சிங்கராஜாவின் விருந்து

அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள்  இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?… ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது.

“பிறந்த நாள்… எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்… நாங்க ஆடிப்பாடும் திருநாள்…” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின.

வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது.

சிங்கராஜா கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தது. “பிறந்த நாள் வாழ்த்துகள்” என வாழ்த்து சொல்லி விலங்குகள் ஆடிப்பாடின. அப்புறம் எல்லா விலங்குகளும் வரிசையாகச் சென்று, பிடித்த உணவுகளைச் சாப்பிட எடுத்து வந்தன. சிங்கராஜா சாப்பிட்ட பின்னரே, மற்றவர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் சிங்கராஜா சாப்பிடாமல் உணவுகளையே பார்த்தபடி ஏதோ யோசனையில் இருந்தது. பசியோடு காத்திருந்த விலங்குகள் எல்லாம் நெளிய ஆரம்பித்தன.

”என் ஆட்சி எப்படி இருக்கிறது?” எனச் சிங்கராஜா கேட்டது.

உண்மையைச் சொன்னால் சிங்கராஜா குண்டக்க மண்டக்க எதையாவது செய்யும் எனப் பயந்த விலங்குகள், “ஆஹா… ஒஹோ… அற்புதம்…” எனப் பொய்யாகப் புகழ்பாடின.

“என்னோட அற்புதமான ஆட்சியில விலங்குகள் சண்டை போடுறது எனக்கு பிடிக்கல. எல்லோருக்கும் அன்பு வர ரெண்டு விஷயங்களை பண்ணலாம்னு இருக்கேன்… இனிமே எல்லா விலங்கும் மத்த விலங்குகளுக்கு சொந்தக்காரங்க.. யானை தாத்தா, நரி மாமா, சிறுத்தை அத்தை, புலி தம்பி, கரடி சித்தப்பா, காட்டுப்பன்றி பெரியப்பா இப்படி உறவு முறை சொல்லித்தான் கூப்பிடணும். சரியா நரி மாமா?”

“டேய் நரி இங்க வாடா” எனக் கூப்பிடும் சிங்கராஜா மாமா என மரியாதையாக அழைத்ததால், நரி சந்தோசமாக “சரிங்க ராஜா” என்றது.

”ரெண்டாவது… எல்லா விலங்குகளுக்கும் வாழும் உரிமயும், சுதந்திரமும் உண்டு. நம்ம சொந்தக்காரங்கள நாம அடிக்கலாமா? நம்ம பசிக்காக மத்தவங்கள கொல்லலாமா? கூடாது தானே?… ஊன் உணவைத் தவிர்த்தால் தான் அன்பு பெருகும்.

பாவம் தாவர உண்ணிகள். அதுக கஷ்டப்படுறதைப் பார்க்கவே ரொம்ப வேதனையா இருக்கு. அதனால எல்லோரும் தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடணும்.. இதுவே என் ஆணை. என் ஆணையை மீறுபவர்கள் எவராக இருந்தாலும், காடு கடத்தப்படுவார்கள்” எனச் சிங்கராஜா கர்ஜித்தது.

இதைக்கேட்டு அதிர்ந்த விலங்குகள் எல்லாம் செய்வதறியாது தலையில் அடித்துக் கொண்டன. ”விலங்குக மாதிரி தாவரங்களுக்கும் உயிர் இருக்கு தானே? அத பிடுங்கி சாப்பிடுறதும், ஒரு உயிர கொன்னு சாப்பிடுறது ஆகாதா?” எனச் சில விலங்குகள் முணுமுணுத்தன.

“அய்யய்யோ அங்கிள்… புலி பசித்தாலும் புல்ல திங்காதுனு சொல்லுவாங்க. என்னால எல்லாம் புல்ல சாப்பிட முடியாது. நான் என் அக்கா, அண்ணனை விட நல்லா சாப்பிடுவேன். என்னை ஊன் உணவு சாப்பிட வேண்டாம்னு சொன்னா, நான் எப்படி பெரியவன் ஆவேன்?” என ஒரு புலிக்குட்டி கேட்டது.

“கவலப்படாத புலி தம்பி. ஊன் உணவுல கிடைக்குற சத்து எல்லாம், தாவர உணவுலயே இருக்குது. ரெண்டு நாளீக்கு கஷ்டமா இருக்கும். அப்புறம் எல்லாம் பழகிடும்”என்றது சிங்கராஜா.

”நண்பா, இனி நாம ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ். நான் உனக்குப் புல்லு தின்க சொல்லி தரேன். தினமும் நாம ஒன்னா விளையாடலாம்” என ஒரு மான்குட்டி, புலிக்குட்டியிடம் கிண்டலாகச் சொன்னது. புலிக்குட்டி வாயைப் பிதுக்கிக் கொண்டு ஓவென அழுதது.

ஊன் உணவுகளை எல்லாம் சிங்கராஜா தூக்கி எறிந்தது. ஆசை ஆசையாகச் சாப்பிட வந்த விலங்குகளுக்கு எல்லாம் ஏமாற்றம். எல்லோருக்கும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், இலை தழைகள், புற்கள் பரிமாறப்பட்டது. காட்டு மாடு, மான், யானை போன்ற தாவர உண்ணிகள் சந்தோசமாகச் சாப்பிட்டன. புலி, சிறுத்தை போன்ற ஊனுண்ணிகள் எல்லாம் சாப்பிட முடியாமல் அழுதபடி சென்றன.

