ப்ளாக் மிரர் – நிஷாந்த்

Sign-in to Personalize your experience

நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்த டாக்குமெண்ட் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அமர்ந்துகொண்டோ, வானில் பறந்தபடியோ மாற்றியமைக்கும் வசதியுடையது. சுருக்கமாக, எனக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எங்கும் இருந்துகொண்டு மாற்றியமைத்து தனிப்பயனாக்கிக் (customize) கொள்ளலாம். முகப்புத்தகத்தில் எனக்கேற்றபடி என்னுடைய முகப்புத்தக உலகை அமைத்துக்கொள்ளலாம். அங்கு என்னுடைய உலகை நானே உருவாக்கியும் கட்டமைத்தும் சீரமைத்தும் கொள்கிறேன். அனைத்து நவீன செயலிகளும் சாதனங்களும் அழுத்தமாகப் பிரகடனப்படுத்துவது என்னவென்றால் உங்களுடைய தேவைகளுக்கேற்ப தனிப்பயனாக்கிக் கொள்ளும் வசதிகளை வழங்குகிறோம் என்பதைத்தான். அதாவது ஒரு பீட்சாவைப்போல. வசதிக்காக பீட்சாவை நவீனத்துவத்தின் படிமம் எனக்கொள்ளலாம். ஏனெனில், பீட்சாவின் டாப்பிங்ஸைப்போல நுகர்வோர் தங்களுடைய தன்னிலையை விருப்பப்படி customize  செய்துகொள்ளலாம்.

ரேடியோவில் பாடல்கள் தனிநபரின் விருப்பத்திற்கேற்ப ஒளிபரப்பப்

படுவதில்லை. ஏனெனில்,

அச்சாதனம் குறிப்பிட்ட தனிநபரின் தேவையைப் பூர்த்தி செய்யும்படியான வகையில் வடிவமைக்கப்படவில்லை. ரேடியோவிற்கு இணையான சமகால இடத்தில் இருப்பது ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகள். ரேடியோ,

ஒரு தனிநபரின் உடலிலிருந்து விலகியிருக்கும் சாதனமாகும். ஆனால், நவீன தொடர்புச்சாதனங்கள் உடலின் ஒரு பகுதியாகவும் உடலுறுப்புகளோடும் தங்கிவிடுகின்றன.

ஹெட் செட் பயன்பாட்டு, ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகள் தனிநபர் ஒருவரின் விருப்ப வெளியைப் பரந்துபட்டதாக்குகிறது. ஸ்பாட்டிஃபை விருப்பத்தேர்வுகளில் (favourites)

ஒருவர் சேகரித்திருக்கும் பாடல்கள் அத்தனிநபரைப் பற்றிய சில செய்திகளையும், அப்பாடல் தேர்வுகள் அந்நபரைப் பற்றிய குறிப்புகளையும் அளிக்கின்றன. தனிநபரின் தேவையைப் பூர்த்தி செய்யும்படியான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமையால் அச்செயலிகள்  தனிப்பயனாக்கியும் (customize) விருப்பத்திற்கேற்ப நெறிப்படுத்திக்கொள்ளவும் (personalize) பயனாளர்களை உந்துகின்றன.

ரேடியோ வழியே பாடல்கள் கேட்ட தலைமுறையிலிருந்து பெரிய தாவல் இது. விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்பவும் தனிப்பயனாக்கிக்கொள்ளவுமான வசதிகளைப் பெற்றிராத செயலிகளும் தொழில்நுட்பச் சாதனங்களும்

கடந்த காலத்தைச் சேர்ந்தவையாகிவிட்டன.

இன்னும் சொல்லப்போனால் ஹெட் செட் போன்ற சாதனம் நம் உடலின் ஒரு பகுதியாகவே மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. நவீனத் தொடர்புச் சாதனங்கள் நம் உடலோடு நெருக்கத்தையும் உடலை ஊடுருவிச் செல்வதையும் கோருகிறது. இன்றைய தனிநபரின் இருப்புவெளியானது தன்னுடைய உடல் மட்டத்திலேயே பெரும்பாலும் பூர்த்தியாகும்படிக்கு அமைந்துள்ளதால்

உடலிலிருந்து வித்தியாசப்படுத்திப் பார்க்கமுடியாத வகையில் தொழில்நுட்பச் சாதனங்கள் உள்ளன.

இன்று, ஸ்தூலமான கட்டுமானங்கள் இல்லாமலேயே பான்-ஆப்டிக்கான் (Pan opticon) செயல்பட முடியும். பெயரில் மொபைல் போன் மூலம் நம்முடைய செய்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. கூகிள், அமெசான், பேஸ்புக் போன்ற தனியார் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய தன்விவரக்குறிப்புகளைத் தயாரித்து வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் நமக்குச் செய்திகளையும் விளம்பரங்களையும் அளிக்கின்றன. இதனை ‘சேவை’ என்கிற போர்வையில் அவை மேற்கொள்கின்றன. இத்தகைய சேவையாற்றுவதற்கு அந்நிறுவனங்கள் நம்மைத் தொடர் கண்காணிப்பிற்குள்ளாக்குகின்றன.

இச்சேவைக்கு விலையாக நாம் தருவது நம்முடைய அந்தரங்க வெளியை. இணையத்தில் நம்முடைய ஒவ்வொரு அசைவும் பதிவாக்கப்பட்டு நடத்தைத் தரவுகள்(behavioral data)சேகரிக்கப்படுகின்றன.

நடத்தைத்தரவுகளே கூகிள், பேஸ்புக் போன்ற பெருநிறுவனங்களின் மூலதனமாகும்.

தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சியும் பெருக்கமும் தினசரிகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் பாதிப்புகளையும் குறித்து எக்காலத்திலும் பொதுப்புத்தியில் பதிவாகி வந்துள்ளது. ஆனால், உற்பத்தி முறையில் அதன் மாற்றங்களைக் கவனிப்பதிலிருந்து தொழில்நுட்பம் குறித்த நம்முடைய முன்வைப்புகள் அமைய வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தேறிய அளப்பரிய மாற்றங்களின் தொகுப்பைத்தான்  ‘தொழிற் புரட்சி’ என்கிறோம். இக்காலகட்டத்தில்

இயந்திரங்களின் உழைப்பு, உற்பத்தித் துறைகளில் மிகுந்தளவு பயன்பாட்டுக்குள்ளாக்கப்பட்டன.

இக்காலப்பகுதியில்

வரலாற்றிலேயே இல்லாத அளவு மனித உற்பத்தித் திறன் பெருகியது.

‘துல்லியமான அளவுகோல்களைக் கொண்டு அளந்து, தரப்படுத்தி ஒரே அளவில் இயந்திரங்களின் பாகங்களை ஒன்றுக்கொன்று பதிலீடு செய்யும் வகையில் (standardized parts) உற்பத்தி செய்வது ஆரம்பித்தது. இயந்திரங்களைத் தயாரிக்கவும், பழுதுபார்க்கவுமான இயந்திரங்களும் கருவிகளும் (machine tools) புழக்கத்திற்கு வந்தன.’ என்று இரண்டாம் தொழிற்புரட்சியைக் குறித்து எஸ்.நீலகண்டன் எழுதுகிறார்.

இதன் விளைவாக வேலைப் பகுப்பில் அனைத்து வேலைகளும் பகுதி பகுதியாகப்பட்டு ஒவ்வொரு உழைப்பாளியும் வேலையின் ஒரே பகுதியை மாறாமல் செய்யும் நெறிப்படுத்தப்பட்ட வேலைப்பகுப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியப்பாடுகளை முழுக்க பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பொருளுற்பத்தி முறையும் (modes of production) சமூக ஒருங்கிணைப்பு

(social organization) முறைகளும் அளப்பரிய மாற்றங்களைப் பெற்றது.

 

ப்ளாக் மிரர் காட்சிப்படுத்தும் சமூக ஒருங்கிணைப்பு  :

ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தன்னிலையிலிருந்து

சாதனைபுரிய வேண்டிய தன்னிலையாக (entrepreneurs of the self) வேண்டிய நிர்ப்பந்தங்களோடு  இருபத்தோராம் நூற்றாண்டு நம்மை வரவேற்கிறது. உபரி உற்பத்திக்கான உந்தமும் நெருக்கடியும் பண்பு மாற்றத்தை அடைந்துள்ளது.’நீ இதைச் செய்தாக வேண்டும்’ (should) என்கிற கட்டளையிலிருந்து ‘உன்னால் இதைச் செய்ய முடியும்’ (can) என்பதாக அதிகார அமைப்புகளின் கட்டளை மாற்றமடைந்துள்ளது. இம்மாற்றம் சாதனைமையச் சமூகத்தின் விளைவாய் இருப்பதாய் அடையாளங்காணலாம்.

வசதிக்காக சமூக ஒருங்கிணைப்பை நான்காகப் பிரிக்கலாம் :

* இறையாண்மைச் சமூகம் (Sovereign Society)

* ஒழுங்குமுறைச் சமூகம் ( Disciplinary Society)

*கட்டுப்பாட்டுச் சமூகம் (Control Society)

*சாதனைமையச் சமூகம் (Achievement Society)

[சாதனைமையச் சமூகம் எனும் கருத்தமைவை Byung-Chul Han கையாளும் வண்ணம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.]

இதுவரையில் தொழிற்சாலை முதலாளியம் (Industrial capitalism) திறன்மிக்க வகையில் செயல்படுவதற்குரிய சமூக ஒருங்கிணைப்பாக ஒழுங்குமுறை சமூகமே இருந்துவந்துள்ளது. ஏனெனில் உற்பத்தி சக்திகளுள் முதன்மையானது உடல். ஆகவே அது உடலை மையப்படுத்திய கட்டுப்பாட்டு முறை. இத்தகைய ஒழுங்குமுறை சமூகத்தின் கட்டுப்பாட்டு முறைமையையே உயிர் அரசியல் (biopolitics) என்கிறோம். இறையாண்மை சமூகத்தின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவானது. ஒழுங்குமுறை சமூகம் திறன்மிக்க உற்பத்தி சக்திகளைப் பயன்படுத்தும்வண்ணம் சமூகத்தை ஒருங்கிணைக்கிறது. டெய்லர் மற்றும் ஃபோர்டு உள்ளிட்டோர் வகுத்த வேலைப் பகுப்பு முறைகள் அதிகப்படியான பொருள் உற்பத்தியை முதலாளிகளுக்கு ஈட்டிக்கொடுத்தது. நாம் இன்று KFC அல்லது துரித உணவுக்கடைகளில் காணும் மேலாண்மைமுறைகள் டெய்லர் வகுத்ததே. முடிந்தளவு திறன்மிக்க வகையில் பணியாளர்களையும் பணிச்சூழலையும் ஒருங்கிணைப்பதுவே நோக்கம்.

சாதனைமையச் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக பங்கேற்புக் கட்டுமானம் சாதனையை பிரதானமாக முன்னிறுத்துகிறது – entrepreneurs of the self – சுயம் (Self) மற்றும் உளம்(psyche)அதனுடைய கட்டுப்பாட்டு மையம். தொழிலாளரின் அகநிலை ஆற்றலை (potential labour)முழுதும் சுரண்டக்கூடிய அளவு திறன்மிக்கது. அதற்காக உடல் அளவிலான சுரண்டல் நடைபெறுவதில்லை என அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சேவைத்துறையில் நிகழும் உழைப்புச் சுரண்டலை பிரச்சினைப்படுத்த உடல்மைய அடிப்படையில் பார்க்கையில் போதாமைகள் உள்ளதைக் காண்கிறோம். ஏனெனில், சேவைத்துறையில் பணிபுரிபவர்களின் அகநிலை ஆற்றலை (potential labor) நுண்மையாகப் பகுக்கும்படியான பணிச்சூழலை உண்டாக்கும் கருவிகள் உடலை மட்டுமே மையப்படுத்தாமல் உள நிலை இயக்குசக்தியை மையப்படுத்துபவையாக உள்ளன. விழிப்புணர்வு யோகா, பெளத்தம், பாசிட்டிவிட்டி உள்ளிட்டவைகளின் திடீர் பிரபலமாக்கலுக்கு வழிகோலியது அத்தகைய பணிச்சூழல் தான். ஐ.டியில் பணிபுரிபவர்களின் சாய் பாபா மோகத்திற்கு வேறென்ன காரணமிருக்க முடியும். பிறர் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை இல்லாமலேயே வேலையாட்களிடமிருந்து அதிக உற்பத்தியை ஈட்டுவது இவ்வொருங்கிணைப்பில் சாத்தியமாகிறது. Auto-exploitation is more efficient than allo-exploitation.இதன் உச்சபட்ச சாத்தியத்தை work from home-இல் காண்கிறோம். இவ்வகைப்பட்ட சமூக ஒருங்கிணைப்பு தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் வளர்ச்சியினால் சாத்தியப்பட்டிருக்கிறது.

ப்ளாக் மிரர் காட்சிப்படுத்துவதுபோல,

நவதாராளவாதத்தின் நடைமுறையானது,

உள ரீதியான ஒடுக்குமுறையையும் (psychopolitics) பிரதானமாகக் கொண்டு இயங்குவதால்

உடல்மையப்பட்ட

ஒழுங்குமுறைச் சமூகத்தின் ஒடுக்குமுறை கருவிகளிலிருந்து இது வித்தியாசமானது. புறவய வன்முறையிலிருந்து

முற்றிலுமான நகர்வை அல்லது post-biopolitics எனும் இடத்தை சமகால சுரண்டல்முறை எட்டியுள்ளதா என்பது விவாதப்பொருள் அல்ல. ஏனெனில், உள மற்றும் உடல் ஒடுக்குமுறை இயக்கிகள் ஒன்றோடொன்று இணைந்து செயல்பாட்டில் நிலைத்திருப்பன.

