முதற்கனலின் பிதாமகன்

இருபத்தியாறாயிரம் பக்கங்கள் இருபத்தியாறு தொடர் நாவல்கள் என ஏழு வருடங்கள் தொடர்ந்து எழுதி மகாபாரதத்தின் மறு ஆக்கமான “வெண்முரசு” எனும் நவீன காவியத்தைப் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்.

இருபத்தியாறு தொடர் நாவல் வரிசையில் முதல் நாவலாக ”முதற்கனல்” அமையப்பெறுகிறது. ஒட்டுமொத்த நாவல் வரிசையின் பிறப்பிடமாக முதற்கனல் விளங்குகிறது எனலாம். பிரபஞ்சத்தின் தோற்றுவாய் ஆற்றல்மிகுந்த கனலினின்றே பிறப்பெடுத்திருப்பதாக அறிவுலகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பெரு வெடிப்புக் கொள்கை கூறுகிறது. பெருவிசையின் கனல் ஒன்று வெடித்தெழுந்து இந்த புறப்பிரபஞ்சம் உருவாகியிருப்பது போல முதற்கனல் மூண்டெழுந்து வெண்முரசு எனும் அகப்பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது எனலாம். எண்ணிலடங்கா கதைமாந்தர்கள், அவர்களுக்கிடையேயான உறவுகள், உணர்வுகள், ஆடல்கள், தத்துவச் சிக்கல்கள், தெய்வங்கள், உபகதைகள், அரசுகள், அதன் அரசியல், எளிய மக்கள், மாக்கள், புனைவிட நிலங்கள், நிகழ்வுகள் என விரிந்து கொண்டே செல்லும் ஓர் அகவுலக பிரபஞ்சத்தை வாசக உள்ளங்களில் வெண்முரசு தோற்றுவிக்கிறது. மனித அகத்தே கண்ணோக்கினால் அத்தகைய பெருவிசையின் கனல் மூண்டெழக்கூடிய விசை காமமாகவும் காதலாகவும் தான் இருக்க முடியும். அதன் முதற் பெருங்காரணகர்த்தாவாக பீஷ்மர் நாவலில் அமையப் பெறுகிறார். முதற்கனல் நாவலின் நாயகனாக அவர் அமைகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.

நாயக அறிமுகம்

எப்போதும் ஒரு கதாநாயகனின் தோற்றமென்பது இக்கட்டான சூழ்நிலையில் அதனின்று மக்களை காக்கும் நிமித்தமே நிகழும். அங்ஙனம் அஸ்தினாபுரி எனும் பேரரசைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் ஓர் சிக்கல் நிகழ்வதாக கதை ஆரம்பிக்கிறது. சந்தனு மன்னரின் இறப்பு நிகழ்ந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், விசித்ரவீரருக்கு மண நிகழ்வும் நடைபெறாது, அவர் அரியணை ஏறாது ஆதுர சாலையில் இருக்கும் நிலையில் அந்த சலசலப்பு நிகழ்கிறது. அஸ்தினாபுரியின் வெற்றிடத்தை கணித்து அனுப்பப்பட்ட ஒரு போர் நிமித்தமான ஓலையினால் அமைச்சரவை சலனமடைகிறது. அதைக் கண்ணோக்கிய தளகர்த்தர் உக்கிரசேனர் “பீஷ்மர் இருக்கையில் நாம் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை” என்ற வரிகளின் மூலமாக பீஷ்மரின் நாயக அறிமுகம் வெண்முரசில் நிகழ்கிறது.

அஸ்தினாபுரியைப் பற்றிய விவரணையில் “இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம்” என்றும் “மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.” என்றும் அதன் சித்திரம் விரிகிறது. சந்திர குலத் தோன்றலாகி வந்து நூறு யானைகளின் பலம் கொண்ட ஹஸ்தி அமைத்த நகரமாக அஸ்தினாபுரி காலத்தில் எழுந்து வருகிறது. முப்பத்தியைந்து தலைமுறைகளாக துன்பங்கள் ஏதும் சந்தித்திராத மக்கள் மாமன்னர்களின் வரிசையில் பன்னிரெண்டாவதான பிரதீபரின் மகன் சந்தனுவின் மரணத்திற்குப் பிறகு நிமித்திகன் அஜீமீகனின் வரிகளால் கவலை கொள்கின்றனர்.

