அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா

ந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும் எச்சத்திலிருந்து தொடரும் இனவிருத்தி அவ்வினத்தின் நீட்சியை உறுதி செய்கிறது. ஆனால் இதே பூமியில் ஒரு காலத்தில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான அரிய உயிர்கள் இன்று வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்து போய்விட்டன. அவை பற்றிய கற்பனையோடு கலந்த கதைகளையும் சம்பவங்களையும் கார்ட்டூன் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம். பொதுவாக உயிரினத்தின் அழிவு என்ற உடனேயே, சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் அழிவைச் சந்தித்த டைனோசர்களின் ஞாபகம் தான் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். ஆனால் அதைத் தாண்டியும் நாம் அறியாத பல மில்லியன் உயிரினங்கள் அழிந்து போயுள்ளன. தொடர்ந்தும் பல லட்சம் உயிரினங்கள் தங்கள் கடைசி நிமிடங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டு இருக்கின்றன. புவியியல் வரலாற்றில் அறியப்பட்ட 5 பாரிய அழிவலைகளுக்கு அடுத்து 6-வது பாரிய அழிவு நெருக்கடி* தற்போது நிகழ்ந்துகொண்டு உள்ளது.

அழிவு என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. பூமியில் இதுவரை வாழ்ந்த மொத்த  உயிரினங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இன்று உயிருடன் இல்லை. இதற்குக் காரணமாக இயற்கையை மட்டும் கை காட்டிவிட முடியாது. வளர்ந்துகொண்டே போகும் நாகரீகமும், தொழில்நுட்பமும் கூட பல உயிரினங்களை அபாய கட்டத்திற்குத் தள்ளி விடுகின்றன. உலகில் உயிர்கள் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நூற்றாண்டும், ஒவ்வொரு மில்லேனியத்திலும் சராசரி எண்ணிக்கையிலான உயிரினங்கள் அழிந்து கொண்டே தான் வருகின்றன.

Biodiversity and Wildlife-** இன் மிக சமீபத்திய மதிப்பீட்டின் படி பூமியில் சுமார் 8.7 மில்லியன் உயிரினங்கள் வாழ்வதாக ஆய்வு சொல்கிறது. இதில் வெறும் 0.01% மட்டுமே மனித இனம். எஞ்சிய பகுதியை விலங்குகள், பறவைகள், ஊர்வன என பிற உயிர்கள் ஆக்கிரமிக்கின்றன. ஆனால் வெறும் 0.01% மட்டுமே இருக்கும் மனிதனே ஏனைய உயிரினங்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றான் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம்.

உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) *** புதிய அறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் உலகின் வனவிலங்குகளின் எண்ணிக்கை மனித நடவடிக்கைகளின் காரணமாக மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்துள்ளது.

பூமியில் உள்ள மதிப்பிடப்பட்ட 8 மில்லியன் தாவர மற்றும் விலங்கு இனங்களில் 1 மில்லியன், அடுத்த தசாப்தத்துக்குள் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.

ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான புதிய இனங்கள் அழிந்து வருகின்றன, 20,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் முற்றாக அழிந்து விடும் அபாய விளிம்பில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாலூட்டி இனங்களில் கால் பகுதி அடுத்த நூற்றாண்டுக்குள் அழியும் அபாயத்தில் உள்ளது என்கிறது ஆராய்ச்சி. உலகில் மனித தோற்றத்திற்கு 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 1,000 மடங்கு அதிகமாக இன்று உயிரினங்கள் இறந்து கொண்டிருக்கின்றன என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள்.

 

அழிவுக்கான பிரதான காரணம் என்ன?

