கங்காணி ப. சுடலைமணி

1.

தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது. மறு கையில் ஒயர் கூடை ஒன்றை வைத்திருந்தான். ராஜவேலு தன் மாமாவின் இடது கையைப் பற்றியவாறு நடந்து கொண்டிருந்தான். ராஜவேலுவால் மாமாவின் நடை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

மாமா ஏன் இவ்வளவு அவசரப்படுற… கருங்காட்டுப் பாதையிலே தான நடக்கப்போறோம்… மெதுவா நடந்து போகலாம்…

என்னால வேகமா நடக்க முடியல… இன்னைக்கு சனிக்கிழம தானே? உனக்கு அங்க வேலையும் இருக்காது… மெதுவாகப் போகலாம்…. என்று தொடர்ச்சியாக ராஜவேலு பேசிக்கொண்டு நடையில் சற்று வேகத்தையும் கூட்டினான்.

மயிராண்டி… பேசாம வேகமா நடடே… இன்னைக்கு உன்ன காட்டு வழிய கூட்டிட்டு போகல…

நடக்கவும் வேண்டாம்… நாம ரெண்டு பேரும் பஸ்சுலதான் எஸ்டேட்டுக்குப் போகப் போறோம்… என்றான் மாரியப்பன்.

பஸ்ஸா….? உங்க எஸ்டேட்டுக்கு ஏது பஸ்சு… உங்க எஸ்டேட்டில் ரோடு கிடையாது… கரண்ட் கிடையாது… பஸ்சு கிடையாது… என்கிட்ட உன் கதைய விடாத மாமா… நான் இந்த வருஷம் ஆறாப்பு பாஸ் பண்ணிடுவேன்… நான் ஒன்னும் சின்ன நொள்ளயில்லை… என்றான் ராஜவேலு.

ஏலேய்… நீயெல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட…நேத்துதான் எஸ்டேட் ஆஸ்பத்திரியில இருந்து உன்ன எங்கையில தூக்கிட்டு வந்தேன்… உனக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ உங்கம்மா,  என் அப்பன் பேர வெச்சுட்டா… ராஜவேலுல, ராஜா எங்கப்பன் பேருடே… சின்ன ராசையா கங்காணியா உன்ன நினைக்கிறேன்… பொழச்சி போடே… என்று கூறியபடி மாரியப்பன் வேகமாக நடந்தான்.

தென்மலை பஸ் ஸ்டாப்பை இருவரும் அடைந்தனர். எதிரிலிருந்த வள்ளிநாயகம் சாயா கடைக்குள் நுழைந்தனர். மாரியப்பனைப் பார்த்தவுடன்  நாலு தாரா முட்டைகளைத் தட்டில் எடுத்து வந்து வள்ளிநாயகத்தின் மகள் சங்கீதா மேசையில் வைத்தாள். இருவரும் கடை பெஞ்சில் அமர்ந்தனர். தாரா முட்டையைக் கையிலெடுத்து ராஜவேலு அவசர அவசரமாகச் சாப்பிட்ட ஆரம்பித்தான். திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து கொல்லம் பாஸஞ்சரில் மூன்று மணி நேரம் பயணம் செய்திருந்தனர். பசியை வெகு நேரம் ராஜவேலு மறைத்து வைத்திருந்தான். கடைசியாக அம்பாசமுத்திரம் ஸ்டேசனில் ஒரே ஒரு  டீ மட்டுமே  குடித்திருந்தான்.

டீ கிளாஸ்களைக் கொண்டு வந்த சங்கீதா மாரியண்ணே… இந்தப் பொடியன் கிருஷ்ணம்மாக்கா மவன் தானே? என்று கேட்டாள். ஆமாம்… கடைக்குட்டி மகன்… சின்ன கங்காணி… உன் கங்காணி தாத்தா பேர தான் இவனுக்கு உங்கக்கா வச்சிருக்கா…பொல்லாத பயலா வருவான்….என்றான் மாரியப்பன்.

டீ குடித்துவிட்டு கல்லாவிலிருந்த வள்ளிநாயகத்திடம் காசைக் கொடுத்துவிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தனர்.

புது பஸ் இன்னைக்குதான்டே வருது… கண்டிப்பாக பஸ்ஸப் பாத்துரலாம்….
பதினொரு மணிக்கு பஸ் வரும்னு சொன்னாங்க…இங்க கூட்டமும் இல்ல… எல்லாவனும் எஸ்டேட்ல கூடியிருப்பானுங்க…என்றான் மாரியப்பன். பஸ் வர லேட்டாகுமா மாமா? ஏன்டே…. உனக்கு என்ன பிரச்சனை?… ஒன்னும் இல்ல… எப்பவும் இங்க வந்தா கருப்பட்டி அல்வா வாங்கி தருவ… இன்னைக்கு மறந்துட்டயா? என்றான் ராஜவேலு. மறந்துட்டேன்டே… நல்லவேள ஞாபகப்படுத்தின… வா… வளர்ந்த பேபி மாமா கடையில் அல்வா வாங்கலாம் என்று அருகிலிருந்த பேக்கரிக்கு அழைத்துச்சென்றான். பேக்கரியில் கூட்டம் இல்லை. பேபி கையில் பற்ற வைத்த பீடியுடன் கடை வாசலில் அமர்ந்திருந்தான். என்னடே மாரியப்பா… சின்ன கங்காணிய எங்கடே கண்ட… என்றான் பேபி.
திருநெல்வேலிக்கு ஒரு ஜோலியா போனேன்… ஒரு எட்டு பெரியக்கா வீட்டுக்குப் போனேன். இந்தப் பய எங்கூட தொத்திட்டான். எங்கைய்யா இவனப் பார்த்தா சந்தோஷப்படுவார். எங்கம்மையும் கொழுந்து பறிக்கப் போன எடத்துலப் பாம்பு கடிச்சு ஒரு மாசமா வீட்டுலதான் கிடக்கா.. .இங்கிட்டு கொஞ்ச நாளைக்கு இவன் நிக்கட்டும்…அங்கிட்டு அக்காவும் மூன்று பிள்ளையல வச்சிக்கிட்டு கஷ்டப்படுறா…அத்தானுக்கு வேற மில்ல வேற அடிக்கடி லாக் அவுட்டு பண்றானுங்க… பெரிய பய சைக்கிள் ஓட்டுறேனு சொல்லி இடது கால் பெருவிரல் நகத்த பேத்து வச்சிருக்கான்… சரி சரி ஒரு கிலோ கருப்பட்டி அல்வாவும், ஒரு கிலோ கப்பலண்டி மிச்சஸரும் கொடு…பஸ்சு வந்துடப் போகுது என்று பேபியை அவசரப்படுத்தினான் மாரியப்பன். பஸ்சு லேட்டாதான்டே வரும்…ஒவ்வொரு எஸ்டேட்டுலயும் பஸ்ஸை நிறுத்தி வைச்சிட்டு தான் அனுப்புறானுங்க… பொறுமையா நின்னு சாதனத்தை வாங்கிட்டுப் போ என்றான் பேபி.

ஏத்தம் பழம் பஜ்ஜி இருந்தா அம்மைக்குக் கட்டிக் கொடு பிரியமா சாப்பிடுவா…
பஜ்ஜிகளைக் கூவ இலையில் கட்டிக் கொடுத்தான் பேபி. ராஜவேலுவின் கையில் ஒரு சின்ன துண்டு பிளம் கேக்கையும் கொடுத்தான். பணத்தைக் கொடுத்து விட்டு பஸ் ஸ்டாப்பிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.

2.

பஸ் ஸ்டாப்பின் ஓரத்தில் நின்ற கொடிக் கம்பத்தின் அடியிலிருந்த சிமெண்ட் திண்டில் தங்கையாநாடார் அமர்ந்திருந்தார். கையில் சின்ன சாக்குப்பையைச் சுருட்டி வைத்திருந்தார். தாடியும் மீசையும் மானாவாரியாக வளர்ந்திருந்தன. மீசை முழுவதும் பீடிப் புகையால் செம்பட்டை பிடித்திருந்தது. எப்படியோ மாரியப்பனைக் கண்டுகொண்டார்.

ஏலேய்… மாரியப்பா எங்கடே போறே… ஓன் மருமவனையும் கூட்டிட்டு வந்துருக்க… என்றார். நீரு எங்கவே வந்தீரு… திடீர்னு எங்கனயிருந்து வந்தீரு… நான் இவ்வளவு நேரம் சாயா கடையிலயும், வளந்த பேபி கடையிலயும் தானே நின்னேன்.