சந்தனுவின் இறப்பின் போது பித்தான நிமித்திகன் அஜீமீகன் “அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது. சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது! தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டதுஏறிவிட்டது! வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது. இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்” என்ற வரிகளை உதிர்த்துவிட்டு இறந்துவிடுகிறான். சந்தனு மன்னரின் மறைவுக்குப் பின்னர் அவரின் மகனான சித்ராங்கதனும் மறைந்து ஒரு வருடம் முடியும் தருவாயில் இது போன்ற ஓலைத் தூது வந்திருப்பது அஸ்தினாபுரியின் மீதான போர்தொடுத்தலுக்கு நிகரான ஒன்றாகும். இங்கு தான் பீஷ்மர் என்ற சொல் வந்து நின்று அனைவரையும் ஆற்றுப்படுத்தி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது.

பிதாமகர்

சந்தனு மன்னரின் ரதத்தில் ஏறி தன் ஏழு வயதில் முதன் முதலாக பீஷ்மர் அஸ்தினாபுரிக்குள் நுழைகிறார். சஞ்சலமற்ற பெரிய விழியும், அகன்ற மார்பும், பொன்னிற நாகம் போன்ற கையும், ரதத்தில் நின்றிருந்த தன் தந்தை சந்தனுவை விட உயரமும், ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொணர்ந்து நிறுத்தும் பேச்சும், ஒரு கனமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்குரிய கருணை நிறை புன்னகையும் பீஷ்மர் கொண்டிலங்குகிறார். அவரின் நகர்நுழைவைக் கண்ட மக்கள் தாங்கள் கனவுகளில் கண்ட அனைத்து பிதாமகரின் முகமாகக் கண்டு, குலமூதாதைகளின் நகர் நுழைவாக கண்ணுற்று மகிழ்கின்றனர்.

அஸ்தினாபுரிக்கு உடல் வலிமை மிகுந்த கங்கர் குலத்திலிருந்து ஒரு மகன் தேவை என்று பிரதீபர் தன் மகன் சந்தனுவை கங்கையை மணந்து கொள்ளச் செய்கிறார். சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்த எட்டு மைந்தர்களில் கங்கையை நீந்திக் கடந்தவனாக, கங்கர்களின் உடல் வலிமை கொண்டவனாக பீஷ்மர் பிறக்கிறார். தன் தந்தை சந்தனு சத்யவதியை மணம் முடிக்கும் பொருட்டு நைஷ்டிக பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க சிரமேற்கொண்டு “தேவவிரதன்” என்று மக்களால் அழைக்கப்படுபவர். பீஷ்மரின் உருவத்தை வாசகர்கள் புனைந்து நிறுத்திக் கொள்ளுமளவுக்கான விவரணை நாவலில் காணக்கிடக்கிறது. ‘காகபட்சமாக வெட்டப்பட்ட கூந்தல், நரையோடிய கரிய கற்றை, நரம்பு புடைத்த பெரிய தோள், கரிய கனத்த தாடி, காதுகளில் கிளிஞ்சல், கழுத்தில் குரு குலத்து இலட்சினை, சரிகைகளற்ற வெண்ணிற ஆடை மேல் கட்டிய மான்தோல் கச்சை’ என அவரின் தோற்றமே நாயக பிரம்மண்டத்தை அளிக்கிறது.

நாவலின் பிற கதாபாத்திரங்களின் வழியாகவும், அவர்களுக்கும் பீஷ்மருக்கும் இடையேயான உறவின் வழியாகவும், உரையாடல் வழியாகவும் பீஷ்மரை மேலும் அறியலாம்.

