ஜெயந்தி -அசோக்ராஜ்  

பாலகுருசாமி புக் இருக்கா?” – எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். அவளுக்குப் பின்னால், நிலைவாசலில் நின்றபடி நான் கேட்டதை முதலில் அவள் அம்மா தான் கவனித்தார். அவருக்குப் புரியவில்லை. தன் மகளிடத்தில் தான் நான் இப்படிக் கேட்கிறேன் என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு நாழி பிடித்தது.

எந்தக் கேள்வியுமின்றி என்னைப் பார்த்தார். ஜெயந்தி திரும்பக் கூட இல்லை. ”இவங்க கிட்ட தான் கேட்கிறேன். அவங்க பி.சி.ஏ தானே?” என்றேன். வேணி ஆண்ட்டிக்கு இப்போது தான் விளங்கியது. நான் கேட்பது ஏதோ பாட சம்பந்தம் என்பதைப் புரிந்து கொண்டு ஜெயந்தியிடம்

‘’இந்தப் புள்ள உங்கிட்ட தாம்மா கேட்குது.. பக்கத்து வீட்டுத் தம்பி’’ என்றார். அம்மாவும், தீபாவும் வேணி ஆண்ட்டி பற்றி என்னிடம் சொல்லிவைத்திருந்த கடுமை எதுவும் அவர் முகத்தில் தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. அல்லது அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு புத்தகம் கேட்பதை எந்தத் தாய் தான் தடுப்பாள், தவறாக நினைப்பாள்? அந்தச் சலுகையில் தான் நான் ஜெயந்தியை அணுகினேன்.

ஜெயந்தி திரும்பினாள். கையில் மல்லிச்சரம் வைத்துக் கொண்டு திண்ணையிலிருந்து வாசல் படிகளில் இடதுகால் தொங்க, வலதுகாலை மடித்து உட்கார்ந்த மேனிக்கு அவள் என் பால் திரும்பியதில் ஒரு கவிதை இருந்தது. ஜெயந்தியை முதன் முதலில் பார்க்கிறேன். தீபா சொன்னது எத்தனை உண்மை என்று வியந்தேன். மாருதி ஓவியம் போல வட்ட முகம். மார்வாடிப் பெண் போன்ற சிகப்பி. பவுடர் எல்லாம் உனக்குத் தேவையில்லை என்று பின்னாட்களில் அவள் பழகிவிட்டால் சொல்ல நினைத்தேன். புருவத்தை நேர்த்தி செய்திருந்தாள். சின்னப் பொட்டை வெறுத்து சற்றே பெரிய ஸ்டிக்கர் பொட்டை வைத்திருந்தாள். அது அவளைக் கொஞ்சம் முதிர்ச்சியாகக் காட்டினாலும், கண்களின் பேதைமை, அப்படியொன்றும் அவள் பெரிய மனுஷி இல்லை என்றே பறைசாற்றியது. துப்பட்டா இல்லாதவள் கீழே உட்கார்ந்திருப்பதில் இருக்கிற சங்கடம் அவளுக்கும் இருந்தது. முதுகை நிமிர்த்தி கழுத்துக்குக் கீழே தளர்ந்திருந்த உடையை இறுக்குகிறாள் என்பது புரிந்தது. அரைக்கால் வினாடி என்றாலும் அவள் கண்களைத் தான் பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூ தூவிய சுடிதாரில் அமர்ந்திருந்த பக்கத்து வீட்டுத் தேவதை. திரும்ப அதே கேள்வியைக் கேட்டேன்.

”இருக்கு.. ஆனா லைப்ரரி புக்” – ஒரே பதிலில் ஆமோதிப்பும், மறுப்பும் இருப்பது போல் சொன்னாள். அவளுடைய புத்தகமாக இருந்தால் கொடுப்பாள் போலவும், லைப்ரரி புக் என்றால் கொடுக்கமாட்டாள் போலவும் நான் புரிந்து கொள்ள வேண்டும் போல் அந்த பதில் இருந்தது. நான் விடவில்லை. விடுவதாயில்லை. அன்றைக்கு அவளிடம் பேசிக் காண்பிக்கிறேன் என்று தீபாவிடம் சவால் விட்டு வந்திருந்தேன்.

”பரவாயில்லை. நாளைக்கே கொடுத்துடறேன். லிங்க்ட் லிஸ்ட் புரோகிராம் மட்டும் எழுதிக்கறேன்” என்றேன். அருகில் அம்மாவை வைத்துக் கொண்டு, என்னை அணுகுவதில் குழம்பினாள். புத்தகத்தை மறுத்துவிடுவதைத் தான் அம்மா விரும்புவாள் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். யோசித்தாள். அவள் முகத்தில் ஒரு சங்கடம் இருப்பதை உணர்ந்தேன். எனினும் அப்படியே நின்றேன்.

பூவிலும் விரலிலும் இருந்த கண்களை அகற்றாமல் வேணி ஆண்ட்டி ”கொடும்மா.. நாளைக்கு கொடுத்திடறேன்னு சொல்லுதுல்ல தம்பி” என்றார்.

”சரிம்மா” என்றுவிட்டு ஜெயந்தி உள்ளே வந்தாள். நான் அவள் பின்னாலேயே சென்றேன். அவள் வீட்டு வாசலிலேயே நின்றேன். உள்ளே டிவி பார்த்துக் கொண்டிருந்த அவள் அக்கா வஸந்தி திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் அவள் வீட்டு வாசலில் நான் நிற்பதன் கேள்விகள் இருந்தன. உள்ளே ஜெயந்தியின் புத்தகத் துழாவலைக் கவனித்தவள், திரும்ப டிவி பார்க்க ஆரம்பித்தாள். என்னை உள்ளே அழைப்பாள் என்று எதிர்பார்த்தேன். அழைக்கவில்லை.

