நன்னீர் -ஹேமபிரபா

முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி மாசக் கம்பம் நடுதல் சமீபத்தில்தான் முடிந்திருந்தது. குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் மஞ்சள், வேப்பிலைக் கீற்று எல்லாம் கலந்து, இடுப்பில் வைத்துக்கொண்டு கோயில் வரை நடந்தே போய் அங்கு நட்டிருக்கும் கம்பத்தில் ஊற்றி, மழை வர வேண்டிக்கொள்வார்கள். குடத்துத் தண்ணீரைத் தூக்க முடியாத சிறியவர்கள், ஒரு சொம்பில் நீரை எடுத்துக் கொண்டு ஊற்றுவார்கள்.

பல மாதங்களாக மழை இல்லாததால் இவ்வருடம் கம்பத்தில் ஊற்றுவதற்கு நீரைச் சேகரிப்பதே பெரும்பாடாக இருந்தது ஊர்க்காரர்களுக்கு. கோயிலுக்கு வெளியிலேயே ஒரு அடிபம்ப் இருந்தாலும், அதில் கோவிலுக்கும் பூசைக்கும் தேவைப்படும் தண்ணீரை பூசாரி மட்டும் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊர்மக்கள் பொதுவாக கோவிலின் முன்பு இருந்த குளத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்வார்கள். வெயில் காலத்தில் குளத்தில் நீர் இல்லாவிட்டால் அடிபம்ப் துணையிருக்கும். மொத்தம் பத்துப் பதினைந்து தெருக்கள் மட்டுமே இருக்கும் கிராமம் என்பதால் அந்த ஒரு பம்ப் போதுமானதாக இருந்தது அவர்களுக்கு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லோரும் அந்த அடிபம்ப்பை பயன்படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் குடிநீருக்கும், சமையலுக்கும் பக்கத்து ஊரிலிருக்கும் மோட்டாரையும், கிணற்றுத் தண்ணீரையும் நம்பியிருக்க வேண்டியிருந்தது.  அடிபம்ப்பில் தண்ணீர் வரும், ஆனால் ஒரு குடத்தை நிரப்பவே அரைமணி நேரம் ஆகும் என்பதால் கோவில் பூசைக்குத் தேவைப்படும் தண்ணீருக்கு மட்டும் அடிபம்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஓர் இரவில் தான் எடுத்து வந்திருந்த தண்ணீர் தீர்ந்து போக, இவ்வேளையில் பக்கத்து ஊருக்குப் போய்த் தண்ணீர்ப் பிடிக்க வேண்டுமா என்று அலுத்துக்கொண்ட பார்வதி அக்கா, தன் மகனை அனுப்பி ஒரு குடம் மட்டும் அடிபம்ப்பில் தண்ணீர் அடித்து, எடுத்து வர அனுப்பிவைத்தார். எப்போதும் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு ஏதாவது வம்பு விலைக்கு வருமா என்று பார்த்துக்கொண்டிருந்த துளசியம்மா, நடு இரவில் அடிபம்ப் சத்தம் கேட்கவும் தன் வீட்டிலிருந்து நாலு எட்டு எடுத்துவைத்து கோவிலைப் பார்த்தார். வீட்டுக்குள் ஓடிப்போய் ஒரு குடத்தை எடுத்துவந்து தனக்கும் இப்போதே தண்ணீர் வேண்டுமென்று பிரச்சினையை ஆரம்பித்தார். சின்னப் பையனை கொஞ்சம் தள்ளிவிட்டு, துளசியம்மா குடத்தில் தண்ணீர் நிரப்பினார். அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்த பார்வதி அக்கா சண்டைக்குப் போனார். இருவீட்டு ஆண்களும் இதில் ஒருவரை அடித்துக்கொண்டு பிரண்டார்கள். சத்தம் கேட்டு சண்டையை விலக்கிவிட வந்த தெருக்காரர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் இது பற்றிச் சொல்லிவிட்டார்கள். கோவிலுக்கு முன் இப்படி அடித்துக்கொள்வது சரியில்லை என்று அடிபம்ப்பைச் சுற்றி ஒரு கூண்டமைத்து, அதன் சாவியைப் பூசாரிக்குக் கொடுத்துவிட்டார்கள். கோயிலுக்கு என்றான பின் அந்த நீரில் முகம் கூட கழுவமாட்டார் பூசாரி.