ஒரு இனம் பூமியில் எந்த இடத்திலுமே தென்படாமல் முற்றாக அழிந்து போகும் போது அவ்வினம் அழிந்து விட்டது என்று முடிவு செய்யப்படுகிறது. அதாவது அந்த இனத்தின் கடைசி அங்கத்தவர் இறக்கும் போது, ​​குறிப்பிட்ட உயிரினம் முடிவுக்கு வருகிறது. விலங்குகளின் தொடர்ச்சியான அழிவுக்குப் பல காரணங்கள் பின்னணியில் சொல்லப்படுகின்றன. அவற்றுள் முதலாவதும், மிகப்பெரியதுமான அச்சுறுத்தல் மனிதன். உலக மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கில் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் சனத்தொகை, அதிகளவிலான வளங்களை நுகர்வதால் பூமியின் ஏனைய உயிரினங்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது. வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம், ஆக்கிரமிப்பு இனங்களின் பெருக்கம், நோய், அதிகப்படியான வேட்டையாடுதல், இயற்கை அழிவு ஆகியவற்றின் காரணமாக இன அழிப்பு விகிதம் துரிதப்படுகிறது.

கடல் அமிலத்தன்மை, சுற்றுச்சூழல் நிலைகளில் மாற்றங்கள், விண்கற்களின் தாக்கம், பாரிய எரிமலைகளின்  வெடிப்பு போன்ற நிகழ்வுகள் உயிரினங்களை நேரடியாகக் கொன்றது. காடழிப்பு, வாழ்விட அழிவு, விவசாய நடவடிக்கைகள், நகரமயமாக்கல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், உயிரினங்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மாசுகள் மற்றும் கழிவுகளின் வெளியீடு போன்ற மனித செயற்பாடுகள் பூர்வீக இனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தன.

 

நம் தலைமுறை தவறவிட்ட சில அரிய விலங்குகள்   

இந்தப் பூமியில் வாழ்ந்த பல அரிய உயிரினங்களை அழித்த பெருமை மனிதனையே சாரும். விண்கற்களின் தாக்குதல்கள், எரிமலை வெடிப்புகள், இயற்கை காலநிலை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட கடந்த பாரிய அழிவுகளைப் போலல்லாமல், தற்போதைய அழிவு கிட்டத்தட்ட 99 சதவீதம் மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது. மனிதன் தன் சுயநலத்துக்காக அழித்த இனங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இதில் பல, அவனுக்கு எந்த தீங்குமே விளைவிக்காத, மாறாக சூழலியல் சமநிலைக்கு மிக அவசியமான விலங்குகள். உதாரணத்திற்கு, டோடோ பறவைகள். பறக்கவோ, விரைவாக ஓடவோ முடியாத, மிகுந்த அப்பாவியான டோடோ பறவைகள் மனித நடமாட்டம் இல்லாத மொரிஷியஸ், மடகாஸ்கர் போன்ற தீவுகளில் ஒரு காலத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. 15-ஆம் 16-ஆம் நூற்றாண்டுகளின் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றவர்கள் புதிய நாடுகளைக் கண்டறிய கடல் பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்த போதே இவற்றின் அழிவு காலம் தொடங்கியது. மனித நடமாட்டம் பெருகப் பெருக, அவனது சாப்பாட்டுத் தட்டில் டோடோ பறவைகள் ருசியான டிஷ்ஷாக மாறின. டச்சுக்காரர்கள் கொண்டு வந்த பன்றிகள், குரங்குகள், நாய்கள் போன்ற விலங்குகள் டோடோ பறவையின் முட்டைகளைச் சாப்பிட ஆரம்பித்தன. இவ்வாறு மனிதனுக்கு அறிமுகமான 100 அண்டுகளிலேயே ஒட்டுமொத்த டோடோ இனமுமே அழிக்கப்பட்டுவிட்டது.

2011-இல் முற்றாக அழிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கறுப்பு காண்டாமிருகம் கூட மனிதனால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மற்றுமொரு அரிதான அப்பாவி விலங்கு. 30 மீட்டருக்கு மேல் உள்ள எதையும் தெளிவாகப் பார்க்க முடியாத மிகவும் மோசமான கண்பார்வை கொண்ட இவற்றால், கொம்புகளுக்காக வேட்டையாடுபவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போனது பெரும் சோகம். அதே போல சீனாவின் யாங்சே நதியில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பைஜி என அழைக்கப்படும் சீன நதி டால்பின்கள் மனித நடவடிக்கைகள் காரணமாக வெறும் ஐம்பதே ஆண்டுகளில் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போயின. 2007-ஆம் ஆண்டில் முற்றாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த அரிய வகை டால்பின் இனம் வேறு எந்த திமிங்கிலங்களுடனோ அல்லது டால்பின் இனங்களுடனோ பகிர்ந்து கொள்ளப்படாத பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருந்தது.

வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட Passenger Pigeon (காட்டுப் புறா) வட அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகையோடு அழிந்தது. ஆரம்பத்தில் 3 முதல் 5 பில்லியன் Passenger புறாக்கள் அமெரிக்காவில் வசித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனித குடியேற்றம் பெருமளவிலான காடழிப்புக்கு வழிவகுத்து, இவற்றின் வாழ்விடங்களை ஒழித்தன. அதே போல இந்தப் புறாக்களின் இறைச்சி மலிவான உணவாக வணிகமயமாக்கப்பட்டதால் மக்களால் பெரிய அளவில் வேட்டையாடப்பட்டது. விளைவு, 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 1900-ஆக குறைந்த இந்தப் புறாக்களின் கடைசிப் பறவை மார்த்தா, செப்டம்பர் 1, 1914 அன்று சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் இறந்தது. சக மனிதனையே தனது சுயநலத்துக்காக இரையாக்கும் மனிதன் சூழலில் உள்ள விலங்குகளை மட்டும் மிச்சம் வைக்கவா போகிறான்?

 

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அழிந்துவிடும் அச்சுறுத்தலில் இருக்கும் உயிரினங்கள்

WWF-ன் சமீபத்தைய அறிக்கை, கடல் ஆமை, தேனீ, துருவ கரடி, புலி மற்றும் சிறுத்தை இனம், டால்பின், போலார் கரடிகள் போன்ற பல விலங்குகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்து விடும் என்ற அதிர்ச்சியான தகவலைக் கூறுகிறது.

மனித வேட்டையாடுதல் மற்றும் நீர் மாசு ஆகியவற்றின் விளைவாக அழிந்து வரும் விலங்குகளாக அனைத்து வகையான கடல் ஆமைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் திமிங்கலங்களில் (Atlantic Ocean-dwelling whales) தற்போது சுமார் 450 மட்டுமே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மீன்பிடி சாதனங்களில் சிக்குதல், கப்பல்களால் தாக்கப்படுதல், வேட்டையாடப்படல் போன்ற காரணங்களால் இந்த அரிய திமிங்கலங்கள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்து விடும் என்று கூறப்படுகிறது. கென்யாவின் ஓல் பெஜெட்டா கன்சர்வேன்சியில் எஞ்சியுள்ள உலகில் கடைசி இரண்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களையும் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க  பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வெப்பமடைந்து வரும் பூமியின் காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றுமொரு முக்கியமான இனம் தேனீக்கள். அவற்றின் மகரந்தச் சேர்க்கை உதவி இல்லாமல், பூமியின் உணவு ஆதாரங்கள் பாதிக்கப்படும். தற்போது ஈரானில் மட்டுமே எஞ்சியிருக்கும் Asiatic cheetahs, ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் சராசரியாக ஒரு இனம் என்ற ரீதியில் அழிந்து வரும் புலியினங்கள், ஆஸ்திரேலிய காடுகளில் 43,000 மட்டுமே இருக்கக்கூடும் என்று கணிக்கப்படும் கோலாக்கள், 50க்கும் குறைவான அளவில் காணப்படும் சிவப்பு ஓநாய்கள், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டுமே தற்போது காணப்படும் குயிலினங்கள், எரித்திரியா மற்றும் எத்தியோப்பியாவில் மட்டுமே காணப்படும் ஆப்பிரிக்க காட்டு கழுதை என மனித நடவடிக்கை காரணமாக அழிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கும் உயிரினங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன.

