Sunday, Jun 26, 2022

கத்துங் குயிலோசை

ந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து அந்த நள்ளிரவிலும் அந்தக் குயில் தன் அடிவயிற்றிலிருந்து முழு உயிரின் சக்தியையும் திரட்டி எழுப்பித் தொண்டை கதறத் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தது. ஆம் கத்திக் கொண்டிருந்தது. கூவவில்லை. பாடவில்லை.

கடந்த ஒரு வாரமாக இதே நிலை தான். இரவு பகல் பாராமல் ஓயாமல் அந்தக் குயில் மனிதர்களுக்கும் இந்த உலகில் வாழ இடமும் உரிமையும் இருக்கிறது என்பதை உணராமல் கூப்பாடு போட்டுக் கொண்டேயிருந்தது. ஏற்கனவே, அலுவலகப் பணி அழுத்தம் காரணமாகவோ, குடும்பச் சுமை காரணமாகவோ, நாற்பது எனும் நடு வயதில் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆண் ‘மெனொபாஸ்’ காரணமாகவோ, ‘கொரோனா’ காலப் பதற்றம் காரணமாகவோ இல்லை என்ன காரணம் எனத் தெரியாத ஒரு காரணத்தாலோ தூக்கம் என்பதே சிரமமாகிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில் இந்தக் குயிலின் குரல் வேறு பெரும் தொந்தரவாக இருந்தது.

வீட்டில் மற்றவர்கள் தூங்குகிறார்களா எனக் கவனித்தான். அவன் மனைவி, மகன், அப்பா, அம்மா எல்லோருக்கும் அந்தக் குயிலின் குரல் ஒரு பொருட்டாகவே இல்லை. முதலில், ஒருவேளை தனக்கு மட்டும் தான் அந்தக் குரல் கேட்கிறதா, இது ஏதும் ‘ஒலி மாயை’ சம்பந்தப்பட்டதா எனப் பயந்தான். பிறகு அடர்த்தியாக நெடுநெடுவென வளர்ந்திருந்த மாமரத்தில் ஒளிந்திருந்த அந்தக் குயிலை நேரில் தன் கண்களால் கண்டதும் தனக்குச் சித்த பிரம்மை எதுவும் இல்லை எனச் சமாதானமானான்.

இரவில் தானே இந்தத் தொந்தரவு பகலில் சற்று நேரம் கண் அயரலாம் என்றால் அந்தக் குயில் அப்போதும் கத்திக் கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு கஷ்டத்தை அவன் அனுபவித்ததேயில்லை. ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் பெங்களூரிலிருந்து கோவைக்கு வந்து கொண்டு தானிருக்கிறான். இந்த மாமரம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒருவேளை கொரோனா காலம் தான் இதற்கும் காரணமோ என்னமோ. ஆள் நடமாட்டம் குறைந்து, மற்ற சப்தங்கள் அடங்கி, புலன்கள் கூராகி, உணர்திறன் அதிகரித்ததால் இந்தக் குரல் இப்போது கவனத்திற்கு வருகிறதோ.  வீட்டாரைக் கேட்ட பின் தான் அவர்கள் அந்தக் குயிலின் குரலை உணர்ந்து தங்களுக்கும் அந்தக் குயிலின் குரல் கேட்பதாகவும் ஆனால் தூங்க விடாதபடி அது செய்யவில்லை எனவும் கூறினர். காது அடைப்பான்கள் பெரிதாக உதவவில்லை. அவற்றை அணிந்து கொண்டு உறங்குவது கடினமாக இருந்தது.

பெங்களூரில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தப் பிரச்சனை இல்லை. ஒருவேளை அங்கே இப்போது குயில் குரல் தொந்தரவு ஏதும் ஆரம்பித்திருக்குமோ. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் பிரசாத் உடன் நேற்று பேசியபோது, அவர் அங்கே, உப்பரிகையில் புறாக்கள் மலம் கழித்துவிட்டுச் செல்வதும், கூடு கட்டி முட்டையிடுவதுமாகப் புதிய தொந்தரவு ஒன்றைச் சொன்னாரே ஒழியத் தூக்கம் ஒழியக் கத்தும் குயில் பற்றி ஏதும் சொல்லவில்லையே.