ஊரில் யாரும் விவசாயம் எதுவும் செய்யவில்லை என்பதால் தண்ணீர்ப் பற்றாக்குறை அவர்கள் சோற்றைப் பற்றாக்குறை ஆக்கவில்லை. ஊரிலிருந்து ஏழெட்டு கிலோமீட்டரில் கடல் இருந்தது. ஊர்க்காரர்கள் யாரும் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை. ஆனால், மீனவர்களிடம் இருந்து மீனை வாங்கி, ஊர் ஊராகச் சென்று விற்பார்கள்.  ஒருநாள் முழுக்க மீனை வீச்சமில்லாமல் பார்த்துக்கொள்ள, பெரிய அண்டாவில் பாதிவரை நீரை நிரப்பி, அதில் மீனைப் போட்டுக்கொண்டு தெருத் தெருவாகக் கூவி விற்பார்கள். அரை உயிர்கொண்டு துடிக்கும் மீனை விற்று  வரும் இவர்கள் தன்னுயிர் காத்தார்கள். பெண்கள் கருவாடு போடுவார்கள், மீனை செதில் சீவித் தருவார்கள். சிலர் மீன் வறுவல் போட்டு, அதில் வருமானம் பார்ப்பார்கள்.

அன்றைக்குத்தான் கம்பம் நடுதலின் கடைசி நாள் என்பதால் கோயில் பூசாரி தங்கராசு பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். கம்பத்திற்குப் பூச்சரடு, பதினெட்டு குடம் தண்ணீர் என்று எல்லாவற்றையும் தயார்செய்து கொண்டிருந்தான். போன வருஷம் தங்கராசின் தந்தை, ராசேந்திரன் தவறிப்போனார். அதன்பின்புதான் தங்கராசு கோயில் பூசாரி ஆனான். அவனிருந்து தனியாகச் செய்யும் முதல் கம்பம் நடுதல் இது.

இந்தக் கம்பம் நடுதலில் ஊர்க்காரர்கள் எல்லோரும் கம்பத்துக்குத் தண்ணீர் ஊற்றியிருந்தார்கள். வீட்டில் ஏதாவது மரணச்செய்தி இருந்தாலும் பிரச்சனையில்லை. அவர்களும் நீர் ஊற்றலாம். எந்தப் பாகுபாடுமில்லை. ஒரு குடத்திலோ, ஒரு செம்பிலோ தண்ணீர் கொண்டுவந்து ஊற்றத் திராணி இருந்தால் போதும். கடைசி நாள் கம்பத்தை எடுத்து, குளத்திலோ, குளத்தில் தண்ணீர் இல்லாத பட்சம் கடலிலோ விடவேண்டும். அப்போது கண்டிப்பாக மழை பெய்யும், தூறலாவது போடும். அதனால், ஊர்க்காரர்கள் எல்லோரும் கூடியிருந்தார்கள். பெண்கள் முன்வரிசையில் குழந்தைகளோடு உட்கார்ந்திருந்தார்கள். ஆண்கள் பின்வரிசையிலும், அங்குமிங்கும் சுற்றிக்கொண்டும் இருந்தார்கள். ஒரு நிமிஷத்துக்கு மேல் ஓரிடத்தில் உட்கார முடியாத குழந்தைகள் தாயின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே வரும்போது, அவர்களைப் பிடித்து உள்ளே அனுப்பும் வேலையை ஆண்கள் வெளிவட்டத்தில் உட்கார்ந்து செய்துகொண்டிருந்தார்கள்.

அன்று மீனாட்சியும் கோயிலுக்கு வந்திருந்தாள். தங்கராசுக்கு மீனாட்சியைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று சிறுவயதிலிருந்து ஆசை. இருவரும் ஒரே வயதுக்காரர்கள், ஐந்தாவது வரை ஒரே பள்ளியில் படித்தவர்கள். அதன்பிறகு ஹைஸ்கூல் படிப்புக்கு ஆண், பெண் வெவ்வேறு பள்ளி. பக்கத்து ஊரிலிருந்தது. தனித்தனி பள்ளி என்றாலும், எதிரெதிரில்தான் இருந்தன. ஹைஸ்கூல் கோயிலுக்குப் பக்கத்தில்தான் இருந்தது. ராசேந்திரன் கோயிலுக்கு வெளியே பூக்கடை வைத்திருந்தார். மொத்த சந்தையிலிருந்து காலையில் பூக்களை வாங்க வேண்டும். தங்கராசு, தந்தையோடு போய் பூ வாங்கி வந்து கடையில் வைத்துவிடுவான். அதற்குள்ளாக தங்கராசுவின் தாய் அழகம்மா, காலை மதியம் என்று அவர்களுக்குத் தேவையான உணவை சமைத்து எடுத்து வந்திருப்பார். அதைச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்குப் போகத் தயாராய் இருப்பான் தங்கராசு. மீனாட்சி தன் தோழிகளுடன் பள்ளிக்குப் போவதற்கு, கோயிலைத் தாண்டித்தான் நடக்க வேண்டும். அவர்கள் வரும்வரை தங்கராசு காத்திருப்பான். மீனாட்சிக்கும் தங்கராசைப் பிடிக்கும். தினமும் பூக்கடையில் ஒரு ரோஜா வாங்கி, ரிப்பனுக்கு மேல் சொருகி வைத்துக்கொண்டு பள்ளிக்குப் போவாள். மீனாட்சிக்கு ரோஜாவை அதிகம் பிடிக்குமா, தங்கராசை அதிகம் பிடிக்குமா என்று நமக்குத் தெரியாது. தங்கராசு இவர்கள் பின்னாடியே நடந்து பள்ளிக்குப் போவான். பூக்கடையில் உட்கார்ந்திருக்கும் அழகம்மாவுக்கும் இவர்களின் விருப்பம் புரிந்திருந்தது. சாதியிலும், வருமானத்திலும் இரண்டு குடும்பங்களுக்கும் வித்தியாசமில்லை என்பதால், எல்லாம் சரியாகப் போகும் என்று அழகம்மா நினைத்திருந்தார். அழகம்மா பூக்கடையில் அத்தனை வேலையும் தெரிந்து வைத்திருந்தார். மாலை கட்டுவது, நார் பிரிப்பது என்று எல்லாம் தெரியும். திருமணத்துக்கும், சடங்குக்கும், இழவுக்கும் என்று எல்லா தினங்களுக்கும் ஏற்றதுபோல கட்டித் தருவார். ராசேந்திரன் கோவில் வேலைகளை முடித்துவிட்டு, சுற்றியிருக்கும் ஊர்களுக்குப் பூ விற்கப் போவார். அதற்குத் தேவையானதையும் அழகம்மா தயார் செய்து வைத்திருப்பார். வகுப்புகள் முடிந்து மாலையும் பூக்கடையில் வந்து உட்கார்ந்துவிடுவான் தங்கராசு. பத்தாவதுக்கு மேல் தங்கராசு படிக்கப் போகவில்லை. மீனாட்சி பன்னிரெண்டாவது பாஸ் செய்தாள்.