ஜெயந்தி வந்து ”நாளைக்கு காலைல நான் காலேஜ் போறதுக்குள்ள கொடுத்துடுங்க” என்றுவிட்டு என் பதிலை சற்றும் எதிர்பார்க்காமல் திரும்ப திண்ணைக்கு நகர்ந்தாள். அவள் கடக்கையில் மல்லிகை வாசம் என்னைக் கிறங்கடித்தது.

நான் எங்கள் வீட்டிற்குள் வந்து, இவை யாவற்றையும் வாசலண்டையே நின்று கவனித்துக் கொண்டிருந்த தீபாவின் தலையில் குட்டி ”சக்ஸஸ்..” என்று கையில் இருந்த புக்கை அவள் முகத்தருகில் ஆட்டினேன்.

”ரொம்ப பழைய டெக்னிக் டா இதெல்லாம்” என்றவளிடம் நான் சொன்னது போலவே அவளிடம் பேசிவிட்டு வந்ததின் வியப்பு இல்லாமல் இல்லை. ஆனால் அதை தீபா காட்டிக் கொள்ளவில்லை. என் பீற்றல் இன்னும் ஜாஸ்தியாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

அவர்கள் இங்கே குடிவந்த ஒரு வாரம் வரையிலும் கூட எனக்கு ஜெயந்தியைப் பற்றித் தெரியாது. தீபா தான் தூபம் போட்டாள்.

‘அவங்க வீட்ல ஒரு பொண்ணு இருக்காடா? சினிமா நடிகை மாதிரி என்ன கலர் தெரியுமா? பொன்னையா காலேஜ்ல பி.சி.ஏ ஃபர்ஸ்ட் இயராம்’ என்றாள். அதற்கு முன்பு வரை அரசல்புரசலாக நான் அவள் அக்கா வஸந்தியைத் தான் பார்த்திருந்தேன். அதை தீபாவிடத்தில் சொல்லும் போது தான் தெரியும், வஸந்தி அக்காவுக்கு பால்கோவா மாதிரி ஒரு தங்கை இருப்பது. இரண்டு நாள் தீபா எனக்காக மெனக்கெட்டு அவள் அவ்வப்போது வெளியில் தென்படும் சமயங்களை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சொல்வதென்றால் என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள். ஒரு தங்கையாக அவள் செய்து கொண்டிருப்பது சற்று அதிகப்படியோ என்று யோசித்தேன். எனினும் ஏதோ விதத்தில் என்னையும் அந்த நாள் வரை நான் பார்த்தறியாத ஜெயந்தியையும் அவள் இணைப்பது எனக்குப் பிடித்திருந்தது. அன்றைக்கு திண்ணையில் அவள் பூ கட்டிக் கொண்டிருப்பதை என்னிடம் சொல்லியதும் தீபா தான்.

”இப்ப நீ கேஷுவலா வெளில போனா அவளைப் பார்க்கலாம்..” – தங்கச்சி பேசற பேச்சா இது என்பது போல் நான் அவளைப் பார்த்தேன்.

”பார்க்கிறது என்ன? பேசியே காட்டறேன்..” என்றேன்.

”டேய்.. லூசு.. அவங்க அம்மா பயங்கர கண்டிப்பு பேர்வழினு அம்மா சொல்லுச்சு” என்று எச்சரித்த தீபாவை அலட்சியம் செய்து கம்ப்யூட்டர் புரோகிராமிங் புத்தகங்களுக்கு பெயர் போன பாலகுருசாமி தயவுடன் ஜெயந்தியை அணுகினேன்.

ஜெயந்தி குடும்பம் வந்த பிறகு தான் எங்கள் காலனியே எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. இன்னதென்று விளங்காத நவீன ஓவியம் போல் இருக்கும் எங்கள் காலனி. ஒரு கூடம், ஒரு சிறிய அறை, ஒரு அடுக்களை மட்டும் இருக்கிற நாலு வீடுகள். எங்கள் வீடும், ஜெயந்தி வீடும் எதிரெதிர் திசையில் இருக்கும். இரண்டு வாசல் கதவுகளும் திறந்திருந்தால், அவர்கள் டிவியை நாங்கள் பார்க்க முடியும். எங்கள் பீரோவை அவர்கள் பார்க்க முடியும். இரண்டு வீட்டுக்கும் நடுவில் பத்தடி இடைவெளி இருக்கும். நான் வழக்கமாக உட்கார்ந்து படிக்கும் இடம்.

நடுவில் ஒரு மாடிப்படி ஏறும். மாடியிலிருந்த இரண்டு வீட்டுக்கும் சேர்த்து மாடிப்படியின் கீழே தான் டாய்லெட் இருக்கும்.  அவ்வப்போது அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள் எனில், நான் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவேன்.

சிறுவீட்டில் எவ்வளவு நேரம் தான் அடைபட்டிருப்பது? எவ்வளவு தான் குட்டி டிவியை வெறித்துப் பார்ப்பது? பெரும்பாலும் நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன். கிஷோர் வீட்டுக்கோ, கிரவுண்டுக்கோ சென்றிருப்பேன். காலேஜ் விடுமுறை தினமெனில் சாப்பிடுகிற நேரம் தவிர என்னை வீட்டில் பார்க்கவே முடியாது.

ஜெயந்தி குடும்பம் எங்கள் காலனியில் குடியேறிய பின்பு, நிலைமை தலைகீழானது. காலேஜ் போய்விட்டு வந்த மீதி நேரங்களில் குட்டிப் போட்ட பூனை மாதிரி வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருப்பேன். அது நாள் வரை பெண் பற்றி அதிகம் சிந்தித்திராமல் தான் இருந்திருக்கிறேன். அவகாசம் இல்லை. வாய்ப்பு இல்லை. படித்தது பாய்ஸ் ஸ்கூல். கல்லூரியும் அந்தப் பக்கம் திரும்பினாலே வீட்டிற்கு லெட்டர் போடும் கண்டிப்பில் இருந்தது. ஜெயந்தியைப் பார்த்த பிறகு தான் என் கனவுகள் வேறு வண்ணம் கண்டிருந்தன. என் முகத்தில் பரு வந்திருந்தது. அவளைக் கொண்டு நான் செய்யும் பாவனைகளை என் வீடும் கவனித்துக் கொண்டிருந்தது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தும் சட்டை செய்யவில்லை.

