நரி Jackal (Canis aureus) -டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்.

ழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டியான நரியானது காட்டு விலங்காகும். தமிழகத்தில் காணப்படும் நரிகள் இந்தியாவில் குறிப்பாக பிற மாநிலங்களான கானா, பரத்பூர் போன்ற பகுதிகளில் காணப்படும் நரிகளைவிட சற்று சிறியதாகும். இந்நரிகள் தனக்கென வாழ்வதற்கேற்ற சூழல் கொண்ட பள்ளங்கள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன. தமிழில் பல பகுதிகளில் நரியினை பலவாறு அழைக்கப்பட்ட போதிலும் நரி, கணநரி, குறுநரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

நரிகள் கிராமத்தின் புற பகுதிகள், வேளாண்மைப் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள், ஆற்றங்கரைகள், பள்ளங்கள் போன்ற பகுதிகளை இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றன. நரி வெப்பத்தை தாங்கும் திறனுடையது.

முன்காலங்களில் மாலை மங்கத் தொடங்கியதும் உணவு தேட வருமுன்னும், கதிரவன் எழுமுன், கிழக்கு வெளுக்கத் தொடங்கும் வேளையில் ஓய்வெடுக்க தங்கும் இடம் நாடித் திரும்பும் வேளையிலும் தனது தலையை உயரத் தூக்கியபடி ஊளையிட்டபடி ஆங்காங்கே மாறி மாறி தூரந்தூரமாக நின்றபடி ஊளையிடுவதை கேட்கவும் காணவும் முடிந்தது. அத்தகைய சூழலை தற்போது பெரும்பகுதிகளில் காண இயலுவதில்லை. அரிதாக சிலபகுதிகளில் என்றாவது காணமுடிகிறது. தற்போது நரியானது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியில் வறண்ட பகுதியில் அரிதாகக் கண்ணில் படுவதுண்டு.

பூமிக்கு அடியில் குழி தோண்டி பொந்துகள் ஏற்படுத்தி கிராமத்தை ஒட்டிய பகுதிகளிலும் வேளாண்மை புரியும் காட்டுப் பகுதிகளிலும் தங்கி வாழ்கிறது. மாலைப் பொழுதில் உணவுக்காக வெளிவந்து அதிகாலைப் பொழுதில் தங்குமிடத்திற்கு திரும்பிச் சென்று ஓய்வெடுப்பதும், குளிர்காலத்திலும் மேகமூட்டக் காலங்களிலும் மனிதர்கள் நடமாடாத பகுதிகளில் வெளியில் வேட்டையாட வருவதைக் காணலாம். வெப்பமான காலங்களில் நீர் அருந்தவும், நீரில் அமரவும், குளிக்கவும் பகற்பொழுதில் வெளிவரும் இயல்புடையது.

நரிகள் பெரும்பாலும் மாலைப் பொழுதில் தனியாகவும், சில இணையுடனும் அல்லது சிறு கூட்டமாகவும் காணலாம். அங்ஙனம் வருகையில் ஆங்காங்கே தலையைத் தூக்கியபடி ஊளையிடுவதைக் கேட்கலாம்.

இதன் உயரம் 38-43 சென்டிமீட்டர், நீளம் தலையிலிருந்து உடல் வரை 71-85 சென்டிமீட்டர், வால் 20-25 சென்டிமீட்டர், எடை 6-11 கிலோ உடலமைப்பைக் கொண்டது.

பெண் நரியானது எல்லாவகையிலும் உயரத்திலும் எடையிலும் குறைவாகக் காணப்படும். நீண்ட தூர ஓட்டத்திற்கு ஏற்றவாறு நரிகளின் பெரிய கால்கள் நீண்டு அமைந்துள்ளது.  நரி 16 கி.மீ / மணி வேகத்தில் ஓடும் திறன் கொண்டுள்ளதால் இதன் வேட்டைக்கு பெரிதும் உதவுகின்றது.