ஆனால், இதெல்லாம் வேண்டாம் என்று ராசேந்திரன் சொல்லிப் பார்த்தார். நமக்கு சரிப்பட்டு வராது என்று நினைத்தார். இருந்தாலும், மீனாட்சியை அவருக்குப் பிடித்திருந்தது. எல்லோரையும் மதிச்சு மரியாதையாகப் பேசுபவள் என்பதால் மீனாட்சியின் மேல் ஒரு வாஞ்சை இருந்தது. ஒருநாள் சைக்கிளில் பூக்கூடையை வைத்து விற்றுக்கொண்டிருந்தார் ராசேந்திரன். சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபோது, சட்டென கல் இடறி சைக்கிள் சாய்ந்துவிட்டது. சின்னப் பையன்கள் சிரிக்க, மீனாட்சிதான் இவரைத் தூக்கிவிட்டு, பூக்களையும் அள்ளி பூக்கூடையில் போட்டாள். என்னவோ அப்படி ஒரு பொண்ணு தன் பையனோட வாழ்க்கையில வந்தா, அவனையும் குடும்பத்தையும் தூக்கி நிறுத்தும்னு நம்பினார். ஆனாலும், பெத்தவங்க பாக்காம, தானா பாத்துக்குறதா என்கிற எண்ணமும் அவரை உறுத்திக் கொண்டிருந்தது. அதனால், வேண்டாம் வேண்டாம் என்று தங்கராசிடம் சொல்லிக் கொண்டிருப்பார். இந்த விஷயத்தில் தகப்பன் பேச்சை யார் கேட்டிருக்கிறார்கள்.

ஒரு வருசத்துக்கு முன்னாடி ஆடி மாசக் கம்பம் நடுதல் தொடங்கும்போது, பாலாபிஷேகம் செய்வதற்கு ஒரு குடம் பால் தேவைப்பட்டது. கோயிலுக்கு வெளியிலேயே அடிபம்ப்பில் வெள்ளிக்குடத்தைக் கழுவி வைத்திருந்தார். பால்காரர் கணேசன் வந்து குடத்தில் பால் நிரப்பிவிட்டுப் போயிருந்தார். ராசேந்திரன் கம்பத்திற்குத் தண்ணீர் ஊற்றத் தொடங்கினார். மூன்று குடம் தண்ணீர் ஊற்றி, அடுத்து பால் குடம் எடுத்தார். பாலை ஊற்றும்போது கவனித்தார். பால் திரிந்து போய், உருண்டு உருண்டு விழுந்தது. விக்கித்து நின்றார். சாமிக்குத்தம் ஆனதாக ஊர்க்காரர்கள் நினைத்து பீதியில் பிதற்றினார்கள். இதற்குப் பரிகாரமாக என்ன செய்யலாம் என்று சாமியிடம் வாக்குக் கேட்டார்கள். ஒரு குடத்துக்குப் பதிலாக, நூற்றியோரு குடமாகப் பால் ஊற்ற வேண்டும் என்று வாக்கு வந்தது. கம்பம் நட்டு மூன்றாம் நாள் இதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு.

