பந்தயம் ,ஆன்டன் செகாவ் தமிழாக்கம்- கீதா மதிவாணன்

து ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டிருந்தார் அந்த முதிய வங்கியதிபர்.

அந்த விருந்தில் பல அறிவுமேதைகள் கலந்துகொண்டிருந்தனர். சுவாரசியமான பல உரையாடல்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இடையில் மரண தண்டனை குறித்த பேச்சு அடிபட்டது. விருந்தினர்களுள் பெரும்பான்மையோரான பத்திரிகையாளர்களும் மெத்தப்படித்தோரும் மரண தண்டனைக்கெதிரான தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். இது போன்ற நெறியற்ற தண்டனைகள் காலத்துக்கொவ்வாதவை என்றும், கிறித்துவ நாடுகளுக்கு கிஞ்சித்தும் ஏற்புடையவை அல்லவென்றும் கருத்துத் தெரிவித்தனர். மரண தண்டனை விதிக்கப்படும் எல்லா இடங்களிலும் மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டுமெனப் பரிந்துரைத்தனர்.

“எனக்கு உங்கள் கருத்தோடு உடன்பாடில்லை” வங்கியதிபர் பட்டென்று சொன்னார். “என் அனுபவத்தில் மரண தண்டனையையோ ஆயுள் தண்டனையையோ அனுபவித்தவன் இல்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஆயுள் தண்டனையை விடவும் மனிதாபிமானமிக்கதும் அறநெறி சார்ந்ததும் மரண தண்டனையே என்பேன். மரண தண்டனை ஒருவனின் உயிரை ஒரு தடவைதான் பறிக்கும். ஆனால் ஆயுள் தண்டனையோ.. அவனை சிறுகச் சிறுக சித்திரவதை செய்து சாகடிக்கும். உன்னை உடனே கொல்பவன் நல்லவனா? அல்லது வருடக்கணக்காய் உன்னை அடைத்து உன் வாழ்க்கையை உன்னிடமிருந்து பறிக்கிறானே அவன் நல்லவனா? யாருக்கு மனிதாபிமானம் அதிகம்? சொல்..”

விருந்தினர்களுள் ஒருவன் சொன்னான், “இருவருமே மோசமானவர்கள்தான்.. ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். ஏனென்றால், ஒருவனுடைய வாழ்க்கையைப் பறிக்கும் வேலையைத்தான் இருவருமே செய்கிறார்கள். அரசாங்கம் என்பது கடவுள் கிடையாது. தன்னால் திரும்பத் தர முடியாத ஒன்றைப் பறிப்பதற்கு அதற்கு அதிகாரம் கிடையாது.”

விருந்தினர்களுள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் வழக்குரைஞனும் இருந்தான். அவனுடைய கருத்து யாதெனக் கேட்கப்பட்டபோது அவன் சொன்னான்,

“மரண தண்டனை, ஆயுள் தண்டனை இரண்டுமே மோசமானதுதான் என்றாலும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு என்னைக் கேட்டால் நான் ஆயுள் தண்டனையைத்தான் தேர்ந்தெடுப்பேன். ஒருவன் இல்லாமலே போவதை விடவும் எங்காவது உயிரோடு இருக்க முடிந்தால் நல்லதுதானே..”

விவாதம் சூடுபிடித்தது. வங்கியதிபரிடம் இளமையும் கொதிப்பும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்நாளில் அவரால் இந்த வாதத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மேசையை முஷ்டியால் ஓங்கிக் குத்தியபடி இளம் வழக்குரைஞனைப் பார்த்து சவால் விட்டார்.

“அது உண்மையல்ல. வேண்டுமானால் இரண்டு மில்லியன் பந்தயம் கட்டுகிறேன். உன்னால் தன்னந்தனிமையில் ஐந்து வருடங்களைக் கூட கழிக்க முடியாது.”

“உண்மையாகவே சொல்கிறீர்களா.. அப்படி என்றால் நானும் பந்தயத்துக்குத் தயார். ஆனால்… ஐந்தல்ல.. பதினைந்து வருடங்கள் இருந்து காட்டுகிறேன்.”