சத்தியவதி-பீஷ்மர்:

சத்யவதி யமுனையின் மச்ச குலத்தை சேர்ந்தவள். போர் ஓலை நிமித்தமாக பீஷ்மரை சத்யவதி சந்திப்பதாக அவர்களின் முதல் சந்திப்பு நாவலில் வருகிறது. அஸ்தினபுரியின் பேரரசியாக ஒவ்வொரு முடிவுகளையும் திடகாத்திரமாக எடுக்கக் கூடியவள் சத்தியவதி. அவள் ஒருவரிடம் மனம்விட்டு தன் துன்பங்களைச் சொல்லி, புலம்பி கண்ணீர் வடிப்பாளேயானால் அது தன் மைந்தனாகக் கருதும் பீஷ்மர் முன்னால் மட்டுமே இருக்க முடியும். போர் ஓலைச் செய்தியை முறையிடும் சத்தியவதியிடம் பீஷ்மர் “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது… அஸ்தினபுரி அதன் வீரப்புதல்வர்களை இன்னும் இழந்துவிடவில்லை. அஸ்தினபுரிக்கு நான் இருக்கிறேன்..” என்று ஆறுதல் படுத்துகிறார்.

விசித்திரவீரியன் அரியணை ஏறி அமர்வது மட்டுமே இதுபோன்ற ஓலைக்குத் தீர்வாக இருக்க முடியும் என்று சத்யவதி கருதுகிறாள். அஸ்தினபுரியின் 55 அரசுகளுக்கும் தூது அனுப்பியும் எந்த அரசும் அவனுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என்பதை பீஷ்மரிடம் முறையிடுகிறாள். இந்நிலையில் காசி நாட்டரசன் பீமதேவன் தன்னுடைய அழகிய மகள்களான அம்பை அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கு மனத்தன்னேற்பு நிகழ்த்த திட்டமிட்டுள்ளான் என்றும் அதற்கான அழைப்பு அஸ்தினாபுரிக்கு அனுப்பப் படவில்லை என்றும் பீஷ்மரிடம் கூறுகிறாள். விசித்ரவீரியனுக்காக பீஷ்மர் காசி நாட்டுக்குச் சென்று பெண்களைக் கவர்ந்து வர பணிக்கும் சத்தியவதியிடம் பீஷ்மர் மறுப்புரைக்கிறார். “அது அறப்பிழை. அஸ்தினாபுரி ஒரு போதும் எண்ணக்கூடாத திசை” என்று அறிவுருத்துகிறார். கந்தர்வ முறையையும் பைசாசிக முறையும் விளக்கி மறுப்புகூறும் அவரிடம் “நீ போ! சிறையெடு! ஆணை” என்கிறாள் சத்தியவதி. மேலும் மறுக்கும் பீஷ்மரிடம் “உனக்கு அரியணை ஆசை” என்று பழித்துரைக்கிறாள்.

அவள் சொற்களில் காயம் பட்டவராய் வேறு வழி இல்லாமல் பீஷ்மர் தன்னுடைய அறக் குழப்பம் தீர்க்க தீர்க்கசியாமரை நாடுகிறார். சூதரான அவர் பாராசருக்கு மச்ச குல சத்யவதியில் பிறந்த வியாசரை பற்றிய கதையைச் சொல்கிறார். “அவரே பொறுப்பேற்கட்டும் அவரே தொடங்கி வைக்கட்டும். அறத்தின் வழிகள் முற்றரிய முடியாதவை” என்று கூறி அவரை வியாசரிடம் அனுப்பி வைக்கிறார் தீர்க்கசியாமர்.

வியாசருக்கும் பீஷ்மருக்கும் இடையேயான உரையாடல் சகோதர பாசத்தை வெளிப்படுத்தக்கூடியது. அவரை சந்திக்கச் சென்ற இடத்தில் சித்திரகரணி என்ற சிங்கம், கந்தினி என்ற பசுவை இரைக்காக அடிப்பதை பார்க்கிறார். “பசுவைக் கொல்வது சிங்கத்தின் தர்மம் ஆகவே சிங்கத்திற்கு பசுவதையின் பாவம் கிடையாது. ஞானம் என்பது அடைவதில்லை ஒவ்வொன்றாய் இழந்த பின்பு எஞ்சுவது. பொறு…. நீசேர்த்துக் கொண்டவை எல்லாம் உன்னை விட்டு நாள் ஒன்று வரும்” என்று கூறிய வியாசரின் சொற்களில் உந்தப்பட்டு பீஷ்மர் காசி நாட்டு இளவரசிகளைக் கவர்ந்து வரச் செல்கிறார்.