கோயிலில் பூசைக்கென்று மொத்தம் மூன்று நான்கு குடங்கள்தான் இருந்தன. ஒரே நாளில் ஊர்க்காரர்களிடமிருந்து வீட்டுப் பூசைக்கு வைத்திருக்கும் குடம், சொம்பு என்று கணக்காக நூற்றியோரு குடத்தை எப்படியோ தேற்றி, அவற்றை நன்றாகத் துலக்கி வைத்திருந்தார். அத்தனையிலும் பாலை நிரப்ப, கணேசன் சொசைட்டியில் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். ஊரே கூடியிருந்தது. கம்பத்தில் மூன்று குடம் தண்ணீர் ஊற்றிய பிறகு பால் ஊற்றலாம் என்று ஒரு பால்குடத்தைக் கையில் எடுத்து  ஊற்றினார். பால் திரிந்திருந்தது, நூற்றியோரு குடத்திலும்.

பதினெட்டு நாள் நடைபெறும் கம்பம் நடுதல் அன்றோடு நின்றுபோனது. ஊரே எழவு விழுந்தது போல இருந்தது. கோயிலுக்கும், அடிபம்ப்புக்கும், பூக்கடைக்கும் பூட்டுப் போட்டுவிட்டு ராசேந்திரன் வீட்டிலேயே இருந்தார். நூற்றியோரு குடத்திலும் பால் திரிந்துபோனதும் ஊர்க்காரர்கள் கோபத்துடன் கலைந்து போனது அவர் மனதில் உழன்று கொண்டிருந்தது. இதுவரை அவரை சாமியாகவும், பயபக்தியுடனும் மட்டுமே ஊர்க்காரர்கள் கண்கள் பார்த்திருந்தன. முதன்முறையாகக் கோபத்தில் கொதித்த கண்களைப் பார்த்ததும் அவர் அவமானத்தில் நின்றிருந்தார். அதையெல்லாம்விட முதல் நாளன்று ஒரு குடத்துப் பால் திரிந்தபோது, அவருக்குத்தான் சாமி வந்து நூற்றியோரு குடம் பால் ஊற்றச் சொல்லி அருள் வாக்குத் தந்தார். அவர் மூலம் வந்த வாக்கே பொய்த்துப் போனது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இவரே பூக்கடை வைத்து, அதிலிருந்துதான் சாமிக்கும் பூ அலங்காரம் செய்வார். அப்படிச் செய்யும்போது, அதற்கான செலவுகளையும் இவரே குறித்து வைப்பார். அது பொய்க் கணக்கு, ஆகும் செலவில் பலமடங்கு அதிகமாக எழுதி, ஊர்க்காரர்களிடம் பணத்தைக் கறந்திருக்கிறார்; கோயிலுக்கு வருபவர்கள் உண்டியலில் போடும் காசையும் ராசேந்திரனே எடுத்துக்கொண்டார்; இப்படி ஊரில் ஆளாளுக்குத் தோன்றியதைப் பேச ஆரம்பித்தார்கள். பொய்யாக இருந்தாலும், ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லும்போது அது உண்மை என்பது போலத் தோன்றுமல்லவா? ஊர்ப்பெரியவர்களும் இதை நம்பினார்கள். இனி முத்து மாரியம்மன் கோயில் பொறுப்பை ராசேந்திரன் குடும்பத்திடமிருந்து ஊர் எடுத்துக்கொள்வதாக பெரியவர்கள் முடிவெடுத்தனர். தனக்குத் தெரிந்து தன் தாத்தன் காலத்திற்கு முன்பிருந்தே அந்த கோயிலுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவர்தான் பூசாரி. ஊர் முடிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், கடலில் செத்து மிதந்தார் ராசேந்திரன்.

ராசேந்திரன் குடும்பமே அந்தக் கோயிலையும், பூக்கடையையும் நம்பியிருந்தது. ராசேந்திரன் போனபிறகு அழகம்மாவும், தங்கராசும் சோற்றுக்கு வழியில்லாமல் நின்றார்கள். கோயிலுக்கும், பூசைக்கும் மாலை கட்டிப் பழகிப்போன அழகம்மாவுக்கு, ஊர்க்காரர்கள் செய்வதுபோல மீன் வியாபாரம் செய்ய மனம் வரவில்லை. ஊரில் யாரும் இவர்களிடம் எதுவும் வாங்கிக்கொள்ளவும் தயாராகயில்லை. ஊரைவிட்டே போய்விடலாம் என்றுதான் அழகம்மா நினைத்திருந்தார். ஆனால், அவர்களுக்கென்று ஊரில் ஒரு சொந்த வீடிருந்தது. ராசேந்திரனைக் கல்யாணம்கட்டி அந்த வீட்டில் குடித்தனம் நடத்திய அழகம்மாவுக்கு, வீட்டைவிட்டு வர மனசில்லை. அழகம்மா இட்லியும், பணியாரமும் செய்து கொடுக்க, ராசேந்திரன் பூவிற்ற சைக்கிளை எடுத்துக்கொண்டு தங்கராசு ஊர் ஊராகச் சென்று பண்டம் விற்பான். எப்படியோ அவர்கள் வாழ்க்கை ஓடியது. பூக்கடையில் ரோஜா வாங்கும்போது தினம் மீனாட்சியைப் பார்க்க முடிந்தது, இப்போது ஆறு மாசமாக எங்கேயாவது போக வர பார்த்தால் உண்டு. தங்கராசுக்கு இந்தக் கவலையும் சேர்ந்து கொண்டது.