ஒன்ன ஸ்டேஷன்லயே பார்த்துட்டேன். நீ வேகமாக நடந்து போனே…சரி எப்படியும் சாயாக்கடையில பார்த்துரலாம்னு கூப்டல… நான் உன் பின்னாடி தான் வந்தேன்… என்ன பண்ண உங்க ஊரு கள்ளுக்கட என்ன இழுத்துட்டு… புண்ணியவதி மேரிட்ட ஒரு போணி கள்ளுத்தண்ணி  வாங்கி ஊத்திட்டு வந்தேன்… அல்பட்டு ஐயா வீட்டுல பாக்கு வெளஞ்சிக் கெடக்குதுனு சொல்லி விட்டாவ… அதான் ஒரு எட்டு வந்தேன். நானும் நாகமலை தான் போவணும்… தங்கையா நாடார் தொடர்ச்சியாகக் கள்ளின் உபசாரத்தில் உளறலாகப் புரியாமல் பேசிக்கொண்டிருந்தார்.

டேம் ரோடு இறக்கத்திலிருந்து புது பஸ் மெதுவாக உறுமிக்கொண்டே மேல்நோக்கி ஏறி வந்து நின்றது. கூட்டம் அவ்வளவாக இல்லை. அனைவரும் பஸ்சில் ஏறிக்கொண்டனர். கண்டக்டர் கேறு… கேறு… என்று கத்திக் கொண்டிருந்தான். தங்கையா நாடார்தான் கடைசியாகப் பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் வாசல் கதவை வேகமாக அடைத்துவிட்டு, மணியை அடித்தான். மாமா எங்க ஊரு பஸ்சுல விசில்தான் அடிப்பாங்க… இங்க மணி அடிக்காங்க…மணி சத்தம் நல்லா இருக்கு மாமா… என்றான் ராஜவேலு. சீட்டில் அமர்வதில் அனைவரும் மும்மரமாக இருந்தனர்.
தங்கையா நாடார் கடைசி சீட்டில் அமர்ந்துவிட்டார்.
ஏலேய்… மாரியப்பா பஸ்சு கலரப் பாத்தியாடே? செவப்பு கலரு…இத்தன வருஷமா உங்க ஆட்சில பஸ்சு உட முடிஞ்சுதா? எங்க செவப்பு செவப்பு தாண்டே… என்று உளற ஆரம்பித்தார்.

மாரியப்பன் ராஜவேலுவை ஜன்னல் ஓர இருக்கையில் அமர வைத்தான். மாரியப்பன் சீட்டில் அமரப் போகும் வேளையில், கீழ் லயத்திலிருக்கும் சசிகலா அவசரமாக இருக்கையின் அருகே வந்தாள். சித்தப்பா நான்தான் சின்ன கங்காணி பக்கத்துல உட்காருவேன் என்றாள். மூன்று நபர்கள் அமரும் இருக்கை…நடுவில் சசிகலாவை அமர வைத்து விட்டு உள் பக்கமாக மாரியப்பன் அமர்ந்தான். சசிகலாவை விட்டு சற்று ஒதுங்கியபடி ராஜவேலு அமர்ந்து கொண்டான்.

 

3.

ரோடு சுமாராக இருந்ததால் பஸ் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. டிரைவர் பழக்கப்பட்ட ரோட்டில் வண்டி ஓட்டுவது போல ஓட்டிக்கொண்டிருந்தார். எங்கல போயிட்டு வார? சசிகலாவிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான் மாரியப்பன். பொலமாடத்தி ஆச்சி வீட்டுக்குப் போய்ட்டு வாறேன்ப்பா… நேத்தே அங்கிட்டுப் போனேன்… எப்படியோ இந்த வருஷம் பிளஸ் டு பாஸ் பண்ணிடுவேன். எனக்கு காலேஜ் போயி படிக்கணும்னு ஆச… முத்துராஜ்   மாமாட்ட சொல்லி குற்றாலம் பராசக்தி காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்க  காசு கொடுத்துவிட்டு வாரேன். நாளைக்கு மாமா ராஜபாளையத்துக்கு லாரி கொண்டு போரான். போயிட்டு வார வழில அப்ளிகேஷன் வாங்கிட்டு வாரேன்னு சொல்லியிருக்கான்…எங்கம்மா இருந்திருந்தா எனக்கு  எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வளர்த்திருப்பா… அட்டக் காட்டுல ஒட்டுக்கற எடுத்துப் படிச்சிருக்கேன்… மகராசி மண்ணெண்ணெய்ய ஊத்தி கொளுத்திகிட்டா… என்னப் பத்தி ஒரு நிமிஷங்கூட யோசிக்கல உன் மைனிகாரி… கூறிக்கொண்டே கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள் சசிகலா. ஏலேய்… சசி… நாங்கெல்லாம்  இருக்கோம்ல… அழாதல… என்று மாரியப்பன் ஆறுதல் கூறினான்.

கண்ணீரை மஞ்சள் நிறத் தாவணியில் துடைத்து விட்டு, ராஜவேலுவின் பக்கம் திரும்பினாள். சின்ன கங்காணி நல்ல வளர்ந்துட்டான்…சித்தப்பா…என்றாள். இவன் கண்ண பார்த்தயா?  ராசையா தாத்தா கண்ணு… எங்க அத்தைக்குப் போன  கண்ணு இவன்ட வந்துட்டுது… ஏலேய்… பூனக் கண்ணா… என்னக் கட்டிக்கிடுதயா? என்றாள். அத்தை மகன் என்ற உரிமையில் கிண்டல் செய்தாள். அவளது வலது கையை ராஜவேலுவின் கழுத்தில் இட்டு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். வெடுக்கென்று அவளது கையைத் தட்டிவிட்டான் ராஜவேலு.

இங்க பாரு மாமா… என் கன்னத்துல எச்சிய வைச்சிட்டா… என்றான். மாரியப்பன் மெல்லிய புன்னகையுடன் அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்தான்.

4.

பஸ் நெடும்பாறை எஸ்டேட்டை அடைந்தது. பஸ் நின்றதுதான் தாமதம்… ரப்பர்  பேக்டரின் முன்பு திரளாக நின்ற கூட்டம், பஸ்ஸை சுற்றி வளைத்துக் கொண்டது. கூச்சல் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு சிலர் பஸ்சில் ஏறி காலி சீட்டில் அமர்ந்தனர். சாரமும் ஜாக்கெட்டும் மட்டும் அணிந்த மலையாளப் பெண் ஒருத்தியின் ஆரவாரம் அனைவரையும் கவர்ந்தது. சிறிய கற்பூரத்தட்டையும் மணியையும் கையில் வைத்திருந்தாள். கற்பூரத்தை ஏற்ற சிறுவன் உதவினான். பஸ்சை சுற்றி வந்து கற்பூரத்தைக் காட்டி மணியை அடித்தாள். மலையாளப் பாடலொன்றைப் பாடி தன்னுடைய மகிழ்ச்சியைக் கொண்டாடினாள். கற்பூரத் தட்டையும் மணியையும் ரப்பர் பேக்டரி மதில் சுவரில் வைத்து விட்டு, ஆனந்தமாக ஆடினாள். அவளை உற்றுப் பார்த்த ராஜவேலு மூஞ்சியைச் சுழித்துக் கொண்டு உடனடியாக மாரியப்பன் பக்கம் திரும்பினான்.

மாமா… இந்தப் பொம்பள சேல கட்டாம அசிங்கமா கூட்டத்தில வந்து நிக்கிறா… நடு ரோட்டுல நின்னு டான்ஸ் ஆடுறா… அறிவே இல்லையா இவளுக்கு… என்றான். சசிகலாவிற்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு தானாகவே கிடைத்தது. தன்னருகில் திரும்பிய ராஜவேலு, அசந்திருந்த வேளையைப் பயன்படுத்திக் கொண்டு அவனது இடது கன்னத்தில் மீண்டும் ஒரு முத்தத்தை அழுத்தமாகவே பதித்தாள். ராஜவேலு, மாமா… இவள அந்தப் பக்கமா உட்கார வச்சிட்டு நீ என் பக்கத்துல வா… ஓயாம ஒரு ஆம்ள பையனுக்கு முத்தம் கொடுக்குறா… தேங்காதுருவி பல்ல வேற வச்சிருக்கா… அறிவு கெட்டவ… என்றான். கோபத்தில் ஜன்னலைப் பார்த்துத் திரும்பினான். பஸ்ஸிற்காக உடைக்கப்பட்ட தேங்காய் சிரட்டை சில்லொன்று ராஜவேலுவின் வலது நெற்றிப் பொட்டில் பட்டுத் தெரித்தது. சின்னதாகக் காயம்… லேசாக ரத்தம் கசிந்தது. சசிகலா பதறிவிட்டாள். சித்தப்பா சின்ன கங்காணி தலையில ரத்தம் வருது என்று உரக்கக் கத்தினாள். தன்னுடைய தாவணியின் தலைப்பை எடுத்து நெற்றியில் வைத்து அழுத்தினாள். பஸ் கிளம்பிவிட்டது. ராஜவேலு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏலேய்… வலிச்சுதுன்னா சொல்லுடே… சின்ன கங்காணி… உன் தாத்தா மாதிரியே இருக்காத… பேசித் தொலடே… என்றான் மாரியப்பன். வலிக்கல மாமா… இது எல்லாம் என்ன ரத்தம் போன மாசம் எங்க ரத்னமாலா டீச்சர் அடிச்சதுல எனக்குத் தலையில ரத்தம் அருவி மாதிரி கொட்டுச்சு… அதையே சமாளிச்சுட்டேன்… சட்டைதான் கறையாகிடுச்சு… என்றான் ராஜவேலு.