அடுத்த நாள் காலை அந்தக் குயிலை எப்படி விரட்டுவது என ஒரு திட்டம் போட ஒரு பட்டியல் போட்டான். சுண்டுவில், பொம்மைத் துப்பாக்கி, கைவிளக்கு என்றெல்லாம் யோசித்து ‘அமேசான்’ இணைய தளத்தில் அவற்றைத் தேடி விலை பார்த்தான். இங்கே இருக்கும் கைவிளக்கு கூட சக்தி வாய்ந்த ஒளி உமிழ்வது இல்லை. ‘ச்சை’ என்றிருந்தது அவனுக்கு. பறவைகளின் காதலனாக, பறவை ஒளிப்படக் கலையில் விருப்பம் கொண்டவனாக இருக்கும் தான் ஏன் இப்படி புத்தி பேதலித்து யோசிக்கிறோம் என நினைத்தான். பெருங்கொன்றை, சரக்கொன்றை, செம்மயிற்கொன்றை, வசந்தராணி, பொன்னரளி, கதலி, மரமல்லிகை, மாமரம் என எத்தனைப் பூமரக் கிளைகளில் எத்தனைக் குயில்களைத் தன் தொலைநோக்கியால் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறான். மேலும் அவன் ஒரு கவிஞன் வேறு.

உதிரும் கதலி மலர்கள்

கோடையின் பரவசத்தைத் துயிலெழுப்பியபடி

குயில்கள் கூடி அதிரும் கிளை

என ஹைக்கூ எல்லாம் கூட எழுதியிருக்கிறான். அவனா இப்படியாகிவிட்டான். எப்படி இந்தக் கவிஞர்கள் உண்மையை உணராமல் குயிலின் ஓசை இனிமை என்று உருட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என இப்போது வியந்தான். ‘கத்துங் குயிலோசை சற்றும் வந்துத் தன் காதிற் படவேணாம்’, என வேண்டிக் கொண்டான்.

அன்று மதியம் வீட்டின் பின்புறம் போய், கூவிக் கொண்டிருந்த அந்தக் குயிலை அண்ணாந்து பார்த்தான். அது உயரத்தில் அமர்ந்திருந்தது. இரவைப் போல் உடல் கருத்திருந்த அது, தன் சிவந்த கண்களால் அவன் சிவந்த கண்களைச் சந்தித்தது. உடனே சட்டெனக் கிளை தாவி இலைகளுக்குள் ஒளிந்து கொண்டது. குயில் கூச்சம் சுபாவம் கொண்டது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அது கத்துவதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தது.

குயில் ஏன் கூவும் எனவும் அவனுக்குத் தெரியும். ஆனால் ஒரு குயில் ஏன் இடையறாது கூவுகிறது இல்லை கத்துகிறது என அறிய இணையத்தில் தேடினான். அதே காரணம் தான். ஆண் குயில் பெண் இணை தேடித் தான் அப்படிக் கூவிக் கூப்பாடு போடுமாம். அதுவும் மாம்பழம் தோன்றும் பருவம் என்றால் அது குயில்கள் கூடும் காலம். எனவே சப்தம் அதிகமாகவே இருக்கும். ஆண் குயில் பகல் இரவு எனப் பார்க்காமல் துணை தேடிக் கூவிக் கொண்டேயிருக்குமாம். சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்தக் குயில் கத்தல் காரணமாகத் தூக்கம் கெட்டுக் கோபப்பட்டு தண்ணீர்க் குழாய் மூலம் மரத்தின் மேல் நீரைப் பாய்ச்சி அடித்துக் குயிலை விரட்டுகிறார்களாம். அட அந்தப் பெண் குயிலாவது திரும்பக் கூவி சமிஞ்சை கொடுத்து வந்து சேர்ந்து தொலைத்தால் பரவாயில்லை. அதுவும் நடக்கக் காணோம்.

அப்பாவிடம் போய் ‘நம்மிடம் அவ்வளவு பெரிய நீர் பாய்ச்சும் குழாய் இருக்கிறதா’ எனக் கேட்டான். தோட்டத்திற்கு நீர் விட ஒரு நீளமான குழாய் இருந்தது தான். ஆனால் அதிலிருந்து வரும் தண்ணீரின் அழுத்தம் போதுமானதாக இல்லை. அதுவும் தவிர மீண்டும் இப்படி யோசிக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி வேறு அவனைப் பீடித்தது.