ஒவ்வொரு உயிரினமும் உணவுச் சங்கிலியில் மட்டுமல்ல பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே சூழலில் உள்ள உணவுச் சங்கிலியில் உள்ள ஒரு விலங்கு முற்றாக அகற்றப்படும் போது ஒட்டு மொத்த உணவு வலையுமே பாதிக்கப்படுகின்றது. ஒரு வேட்டையாடும் விலங்கு பூரணமாக அந்த சூழலியலில் இருந்து அகற்றப்படும் போது ​​அதன் அனைத்து இரைகளும் அந்த வேட்டையாடும் அழுத்தத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன. இதனால் அவை சுற்றுச்சூழல் அமைப்புகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, புலிகளின் அழிவினால் மான்களின் எண்ணிக்கை அதிகமானால் உண்மையில் அது கூட சுற்றுச்சூழல் அமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

இதற்கு என்னதான் தீர்வு?

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், ஒரு விலங்கு அல்லது தாவர இனம் அழிந்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளில், விலங்குகளின் அழிவு விகிதம் 40 மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் நம் பிள்ளைகள் வாழப்போகும் நாளைய உலகின் நிலை என்ன? உணவுச் சமநிலை பாதிக்கப்பட்ட எதிர்கால பூமியில் வாழப்போகும் நம் சந்ததியினரின் நிலை என்னவாகப்போகிறது? 2100-ஆம் ஆண்டின் இறுதியில், உலகின் உள்ள அனைத்து உயிரினங்களில் கிட்டத்தட்ட பாதி மறைந்துவிடும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இது மனிதகுலத்துக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய எச்சரிக்கை. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை சீக்கிரமே கைமீறிப் போய்விடும்.

 

ஒவ்வொரு பெரிய மாற்றமும் சிறிய அளவிலேயே ஆரம்பமாகிறது என்று கூறுவார்கள். நாம் வாழும் சூழல் எதிர்கொள்ளும் இந்த பாரிய பிரச்சனைக்கு நாம் எவ்விதத்தில் பங்களிப்பு செய்யலாம்?

நம் பகுதியில் உள்ள அழிந்து வரும் உயிரினங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முதல் படி, அவை எவ்வளவு முக்கியமானவை என்பதைப் பற்றி அறிந்துகொள்வதாகும். எனவே நம் சூழலில் வாழும் அரிய வனவிலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தாவரங்களைப் பற்றியும், சூழலியல் சமநிலைக்கு அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஊடகங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மற்றுமொரு சிறந்த வழி அவை வாழும் இடங்களைப் பாதுகாப்பது.  எனவே அவற்றின் வாழ்விடங்களைச் சேதப்படுத்தாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அனைவருக்குள்ளேயும் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை அவசியம் வரவேண்டும். முக்கியமாக நம் பிள்ளைகளுக்கு இந்த விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் சிறு வயது முதலே ஊட்டுவது அவசியம். அவர்களது உலகைப் பாதுகாக்க வேண்டிய கடமையை அவர்களுக்குத் தெளிவாகக் கற்றுக் கொடுக்க வேண்டியது நம் கடமை.

 

இந்தப் பூமி அனைவருக்குமானது. அழிந்து வரும் இனங்களின் குரலாக மாறுவோம்!

 

  • றின்னோஸா –

Glossory :

*. 6-வது பாரிய அழிவு நெருக்கடி – https://en.wikipedia.org/wiki/Holocene_extinction#:~:text=The%20Holocene%20extinction%2C%20otherwise%20referred,a%20result%20of%20human%20activity.

**. https://ourworldindata.org/biodiversity-and-wildlife – பல்லுயிர் மற்றும் வனவிலங்கு பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் நிறுவனம்

***. உலக வனவிலங்கு நிதியம் (WWF) https://www.worldwildlife.org/ – ஒரு உலகளாவிய பாதுகாப்பு அமைப்பு ஆகும், இது 100 நாடுகளில் கிளைகளைக் கொண்டு எளிமையான வகையில், இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்படும் ஒரு சர்வதேச நிறுவனம்.