ராஜவேலுவின் காயத்திற்கும், ரத்தத்திற்கும் சசிகலா ஒரு பாடு அழுது தீர்த்தாள். அவள் அழுவதற்குக் காரணமாக வேண்டும்… பஸ் சன்னியாசி மலையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. பஸ் வருவதைக் கண்ட செக்போஸ்ட் நௌசாத் கேட்டைத் திறந்து விட்டான். பஸ் ஆற்றுப் பாலத்தை மெதுவாகக் கடந்து சென்று நாகமலை எஸ்டேட் தவர்ணை அருகில் நின்றது. மூவரும் இறங்கினர். பஸ் கிளம்பும் நேரத்தில் அரைத் தூக்கத்திலிருந்த தங்கையா நாடாரும் இறங்கினார்.

மாரியப்பா… ஒரு டீ வாங்கி குடுடே… என்றார் தங்கையா நாடார். கேன்டீன் சென்று டீ குடித்தனர். தங்கையா நாடார் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டு கேன்டீனின் பின் பக்கமாகச் சென்று விட்டார்.

சசிகலா மெதுவாக ஆரம்பித்தாள்…சித்தப்பா இவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகலாம்… நம்ம கருப்பசாமி கம்பௌண்டர் தாத்தா அங்க இருப்பார். டாக்டர் இல்லாட்டியும் பரவாயில்ல தாத்தாட்ட சொல்லி மருந்து வெச்சிட்டு போகலாம்… மூவரும் ஜெயக்குமார் ஐயா வீட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாக ஏற்றத்தில் நடந்தனர். ஜெயக்குமார் ஐயா வீட்டு வேலி ஓரத்தில் உதிர்ந்து கிடந்த சாம்பக்காய்களில் ஒன்றிரண்டை ராஜவேலு ஆவலுடன் எடுத்துக் கொண்டான். ஆஸ்பத்திரி சென்று காயத்திற்கு மருந்து வைத்து விட்டு மெதுவாக வீட்டை நோக்கி நடந்தனர். சசிகலா மென்மையாக மாரியப்பனிடம், சித்தப்பா… நான் தங்கப்ப ராவுத்தர் கட லயன் வழியா வீட்டுக்குப் போறேன். நாளைக்கு பன்னிரெண்டாம் நம்பர் காட்டுக்குப் புல்லறுக்க போகணும்… நீயும் வா… என்று கிணறு இருக்கும் இறக்கத்தில் நடையைக் கட்டினாள்.

5.

இப்போ ஆச்சியும் தாத்தாவும் வீட்லதான் இருப்பாங்களா… பெரிய மாமா  வீட்ல இருப்பானா?… இல்லனா ஊரு சுத்தப் போயிருப்பானா?…

பக்கத்து வீட்ல அந்தோணி இருப்பானா?…

ஐயா வீட்ல சக்கை பழுத்திருக்குமா?…  நம்ம வீட்டு சாம்பக்கா மரம் காச்சிருக்கா?…

மணி நாயி இப்ப முயல் பிடிச்சுட்டு வருமா?…

ரதி அப்பாவும் பொடி அப்பாவும் சண்ட போடுவாங்களா?…

அடுக்கடுக்கான கேள்விகளை, பதில்களை எதிர்பார்க்காதவனாய்க் கேட்டுக்கொண்டே ராஜவேலு நடந்து வந்தான். மாரியப்பன் எதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் மருமகனின் பேச்சை ரசித்துக்கொண்டு நடந்து சென்றான்.

கொழுந்து கண்டாக்கு வீட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று கருநாகம் ஒன்று வேகமாகப் பாதையைக் கடந்து பள்ளத்தில் நிறைந்திருந்த கொச்சி மிளகாய்ச் செடிகளுக்கிடையே பாய்ந்தது. இருவரும் சற்று மிரண்டு போய் நின்றனர். ராஜவேலு மாரியப்பனின் இடது கையை இறுக்கமாகப் பற்றியிருந்தான். பிறகு மெதுவாகக் கருப்பசாமி கோயிலுக்கு முன் வந்து சேர்ந்தனர். மேல் லயத்தின்  அடையாளமாகக் கருப்பசாமி கோயில் காட்சியளித்தது. மாரியப்பனின் தாத்தா கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலிலிருந்து  பிடிமண் எடுத்து வந்து உருவாக்கிய கோயில். கருப்பசாமி கையில் பெரிய அருவாளுடன் ஆலமரத்தடியில் நின்றார். கோயிலின் பின்புறம் முழுக்க ஆலமரத்தின் விழுதுகள் இறங்கி இருட்டாகக் காட்சியளித்தது. அமைதியாக இருந்தது. ஆரவாரம் கேட்டு மரத்தின் கிளைகளிலிருந்து சில மயில்கள் பறந்து அமைதியைக் கலைத்தன. எங்கிருந்தோ மந்தியின் சத்தமும் கேட்டது.

 

6.

வீடுகள் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தவுடன் ராஜவேலு, மாரியப்பனின் கையை உதறி விட்டு வீட்டை நோக்கி வேகமாக ஓடினான். சாமியாடி இசக்கியம்மா ஆச்சி திண்ணையில் அமர்ந்து, ரேஷன் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்தாள். ராஜவேலுவைப் பார்த்தவள். ஏய்… சின்ன கங்காணி… எங்க இவ்வளவு வேகமா ஓடுதய?… என்றாள். இதையெல்லாம் கேட்டு பதில் சொல்லும் மனநிலையில் ராஜவேலு இல்லை. எதையும் காதில் வாங்காமல் தாத்தாவின் வீட்டை நோக்கி ஓடினான். தாத்தாவின் வீடு லயன் வரிசையில் ஐந்தாவது வீடு… வீட்டை அடைந்து விட்டான். சுப்பம்மாள் வாசலை ஒட்டிப் படுத்திருந்தாள். ராசையா கங்காணி கையில் தினகரன் பத்திரிகையுடன் மடக்குச்  சேரில் அமர்ந்திருந்தார். ராஜவேலுவின் சத்தம் இருவரது கவனத்தையும் கலைத்துப்போட்டது. வீட்டில் நுழைந்தவனை இருவரும் ஒரே நேரத்தில் அணைக்க முயன்றனர். தாத்தா வெற்றி கண்டார். ராஜவேலுவை அனைத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தார். ஏல… உங்கம்மா, அப்பா, ஆச்சி, அண்ணன், அக்கா எல்லாரும் நல்லா இருக்காங்களாடே?… சுக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே மாரியப்பன் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் கையிலிருந்த ஒயர் கூடையை வேகமாகப் பிடிங்கிய ராஜவேலு, ஏத்தம் பழ பஜ்ஜி பார்சலையெடுத்து ஆச்சியிடம் நீட்டினான். தங்கம் நீ தின்னுமா… நீ தின்னு தங்கம்… என்றாள் சுப்பம்மாள்.

ராஜவேலுவின் நெற்றியிலிருந்த காயம் தற்செயலாக ராசையா கங்காணியின் கண்களில் பட்டது.

இது என்னல காயம்?… ஒன்னுமில்ல தாத்தா… பஸ்சுல வரும் போது நெடும்பாறையில வைச்சி தேங்காய் செரட்ட சில்லு அடிச்சிருச்சு என்றான் ராஜவேலு.

கங்காணியின் கோபம் மாரியப்பனிடம் திரும்பியது. ஏலேய்… கூறு கெட்டவன… அவன ஜன்னல் பக்கம் உக்கார வச்சிட்டு, நீ எவள பாத்துட்டு வந்த?… போன தடவ பெரியவன் லீவுக்கு வந்தப்ப கன்னத்துல கம்பி குத்துன காயத்தோட ஊருக்குப் போனான். இப்ப இவன வரும் போதே காயத்தோட கூட்டிட்டு வந்துருக்க… மருமவன்கிட்ட என்ன பதில் சொல்ல முடியும்… என் தங்கச்சிட்ட என்ன பேசிர முடியும்… என்று கங்காணி ஆதங்கப்பட்டார்.