 

(2)

“என்னது? பதினைந்து வருடங்களா? எனக்குச் சம்மதம். பார்த்துக்கொள்ளுங்கள் கனவான்களே.. நான் இரண்டு மில்லியனை பணயம் வைக்கிறேன்.”

“எனக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் பணத்தைப் பணயம் வைக்கிறீர்கள். நான் என் சுதந்திரத்தைப் பணயம் வைக்கிறேன்.”

அர்த்தமற்ற, முட்டாள்தனமான அந்தப் பந்தயம் அன்றே அப்போதே அமலுக்கு வந்தது. பணச்செருக்கும், குதர்க்கமும் கொண்ட வங்கியதிபர் இப்பந்தயத்தால் ஈட்டப்போகும் வெற்றியை எண்ணிப் பெருங்களிப்பிலாழ்ந்தார். இரவுணவின் போது இளைஞனை சீண்டத் தொடங்கினார்.

“மறுபடியும் நன்றாக யோசித்துக்கொள், இளைஞனே.. இன்னும் நேரமிருக்கிறது. எனக்கு இரண்டு மில்லியன் என்பது பிச்சைக்காசு. ஆனால் நீயோ உன் வாழ்க்கையில் அற்புதமான மூன்று அல்லது நான்கு வருடங்களை இழக்கப்போகிறாய். ஏன் மூன்று அல்லது நான்கு வருடங்கள் என்று சொல்கிறேன் தெரியுமா? அவ்வளவு காலம்தான் உன்னால் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு மேல் முடியாது. பரிதாபத்துக்குரியவனே.. ஒன்றை நினைவில் கொள், கட்டாயச் சிறைவாசம் என்பது வேறு, தானே வலிந்து சிறை புகுவது என்பது வேறு. இரண்டாவது முன்னதினும் கொடுமையானது. எப்போது வேண்டுமானாலும் நீ உன் விடுதலையை நோக்கி அடியெடுத்து வைக்கமுடியும் என்ற எண்ணமே உன் உள்ளிருப்பை மிகுந்த வேதனையுறச்செய்யும். உனக்காக நான் மிகுந்த அனுதாபப்படுகிறேன்.”

படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக் கொண்டு முந்தைய நிகழ்வுகளை மனத்துக்குள் அசைபோட்டுக்கொண்டிருந்த வங்கியதிபர் தனக்குத் தானே கேட்டுக்கொண்டார்.

“அந்தப் பந்தயத்தின் பொருள்தான் என்ன? ஒரு இளைஞன் தன் வாழ்நாளில் பதினைந்து வருடங்களை இழப்பதாலும் இரண்டு மில்லியன் பணத்தை நான் தூக்கி வீசுவதாலும் என்ன நன்மை உண்டாகிவிடப்போகிறது? மரணதண்டனையை விடவும் ஆயுள் தண்டனை நல்லதென்றோ.. மோசமானதென்றோ.. நிரூபிக்கப்படப் போகிறதா? இல்லை இல்லை.. எல்லாமே அர்த்தமற்றவை, முட்டாள்தனமானவை. அன்று எனக்கிருந்தது பணத்திமிர், அவனுக்கிருந்தது பணத்தாசை.”

தொடர்ந்து அன்று நடந்தவற்றை மனக்கண்ணில் மீளக்கொணர்ந்தார். வங்கியதிபரின் தோட்டத்து வீட்டின் அறையொன்றில், பலத்த கண்காணிப்போடு இளைஞனைத் தங்கவைப்பதென்று முடிவானது. ஒப்பந்தப்படி, பதினைந்து வருடங்கள் அவன் அந்த அறையிலேயே கழிக்கவேண்டும். வாயில் தாண்டக்கூடாது. எந்த மனிதரையும் சந்திக்கக்கூடாது. மனிதக்குரல்களே கேட்கக்கூடாது. யாரிடமிருந்தும் கடிதம் பெறவும் செய்தித்தாள்கள் வாசிக்கவும் அனுமதி கிடையாது. ஆனால் ஒரு இசைக்கருவியும் புத்தகங்களும் வைத்துக்கொள்ளவும், கடிதங்கள் எழுதவும், மதுவருந்தவும், புகைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