என் அப்பா அப்போது ரயிலடியில் டீக்கடை வைத்திருந்தார். ஜெயந்தியின் அப்பா மெடிக்கல் காலேஜ் உள்ளேயே இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்தார். வாழ்க்கை துரத்தும் வாழ்வு.

அப்பா அதிகாலை கிளம்பினார் எனில் பின்னிரவில் தான் வருவார். ஞாயிறன்று மட்டும் அரை நாள் வீட்டில் தங்குவார். ஜெயந்தியின் அப்பாவுக்கு ஞாயிறன்று மட்டும் முழு நாள் விடுமுறை.

என் அம்மாவுக்கு சரியானதொரு பேச்சுத் துணையாக வேணி ஆண்ட்டி மாறியிருந்தார். இருவரும் திண்ணையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள் எனில், சமைப்பதைக் கூட மறந்தவர்களாக,

குக்கர் விசிலடித்து அழைப்பதைக் கூட கேட்காதவர்களாக இருந்தார்கள்.

அப்போது நான் பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸில் இரண்டாமாண்டு படித்த சமயம், ப்ளஸ்டூவில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியிருந்தேன். காலேஜிலும் மூன்று செமஸ்டராக டாப்பர். யாரையும் ரேங்கில் என்னைத் தாண்டவிட்டதே இல்லை. அடுப்பிலே நிற்பதனால் வெந்து தோலுரிந்து இருக்கும் அப்பாவின் கைகளைப் பார்க்கும் போதெல்லாம், புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். அசராமல் படித்துக் கொண்டிருந்தேன். இந்த விஷயங்கள் எல்லாம் என் அம்மா, வேணி ஆண்ட்டியிடம் சொல்லி, அவர் மூலம் ஜெயந்தி அறிந்து வைத்திருந்தாள் என்பது பின்னாளில் அவள் சொல்லித் தான் எனக்குத் தெரிந்தது.

ஒரு ஞாயிறு மாலை, அம்மா செய்த கேசரியை ஜெயந்தி வீட்டில் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி, தீபாவைப் பணித்தாள். தீபா வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டு, முரண்டு பிடிக்கவே

”நீயாவது போய் கொடுத்துட்டு வாயேன்” என்று அம்மா சொல்ல, அதற்காகவே காத்திருந்தவன் போல, பாய்ந்து சென்று பாக்ஸை எடுத்துக் கொண்டு ஜெயந்தி வீட்டுக் கதவைத் தட்டினேன். வெளியே எட்டிப் பார்த்தது ஜெயந்தியின் அப்பா. அப்போது தான் நான் அவரை முதன் முதலில் பார்க்கிறேன். ஆனால் அவர் என்னை அறிந்து வைத்திருக்கிறார் என்பது அவரின் புன்னகையில் தெரிந்தது.

”உள்ள வாப்பா.. உட்கார். பி.இ தானே படிக்கிறே?” கேட்டவரிடம்

”அம்மா கேசரி கொடுக்கச் சொன்னாங்க” என்று பாக்ஸை நீட்டினேன். ”பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸ் அங்கிள்” என்றேன். முன்பு நான் பார்த்த அதே இடத்தில், அதே தினுசில் உட்கார்ந்து டி,வி பார்த்துக் கொண்டிருந்தாள் வஸந்தி அக்கா. அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் எல்லாம் அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை எனக்கு உணர்த்தத் தவறுவதேயில்லை என்று எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஏதோ என் விஷயத்தில் ஒரு நெருடல் அவளுக்கு இருப்பதாகப் பட்டது. ஜெயந்தியின் பொருட்டு, நான் செய்யும் சேட்டைகளை அவள் அறிந்தே இருந்தாள்.

”சின்னவ இருக்காளே.. ரெண்டு பாடத்துல அரியர்.. கணக்குல ரொம்ப கஷ்டப்படறா.. இவ அம்மா சொன்னா.. நீ நல்லா படிப்பேனுட்டு.. கொஞ்சம் சொல்லிக் கொடுக்கறியா..?” என்றவர் ஜெயந்தியைக் கூப்பிட்டார். அடுக்களையிலிருந்து அம்மாவுடன் வந்து எட்டிப் பார்த்தவள் நைட்டி அணிந்திருந்தாள். அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பதை வஸந்தி அக்கா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேணி ஆண்ட்டி ”இவளுக்கும் கணக்கு வராது. அதனால தான் பிசியோதெரபி படிச்சா..” என்றார். நான் வஸந்தி அக்காவைப் பார்த்துச் சிரித்தேன். பதிலுக்கு அவள் கிஞ்சித்தும் சிரிக்கவில்லை.

அன்றிலிருந்து எனக்கும் ஜெயந்திக்கும், எங்கள் இருவரின் வீடும் அறிந்த, அனுமதித்த ஒரு பழக்கம் ஏற்பட்டிருந்தது. ஒரு படிக்கிற பையனுக்கு இத்தனை சலுகை இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. தீபாவை விடவும் அவர்கள் வீட்டிற்குள் உரிமையுடன் போய் வருகிற சுதந்திரத்தை நாளடைவில் நான் பெற்றிருந்தேன்.  சில நேரம் அவள் வீட்டின் கூடத்திலேயே தரையில் உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுத்தேன். பல நேரம் இரு வீட்டின் நடுவில் மாடிப்படி அருகில் சேர் போட்டு உட்கார்ந்து படிப்போம்.

அப்போது குறுக்கே வருபவர்களில் தீபாவையும், வஸந்தி அக்காவையும் தவிர எங்களை குறுகுறுப்பாகப் பார்த்தவர்கள் யாருமில்லை.

”அது லைப்ரரி புக் இல்லை.. உன் புக் தான்! பேர் எழுதியிருந்துச்சு.. அப்புறம் ஏன் அப்படிச் சொன்னே?” – முதல் நாள் சம்பவம் பற்றி ஜெயந்தியிடம் ஒரு நாள் கேட்டேன்.