ராஜவேலுவை வேகமாக இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் சுப்பம்மாள். மெதுவாக அவனைத் தடவிக் கொடுத்தாள். முழுக் கத்ரிக்காயும் தட்டப்பயரும் போட்டு  புளிக்கொழம்பு வைச்சி, பூஞ்சைக்கா பொரியல் பண்ணியிருக்கேன். அடுப்புல கங்கலு கெடக்குது… அப்பளம் வேணும்னா சுட்டு தாரேன்… ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்றாள். இருவரும் சாப்பிட்டு விட்டு தார்சாவில் கிடந்த ஒயர் கட்டிலில் படுத்துக்கொண்டனர். கட்டிலின் ஓரத்தில் கிடந்த சிகப்புநிற ரேடியோவை கையிலெடுத்து  நோண்ட ஆரம்பித்தான் மாரியப்பன். இந்த ரேடியோவ எப்ப வாங்குன மாமா… என்றான் ராஜவேலு. இத நான் எங்க வாங்கினேன். உங்க தாத்தா கிட்ட மேற்கு லயத்து துலுக்கன் ஒருத்தன் நூறு ரூபா கடன் வாங்கியிருக்கான்… கடனக் கட்டலனு அவன் வைச்சிருந்த இந்தக் கட்டை ரேடியோவ, உங்க தாத்தா தூக்கிட்டு வந்துட்டாரு… கட்டாயக்கூட இன்னும் மாத்தல…நல்லா பாடுது… அவனும் இன்னைக்கு வரைக்கும் ரூபாயோட வரல…. என்று பதில் கூறினான் மாரியப்பன். பேசிக் கொண்டே இருவரும் தூங்கிப் போயினர்.

7.

மாலை ஐந்து மணியளவில் முற்றத்தில் அந்தோணியின் குரல் கேட்டது. அந்தோணி மேல் தோட்டத்தில் காய்த்திருக்கும் மாங்காய் குறித்துப் பேசினான். கங்காணி ஐயா தேன்பொத்தையிலிருந்து கொண்டு வந்த கன்னு… நன்றாக வளர்ந்து மரமாகி இருக்கிறது… என்று பேசிக் கொண்டிருந்தான்… ஓசியில் புகையிலை வாங்கும் பொருட்டு தேனம்மாவும் வந்து சேர்ந்தாள். அந்தோணி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். சுப்பம்மாள் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். சுப்பம்மாள் வாயில் அடக்கி இருந்த வெற்றிலைச் சக்கையை முற்றத்தில் எட்டித்  துப்பி விட்டுப் பேச ஆரம்பித்தாள்.

தேன்பொத்தைனு சும்மா சொல்லிட்ட… உங்க கங்காணி ஐயா கேட்டா கோவிச்சுக்கப் போறாருடே… அவுகளுக்கு ரொம்ப நாள் சினேகிதரு… சண்முகம் அண்ணாச்சி… அவர் வீட்டுத் தோட்டத்திலிருந்துதான் மாங்கன்ன கொண்டுவந்து, மேல் தோட்டத்தில நட்டு வைச்சாரு… நல்ல நாட்டு ரகம்… காய்ப்புக்கு வர எட்டு வருஷம் ஆய்ட்டுது பாரு… என்று கூறினாள். தேனம்மாள் எழுந்து சென்று வெற்றிலைச்சாற்றைக் கோழிக் கூட்டின் பின்புறமாகத் துப்பிவிட்டு வந்தாள். அவளின் பங்குக்குப் பேச ஆரம்பித்தாள்.

ரெண்டு மாசத்துக்கு முன்ன தான் கொஞ்சமா கவ்வாத்துப் பண்ணி, எருக்குழியிலிருந்து சாணி ஒரம் அள்ளி வந்து வச்சாக… நான்தான் ஒரத்த அள்ளிக் கொடுத்தேன். நல்லா மண்ணையும் அணைச்சி வச்சி,  தூர சுத்தியும் கல்லை அடுக்கி வைச்சாக… கங்காணி ஒரம் வச்ச நேரம் காய் கொத்துக் கொத்தா புடிச்சிருக்கு… ஒரு நாளைக்கு மூனு நாலு தரம் மரத்தைப் பார்த்துட்டு வாரக… காயும் சும்மா சொல்லக்கூடாது… நல்லா உருண்டு திரண்டு கிடக்குது… காயத் தொட்டு தொட்டு பார்த்துட்டு வாராக… என்று புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் பேசுவதைக் கேட்பவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும் அவள் லேசான புகையிலைப் போதையில் பேசுகிறாள் என்று. இந்தப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டுதான் மாரியப்பன் எழுந்தான். அவனைத் தொடர்ந்து ராஜவேலுவும் எழுந்துவிட்டான்.

காப்பி கீப்பி போட்டயா?…பேச்சி பயங்கரமா இருக்கு… உங்க கங்காணி வச்ச மரத்தை இப்போ யாரு தூக்கிட்டுப் போகப் போறாங்க?… போயி காப்பிய எடுத்துட்டு வா… என்றான் மாரியப்பன்.

உங்க அப்பா இப்பதான் மாட்ட தேடிக்கிட்டுப் பெரட்டுகளம் பக்கமா போனாரு… மாட்ட பத்திட்டு வந்தாதான் காப்பி… இல்லன்னா தேயிலையும் கருப்பட்டியும் இருக்கு… கருப்பட்டி சாயா போட்டு குடி… எனக்கும் அந்தோணிக்கும் கொஞ்சம் கொடு என்றாள் சுப்பம்மாள்.

உங்கிட்ட காப்பி கேட்டேன் பாரு… என்ன சொல்லணும்… மாரியப்பன் கொடியில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு முகம் கழுவச் சென்றான்.

8.

முகம் கழுவிவிட்டுத் திரும்பி வந்தான் மாரியப்பன். ஏலேய்… அந்தோணி… மாங்காய் வெளஞ்சிருச்சினு நெனைக்கிறேன். போயிப் பறிக்கலாமா? என்றான். இதனைக் கேட்டதுதான் தாமதம் ராஜவேலு துள்ளி எழுந்து ஓடி வந்தான். மாமா… நானும் வாரேன்… என்னையும் மேல் தோட்டத்துக்குக் கூட்டிட்டுப்போ…என்றான்.

மூவரும் மாங்காய் பறிக்க ஆயத்தமாவதைக் கண்ட சுப்பம்மாள், ஏலேய்… சும்மா இருங்கடே… அவரு வந்து கிடட்டும்… ஒரு வார்த்த அவரக் கேட்டு போட்டு பறிக்கலாம். அது என்ன ஓடியா போயிடப் போகுது… செத்த நேரம் இருங்கடே என்றாள். அவளுக்குத் துணையாகத் தேனம்மாளும் சேர்ந்துகொண்டாள்.
மாரியப்பா… அவசரப்படாதிய… கங்காணி வந்து கிடட்டும்… அவுக கோவத்தப் பத்தி எனக்குத்தான் முழுசா தெரியும். இருபது வருஷமா பக்கத்து வீட்ல இருக்குறவ நான்… என்றாள் தேனம்மாள். எதையும் காதில் வாங்காமல், பழைய சீனி சாக்கையையும் வலை கட்டிய தொரட்டியையும் எடுத்துக் கொண்டு மூவரும் கிளம்பினார்கள்.

கற்கள் அடுக்கிய மதில் சுவரில் ஏறிக் கடந்து தோட்டத்தை அடைந்தனர். மரத்தைச் சுற்றிலும் சுத்தமாகக் களைகள் வெட்டப்பட்டிருந்தன. மர மூட்டில் ஈரம் அதிகமாக இருந்ததால் ஆயிரங்கால் பூச்சிகள் நெளிந்து கொண்டிருந்தன. மாரியப்பன் மரத்தில் ஏறுவதற்கு ஆயத்தமானான். சட்டையைக் கழற்றி அருகிலிருந்த கல்லில் வீசி எறிந்தான். சிங்கப்பூர் சாரத்தை மரம் ஏறுவதற்கு வாக்காகத் தார்ப் பாய்ச்சிக் கட்டிக்கொண்டான். மரத்தில் கவனமாக ஏறினான். மரம் சின்ன மரம்தான். கிளைகள் பெரிய அளவில் விரிந்திருக்வில்லை.

முசுறுகள் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்குப் பழக்கப்பட்ட முசுறு கடிதான். அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. காய்… காய்னு சொன்னாங்க… அர மூட்டகூட தேறாது போல… புலம்பிக்கொண்டே காய்களைப் பறிக்கத் தொடங்கினான். பாதிக்கு மேல் தொரட்டி வலையில் சிக்காமல் கீழே விழுந்தன. ஒரு சில காய்கள் கீழே விழுந்ததில் உடைந்து சிதறிப் போயின. தன்னால் முடிந்த அளவு காய்களைப் பறித்து விட்டு மாரியப்பன் கவனமாக மரத்தை விட்டுக் கீழே இறங்கினான். உடையாத காய்களை அந்தோணி உதவியுடன் மூட்டையில் கட்டினான். மூட்டையை அந்தோணியின் தலையில் ஏற்றி விட்டான். உடைந்து சிதறிக் கிடந்த காய்களில் ஒன்றை எடுத்துக் கடித்தான். அசாத்திய புளிப்புடே… பழம் நல்லா இனிக்கும்டே… என்று மருமகனிடம் கூறினான். இருவரும் தோட்டத்தை விட்டு வேகமாகக்  கீழே இறங்கினார்கள்.