நிலப்பிரபுத்துவ சமூகங்கள் நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்த போதும் நிலப்பிரபுத்துவக் கூறுகள் நிலைத்திருப்பதைப் பார்க்கிறோமல்லவா ! பொருளாதார இயங்குதளம் பரிணாமமடையும் பட்சத்தில் ஒடுக்குமுறையின் இயக்கமும் (dynamics) மாற்றம் பெறுகின்றன. மூன்றாம் உலக நாடான இந்தியாவில்கூட இத்தகைய நகர்வையொட்டி பேசுவதற்கான அடித்தளமுண்டு. தொழில் உற்பத்தியிலிருந்து சேவைத்துறையை நோக்கி நாடு மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதன் அடிப்படையில் இதை முன்வைக்கிறோம். இந்தியா

1990-களில் சந்தை தாராளவாத பொருளாதார கொள்கைகளை நோக்கி நகர்ந்துவிட்டது. உலகம் முழுவதும்

சமூக வலைத்தள மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் பரவலாக்கம் உள்ளிட்டவற்றைக் கவனிப்போமானால் இதைப் பொருட்படுத்தி ஆக வேண்டியதன் அவசியம் புலப்படும். ப்ளாக் மிரரின் Fifteen Million Merits, Nosedive முதலான எபிசோடுகளில் இம்மாற்றம் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதெனினும் பிற எபிசோடுகளிலும் உள்ளமைவாகக் கையாளப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளாக் மிரர்ரில் நவீன அரசுகள் குறித்தோ சமகால அரசுகளில் இறையாண்மையின் பரிமாணம் குறித்தோ சொல்லப்படவில்லை. ஆகவே அதன் காட்சிப்படுத்தல்களின் பல போதாமைகள் இருக்கவே செய்கின்றன. ப்ளாக் மிரர்ரின் கருப்பொருள்கள் தன்னளவில் கொண்டுள்ள போதாமைகளையொட்டி இங்கு பேசவில்லை. அவற்றின் கருப்பொருள்களைச் சில கோட்பாடுகளைக் கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன்…

 

Be Right Back :

கணவருடைய(ஆஷ்) இறுதிச் சடங்கில் மார்த்தாவிற்கு ஒரு கம்பெனி பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. இறந்த நபரினுடைய செல்பேசி; அவருடைய குரல் ; புகைப்படங்கள்; பாவனைகள்; சாட் ஹிஸ்டரி என இணையத்தில் பதிவான ஒரு நபரின் மொத்த தகவல்களையும் வாங்கிக்கொள்ளும் நிறுவனம் அதனைக்கொண்டு அந்நபரையே மீட்டுருவாக்கித் தரும் சேவையைச்

செய்து வருகிறது. உடல், சருமம் முதற்கொண்டு பிரதியெடுத்து அசலான சைபார்க் (cyborg) வடிவில் அந்நபர்களின் பிரதியை டோர் டெலிவரி செய்கிறது அந்நிறுவனம். அவ்வாறே மார்த்தாவிற்கு இறந்துபோன தன்னுடைய கணவர் ஆஷ் சைபார்க்காகக் கிடைக்கிறார்.

(சைபார்க் என்பது மனித உடலும் தொழில்நுட்ப உடலுமான கலப்புயிரியைக் குறிப்பதாகும்.)

செயற்கை அறிவுநுட்பங்களால் (Artificial Intelligence) மனிதர்களுக்கிடையேயான கலாச்சாரங்களுக்கிடையேயான ஜோக்குகளை செயலாக்க (process) முடியாது. ஏனெனில் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவை சூழமைவு சார்ந்தவையென்பதால் அவற்றை குறிப்படுத்தி (encode) அதற்கு செயலாற்றக்கூடிய விதிக்கோவைகளை உருவாக்க முடியாது. அதனால்தான், ஆஷ் மற்றும் மார்த்தாவிற்கிடையேயான ஜோக்குகள் சைபார்க்கிற்கு தெரிவதில்லை. சில நேரம் அது ஆஷ்ஷின் நடத்தைகளுக்கு மாறாகவும் இயங்குவதால் நிஜ ஆஷ்ஷைக்காட்டிலும் சைபார்க் சிறப்புடையதாக இருந்தாலும் மார்த்தாவிற்கு குழப்பமும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது.

ஆஷ்ஷின் சமூக வலைத்தள தரவுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டமையால் அந்த சைபார்க் ஆஷ்ஷின் முழுநிறை (Ideal) வடிவாய்

உள்ளது. ஆஷ்ஷின் முழுநிறைவான பதிப்பு (version) மார்த்தாவிற்குப் போதவில்லை. ஏனெனில், அந்த சைபார்க்கானது ஆஷ்ஷின் சமூக வலைத்தளத் தரவுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் நம்முடைய அடையாளக்கட்டமைப்பில், முழுநிறை வடிவை அடைய நாம் நம்முடைய வாழ்க்கையின் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே துண்டாக்கித் தொகுத்து வழங்க

முயன்றுகொண்டிருப்பதால் ஏகப்பட்ட விடுபடல்களுண்டு. மேலும், அந்த சைபார்க்கிற்கென தனிப்பட்ட விருப்புகள், உந்தல்கள், ஆசைகள் என எதுவுமில்லை. மார்த்தாவின் விருப்புகளே அதன் விருப்புகள்.

அதற்கென்று தனியொரு ‘அகம்’ இல்லை – செயலகம் (processor) மட்டுமே அதற்குண்டு. மார்த்தா-சைபார்க் உறவில் சிக்கலேற்படுவது, மனிதர்களுக்கேயுரிய சில தன்மைகளையும் குணங்களையும் அந்த சைபார்க் பெற்றிருக்கவில்லை என்பதால்தான்.

நன்கு அறிந்த, பழக்கப்பட்ட நம் வீட்டின் உள்ளிருந்து பரிச்சயப்படாத குரல் ஒன்று  ஒலிக்கிறது. அக்குரல் நம்முடைய வீட்டிலிருந்தே நம்மை அந்நியப்படுத்துவதால் அசௌகரியத்தை உணர்கிறோம் அல்லது பயங்கொள்கிறோம்.

மார்த்தாவிற்கு சைபார்க்கின் இருப்பு மேற்சொன்ன உணர்வுநிலையையே ஏற்படுத்துகிறது. நன்கு பழக்கப்பட்ட தன்னுடைய கணவருடைய உடல், சருமம், குரல் முதலானவையே அந்நியப்படுத்தும் உணர்வை மார்த்தாவிற்கு ஏற்படுத்துவதால் சைபார்க்குடனான அவளுடைய உறவு அசௌகரியத்தையும் அளிக்கிறது. அந்த சைபார்க் வெறுமனே ஒரு பிரதி – வாழ்தலும் இருத்தலுமற்றதால், சாவும் அற்ற பிரதி.

போலவே சைபார்க், மார்த்தாவின் உளநிலையைத் தேக்கமடையச் செய்து இறந்த ஒரு ஆள் மீதே ஒன்றிப்பாகி தேங்கி (fixated) நிற்கும்படிக்கும், பிற ஆரோக்கியமான சமூக உறவுகளைப் புறந்தள்ளும் இடத்திற்கும் கொண்டு செல்கிறது. இறந்த, அந்த குறிப்பிட்ட நபரைத்தாண்டி மார்த்தாவால் யோசிக்கவும் உறவாடவும் முடியாது போனது துக்கம் அனுசரித்தல் (mourning) எனும் செயல்பாடு தடைபட்டுப்போனமையால் நிகழ்கிறது.

ஒரு நபரின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் பாங்கை உருவாக்கித் தரும் செயல்முறையாக இழவு வீட்டில் துக்க அனுசரிப்புச்

சடங்குகள் நடைபெறுகின்றன.

இறந்த நபரின் நெருங்கியவர்கள் தங்களுடைய உளத்தை இறந்தவரோடு ஒன்றித்து நிலைப்படுத்தி வைத்திருக்காமலிருப்பதற்கு இச்சடங்கு முக்கிய பங்காற்றும். ஒரு நபர் நம்மை விட்டுப் போய்விட்டார் என்பதைச் சுற்றத்தார் அனைவரும் உறுதிசெய்யும் சடங்கு அது. வரலாறு நெடுக உள நலத்தின் மேம்பாட்டிற்குத் துக்க அனுசரிப்பு முக்கியமான செயலாக விளங்கி வந்திருக்கிறது. தனியொரு ஆளாக இச்செயல் மேற்கொள்ளப்படுவதைவிடவும் சமூகத்தோடு சேர்ந்து துக்க அனுசரிப்பு நிகழும்போதுதான் மேலும் ஆரோக்கியமான உளநிலையை ஏற்படுத்த வல்லது இச்சடங்கு. சுருக்கமாக, ஒரு நபர் அல்லது பொருளின் இழப்பை ஏற்றுக்கொள்வதற்காகத் துக்கம் அனுசரித்தல் அவசியம் எனலாம்.

நவீன தகவல் சேமிப்பு வசதிகளானது நினைவேக்கத்தைத் தூண்டியபடியே இருப்பதான உருவகமாக இந்த எபிசோட்டில் உள்ள சைபார்க்கை புரிந்து கொள்ளவும் இடமுண்டு. எதுவுமே அழியாத்தன்மையைப் பெற்றுள்ளதான எண்ணத்தைத் தோற்றுவிப்பதின் வழியே எது தொலைந்தாலும் மீட்டுருவாக்கம் செய்துகொள்ளலாம் எனும் சாத்தியத்தை அளித்தபடியிருக்கிறது நவீனத் தொழில்நுட்ப அறிவு. மார்த்தாவின் தன்னிலையில் தான் நாம் இருக்கிறோம். மார்த்தாவிற்கு கணவர் என்றால் நமக்கு வேறு எதாவதொன்றின் மீள் வருகை தேவையாய் இருக்கலாம். அத்தேவையைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நவீன அறிவுத்துறை வளர்ச்சியானது

இறப்பு, அழிவு சார்ந்த அனுபவங்களையும் கற்பிதங்களையும் மாற்றியமைத்துள்ளதென்பதை

மறுக்க முடியாது. என்னுடைய சாட் ஹிஸ்டரி, நான் வெவ்வேறு மனிதர்களோடு உரையாடும் முறைமைகள், என்னுடைய பாவனைகள், கூகிள் தேடல் தரவுகள் முதலானவை என்னுடைய சுயத்தையும், தனித்துவமான நடவடிக்கைகளையும் குறிக்கும் விஷயங்கள். இவற்றைச் சுவீகரித்துக்கொள்பவர் ஒருவிதத்தில் என்னுடைய சுயத்தையும் சுவீகரிப்பவராவார். ஆனால், சைபார்க்குடன் மார்த்தா உடலுறவு கொள்ள முற்படும்போது சைபார்க்கைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார் : “You’re just a few ripples of you.There’s no history in you.You’re just a performance of stuff that he performed without thinking, and it’s not enough.”

தரவுகள் மட்டுமே ஒரு மனிதரை மீளுருவாக்கம் செய்யப் போதுமானதல்ல எனும் தொனியைத் தருகிறது இவ்வசனம். இங்கு மார்த்தா குறிப்பிடும் ‘history’ என்பது வாழ்வனுபவம். அதனை விதிக்கோவைகளாக(codes) மாற்றி சைபார்க்கினுள் செலுத்த முடியாது.

உதாரணமாக, மனநிலையை (moods)

விதிக்கோவையாக்க இயலாது. நாம் ஒரு நிகழ்வில் பங்கேற்கிறோமென்றால் குறிப்பிட்ட மனநிலையோடுதான் அங்கு இருக்கிறோம். அம்மனநிலை, நிகழ்வை குறித்தான ஞாபகப் பதிவில் முக்கியப் பங்காற்றும். ஆனால், புதிய ஞாபகங்களை சைபார்க்கினால் புறவயமாகவே சேமித்துக்கொள்ள முடியும். அதன் சேமிப்பு கிடங்கிற்கும் வாழ்வனுபவத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. இத்தகைய சிறிய முக்கியத்துவம் வாய்ந்த நுட்பங்களே நம்மை சைபார்க்லிருந்து வித்தியாசப்படுத்துகின்றன.

நடத்தைகளையும், ஞாபகங்களையும் மனித நிலைமையிலிருந்து தனிப்படுத்தி தரவுகளாக்குவதின் விளைவாய் எபிசோடின் இறுதியில், மார்த்தாவினுடைய வீட்டில் மனிதர்கள் அண்டாத பகுதியான மேற்கூரையில் கிடத்தப்படுகிறது அந்த சைபார்க்.

 

Nosedive :

அனைத்து தொழிற்துறைகளிலும் முன்னேற்றத்தைக் கணக்கிட

கணக்காய்வுகள் (auditing) வழக்கில் உள்ளன. வேலையாட்களின் செயல்திறனும் இதன்மூலம் ஒப்பிடப்படுகின்றது. நேரடியாக, அவர்களின் உழைப்பும் வெளியீடுகளும் (outcomes) ஒப்பிடப்படுவதற்குப் பதில் அவர்களுடைய உழைப்பையும் வெளியீடுகளின் கணக்காய்வுகளையும் ஒப்பிடுவதன் அடிப்படையிலேயே அவர்களின் செயல்திறன் மதிப்பிடப்படுகிறது. கணக்காய்வுகள் தனியர்களை வார்ப்படத்தில் (matrix) பொருத்துவதன்மூலம் அடுக்கமைவொன்றை (strata) ஏற்படுத்தி அவர்களை மதிப்பிட்டு

அடையாளம் காண்கின்றன.

இப்பண்பை

‘மார்கெட் ஸ்டாலினிஸம் ‘என்று மார்க் ஃபிஷர் குறிப்பிடுவார். ஏனென்றால்,

ஸ்டாலினுடைய ஆட்சியின் போது உண்மையான முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தருவதை விடவும் முன்னேற்றத்தை ‘பறைசாற்றிய’ செயல்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. நுகர்வு மற்றும் நவ முதலாளியம் இப்பண்பையொத்தவையாகவே இருக்கின்றன. எனவே, பியூரோகிரஸியைக் காட்டிலும் திறன்மிக்க நிர்வாகத்திறனும் மேலாண்மை திறனும் வாய்ந்ததாக பிரகடனப்படுத்திக்கொள்ளும்

நவ-தாராளவாத இயங்கு சக்திகள் உண்மையிலேயே பியூரோகிரஸியை போலவே பயனுறுதியற்ற முகாமைத்துவமாகவே இருக்கிறது.

இணைய சேவைகளில் இம்முறை வழக்கில் உள்ள விதத்தைக் காண்போம். முன்னேற்றத்தைக் ‘குறிக்க’ பயன்படும் சாதனங்களுள் ஒன்றாக ரேட்டிங்ஸ் (ratings) வளர்ந்து வந்துள்ளது. இணைய சேவைகள் அனைத்தின் தரமும் இதன் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

இன்றுள்ள ஸ்விக்கி பணியாளர்களின் உழைப்பினுடைய பதிலியனாக ரேட்டிங்ஸ் உள்ளது. ரேட்டிங்ஸின் அடிப்படையில் அமெசான், ஸொமேட்டோ உள்ளிட்ட இணையதள சேவைப் பக்கங்கள் நுகர்வுப் பொருட்களைத்

தரவரிசைப் படுத்துவதையும் பார்க்க முடிகிறது. ஒரு பொருளின் மதிப்பை ரேட்டிங்ஸ் பிரதிபலிக்கிறதானதொரு தோற்றம் இதன்மூலம் கடத்தப்படுகிறது.