கோயிலை ஊர் பொறுப்பெடுத்து இருந்தாலும், அம்மனை அலங்கரித்து, பூசை செய்ய என்று யாரும் முன்வரவில்லை. மூன்று வேலை சோற்றுக்காக கோயிலைக் கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருக்க மட்டும் முத்தண்ணன் தாத்தா ஒத்துக்கொண்டிருந்தார். இப்படியே ஏழெட்டு மாதம் போனது. ஊரிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ரொம்பவும் அதிகமானது. பக்கத்து ஊரிலும் அவர்களுக்கே தண்ணீர் பஞ்சம் வந்தபோது, இவர்களைத் துரத்தினார்கள். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு மோட்டார் போடும் கலாச்சாரம் இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு வரவும், அரசாங்கத்தின் மூலம் ஒரு டேங்க் கட்டச் சொல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். அதிகாரிகளிடம் மனு கொடுத்து, கொஞ்சம் லஞ்சம் கொடுத்து ஊரில் டேங்க் கட்டித் தர ஏற்பாடு பண்ணினார்கள்.

ஆழ்துளைக் கிணறு அமைத்து, மோட்டார் போட்டு தண்ணீர் எடுத்து, அதை டேங்க்கில் நிரப்பி தெருவுக்குத் தெரு குழாய் இணைப்பு தரலாம் என்று கார்ப்பரேஷன்காரர்கள் நினைத்தார்கள். ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்குத் தோதான இடம் தேடி, அதில் துளையிடும்போது சற்று நேரத்தில் நீர் பீச்சியடித்தது. தண்ணீர் உப்பாக இருந்தது. மழையில்லாமல் நிலத்தடி நீர் வற்றிப்போய், கடல் நீர் புகுந்திருந்தது. ஓரளவு உப்பைப் பொறுக்கும் குழாய்களை அமைத்துக் கொடுத்தார்கள். அதனால், தண்ணீரைக் காய்ச்சி, உப்பை வடிகட்டிப் பயன்படுத்துமாறு ஊர்க்காரர்களுக்கு அறிவுறுத்தினார்கள். ஊரில் எங்கேயாவது அடிபம்ப் இருக்கிறதா, இல்லை புதிதாக அமைக்க வேண்டுமா என்று கார்ப்பரேஷன்காரர்கள் கேட்டார்கள். கோயிலுக்கு வெளியே இருக்கிறது என்றும், ஆனால் அது இப்போது பயன்பாட்டில் இல்லை என்றும் ஊர்க்காரர்கள் சொன்னார்கள். அடிபம்ப் நீரைப் பார்த்துவிட்டு அதிலும் உப்புத் தண்ணீர்தான் வருகிறது என்று கார்ப்பரேஷன்காரர்கள் சொன்னார்கள். கோயில் பிரச்சனைக்கெல்லாம் அதைப் பூட்டிவைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். கோயிலுக்கான நீர் என்பதால் ராசேந்திரன் அதில் வாய் கொப்பளிக்கக்கூட இல்லை. அதனால், அவருக்கு உப்பு தெரியவில்லை. மேலும், ஏழெட்டு மாசத்துக்கு முன் நீர் இவ்வளவு உப்பாக இருக்கவில்லை. கோயிலுக்குத் தேவைப்படும் பாத்திரங்களை உப்பு நீரில் ராசேந்திரன் துலக்கியதால்தான் பால் திரிந்து போயிருக்கிறது என்று ஊர்க்காரர்கள் உணர்ந்தார்கள். உப்புக்காக உசிரை எடுத்துவிட்டோமே என்னும் குற்ற உணர்ச்சியில், அழகம்மாளைக் கூப்பிட்டு, இந்த பூசாரி பொறுப்பைத் தங்கராசுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். ஊர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. தன் புருசனைக் கொன்ற ஊரின் மீது அழகம்மா கோபத்திலிருந்தாலும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடும்பம் ஏற்கும் பொறுப்பு என்பதால் அழகம்மா சரியென்றார். இவ்வருடம் தங்கராசு கம்பம் நடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்.