குழாயில் நல்ல தண்ணி வேகமாக வர ஆரம்பித்தது. லயத்துப் பெண்கள் பிடிப்பதற்கு முன்பாக நேரடியாகக் குழாயில் மாரியப்பன் குளிக்க ஆரம்பித்தான். ராஜவேலு குளிப்பதற்கு அடம்பிடித்தான். நாளைக்கு ஆற்றுக்குக் கூட்டி போகிறேன்… இப்ப நாம ரெண்டு பேரும் கீழ் லயத்து, சாமி வீட்டுக்குப் போகலாம்… என்று சமாதானப்படுத்தினான்.

அந்தோணி மாங்காய் மூட்டையைத் திண்ணையில் இறக்கி வைத்திருந்தான். திண்ணையில் அமர்ந்து சுப்பம்மாள் கொடுத்த கருப்பட்டி சாயாவைக் குடித்துக் கொண்டிருந்தான். மாங்காய் மூட்டையை அந்தோணியிடம் சொல்லி வீட்டு முன் தோட்டத்தில் வெட்டி வைத்திருந்த ஊத்தம் போடும் குழியில் வைக்கச் சொன்னான் மாரியப்பன். மூட்டையை அவிழ்த்த அந்தோணி, காய்களில் சிலவற்றைக் கைகளில் எடுத்துப் பார்த்துவிட்டு மாரியப்பண்ணே… காய் சரியா வெலயல போல… நல்லா பழுக்குமானு தெரியல… கங்காணியம்மா சொன்னது மாதிரி பண்ணி இருக்கலாம்… கங்காணி ஐயா வந்து என்ன செய்யப்போறாருனு தெரியல… என்றான்.

மாரியப்பனுக்குச் சுரீரென்று கோபம் வந்தது. தாயோளி… சொன்னத மட்டும் செய்யுடே மயிறு… எல்லாம் எனக்கு தெரியும்… செறிக்கியுள்ள… எனக்கே அறிவுர சொல்ல வந்துட்டான்… என்று சீறி விழுந்தான்.

9.

மாங்காய் மூட்டையை ஊத்தம் போடும் குழியில் இறக்கி வைத்துவிட்டு அந்தோணி முற்றத்திற்கு வந்தான். முழுமையாக இருட்டிவிட்டது மாரியப்பன் அந்தோணியைக் கூப்பிட்டு ஏலேய்… தேயில மூட்டு முண்டு வெறகு கெடக்காடே… என்றான். கெடக்குண்ணே… தொழுவத்துக்கு மேற்க அஞ்சாறு கெடக்குது… எடுத்துட்டு வரேன்… என்று அந்தோணி ஓடினான். பார்த்து எடுடே… கருநாக மூதி ஒன்னு அங்கனதான் கெடக்குது… என்று மாரியப்பன் எச்சரித்தான்.

அந்தோணி முண்டுகளை முற்றத்தில் கொண்டுவந்து சேர்த்தான். கங்காணி மாட்டை முன்னே விட்டு பின்னே வந்தார். செத்த மாடு… கொறவந்தாளம் வரைக்கும் போயிட்டுது… தேடி அலஞ்சி கால் தேஞ்சி போச்சி… நல்லவேள மாடு பத்த போன கன்னியப்பன் இதையும் சேத்துப் பத்திட்டு வந்துட்டான்… மூதி என்னைக்குப் புலி வாய்க்குள்ள போகப் போகுதோ தெரியல… என்று அங்கலாய்த்தார்.

பால கறந்திட்டு மாட்ட தொழுவத்தில் அடைங்க… என்று வழக்கமாகப் பால் கறக்கும்  பித்தளைச் சொம்புடன் சுப்பம்மாள் முற்றத்திற்கு வந்தாள். சொம்பைப் பிடுங்கி தோட்டத்தில் வீசினார் கங்காணி. பால கொடங்கொடமா கரந்துரப் போகுது…. வத்து மாடு தானே சனியன்… பாலக் கன்னுக்குட்டி குடிச்சிட்டு போகட்டும்…

ஏலேய்… அந்தோணி வெறும் தேயில முண்ட மட்டும் அள்ளியாந்துப் போட்டிருக்க… உங்க ஆத்தாகிட்ட ஒட்டுகற இருந்தா கொஞ்சம் எடுத்துட்டு வாடே… என்றார் கங்காணி. அந்தோணியின் வீடு கங்காணியின் வீட்டை அடுத்து ஆறாவதாக இருந்த தொங்கல் வீடு. ஓடியே போய் கோழிக்கூட்டிற்கு மேலே இருந்த ஈத்தல் கூடையிலிருந்து ஒட்டுக் கறைகளைக் கைகள் நிறைய அள்ளி வந்தான். முண்டு பெருசா இருக்குடே… தீப்பிடிக்காது… குசினில கோடாலி வச்சிருக்கேன்… போயி எடுத்திட்டு வாடே… கீறிப்போட்டுக் கொளுத்துவோம்…என்றார் கங்காணி… அந்தோணி ஓடிச்சென்று கோடரியை எடுத்து வந்தான். கோடரியை வாங்கியவர் மூசு மூசுவென்று இளைக்க வேக வேகமாகக் கச்சிதமாக தேயிலை முண்டுகளைப் பிளந்து தள்ளினார். கங்காணி சொல்வதைக் கோடரி சரியாகச் செய்தது. இருந்தாலும் கங்காணியின் உடல்மொழி, அவருக்கு வயது கூடிவிட்டது என்பதைக் காட்டிக் கொடுத்தது.

முற்றத்தில் தேயிலை முண்டுகள் கொழுந்துவிட்டு எரிந்தன. லயத்திலிருந்து ஒவ்வொருவராக நெருப்பிற்கு அருகே வர ஆரம்பித்தனர். அனைவரும் ஆனந்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். கங்காணி ஒன்றுமே பேசவில்லை. திண்ணையில் கிடந்த புகையிலையை எடுத்து கைகளில் வைத்து நாறு கிழித்து கசக்கி வாயில் அடக்கிக் கொண்டார். பெரும்பாலும் கங்காணி கூட்டத்தில் அதிகமாகப் பேசமாட்டார். சிறு சிறு காட்டு வண்டுகள் நெருப்பில் விழுந்து வெடித்துச் சிதறின. பக்கத்து வீட்டு சுந்தரம் பொறியில் சிக்கிய எலியை நேரடியாக நெருப்பில் திறந்துவிட்டான். கங்காணி அவனைக் கடிந்து கொண்டார். கீழ் லயத்திலிருந்து இருட்டில் புலம்பியபடி கோவிந்தன் மேல் லயத்திற்கு வந்தான். ஒதுக்குப்புறமாக இருந்த நெல்லிக்காய் மூட்டு அடியில் அமர்ந்து கொண்டு வழக்கமாக அவன் பாடும் “ராசாத்தி உன்ன… காணாத நெஞ்சு…” பாடலை உருகிப் பாட ஆரம்பித்தான். இரவு சாப்பாடு அனைவருக்கும் முற்றத்திலேயே நடந்துகொண்டிருந்தது. முதல்முறையாகக் கழுதுருட்டி சந்தைக்குப் பஸ்ஸில் போவது குறித்து பேசிக் கொண்டார்கள். கங்காணி கோடரியைத் திண்ணையிலேயே வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். கூடவே பேரனையும் அழைத்துச் சென்றார்.

கங்காணி எழுந்து செல்வதை எதிர்பார்த்து இருந்தவர்கள் போல, அனைவரும் தாங்கள் அமர்ந்திருந்த வட்டத்தின் அளவை உடனடியாகக் குறைத்துக் கொண்டனர். அவர்களின் பேச்சு வெவ்வேறு தளங்களில் விரிவடைந்தது. அனைவரும் இந்த வாரத்திற்கான செலவுக் காசு ஒழுங்காக வந்து சேர்ந்தது குறித்து  மகிழ்ச்சியாகப் பேசினார்கள். சுந்தரம்தான் முதலில் பேச ஆரம்பித்தான். இன்னைக்கி எல்லார்டயும் காசு ரொம்ப செழிப்பா இருக்கு. நாளைக்கு எல்லோரும் சம்சுட்ட துண்டு மீனாக வெட்டி வாங்கலாம்டே. ரெண்டு வாரமா  மத்தி மீன தின்னு தின்னு நாக்கெல்லாம்  செத்துப்போச்சி… அனைவரும் கங்காணிக்குக் கேட்காமல் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, அந்தோணியும் மாரியப்பனும் பழைய மண்சட்டியில் கங்குகளை அள்ளிக்கொண்டு ஊத்தங்குழியை அடைந்தனர். மூடி வைத்திருந்த குழியின் ஓரத்தில் வாழைத் தடைகளை அகற்றி விட்டுப் பச்சையிலைகளைக் கங்குச் சட்டியில் போட்டுப் புகை போட்டனர். குழியில் மாங்காய் மூட்டையுடன் ஏழெட்டு வாழைத்தார்களும் இருந்தன. புகையைக் குழியில் அடக்கிவிட்டு, குழியின் வாயை வேகமாக வாழைத் தடைகளைக் கொண்டு அடைத்தனர். ஏண்ணே… செவ்வாக்கெழம பழுத்துரும்ல… வாழத்தாரக் குழில வச்சி ரெண்டு நாளாச்சி… தங்கப்ப ராவுத்தர் கடக்கி நேத்தே இரண்டு தார போடச் சொன்னாரு… அந்தோணி பேசிக்கொண்டே முள் வேலியைத் தாண்டி முற்றத்திற்கு வந்தான். மாரியப்பனும் முற்றத்தில் கால் வைத்தான். அந்தோணி உடனடியாகத் தோட்ட வாசலை ஈத்தல் அடைப்பைக் கொண்டு மூடினான். லயத்துப் பெண்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்.