முதலிரவுக்கு முன்பாகவே விசித்திரவீரியன் இறந்து விட அம்பாலிகையும் அம்பிகையையும் கருவுறச் செய்ய வியாசரை அழைத்து வரும் பணியையும் சத்தியவதி பீஷ்மரை ஆற்றச் செய்கிறாள். அஸ்தினபுரியின் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய பேரரசி சத்தியவதியின் கனவுகளை, ஆசைகளை செயல்படுத்தக்கூடிய செயல் வீரனாக பீஷ்மர் திகழ்கிறார்.

அம்பை-பீஷ்மர்

முதல் முறையாக அம்பையை பீஷ்மர் பார்க்கும்போது “திகைத்தார்” என்ற வரியை ‘ஜெ’ பயன்படுத்துகிறார். திகைத்த பீஷ்மர் “குரு குலத்து சக்கரவர்த்தினி” என்ற சொல்லால் மனதை நிறைகிறார். அதன்பின் தன்னை அடக்கி காசி நாட்டு இளவரசிகளை தன் வீரத்தைப் பயன்படுத்தி சிறை எடுக்கிறார். சால்வனைத் தன் காதலனாக உணர்ந்த அம்பை பீஷ்மருடன் விவாதித்து கிளம்பிச் சென்று அலைக்கழிந்து தன்னை உணர்ந்து மீண்டு வரும் இடத்தை ஆசிரியர் ஜெயமோகன் நுணுக்கமான வடித்திருக்கிறார்.

சால்வனை சந்தித்த அம்பை வார்த்தைகளால் காயம் பட்டு காசி நாட்டுக்குச் சென்று குழந்தையாக அழுதாற்றி திரும்பி வரும் வழியில் மூன்று தேவதைகளை சந்திக்கிறாள். முதல் தேவதை மொட்டுகளின் தேவதை சுவர்ணை ஆவாள். பெண் குழந்தைகளின் கனவுகளில் வாழ்பவள். மயிற்பீலியை வைத்து விளையாடிய குழந்தை அதை ஒரு குழந்தையின் தலையில் சூட்டும் ஒரு தருணத்தில் இன்னொரு தேவதையான சோபையிடம் கையளிக்கிறது. சோபை கன்னிப் பருவத்திற்கான தேவதை. மாயையான ஒரு தனி உலகில் அவளை வாழவைத்து அவளுடைய ஆடிப் பிம்பங்களையே அவளின் உலகமாய் நிறைத்து இனிதாக்கியவள். “நீ அறிந்த அனைத்தும் நீயே. நீ அறிந்த சாலவன் நீ சமைத்தது” என்று அம்பையிடம் கூறி அவளின் கன்னிப்பருவத்தை நிறைத்திருந்தது அவளின் அகங்காரமே என விளங்க வைக்கிறாள். மாயையிலிருந்து காதலை அறிந்த கணத்தில் சோபை அவளை விருஷ்டிக்கு கையளித்தாகச் சொல்கிறாள். விதைகளுக்குள் வாழும் விருஷ்டிக்கு அம்பை கையளிக்கப்பட்ட தருணமானது அவள் காதலை அறிந்த கணமாகும். “நீ அறிந்தவை அனைத்தும் நான். நீ தாயாக அல்லாமல் உன்னை ஒரு கணமும் உணர்ந்ததில்லை. நீ பீஷ்மரை காதல் கொண்ட தருணம் உன்னருகில் நான் இருந்தேன்” என்று விருஷ்டி அம்பைக்கு எடுத்துக் கூறி பீஷ்மருக்கு அவளின் மேலான காதலை விளங்க வைக்கிறாள். படகிலிருந்து இறங்கும் போது பீஷ்மரை அண்ணார்ந்து பார்த்த தருணத்தை நினைவூட்டுகிறாள். அம்பை காதலை உணரும் தருணம் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளை புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய அறிதல் தருணமாக விளங்குகிறது. காதலை உணர்ந்து அன்னையாகக் கனிந்து பீஷ்மரை மீண்டும் சந்திக்கிறாள் அம்பை.