நிபந்தனைகளின் படி, அவ்வறையில் இருந்த மிகச்சிறிய சன்னல்வழி மட்டுமே வெளியுலகுடனான தொடர்பு அவனுக்கு.. தனக்கு இன்னின்ன வேண்டுமென்று அவன் குறிப்பு எழுதித் தந்தால்… புத்தகம், இசைக்கருவி, மது என எதுவாயினும், எவ்வளவாயினும் அவை அச்சன்னல் வழியே அவனுக்குத் தரப்படும்,

1870 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் நண்பகல் 12 மணி முதல் 1885 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் நண்பகல் 12 மணி வரையிலான பதினைந்து ஆண்டு காலக் கொடுந்தனிமைச் சிறைக்கான ஒப்பந்தத்தில் எல்லா விவரங்களும் தெளிவாய் எழுதப்பட்டிருந்தன. சிறைவாசம் முடிவதற்கு இரண்டு நிமிடங்களே இருக்கும் தருவாயிலும், அவன் ஏதேனும் சிறு விதிமீறலில் ஈடுபட்டாலும் பணயப்பணமான இரண்டு மில்லியன் வழங்கப்படமாட்டாது.

 

(3)

சிறைக்காலத்தின் முதல் வருடம் கைதி தனிமைத் துயராலும் மன அழுத்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தான் என்பதை அவன் எழுதியனுப்பிய துண்டுச்சீட்டுகள் வெளிப்படுத்தின.

அவன் அறையிலிருந்து இரவும் பகலும் இடைவிடாமல் பியோனா இசை கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் மதுவையும் புகையிலையையும் மறுத்தான். மது ஆசைகளைத் தூண்டிவிடும் என்றும் ஆசைகளே ஒரு கைதியின் மிக மோசமான எதிரி என்றும் குறிப்பிட்டிருந்தான். மேலும் யாருமற்ற தனிமையில் மதுவருந்துவது போன்ற துயர் வேறில்லை என்றும் புகை அவன் அறையை மாசுபடுத்துவதாகவும் எழுதியிருந்தான்.

முதல் வருடம் அவன் இலகுவாசிப்பில் ஈடுபட்டிருந்தான். எளிய கதைகள், புதினங்கள், சிக்கலான காதல் கதைகள், சாகசக்கதைகள் போன்றவற்றை வாசித்தான். இரண்டாம் வருடம் பியானோ இசை நின்றுபோனது. அவன் செவ்விலக்கிய நூல்களைக் கேட்டுப்பெற்றான். ஐந்தாம் வருடம் மீண்டும் இசை துளிர்க்க ஆரம்பித்தது. கைதி மது வேண்டுமென்று கேட்டான். சன்னல் வழியே அவனறியாது பார்த்தவர்கள், அவன் அந்த வருடம் முழுவதும் சாப்பிடுவதும், மதுவருந்துவதும், படுக்கையில் படுத்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டும் அவ்வப்போது தனக்குத்தானே ஆத்திரத்துடன் பேசிக்கொண்டும் இருந்ததாகச் சொன்னார்கள். அவன் புத்தகங்களைத் தொடவே இல்லை. இரவுவேளைகளில் அமர்ந்து ஏதேனும் எழுதிக் கொண்டிருப்பான். சில சமயம் மணிக்கணக்காக எழுதுவான். மறுநாள் காலையில் பார்த்தால் எல்லாவற்றையும் கிழித்துப் போடுவான் என்றும் ஒரு சில முறை அவன் அறையிலிருந்து அழுகுரல் கேட்டதாகவும் சொன்னார்கள்.

ஆறாம் ஆண்டின் பிற்பாதியில் மொழிகள், தத்துவம், வரலாறு தொடர்பான புத்தகங்களை வெகு ஆர்வத்துடன் வாசித்தான். அசுரத்தனமான அவன் வாசிப்பின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல் வங்கியதிபர் தவித்தார். நான்கு வருடங்களில் அவர் சுமார் அறுநூறு புத்தகங்களை அவனுக்காக வருவித்திருந்தார். அந்த சமயத்தில்தான் கைதியிடமிருந்து அவருக்கு இப்படியொரு கடிதம் வந்தது.

