிறகும் அறியாதவனாக இருக்கிறாயே” என்று அவரை முட்டுவதற்குப் பாய்ந்து வந்தது. அவர் தப்பி ஓடிவந்து, லாரியை எடுத்துக் கொண்டு, புத்தகங்களை என்ன செய்வது என்றே தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்தார். அப்போது திடீரென, ரே பிராட்பரியின் ‘ஃபாரென்ஹீட் 451’ நாவல் நினைவுக்கு வந்தது. அந்த

நாவலில் வருவதுபோல புத்தகங்களை எல்லாம் தீக்கிரையாக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் பற்றிக் கொண்டு, காட்டுத் தீ போல்  எரிந்தது.

‘இத்தனை ஆண்டுகால வாசிப்புக்குப் பிறகும் திருந்தாத சமூகம், இனிமேலா திருந்த போகிறது? இந்தப் புத்தகங்களைப் பிறருக்குக் கொடுத்துப் போவதிலும் பயன் எதுவும் இல்லை. ஒரு பெரிய பள்ளம் தோண்டி, புத்தகங்களால் மூடிக் கொண்டு என்னை நானே எரித்துக் கொள்வேன்’ என்று யாருமில்லாத இடத்திற்கு வந்து லாரியை நிறுத்தினார்.

பள்ளத்தைத் தோண்டி, அதில் படுத்துக் கொண்டு, புத்தகங்களைச் சிறு குன்றுபோல உடல்மேல் குவித்து, கைகளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு தீக்குச்சியைக் கொளுத்தினார். அப்போது, பற்றிய தீ ஆவேசக் குரலால், “யோவ், உனக்கு அறிவிருக்கா? ரே பிராட்பரியை ‘ஃபாரென்ஹீட்’ எழுத வைத்ததே நாங்கள்தான் என்பது உனக்குத் தெரியாதா? அந்தப் புத்தகத்தை ஒழுங்கா படிச்சியா? புத்தகத்தை எரிக்கவா அதில் சொல்லியிருக்கோம்” என்று கத்திவிட்டு, அணைந்து போனது.

மூக்கிற்குள் புகையேறியதுபோல, திணறி, பதறி, புத்தக இடிபாடுகளில் இருந்து மெல்ல உருவிக் கொண்டு வந்தவர், புத்தகத்தை வேறு என்னதான் செய்வது என்று அந்தக் குன்றையே சுற்றிச்சுற்றி வந்தார். அவர் படித்திருந்த இன்னும் நிறைய புத்தகங்கள் அவருக்குப் புதுப்புது

முடிவுகளைத் தந்துகொண்டு இருந்தன.


-த.அரவிந்தன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.