இங்கு பீஷ்மருக்கும் அம்பைக்கும் இடையே நடக்கும் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகம் துவங்கிய காலகட்டத்திலிருந்து ஆணும் பெண்ணும் ஆடிக்கொண்ட ஆடல்தான் இது. பிரம்மமே தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டு காலம் முழுமைக்கும் ஆடும் ஆடல் எனலாம். ஒரு முடிவிலி விளையாட்டு எனலாம். அத்தகையதொரு நுண் தருணத்தின் உரையாடலை பீஷ்மருக்கும் அம்பைக்குமிடையேயான உரையாடலாக ஜெயமோகன் வடித்திருக்கிறார்.

கனிந்துருகி அவரின் மேல் இருக்கும் காதலால் தான் வந்திருப்பதாகச் சொல்லும் அம்பையிடம் “நான் என்ன செய்யமுடியும் தேவி? தாங்கள் சால்வனை வரித்துக்கொண்டவர்” என்ற வார்த்தைகளால் முதல் வெறுப்பை உமிழ்கிறார் பீஷ்மர். “நான் காமத்தை ஒறுக்கும் நோன்பு கொண்டவன். என் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அது. அதை நான் மீறமுடியாது” என்ற பீஷ்மரிடம் அவர்களுக்கிடையேயான முதல் சந்திப்பை நினைவுருத்துகிறாள். “நீங்கள் முன்பு என்னைப்பார்த்த முதல்பார்வையே பெண்ணைப்பார்க்கும் ஆணின் பார்வைதான். உங்கள் அகத்துடன் உரையாடிய முதல் பெண் நான்…” என்று கூறி அவருக்கு விளங்க வைக்க முற்படுகிறாள். “நீங்கள் விரும்புவது ஓர் அன்னையின் அணைப்பை மட்டும்தான். கட்டுண்டவேழம் போன்றவர் நீங்கள். மலைகளைக் கடக்கும் கால்களும் மரங்களை வேருடன் சாய்க்கும் துதிக்கையும் கொண்டிருந்தாலும் மூங்கில் இலைகளைத் தின்று கல்மண்டப நிழலில் வாழ விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்…அந்த சுயவெறுப்பிலிருந்து வந்தது உங்கள் தனிமை…அதை நான் மட்டுமே போக்க முடியும்” என்று அன்னையாகிக் கனிகிறாள். “அரியணையில் அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுக்கவென்று காலடியிலிட்டு, அத்தனை போகங்களையும் அறிந்து மூத்தபின் பெற்றமக்களிடம் நாட்டை அளித்துவிட்டு காடுபுகுந்தாலன்றி உங்கள் அகம் அடங்காது…. அது ஷத்ரியனின் உயிராற்றல். இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” என்று அவரின் சுயதர்மத்தைச் செய்ய அழைக்கிறாள். “அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை. ஆணுக்கு பெண் மட்டுமே துணை….அது பிரம்மன் வகுத்த விதி.” என்ற அம்பையின் வரிகளில் நம்மை உணர்வின் விளிம்புக்கு ஜெயமோகன் இட்டுச் செல்கிறார்.

காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்ற அம்பையை தன் தர்க்கப் புத்தியால் தகர்க்க வேண்டி தன் கடைசி ஆயுதமாக பீஷ்மர் அந்த வார்த்தைகளை உதிர்க்கிறார். “நீங்கள் ஒரு பெண்ணல்ல. இப்படி காதலுக்காக வந்து கேட்டு நிற்பதே பெண்ணின் இயல்பல்ல. பெண்ணுக்குரிய எக்குணமும் உங்களிடமில்லை. ஆணை வெற்றிகொள்பவள் பெண், பெண்மை மட்டுமே கொண்ட பெண்.” என்ற வரிகள் பெண்ணைக் காயப் படுத்தும் உச்ச வரிகளாக அமைகின்றன. இதற்கு மேலும் பேச ஏதுமில்லாது திரும்பிச் சென்ற அம்பை ஒரு கணம் திரும்பி, கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என நிற்கும் அந்த கணத்தில் பீஷ்மரிலிருந்து அது பிறக்கிறது. “எப்படி அது நிகழ்ந்தது என அவரே பல்லாயிரம் முறை பின்பு வியந்துகொண்ட ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு அவர் உதடுகளில் நிகழ்ந்தது.” அந்த ஏளனச் சுழிப்பினால் சுடப்பட்டு அம்பை கொற்றவையாக மாறி காடேகிறாள்.