“அன்பான சிறையதிகாரிக்கு, நான் இக்கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதுகிறேன். அம்மொழிகள் அறிந்தோரிடம் இவற்றைக் காட்டுங்கள். அவர்கள் வாசித்துப் பார்க்கட்டும். ஒரு பிழைகூட இல்லையென அவர்கள் சொல்லிவிட்டால், நீங்கள் எனக்காக என் அறைக்கு வெளியே தோட்டத்தில் ஒரு வேட்டுச்சத்தத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். அந்த ஒற்றை வேட்டுச்சத்தம்தான் என் இத்தனை வருடகால முயற்சிகளும் பாழாகவில்லை என்பதை எனக்கு உணர்த்தும். வெவ்வேறு வயதில் வெவ்வேறு மொழிபேசும் மேதைகள் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள், ஆனால் எல்லோருக்குள்ளும் எரியும் நெருப்பு ஒன்றுதான். அவ்வுணர்வைப் புரிந்துகொண்டமையால் என் ஆன்மாவில் உண்டாகும் பேரானந்தத்தை நான் உங்களுக்கு எப்படி விளக்குவேன்?”

கைதியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. ஒன்றுக்கு இரண்டு வேட்டுகளுக்கு உத்தரவிட்டார் வங்கியதிபர்.

 

 (4)

பத்தாம் வருடத்துக்குப் பிறகு கைதி ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்து சுவிசேஷ நற்செய்தியை வாசித்துக்கொண்டிருந்தான். நான்கு வருடங்களில் அறுநூறு புத்தகங்களை வாசித்துத் தேர்ந்த ஒருவன்,  இப்படி கிட்டத்தட்ட ஒரு வருடகாலத்தை ஒரே புத்தகத்தை.. அதுவும் எளிதில் புரியக்கூடிய ஒன்றை வாசித்து வீணடிப்பது வங்கியதிபருக்குப் பெரும்புதிராய் இருந்தது.

அதன்பின் இறைக்கோட்பாடு, மத வரலாறு சார்ந்த நூல்களைத் தொடர்ந்து வாசித்தான். சிறைக்காலத்தின் கடைசி இரண்டு வருடங்களில் இன்னவகை என்றில்லாமல் கலந்துகட்டி பல்வேறு தலைப்புகளில் எக்கச்சக்கமாக வாசித்துத் தள்ளினான். இயற்கை அறிவியல் நூல்களை ஆர்வமாக வாசித்துமுடித்த கையோடு பைரன் அல்லது ஷேக்ஸ்பியரின் நூல்களைக் கேட்பான். ஒரு முறை வேதியியல், மருந்தியல், தத்துவ ஆராய்ச்சி  இவை சார்ந்த நூல்களையும் ஒரு புதினத்தையும் ஒரே சமயத்தில் கேட்டிருந்தான். அவனுடைய வாசிப்பின் நிலையானது, கப்பல் உடைந்து கடலுக்குள் விழுந்தவன், மிதக்கும் உடைந்த மரத்துண்டுகளை ஒன்று மாற்றி ஒன்று பற்றிக்கொண்டு உயிருக்குப் போராடுவதைப் போலிருந்தது.

வங்கியதிபர் கடந்தகாலச் சிந்தனையிலிருந்து வெளிவந்தார். “நாளை பன்னிரண்டு மணிக்கு அவன் தன் சுதந்திரத்தை மீளப்பெறுவான். எங்களுடைய ஒப்பந்தப்படி நான் அவனுக்கு இரண்டு மில்லியன் கொடுக்கவேண்டும். அப்படி நான் கொடுத்துவிட்டால்.. நான் அவ்வளவுதான். நான் ஒன்றுமில்லாதவனாகிவிடுவேன். என் வாழ்க்கையே நாசமாகிவிடும்.”

பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவருக்கு கணக்குவழக்கில்லாத சொத்து இருந்தது. ஆனால் இப்போது.. தன்னிடம் அதிகமாக இருப்பது சொத்தா, கடனா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட அவருக்குப் பயமாயிருந்தது. பங்குச்சந்தையில் சூதாட்டம் போல விளையாடியது, கண்மூடித்தனமாக ஊக வணிகத்தில் ஈடுபட்டது, மனக்கிளர்ச்சியை அந்த வயதிலும் அடக்கமாட்டாமல் அவர் ஆடிய ஆட்டங்கள் போன்றவற்றால் அவருடைய சொத்து கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துபோனது. பெருமையும், துணிவும், தன்னம்பிக்கையும் மிகுந்திருந்த கோடீஸ்வரரான அவர் ஒரு சாதாரண வங்கியொன்றை ஆரம்பித்து தன் முதலீடுகளில் ஏற்படும் சின்னச்சின்ன ஏற்ற இறக்கங்களுக்கும் அஞ்சி அஞ்சி வாழ்க்கையைக் கடத்திவருகிறார்.

“பாழாய்ப்போன பந்தயம்” எரிச்சலுடன் முணுமுணுத்தார். “ அவன் ஏன் இன்னும் சாகாமலிருக்கிறான்? அவனுக்கு இப்போது நாற்பது வயதுதான் ஆகிறது. என் கையிலிருக்கும் கடைசி காசு வரை பிடுங்கிக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு, பங்குச்சந்தையில் சூதாட்டம் ஆடிக்கொண்டு, வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பான், நான் ஒரு பிச்சைக்காரனைப்போல அவனைப் பார்த்துப் பொருமிக்கொண்டும், “என் வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சியாய் அமைந்ததற்காக, உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவன் சொல்லப்போகும் வார்த்தைகளை நித்தம் நித்தம் கேட்டுக்கொண்டும் இருக்கப்போகிறேன். இல்லை.. அது நடவாது. அவமானத்திலிருந்தும் ஓட்டாண்டியாவதிலிருந்தும் தப்பிக்க ஒரே வழி.. அவனுடைய மரணம்தான்.”

 

(5)

மணி மூன்று அடித்ததைக் கேட்டார் முதியவர். வீட்டில் எல்லோரும் உறக்கத்திலிருந்தனர். வெளியே சில்லிட்ட மரங்களின் இலையசைவுகளைத் தவிர வேறு ஓசை இல்லை. சத்தமில்லாமல் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து,  உள்ளே பாதுகாப்பாய் வைத்திருந்த, பதினைந்து வருடங்களாகத் திறக்கப்படாத அறைக்கதவின் சாவியை எடுத்துக்கொண்டார். மேலங்கியை அணிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

தோட்டத்தில் இருளும் குளிருமாய் இருந்தது. மழை வேறு பெய்துகொண்டிருந்தது. பலத்த குளிர்காற்று மரங்களை ஒரு நொடியும் ஓய்வாயிருக்க விடவில்லை. முதியவர் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாலும் தரையோ,  வெள்ளைச் சிலைகளோ, தோட்டத்து வீடோ, மரமோ எதுவும் புலனாகவில்லை. வழியில் நின்றுகொண்டு காவலாளியை அழைத்தார். பதில் இல்லை. மழைக்கும் காற்றுக்கும் அஞ்சி உள்ளே சமையற்கட்டிலோ, பசுமை வீட்டினுள்ளோ சென்று உறங்கியிருக்கவேண்டும்.

“என் திட்டத்தை நிறைவேற்றும் துணிவு மட்டும் எனக்கு இருந்துவிட்டால்,  சந்தேகத்துக்குரிய முதல் நபராக காவலாளிதான் இருப்பான்.” முதியவர் நினைத்தார்.