அப்துல் வீட்டிலிருந்து மெல்லிய சண்டைச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சத்தம் அதிகரித்தது. மெகமுதாவின் பேச்சு சற்று மேலோங்கியது. நாளைக்குச் சந்தைக்குப் போயி நல்ல மாட்டிறைச்சியா வாங்கிட்டு வா… போன வாரம் மாதிரி தலைய மட்டும் கொத்தி வாங்கிட்டு வராத… என்று அப்துலிடம் சண்டை கட்டிக் கொண்டிருந்தாள். கங்காணி வீட்டுக்குள்ளிருந்து ஒரு சத்தம் போட்டார்… ஏலேய்… அப்த்துலு… ஒம் பொண்டாட்டிய தூங்கச் சொல்லுடே… கறி வாங்குத கதையை நாளைக்கு வச்சுக்கோங்க… மனுசனுங்க நிம்மதியாத் தூங்க வேண்டாமா?… என்றார். உடனே அப்துல் விட்டு சத்தம் அடங்கிப் போனது.

10.

காலையில் கங்காணியின் வீட்டு முற்றத்தில் நின்று சாமி கத்திக் கொண்டிருந்தான். ஏலேய்… மாரி… மாரி… இன்னுமாடே எந்திரிக்கல… சீக்கிரமா வாடே ஆத்துல ஒரு குளியலப் போட்டுட்டு வந்துருவோம்… என்றான். கங்காணிதான் முதலில் வெளியே வந்தார். என்னடே காலையிலேயே வெளியிலிருந்து காட்டுக்கத்தல் கத்திட்டு நிக்கிற? என்றார்.  சாமி ஒன்றுமே பதில் பேசவில்லை. சாமி, கங்காணியின் தம்பி பையன்தான். மாரி எந்திரிச்சிட்டான்டே… பின்னாடி நிக்கிறான்… பெரியவன் தான் தொர மாதிரி தூங்கிட்டிருக்கான். நைட்டு சினிமாவுக்குப் போயிட்டு லேட்டாதான் வந்திருக்கான்… என்று கூறியபடியே கங்காணி கையில் எரிசாம்பலுடன் தொழுவத்தை நோக்கி நடந்தார்.

கையில் கண்ணாடி டம்ளர் நிறைய சூடான டீயுடன் மாரியப்பன் வெளியே வந்தான். கூடவே கோழிக்குஞ்சு போல ராஜவேலு ஓடிவந்தான்.

ராஜவேலுவைப் பார்த்த சாமி, சின்ன கங்காணி எப்ப வந்தாக… என்றான். நேத்துதான் கூட்டியாந்தேன்…

உன்ன தான் பார்க்க வர முடியவில்லை…என்றான் மாரியப்பன்.

ராஜவேலுவை அழைத்துக் கொண்டு சாமியுடன் குளிப்பதற்காக ஆற்றை நோக்கி நடையைக் கட்டினான் மாரியப்பன். பள்ளிவாசலிலிருந்து கீழாக இறங்கும் ஒத்தையடிப் பாதையில் ரப்பர் மரச் சருகுகளிடையே கவனமாக நடந்து சென்றனர். ரப்பர் மரத்தில் இணைக்கப்பட்டிருந்த சிரட்டையில் ஒட்டி இருந்த பாலை உருவி எடுத்து இடது  கையில் வைத்தான் ராஜவேலு. மாமா… பொண நாத்தம் நாறுது இது… என்றான். உன்ன யாருல இத எடுக்க சொன்னது? கேட்டுக்கொண்ட சாமி ஒட்டுக்கறையைப் பிடிங்கி எறிந்தான்.

சாமி மெதுவாக மாரியப்பனிடம் பேச ஆரம்பித்தான். ஏலேய்… மாரி… பெரியண்ணே அந்த ஓட்ட சைக்கிள வச்சுக்கிட்டு அடிக்கடி பூந்தோட்டம் எஸ்டேட்டுக்குப் போக்கும் வரத்துமா இருக்கான்டே… எஸ்டேட்ல ஜீப் ஓட்டுத பயலுங்க எல்லாம் என்கிட்ட சொல்லி கிண்டல் செய்தானுங்கடே… அவன் கிட்ட சொன்னாலும் கேட்க மாட்டான்… பெரியப்பா அவன திருநெல்வேலிக்கு அனுப்பி வைச்சி லாரி ஓட்டவும் படிக்க வைச்சுட்டாரு… இவன் லைசென்சும் எடுத்துட்டான்… கிருஷ்ணம்மாக்கா வீட்டு அத்தான், இவனுக்குத் தாழையூத்து சிமெண்டு கம்பெனியில டிரைவர் வேலையும் ரெடி பண்ணி வைச்சிருக்காருன்னு கேள்விப்பட்டேன்… இவன் அங்க போயி தொலைய வேண்டியதுதான… அந்த நெடுவாச்சி கிட்ட என்னதான் கண்டானோ தெரியல… மாரியப்பன் பதில் எதுவும் பேசவில்லை… ராஜவேலுவை மாரியப்பன் உற்று நோக்கினான். மெதுவாக ஆற்றை அடைந்தனர்.

ஆற்றில் தண்ணீர் குறைவாகவே ஓடியது. மூவரும் சேர்ந்து கூழாங்கற்களைச் சேகரித்து சிறிய அணையைக் கட்டி விளையாடினார்கள். ராஜவேலு காற்றில் விழுந்து கிடந்த ரப்பர் காய்களைப் பொறுக்கி வந்து ஆற்று நீரில் தூக்கி எறிந்து விளையாடினான்.  ‘பேச்சு வாக்கில் சோப்பு எடுக்க மறந்துட்டேன்…’ என்றான் மாரியப்பன். ‘என் டவுசர் பாக்கெட்டில சோப்பு இருக்குடே…’ என்றான் சாமி. மூவரும் ஆனந்தமாகக் குளித்து விட்டு ஆற்றிலிருந்து கரையேறினர்.

 

11.

திங்கட்கிழமை அனைவரும் காட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். மேல் லயத்தில் சுப்பம்மாளும் ராஜவேலுவும் மட்டுமே வீட்டிலிருந்தனர். தோட்டத்தில் காய்த்திருந்த குமழங்காயையும் வேறு சில காய்களையும் பறித்து வந்து திண்ணையில் அமர்ந்து சுப்பம்மாள் வெட்டிக் கொண்டிருந்தாள். கத்தியை வைத்து அழகாகக் காய்களை வெட்டியவளிடம் எங்கம்மா அருவாமனைலதான் வெட்டுவா ஆச்சி… என்றான் ராஜவேலு.

உனக்கு எப்படி பாம்பு கடிச்சுது? விஷப்பாம்பா? பாம்பை அடிச்சிட்டீங்களா? இல்ல தப்பி ஓடிடுச்சா? கொழுந்து எடுக்க மறுபடியும் எப்ப காட்டுக்குப் போவ?
கேள்விகளால் சுப்பம்மாளைத் துளைத்துக் கொண்டிருந்தான் ராஜவேலு.

சசிகலா மெதுவாகப் பூனை போல் வந்து ராஜவேலுவின் கண்களைத் தன் கைகளால் பொத்தினாள். ஆச்சியிடம் ஜாடை காட்டினாள். ராஜவேலு அவளது விரல்களைத் தடவிப் பார்த்து தோல்வியடைந்தான். கைகளை எடுக்காமலேயே என்ன சின்ன கங்காணி என்னைய கண்டுபிடிக்க முடியலையா? என்றாள். குரலைக் கொண்டு அடையாளம் கண்டுகொண்டான் ராஜவேலு. இங்க பாரு கையை எடு முத்தம் எல்லாம் கொடுக்க நெனச்ச உன்ன கொன்னுடுவேன்… என்றான். சசியும் கைகளை எடுத்துக்கொண்டாள்.