குட்டிகள் ஈனும் காலம் ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழும். குறிப்பிட்ட காலம் என்பதில்லை. கருவில் வளரும் நாட்கள் 60-65 நாட்கள். கர்ப்பகாலத்திற்குப் பிறகு பெண் தனது நிலத்தடி பொந்தில் (குகையில்) 2-4 குட்டிகளை ஈனும். நரிக் குட்டிகள் 6 முதல் 11 மாத வயதில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. சுமார் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

சில பாலூட்டிகளைப் போல இதன் எல்லைகளை சிறுநீர் மற்றும் மலம் கொண்டு எல்லைகளை வகுப்பது மட்டுமன்றி நிலப்பரப்பைச் சுற்றி உள்ள அடையாளங்களைக் குறிப்பதன் மூலமும் அதன் இணையை மற்ற இணைகளிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்கிறது. குட்டிகள் பெரிதாகி தங்கள் சொந்த நிலப் பரப்பை நிறுவும் வரை பெற்றோருடன் தங்கி வாழ்கிறது. சில குட்டிகள் 11 மாதங்களுக்குப்பின் தாயை விட்டு வெளியேறி தனித்து வாழும்.

நரிகள் எப்போதாவது சிறிய கூட்டமாக ஒன்று சேரக் கூடும், எடுத்துக்காட்டாக, ஒரு இறந்த இரையை உண்ணக் கூடுவதுண்டு. ஆனால் அவை கூட்டமாக வேட்டையாடாமல் தனியாகவோ அல்லது இணைகளாகவோ வேட்டையாடுகின்றன.

கிராமப் பகுதிகளில் வாழும்  நரிகள் பெரும்பாலும் எலிகள், சில வேளைகளில் முயல்கள், வயல்வெளிகளில் நண்டுகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன. சில நேரங்களில் காய்கறிகளைக் கூட விட்டு வைப்பதில்லை.

ஆட்டு மந்தைகளில் ஆடுகள் மேயும் பொழுதும் அல்லது இரவில் அடைக்கப்பட்டுள்ள கிடையில் (பட்டி) உள்ள ஆடுகள், செம்மறி ஆடுகள் அதன் குட்டிகள் போன்றவற்றையும் மற்றும் வளர்க்கும் கோழிகள், புறாக்கள் போன்றவற்றையும் இரவு நேரங்களில் கவ்வி எடுத்துச் சென்று கொன்று தின்னக் கூடியது. சிறிய அடிபட்ட பாலூட்டிகளைக்கூட கொன்று தின்னும். மாடு, எருமை போன்றவைகள் பட்டிகளில் (கிடையில்) கன்று ஈனும் பொழுது படலைத் தாண்டி குட்டியினைக் கொன்று இழுத்துச் சென்று விடுவதுமுண்டு. முன்காலங்களில் தோட்டங்களில் தனியாக உள்ள சாளையின் (வீடு) முன் தனித்திருக்கும் சிறு குழந்தைகளையும் தூக்கிச் சென்று தின்றதுண்டு.

இத்தகைய நரியைப் பற்றி பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே இதன் வாழ்விடம் பற்றியும் வேட்டையாடும் முறை பற்றியும் நன்கறிந்து சங்க இலக்கியங்களில் கூறியிருப்பது படிப்போரை மிகவும் வியப்படையச் செய்கிறது. அக்காலங்களில் நரியினை பல பெயர்களில் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

சங்க இலக்கியங்களில் நரியை கணநரி (Jackal) எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். காரணம் பெரும்பாலும் கூட்டமாக வேட்டையாடுவதால் இவ்வினத்தைக் கணநரி என அழைத்தனர்.

‘’அம்புதொடை  யமைதி காண்மார் வம்பலர்

கலனிலர் ஆயினுங் கொன்றுபுள் ளூட்டுங்

கல்லா இளையர் கலித்த கவலைக்

கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும்

நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்

அத்த எருவைச் சேவல் சேர்ந்த’’

                                                 … அகம் 375

பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு

கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்

                                                 … புறம் 369

அகநானூற்றிலும் புறநானூற்றிலும் கணநரி எனக் கூறப்பட்டு இருப்பதைக் காணலாம். கணநரி இனத்தோடு குழுமிப் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகக் கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும். கணநரி பற்றி மற்றொரு செய்தியும் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது இறந்த விலங்குகளின் தசையோ எலும்போ கிடந்தால் கூட அதனை உண்டு வாழும் என்றும், இந்த நரியை இதன் காரணமாக தோட்டி (Scavenger) என்றழைப்பர். காடுகளில் கழிந்த ஊன் தசைகளையும், வேட்டையாடும் புலி முதலிய விலங்குகள் உண்டது போக எஞ்சியதையும் இந்நரிகள் உண்ணும். எனவே இவைகளுக்கு உணவுப் பஞ்சம் என்பது எப்போதும் கிடையாது. இதனை பழமொழி நானூற்றில் (102) இல்

‘’நரியிற் கூண் நல்யாண்டும் தீயாண்டும் இல்’’

 என்ற பழமொழி வருகின்றது இதன் பொருள் நரிக்கு உணவு நிறைய கிடைக்கின்ற நல்ல காலமும், உணவு கிடைக்காத பஞ்சகாலம் கிடையாது என்பதனைக் கண்டுணர்ந்து கூறியுள்ளனர்.

