கடல் மனிதன் -கை.அறிவழகன்

ழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக்  கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள் கைவிரல்களை நளினமாக நுழைத்து இளஞ்சூட்டில் இருக்கும் கடலைகளை விரல்களில் உருட்டி அள்ளி கட்டை விரலால் தேய்த்து வாயில் ஊதிவிட்டு இந்தியாவின் நுழைவாயிலில் நடந்தால் சொல்லவே வேண்டாம், வாழ்க்கையை எளிமையாக விளக்குவது என்பது அதுதான்.

ஒருபக்கம் ஆர்ப்பரிக்கும் அரபிக் பெருங்கடல், அந்த அரபிக் பெருங்கடலுக்கு நிலத்தின் மீதோ, நிலத்தின் மீதிருக்கும் மனிதர்கள் மீதோ ஏதோ ஒரு கோபம் இருக்க வேண்டும், அதன் அலைகள் நிலத்தைத் தொட்டு மீளும் முனைகளில் ஏதோ ஒரு ஆற்றாமை, ஏதோ ஒரு தீயதின் எச்சங்களை அது மனிதர்கள் மீது தெளித்துக் கொண்டே இருப்பதாகவும், குழந்தைகளையும், இளம்பெண்களையும் விளையாடி மகிழ அனுமதிக்காத ஒரு வெறுப்புணர்வு அதனிடம் இருப்பதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

வண்ணமயமான மனிதர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காகத் தளும்பும் அலைகளிடையே ஆடும் பெரிய படகுகள், தொலைவில் கடலும் வானமும் தழுவிக் கொள்ளும் இடத்தை மறைத்துப் படுத்திருக்கும் மலைத்தொடர், எப்போதாவது மொந்தை மூக்கு அன்னப்பறவையைப் போல ஓசையின்றி மிதக்கும் வானூர்தியையோ, சதுர வரிசை சன்னல்களோடு அசையாமல் நிற்கும் கப்பல்களையோ பார்த்துக் கொண்டே விக்டோரியா மகாராணி வந்து போனதன் நினைவைச் சொல்லும் சொற்களைப் பலமுறை படித்தாலும் சலிப்பதே இல்லை.

பௌர்ணமியை ஒட்டிய காலங்களில் கற்சுவருக்குள் ஆடிக்கொண்டிருக்கும் கடலுக்கு தாஜ் ஹோட்டல் கட்டிடத்தைப் பார்க்கும் ஆசை வந்துவிடும் போல, முட்டி மோதி எப்போதாவது உயர எழும்பி கட்டிடத்தை ஒருகணம் பார்த்துவிட்டுப் போகிற வருகிற மும்பைக்காரர்களை நனைத்து விட்டு மறுபடி கீழிறங்கி அடங்காத ராட்சச நீர்ப்பறவையைப் போல உறுமிக்கொண்டிருக்கும்.

கடலையும், நிலத்தையும் இணைக்கிற அடையாளமாய் இடையில் அழுக்கு மஞ்சள் நிறத்தில் சூரியனை மறைத்துக் கொண்டு நிற்கிற கேட்வே ஆஃப் இந்தியாவின் கட்டிடம், கரைகளிலிருந்து சற்றுத்தள்ளி உயர உயர வளர்ந்திருக்கும் கான்க்ரீட் கட்டிடங்கள்.

ரகசியமான உரசல்களோடு ஒருவரை ஒருவர் அணைத்தபடி கரும்பாறைச் சுவர்களில் அமர்ந்திருக்கும் காதலர்கள், இப்படியான ஒரு நாளின் மாலையில் தான் நான் அவனைப் பார்த்தேன், அவன் எனக்கு முன்பாக பத்தடி தொலைவில் சோளத்தட்டைக் கடித்தபடியே கூட்டத்தோடு நடந்து கொண்டிருந்தான், முழங்கைகளுக்கு மேலே மடித்துவிடப்பட்டிருந்த ஒரு கட்டம் போட்ட பழைய சட்டை, வெளுத்துப் போன கருப்பு நிறத்தில் முக்கால் நீளத்துக்கு பேண்ட்,  துருத்திக்கொண்டிருக்கும் நீள விரல்கள், சீவப்படாத தலைமுடி, திடீரென்று கற்சுவர்களின் மீதேறியவன், உடலை வளைத்து எம்பிக் காற்றில் குதித்து ஒரு பந்து போலச் சுழன்று மீண்டும் அதே இடத்தில் கால்களை ஊன்றினான், நகர்ந்து கொண்டிருந்த கூட்டம் நின்று நிதானித்து அவனது சாகசத்தைப் பார்த்து ஒருகணம் தடுமாறியது, அவன் ஹிந்தியில் பேசத்துவங்கினான்,