”உண்மையைச் சொல்லு.. உனக்கு நிஜமா அந்த புக் தேவையா இருந்துச்சா?” என்றாள். ஜெயந்தி இப்படித் தான் நாங்கள் இருவரும் தனியே பேசிக் கொள்ளும் போது என்னை நீ வா போ என்றும், மற்றவர்களுக்கு முன்பு நீங்க வாங்க என்று பேச ஆரம்பித்திருந்தாள். அவளின் இந்தக் கேள்வி தீட்சண்யமாக இருந்தது. அவளுக்கு எல்லாம் தெரியும் என்ற உப செய்தி அதில் ஒளிந்திருந்தது. கேள்விக்குக் கேள்வியே பதிலாகுமா? ஆனாலும் அதற்கு மேல் அந்தப் பேச்சை அவள் தொடரவிடமாட்டாள். நானாக வலிந்து அங்கே நின்றாலும், அவள் அந்தப் பேச்சை அப்படியே அறுத்து வேறு பேச்சில் நுழைந்திருப்பாள்.

இப்படித்தான் ஒரு தடவை ”நைட்டி போட்டா உன் அக்கா மாதிரி கொஞ்சம் வயசானவளாத் தெரியறே..” என்றேன். அவள் அதைக் காதில் வாங்கவே இல்லாதவள் போல ”கால்குலஸில் நேத்து ஒரு சம் சொல்லிக் கொடுத்தியே.. அது அப்ப புரிஞ்ச மாதிரி இருந்துச்சு.. இப்ப சுத்தமா புரியலை” என்றாள். திரும்பவும் நைட்டியைப் பற்றிப் பேச எனக்கு வாய் வரவில்லை. கால்குலஸ் நடத்த ஆரம்பித்திருந்தேன்.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அதன் பிறகு நான் அவளை நைட்டியில் பார்த்ததே இல்லை. துப்பட்டா இல்லாமல் சுடிதார் அணிந்து தான் திரிவாள்.

அன்றிரவு பத்து மணிக்கு மேல் ஆகியும் நைட் ஸ்டடி என்று சொல்லி இருவரும் வீட்டு வாசலில் ப்ளாஸ்டிக் சேர் போட்டு உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தோம். நிஜத்தில் அப்படியாகப் பாவித்து, அர்த்தமற்றுப் பேசிக் கொண்டிருந்தோம். நாற்காலியின் கைப்பிடியின் குறுக்கே ஒரு பெரிய அட்டையைப் போட்டு அதன் மேல் புத்தகத்தை வைத்து உட்கார்ந்திருந்தாள். நாற்காலியின் அந்தச் சிறிய இடத்திற்குள் எப்படியோ சம்மணமிட்டிருந்தாள். சற்று எக்கினால் அவள் தோளைத் தொட்டுவிடக் கூடிய தூரத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். நிச்சயமாகத் தெரியும், எங்கள் இருவருக்கும் பாடத்தின் மேல் நாட்டம் இல்லை, போலவே வீட்டிற்குச் சென்று தூங்கவும் இஷ்டமில்லை.

அட்டை அவள் மார்புக்குக் கீழே அவளுடைய மேல் வயிற்றில் முட்டியிருந்தது. அதனால் அவள் மார்புகள் மட்டும் அந்த அட்டையில் தனியே உட்கார்ந்திருப்பது போலத் தெரிந்தது. என் வயசும், அவள் வயசும் என் கண்களை அடிக்கடி அவள் கழுத்துக்குக் கீழேயே நிலைகுத்த வைத்தன.

இரண்டொரு முறை என் கண்களைக் கவனித்தாள். ”உனக்கு படிப்பு ஏறலை..” என்றாள். இப்படிச் சொன்னாளே தவிர அட்டையை எடுக்கவில்லை. வேறு மாதிரி திரும்பியும் உட்காரவில்லை. சிலை போல் அப்படியே தான் இருந்தாள். அதில் பார்ப்பதானால் பார்த்துக்கோ என்ற தெனாவெட்டு இருப்பதாய் நினைத்தேன்.

”எப்படிச் சொல்றே?” என்றேன். என் புத்தகத்தை அவளிடம் நீட்டி ”ஏதாவது கேள்வி கேட்கறியா? கரெக்டா பதில் சொல்றேன்” – அவள் வாங்கிக் கேட்டிருந்தால் என் குட்டு வெளிப்பட்டிருக்கும். சுத்தமாக நான் எதையும் படித்திருக்கவில்லை. இருந்தாலும் அவள் கூற்றை மறுப்பதற்கு இப்படி உதார் விடுவதைத் தவிர எனக்கு வேறு மார்க்கமில்லை.

‘ஆமாம் படிப்பு ஏறல தான், இப்படி மார்க்கமா உட்கார்ந்திருந்தா.. எவன் டீ படிப்பான்’ இப்படிக் கூட சொல்லிவிடலாமா என்று தோன்றியது. அந்த அளவிற்கான தைரியத்தையும், உரிமையையும் இன்னும் அவள் நட்பு எனக்குக் கொடுத்திருக்கிறதா என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது.

”வேண்டாம்..உன் லட்சணம் என்னனு தெரிஞ்சுபோயிடும்” என்றாள். பட்டென்று குட் நைட் என்றுவிட்டு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். நானும் உடனே என் வீட்டிற்குள்ளே சென்றுவிடலாம் தான். யாரும் கேட்கப் போவதில்லை. எனினும் மேலும் அரைமணி நேரம் அங்கே விட்டேத்தியாக உட்கார்ந்துவிட்டு, படித்துக் களைத்தவன் போல உள்ளே வந்தேன்.