கடைசி நாள் கம்பம் நடுதலின்போது பதினெட்டு குடம் நீர் ஊற்றி, பூசையையும் முடித்து எல்லோருக்கும் திருநீறு கொடுத்துக் கொண்டிருந்தான் தங்கராசு. லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மீனாட்சியும், அவள் அம்மாவும் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மட்டும் திருநீறோடு, முடிப்பில் கட்டிவைத்திருந்த மாவிளக்கையும் சேர்த்துக் கொடுத்தான் தங்கராசு. “இந்த வருசம், என் பொண்ணுக்குக் கல்யாணம் முடிஞ்சுடனும் சாமி. மனசுல நெனச்சுக்கிட்டு அவளுக்குத் துன்னூறு குடுங்க” என்றார் மீனாட்சியின் தாயார். நீண்ட நாட்கள் கழித்து, இவ்வளவு பக்கத்தில் மீனாட்சியைப் பார்க்கும் சந்தோஷத்திலிருந்த தங்கராசுக்கு கண் கலங்கிவிட்டது. என்ன பேசுவதென்று தெரியாமல் மீனாட்சி, தங்கராசின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியே நகர்ந்து அடுத்து இருந்தவர்களிடம் திருநீறு கொடுக்கப்போய்விட்டான் தங்கராசு. அன்றிரவு வீட்டுக்கு வந்தவன் எதுவும் பேசாமல், சோறும் சாப்பிடாமல் படுத்துவிட்டான். இரண்டு மூன்று நாட்களாக சரியாகப் பேசாமல், சாப்பிடாமல், இருக்கும் மகனை அனத்தி அனத்தி விசயத்தைத் தெரிந்துகொண்டார் அழகம்மா. புருஷனில்லாமல் பூ விற்றால் யாரும் வாங்கவுமில்லை. தங்கராசே கோயிலையும் கடையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சின்ன வயசென்றாலும் பரவாயில்லை கல்யாணம் செய்துவிடலாம் என்றும் அழகம்மா யோசனை பண்ணினார்.

எந்தப் பெண்ணைப் பார்க்கவாவது மாப்பிள்ளைகள் வந்து போயிருந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். இன்னும் மீனாட்சியை யாரும் வந்து பார்த்தது போலத் தெரியவில்லை. தன் புருஷனுக்கும் இந்த சம்மந்தத்தில் உள்ளுக்குள் ஈடுபாடிருந்ததால் எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தார் அழகம்மா. மீனாட்சியோட தாயார் ரொம்ப முசுடு. அதனால், அவரிடம் கேட்காமல் முதலில் வாய் வார்த்தையாக அவள் அப்பனிடம் பேசுவதே தகுந்தது என்றெண்ணினார் அழகம்மா. மீனாட்சியின் தந்தை கனகவேல் கார் ஓட்டுநராக இருந்தார். சொந்தமாக கார் இல்லை. யாராவது கார் வைத்திருப்பவர்கள் கேட்டால் செய்வார். அப்புறம் எங்கேயாவது பிரசவம், திருமணம் என்று விசேஷங்களுக்கு ஓட்டுவார். வீட்டிற்குப்போய் பெண் கேட்டால் சரியாக இருக்காது என்று நினைத்து, சவாரி இல்லாத நாட்களில் கனகவேல் எப்போதும் காத்து வாங்க உட்கார்ந்திருக்கும் புளிய மரத்தடி பக்கம் போய் அவர் இருக்கிறாரா என்று பார்த்தார் அழகம்மா. லேசான உறக்கத்திலிருந்தவர், யாரோ வருவதை உணர்ந்தது சட்டென எழுந்து, “என்ன அழகம்மா, இந்தப் பக்கம்? வியாபாரம் இல்ல?” என்றார்.

“இப்பத்தானண்ணே பூசை முடிஞ்சது, இன்னும் ரெண்டு நாளுல போய்க்கலாம்னு” என்றிழுத்தார் அழகம்மா.

“ஆமாமா, வெளியூருல இருந்து ஊருக்கு வந்த சனம்லாம் போயிடுச்சு. எனக்கும் சவாரி இல்ல” என்றார் கனகவேல்.

சம்பிரதாயமாக நான்கு வார்த்தைகள் பேசிவிட்டு, வந்த விசயத்தைச் சொன்னார் அழகம்மா.