ஒழுங்குமுறைச் சமூகம் கடைப்பிடிப்பதுபோல தனிநபர்களின் மீது அதிகாரம் வெளியிலிருந்து செயல்படுத்தப்படாமல்

இன்றைய அதிகார இயந்திரங்கள் தன்னிலைகளைத் தகவல் தொடர்பு வெளியின் வார்ப்படத்தில் (matrix) பொருத்துகின்றன. மலிந்துவரும்

ஒழுங்குமுறை சமூகக் கூறுகளும், அதிகரித்துவரும்

கட்டுப்பாட்டுச் சமூகக் கூறுகளும் உடனுறைகின்றன. சாதனைமையச் சமூகத்தில்

கட்டுப்பாடு அடக்குமுறையால் வருவதன்று அது

இயைபினால் வருவது. எனவே, பிடித்தமான பாடகருக்கு ஓட்டுப்போடச் சொல்லி கட்டுப்பாட்டுக் கருவிகள் பார்வையாளர்களை வரவேற்று அவர்களுக்குச்

சுதந்திரமான தேர்வை அளிக்கின்றன.

பிக் பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மரபான மையப்படுத்தப்பட்ட அதிகார ஒழுங்காக அல்லாமல் பார்வையாளர்களின் விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கும் விசையை (force) அளித்து நிறைவைத் தரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

மக்களை நல்வழிப்படுத்தும், படுத்துவதை நோக்கமாகக்கொண்டு சீனாவில் ‘சோஷியல் கிரெடிட்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.”நல்லவை” என மேலாதிக்கத்திலிருப்போரால்

அங்கீகரிக்கப்பட்ட நடத்தைகளைப் பின்பற்றுவோருக்கு ஊக்கமாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அதற்குட்படாத நடத்தைகளை மேற்கொள்பவர்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு அதிகப்படியான நடவடிக்கையாக அவர்கள் ‘ப்ளாக் லிஸ்ட்’ செய்யப்படுவர். ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருப்பவரோடு நண்பராக இருப்பவர்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படுமென்பதால் அவருடைய நட்பு வட்டம் குறைந்துகொண்டேயிருக்கும்.

அவர்கள் குறிப்பிட்ட சமூக நடவடிக்கைகளிலிருந்தும் நீக்கப்படுவர். பொருளாதாரச் செயல்பாடுகளும் சமூகப் பங்கேற்பு வெளிகளும் அவர்களுக்கு மறுக்கப்படும்.

மனிதர்களின் தன்னியல்பும் நடத்தைகளும் கட்டுப்பாட்டிற்குரிய அலகாக(unit) மாற்றம் பெற்றுள்ளதையே இது உணர்த்துகிறது.

இச்செயல்பாட்டின் குறிக்கோள் என்பது மக்களுடைய நடத்தைகளைக்  கட்டுப்பாட்டிற்குள் வைத்து ‘நல்ல’ குடிமக்களாக அவர்களை உருவாக்குவதாகும். Seasame Credit நிறுவனத்தின் குறிக்கோளென அந்நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் கூறும்போது “சமூகத்திலுள்ள ‘கெட்ட’ நபர்கள் செல்வதற்கென்று ஒரு இடமும் இருக்காது ; அதேசமயம் ‘நல்ல’ மக்கள் எவ்விதத் தடையுமின்றி எங்கும் செல்லும் சுதந்திரத்தை எங்களுடைய நிறுவனம் உறுதிப்படுத்தும்.” என்கிறார்.

மதிப்பிட்டதன் மூலமும், வரிசைப்படுத்துவதன் மூலமும், வகைப்படுத்துவதன் மூலமும் மனிதர்களை ஒழுங்கிற்கு உட்படுத்த முடியும். சாதி, வர்க்கம், நிறம் உள்ளிட்டவை மனிதர்களைப் படிநிலைக்கு உட்படுத்தி சமூக உறவுகளில் அவர்களின் இடத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வருகிறது. அதுபோல, Nosedive-இல் நாம் பார்க்கும் சமூக ஒருங்கிணைப்பில் ரேட்டிங்ஸ் தான் படிநிலையில் ஒரு மனிதரின் இடத்தைத் தீர்மானிக்கும் பொறியாகும். அங்கு சாதனைமைய ஒருங்கிணைப்பின் விளைவாய் தனியர்களை வரிசைப்படுத்த ரேட்டிங்ஸ், சோஷியல் கிரெடிட் உள்ளிட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சோஷியல் பாயிண்ட்ஸை போன்றே கிரெடிட்ஸை மையப்படுத்திய சமூகமொன்றை லேசி பவுண்ட் எனும் கதாப்பாத்திரத்தின் வழியே Nosedive-இல் காண்கிறோம். குடிமக்கள் என்பவர்கள் அங்கு அனைவரும் ரேட்டிங் செய்பவர்கள், அதேபோல அவர்களும் பிறரால் ரேட் செய்யப்படுபவர்கள். இவ்விரு செயல்பாடுகளில் பங்கெடுப்பதால் மட்டுமே குடிமக்களாகின்றனர்.

பூஜ்ஜியத்திலிருந்து ஐந்து வரை ஒருவருக்கு ரேட்டிங் அளிக்கலாம். 4.2 ரேட்டிங் உள்ள லேசி மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் பல வசதிவாய்ப்புகளைப் பெறுபவராக வாழ்கிறார். அவளுக்கு உடைகள், வீடு, கார் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு முன்நிபந்தனையாக இருப்பது ‘ரேட்டிங்’ தானே தவிர பணமல்ல.

லேசி தன்னுடைய விருப்பப்பட்ட வீட்டை வாங்குவதற்கு முன்நிபந்தனை என்னவென்றால் அவர் 4.5 ரேட்டிங் உடையவராக இருக்க வேண்டும். எனவே, சோஷியல் பாயிண்ட்ஸை அதிகரிக்க சமூக படிநிலையில் (ரேட்டிங்கள் வாரியாக) அதிக ரேட்டிங் கொண்டுள்ள தன்னுடைய சிறு வயது நண்பரான நவோமியின் (4.7 ரேட்டிங்) கல்யாணத்திற்கு விருந்தினராக வேண்டுமென்று முயல்கிறார் லேசி. மிகவும் சந்தோஷமாக நவோமியும் லேசியை கல்யாணத்திற்கு அழைக்கிறார். அதிக ரேட்டிங் உடையோருடனான அணுக்கமும் ரேட்டிங்ஸை அதிகரிக்குமென்பதாலேயே லேசி இதை நோக்கிச் செல்கிறார்.

கல்யாணத்திற்குப் போகும் வழியில் லேசி கதாபாத்திரம் சந்திக்கும் இடர்கள் இத்தகைய சோஷியல் பாயிண்ட்ஸ் முறையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை உணர்த்துகின்றன. உதாரணமாக, ரேட்டிங்ஸ் குறைவாக இருப்பதால் விமானத்தில் பயணிக்கவும்

வேகமாகச் செல்லக்கூடிய தரமான காரை வாடகைக்குப் பெறவும் லேசிக்கு

அனுமதி வழங்கப்படுவதில்லை.

லேசியின் ரேட்டிங் 4-க்கும் குறைவாக இருப்பதால் நவோமி, லேசியை கல்யாணத்திற்கு வர வேண்டாமென்கிறாள். இவ்வளவு குறைவான ரேட்டிங்கை வைத்துக்கொண்டு கல்யாணத்திற்கு வந்தால் என்னுடைய ரேட்டிங் பாதிக்குமென்று காரணம் சொல்கிறார்.

லேசி கதாபாத்திரம்

பலவிதமான சிரிப்புகளை

கண்ணாடி முன்பு நின்றுகொண்டு

முயற்சித்துக்கொண்டிருக்கும்  ஆரம்பக்காட்சியிலேயே தன்னை எவ்வாறு ‘வெளிக்காட்ட’ வேண்டுமென்கிற பிரக்ஞை தொடர்ந்து அச்சமூகத்தில் பங்கேற்பவர்களுக்கு இருந்துகொண்டேயிருக்கும் என்பது கடத்தப்படுகிறது. ஏனெனில் Nosedive-வில் நாம் காணும் சமூகத்தில் சுயம் என்பது விளம்பரப்பலகைக்கு ஒப்பான இடத்திலுள்ளது. இன்ஸ்டாகிராமில் influencers போல

அங்குள்ளவர்கள் தங்களையே ஒரு விலாசமாக்க (brand) முயல்கின்றனர்.

அச்சமூகத்தில் பணம் ஒருவருடைய சமூக மதிப்பையும் குணத்தையும் குறிப்பதாயில்லை.

கண்ணாடி முன்பு செய்து பழகிய சிரிப்பை காஃபி வழங்கும் பணியாளரிடம், பரிமாறியதற்காய் இலவசமாக வழங்கப்பட்ட சிரிக்கும் முகமுடைய வட்ட வடிவ பிஸ்கட்டை  கடித்துவிட்டு பாதியைத் துப்பி விடுகிறார் லேசி. அந்த பிஸ்கட்டின் சுவை அவளுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் “Brushed Suede /w cookie.Heaven !” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார். அவளுக்குப் பிறர் தன்னை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது. இச்செயல்பாடு லேசியை சார்ந்த ஒன்றாக அல்லாமல், பிறரின் நோக்கு சார்ந்ததாக உள்ளது – அதாவது, லேசி எவ்வாறு அந்த பிஸ்கட்டின் சுவையை உணர்கிறார் என்பதற்குப் பிறர் ஆற்றும் வினைகளை(லைக்ஸ், கமெண்ட்ஸ்) மையமிட்டதான செயல்பாடு எனலாம். லேசிக்கு அவளுடைய தன்னிலை உணர்வோ, இருப்போ முக்கியமற்று ,தன்னையே பிறர் நோக்குதலுக்கான பொருளாக (object for Others gaze) மாற்றிக்கொள்கிறார். மனித தன்னிலை பிறரின் நோக்குதலுக்கான பொருளாகத் தன்னை தொடர்ந்து முன்வைப்பது உளசமநிலையையும், சுயத்தையும்

முற்றாக அழிப்பதேயாகும். ஏனெனில், உள்வயப்படுத்தப்பட்ட பிறரின் நோக்கு (gaze of the Other)

நம்முடைய இயல்புகளையும் நடத்தைகளையும் செயல்களையும் பாதிக்கக்கூடியது.

குறைவான ரேட்டிங் உள்ள நபரைப் பார்த்தால் அவரின் மேல் சந்தேகம் கொண்டு காரணமேயின்றி குறைவான ரேட்டிங்ஸை வழங்குகின்றனர். ஏனெனில்,

Nosedive-இன் சமூகக் கட்டுமானம் ‘சமூகம் தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக்கொள்ளும்’ எனும் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருப்பதாகும்.

இத்தகைய சமூகத்தின் எதிர்மறை விளைவுகளையும், மனிதர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மேற்சொன்ன இயங்குமுறைகளையும், மனிதத்தன்மையின் மீதான வன்முறையைக் கட்டவிழ்க்கும் முறைகளென்றே அடையாளப்படுத்த வேண்டும் என்கிறது Nosedive. அத்தகைய சமூகத்தில்

சுதந்திரமான வெளியென்பது சிறை ஒன்றுதான் என்பதையே எபிசோடின் முடிவில் காண்கிறோம்.

 

The Waldo Moment :

பிம்பங்கள் ஏமாற்றக்கூடியவை மற்றும் அவை ‘சாரம்’ அற்றவை என்று பிளாட்டோ காலந்தொட்டே அதனை ஒட்டிய தத்துவ விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

இன்று அவ்விவாத எல்லை விரிவாக்கப்பட்டு, விவாதிப்பதற்குச் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.

பிம்பங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். பொருள்வய உலகில் அவை சுட்டும் பொருளையொட்டி ஒவ்வொன்றின் அடையாளமும் அமைகிறது. ஒன்று யதார்த்தத்தை இருப்பது போலவே அதன் இயல்பு நிலையைப் பிரதியெடுக்கிறது. புகைப்படத்தையும் அது சுட்டும் குறிப்பீட்டையும் (signified) பார்வையாளர்களால் வித்தியாசப்படுத்த முடியும். நம்மை நாம் கண்ணாடியில் பார்ப்பதுபோல.

இரண்டாவது வகை பிம்ப உருவாக்கத்தில் பிரதிநிதித்துவப் பண்பு இருந்தாலும், குறிப்பானை இருப்பது போலவே அது வெளிக்காட்டுவதில்லை. யதார்த்தத்தைக் கலப்படம் செய்து அளிக்கிறது. உதாரணமாக இன்ஸ்டாகிராம் filter. அல்லது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம். முதல் வகை, குறிப்பானை ‘இருப்பதுபோல’ தருகிறது. இரண்டாவது வகை சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது என்றாலும், இரண்டிற்கும் பௌதிக உலகில் ‘குறிப்பான்'(signified) இருக்கின்றது.

உயர் மெய்மை (hyper-real) பிம்பங்களை விளம்பர படங்களில் பார்க்க முடியும்.அவை பார்வையாளர்களுக்கு மயக்கத்தை அளிக்கின்றன. தங்களுடைய தேவைகளுக்காக, சேவை செய்வதற்காக சமூகம் இயங்குகிறது என்கிற மாயையை அது உருவாக்குகிறது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல. இவ்வகை பிம்பங்கள் ஓரளவு நிஜ உலக பருப்பொருட்களைக் கொண்டிருந்தாலும் அதைக்கொண்டு பார்வையாளர்களை வெல்லவே எண்ணுகின்றன.

நான்காவது வகை, குறிப்பான் என்கிற மையத்தையே தகர்க்கிறது. இதில் அந்த பிம்பம் தான் குறிப்பானாகவும் செயல்படுகிறது.