அப்போது தான் அவன் அப்பா சென்ற வருடம் சொன்னது அவன் ஞாபகத்தில் வந்தது. ‘இந்த மாமரம் நெடுநெடுவென எவ்வளவு உயரம் வளர்ந்துவிட்டது பார், என்னால் சருகுகளைக் கூட்டிக் குப்பையை அள்ள முடியவில்லை. மாம்பழங்களும் பறிக்க முடியாத உயரத்தில் தான் உருவாகுது. ருசியும் முதல் மாதிரி இல்ல. அதை வெட்டிவிடலாம்’. அப்போது அதை எல்லோரும் கடுமையாக எதிர்த்தார்கள்.

அம்மா, ‘அப்புறம் மாவிலைத் தோரணம் கட்ட என்ன செய்ய?’, என்றார். மகன் கூகிள் வரைபடத்தில் அவர்கள் வீட்டைக் காட்டி, ‘இந்தப் பகுதியிலேயே நம் வீட்டின் பின்புறம் தான் அவ்வளவு பச்சையாகத் தெரியுது தாத்தா. இங்க பாருங்க செயற்கைக் கொள் படத்தில் நம் வீடு எவ்வளவு அழகா இருக்கு’, என்றான். மனைவி எதிர்ப்பு காட்டாமல், ‘ஒண்ணும் தப்பில்லை. ஆனால் வெட்டின இடத்துல இன்னுமொரு மாமரம் நட வேண்டும். சின்னதா குட்டையா வளர்கிற மாதிரி ஒரு கலப்பின விதை வாங்கி வைத்துவிடலாம்’, என்றாள். அவன் தான் சூழலியல் குறித்து ஒரு பெரும் உரையை உணர்ச்சிகரமாக ஆற்றினான். அதை யாரும் ரசிக்கவில்லை.

இப்போது அதே மரம் வெட்டும் யோசனையை அவன் சொன்னான். ஆனால் அதை ஈடு செய்ய ஒரு சிறப்பான தோட்டம் அமைத்துத் தருவதாக வாக்கு தந்தான். வீட்டார் ஒத்துக்கொண்டார்கள். அடுத்த நாளே வீட்டுத் தென்னை மரத்தில் தேங்காய் போடுபவரை அழைத்துப் பேசி அதற்கு அடுத்த நாள் மாமரத்தை வெட்டிவிட முன்பணம் கொடுத்தார்கள். குறித்த நாளில் மரம் வெட்டுபவர்கள் வந்து காலையில் ஆரம்பித்த வேலையை சாயங்காலம் ஐந்து மணிக்குள் முடித்துக் குப்பையை அள்ளிக் கொண்டு மிச்சப் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

தோட்டம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வெய்யில் நேராக வீட்டிற்குள் வந்து சூடு கிளப்பியது. ஆனால் குயில் வராது, கூவாது என்ற சிந்தனையே நிம்மதியைத் தந்தது. அன்றிரவு தூங்கலாம் எனப் பத்து மணிக்கே அயர்ந்து படுத்துக் கண் மூடித் தூங்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது, ‘கத்துங் குயிலோசை’ சற்றே வந்து அவன் காதிற்பட்டது. திடுக்கிட்டு விழித்தான். வழக்கம் போல மற்றவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குயிலின் குரல் கேட்டது போல இருந்ததே, பிரமை தானோ.

கண்களை மூடினால் குயிலின் குரல், விழித்தால் இல்லை. ஆனால் இந்தக் குரல் வேறு விதமாக இருந்தது. ‘கூஊ, கூஊ, கூஊ, கூஊ’, என்ற நீண்ட கூக்குரலாக இல்லாமல், ‘குக், குக், குக், குக்’, என்ற குற்றொலியாக இருந்தது. பின்கதவைத் திறந்து தோட்டத்திற்குச் சென்று கைவிளக்கின் ஒளியில் பார்த்தான். வெட்டபட்டு தரையிலிருந்து அரையடி உயரம் மட்டும் இருந்த, சுற்றிலும் மீண்டும் வேர் பிடிக்காமல் இருக்கத் தூவிவிட்ட கல்லுப்புக் குவியலின் நடுவே, மிச்சமிருந்த மாமரத் தண்டின் மேல், உடலில் பழுப்பு வெளுப்பு வண்ணத் தீற்றல்களுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண் குயில் அவனை வெறித்துப் பார்த்தது அல்லது அவனுக்கு அப்படித் தோன்றியது.

 

 

 

No comments

leave a comment

error: Content is protected !!