அப்பா எனக்காகவே காத்திருந்தவர் போல ”என்னப்பா படிச்சு முடிச்சிட்டீங்களா?” என்றார். அந்தக் கேள்வியில் ஒருவித ஊசிக் குத்தல் இருந்தது. படிக்கிறேன். பேசுகிறேன், தூக்கம் வந்தால் தூங்குகிறேன். இவருக்கென்ன போச்சு.. அரைத்தூக்கத்தில் எழுந்து என்னிடம் கேட்டே ஆக வேண்டுமா என்று அப்பாவிடம் எனக்குக் கோபம் வந்தது. அந்தக் கோபத்தை, அவர் கேள்வி எனக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டும் விதமாகச் சற்று காட்டமாகவே ”ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு, வெளி லைட்டை அணைத்துவிட்டுப் படுத்தேன்.

செமஸ்டர் நெருங்க நெருங்க, தினமும் நானும் ஜெயந்தியும் இரவு படுக்க வருவதற்குத் தாமதமானது. நிஜமாகவே நாங்கள் படிக்கிறோமா என்பதில் அந்தக் காலனியே ஐயம் கொள்ள ஆரம்பித்தது. ஒரு நாள் மாடிவீட்டு டிரைவர் மாமா இரவு பதினோறு மணிக்கு பாத்ரூமுக்காக இறங்கி வந்த போது நான் ஜெயந்தியின் புஜத்தைக் கிள்ளிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். நிஜமாக நான் சொல்லிக் கொடுத்ததை அவள் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கான ஓர் ஆசிரிய பாவனை தான் அந்தக் கிள்ளல் என்றாலும், இப்படியான சலுகையில் நான் அவளை அடிக்கடி ஈஷிக் கொண்டிருந்தேன். அது அவளுக்கும் தெரிந்தே இருந்தது. நான் அவரைப் பார்த்ததும் பொறுமையாக ஜெயந்தியின் கையிலிருந்து என் கிள்ளலை விலக்கிச் சிரித்தேன்.

டிரைவர் மாமா தான் எதையும் பார்க்காதவர் போல, அப்படியே பார்த்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர் போல ”படிப்பு தீவிரமா போகுது போல.. படிங்க.. படிங்க” என்றுவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தார். அவர் திரும்பி வருவதற்குள் ஜெயந்தி உள்ளே போய்விடுவதாக பரபரத்தாள்.

”ஏய் லூசு.. இரு.. நாம என்ன தப்பா பண்ணிட்டிருக்கோம். ஏன் பயப்படறே.. படிச்சுட்டுத் தானே இருக்கோம். இப்ப நீ உள்ளே போனா தான் சந்தேகம் வரும்” என்றேன். இப்படி நான் சொன்னேனே தவிர எனக்கும் நெஞ்சின் அடியில் ஒரு சின்னப் பதட்டம் இருந்தது.

”நீ சொல்லிக் கொடுக்கிற ரெண்டு சப்ஜெக்ட்ல மட்டும் நான் பாஸாகலைன்னா அப்பா கொன்றுவார்” என்றாள் ஜெயந்தி. எனக்கே இந்தச் செய்தி திகீரென்றது. இந்த நிர்ப்பந்தம் நாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டது. எப்போது கேட்டாலும் படிக்கிறேன் பேர்வழி என்று இரவு பனிரெண்டு மணி வரை கூட உட்கார்ந்திருப்போம்.

வஸந்தி அக்கா தான் ‘அவன் சொல்லிக் கொடுக்கிற சப்ஜெக்ட்ல மட்டும் நீ எத்தனை மார்க் வாங்கினேனு அப்பா தனியா கேட்பார்.. மறுபடி ஃபெயில் ஆனே.. தொலைஞ்சே..’ என்று ஜெயந்தியை பீதி கொள்ள வைத்திருக்கிறாள்.

இரவில் டிரைவர் மாமா பாத்ரூம் வந்த இரண்டாம் நாள் அம்மா என்னிடம் ”இனிமே நைட் ரொம்ப நேரம் நீயும், ஜெயந்தியும் படிக்காதீங்க” என்றாள்.

”ஏன்மா?” என்றேன். மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்றடித்தன. அதில் பிரதானமாக டிரைவர் மாமா தான் வந்தார்.

”படிக்கிறதா இருந்தா விடிகாலைல எழுந்து படிங்களேன்” என்றாள் அம்மா. நேரடியான பதிலாக அது இல்லை. எனினும் அதற்கு மேல் நான் கிளறவில்லை. ஆனால் ஜெயந்தியிடம் மட்டும் டிரைவர் மாமா, அவள் குடும்பத்திடமோ அல்லது என் குடும்பத்திடமோ ஏதோ போட்டுக் கொடுத்துவிட்டதைச் சொன்னேன். இல்லாவிட்டால் திடீரென்று எங்கள் நைட் ஸ்டடிக்கு தடை போடுவாளா?

‘’எப்படியாவது படிச்சு பாஸ் பண்ணிடு.. ஃபெயிலானா என் மானமே போய்டும். எத்தனை தடவை நடத்தச் சொன்னாலும் நடத்தறேன். தெரிஞ்ச சம்ஸ் தானேனு விட்டுடாதே.. அடிக்கடி போட்டுப் பாரு.. அப்ப தான் எக்ஸாம்ல ஸ்பீடா சால்வ் பண்ண வரும். கணக்கு மட்டும் நல்லா புரியற மாதிரி இருக்கும். ஆனா எக்ஸாம்ல மறந்துடும்’’ என்றேன்.  நிஜமாகவே அவள் பாஸ் பண்ண வேண்டும் என்பதில் அவளை விட நான் அதிகம் கவலைப்பட்டேன். ஜெயந்திக்கு என் புலம்பல் சிரிப்பாக வந்தது.

அடுத்து வந்த செமஸ்டரில் அரியர் வைத்த பாடங்களில், நான் சொல்லிக் கொடுத்ததினால், ஜெயந்தி முறையே 75, 88 மதிப்பெண்கள் எடுத்துத் தேறினாள். அதில் கால்குலஸில் வகுப்பிலேயே யாரும் எடுக்காத மார்க்கை எடுத்திருந்தாள். ஜெயந்தியின் படிப்பு வாழ்க்கையிலேயே முதன் முதலாக ஒரு பாடத்தில் முதல் ரேங்க் பெற்றிருந்தாள். நான் ரேங்க் எடுத்த போது இல்லாத சந்தோஷம் அவள் மார்க்கை அறிந்ததும் எனக்குக் கிடைத்திருந்தது.