“துரைமாரே, பாருங்கள் இப்போது இதே போலச் சுழன்று கடலுக்குள் போவேன், பிறகு மீண்டெழுவேன், பறப்பேன், ஏனென்றால் எனக்கும் இரண்டு குழந்தைகளும், ஒரு மனைவியும் இருக்கிறார்களே!!!”. கூட்டத்தைப் பார்த்து வெகுளியாகச் சிரித்தான், மறுபடி கூட்டத்தைப் பார்த்து “நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னுடைய இன்றைய உணவுக்கு ஏதாவது உங்களால் இயன்றதைத் தருவதுதான்” அவனுடைய குரலில் ஒரு கம்பீரம் இருந்தது, அவன் இரந்து கேட்பவனைப் போலில்லை, உங்களை மகிழ்விக்க எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றைச் செய்கிறேன், நீங்கள் எனக்குப் பணம் தரவேண்டும் என்று உரிமையோடு கேட்டான்.

கடல் அழுக்கு நிறத்தில் கீழே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது, பாறைகளின் மீது படர்ந்து கிடந்த பாசிகளின் மீது தனது பொன்னிற மாலைக் கதிர்களைப் பாய்ச்சியபடி சூரியன் மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். தலைக்கு மேலே பறந்து போன சில பறவைகள் இவனைக் குறித்த அக்கறை ஏதுமின்றிக் கடந்து போயின. அவன் குறைகள் ஏதுமின்றிச் சிரித்தான், அவனது சிரிப்புக்கு அவன் கடிவாளமிடவில்லை, கடந்து போன பறவைகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்குச் சிரித்தான், அதுதான் மனிதனின் நிறைந்த குணம், மனம் நிறைய சிரிக்கிற மனிதர்கள் நல்லவர்கள், அவர்கள் நேர்மையாக வாழ விரும்புபவர்கள்,

மற்ற எல்லா குணங்களையும் விட ஒரு மனிதனின் சிரிப்பு அவனது மனதை எதிரொலிக்கிறது.

நான் கொஞ்சம் நகர்ந்து அவனுக்கு அருகில் சென்று நின்று கொண்டு அவனது முகத்தைப் பார்த்தேன், ஒரு கிராமக் கோவிலின் கருவறைக்குள் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமைதியாக நின்று மந்திரங்களை முணுமுணுக்கிற பூசாரியைப் போல இருந்தான் அவன், அவனது முகத்தில் எந்த சலனமும் இல்லை, ஆர்ப்பரிக்கும் கடலை ஒருமுறை பார்த்து வணங்கினான், இப்போது காற்றில் குதித்து ஒரு முறை சுழன்று தலைகீழாக அவன் கடலுக்குள் குதித்தான், பாதிப்பேர் மெல்ல நகரத்துவங்க நான் கற்பாறைச் சுவர்களில் கைகளை ஊன்றி எட்டிப் பார்த்தேன், அலைகள் ஆக்ரோஷமாய் சுவற்றில் மோதி சுழன்று வெண்ணிற நுரையாய்ப் பொங்கியது. அவனை என்னால் பார்க்க முடியவில்லை, என்னைப்போலவே கூட்டத்தில் சிலர் எட்டி அவனது உடல் வெளியே தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள், சில நிமிடங்களில் அவன் முகத்தில் வழிகிற உப்புத்தண்ணீரை கைகளால் துடைத்தபடி உடைந்த பாறைகளின் வழியாக ஏறிக் கொண்டிருந்தான்.

இருத்தலுக்கான போராட்டத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள், உயிரைப் பணயம் வைத்து கடலில் குதிக்கிறார்கள், உடலை வளைத்து வித்தை காட்டுகிறார்கள், நான் உடலை வளைக்கிறேன் பார்த்தாயா? நான் பாடுகிறேன், நான் இசைக்கருவிகளை வாசிக்கிறேன், நான் உனக்குச் சமைக்கிறேன், நான் உனது உடலுக்கு எண்ணெய் பூசி அழுத்தி விடுகிறேன், எனது பிழைப்புக்கு நீ பொருள் கொடு என்கிறார்கள். கோபமடைகிறார்கள், அழுகிறார்கள், உலகம் என்னைப் புறக்கணித்து விட்டது என்று ஓலமிடுகிறார்கள், சக மனிதர்களைத் துன்புறுத்துகிறார்கள், தாக்குகிறார்கள், கொன்று விடுகிறார்கள், வாழ்க்கை முழுவதும் துயரங்கள் பின்தொடர்ந்து வருகிறது.