இருட்டிலேயே தட்டுத்தடுமாறி தோட்டத்து வீட்டின் வாயிலையும் படிகளையும் கடந்து வீட்டினுள் நுழைந்தார். குறுகிய நடைபாதையைக் கடந்து தீக்குச்சியைப் பற்றவைத்தார்.  வீட்டில் யாரும் இல்லை. மெத்தையில்லாத கட்டில் ஒன்றும் மூலையில் ஒரு இரும்பு அடுப்பும் இருந்தது. கைதியின் அறைக்கதவில் ஒட்டப்பட்டிருந்த முத்திரைகள் சேதமுறாது அப்படியே இருந்தன. தீக்குச்சி அணைந்துபோனதும் முதியவர் சிறு நடுக்கத்துடன் சன்னலின் வழியே உள்ளே பார்த்தார். கைதியின் அறையுள் மெழுகுவர்த்தி மங்கலாய் எரிந்துகொண்டிருந்தது. அவன் மேசையருகில் அமர்ந்திருந்தான். அங்கிருந்து பார்த்தபோது அவனுடைய முதுகும் தலைமுடியும் கைகளும்தான் தெரிந்தன. அவனுடைய மேசை, இரு சாய்வு நாற்காலிகள், மேசையருகிலிருந்த விரிப்பு என எங்கு பார்த்தாலும் திறந்த புத்தகங்கள் இறைந்துகிடந்தன.

ஐந்து நிமிடங்கள் கழிந்தன. கைதியிடம் ஒரு அசைவையும் காணோம். பதினைந்து வருட சிறை வாழ்க்கை அவனை ஆடாமல் அசையாமல் இருத்தக் கற்றுக்கொடுத்திருந்தது. வங்கியதிபர் சன்னலை விரலால் தட்டினார். பதிலுக்கு கைதியிடம் எந்த அசைவும் இல்லை. அவர் இப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் கதவிலிருந்த முத்திரைகளை அகற்றிவிட்டு சாவித்துவாரத்தில் சாவியை நுழைத்தார். துருப்பிடித்துப் போயிருந்த பூட்டு கரட்டென்ற சத்தத்துடன் திறந்தது. கதவு கிறீச்சிட்டுத் திறந்தது. சட்டென்று எழுந்துவரக்கூடிய காலடி ஓசையையும் திகைப்பின் கூச்சலையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர். மூன்று நிமிடங்கள் முழுதாய்க் கடந்த பின்னும் அறையில் முன்போலவே அமைதி தவழ்ந்துகொண்டிருந்தது. அவர் உள்ளே போகச் சித்தமானார்.

 

(6)

மேசையருகில் அசைவின்றி அமர்ந்திருந்தவனின் தோற்றம் இயல்பான மனிதர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது. எலும்புக்கூட்டின் மீது தசையை இழுத்துப் போர்த்தினாற்போன்ற உடலுடனும், பெண்களுடையதைப் போன்ற நீண்ட சுருண்ட தலைமயிருடனும் அடர்ந்த தாடியுடனும் காணப்பட்டான். முகம் மஞ்சள் நிறத்தில் மண்ணின் சாயை படிந்து கிடந்தது. கன்னங்கள் குழிவிழுந்தும், முதுகு நீண்டு குறுகியும் இருந்தன. தலைவைத்துப் படுத்திருந்த கைகள் குச்சி போல் மெலிந்து பார்க்கவே அச்சந்தருவதாய் இருந்தன. தலைமயிரில் நரையின் கீற்றுகள் ஏற்கனவே விழ ஆரம்பித்திருந்தன. ஒட்டியுலர்ந்து முதுமைத்தோற்றத்துடன் காணப்படும் அவனைப் பார்த்தால் அவன் வயது நாற்பதுதான் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள்.

அவன் தூங்கிக்கொண்டிருந்தான். குனிந்திருந்த அவன் தலைக்கு முன்னால் ஒரு காகிதத்தில் என்னவோ அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

“பாவப்பட்ட ஜென்மம்”  வங்கியதிபர் மனத்துக்குள் நினைத்துக்கொண்டார், “ அவன் உறக்கத்தில் இருக்கிறான், பெரும்பாலும் நாளை வரவிருக்கும் மில்லியன்களைப் பற்றி கனவு காண்பானாயிருக்கும். ஏற்கனவே அரை உயிராய் இருக்கும் இவனை அப்படியே தூக்கி, படுக்கையில் போட்டு ஒரு தலையணையை வைத்து லேசாக அழுத்தினாலே போதும், எவ்வளவு பெரிய நிபுணராலும் இது ஒரு கொலை என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் அதற்கு முன் இந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாம்.”