பௌதீக உலகில், அது குறிப்பது என எதுவுமில்லை, உள்வயபடுத்தி தன்னையே அடையாளப்படுத்திக்கொள்கிறது.இந்த நான்காவது வகை பிம்பங்களை போத்திலார்ட் கூறும் முறையைக் காண்போம். இவ்வகை பிம்பங்களுக்கு வைரல் (viral) மற்றும் பின்னம் (fractal) எனும் இருதன்மைகள் உண்டு என்கிறார்.

ஒட்டுவார் ஒட்டி போலப் பரவுகிறது என்பதால் வைரல். (வைரலான பாடல், வைரலான புகைப்படம் எனும் போது வைரஸைப் போல ‘பரவுகிறது’ என்று அர்த்தமாகிறது.)

இரண்டாவது தன்மை பின்னம். ஏனென்று கேட்டால் அது தன்னையே பெருக்கிக்கொள்கிறது. அதன் பெருக்கத்திற்கு எல்லையில்லை. கட்டற்று விரிந்துகொண்டேயிருக்கும். மூலப்பிரதிக்கும் (original), இரண்டாம் நிலை பிரதிக்குமான வித்தியாசம் இங்கு இல்லை. பின்னத்தின் (fractal) பகுதி ஒவ்வொன்றும் பிரதியின் பிரதி. சமீபத்தில் என்னுடைய கல்லூரியில் PUBG Canteen எனும் உணவகம் திறக்கப்பட்டது. பெயர்ப் பலகைகளும், விளம்பர அட்டைகளும் PUBG விளையாட்டில் வரும் சித்தரிப்புகளாக நிறைந்திருந்தன. அவை பௌதிக உலகிலுள்ள எந்த பொருளையும் தாங்கி நிற்கவில்லை. அதன் விளம்பரப் பலகையிலுள்ள படங்கள் தங்களையே தான் குறித்துக்கொள்கின்றன.

இன்று ஒருவரால் உலகத்தில் ஸ்தூலமாக இல்லாத பொருளை பணம் கொடுத்து வாங்க முடியும். மொபைல் விளையாட்டுகளில் எழுபது ரூபாய் கொடுத்து விர்ச்சுவல் இருப்பை மட்டுமே உடைய முப்பது crystal-களை வாங்கலாம். குறிப்பிட்ட விளையாட்டு உலகில் மட்டுமே அதற்குப் பயன் உண்டு.

30 Crystals – Rs 70 என்றால்

இந்த crystal-களின் மதிப்பு எவ்வாறு உருவாகிறது ? அல்லது இந்த crystal-கள் மனிதர்களின் எந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன ?

மதிப்பு (value) என்கிற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பதை ஸ்மித் உணர்ந்திருக்கிறார். சில சமயங்களில் அது பயன் முக்கியத்துவத்தை அளிக்கிறது. மற்ற சமயங்களில் அது அப்பொருளை மற்ற பொருள்களுக்காகப் பரிவர்த்தனை செய்யக்கூடிய அளவைக் காட்டுகிறது. முன்னதை பயன் மதிப்பு(value in use) என்றும் பின்னதை பரிவர்த்தனை மதிப்பு (value in exchange) என்றும் ஸ்மித் வேறுபடுத்துகிறார். [எஸ்.நீலகண்டன் – ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை]

செவ்வியல் பொருளாதாரம் இவ்விரண்டு வகைகளை அடிப்படையாகக்கொண்டே வளர்ந்து வந்துள்ளது. நாம் மூன்றாவதாகக் குறியீட்டு மதிப்பையும் (sign value) சேர்க்க வேண்டியிருக்கிறது. இவை மூன்றும் ஒரு பொருளின் பரிவர்த்தனையில் பிரதான இடம் வகிக்கின்றன. இயற்கையான நிலை (natural stage), பரிவர்த்தனை நிலை (commodity stage), குறியீட்டு முறைமை நிலை (structural stage) எனும் மூன்று நிலைகளுக்கடுத்து பின்னம் நிலையை (fractal stage) போத்திலார்ட் அறிமுகப்படுத்துகிறார்.

முதல் நிலையில் மதிப்பு என்பது பெளதிக உலகில் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அமைந்தது. பயன்மதிப்பிற்கும் பரிவர்த்தனை மதிப்பிற்கும் இடையே உள்ள உறவு இரண்டாம் நிலையை நிர்ணயித்தது. குறியீட்டு நிலை தனித்துவமான விதிகளால் முறைப்படுத்தப்படுகின்றன. இம்மூன்று நிலைகளையும்போல எவ்வித உளமை (ontological) விதிகளும் நான்காம் நிலைக்கு இல்லை. அதில், மதிப்பு எல்லா திசைகளிலும் பிரவாகமாகச் செல்கிறது. எவ்வித குறிப்புப்புள்ளியும் (point of reference) இல்லாமல் பரவுகிறது. அப்படியிருக்கையில் அதனை ‘மதிப்பு’ கொண்டு அளவிடவோ விளக்கவோ முடியாது.

சங்கிலித்தொடரென பின்னப்படும் இந்த நான்காம் வகை பிம்பங்கள்

அடிப்படை மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லையென்பதால், அவற்றுக்கு எந்த பயன்மதிப்பும் இல்லை. மதிப்பு கொண்டு அளவிட முடியாதென்பதால் பரிவர்த்தனை மதிப்பும் இவற்றுக்கு இல்லை. அதேபோல குறியீட்டு மதிப்பும் இல்லை. ஏன் ? குறியீட்டு மதிப்பு குறிகளின் அமைப்பு சார் இயக்கத்தை உடையது. [லாங் (langue)-பரோல் (parole) போன்றதொரு அமைப்பைக் கொண்டு இயங்குவது. ] பின்னல் பிம்பத்தின் மதிப்பை அதன் வைரலிட்டி (virality) தான் தீர்மானிக்கிறது.

எவ்வளவு வேகமாகப் பரவுகிறதோ அவ்வளவு மதிப்பு.

ப்ளாக் மிரரின் ‘The Waldo Moment’ எபிசோடில் வரும் வால்டோ எனும் கார்ட்டூன் கதாப்பாத்திரம் இந்த நான்காம் வகை பிம்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அக்கதாப்பாத்திரம் நிஜ உலகில் உள்ள எதனையும் குறிக்க முடியாது. யதார்த்த உலகில் குறிப்பிடும் பொருள்(referent) என்று எதுவுமில்லை. அதற்கு உளமைவெளியோ (ontological boundary) ஆதாரப்புள்ளி என்பதோ டிஜிட்டல் இமேஜ் ஒன்றே. அக்கதாப்பாத்திரம் வைரலாகிறது. ஆகையால் மதிப்பு கூடுகிறது. அதன் பிம்பம் தன்னாட்சி உடையதாகப் பரிணாமம் அடைகிறது.

இறுதியில் அந்த கார்ட்டூன் கதாப்பாத்திரம் ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கிறது. அந்த ஆட்சியதிகாரம் மொத்துத்துவ ஆட்சியதிகாரமாக இருப்பதை எபிசோடின் முடிவில் பார்க்கிறோம்.

முன்னர், பிம்பங்கள் யதார்த்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தின. சமகாலத்தில் பிம்பங்கள் தன்னாட்சி (autonomous) வாய்ந்தவையாக மாறியுள்ளன. முகப்புத்தக அவதார்கள் (நம்முடைய பிம்பங்கள்) நம்மைக் காட்டிலும் சமூக-மெய்மை உடையன. எனவே, நம்முடைய பிம்பங்கள் நம்மைக் காட்டிலும் மெய்யானவை போல மயக்கம் ஏற்படுகிறது. அனைத்து சமூக வலைத்தளங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன. வலைத்தள அவதார்கள் பிரம்மாண்டமான நிகர் சமூகமாக உருவாகி நிற்பதான எண்ணத்தை The Waldo Moment ஏற்படுத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத விஷயமாகக் கேளிக்கை உருவெடுத்துள்ளது. அரசியல் பிரச்சாரங்களில் கேளிக்கை எல்லா சமயமும் இருந்து வந்துள்ளதுதான். ஆனால், கேளிக்கை பிரதான அரசியல் வடிவம் பெறுவதை சமூக வலைத்தள வருகைக்குப் பின்னர் தான் என்று கூறலாம். சொல்லப்போனால் தமிழ் செய்தி வெளியீட்டாளர்களின் தற்போதைய செய்தி வெளியீட்டு பாணியே ஒரு கார்டூன் சேனல் போல ஒலிக்கிறது. அவ்வளவு ஏன் தமிழ்நாடு 2021 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியீடுகளின்போது ஸ்டாலின் மற்றும் எடப்பாடியின் கார்டூன் வடிவிலான சித்திரங்கள்தான் பிரபலமாக இருந்தன. செய்தியிலிருந்து கேளிக்கையைப் பிரித்தெடுக்க முடியா வண்ணம்தான் செய்திகள் வழங்கப்படுகின்றன. பாலிமர் தொலைக்காட்சியின் செய்திகள் பிரபலமாவதற்கான முக்கியக்காரணம் செய்தியையும் கேளிக்கையையும் ஒன்றாக வழங்குவதால்தானே ? பிரச்சார சமயத்தின் போது சமூக வலைத்தளமே கட்சி போஸ்டர்களாக நிரம்பியிருந்ததோடல்லாமல் கட்சி சம்மந்தப்பட்ட கேளிக்கை வீடியோக்களும் புகைப்படங்களுமாக அலங்கரிக்கப்பட்டதையும் பார்த்தோம். தனிமனித வெளிப்பாட்டின் அங்கமாக விளங்கும் தளங்களான இவை

எவ்வளவு எளிதாகப் பெருநிறுவனங்களாலும் மக்கள் தொடர்பு (PR) நிறுவனங்களாலும் கைப்பற்றக்கூடிய இடத்திலுள்ளன என்று இச்செயல்பாடுகள் உணர்த்தின.

கிண்டல் மற்றும் உருவக்கேலி வால்டோவின் முக்கியமான குணாம்சமாக வெளிப்படுகிறது. இடதுசாரி அரசியல்வாதிகள் வலதுசாரி  அரசியல்வாதிகள் என இரண்டு தரப்புகளையுமே கேலி செய்து பிரச்சாரம் மேற்கொண்டு இவையிரண்டுக்கும் மாற்றான அரசியல் சக்தியாக வால்டோ முன்வைக்கப்படுகிறது. பிரச்சாரமும் கேளிக்கையும் வால்டோவிற்கு வேறுவேறல்ல. பிரச்சார மேடையில், பேசுபவர் எவ்வளவு அர்த்தப்பூர்வமாகப் பேசுகிறார் என்பதெல்லாம் கணக்கில்லை. மாறாக,

அவர் ஏதாவது கேளிக்கை செய்தபடியே இருப்பதுதான் முக்கியம். பிரச்சாரத்தில் பேசுபவர்

ஜனத்திரளுக்கு அளிக்க வேண்டியது கொண்டாட்டத் திளைப்பு ஒன்றுதான். இது அனைத்து பிரச்சாரக் கூட்டங்களினதும் பொதுப் பண்பும் விதியுமாகும். கேளிக்கையே வடிவான வால்டோவிற்கு மக்கள் செல்வாக்கு எப்படி இல்லாதுபோகும் ?

வால்டோவிற்கு குரல் கொடுக்கும் கலைஞர் ஜேமிக்கு, அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும் உள்ளது. வால்டோ பிம்பத்தைப் பயன்படுத்தி கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வை ஒருமுனைப்படுத்தி அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையின்மையை வளரச்செய்கிறார். ஆனால்,

வால்டோவிடம் மாற்று அரசியல் கருத்துக்களுமில்லை, எவ்வித அரசியல் நிலைப்பாடுகளுமில்லை. அதனுடைய வாதங்களுக்கு எதிராக உண்மை நிலவரங்களை முன்வைத்தாலும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும். இதனைக் கண்டு மக்கள் உற்சாகமடைகிறார்கள். உற்சாகத்தைத் தன்னுடைய அதிகாரத்திரட்டலுக்கான முதலாகச் செயலாற்றுகிறது. வால்டோ பிம்பம் கருத்துப் பரிமாற்றங்களுக்குரிய தரப்பல்ல. ஆகவே,அதன் போக்கு அரசியல் தளத்தில் ஆபத்தானது.

இறுதியில், வால்டோவின் பிம்பம் முற்றதிகாரம் வாய்ந்த மொத்தத்துவ அரசாளுமையாகவும் பரிணமிப்பது விபத்தல்ல.

The Waldo Moment எபிசோட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு முன்னரே வெளிவந்தது. ட்ரம்ப்பின் வெற்றி இந்த எபிசோடின் பொருத்தப்பாடுகளை  நிரூபித்த தருணமாகும்.

Hang the Dj :

காதல் பற்றித் தீர்மானமாக யாரும் எதுவும் கூறமுடியாது. போலவே காதல் பற்றிப் பொதுப்படையாகப் பேசும்போது சில போதாமைகளும் விடுபடல்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால்,ஏதோவொரு வகையில் அது குறித்து சில வரையறைகளை முன்வைத்துப் பேசுவதினூடாகவே காதலின் சமகால நிலைமை குறித்து உரையாட முடியும். டேட்டிங் செயலிகள் குறித்துப் பேச வேண்டுமென்றால் காதலைப் பற்றிக் கொஞ்சம் பேசியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தத்தாலும் எழுத வேண்டியுள்ளது. பதேயூவினுடைய நூல்களின் துணைகொண்டு காதலைப் பற்றிக் கொஞ்சமாக உரையாடலைத் தொடங்குவோம்.

அலென் பதேயூவின் தத்துவம் தன்னிலை உருவாக்கத்தை மையப்படுத்திய விசாரணைகளைப் பேசக்கூடியது. அவரைப்பொருத்தளவு, மெய்ப்பற்றோடு(fidelity) – அர்ப்பணிப்பு – ஒரு நிகழ்வுக்கு செயலாற்றுவதன் வழியாகத் தன்னிலை உருவாகிறதென்பார். தன்னிலை ‘ஆதல்'(becoming) தான் நிகழ்கிறது – தன்னிலையாதல் ஒரு தொடர் செயற்பாடு – தன்னிலையாக யாரும் பிறப்பதில்லை. காந்தி அவர் காலத்திய நிகழ்வுகளுக்கு அர்ப்பணிப்போடு முகங்கொடுத்துச் செயலாற்றியதால் காந்தியாகிறார்.

ஆனால், நிகழ்வு அல்லது மெய்நிகழ்வு (truth event) என்பது என்ன?