அந்தக் காலனிக்கே என்னை நிறுவியதொரு மகிழ்ச்சி அது. நாங்கள் சும்மா கடலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தோம் என்று தானே நினைத்தாய்.. ஏய்.. டிரைவர் மாமா.. இதோ பார் என் ஜெயந்தியை… என்ன மார்க் எடுத்திருக்கிறாள் பார்!

வேணி ஆண்ட்டி மொத்தக் காலனிக்கும் என்னைப் பற்றி பெருமை அடித்தாள். அவள் பாராட்டு அடிவயிற்றிலிருந்து வருவதாக இருந்தது.

‘உங்கப் புள்ளை இல்லன்னா.. இவ இவ்ளோ மார்க் வாங்கியிருக்கிறது சந்தேகம் தான்’ என்று என் அம்மாவிடம் சொல்லும் போது அம்மா என்னைப் பெருமையுடன் பார்த்தாள்.

ஜெயந்தியும் இதனை அடிமனதில் நன்றியுடன் சொன்னாள். ”நிச்சயமா நீ ஒரு நல்ல டீச்சர். கணக்கை அவ்வளவு ஈஸியா எனக்கு யாரும் சொல்லிக்கொடுத்ததில்லை” என்றாள்.

நிஜமாகவே வெட்கப்பட்டு, சற்று குனிந்த மேனிக்கு சிரித்துக் கொண்டிருந்தேன்.

”நிஜம்மா நீ ஒரு பெரிய படிப்ஸ் தான்பா” என்றாள். அவளின் இந்த வார்த்தைகளில் ஒரு வாஞ்சை இருந்தது. இந்த நேரத்தில் ஐ லவ் யூ என்று நான் சொன்னாலும் ஏற்றுக் கொண்டுவிடுவாள் என்று தோன்றியது. ஒரு கணம், ஒரே ஒரு கணம் அப்படிச் சொல்லிவிடலாமா என்று கூட நினைத்தேன்.

ஆனால் அப்போது தான் ரொம்ப பொறுப்பாக ”ஒரு சப்ஜெக்ட்ல ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறது பத்தாது… எல்லாத்துலயும் நீ எடுக்கணும்” என்றேன்.

அந்த செமஸ்டர் ரிஸல்ட்டுக்குப் பிறகு வஸந்தி அக்காவும் என்னை வேறு தினுசாகப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். பழைய நெருப்பும், வெறுப்பும் அவள் கண்களில் இல்லை. கிண்டலாக ‘வாங்க டியூஷன் மாஸ்டர்’ என்று அழைப்பாள்.

ஆனால் நாட்கள் அப்படியே இல்லை. அடுத்தடுத்து ஜெயந்திக்கு நிறைய தியரி பேப்பர்கள் தான் இருந்தன, அவையெல்லாம் என் கோச்சிங் தேவையில்லாமலே அவள் படித்துவிடுவதாக இருந்தது.

”நான் சொல்லித் தர்றேன்” என்று நானாக வலிந்து போய் நின்றாலும் ”இதெல்லாம் ஈஸி, நானே படிச்சுடுவேன்” என்றாள் ஜெயந்தி. நிஜமாகவே எங்களுக்குள் கால்குலஸ் தாண்டி ஏதும் இல்லையோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சமயம் அவள் கால்குலஸில் ஃபெயிலாகி இருந்தால் கூட தேவலாம் என்று நினைத்தேன்.

காலேஜ் விட்டு வந்த மாலை நேரங்களில் அவள் வெளியே திண்ணைக்கு உலாத்துவதை மோப்பம் பிடித்து வெளியே செல்வேன்.

‘கண்டுக்கவே மாட்றே?’ என்பேன். அவள் அப்படியே ப்ளேட்டைத் திருப்புவாள்.

‘நீங்களும் தான் ரொம்ப பிஸியா இருக்கீங்க’ என்றாள் ஒரு நாள்.

‘’நைட் வர்றியா..?’’ என் கேள்வி மொட்டையாக இருந்தது. அப்படிக் கேட்க வேண்டும் என்று தான் கேட்டேன். ஏதாவது கோபப்பட்டு என்னை அவள் பழைய உரிமையுடன் திட்டினால் கூட நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தில் தான் அப்படி சீண்டலாகக் கேட்டேன். அவள் புருவங்கள் சுருங்கின.

‘’எதுக்கு?’’

‘’ஏதாவது படிப்போம். நீ உன் சப்ஜெக்ட் படி. நான் என் சப்ஜெக்ட் படிக்கிறேன்’’ என்றேன். என் கண்கள் கெஞ்சுவதை அவள் பார்த்தாள். இதழ்க்கிடையில் ஒரு தந்திரப் புன்னகையை உதிர்த்தாள்.

‘’பார்க்கலாம்’’ என்றாள். நிச்சயம் வருவாள் என்று தோன்றியது. வந்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும் ஜெயந்தியும் அதே பழைய இடத்தில் அதே மாதிரி ப்ளாஸ்டிக் சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம். பரஸ்பரம் சிரித்துக்கொண்டு பத்து நிமிடம் வெறுமனே புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

”ஏன் என்னை அவாய்ட் பண்றே ஜெயந்தி?” என்றேன். என் கேள்வி ரொம்ப வெளிப்படையாகவும், உடனடியாகவும் இருந்ததில் ஜெயந்தி சற்று தடுமாறவே செய்தாள். இப்படி நான் கேட்டுவிடுவேன் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளிடத்தில் பதில் இல்லை. ஆனால் சமாளித்தாள்.