வங்கியதிபர் மேசை மேலிருந்த காகிதத்தை எடுத்து வாசிக்கலானார்.

“நாளை பன்னிரண்டு மணிக்கு நான் என் சுதந்திரத்தையும் இதர மனிதர்களோடு கலந்து வாழும் உரிமையையும் மீளப் பெறுவேன். ஆனால் இந்த அறையை விட்டு வெளியேறி சூரிய ஒளியைப் பார்க்கும்முன் உங்களிடம் சில வார்த்தைகள் சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன். கடவுளின் முன்னால் எப்படி தூய மனசாட்சியோடு சொல்வேனோ.. அது போலவே உங்களிடமும் இதைச் சொல்கிறேன். இந்த சுதந்திரம், வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் உங்கள் புத்தகங்கள் குறிப்பிடும் உலக நன்மைகள் அனைத்தையும் நான் துச்சமாக நினைக்கிறேன்.

பதினைந்து வருடங்களாக நான் உலக வாழ்க்கையை ஊன்றிப் படித்துவந்திருக்கிறேன். இத்தனை வருடங்களாக நான் உலகத்தையும் மனிதர்களையும் கண்ணால் பார்க்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் உங்கள் புத்தகங்கள் வாயிலாக நான் மணமுள்ள மதுரசத்தை அருந்தியிருக்கிறேன், பாடல்களைப் பாடியிருக்கிறேன், காடுபுகுந்து கலைமான்களையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடியிருக்கிறேன், பெண்களைக் காதலித்திருக்கிறேன், உங்கள் கவிஞர்கள் மற்றும் மேதைகளின் மந்திரத்தால் உருவாக்கப்பட்ட, பரிசுத்தமான மேகத்தைப் போன்ற அழகியர் இரவுகளில் என்னைச் சந்தித்தனர், என் காதில் அற்புதமான கதைகளை கிசுகிசுத்து என்னைக் கிறுகிறுக்க வைத்தனர். உங்கள் புத்தகங்கள் வாயிலாகவே நான் எல்பர்ஸ், மோன்ட் ப்ளாங்க் மலையுச்சிகளில் ஏறி நின்று அங்கிருந்து சூர்யோதயத்தைக் கண்டேன், அந்தியின் செம்பொன் கதிர்கள் வானம், கடல், மலையுச்சி யாவற்றையும் தழுவிநிற்பதைப் பார்த்தேன்.

என் தலைக்கு மேலே மின்னிய மின்னலையும் அது கருமுகில்களைக் கிழித்துக்கொண்டு போனதையும் அங்கிருந்து பார்த்தேன். அடர்வனத்தையும், நெடுவயல்களையும், ஆறுகளையும், ஏரிகளையும், நகரங்களையும் பார்த்தேன். கடல்மோகினிகளின் பாடல்களையும் இடையர்களின் குழலோசையையும் நான் கேட்டேன். கடவுளைப் பற்றி என்னோடு உரையாடப் பறந்து வந்த அழகிய சாத்தான்களின் சிறகுகளைத் தொட்டுப்பார்த்தேன். உங்கள் புத்தகங்களால் அதலபாதாளத்துள் அறிந்தே விழுந்தேன், பல அற்புதங்களை நிகழ்த்தினேன், நகரங்களை எரித்தேன், புதியப் புதிய மதங்களை உபதேசித்தேன், அனைத்து நாடுகளையும் வெற்றிகொண்டேன்.