நிகழ்வு (event) : ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில் அல்லது சமூகத்தில் ஏற்படக்கூடிய புதிய திறப்பு, அதுவரை நிரப்பப்படாத வெறுமையை நிரப்பக்கூடியது ; நிலவிவந்துள்ள நிலைமைகளின் (conditions) உள்ளார்ந்த சாத்தியங்களை (immanent potentials)வெளிக்கொணர்ந்து நிலைமைகளை புத்தாக்கம் செய்யக்கூடியது ; பழைய நிலைமைகளிலிருந்து புதிய நிலைமைகளை உருவாக்க வல்லது ; அரசியல், காதல், அறிவியல், கலை ஆகிய நான்கிலிருந்து தோன்றக்கூடியது. அரசியல் : பிரெஞ்சு மாவோயிஸ்ட்கள்(1966 – 1976)

இரு  நிகழ்வுகளுக்கு (சீனாவின் பண்பாட்டுப் புரட்சி மற்றும் பிரான்ஸில் மே’68 கிளர்ச்சி) பற்றுறுதியோடு செயல்பட்டு வெளிப்படாதிருந்த உள்ளார்ந்த சாத்தியங்களை வெளிக்கொண்டு வந்தனர். அறிவியல் : கலீலியோ, நியூட்டன் முதலானோரின் இயற்பியல் கோட்பாடுகள். கலை : ஷோஹன்பெர்க்கின் 12-டோன் இசைக்கோவை. காதல் : ஜாதிய சமூகத்தில் ஜாதி கடந்து நிகழும் காதல். ஏனெனில், அதுவரை நிலவிவந்துள்ள சமூக நிலைமைகளை மாற்றியமைக்கக்கூடிய சாத்தியங்களை, இருவரின் காதல் செயற்பாட்டு நிகழ்வு வெளிக்கொணர்கிறது.

காதல் பற்றி பதேயூ முன்வைத்துப் பேசியவற்றை வரையறைக்குட்படுத்தி  இங்கு சிலவற்றை முன்வைக்கிறேன்.

காதல் :

  1. ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ ஆகும் இருத்தலியச் செயற்பாடு – ‘நான்’ என்பதை முழுக்க அழித்து ‘நாம்’ ஆவதல்ல. பற்றுறுதியோடு ஒரு நிகழ்வுக்குச் செயலாற்றும் இருவர், நாமாதல் – becoming a Two.
  2. A scene of the Two. முற்றிலும் வேறான ‘இரு’ நபர்கள் – இரு தனித்தன்மை வாய்ந்த உளமைக்கூறுகளுடைய (two ontological singularities) – தங்களுடைய தனித்தன்மை மற்றும் வித்தியாசங்களைத் தக்கவைத்தபடியே ‘ஒரு’ காட்சியைப் பகிர இணையும் நிகழ்வு எனலாம்.

உலக நடப்புகளை அனுபவங்கொள்ள, புரிந்துணர

‘நான்’ மட்டுமே உளது என்றில்லாமல் ‘நாம்’ எனும் நோக்குநிலையிலிருந்து காணக்கூடிய சாத்தியப்பாட்டை வழங்கும் தன்னிலையைக் கட்டமைக்கிறது, காதல். இக்காதல் தன்னிலை உருவாக்கம் கொள்ளும் தருணத்தை A scene of the Two எனலாம்.

“..love splits each individual’s narcissistic unity in such a way that it opens up an experience of the world that is taken on as the experience of the two. I’ve named love the scene of the Two’. Whereas politics takes difference as its material and attempts to construct a minimal operative unity within this element, love, on the contrary, shatters the primary units and establishes the reign of the Two over the experience of the world.”

(Philosophy and the Event, pp. 39-40)

  1. மற்றமையோடான எதிர்ப்படலின்போது(encounter)நிகழ்வது. எதிர்ப்படல், முன்னரே நிச்சயிக்கப்பட்ட அல்லது முன் தீர்மானம் செய்யப்பட்டதாக இல்லாமல் தற்செயலானது.

*மற்றமையுடனான எதிர்ப்படல் நீங்கள் நன்கு அறிந்த நபரிடம் கூட நேரலாம். போலவே, எதிர்ப்படல் என்பதைச் சந்தித்துக்கொள்ளல் என்று புரிந்து கொள்ளக்கூடாது.*

  1. மற்றமையோடு வாழ்தலும்

(with the Other)

மற்றமைக்காகவும் இருத்தலுமானது

(for the Other)’எனக்காக மட்டும்’ எனும் அடையாளமைய இருத்தலைத் தகர்க்கிறது. ஆகவே, புதிய உலகமொன்று பிறப்பதன் சாட்சியமாய் இருக்க வைக்கிறது.

  1. உண்மையை உருவாக்கும் தனித்துவமான செயற்பாடு. அதுவரை அனுபங்கொள்ளாத வகையில் உலகை அறியச் செய்கிறது.அப்படியானால் காதல் படைப்பூக்கம் நிரம்பியது ; ஏனெனில் அது உலகை அனுபங்கொள்ள புதிய கண்ணோட்டங்களை உருவாக்குகிறது.

 

*காதல், உண்மை (truth) உருவாக்கத்தை நோக்கிய தேடல் என்கிறார் பதேயூ. அவர் குறிப்பிடும் உண்மை எவ்வகைப்பட்டது ? என்று கேட்டால் அதை இவ்வாறு சொல்லிப்பார்க்கலாம் :

மற்றமையின் வித்தியாசப்பட்ட நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது

உலகை எவ்வாறு அனுபங்கொள்கிறோம்? அடையாளத்தை (identity) மையமிட்டல்லாமல் மற்றமையின் வித்தியாசத்தினூடாக (difference)

பார்க்குங்கால் உலகம் எவ்வாறு அர்த்தப்படுகிறது ?

அதாவது, நம்முடைய தினசரி வாழ்வு, வித்தியாசமான நோக்குநிலை ஒன்றின் வருகையால் பாதிப்படைந்து, புதுப்பிக்கப்பட்ட நிலையை அடைகிறது.*

  1. அரசியல் முடியுமிடத்தில் தொடங்குகிறது. ஏனெனில் அரசியல், பன்மைத்தன்மையிலிருந்து ஒற்றைமையம் நோக்கிச் செல்வது – from diversity to the same.

காதலோ ,ஒற்றைமையத்தினுள் வித்தியாசமான நோக்கை அறிமுகப்படுத்துவது.

*பதேயூவின் இப்பார்வை காதல் என்பதை சமூக நடவடிக்கைகளுக்குப் பொருத்திப் பார்ப்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. உதாரணமாக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் மேலுள்ள காதல், சமூகம் கடவுள் மேல்கொண்டுள்ள காதல், மக்கள் திரள் சர்வாதிகாரியின் மேல் கொண்டுள்ள காதல் போன்ற குழுவான சமூக நடவடிக்கைகளைக் காதல் என்று அடையாளப்படுத்த முடியாது.*

  1. அது ஒருவருடைய குணநலன்களையொட்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதைக்காட்டிலும்

உலகத்தில் ‘நான்’ என்பதன் உள்ளடக்கத்தையும் (content) வடிவத்தையுமே (form) மாற்றியமைக்கக்கூடியது. எனவே,

ஒருவரை மேலானவராக உயர்த்தவோ அல்லது கீழானவராகத் தாழ்த்தவோ செய்யாது.

8.மற்றமையோடு மேற்கொள்ளும் தொடர் செயல்பாடு என்பதால் காலப் பரிமாணமுடையது. (temporality).

*சமகால காதல் அனுபவம் காலப் பரிமாணத்தை இழந்தபடியே உள்ளது. அனுபவமாதலுக்குக் கால-இடப் பரிமாணங்கள் முக்கியக் கூறுகளாகும். துரிதம் (instant), சமகால கால உணர்வு என்பதால் அது காதல் உறவுகளையும் துரிதமாக அணுகவே உந்துகிறது.*

தனியருடைய வாழ்வில்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அர்த்தமிகு நிகழ்வு டேட்டிங் செயலிகளின் இடையீட்டினால் மாற்றமடைந்துள்ளது.

இன்னல் இல்லாத (risk free) காதலை வழங்க முற்படும் டேட்டிங் செயலிகள் காதலை பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையாக – பலவீனமான நவீன தன்னிலைகள் உடைந்து விடாதபடி – பார்க்கின்றன. வலி, சாகசத்தன்மை,

நிச்சயமற்ற தன்மை ஆகிய உணர்நிலைகளை (affect) ஏற்படுத்தக்கூடியவற்றை நீக்கம் செய்து காதலை வழங்க முற்படுகின்றன. மற்றமையுடனான எதிர்ப்படலை விரலசைவுகளினுள் அடக்குவதோடு, எதிர்ப்படலை முன்னரே நாம் வழங்கிய புகைப்படங்கள், சுயவிவரங்கள் அடங்கிய தரவுகளின் அடிப்படையிலும் இணையர் தேர்வு நடக்கிறது. மரபான நிச்சயத் திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தார் செய்யும் வேலையை டேட்டிங் செயலிகளும் இணையதள கல்யாண சேவை செயலிகளும் செய்கின்றன. இச்செயலிகள்

சுய-பண்டமாக்கலை (self-commodification) இயல்பாக்கம் செய்து பரவலாக்குகிறதேயொழிய சமூக உறவுகளை மேம்படுத்துவதில்லை.

டேட்டிங்கை, சந்தைப் பொருளாதாரத்தைப்போல அணுகப் பழகிவிட்ட நிலையில்

டேட்டிங் என்பது ஐடியலான நபரைக் கண்டடையும் ஒரு விளையாட்டு போல பொதுமனநிலையில் பதிந்துள்ளது. கேரி பெக்கர் எனும் எழுபதுகளைச்சேர்ந்த பொருளாதார அறிஞர் பொருளாதாரக் கோட்பாடுகளை கல்யாண மற்றும் டைவர்ஸ் கணக்கீடுகளுக்குப் பொருத்திப்பார்க்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தி பின்னாளில் நோபல் பரிசும் பெற்றார். இதனை மையமிட்டு  தற்காலத்தில் நிறைய ஜனரஞ்சக டேட்டிங் புத்தகங்கள் வெளிவருகின்றன. ரேச்சல் கிரின்வால்ட் எழுதிய ‘Find a husband after 35’ ஒரு உதாரணம்.

காதல் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை Hang the Dj விமர்சன ரீதியாக கவனத்திற்கு உட்படுத்துகிறது. அத்தகைய மாற்றம் நல்லதா கெட்டதா எனும் முடிவுகளை நோக்கியதாக அல்லாமல் அதன் தாக்கங்களை முன்வைக்கும் தரப்பாக உள்ளது.

இந்த எபிசோடில் நாம் காணும்

Coach செயலியின் நோக்கம் காதல் உறவுகளிலுள்ள நிச்சயமற்ற தன்மையை நீக்குவதாகும். அதன்பொருட்டு

கச்சிதமான இணையரை அனுமானிக்கும் பங்கேற்பாளர்களின் எண்மருவுப் பிரதிகளை (digital copies) மெய்நிகருலகில் உறவாடவிட்டு அவர்களுக்கிடையேயான உறவுநிலையின் நிச்சயத்தன்மையை ஊகித்துக் கூறுவதன் வழியாகப் பாதுகாப்பான உறுதியான உறவுகளைத் தனியர்களுக்கு வழங்கும் சேவையைச் செய்கிறது. காதல் பற்றி நாம் பேசும் போது வழமையாக ‘காதலில் விழுவது’ என்று கூறுவோம். இந்த விழுதலிலிருந்து காப்பாற்றும் தற்காப்புச் சேவையை, எதிலும் விழ அஞ்சும் தலைமுறையினருக்கு டேட்டிங் செயலிகள் செய்து வருகின்றன.

மெய்நிகருலகில் மனிதப் பிரதிகள்  பெற்ற வெற்றியினடிப்படையில் நிஜ உலக உறவுகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதை சேவையாக வழங்குகிறது Coach எனும் செயலி.

அச்செயலி நிர்ணயம் செய்யும் நபரோடு,

முன்னரே தீர்மானிக்கப்பட்ட கால அளவில், பங்கேற்பாளர்களின் உறவு நிலைகளை ஆராய்ந்து கச்சிதமான இணையரை வழங்குவதாக உறுதியளிக்கும் இச்செயலியின் வழியே ஏமியும் ஃப்ராங்கும் சந்தித்துக்கொள்கிறார்கள்.

எமிக்கும் ஃப்ராங்கிற்கும் 12 மணி நேரம் அளிக்கப்படும்போது இருவரும் படுக்கையில் படுத்தப்படி உரையாடும்போது வரும் பகுதி —

Amy : Must have been mental before the system.

Frank : How do you mean?

Amy : Well, people had to do the whole relationship thing themselves,

work out who they wanna be with.

Frank : Hmm. Option paralysis.

So many choices, you end up not knowing which one you want.

Amy : Yeah, exactly, and if things seem shitty,

they’d have to figure out whether they wanted to break up with someone.

Frank : How to break up with someone. Fuckin’ hell.

Amy : Just a nightmare.

Frank : It’s not like when it’s all mapped out.

Amy : God, no. It’s so much simpler when it’s all mapped out.

இவ்வுரையாடலைக் கவனிக்கும் போது இச்செயலியின் பங்கேற்பாளர்கள் யாராக இருக்க முடியும் என ஊகிக்க முடியும். எதிர்ப்படல் சாத்தியப்படும் சமூக உறவாடல்களுக்கு அஞ்சும், மற்றமையோடு வெளியைப் பகிரத் தயாரில்லாத, உறவுநிலைகளில் உடைவேற்படாதபடி பாதுகாப்பைப்பேணும் தனியர்கள்

இச்செயலியின் சேவையை நாடுகிறார்கள். டேட்டிங் செயலிகள் தனிமனிதர்களாக மனிதர்களைப்பார்க்காமல் சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல விதமான பண்டங்களைப் போல பார்க்க வழிவகுத்து காதல் போன்ற உறவுநிலைகளில் உள்ளீடற்ற, ஆன்மீக வெளிப்பாடற்ற தன்மையை வளரச்செய்துள்ளது. விரலைக்கொண்டு சிறு அசைவைச் செய்தால் வேறொரு பொருள் (நபர்) கிடைக்கும். காதல் நிகழ்வதற்கு முதலில் மற்றமையோடு நம்முடைய இயங்குவெளியினுள் ஊடாடத்தயாராக வேண்டும். என்னைத்தாண்டி ஒருவரைப் பற்றி யோசிக்கவே முடியாதென்றால் காதல் சாத்தியப்படுவதற்கான வெளி என்னிடம் இல்லை என்றுதான் அர்த்தம்.