என்ன பண்ண… சின்ன கங்காணி… உன்னைவிட நான் ஏழு வயசு பெரியவளா பொறந்துவிட்டேன்… நீ மட்டும் முந்தி பிறந்து இருந்தா எனக்கு அத்தானா ஆகியிருப்ப… என்று கேலி செய்தாள். சுப்பம்மாவிற்குப் பாம்பு கடித்ததிலிருந்து சின்ன சின்ன உதவிகள் செய்வதற்காக லீவில் இருந்த சசிகலா மேல் லயத்திற்கு வந்து சென்றாள். தன்னுடைய தனிமையை மறக்க ஆச்சியுடன் பேசி வந்தாள்.

மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது கங்காணியின் மூத்த மகன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். ஏலேய்… எங்கடே போயிட்டு வார…?

உங்கையா பயங்கர கோவத்துல இருக்காரு… உன் போக்குவரத்துப் பிடிக்கல…

சண்முகம் மவன பாத்தியா? பட்டாளத்துல சேந்துட்டான்… உன் வயசுதான் அவனுக்கும்…

பெரியவன் எதையும் கேட்காமல்,

ஏலேய்… சசி காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டயா? சீக்கிரம் அப்ளிகேஷன் போடு… பூந்தோட்ட எஸ்டேட் சொள்ளமுத்துத் தேவர் மவா குற்றாலம் பராசக்தி காலேஜ்ல ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்திருக்கா… அவளப் போயிப் பார்த்து உனக்குச் சீட்டு வாங்கிடலாம்… கவலப்படாத… என்றான்.

சசி பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். என்ன படிக்கப் போற யோசிச்சுட்டயா? இல்ல சித்தப்பா…

என்ன பாடம் கெடச்சாலும் சரிதான் கண்டிப்பா படிச்சே ஆகணும்… என் அப்பன் கூடவும் அந்த மலையாளத்துக்காரிக் கூடவும் என்னால இனிமே இருக்கமுடியாது. எப்படியாவது எங்க அப்பன் கிட்ட சொல்லி பராசக்தி காலேஜ் ஹாஸ்டல்ல சேர்த்துவிட சொல்லுங்க… இல்லைன்னா எங்கம்மா போன எடத்துக்குத் தான் நானும் போகணும்… என்னையும் பதினாறாம் நம்பர் காட்ல பொதச்சுட்டு வந்துடுங்க… தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்தது. ராஜவேலு அவளது அழுகையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மேல் இருந்த கோபம் குறைந்தது. மதினி  நீ அழாத.. நான் வேணும்னா வளர்ந்த பிறகு உன்னையே கட்டிக்கிறேன்… என்றான். அவனை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டாள். சின்ன கங்காணி நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவல… நான் உங்க கூடயே திருநெல்வேலிக்கு வந்துடுதேன்… என்றாள். பெரியவன் மெதுவாக வீட்டிற்குள் சென்றான். ரேடியோவை ஆன் செய்து பாட்டுக் கேட்க ஆரம்பித்தான். சசியும் கிளம்பி தோட்டத் தடம் வழியாகக் கீழ் லயத்திற்கு இறங்கினாள். ரேடியோவில் “செந்தாழம் பூவில்… வந்தாடும் தென்றல்…” பாடல் மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.

12.

மணி மாலை ஐந்து இருக்கும். கங்காணி மாட்டைப் பத்திக் கொண்டு வந்தார். திண்ணை ஓரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் அவரது கண்களில் பட்டது. காலையில் வருக்கை சக்கையைப் பிளந்த கோடரியும் சக்கைப் பால்கறையுடன் திண்ணையில் கிடந்தது.

மாட்டைத் தொழுவத்தில் விட்டு அடைத்தார். வேகமாக வீட்டு முற்றத்திற்கு வந்தார். சுப்பம்மா… ஏய்… சுப்பம்மா நீ போயி பால கரந்துடு… ராவுத்தரு உடனே வாழைத்தாரு வேணுங்கரான்… நான் ஊத்தங்குழியைப் பிரிக்கிறேன்… என்று கூறிவிட்டு ஈர்த்தல் தடுப்பை எடுத்தார். முள் வேலியைத் தாண்டி தோட்டத்திற்குச் சென்றார். கையில் சிக்கிய தேயிலைக் குச்சியைக் கொண்டு குழியின் வாயைக் கிளறி விட்டு வாழைத் தடைகளை அப்புறப்படுத்தினார். முதலில் மாங்காய் மூட்டை கண்களில் பட்டது. மூட்டையை இடது கையில் தூக்கித் தோட்டத்தில் எறிந்தார். வாழைத்தாரை எடுக்க போனவர் திரும்பி வந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தார். வெக்கையில் இரண்டே நாளில் மாங்காய்கள் வெம்பிப் போயிருந்தன. பார்வையிலேயே மாங்காய் விளையவில்லை என்பதைக் கண்டு பிடித்துவிட்டார். தோட்டத்தை விட்டு வெளியேறியவர் திண்ணையிலிருந்த கோடரியை எடுத்துக்கொண்டு வேகமாக மேல் தோட்டத்திற்குச் சென்றார். மாமரம் சின்ன மரம் தான் என்றாலும் கங்காணியிடம் நன்றாகவே வேலை வாங்கியது. மரத்தை ஒரே மூச்சில் வெட்டி சாய்த்துவிட்டு முற்றத்திற்கு வந்தார். கோபம் முற்றிலும் தணியவில்லை. சைக்கிளின் மீது அவரது பார்வை  சென்றது. சைக்கிளைத் தூக்கி முற்றத்தில் எறிந்தார். கோடரியால் சைக்கிளை உடைக்கத் தொடங்கினார். சத்தம் கேட்டு பதற்றமாக சுப்பம்மாள், பெரியவன், ராஜவேலு மூவரும் வெளியே வந்தனர். மூவராலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆறு ஏழு நிமிடத்தில் ஆவேசம் கொண்டவராகச் சைக்கிளை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டார். ஓரளவு கூட்டமும்  கூடிவிட்டது. கங்காணியிடம் யாருமே பேசத் துணியவில்லை. கங்காணியின் சாரம் இடுப்பிலிருந்து நழுவத் தொடங்கியது. வேகமாகக் கோடரியைத் தூக்கி எறிந்து விட்டு சாரத்தை இடது கையால் கூட்டிப் பிடித்தபடியே கோயிலை நோக்கி நடையைக் கட்டினார்.

வெட்டப்பட்ட சைக்கிளைப் பார்த்த பெரியவன் குலுங்கி குலுங்கி அழுதான். சுப்பம்மாள் மெதுவாக அவனை அழைத்துச் சென்று, வீட்டிற்குள் தள்ளி கதவைச் சாத்தினாள். சசிகலா, ராஜவேலுவை அழைத்துக்கொண்டு கீழ் லயத்திற்குச் சென்றாள். அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது. ராஜவேலுக்கு எதுவும் புரியவில்லை. கங்காணி நேராகக் கருப்பசாமி கோயிலுக்கு எதிர்புறம் இருந்த மேடைக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டார். அவரது கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. கருப்பசாமி கம்பௌவுண்டர் மெதுவாகக் கங்காணியின் காலடியிலிருந்த படிக்கட்டில் அமர்ந்தார்.

என்னணே ஆச்சு உனக்கு? ஏன் இம்புட்டு கோபம்? ஏன் இப்படி பண்ணிட்ட?
அந்தப் பய கஷ்டப்பட்டு உன் மருமகன் மூலமா திருநெல்வேலிலருந்து சைக்கிள பிரியப்பட்டு வாங்கி வந்தான்… பூந்தோட்டம் எஸ்டேட்டில் பெரியவனுக்கு எந்தப் பிரச்சனையும் வராது… எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…

கருப்பசாமி கம்பௌவுண்டர் பேசிக்கொண்டே இருந்தார்.

ஏலேய்… கருப்பசாமி…

இந்தப் பொன்னையா பய இன்னக்கு எங்கனக்குள்ள சாராயக் கேன பதிக்கியிருக்கான்…

உனக்குத்தான் எல்லாம் தெரியுமே… சொல்லுடே… என்றார் கங்காணி.

வேண்டாம்ணே… மதினிக்குத் தெரிஞ்சா என்ன கொன்னு போடுவா… வேண்டாம்…

இன்னைக்கு நெலம சரியில்ல…

இன்னொரு நாளு பாத்துக்கலாம்… என்றார் கம்பௌவுண்டர்.

நீ வந்தா வா… இல்லன்னா எடத்த மட்டுமாவது சொல்லுடே… நான் போயி குடிச்சிக்கிறேன்… என்றார் கங்காணி.

வாரம்ணே… வேண்டாம்னா நீ விடவாப்போற… ஆஸ்பத்திரிக்குப் பின்னாலக் காத்துல முறிஞ்ச ரப்பர் மரத்துக்குப் பக்கத்துல தான் ரெண்டு நாளா சாராயக் கேனைப் பதிக்கியிருக்கான். எந்திரிப்போகலாம்… என்றார்.