 

(7)

உங்கள் புத்தகங்கள் எனக்கு ஞானம் புகட்டியிருக்கின்றன. இத்தனை வருடங்களாக உள்ளோடிக்கொண்டிருந்த ஓயாத சிந்தனைகள் யாவும் திரண்டு ஒரு திசைகாட்டியைப் போல என் மூளையில் பதிவாகியுள்ளன. உங்கள் யாவரையும் விட நானே அறிவாளி என்பதை நான் அறிவேன். உங்கள் புத்தகங்களையும், அறிவையும், இவ்வுலகின் ஆசிகளையும் கூட துச்சமாக நினைக்கிறேன். யாவும் பயனற்றவை, கணப்பொழுதில் மறைந்துவிடக்கூடியவை, பொய்யானவை, அற்பமானவை.. மொத்தத்தில் எல்லாமே கானல்நீரைப் போன்ற மாயை. நீங்கள் பெருமை மிக்கவராக, அறிவாளியாக, ஆரோக்கியமானவராக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மரணம் உங்களை ஒரு நொடியில் அழித்தொழித்துவிடும். உங்கள் வம்சம், வரலாறு, மேதைமை எல்லாவற்றையும் எரித்துவிடும் அல்லது மண்ணோடு மண்ணாய்ப் புதைத்துவிடும். 

நீங்கள் நியாயத்தின் பாதையை விடுத்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். உண்மைக்குப் பதிலாகப் பொய்யையும் அழகுக்குப் பதிலாக அகோரத்தையும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ஆப்பிள் மரங்களும் ஆரஞ்சு மரங்களும் பழங்களுக்குப் பதிலாகப் பல்லிகளையும் தவளைகளையும் காய்த்தால் நீங்கள் எப்படி ஆச்சரியப்படுவீர்களோ… ரோஜா மலர்களில் நறுமணத்துக்குப் பதிலாகக் குதிரையின் வியர்வை நாற்றமடித்தால் எப்படி ஆச்சரியப்படுவீர்களோ.. அப்படிதான் சொர்க்கத்துக்குப் பதிலாக இந்த பூமியை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து நானும் ஆச்சரியமடைகிறேன். உங்களைப் புரிந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை.

நீங்கள் பெரிதாக நினைக்கும் எல்லாவற்றையும் நான் வெறுக்கிறேன் என்பதை உங்களுக்கு நிரூபிக்கவேண்டி, ஒருகாலத்தில் சொர்க்கமாக நான் நினைத்த இரண்டு மில்லியன் பணத்தையும் வெறுத்து துறக்கிறேன். பணயப்பணத்தை நான் பெறுவதற்கான உரிமையிலிருந்து என்னை விடுவிக்கும்பொருட்டு உரிய காலம் முடிவதற்கு ஐந்து மணி நேரம் முன்னதாகவே நான் இங்கிருந்து வெளியேறி நம் ஒப்பந்தத்தை முறிக்கிறேன்.”

வங்கியதிபர் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மறுபடியும் மேசை மேல் வைத்தார். உறங்கிக்கொண்டிருக்கும் கைதியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சத்தமில்லாமல் விசும்பியபடியே அறையை விட்டு வெளியேறினார்.

இதுவரை எந்த சூழலிலும், பங்குச்சந்தையில் பேரிழப்பை எதிர்கொண்டபோது கூட அவர் தன்னை இவ்வளவு அவமானகரமாக எண்ணியதே இல்லை. வீட்டிற்குள் சென்று படுக்கையில் விழுந்தாலும் அவரது கண்ணீரும் உணர்வுப்பெருக்கும் அவரை எளிதில் உறங்கவிடவில்லை.

மறுநாள் காலை, காவலாளி வெளிறிய முகத்தோடு ஓடிவந்தான். கைதி சன்னல் வழியாகத் தப்பித்தோடிவிட்டதாகச் சொன்னான். வங்கியதிபர் தன் பணியாட்களுடன் தோட்டத்து அறைக்குச் சென்று கைதி தப்பிவிட்டதை உறுதிசெய்துகொண்டார். தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கும்பொருட்டு, பணத்தை மறுத்து கைதி எழுதிய கடிதத்தை எவரும் அறியாமல் எடுத்துவந்து தன் வீட்டின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டினார்.

 

மூலக்கதை – The bet

மூலக்கதை ஆசிரியர் – Anton Chekhov

தமிழாக்கம் – கீதா மதிவாணன்