“இங்க பாரும்மா. நீ சொல்றது புரியுது. தங்கராசும் நல்ல பிள்ளதான். அப்பன் இல்லாட்டியும் எல்லா வேலையும் கோயில்லையும் கடையையும் ஒழுங்கா பாத்துக்குது. சாதி பாக்குற பழக்கமும் எனக்கில்ல. ஆனா, தண்ணி இல்லாத ஊருல நாம கஷ்டப்பட்டது போதும், மீனாச்சியும் கஷ்டப்படணுமான்னு பாக்குறேன். ஒருவாட்டி சவாரிக்குப் போயிருந்தப்போ தண்ணீர்ப்பந்தல்னு ஒரு ஊரு பாத்தேன். வீட்டுல சமைச்ச பாத்திரத்தைக் கழுவக்கூட வீட்டுப் பின்னாடி ஓடுற ஆத்துக்குப் போவாங்க அந்த ஊர்க்காரங்க. அவ்வளவு செழிப்பான எடம். அதுமாதிரி எங்க தண்ணி கஷ்டமில்லையோ அங்கதான் மீனாச்சியைக் கொடுப்பேன்” என்று ஒரே பேச்சாகச் சொல்லிவிட்டார். மேலே பேசவே முடியாத தொனியில் அவர் சொல்லவும் அழகம்மா அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. தன் பெண்ணை தங்கராசு ஆசைப்படுவது தெரிந்ததும், இனி கல்யாணத்திற்குத் தாமதம் செய்வது நல்லதில்லை என்று, அவர் விரும்பிய மாதிரியே எப்படியோ மாப்பிள்ளையைத் தேடிப்பிடித்து இரண்டே மாதங்களில் மீனாட்சியைத் திருமணமும் செய்துவைத்தார். மாப்பிள்ளையும் மீனாட்சியும் மறுவீடு முடிந்து ஊருக்குப் போகும்போது, ஒரு பூசாரியாக இருவருக்கும் திருநீறு கொடுத்து, அவர்கள் காருக்குப் பூசை போட்டு, எலுமிச்சை ஏற்றி அனுப்பி வைத்தான் தங்கராசு.

மீனாட்சி உனக்கில்லை என்று அழகம்மா சொல்லியதிலிருந்து, உண்மையை ஏற்கத் தன் மனசைப்  பழக்கியிருந்தான் தங்கராசு. மீனாட்சிக்காக தண்ணீர் பாயும் ஊருக்குப் போய்விடலாம் என்றெல்லாம் நினைத்தான். ஆனால், சொந்த ஊர், தொழில், வியாபாரம் எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போவது எப்படி? அழகம்மா விரும்புவாரா? அங்கே போய் என்ன தொழில் செய்வது? நடைமுறையைப் புரிந்து கொண்டான் தங்கராசு. இருந்தாலும், மீனாட்சியை வழியனுப்பிய நாள் அவனுக்கு உறுத்தலாகவே இருந்தது. வீட்டுக்குப் போகாமல் கோயிலிலேயே இருந்துவிட்டான் தங்கராசு. அன்றைக்கு தங்கராசை அவன் போக்கில் விட்டுவிட்டார் அழகம்மா.

அன்றிரவு நல்ல மழை பெய்தது. கோயிலுக்கு வெளியே திண்ணையில் படுத்திருந்தவன் நடுக்கமெடுக்க உள்ளே போய்விட்டான். இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு மழையை ஊர் பார்த்ததில்லை. ஒரு மணி நேரமிருக்கும், முழங்கும் சத்தத்துடன் பெருவெளிச்சத்துடன் இடி விழுந்தது போலக் கேட்டது தங்கராசுக்கு. நிலமே அதிர்ந்தது. என்ன ஏதென்று வெளியே வந்து பார்த்தவன், கோயில் முன்னிருந்த குளத்தின் நடுவே பிரகாசமாக பாறை ஒன்று தகித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அதன் வெளிச்சத்தில் பார்வையே போய்விடும் போல இருந்தது. மழையின் வீச்சில் கங்கு அணையத் தொடங்கியது. அதற்குள் சத்தம் கேட்டு ஓரிருவராக வெளியே வந்தனர். விடியத் தொடங்கி, மழையும் தூறலாக மாறியிருந்தது. குளத்துக்கு நடுவே ஒரு ஆள் உசரம், நான்கு கை அகலத்துக்கு பள்ளம் உண்டாக்கி, அதில் உட்கார்ந்திருந்தது அந்தப் பாறை. நெருப்பு அணைந்து, பாசி பச்சை நிறத்திலிருந்தது. வறண்டு போயிருந்த குளத்தில் மழை நீர் குட்டை போல ஆங்காங்கே தேங்கியிருந்தது. பாறையைச் சுற்றியிருந்த பள்ளத்திலும் நீர் இருந்தது. எல்லாவற்றுக்கும் சகுனம் பார்ப்பவர்கள், இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் மழை கொண்டு வந்த கல் அல்லவா, அதனால் நல்ல சகுனத்தில் சேர்த்தார்கள். அந்தப் பாறைக்கும் பூசை போட்டுடு என்று தங்கராசிடம் சொல்லிவிட்டுப் போனார் ஊர்ப் பெரியவர்.