“ஒன்றாய் விரி இருள் இரண்டு கூராய் வெகுண்டன” என்ற கம்பனின் வரிகளைப் போலவே…. பிரம்மம் பீஷ்மராகவும் அம்பையாகும் தன்னை பகுத்து காலந்தோறும் இந்த ஆடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் காதலால் கனிந்து உருகி விலகும் உச்ச கட்ட தருணம் தோறும் இந்த ஆடல் அமையப் பெறுகிறது. என்றாவது பீஷ்மர்கள் தங்கள் அகக்கட்டை, ஆழ்ந்த மௌனத்தை, தனிமையைக் கடந்து அம்பைகளை அடையலாம். அடையாமலும் போகலாம். காய்களை நகர்த்துபவன் எவனோ அவன் சலிக்கும் வரை இந்த ஆட்டத்தை ஆடலாம். இல்லையேல் அவனே இந்த ஆட்டத்தை முடித்தும் வைக்கலாம். ஆண்களும் பெண்களும் பேதமின்றி தங்களை பீஷ்மராக கற்பனை செய்து கொண்டு அந்த உணர்வின் உச்ச தருணத்தை வருடும்படியாக ஜெ படைத்துள்ளார். ஆண்-பெண் உறவு முறிவைத் தாண்டி, பிற உறவுகளுக்கிடையேயான உறவு முறிவுத் தருணங்கள் யாவற்றையும் அந்த ஒற்றை ஏளனச் சுழிப்பில் நிறுத்தி அதற்கு முன்னும் பின்னுமெனப் பிரித்து மீட்கவியலா முறிவுகளை சற்று அசைபோட வைத்து விடுகிறார்.

சிகண்டி-பீஷ்மர்

கொற்றவையான அம்பை பீஷ்மரை அழிப்பதற்கான ஆயுதமாக சிகண்டியை உருவாக்கி வைத்துவிட்டு தெய்வமாகிறாள். “ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி…இப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்று பீஷ்மருக்கு எதிரான கனலான முதற்கனலை சிகண்டியாக உருவாக்கிவிட்டு முதற்கனலில் மறைந்துவிடுகிறாள் அம்பை. பெண்ணெனப் பிறந்து தன் அன்னையின் ஆணையை ஏற்று ஆணாக தன்னை மாற்றிக் கொண்டு பீஷ்மரை அழிக்கும் ஒற்றை இலக்குடனேயே சிகண்டி தன் பயணத்தைத் துவங்குகிறான்.

“பீஷ்மர் அறிந்த நீ அறியாத ஏதுமிருக்கக்கூடாது” என்ற தன் அன்னை சொல்லுக்கிணங்க அக்னிவேசரிடம் சென்று பாடம் கற்கிறான். வீரமும் திறனும் முயற்சியும் ஒற்றை இலக்கும் கொண்ட சிகண்டியிடமிருந்த தீராக் குரோதத்தைக் கண்ட அக்னிவேசர் “நீ உன் அன்னையின் அடங்காப்பெரும்சினம் உடலெனப்பிறந்தவன். அவள் மைந்தன். அம்மைந்தனைப் பிறப்பித்தவர் பீஷ்மர் என்பதனால் அவர் உன் தந்தையேதான். தந்தையைக் கொல்ல விழையும் கணம் ஒன்று எல்லா மைந்தர் நெஞ்சுக்குள்ளும் ஓடிச்செல்லும். நீ அக்கணமே காலமாக ஆகிய மைந்தன், அவ்வளவுதான்” என்று தந்தைக்கும் மகனுக்குமான உறவை அவனுக்கு விளங்க வைக்கிறார். இனி அவன் அறிந்து கொள்ள வேண்டியது அவனின் தந்தையான பீஷ்மரைப் பற்றி தான் என்று அவனிடம் கூறுகிறார். அவனுக்கான மந்திரச் சொல்லாக “அது நீயே! தத்வமசி” என்று கூறி பீஷ்மரை நோக்கிய அவனுடைய தேடல் பயணத்தைத் தொடங்கி வைக்கிறார்.