இருவரும் ராவுத்தர் கடைக்குச் சென்று ஊறுகாய்த் தடைகளை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் மறைந்தனர். பொன்னையா நாகமலை எஸ்டேட்டில் நீண்ட காலமாகச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறான். ரப்பர் காடுகளில் அடையாளம் வைத்து, குழிவெட்டி ஐந்து லிட்டர் கேனைப் பதுக்கிவிடுவான். மேலே வாழைத் தடையைப் போட்டு மூடி வைத்திருப்பான். காசைப் பொன்னையாவிடம் ஒப்படைத்து விட்டுத்தான் கேனில் கையை வைக்க வேண்டும். இது பொன்னையாவின் எழுதப்படாத சாராயச்சட்டம்.

கங்காணிக்குப் பொன்னையா தம்பி முறைதான். கங்காணிக்குப் பொன்னையாவின் சட்டத்தில் தளர்வுகள் உண்டு. கங்காணி குடித்துவிட்டு பொன்னையாவைப் பார்க்கும் போது காசு கொடுத்து விடுவார். கம்பௌவுண்டர் இன்று கங்காணியுடன் குடிக்கச் செல்வதால் செலவு கணக்கு கங்காணியைச் சேர்ந்தது. பழக்கப்பட்ட கால்கள் இருட்டிலும் சரியாக முறிந்த ரப்பர் மரத்தடிக்குச் சென்று சேர்ந்தன. கண்ணாடி டம்ளரையும் கேனுடன் ஒளித்து வைத்திருந்தான்.

தரமான பாண்டிச்சாராயம். சரியான விகிதத்தில் தண்ணீர் கலந்து வைத்திருந்தான். பொன்னையாவிற்குத் தொழில் சுத்தம் முக்கியம். புளியரை தெற்குமேட்டிலிருந்து ஆரியங்காவு வழியாகக் கடத்தி வந்த சாராயம். இருவரும் சற்று அதிகமாகவே குடித்தனர். கம்பௌவுண்டர் ஒரு கணேஷ் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார். கங்காணிக்குப் பீடி குடிக்கும் பழக்கம் கிடையாது. மெதுவாக இருவரும் மீண்டும் மேடை படிக்கட்டை அடைந்தனர்.

வாண்ணே இன்னைக்கு நம்ம வீட்டில சாப்பிடலாம்…

சாள மீனுக் கொழம்பு… அயிலயப் பொரிச்சிருக்கா… உன் கொழுந்தியா… வா… ஒன்னும் சொல்ல மாட்டா… உன் மேல அவளுக்கு எப்போதுமே ஒரு மரியாத உண்டு… என்றார் கம்பௌவுண்டர்.

ஏலேய்… நீ வீட்டுக்குப் போடே… நான் செத்த நேரம் இங்கன இருந்துட்டு வீட்டுக்குப் போயிடுவேன்… என்றார் கங்காணி. போதையில் எழுந்து கம்பௌண்டர் கீழ் லயத்திற்குச் செல்லும் படிக்கட்டில் இறங்கி நடக்கத் தொடங்கினார். பேச்சி வீட்டு நாய் தொடர்ச்சியாகக் குரைத்துக் கொண்டிருந்தது. சனியன்… இதுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குதே… என் கையில கிடைக்கட்டும் ஒரு ஊசியப் போட்டு அனுப்பி வைக்கிறேன்… போதையில் புலம்பிக்கொண்டே கம்பௌவுண்டர் நடந்து சென்றார்.

சசிகலா ராஜவேலுவை இரண்டு மூன்று இட்லிகளைச் சாப்பிட வைத்து, கூட்டி வந்து ஆச்சி வீட்டில் விட்டுச் சென்றாள். யாரும் யாருடன் பேசும் மனநிலையில் இல்லை.

சுப்பம்மாவிடம் மெதுவாக ராஜவேலு பேச்சு கொடுத்தான்.

ஆச்சி தாத்தா வந்துட்டாரா? இல்லயா? எங்கபோனாரு…

சனியன் எங்க போச்சிதோ?…  போன மாதிரி வருவாரு…

நீ போயி மாமன் கூட படுத்துக்கோ… என்றாள் சுப்பம்மாள்.

ஏலேய்… சின்ன கங்காணி உன் தாத்தா கோயில் மேடையில குடிச்சிபிட்டு படுத்துக் கிடக்காரு… போயி சாப்பிட கூட்டிட்டு வாடே… கொடலு வெந்து செத்துராம… இன்னமும் வீட்ல ஒடைக்க நெறைய சாதனம் இருக்குது… என்றான் தார்சாவில் படுத்திருந்த மாரியப்பன்.

இதைக் கேட்டதுதான் தாமதம் ராஜவேலு கோயில் மேடையை நோக்கி ஓடினான். கங்காணி இடது கையைத் தலைக்கு அண்டைக் கொடுத்து ஒருசாச்சி படுத்திருந்தார். கோயில் வெட்டவெளியில் இருந்ததால் வெளிச்சம் ஓரளவுக்கு  இருந்தது.

தாத்தா… தாத்தா… சாப்பிட வா தாத்தா… வீட்டுக்கு வா… வீட்டுக்குப் போகலாம்… நான் கூட்டிட்டுப் போறேன்… வா போகலாம்… வா தாத்தா… போலாம்… போலாம்… வா… ராஜவேலு கண்ணீர் மல்க கங்காணியின் காலடியில் அமர்ந்தான்.

திடீரென்று கங்காணி ஆவேசத்துடன் எழுந்து அமர்ந்தார். பேரனை  இழுத்து மடியில் போட்டார். சாராய வாடை தூக்கலாக இருந்தது. கண்கள் குளமாக இருந்தது. ரத்த சிகப்பு நிறத்தில் கண்கள் கண்ணீரில் கிடந்தன.

ஏற்கனவே ஒருத்தன சாகக் கொடுத்திட்டேன்… ஆசையா எங்க அப்பன் பேர அவனுக்கு வச்சேன்… அனாதப் பொணமா திருநெல்வேலி ஸ்ரீ்புரம் துவாரகா லாட்ஜ் முன்னாடி செத்துக்கிடந்தான். உங்க அப்பன்தான் அவனுக்குக் கொள்ளி வெச்சி தாம்ரபரணில… கரச்சிட்டு வந்தான்.

ஒருத்தன என் பொண்டாட்டியே தூக்கி அவ தங்கச்சி கிட்ட கொடுத்துட்டா… என்னைய கையாலாகாதவனு நெனச்சிட்டு என் தங்கமகன தத்து கொடுத்துட்டா…

பெரியவன் மேல எனக்கு உசுருடே… அவன் சைக்கிளை வச்சுக்கிட்டு தெனமும் பூந்தோட்டம் எஸ்டேட் பக்கம் சுத்திட்டு இருக்கான்… அந்த எஸ்டேட்டுக்கு வேலைக்கு வந்தவன் அம்புட்டு பேரும் உங்க திருநெல்வேலிக்கு வடக்க  இருக்கிற நாரக்கிணத்துக்காரனுங்க… கொல பாவத்துக்கு அஞ்சாத பயலுங்க… வடக்கத்தியான் பிள்ள முன்னால போறா… இவன் சைக்கிள உருட்டிட்டு பின்னாலப் போறத நான் என் கண்ணாலப் பார்த்தேன்…

பெரியவன் எங்கூட இருக்கணும்… அவன் இருக்கணும்… அவன எங்கயும் உடமாட்டேன்… அவன் கல்யாணம் காட்சிய… நான் பாக்கணும்… போதையில் புலம்பிக் கொண்டே இருந்தார் கங்காணி.

பாவம் ராஜவேலுவிற்கு எதையும் விளங்கிக் கொள்ள முடியாத வயது. அவனால் கங்காணியின் போதைப் புலம்பல்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

Previous articleஜெயந்தி -அசோக்ராஜ்  
Next articleநன்னீர் -ஹேமபிரபா
Avatar
ப.சுடலைமணி திருநெல்வேலியில் பிறந்தவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்று,  தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.  பணியின் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து கோவையில் வசித்து வருகிறார்.  இவரது கவிதைகள் புன்னகை,  வடக்கு வாசல், உயிர் எழுத்து, புதுப்புனல், யுகமாயினி, காவ்யா, கல்கி, சிற்றேடு, தொடரும், உன்னதம், தி இந்து - காமதேனு, கனவு, சிறுபத்திரிக்கை, முத்துக்கமலம், கீற்று, கவிக்கூடு, தேன்சிட்டு, திண்ணை, மகுடம், தென்றல் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. முகநூலிலும் கவிதைகள் எழுதி வருகிறார். "நட்சத்திரக் கிழவி" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கல்யாண்ஜி, கலாப்ரியா கவிதைகளில் ஈடுபாடு கொண்டவர்.  சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.   பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  பயணங்களில் காணும் காட்சிகளைக் கவிதைகளாகப் பிரதியெடுத்து வருகிறார். இவரது கவிதைகள் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, கோவை கலைமகள் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.