தங்கராசுக்கு என்ன பிரச்சனை! பாறைக்கும் தினமொரு மாலை போட்டால், சற்றுக் கூடுதல் வருமானம்தானே அவனுக்கு. இப்படியே ஒரு வாரம் போனது. போகப் போக அந்தப் பாறைக்கு மினுமினுப்பு கூடிக்கொண்டே போவதாக நினைத்தான் தங்கராசு. தொட்டுப் பார்க்கும்போது, வழுவழுப்பாக இருந்தது. ஒருநாள் கோயிலில் பூசையெல்லாம் முடித்துவிட்டு, சரி, கோயில் சுற்றைக் கழுவலாம் என்று அடிபம்ப்பில் தண்ணீர் எடுக்கப் போனான். அடிபம்ப்பிலிருந்து வழிந்தோடிய நீரை நாய் ஒன்று நக்கிக் கொண்டிருந்தது. உப்பு நீரை ஏன் நாய் குடிக்கிறது என்று யோசித்துக்கொண்டே அடிபம்ப்பில் அடித்து, கையில் அள்ளிப் பருகிப் பார்த்தான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் எப்படியிருக்குமோ அதேமாதிரி நீர் உப்பில்லாமல், குடிநீர் போல இருந்தது. தங்கராசுக்கு ஆச்சரியம். அக்கம்பக்கமிருந்தவர்களைக் கூப்பிட்டுத் தண்ணீர் கொடுத்தான். யாருக்கும் உப்பு தெரியவில்லை. தினமும் பாறையைப் பக்கத்திலிருந்து பார்க்கும் தங்கராசுக்கு, பாறையில் மினுமினுப்பு கூடுவது உப்பு படிவதால்தானோ என்று தோன்றியது. வேகமாகக் குளத்துக்கு ஓடிப்போய், பாறையில் ஆங்காங்கே வெள்ளையாகப் படிந்து கிடந்ததைச் சற்று சுரண்டி வாயில் வைத்துப் பார்த்தான். அவ்வளவும் உப்பு!

உப்பில் மினுக்கும் பச்சைப் பாறைக்கு, உப்பு உறிஞ்சி அம்மன் என்று பெயர் வைத்து வழிபட்டார்கள். ஊர் கஷ்டம் போக்க முத்து மாரியம்மன் தன் தங்கையைக் கூட்டிவந்தாள் என்று ஊர்க்காரர்கள் பக்திப் பரவசமானார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த தங்கராசு, தங்கச்சிய கூட்டி வர அம்மன், ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே கூட்டி வந்திருக்கக்கூடாதா, மீனாச்சிய கட்டியிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டான்.

நல்ல தண்ணீர் கிடைப்பதால் பக்கத்து ஊரிலிருந்து இங்கே வந்து தண்ணீர் எடுக்க ஆரம்பித்தனர் மக்கள். அதோடு அல்லாமல், உப்பு உறிஞ்சி அம்மன் ஒரு திருத்தலமாக மாறிப்போனது. உப்பு உறிஞ்சி அம்மனை வழிபட எங்கிருந்தெல்லாமோ மக்கள் வந்துகொண்டிருந்தனர். தங்கராசுக்கு தட்டில் காசு மழை, பூக்கடையில் பண மழை. கோயிலுக்கு உதவியாட்கள் வைத்துக்கொண்டான். ஊரில் சிலர் கோயிலருகில் தள்ளுவண்டிக்கடை வைத்தனர். பூக்கடைகள் பெருகின. அம்மன் புகைப்படம், பக்திப் பொருள் விற்பனைக் கடைகள் உருவாகின. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு, வீடுகளில் ஒருபகுதியைத் தங்குமிடமாக்கி வருமானம் பார்த்தனர். ஒரே கல்லில், ஆண்டுக்கணக்கில் குடிகொண்டிருந்த தண்ணீர்ப் பிரச்சனை தீர்ந்தது மட்டுமல்லாமல், புது தொழிலும் உருவானது, ஊர்க்காரர்களுக்கு மகிழ்ச்சி தராமலா இருக்கும்!

ஊரில் வெகுசிலர் மட்டுமே இன்னும் பழையபடி மீன்சார் வியாபாரம் செய்து வந்தனர். மேலும், சமீப நாட்களாகவே மீன்கள் கிடைப்பதில்லை என்று மீன்பிடித் தொழிலுக்குப் போன மீனவர்கள் வருந்திக்கொண்டிருந்தனர். இவர்கள் மீன்பிடிக்குப் போகும் முன்பே காரணமே இல்லாமல் சிலவகை மீன்கள் செத்து மிதப்பதாகவும் சொன்னார்கள் அவர்கள்.

ஊருக்குள் விழுந்த உப்பு உறிஞ்சி அம்மன் நன்னீர் தந்து நன்மை செய்தாள்.

அதே மழைநாளில் தீவுகளில் விழுந்த உப்பு உறிஞ்சி அம்மன்கள் உப்புக்கடலை நன்னீராக்கிக் கொண்டிருப்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியாது. நன்னீர்க் கடல்!

Previous articleகங்காணி ப. சுடலைமணி
Next articleபதிலீடு -காளீஸ்வரன்
இ. ஹேமபிரபா
ஹேமபிரபா தற்போது இஸ்ரேல் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”, ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.