சிகண்டியின் கண்கள் வழி நாம் அடையும் பீஷ்மரின் சித்திரம் அளப்பரியது. பயணந்தோறும் சூதர்களின் பாடல் வழி பீஷ்மரைப் பற்றிய கதைகளை அறிந்து கொண்டே அவருடன் நிகருக்கு நிகராக நின்ற பால்ஹிகரை சந்திக்கச் செல்கிறான்.

பால்ஹிகர் பீஷ்மரைப் பற்றிக் காட்டும் சித்திரம் ஆடிப்பிம்பங்களைப் பற்றிய அறிதலை அளிப்பவை. அது மேலும் மேலும் உள் சென்று நம்மைக் கண்டடையச் செய்பவை. பீஷ்மரை அவர் சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்து அவரை தேவாபியோடும் தன்னோடும் ஒப்பிடுகிறார். தேவாபியை அவர் இறக்கி வைக்காதது போலவே பீஷ்மர் தன் சகோதரர்களை தோளில் சுமந்தலைவதாகவும், அவர்களை இறக்கி வைக்காமல் பீஷ்மருக்கு விடுதலை இல்லை என்றும் கூறுகிறார். வெறிகொண்டவரைபோல உரக்க, “ஆடிப்பிம்பங்கள்… பரிதாபத்துக்குரியவை அவை. ஆடிப்பிம்பங்களுக்கு வண்ணங்களும் வடிவங்களும் உண்டு. அசைவும் உயிரும் உண்டு. கண்களில் ஒளியுண்டு, குரலுண்டு. அனைத்தும் உண்டு. ஆனால் அவற்றால் தங்களைத் தாங்களே நடத்திக்கொள்ளமுடியாது…அவற்றை நிகழ்த்துபவன் அவற்றுக்கு முன்னால் நிற்கிறான். அவனை அவை ஒன்றும் செய்யமுடியாது. ஆடிக்கு அப்பால் நின்று வெறித்துப் பார்க்கத்தான் முடியும்.” என்று கூறுகிறார்.

“ஆடிப்பிம்பங்களுக்குள் சிக்கிக்கொண்டவனைப்போல மூடன் யார்? மூடனல்ல, இழிபிறவி. பித்தன். முடிவற்றது ஆடியின் ஆழம். ஆடியின் சுழலில் இருந்து அவன் தப்பமுடியாது, ஏனென்றால் நான் தப்பவில்லை. இந்த கல்குகைக்குள் நான் என் தனிமையை தின்றுகொண்டிருக்கிறேன். அவன் தன் கல்குகைக்குள் இருக்கிறான். அவனிடம் சொல், அவனுக்கு விடுதலை இல்லை என்று. அவன் ஆடிப்பிம்பம் என்று…” என்று பீஷ்மரைப் பற்றிய மீட்கவியலா தனிமையின் சித்திரத்தை நமக்குக் காணிக்கிறார்.

“நான் தேவவிரதனை கொல்லமுடியாது. ஏனென்றால் அவன் என் ஆடிப்பிம்பம். ஆடி எவர் கைக்கும் சிக்காதது. ஆனால் நீ அவனைக் கொல்வாய். ஏன் தெரியுமா? நீ அவன் நிழல்” என்று சிகண்டிக்கு அவனையும், பீஷ்மரையும் பற்றிய சித்திரத்தை நல்குகிறார்.

அதன்பின் சிகண்டி பீஷ்மரை சந்திக்கும் தருணம் ஒன்று உணர்ச்சிகரமாக அமையப் பெற்றுள்ளது. பீஷ்மர் அலைந்துதிரிந்து தன்னை அறியும் ஒரு பயணத்தில் முதுநாகனின் மாயநீரின் வழி தான் யாயாதியின் பிம்பம் என்று கண்டடைகிறார். இதுநாள் வரை தந்தைக்காக தன் இளமையை இழந்த புரு என்று தன்னை நினைத்திருந்தார். ஆனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட காம விழைவைக் கொண்டு நிறைவின்மையால் அகந்தை கொண்டு பூதயாக நெருப்பில் தவித்து அவிபெற இயலாது அஸ்ருபிந்துமதிக்கு தன்னில் பிறந்தவளான மாதவியைக் கண்ட மாத்திரத்தில் முக்தி பெறுகிறார். இத்தகைய யாயாதியை தான் பீஷ்மர் தானெனக் கண்டடைகிறார். காமம் எனும் கனலை, நிறைவின்மையை சுமந்தலையக்கூடிய பீஷ்மருக்கான மீட்பு சிகண்டி வழியாகவே நடைபெறும் என்ற சித்திரம் இந்தத் தருணத்தில் வந்தமையப் பெறுகிறது.