இறுதிக்காட்சியில் இருவரும் இச்செயலியின் முறைகளுக்கு எதிராகத் தங்களுடைய காதலை முன்னிறுத்தி ஒரு பெரிய சுவரைத் தாண்டும் போது அச்சுவர் மறைந்த பின்னர்தான் இருவரும் மெய்நிகர் உலகினுள் இருந்த பிரதிகள் எனத் தெரிய வருகிறது.

ஆக, அவர்கள் அமைப்பிற்கெதிராய் வெளிப்படுத்திய எதிர்ப்புணர்ச்சியே கூட அச்செயலியின் பொருத்தமான இணையரைத்தேர்வு செய்யும் செயல்பாடுகளுள் ஒன்று. மெய்நிகர் உலகை வென்று கச்சிதமான இணையராக வெளிவருவதற்கு அவர்கள் அச்செயலியினை மீறுவது அவசியமாகிறது. இத்தகைய நிகழ்வொன்றை Fifteen Million Merits எபிசோடிலும் எதிர்கொள்கிறோம்.

டேட்டிங் செயலிகள் செயல்படும் விதத்தை உருவகப்படுத்தும் விதமாக Hang the Dj-வில் Coach இணையர் தேர்வுகளை வழிநடத்துகிறது. Coach செயலியின் உருவாக்கம் குறித்து எபிசோடின் இயக்குனர் சார்லி ப்ரூக்கர் கூறுவதாவது : “It could generate a playlist of relationships. It would tell you who you were going to be going out with next and for how long. The system is learning from your reaction to being paired with all these different types of people. Once it’s figured it’s learnt enough about you, it will then pair you up with the ultimate soulmate.”

ஸ்பாட்டிபையின் நிரல் நெறிமுறையை(algorithm) மையமாக வைத்து Coach செயலி இக்கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை அறிகிறோம்.

எண்ணற்ற தேர்வுகளை வழங்குவதாகச் சொல்லிக்கொண்டாலும் ஸ்பாட்டிஃபை செயலி விருப்பத்தேர்வு மற்றும் தனிநபர் தரவுகளின் அடிப்படையில் பாடல்களைப் பரிந்துரைத்துத் தேர்வு சுதந்திரம் உண்டாக்கும் பதற்றங்களைக் குறைக்க முற்படுவது நகைமுரண்.

காதல் உறவுகளில் பாதுகாப்பைப் பேணும் இயல்நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டுள்ள இக்கதையின் முடிவில் நிஜ உலகில் ஏமியும் ஃப்ராங்கும் 99.8 சதவிகித பொருத்தமான இணையர்களென Coach செயலி அறிவிப்பதோடு முடிகிறது. அதாவது, மெய்நிகர் செயல்பாட்டில் அவர்களுடைய பிரதிகள் 998 முறை அச்செயலிக்கு எதிராய் சுவரேறி ‘வெற்றி’ பெற்றுள்ளன. மகிழ்ச்சிகரமாக எபிசோட் முடிவதாகத் தோன்றினாலும் நிஜ உலக எமியும் ஃப்ராங்கும் Coach செயலியின் பரிந்துரைப்படியே அவர்களுடைய சந்திப்பு நிகழ்கிறது. எபிசோடில் ஃப்ராங்குடைய முதல் வசனமே ‘Coach, where do I go’ என்று செயலியிடம் கேட்பதாய் இருக்கும். அதுபோலவே

எமியுடைய முதல் வசனமும் Coach செயலியிடம் ‘How will I know who he is? என்று கேட்பதாகவே இருக்கும். ஆக இருவரும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள உயிரற்ற ஒரு செயலியிடம் தங்களுடைய உறவு சார்ந்த நடவடிக்கைகளைக் கையளித்துள்ளனர். தொழில்நுட்ப அறிவுவாதம், விதிக்கோவைகள் (codes) , நிரல் நெறிமுறைகளிடம்(algorithm)

கையளித்துள்ளதன் விளைவாக, பண்டமாக்கலுக்கு உள்ளான சமூக உறவுகளின் உருவகமாக நாம் Hang the Dj எபிசோடைக் காணலாம்.

 

Black Museum :

Black Museum எபிசோட் மூன்று இடையீட்டுக் குறுங்கதைகளை உள்ளடக்கியது. அதன் பரந்துபட்ட அர்த்த தளங்களை விவரிப்பதிற்கு போதுமான கருத்துச் சட்டகங்களை உருவாக்கி இப்போது எழுதமுடியாமையால் இங்கு ஒரு குறுங்கதையை மட்டும் கவனத்திற்குட்படுத்துகிறேன்.

நிஷ், எனும் கதாப்பாத்திரம் யாருமற்ற நிலப்பரப்பில் அமைந்துள்ள Black Museum எனும் அருங்காட்சியகத்தினுள் நுழைகிறார். அங்கு ஹெய்ன்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தான் அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுப்பாளர். இதற்கு முன்பு அவர் TCKR எனும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்தவரும் கூட.

அங்கு குற்றச்செயல்களுக்குக் காரணமான நவீன கண்டுபிடிப்புச்சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை

ஒவ்வொன்றாகப்பார்வையிடும் நிஷ், ‘Neural Cap’ எனும் சாதனத்தினை கூடுதல் கவனத்தோடு நோட்டமிடும்போது ஹெய்ன்ஸ் அருகில் வந்து அச்சாதனம் அங்கு வந்ததன் பின்னணிதையை கூறத் தொடங்குகிறார். அவர் கூறும் கதைகளில் அவரும் ஒரு கதாப்பாத்திரமாக இடம்பெறுகிறார்.

டாக்டர் பீட்டர் டாவ்சன் என்பவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றுபவர். TCKR எனும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்தவராகத் தன்னை டாவ்சனிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஹெய்ன்ஸ் அவரிடம் Neural Cap எனும் நரம்பியல்-சார் சாதனமொன்றைச் சோதனை பார்க்கத் தருகிறார். அச்சாதனம் நோயாளிகளின் வலியை பிறர் அனுபவிக்கவும் உணரவும் வழிவகை செய்வதால் அவர்களின் வலிக்கான பிறப்பிடத்தை எளிதாக அடையாளங்கண்டு குணப்படுத்த முடியும் என உறுதியளிக்கிறார். டாவ்சனும் ஏற்றுக்கொண்டு அச்சோதனைக்கு சம்மதமளிக்கிறார். அச்சோதனை வெற்றியும் பெறுகிறது. இதற்கிடையில் டாவ்சன் அச்சாதனத்தை உடலுறவின்போது பயன்படுத்திப் பார்க்கிறார். அவ்வாறு செய்யும்போது அவரால் தன்னுடைய உச்சத்தோடு சேர்த்து காதலியின் உச்சத்தையும் அனுபவிக்க முடிகிறது.

ஒருசமயம் அச்சாதனத்தை அணிந்திருக்கும்போதே ஒரு நோயாளி இறந்துவிடுகிறார், டாவ்சனாலும் அப்போது இறப்பினை அனுபவங்கொள்ள முடிகிறது. இச்சம்பவத்திற்குப்பின் டாவ்சனின் பாலுணர்வுச் செயல்பாடுகளும் மாற்றமடைகின்றன – அது சாடோமசோகிஸமாக உருவெடுக்கிறது.

அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வேண்டுமென்றே இறப்பின் எல்லைவரை கொண்டுசென்று இறப்பைத் தானும் அனுபவங்கொள்ளகிறார்.

இச்செயல்பாடுகள் பிரச்சினைக்குள்ளாகி மருத்துவமனையிலிருந்து நீக்கப்பட்டவர் சுய-வதையில் ஈடுபடுகிறார். மருத்துவர் என்பதால் தன்னை எவ்வளவு தூரம் காயப்படுத்திக்கொள்ள முடியும் என்கிற எல்லைகள் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் தன்னைக் காயப்படுத்திக்கொள்ளும் போது ‘பய’ உணர்வு அவருக்கு ஏற்படுவதில்லை.

நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் இருப்பதால் வலியும் பய உணர்வும் அவர்களுக்கு ஒருங்கே கலந்திருக்கும் – இவ்விரண்டின் ஒன்றிணைவே டாவ்சனுக்கு பாலுணர்வில் உச்சத்தை அளிப்பது. சுய-வதையில் பயம் சாத்தியமில்லை, ஆகவே அவரால் உச்சமும் அடைய முடியாது. ஆகையால் ரோட்டிற்குச் சென்று வீடற்ற ஒருவரைக் கொன்று உச்சமடைந்த நிலையில் – ‘குறி’ எழும்பிய நிலையிலேயே – கோமாவிற்குத் தள்ளப்படுகிறார்.

இதனை எவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்வது? வலி, பயம் ஆகியவற்றைத் தவிர்த்து இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நாடுவதுதானே மனித வாழ்வின் நோக்கமாகக் கருதப்பட்டு வந்துள்ளது?  நிறைவான உளநிலை இயக்கத்தை நோக்கிய விழைவென வரையறை செய்யப்பட்ட மனித இயல்பு ஏன் சிதைவையும் அழிவையும் விரும்பி அவற்றை நோக்கிச் செல்கிறது? ஆனால் உளப்பகுப்பாய்வு இவ்வாறு கருதுவதில்லை. பிரச்சினைகளற்ற

நிறைவான முழுமை வாழ்வை நியூரோட்டிக்கின் கனவு வாழ்வாகவே உளப்பகுப்பாய்வு கருதும். மகிழ்ச்சியின் விழைவை அழிப்பது மனித நடவடிக்கைகளின் அங்கமாக இருந்துவந்துள்ளதென்பது உளப்பகுப்பாய்வின் அடிப்படை செய்தி.

Jouissance என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் இருக்கிறதா தெரியவில்லை. லக்கான், இன்பக்கோட்பாட்டிற்கும் Jouissance – க்குமான வித்தியாசங்களை முன்வைக்கும்போது இன்பம் என்பது உடலளவிலான நிலைத்தன்மையைக் குலைக்காத உணர்நிலையாகவும், Jouissance-ஐ தன்னிலையையே குலைக்கக்கூடிய இன்பத்திற்கும் அப்பாற்பட்ட வலியோடு கூடிய அதீதமான உணர்நிலையாகக் கூறுகிறார் – pleasure to the point of pain.

இமானுவெல் காண்ட் ஒரு கற்பனையான வாதத்தை முன்வைக்கிறார்.அது என்னவெனில் “கனவுப்பெண்ணோடு ஒரு நாள் உடலுறவு கொள்ளும் வாய்ப்பு ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தியபின் அந்நபர் தூக்கிலிடப்படுவார் என்கிற நிபந்தனையும் வைக்கப்படும்போது அவர் உடலுறவு வைத்துக்கொள்ளும் வாய்ப்பை மறுதலித்து வாழ்வதையே தேர்வு செய்வார்.” என்கிறார்.

இந்த ஒருபடித்தான முடிவை மறுத்து உளவியல்ரீதியான கோணங்களை நோக்கிச் செல்கிறார், லக்கான்.

காண்ட், முன்வைப்பது இன்பக்கோட்டினை அடிப்படையாகக் கொண்டது – ஆகையால் அது யதார்த்தத்தை மீறிச்செல்லாத வகையிலானது. ஏனெனில், இன்பக்கோட்பாடு தான் Id மற்றும் Ego-வின் முரண்களைப் பரிசீலித்து வழிநடத்துவது. இன்பக்கோட்பாடு, ஒரு பொருளியலாளர்போல பல கணக்கீடுகளைச்செய்து அதனடிப்படையில் முடிவெடுப்பதால் பெரும்பாலும், நிலவும் யதார்த்த நிலமைகளுக்குத்தக்கவாறே அதன் செயல்பாடுகள் இருக்குமேயொழிய அந்நிலைமைகளின் கட்டுமானங்களை மீறிச்செல்லாது.

இன்பக்கோட்பாடு ஒரு தன்னிலையின் இன்புறுவதற்கான எல்லைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கக்கூடியது. அத்தன்னிலை அந்த எல்லையைக் கடக்க எத்தனித்தபடியே உள்ளது. இது, இன்பத்திளைப்போடு வலியையும் ஏற்படுத்துகிறது – குறிப்பிட்டளவு இன்பத்தையே ஒரு தன்னிலையால் அனுபவங்கொள்ள முடியும், அந்த எல்லையைக்கடக்கும்போது இன்பம் வலியாக மாறுகிறது. இன்பமும் வலியும் இணைந்த, தன்னுடைய நிறைவில் வலியுணரும் நிலையே Jouissance.

இறப்பை ஒரு உணர்வாக அனுபவங்கொள்ள முடிகிற டாவ்சனுக்கு அதீதத்தில் மட்டுமே மகிழ்ச்சி/வலி ஆகியவற்றை உணர முடிகிறது –

மனிதர்களுக்கு இறப்பு என்பது கடக்கமுடியாத எல்லை – இன்பத்தின் எல்லையும் அதுவே. இயற்கையாக அமைந்த உணர்வெல்லைகளை மீறுவதற்குரிய சாத்தியப்பாட்டை டாவ்சனுக்கு Neural Cap வழங்குகிறது. எவ்வித உடல்ரீதியான காம உணர்வுத் தூண்டுதல்களுமின்றி (seduction) வாழ்க்கையின் விளிம்பிலுள்ள மனிதர்களின் உணர்நிலை ஒருவரின் பாலுணர்வைத் தூண்டுமானால் அவரின் பாலுணர்வுக் கட்டமைப்பிலிருந்து வெளிப்படக்கூடியது கட்டுப்பாடுகளற்ற இன்பவிழைவை நோக்கிய Jouissance ஒன்றே

 

Hated in the Nation :

தனிமனித விடுதலையை எக்காலத்திலும் இல்லாத அளவிற்குப் பேசிவந்த இணையவெளி ஊடகங்களின் பயனாளர்களும்

முன்னமே நிறுவப்பட்டதைத் திரும்ப ‘உறுதிப்படுத்தும்’ (conformists)

கருவிகளாக மாறி வருகின்றனர். ஒத்த சிந்தனையை உறுதிப்படுத்துபவர்கள் × உறுதிப்படுத்தாதவர்கள் எனும் இருமை நிலை உருவாக்கத்தினால் அதன் ‘உரையாடல்’ தன்மையும் தேக்க நிலையில் உள்ளது. இந்த இருமைநிலை முரணியக்கத்தைக் குறிப்பதன்று. முரணியக்கம் உரையாடலைத் தோற்றுவிக்கும். ஆனால், இது வெறுமனே ஒற்றைப்படையான சிந்தனைப் போக்கையுடைய குழுக்களை உருவாக்கவல்லது.

