சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில் பனிப்பொருக்குகள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தன.

சாத்தானின் மனைவி ஒரு கையில் துடைப்பத்தையும் மறு கையில் கயிற்றையும் பிடித்தபடி, தன் பறக்கும் வளையத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் கருப்பு தாடியும் முறுக்கிய கொம்புகளும் கொண்ட வெண்ணிற ஆடு ஒன்று ஓடியது. அவளுக்கு பின்னால் சிலந்தி வலை போன்ற முகத்தையும், கண்கள் உள்ள இடத்தில் துளைகளையும், தோள் வரை நீண்ட முடியையும் மூங்கில் போன்ற நீண்ட கால்களை கொண்ட சாத்தான் நடந்து வந்தான்.

தாழ்வான கூரையும், புகை படிந்த சுவர்களும் கொண்ட ஓரேயொரு அறை கொண்ட குடிசையில், வெளிறிய முகமும் கருமையான கண்களையும் கொண்ட ஏழைப் பையன் டேவிட் உட்கார்ந்திருந்தான். ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளில் தன் குழந்தைத் தம்பியுடன் தனியாக இருந்தான். அவனுடைய அப்பா சோளம் வாங்கி வர கிராமத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவர் மூன்று நாட்கள் ஆன பின்னரும் திரும்பி வரவில்லை. அவனுடைய அப்பாவை தேடிச் சென்ற அம்மாவும் திரும்பி வரவில்லை.

குழந்தை தன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். டேவிட்டே ஹனுக்கா விளக்கில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தான்.

டேவிட் மிகவும் கவலைப்பட்டான். அவனால் அதற்கு மேலும் வீட்டில் இருக்க முடியவில்லை. அவனுடைய குளிர் தாங்கும் கம்பளி கோட்டையும், காதுகள் மூடும்படியான தொப்பியையும் அணிந்து கொண்டான். குழந்தை பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின், பெற்றோரைத் தேடி வெளியே வந்தான்.

அதற்காகத் தான் சாத்தான் காத்திருந்தான். அவன் உடனடியாக புயலை உருவாக்கினான். கருமேகங்கள் வானை மூடின. அந்த கும்மிருட்டில் டேவிட்டால் கஷ்டப்பட்டுத் தான் பார்க்க முடிந்தது. உறைபனி டேவிட்டின் முகத்தை எரித்தது. பனி வறட்சியாகவும், உப்பை போல கனமாகவும் பெய்து கொண்டிருந்தது. காற்றானது டேவிட் போட்டுக் கொண்டிருந்த கோட்டின் வாலை பிடித்து அவனை மேலே தூக்க முயற்சித்தது. அவனைச் சுற்றிக் கேட்ட சிரிப்போசை ஆயிரம் குட்டிச்சாத்தான்கள் சிரித்தது போலிருந்தது.

டேவிட் தனக்கு முன்னால் சித்திரகுள்ள பைசாசங்கள் உள்ளதை உணர்ந்து கொண்டான். அவன் திரும்பி, வீட்டை நோக்கிச் செல்ல முயற்சித்தான். ஆனால் அவனால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. பனியும் இருளும் எல்லாவற்றையும் மறைத்துவிட்டிருந்தன. அவனுக்கு சாத்தான்கள் தான் தன் பெற்றோரைப் பிடித்து வைத்துள்ளன என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவனையும் அவர்கள் பிடித்து விடுவார்களோ? ஆனால் சொர்க்கமும், பூமியும் சாத்தான்கள் ஒருபோதும் முழு வெற்றியடைய முடியாது என வாக்களித்துள்ளன. சாத்தான் எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும், எப்போதுமே அவன் ஒரு தவறு செய்வான். அதுவும் குறிப்பாக ஹனுக்காவின் போது கட்டாயம் தவறு நிகழும்.