”யார் நானா? ஏன்.. உன்னை அவாய்ட் பண்ணனும்.. எப்போதும் போலத் தான் இருக்கேன். அப்ப நீ எனக்கு சொல்லிக் கொடுத்தே.. திரும்பவும் ஏதாவது டவுட் வந்தா உன் கிட்ட தான் வந்து நிற்பேன். நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதே.. மனசைப் போட்டு குழப்பிக்காதே!”

நான் சிரித்தேன்.

”ஏன் சிரிக்கிறே?”

”உன் பதில் எவ்ளோ பெருசா இருக்குப் பாரு.. ஜெயந்தி.. ‘இல்லையே’னு ஒரே வார்த்தையில முடிச்சிருக்கலாம் நீ!” – இப்படி நான் சொன்னதும் அவள் கீழுதட்டைக் கடித்துக் கொண்டு, அந்த நீண்ட பதிலில் அவள் என்னைத் தவிர்ப்பது உண்மை தான் என்றதொரு ஒப்புதல் இருப்பதை உணர்ந்தவள் போல் சிரித்தாள்.

”எதிர்பார்ப்புகளை வளர்த்துக்காதே செந்தில்” என்றாள். இதற்கு முன்பு என் பெயரை அவள் உச்சரித்திருக்கிறாளா என்று தீவிரமாக யோசித்தேன். ஒரு தடவை கூட அப்படியான சூழலுக்குள் அவள் சென்றதில்லை. ஒரு தடவை என் வீட்டுக் கதவைத் தட்டி என் அம்மாவிடம் ‘தீபா அண்ணன் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறாள். அப்போது நான் குளித்துக் கொண்டிருந்தேன்.

”ஏன் இப்படிச் சொல்றே.. நாங்க என்ன எதிர்பார்த்திட்டோம்?” என்றேன். என் குரல் கோபமாகத் தொனித்தது. ஒரு விதமான ஏமாற்றம் விளைவிக்கிற கோபம். அவள் புத்திமதி சொல்கிற நிலையில் தான் நான் இருக்கிறேனா என்ற இயலாமை தருவிக்கிற கோபம்.

உனக்கும் எனக்கும் நடுவில் கால்குலஸைத் தவிர ஒன்றுமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக அவள் நிறுவ நினைக்கிற வார்த்தைகள் அவை. அதனாலேயே எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

”சரி விடு.. நான் படிக்கணும்” என்றாள். அதன் பிறகு அங்கே இருக்கப் பிடிக்காமல் நான் வீட்டிற்குள் வந்து படுத்துவிட்டேன். சாத்தியிருந்த கதவிடுக்கின் வழி வந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிடத்தில் அது அணைக்கப்பட்டது. ஜெயந்தி உள்ளே செல்லும் அரவம் கேட்டது. அன்றிரவு முழுக்க நான் தூங்கவே இல்லை.

அடுத்த சில நாட்களாக ஜெயந்தி அதிகமாகக் கண்ணிலேயே படவில்லை. பட்டாலும் பெரிதாகப் பேசிக் கொள்ளாமல் இருவரும் ஒருவருக்கொருவர் பிகு செய்து கொண்டிருந்தோம். சில தினங்களில் அடுத்த செமஸ்டரும் முடிந்து விடுமுறை வந்திருந்தது. அந்த விடுமுறை நாட்களின் ஒரு ஞாயிறன்று ஜெயந்தி வீடு கூட்டத்தில் பரபரப்பாக இருந்ததை அம்மாவிடம் விசாரித்த போது தான் தெரிந்தது, வஸந்தி அக்காவையும், ஜெயந்தியையும் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.

அம்மாவிடம் தெளிவாகச் சொல்லும்படி கேட்டேன். என் தொண்டை அடைத்திருந்தது.

”வஸந்தி அக்காவையா.. ஜெயந்தியையா?” என்றேன்.

”ரெண்டு பேரையும்” – என்றாள் அம்மா, அடுக்களைக்குச் சென்று கொண்டிருந்தவளின் பின்னாடியே சென்றேன்.

வஸந்தி அக்காவை வேணி ஆண்ட்டியின் தம்பிக்கே கொடுக்கப் போகிறார்களாம். அவர்களின் சொந்தத்தில் இன்னொரு பையன் இருக்கிறானாம். அவன் சிங்கப்பூரில் இருக்கிறானாம். அவன் சமீபத்தில் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் ஜெயந்தியைப் பார்த்துவிட்டு விசாரித்தானாம். கட்டுகிற முறை வருகிறதாம். நல்ல வேலை, நல்ல வரன், வரதட்சணை என்று அதிகம் எதிர்பார்க்கவில்லையாம். அவன் ஜாதகப்படி இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம் செய்யணுமாம். அப்படித் தவறினால் நாற்பது வயசுக்கு மேல் தான் கல்யாணம் ஆகுமாம்.

அதனால் அதற்குள் ஜெயந்தியைக் கல்யாணம் முடித்து அவன் சிங்கப்பூர் சென்றுவிடுவானாம். ஜெயந்தி தொடர்ந்து இங்கேயே இருந்து படிப்பை முடித்துவிட்டு, பிற்பாடு அவளும் சிங்கப்பூர் போய்விடுவாளாம்.

இதையெல்லாம் அம்மா சொல்ல ஆரம்பித்து அந்த சிங்கப்பூர் பையன் குறுக்கே வந்தே போதே எனக்கு ஓவென்று கதறி அழவேண்டும் போல் இருந்தது.

”மூணு மாசத்துல வஸந்திக்குத் தான் கல்யாணம் வைக்கிறதா பேசிட்டிருந்தாங்க.. இப்ப ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வெச்சுடுவாங்க போல.. ஜெயந்திக்கு நல்ல அதிர்ஷ்டம்.. இல்லடா?” என்றாள் அம்மா. அவள் என்னவோ விகல்பமின்றித் தான் கேட்டாள். ஆனால் எனக்குத் தான், கோபமும், ஆற்றாமையும் பீறிட்டு எழுந்து கத்திக் கதறி அழவேண்டும் போலிருந்தது. என் கண்கள் கலங்குவதை தீபா மட்டும் பார்த்தாள். அவள் கண்களும் சற்றே கலக்கமடைந்திருந்தன.