நம்முடைய சமூக வலைத்தள செயல்பாடுகளுக்கு நிஜ உலகில் விளைவு ஒன்றுமேயில்லை என்பது எவ்வளவு பரந்துபட்ட சுதந்திரத்தை ஒரு நபருக்கு வழங்குகிறது.

அச்சுதந்திரத்தைக்கொண்டுதான் சமூக வலைத்தளத்தில் பிற நபர்கள் மீதான காரணமற்ற வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இந்த காரணமற்ற வன்முறையை வெளிக்காட்டும்போது சமூகநோக்கு, கருத்தியல் முரண்பாடு

எனும் பெயரில் நடப்பதைப் பார்க்கிறோம்.

இந்த எபிசோட், வலைத்தளத்தின் செயல்பாடு ஒவ்வொன்றுக்கும் அதனைச்செய்பவரை நிஜ உலகில் பொறுப்பேற்க வைப்பதை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.

மரபான ஊடகத்துறை மீதான விமர்சனம், ஊடக நிறுவனங்களை நோக்கியதாக இருக்கும். ஆனால்,

தனிநபர்கள் வினையாற்ற இயலாத இடத்தில் இருக்கும் மரபான ஊடகப் போக்கிலிருந்து சமகால ஊடகம் அமைப்பு ரீதியாகப் பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இந்த நவீன ஊடகப் பரப்பில் நுகர்வோரின் பங்கேற்பும்  விசையைச் செலுத்துகிறது. இதனையே பங்கேற்பு ஊடகம் (participatory media) என்கிறோம். ஊடகங்கள் வெறுமனே தகவல் பரிமாற்றக் கருவியாக அல்லாமல் செய்திகளையும் உண்மைகளையும் உருவாக்கும் அதிகாரமுடையனவாய் பரிணமித்துள்ளன. பங்கேற்பு ஊடகத்தின் மீதான விமர்சனத்தை ப்ளாக் மிரரின் அனேக எபிசோடுகளும் முன்வைக்கின்றன.

தேனீக்கள் அழிந்து போனதால் தானியங்கித் தேனீக்கள் (Autonomous Drone Insects) இங்கிலாந்து முழுக்க இயங்கி வருவதாகத் தொடங்குகிறது எபிசோட். அவற்றினுடைய பணி தேன் உற்பத்தியும் மகரந்தச்சேர்க்கையுமே என்று அரசாங்கத்தாலும் அதை உருவாக்கிய தனியார் நிறுவனத்தாலும் சொல்லப்பட்டு வருகிறது. கேரட் ஷோல்ஸ் என்பவன் அத்தானியங்கி தேனீக்களின் செயலகங்களை ஹேக் செய்து தொடர் கொலைகளை நிகழ்த்துகிறான்.அக்கொலைச் செயல்கள் நிகழ்த்தப்படும் விதம் எவ்வாறென்றால்

ட்விட்டரில் Death To ஹேஷ்டேக் யாரை அதிகமாகக் குறிப்பிட்டு பதிவுசெய்யப்பட்டுள்ள நபர்களைத் தானியங்கித் தேனீக்களை இயக்கி அந்நபர்களை அடையாளங்கண்டு தலைப்பகுதியினுள் ஊடுருவவிட்டு கொலைகள் செய்கிறான்.

 

“Game of Consequences :

1: pick a target.

2: post their name and photo with #deathto.

3: most popular target will be eliminated

after 5 PM.

4: game resets at midnight.”

 

ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் விரும்பாத தனிநபரின் பெயரைக் குறிப்பிட்டு ஹேஸ்டேக்கைப்பயன்படுத்துவர்.

சிறப்பு அதிகாரிகளான

கேரினும் ப்ளூவும் தேனீத்திரள் செயலாக்கத்தினை தடுத்து நிறுத்த அதன் மையச் செயலகத்தை ஹேக் செய்கின்றனர். அப்போதுதான்

அத்தேனீக்களின் உண்மை நோக்கமானது ஹேஸ்டேக் பயன்படுத்தியவர்களையும்

கொல்வதென்று தெரிய வருகிறது.

வலைத்தள செயல்பாடுகளுக்கு நிஜ உலகில் விளைவுகளுண்டு என்பதையும் தனிப்பட்ட முறையில் பயன்பாட்டாளர்கள் அவர்களின் வலைத்தள செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இயக்கியவரின் நோக்கம்.

அத்தேனீக்களுக்கு மலர்களைக் கண்டுபிடிக்கும் உணரிகளும் (sensors) தன்னியல்பாய் கூடு கட்டுவதற்குரிய திறன்கள் மட்டுமே உளதென அரசாங்கத்தால் கூறப்படுகிறது.ஆனால், முகங்களை அவை எவ்வாறு துல்லியமாக அடையாளங்கண்டு கொலை செய்தன ? அவை தேன் உருவாக்குவதோடு நின்றுவிடாமல் மனித முகங்களையும் நடத்தைகளையும் கேமரா வழியே தொடர் கண்காணிப்புக்குள்ளாக்கியுள்ளது பின்னர்தான் தெரிய வருகிறது. கேள்வியெழுப்புகையில் ‘அரசின் பாதுகாப்பு நடவடிக்கை’ என்று அரசதிகாரத்தில் இருப்பவர் பதில் அளிக்கிறார். ‘பாதுகாப்பு’ எனும் நவீன அரசுகளினதும் தனியார் நிறுவனங்களினதும் சொல்லாடல்களுக்கடியில் தொக்கி நிற்பது கண்காணிப்பு எனும் அதிகார நடவடிக்கை.

பங்கேற்பு ஊடகத்தின் உச்சகட்ட விமர்சனத்தையே Hated in the Nation-இல் காண்கிறோம். ஜோ பவர்ஸ் எனும் எழுத்தாளர் மீதான வெறுப்பை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபடி இருக்கின்றனர். தனிநபர்களாக இருந்தவர்கள் குழுவாக மாறும் போது, அதாவது, தங்களையே நியாயப்படுத்திக்கொள்ளும் தரப்பாக மாறுவதால் எதையும் செய்யக்கூடிய சுதந்திரத்தைப் பெறுகின்றனர்.

தனிநபர்களாகப் பங்கேற்கும் இணையப் பயனாளர்கள் குழுவாக மாறும் தருணத்தில் அறச்செயல்பாட்டிற்குரியவர்களாக தங்களை உருவகித்துக்கொண்டு,

வெறுப்புச் செயல்பாடுகளுக்கு வெவ்வேறு சமூக நோக்குகளையும் கற்பிதம் செய்துகொள்கின்றனர். இவ்வாறே

தனிநபரை அக்குழு என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நியாயங்களை உருவாக்கிக்கொள்கிறது. இது நாம் சமூக வலைத்தளங்களில் எதிர்கொள்ளும் சாதாரணமயமாக்கப்பட்ட செயல்பாடு. அக்குழுவிலுள்ள நபர்களுக்கு ஒரு தனிநபரின் மீதான வெறுப்புப் பதிவுகளையும் கொலை மிரட்டல்களையும் கொடுத்து பயமுறுத்தும் தார்மீகப் பொறுப்புடையவர்கள் எனும் மனப்போக்கு உடையவர்களாகின்றனர்.

மையக்கதாப்பாதிரமான கேரி, இத்தகைய குழு மனநிலையில் செயலாற்றிய ஒருவரிடம் ‘ஏன் சமூக வலைத்தளத்தில், ஒருவரின் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வன்முறையான செயல்களையும் செய்தீர்கள்? ‘ என்று

கேள்வி கேட்கும்போது ‘சும்மா.. ஜாலிக்கு செய்தோம்’ என்று பதில் வருகிறது. இவ்விடத்தில் இயக்குநர் ஒரு இடையீட்டைச்செய்கிறார்.

அக்குழுவிலுள்ள அனைவரையும் தங்களுடைய வலைத்தள செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கும்படியான சூழலை உருவாக்கி இப்போக்கை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.

கருத்தியல் முரண்பாடு, சமூக நோக்கில் மாறுபாடு என்பதெல்லாம் மேல்மட்டத்தில் குழுவாக மாறும் நபர்கள் கற்பிதம் செய்துகொள்ளும் நியாயங்கள். ஆனால் அதற்கடியில் இருப்பது வெறுப்பு. அவ்வெறுப்பினை வெளிக்காட்டி அதனைச் செயலூக்கமுள்ள சக்தியாக மாற்ற உதவுவது பங்கேற்பு ஊடகம் ஏற்படுத்திக் கொடுக்கும் வசதிகள் என்பதுவே அவரின் இடையீட்டுக் கருத்து. ஒரு விரல் தொடுகை அளிக்கும் அதிகாரத்திற்குப் பொறுப்பேற்கும் மனப்பாங்கு வலைத்தள பயனாளர்களுக்கு வேண்டும்.

தேனீக்களை வைத்து மந்தைச்செயல்பாடுகளில் பங்கேற்ற நபர்களைக் கொல்வதும் மேலதிக அர்த்தத்தைத் தருகிறது. தேனீக்களின் திரள்(swarm)போலத் தனிநபர்கள் மாறுமிடத்தைக் குறிக்கிறது. இயந்திரத் தேனீக்களின் திரளைக்கொண்டு நகரம் முழுக்க உள்ள அத்திரளைச் சேர்ந்த நபர்கள் கொல்லப்பட்டு அடையாளமற்று பிணங்களாகக் கிடத்தப்படுவது நவீன உலகின் துன்பியல் நாடகமாகப் பரிணமிக்கிறது.

 

Fifteen Million Merits :

யூட்டூப்பில் scroll செய்யும்போது கீழே தோன்றும் வட்டவடிவிலான ஐகான் முடிவின்மையைச் சுட்டுவதாக உணர்ந்திருக்கிறேன். முடிவின்மைக்கும் ஒருவரால் தொடுதிரையின் முன் அமர்ந்து நுகருமளவு வீடியோக்களை யூட்டூப் கொண்டுள்ளதாக அப்போது எண்ணிக்கொண்டேன். தொடுதிரையில் விரல் நழுவ நழுவ ஏராளமான கலாச்சார பண்டங்கள் (cultural products) நம்மைச் சூழ்கின்றன. இவையனைத்தையும் உள்வாங்கிச் செரிக்கக்கூடியவரே அதிமனிதர்.

முகப்புத்தகத்தின் news feed-ஐ மேலிருந்து-கீழாக நகர்த்தும்படியே ஒரு முழு நாளைக்கழிப்பதென்பது வாரத்தின் அனைத்து நாட்களையும் இருண்மையாக ஆக்குவதன்றி வேறல்ல. அத்தகைய மந்தநிலையைத் தோற்றுவிக்கக் கூடியவை சமூக வலைத்தளங்கள், பங்கேற்பாளர்களை எந்நேரமும் பங்கேற்கத் தூண்டும்படியே அவை வடிமைக்கப்பட்டும் உள்ளன. Form follows function.

பெரிய திரைகள் சூழ்ந்த படுக்கையறையிலிருந்து ஃபிங் எழுந்திருக்கும் முதல் காட்சி தொடுதிரையின் ஊடுருவல்களையும் அவை மனித கட்புல அனுபவங்களின் மீதான ஆதிக்கத்தையும் குறிப்புணர்த்துகிறது. ஃபிங் வாழும் சமூகத்தினுடைய படிநிலையில் ஒரு நபரினுடைய இடத்தைத் தீர்மானிக்கும் விதமாக மதிப்பு புள்ளிகள் உள்ளன. அதிகமான புள்ளிகளைப் பெற்றிருப்போரால் Hotshots எனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தகுதியைப்பெறுவர். அதில் வெற்றி பெறுவதன்மூலம் படிநிலையில் மேலே செல்லக்கூடிய சாத்தியமுண்டு. மதிப்பு புள்ளிகளைப் பெறுவதற்கு நிலையாக நிறுத்தப்பட்டிருக்கும் இயந்திரமொன்றை நெடுநேரம் ஓட்டியபடி இருக்க வேண்டும். அச்சமூகத்தில் வேலை என்பது அதுமட்டும்தான். வேலை முடிந்த பின் திரைகள் சூழ வீடியோ கேம் அல்லது இன்பத்துய்ப்பு நிகழ்ச்சிகளை நுகரலாம். விளையாடிக்கொண்டிருக்கும்போதோ நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதோ திரையில் விளம்பரங்கள்

இடையீடு செய்யும். பார்வையை அகற்றாமல்

விளம்பரங்களைப் பார்த்தேயாக வேண்டும். இல்லையெனில் எரிச்சலூட்டும்படி அறைமுழுக்க சத்தமெழும். இத்தகைய சூழலுக்குள் வாழும் மனிதர்களின் உளநிலையிலிருந்து நம்முடைய உளநிலை வேறுபட்டதல்ல. அதி-நுகர்வினால் அர்த்தப் பூர்வமான எதையும் உள்வாங்கும் திறனை இழந்து நுகர்வுச் சமூகத்தின் திணிப்புகளைத் செரித்துக்கொண்டு சுயத்துடனே அந்நியமாகி தொடுதிரை உயிரியாக மீந்திருக்கிறோம். அதன் விளைவுகளே கலாச்சார மட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் தட்டையான k-pop பாடல்களையொத்த உணர்வு நிலை.

பயன் மதிப்பைக்காட்டிலும் (use value) பரிவர்த்தனை மதிப்புதான் (exchange value) அச்சமூகத்தினை இயக்குகிறது.