நட்சத்திரங்களை மறைக்க முடிந்தளவு சக்தி கொண்ட சாத்தானால், ஒற்றை ஒரு ஹனுக்கா மெழுகுவர்த்தியை அணைக்க முடியவில்லை. டேவிட் அதைப் பார்த்தவுடன் வீட்டை நோக்கி ஓடினான். பிசாசு அவனை துரத்தி சென்றான். சாத்தானின் மனைவி அவளது பறக்கும் வளையத்தில் தொடர்ந்தபடி, கத்திக்கொண்டும், துடைப்பத்தை ஆட்டி கொண்டும், தன் கையில் இருந்த சுருக்குக் கயிற்றால் அவனை பிடிக்க முயன்றாள். டேவிட் அவர்களை விட வேகமாக ஓடி மயிரிழை வித்தியாசத்தில் சாத்தானுக்கு முன்னதாக குடிசையை அடைந்தான். டேவிட் கதவை திறக்கும் போது சாத்தானும் அவனோடு உள்ளே நுழைந்துவிட்டான். டேவிட் வெற்றிகரமாக கதவை பின்னாலிருந்து அடைத்து மூடிவிட்டான். அந்த வேகமான போராட்டத்தில் சாத்தானின் வால் கதவிடுக்கில் மாட்டிக்கொண்டது.

“என் வாலைக் கொடுத்துவிடு,” என சாத்தான் அழுதான்.

டேவிட் ”என் அப்பாவையும் அம்மாவையும் திருப்பி கொடு.” என்றான்.

சாத்தான் அவர்களைப் பற்றி தனக்கு தெரியாது என சத்தியம் செய்தான். ஆனால் டேவிட் அதை நம்பி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்ளவில்லை.

“நீ தான் அவர்களைக் கடத்தினாய், சபிக்கப்பட்ட சாத்தானே!” என டேவிட் கத்தினான். டேவிட் கூர்மையான கோடாலியை எடுத்து வந்து, தான் பிசாசின் வாலை வெட்டிவிடுவேன் என கூறினான்.

“என் மேல் கருணை காட்டு, என்னிடம் ஒரே ஒரு வால் மட்டுமே உள்ளது.” எனச் சாத்தான் அழுதான். பின்னர் அவன் மனைவியிடம், “சீக்கிரம் போய், அந்தக் கறுப்பு மலைகளுக்கு பின்னால் உள்ள குகைக்குச் சென்று, நாம் தவறான வழிகாட்டிய அந்த ஆணையும் பெண்ணையும் கூட்டி வா.” என சொன்னான்.

சாத்தானின் மனைவி தன்னுடைய பறக்கும் வளையத்தில் வேகமாக சென்று அவர்களை அழைத்து வந்தாள். அவனுடைய அப்பா அந்த சூனியகாரியின் தலைமுடியை பிடித்தவாறு வளையத்தின் பின்புறம் அமர்ந்திருந்தார். அவன் அம்மா வெண்ணிற ஆட்டின் மேல் அமர்ந்து அதன் கறுப்பு தாடியைக் கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தாள்.

“உன் அம்மாவும், அப்பாவும் இதோ இருக்கிறார்கள். என் வாலைக் கொடுத்துவிடு” என சாத்தான் கேட்டான்.

டேவிட் கதவின் சாவித்துளை வழியாகப் பார்த்து தன் பெற்றோர் உண்மையிலேயே இருப்பதை தெரிந்து கொண்டான். அவன் கதவை திறந்து அவர்களை உள்ளே அழைக்க விரும்பினான். ஆனால் அவன் இன்னும் பிசாசை விடுவதற்கு தயராகவில்லை.

அவன் ஜன்னலை நோக்கி வேகமாக ஓடினான்.  ஹனுக்கா மெழுகுவர்த்தியைக் கொண்டு வந்து சாத்தானின் வாலுக்கு சூடு போட்டுவிட்டான். “இப்பொழுது, பிசாசே, இனி நீ எப்போதும் ஞாபகம் வைத்திருப்பாய்,” என வீறிட்டு அழுதபடி, “ஹனுக்கா தொந்தரவு செய்வதற்கான நேரமல்ல.” என்றான்.

கடைசியாக அவன் கதவைத் திறந்தான். சாத்தான் தன்னுடைய, தீயில் பொசுங்கிய வாலை நக்கியப்படி தன் மனைவியுடன் ஓடிவிட்டான். எங்கு மக்கள் நடமாட மாட்டார்களோ, கால்நடைகள் மேயாதோ, வானம் செம்பும், பூமி இரும்பாகவும் இருக்குமோ, அந்த இடத்திற்கு!

ஐசக் பாஷவிஸ் சிங்கர்

தமிழில் : சக்திவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.