எந்த நேரத்திலும் மடை திறந்து பாயும் வெள்ளம் போல, என் உள்ளம் பொங்கிக் கொண்டிருக்க, கிடுகிடுவென சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். இரவில் வீடு வந்த போது, ஜெயந்தியின் வீடு பூட்டியிருந்தது.

”எங்கடா போயிட்டு இவ்ளோ லேட்டா வர்ற.. மதியம் சாப்பிடக் கூட வரலை..” என்றாள் அம்மா.

”செகண்ட் ஷோ போனேன்மா” என்று விட்டு ”ஜெயந்தி வீடு பூட்டியிருக்கு” என்றேன்.

”எல்லாரும் சொந்த ஊர் மலையர்நத்தம் போயிருக்காங்க…நாளைக்கு வந்துடுவாங்க.. ஆனா இந்த மாசத்தோட வீட்டைக் காலி பண்ணப் போறாங்களாம்..வேற பெரிய வீடு பார்க்கப் போறாங்களாம். வெறும் வயித்துல படுக்காதே.. சோத்தத் தின்னுட்டுப் படு” என்றாள். எனக்குப் பசி சுத்தமாக இல்லை. அன்றிரவும் என் தூக்கம் போயிருந்தது.

மறுநாள் ஜெயந்தியின் அப்பா மட்டும் தான் வீட்டிற்கு வந்தார். அவர்கள் செமஸ்டர் விடுமுறை என்பதால் கிராமத்திலேயே இருப்பதாக அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குப் பிற்பாடு ஜெயந்தி வீடு பழைய மாதிரி திரும்பவே இல்லை. ஒரு நாள் மினி லாரியில் ஆட்களுடன் வந்து வீட்டைக் காலி செய்து விட்டுப் போனார் ஜெயந்தியின் அப்பா. அம்மா கூட வருத்தப்பட்டாள். காலி செய்வதைக் கூட சொல்லாமல் கொள்ளாமல் சட்டென்று செய்துவிட்டதாகப் புலம்பினாள்.

அடுத்த சில நாட்களில் சுத்தமாக என்னை நானே மீட்டிருந்தேன். ஜெயந்தி என்பவள் எனக்கு யார்? அவள் எனக்கு ஒன்றுமில்லை. அவள் யாரோ நான் யாரோ.. என்று என்னை நானே தேற்றி அவள் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருந்த போது தான்..

ஒரு பிரதோஷ நாளின் மாலை நேரம், ஜெயந்தி வீட்டிற்கு வந்தாள். அம்மாவும், தீபாவும் கோயிலுக்குப் போயிருந்தார்கள்.

”ஆண்ட்டி ஆண்ட்டி..” என்று ஒருக்களித்து சாத்தியிருந்த கதவைத் தட்டினாள். ரூமிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால்

ஜெயந்தி நின்றிருந்தாள். அவளை அந்த நேரத்தில் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் அவளை உள்ளே வா என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

”அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க” என்றேன். அவள் உள்ளே வந்தாள்.

”தெரிஞ்சு தான் வந்தேன் செந்தில். பிரதோஷத்துக்கு உங்க அம்மா கோயிலுக்குப் போவாங்கனு தெரியும்” என்றாள். அடுத்து நான் என்ன பேசுவது என்று யோசிப்பதற்குள் என்னை அப்படியே தோளோடு தோளாகக் கட்டி அணைத்தாள். அவளை அணைப்பதா விலக்குவதா என்று எனக்கு எந்த யோசனையும் இல்லை. எனினும்

கீழே தொங்கிக் கொண்டிருந்த என் கைகள் தன்னிச்சையாக அவள் இடுப்போடு சேர்த்துக் கட்டியணைத்தன.

என் தோள்களில் சாய்ந்து அவள் அழுகிறாள் என்பது மட்டும் அவள் குலுங்குவதிலிருந்து தெரிந்தது. அவளை நிமிர்த்தினேன். உடனே சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். என் முன்னால் அவள் இப்படி உடைந்து அழுவதில் கொஞ்சம் வெட்கப்படவும் செய்தாள் என்பது அவள் கண்களின் உருட்டலில் தெரிந்தது.

”என்னால எதுவும் சொல்ல முடியலை செந்தில்…” என்றாள். இடையில் அவளை மறந்துவிட்டதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டு தேறிக் கொண்டிருந்தேன். இப்படி வந்து மொத்தத்தையும் குலைப்பாள் என்று நினைக்கவில்லை. நான் வெடித்து அழ ஆரம்பித்தேன். வெட்கம் எதுவும் இன்றி, சிறு குழந்தை போல ஆழ ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் நான் அழுவதை வேடிக்கை பார்த்தாள். இந்த அழுகை எனக்குத் தேவை என்று நினைத்தாளோ என்னவோ? பேசாமல் நின்றாள். பிறகு என்னைத் தேற்றும் பொருட்டு திரும்பக் கட்டியணைத்தாள்.

அணைத்தவளை விலக்காமல், அசட்டுப் பையனைப் போல ”ஓடிப் போயிருவோமா ஜெயந்தி” என்றேன். அவளை முதல் நாள் பார்த்ததிலிருந்து அந்த நாள் வரையிலான அவள் மீதான என் உணர்ச்சிகள் அத்தனையும் அந்த வார்த்தைகளில் வழிவதாக உணர்ந்தேன். அடுத்த வினாடி வெளியிலிருந்து வஸந்தி அக்கா பரபரப்புடன் உள்ளே வந்தாள்.

”போதும் வாடி.. நேரம் ஆகுது” என்று என் மீதிருந்த ஜெயந்தியைக் கிட்டத்தட்ட பிய்த்துக் கொண்டு சென்றாள் வஸந்தி அக்கா.

கண்களைத் துடைத்துக் கொண்டு என்னை ஒரு வினாடி பார்த்துவிட்டு அக்காளுடன் சென்றவளை, அதற்குப் பிறகு நான் பார்க்கவே இல்லை.