முன்னர் கிராமங்களில் மனிதர்கள் குறிப்பாக குழந்தைகள் இறந்தால் ஊருக்கு தொலைவிலுள்ள இடுகாட்டிலும் சிலர் தங்கள் வேளாண்மை புரியும் காட்டிற்குள்ளேயும் புதைத்து விடுவர். இரவு நேரங்களில் நரிகள், புதைத்த உடலினைப் பறித்துத் தின்னும். கால மாறுபாட்டாலும் மனிதர்கள் நடமாட்டம் அதிகமானதாலும் தற்போது இந்நிகழ்வுகளைக் காண இயலுவதில்லை.

நரி ஊளையிடுவதைப்பற்றி மணிமேகலையில்

“நீண்முக நரியின் தீவிளிக் கூவும்”

என்ற பாடல் தெரிவிக்கிறது. மலையாளத்தில் கணநரியை ஊளன் என்கின்றனர்.

புலிகள் வேட்டையாடி விட்டுச் சென்ற மீதி இரையைப் பின் தொடர்ந்து சென்ற நரிகள் உணவாகக் கொள்வதுண்டு. இதனைப் பற்றி

இரும்புலி கொண் மார் நிறுத்த வலையுளோர்

   ஏதில் குறுநரி பட்டற்றாற் காதலன்

-கலி. 65

 

புலியைப் பிடிக்க வைத்த வலையில் நரி அகப்பட்டதென்று கலித்தொகையில் கூறுவது புலியைப்பின் பற்றி நரி செல்வதைக் குறிப்பாகக் காட்டுகின்றது.

தமிழகத்தில் தற்போது அழிந்து வரும் பாலூட்டிகளில் கணநரி என்னும் நரியும் ஒன்றாகும். இவை வேளாண்மைக் காடுகளில் பயிரிடப் படும் பயிரினங்களை குறிப்பாக பழங்கள், கரும்புகள், மக்காச் சோளம் போன்றவற்றிக்கு கேடு விளைவிப்பதால் வாய் வேட்டு அதாவது கோழி, ஆடு போன்றவற்றின் குடலினுள் வெடிக்கும் மருந்தினை கணநரிகள் நடமாடும் பகுதிகளில் சில இடங்களைத் தேர்வு செய்து வைத்துவிடுவர். அதனை நரி வாயில் கவ்வும் பொழுது வெடித்து இறந்து விடும்.

மேலும் பயிர்களுக்கு விவசாயிகள் தெளிக்கும் மருந்துகளால் உயிரினங்கள், பூச்சியினங்கள் ஊர்வன போன்றவைகள் பெரும்பாலும் அழிவுற்றதாலும், விளைநிலங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருவது போன்ற பல காரணங்களால் தற்போது ஏறக்குறைய தமிழகத்தில் கணநரிகள் அழியும் நிலையில் உள்ளன என உறுதிபடக் கூறலாம்.

மேலும் நரிக் கொம்பு வீட்டில் இருந்தால் சொத்துக்கள் சேரும், மற்றும் பண விரயங்கள் நிற்கும் என்று எண்ணி சிலர் மூட நம்பிக்கை கொண்டு வாங்குவதால் இதனைக் கொன்று அல்லது மாட்டின் கொம்பினை சீவி போலியாக நரிக் கொம்பென விற்கின்றனர். உண்மையில் இயற்கையாக இறந்த நரியின் சிறு கொம்பே இது. எல்லா நரிக்கும் இருக்காது. தற்போதைய கடுமையான சட்டங்களால் உணவுக்காக நரிகள் வேட்டையாடப்படுவதும் கொல்லப்படுவதும் நடைபெறுவதில்லை எனலாம், இருப்பினும் தமிழகத்தில் தற்போது நரிகள் அழிந்துவிட்டதெனக் கூறலாம்.

நரியினை அழிவிலிருந்து காக்க விவசாயிகளிடமும் கிராமப் புற மாணவர் களிடையேயும் மற்றும் மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும். இது இன்றியமையாததும் நமது கடமையுமாகும்.