அச்சமூகத்தில்

அனைத்துப் பொருட்களும் பண்டமாக்கப்படுதலின்மூலம் சமமாக ஆக்கப்படுவதால் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பு சிதைவடைகிறது. அங்கு மக்களும் பண்டங்களாகவே பார்க்கப்படுகின்றனர். பயன்மதிப்பை ஒரு பொது அளவுகோலுக்குள் கொண்டு வர முடியாது. பரிவர்த்தனை மதிப்பை அவ்வாறு செய்ய முடியும். ஏனெனில், அது எண்ணிக்கையால் அளந்துவிடக் கூடியது. உதாரணமாக, ஃபிங்குடைய சமூகத்தில் ‘merits’ எனும் பொதுவான அளவுகோல் செயல்பட்டுவருகிறது. அது ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பைக் குறிப்பதாகும். அங்கு ஒரு சோடா வாங்கப் பார்க்கிறோம் 500 merits தேவைப்படுவதாகவும் வாழைப்பழமொன்று வாங்க 2000 merits தேவைப்படுவதாகவும் ஒரு காட்சியில் பார்க்கிறோம். எனில், ஒரு வாழைப்பழம் நான்கு சோடாவிற்குச் ‘சமமாகிறது’.

இத்தகைய பொதுவான அளவுகோலைக்கொண்டு அனைத்துப்பண்டங்களையும் -மனித பண்டங்கள் உட்பட – சமமான தளத்திற்குக் கொண்டு வர முடியும்.

அதீத பண்டமாக்கலுக்குள்ளான சமூகங்களில் உண்மையான கலைப்படைப்புகள் வெளிவருவதில்லை. அபி, தனக்காகவென்று காகிதத்தில் செய்யும் கலைப்பொருள் ஒன்று பரிவர்த்தனை மதிப்பு இல்லையென்பதால் அச்சமூகத்தில் அது வெறும் ‘குப்பை’யாகக் கருதப்பட்டு குப்பைத்தொட்டிக்குள் வீசப்படுகிறது.

அபி, பாடுவதை ரகசியமாகக் கேட்கும் ஃபிங்,அவரை Hot shots நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூறுகிறார். பங்கேற்குமளவு தன்னிடம் மதிப்பு புள்ளிகள் இல்லையென மறுக்கும் அபிக்கு, ஃபிங் தன்னுடைய மதிப்பு புள்ளிகளையும் அளிப்பதாகக் கூறி நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறார். நிகழ்ச்சியின் நடுவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அபி பாடியது பிடித்துப்போகிறது. அந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அவதார்கள் வழியாகப் பங்கேற்று தங்களுடைய விருப்புகளை வெளிப்படுத்துவதுபோலான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், மேலும்

செல்வதற்குரிய வாய்ப்பு அபிக்கு வழங்கப்படுவதில்லை. Wraith எனும் நடுவர் தன்னுடைய Wriath Babes நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பளிக்கிறார். அதுவொரு முழுநேர போர்னோகிராபிக் நிகழ்ச்சி.

நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் தூண்டுதலாலும் நிகழ்ச்சிக்கு முன்னர் அவருக்கு அளிக்கப்பட்ட திரவமொன்றின் விளைவாயும்

அவ்வாய்ப்பை அபி ஏற்றுக்கொள்வார்.

(அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் Cuppliance  எனும் அத்திரவத்தைக் குடிப்பது அவசியம். Cuppliance என்பது compliance என்பதைக் குறிக்கிறது. தமிழில்  உடன்படுதல் என்று பொருள் கொள்ளலாம்.)

இச்சம்பவத்தினால் ஃபிங் மிகுந்த கோபத்திற்குள்ளாகி  இறுதியில் அச்சமூக அமைப்பின்  எதிர்க்குரலாக மாறுகிறார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்று கழுத்தில் கத்தியை வைத்தபடி நீண்ட வசனமொன்றைப் பேசி தன்னுடைய எதிர்ப்புணர்வை வெளிக்காட்டுகிறார்.

நிகழ்ச்சியில் ஃபிங் கூறுவது பின்வருமாறு : All we know is fake fodder and buying shit. That’s how we speak to each other, how we express ourselves is buying shit.. Show us something real and free and beautiful, you couldn’t. It’d break us, we’re too numb for it, our minds would choke. There’s only so much wonder we can bear, that’s why when you find any wonder whatsoever you dole it out in meager portions, and only then till it’s augmented and packaged and pumped through ten thousand pre‐assigned filters, til it’s nothing more than a meaningless series of lights, while we ride day‐in, day‐out–going where? Powering what? All tiny cells in tiny screens and bigger cells in bigger screens and fuck you… fuck you all, for taking the one thing I ever came close to anything real about anything! For oozing around it and crushing it into a bone, into a joke, one more ugly joke in a kingdom of millions… fuck you!

ஆனால், அவருடைய எதிர்ப்புக்குரலுமே கூட நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டு பார்வையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. எதிர்ப்புணர்வு நுகர்வுப்பொருளாக மாற்றப்படும் பட்சத்தில் நாம் வெளிப்படுத்த வேண்டிய எதிர்ப்புணர்வுச் செயல்பாட்டை நமக்காக அந்த நுகர்வுப் பொருளே ஆற்றுகிறது. இவ்வாறு தனியர்களின் மனநிலையில் மந்தத்தன்மையை (passiveness) தோற்றுவித்து நுகர்வு முதலாளியம் தன்னை பரிணமித்துக்கொள்வதை எபிசோடின் இறுதிக்காட்சி உணர்த்துகிறது.

அதாவது, இன்றைய நுகர்வுச் சமூக இயக்கம் அதன் எதிர்விசைகளையும் ஊக்குவித்தபடியே வளர்கிறது. ஆதிக்கம், தனிநபர்களின் விருப்புறுதிக்கு மாறாக இருந்த நிலை மாறி தன்னிலையின் விருப்புறுதியோடே நுகர்வுச் சமூகத்தில் தன்னை பங்குகொள்ள ஊக்குவிக்கிறது. இந்த எபிசோட் கருத்தியல் மேலாதிக்கத்தின் பரிமாணங்களையொட்டிய நம் பார்வைகளை விஸ்தரிக்க உதவுகிறது.

அதிகாரத்தின் பண்பு மாற்றத்தினை உணர்த்தும் உச்சகட்டமாக இறுதியில் ஃபிங் ஒரு நுகர்வுப்பண்டமாக மாறி நிற்கும் தருணத்தைப் பார்க்கையில் நம்முடைய அதிகாரம் பற்றிய புரிதல்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

 

Men Against Fire :

Men Against Fire எபிசோடில் தனியார் இராணுவ நிறுவனமொன்று வீரர்களின் மூளையினுள் MASS எனப்படும் chip-ஐ புகுத்திவிடுவர். அது யதார்த்தத்தைக் குலைத்து பிழையான விஷயங்களை அவ்வீரர்களுக்கு வழங்கும்படியான பணியைச் செய்யும். அச்சிப்பை மாட்டிய பின்னர் அந்நிறுவனம் யாரையெல்லாம் எதிரியாகக் கருதுகிறதோ அம்மக்களின் உருவங்களை இந்த வீரர்கள் எதிர்கொள்ளும்போது அம்மக்கள் ஜோம்பிக்களைப்போல தெரிவர். DNA அடிப்படையில் பலவீனமற்ற மக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவோரை நாட்டின் நலன், முன்னேற்றம் கருதி கொன்றொழிக்கும் திட்டத்தினை அரசாங்கமும், தனியார் இராணுவ நிறுவனமும் இச்செயல்பாடுகளை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும். அந்த சிப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால் அவர்கள் இயல்பான உடல்களைக் கொண்ட சாதாரண மனிதர்கள்தான். MASS சிப், அந்த யதார்த்தத்தைக் குலைத்து அவ்வீரர்களுக்கு வழங்கும்போது அவர்கள் அம்மக்கள்மேல், கரிசனம் கொள்ளாது யோசிக்காமல் எளிதாகக் கொல்லும்

சுதந்திரத்தைத் தருகிறது. கூடவே அந்நிறுவனம் அம்மக்களைப் பற்றிய கொடூரமான செய்திகளை வீரர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பர். மூளையினுள்ளே பொருத்தப்படும் சிப்பை ‘ஐடியாலஜி’யைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஐடியாலஜி என்பது கழற்றி மாற்றிக்கொள்ளும் ‘சிப்’போலக் கையாளப்பட்டுள்ளது. இப்பார்வையின் மீதான சிறு விமர்சனத்தைக் கீழே காண்போம்.

உதாரணமாக,

ஒரு நாஜி தன்னுடைய தினசரி வாழ்க்கையில் நல்ல குணாதிசயங்களைக்கொண்ட யூதரை எதிர்கொள்ளும்போது நாஜி ஐடியாலஜி கற்பித்த ‘யூதர்கள் மோசமானவர்கள் ; எப்போதும் ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டவர்கள்’ போன்ற கருத்துத்திணிப்புகள்

பொய்யாகும் அல்லவா? இல்லை. இங்கு தான் ஐடியாலஜியின் பணியைச் சிறப்பாக விளங்கிக்கொள்ள முடியும் என்கிறார் ஸ்லாவோய் ஜிசெக். ஐடியாலஜியின் பணி யதார்த்தத்தைத் திரித்து அளிப்பதல்லாமல் யதார்த்தத்தைக் கட்டமைத்துத் தருவதாகவே அதன் பணி இருக்கும். அந்த நாஜி ‘இந்த யூதர்களே இப்படித்தான். வெளியில் நல்லவர்போல நடிப்பர். ஆனால் உள்ளுக்குள் அனைத்து கெட்ட எண்ணங்களையும் கொண்டிருப்பர்’ என்று இந்த எதிர்கொள்ளலை சமன்படுத்திக்கொள்வார். கான்ஸ்பிரஸி தியரிக்களை பேசித்திரியும் நபரிடம் ஆதாரங்கள் அல்லது தரவுகளை வழங்கினால் அவர் நிலைகுலைய மாட்டார்.அத்தரவுகளையுமே தன்னுடைய கான்பிரஸி தியரியை வலுப்படுத்திக்கொள்ளவும் மறு-உறுதி செய்துகொள்ளவும் பயன்படுத்திக்கொள்வார்.

ஐடியாலஜி, தினசரிகளுக்கு அர்த்தம் தரும் ஒருங்கமைப்புச் சட்டகத்தை அதன் பற்றாளர்களுக்கு வழங்குகிறது. எனவே ஐடியாலஜியை வழமையான அணுகுமுறையிலிருந்து ‘பிறழ் மெய்மை’ என்று கூற முடியாது.’யதார்த்தத்திற்கும் ஐடியாலஜிக்குமான வித்தியாசம் இல்லாது போகும்போதுதான்

ஒரு ஐடியாலஜி நம்மை ஆழமாகப் பற்றியிருக்கிறது என்று அர்த்தம். அதாவது தினசரி யதார்த்தத்தை அனுபவங்கொள்ளும் முறையையே தீர்மானிக்கும்போது ஒரு ஐடியாலஜி வெற்றியடைகிறது என்பார் ஜிசெக்.

(An ideology is really ‘holding us’ only when we do not feel any opposition between it and reality — that is, when the ideology succeeds in determining the mode of our everyday experience of reality itself. – The Sublime Object of Ideology pp. 49-50 – Slavoj Zizek)

‘மக்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாமல் செய்கிறார்கள்’ என்பது ஐடியாலஜி பற்றிய மார்க்ஸிய நோக்கு. மார்க்ஸிய நோக்கைப் பரிசீலித்து

ஐடியாலஜியின் சமகால செயற்பாட்டு வடிவம் ‘cynical reason’ – people are cynically aware of ideology – என்கிறார் ஜிசெக். இன்றைய ஐடியாலஜியின் இயக்கமென்பது ஒருவர் தன்னையறியாமலேயே ஒரு விடயத்தைச் செய்கிறார் என்பதல்லாமல் அறிந்தும் ஒரு விடயத்தைச் செய்கிறார் என்பதையே அவர் சுட்டுகிறார்.

அறிவு ரீதியில் சமனின்மை இருக்கும்போது மட்டுமே மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஐடியாலஜி பற்றிய பார்வையை வளர்க்க இடமுண்டு. உதாரணமாக, 1930-களில் சிகரெட் பயன்பாட்டால் கேன்சர் வருவதில்லை என்று பொய்யாக விளம்பரம் செய்யப்பட்டது. இங்கு நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர்.

உற்பத்தியாளருக்குத் தெரிந்த உண்மை நுகர்வோருக்குத் தெரியாமல் ஆக்கப்படுகிறது. இது அறிவுச் சமநிலையில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதால் நுகர்வோர் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இன்று சிகரெட்டின் அட்டைப்பெட்டியிலேயே இது கேன்சர் வரவழைக்கக் கூடியதென்று வாசகம் ஒட்டப்பட்டிருக்கிறது. இங்கு நுகர்வோர்-உற்பத்தியாளருக்கிடையே அறிவு ரீதியான சமநிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் சேமிப்பு, சூழல் மாசுபாடு போன்ற பிரச்சினைகளைத்தீர்க்க ‘விழிப்புணர்வுச்’ செயற்பாடுகள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போதாமையாக இருப்பது இதனால்தான். எனவே, நம்முடைய ஐடியாலஜி பற்றிய கருதுகோள்களும் மேற்சொன்ன மாற்றங்களுக்கு முகங்கொடுத்தேயாக வேண்டும்.

(..fetishist disavowal: “I know it, but I don’t want to know that I know, so I don’t know.” I know it, but I refuse to fully assume the consequences of this knowledge, so that I can continue acting as if I don’t know it.

Violence: Six Sideways – Slavoj Zizek)

உலகத்து நடப்புகளை அர்த்தப்படுத்திக்கொள்தற்கான சட்டகத்தை அளித்து குறிப்பிட்ட உலகப்பார்வையை

ஐடியாலஜி ஒரு மனிதருக்கு வழங்குகிறது. அது ‘சிப்’ போல யதார்த்தத்தைத் திரிபாக வழங்குவதில்லை. மாறாக,

யதார்த்தத்தை உருவாக்கி அளிப்பதே ஐடியாலஜிதான் என்பதுவே இதற்கு மாற்றாக நாம் முன்வைக்கும் பார்வை. ஆகவேதான் ‘சிப்’பை கழற்றிவிட்டால் பிறழ் மெய்மை, நீங்கி யதார்த்த உண்மை வெளிப்பட்டுவிடும் என்று எபிசோட் முன்வைக்கும் பார்வையை நாம் இங்கு விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளோம். இந்த எபிசோடினை, மற்றமையை மனித நீக்கம் செய்யும் பேரினவாதச் சொல்லாடல்கள், பாசிச பரப்புரைக் கருவிகளின் பண்பியல்பு போன்ற கோணங்களிலிருந்தும் அணுகலாம்.

 

******

Sign Out

 

Everything not saved will be lost