இப்போது சுவற்றில் இருந்து இறங்கி நின்று கொண்டவன், கூட்டத்தினரைப் பார்த்து வணங்கிக் காசு கேட்டான், குதிக்கும் போது இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்து போயிருந்தார்கள், பழையவர்களில் சிலர் காசு கொடுத்தார்கள், என் பங்குக்கு நானும் பணம் கொடுத்து விட்டு நகரத் துவங்கினேன், மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி, மேகங்களை ஊடுருவி மஞ்சள் நிறத்தில் அரபிக் கடலின் பரப்பில் சூரியன் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களைப் பார்த்தபடி கேட்வே ஆஃப் இந்தியாவின் பரப்பைக் கடந்து, பயணித்து கொலாபா காஸ்வேயின் கடைகளின் ஊடாக மிதமான இருட்டுக்குள் நடந்து போனேன்.

கற்களால் செய்யப்பட்ட தோடுகளை விற்கும் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் விளக்குகளின் விசித்திரமான ஒளி தீற்றப்பட்டு பாதரச நிறத்தில் முழுநிலவைப் போல அவர்கள் ஜொலித்தார்கள், கிராமத்து வீட்டின் லண்டியன் விளக்கொளியில் மனிதர்களின் முகங்களைப் பார்த்தபடி கதை கேட்டது நினைவுக்கு வந்தது. கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு இரவு நகரத்தை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருகிற அறிகுறிகள் தென்பட்டது, இரவுக்கென்று ஒரு அமைதியை மனிதர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களின் குரல் தானாகவே ஒரு தணிப்படைகிறது, மெல்லிய குரலில் அவர்கள் பேசுகிறார்கள்.

நான் வீடு திரும்ப வேண்டும், மனிதர்களோடு பேசுவதை விடவும், அவர்களை வேடிக்கை பார்த்தபடி நிலத்தோடும், கடலோடும் பேசிக்கொண்டு அலைவது ஒரு உன்னத அனுபவம், இடைமறிப்புகளும், பிடிக்காத சொற்களும் இருக்காது, தேவையான சொற்களைத் தேர்வு செய்து பேசிக்கொண்டு நடக்கலாம், சாலையில் ஒளிபாய்ச்சியபடி கடலுக்குள் கொஞ்சம் உமிழப்பட்ட ஊர்திகளின் ஒளி ரம்மியமாய் மனதை மயக்கியது, சர்னி ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, குறுகலான சாலையில் நடக்கும் போது நியான் விளக்கொளியின் கீழே சாலைகளில் வசிக்கும் குடும்பங்களைக் கடந்து போகிற போது அவனைப் பார்த்தேன்.  அதே மனிதன், கேட்வே ஆஃப் இந்தியாவின் கற்சுவரில் இருந்து தாவிக் குதித்து சாகசங்கள் செய்த அதே மனிதன்.

அவனது மடியில் அழகிய தேவதையைப் போல அந்தக் குழந்தை படுத்திருந்தாள், 6 வயது இருக்கலாம், மெல்லிய பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நீள அங்கியை அவள் அணிந்திருந்தாள், நின்று மீண்டுமொருமுறை அவனைப் பார்த்தேன், இப்போது அவனுக்குக் காற்றில் எம்பிக் குதித்துச் சுழன்று ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலின் ஆபத்தில் குதிக்கிற வேலையில்லை, அவன் அமைதியாக அந்தக் குழந்தையின் முகத்தை வருடியபடி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான். அவனது சொற்கள் எனது நெஞ்சுக்குள் நிழலாடியது, “துரைமாரே, பாருங்கள் இப்போது இதே போலச் சுழன்று கடலுக்குள் போவேன், பிறகு மீண்டெழுவேன், பறப்பேன், ஏனென்றால் எனக்கும் இரண்டு குழந்தைகளும், ஒரு மனைவியும் இருக்கிறார்களே!!!

அவன் கடலுக்குள் குதித்துச் செய்த சாகசங்களை விடவும், இப்படி இருப்பது எனக்குப் பிடித்திருந்தது, தொலைவிலிருந்து நான் அவனை ரசித்தேன், இருத்தலின் துயரத்துக்காக மனிதர்கள் எதை வேண்டுமானாலும் பணயம் வைக்கிறார்கள் என்ற எனது எண்ணவோட்டத்தை இப்போது நான் மாற்றிக் கொண்டேன், இருத்தலின் துயரம் என்ன பாடு படுத்தினாலும், மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் செலுத்துகிற அன்பு தான் அவர்களை இயக்குகிறது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புக்காகத்தான் மனிதர்கள் இப்படியான சாகசங்களைச் செய்யப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன், நகரத்திலிருந்து உமிழப்பட்ட ஒளி கடலுக்கு மேலே குவிந்து கிடந்தது.