சிகண்டி பீஷ்மரை சந்திப்பதற்கு முன்பாக முது நாகனை சந்தித்து தன்னை அறிகிறான். தான் யாரெனக் காட்டும் மாய நீரில் அவன் பார்த்த பிம்பம் இளவயது பீஷ்மரையே. தன் தந்தைக்காக அரியணையை ஆசையைத் துறந்து நைஷ்டிக பிரம்மச்சாரியாய் மாறிய அந்தத் தருணத்தில் இருந்த பதினேழு வயது பீஷ்மரையே மாயநீர் சிகண்டிக்குக் காட்டியது. அம்பை அன்னைக்காக தன் வாழ்க்கையை முழுதளித்த போது இருந்த சிகண்டி இளவயது பீஷ்மருடன் ஒப்பு நோக்கத் தக்கவனே. தான் பேசிக் கொண்டிருப்பது பீஷ்மரிடம் தான் என்று அறியாமல் அவரிடமே அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறான். தூரத்திலிருந்தே அவருடைய வீரத்தைக் கண்ணுற்றதாகவும் அவரிடமுள்ள வித்தையைக் கற்றுத் தரும்படியும் கேட்கிறான். எதன் பொருட்டு தான் கற்றுத் தர வேண்டும் என்று வினவிய பீஷ்மரிடம் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!” என்கிறான். அம்பா தேவியின் நிமித்தமாக என்ற ஒற்றைச் சொல்லுக்காக பீஷ்மர் தான் கற்ற அனைத்தையும் மந்திர வடிவில் சிகண்டிக்குக் குருவாக மாறி போதிக்கிறார்.

காமத்தைப் பற்றி ‘ஜெ’ சொல்லும் போது “காமம் பெண்ணுடலில் இல்லை. பெண்ணுடலில் காமத்தைக் கண்டடையும் ஆண்விழிகளிலும் அது இல்லை. விழிகளை இயக்கும் நெஞ்சகத்திலும் காமம் இல்லை. காமம் பூமிக்குள் ஆழத்தில் நெருப்பாக உள்ளது. அதன் பெயர் வைஸ்வாநரன். ‘நான் பெருகுவதாக’ என்னும் அதன் விழைவே காமம். தன் வாலை தானே சுவைத்துண்ணும் பெருநாகமே காமம்.” என்கிறார். பெருகிக் கொண்டே இருக்கும் ஒற்றைக் கனலாக காமமே அமைந்தொழுக முடியும். அம்பையின் பெருங்காதலை விடவும் கனல் மூண்டெழக் கூடியது ஒன்றை விசித்ரவீரியனின் வழி ஆசிரியர் நாவலில் சொல்லியிருப்பார். முதலிரவின் போது அம்பிகையிடம் தன் உடற்குறைக்குக் காரணமாக அவன் சுனந்தையின் காமத்தின் கனலைக் கூறியிருப்பான். ஆனால் அதை விடவும் தீரா விடாய் கொண்டு பாரதவர்ஷத்தையே முழுதழிக்கும் கனல் மூண்டெழக் கூடிய ஒன்று இருக்குமானால் அது பீஷ்மரின் காமத்தின் கனல் தான்.

அறத்தைப் பற்றி ஜெ குறிப்பிடும்போது

“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல, செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்”

என்பார்.இங்ஙனம் தான் ஆற்ற வேண்டிய சுயதர்மத்தைக் கைவிட்டு அஸ்தினாபுரி எனும் பேரரசின் அழிவுக்குக் காரணமான கனலை மூழச்செய்து முதற்கனலின் நாயகனாக பீஷ்மர் எழுந்து அமைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.