ஒரே வாரத்தில் தாவர உணவுகளைச் சாப்பிட முடியாத ஊனுண்ணிகள் தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிறு சுருங்கி எலும்பும், தோலுமாக மாறின. இறந்த விலங்குகளின் உடல்களைக் காட்டுப்பன்றி, கழுதைப்புலி, பாறு கழுகுகள் ஆகியவை சாப்பிடாததால் நோய்கள் பரவின.

சிங்கராஜா ஒரு ஆவேசத்தில் உத்தரவிட்டு விட்டாலும், அதனாலும் சரியாகச் சாப்பிட முடியவில்லை. சிங்கராஜா சோர்வோடு படுக்கையில் இருந்து எழுந்தது. அதன் உடலும் மெலிந்து போயிருந்தது. எதிரே எலும்பும் தோலுமாக நரி நின்றிருந்தது. ”என்ன நரி மாமா, ரொம்ப எளச்சிட்டே போறீயே? ஒழுங்கா சாப்பிடுறதில்லயா?” எனக் கேட்டது.

“இல்ல ராஜா. நான் நல்லா சாப்பிடுறேன். உடம்பு தான் வரமாட்டிங்குது”

”சரி, சரி. காலையில சாப்பிட என்ன உணவு இருக்கு மாமா?”

”ராஜா, உங்களுக்காக அருகம்புல் ஜூஸ், பாகற்காய் பொரியல், வழைக்காய் வறுவல், அகத்தி கீரை கூட்டு எல்லாம் தயாராக இருக்கிறது”

”ஓவ்” எனச் சிங்கராஜாவிற்குக் குமட்டல் வந்தது. சிங்கராஜா நரியை நிமிர்ந்து பார்த்தது. அது எதையும் பார்க்காததது போல, திரும்பி நின்றிருந்தது. மெல்ல எழுந்த சிங்கராஜா ஆற்றுக்குக் குளிக்கச் சென்றது. ஆற்று நீரில் தெரிந்த சிங்கராஜாவின் உருவம், உருக்குலைந்து மெலிந்து சோர்ந்து இருந்தது. ஆற்றில் இருந்து அரண்மனைக்கு வருவதற்குள் நான்கு முறை சோர்ந்து அமர்ந்து விட்டது. அதனால் நடக்கவே முடியவில்லை.

“மாமா, நான் தவறான முடிவு எடுத்து விட்டேனா?” எனச் சிங்கராஜா கவலையோடு கேட்டது.

“நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தவறாக இருக்காது ராஜா. புரதச்சத்தை அதிகரிக்கச் சோயா பால், வேர்க்கடலை வெண்ணெய், பச்சை பட்டாணிகள் சேர்த்துச் சாப்பிட்டால் எல்லாச் சரியாகி விடும்”

“பொய் சொல்லாதே மாமா. ஒரே வாரத்தில் மெலிந்து எலும்பும் தோலுமாயிட்டேன். என்னால நடக்கவே முடியல. மற்ற விலங்குகள் எல்லாம் எப்படி இருக்குதுக?”

“ராஜா, பாவம் ஊனுண்ணிகள். தாவர உணவுகள் அவைகளுக்கு ஒத்து வரல. வாயிலும், வயிற்றிலும் போகுது. சில விலங்குக உடம்பு சரியில்லாம இறந்தும் போச்சு. ஆனா சிறுத்தைகள் மட்டும் நல்லா இருக்குது”பயத்துடன் நரி சொன்னது.

“எதனால்?”

“தெரியல ராஜா. சிறுத்தைகள் ரகசியமாக எதோ செய்கின்றன. நமது ஒற்றர் படையை அனுப்பி விசாரித்துச் சொல்கிறேன்”

“அப்படியே ஆகட்டும்”

அடுத்த ஒரு மணி நேரத்தில் நரி ஒற்றர் படையோடு சிங்கராஜாவைப் பார்க்க வந்தது. நரி சொல்வதைக் கேட்க மற்ற ஊனுண்ணிகளும் வந்தன.

“ராஜா, ராஜா… சிறுத்தைகள் உங்க உத்தரவை மீறி, ரகசியமாக ஊன் உணவைச் சாப்பிடுகின்றன. அதனால தான் நன்றாக இருக்கின்றன”

“என்ன சொல்கிறாய்?”

”ஆமா ராஜா. அதுமட்டுமில்லாம சிறுத்தைகள் சில விஷயங்களை ஒற்றர் படையிடம் சொல்லியுள்ளன.”

“என்ன சொல்லின?” எனச் சிங்கராஜா கோபமாகக் கேட்டது.

”ஒவ்வொரு உயிரினமும் அதனோட உணவு தேவைக்கு இன்னொரு உயிரினத்தை சார்ந்திருக்கு. இப்போ உதாரணமா புல்ல சாப்பிடுற மானை, புலி, சிறுத்தை சாப்பிடும். புலி, சிறுத்தை இறந்தா காட்டுப்பன்னி, கழுதப்புலி சாப்பிடும். அதுக இறந்தா பாறு கழுகுகள் சாப்பிடும். இதுல ஒன்னு அழிச்சாலும், காடே இல்லாம போயிடும். அவரவர் உடலுக்கும், வேலைக்கும் ஏற்ற உணவைத் தான் சாப்பிடணும். உணவு அவரவர் விருப்பம். அவரவருக்குப் பிடித்த உணவைச் சாப்பிட்ட தான் நல்லா இருக்க முடியும்னு சிறுத்தைக சொல்லியிருக்கு.

ராஜா தான் முட்டாள்தனமா ஏதோ செய்கிறது என்றால், நாங்களும் அதயே செய்யணுமா எனச் சிறுத்தைகள் ஏகாத்தாளமாக கேட்டுள்ளன. சிறுத்தைகளுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிக் கேட்டியிருக்கும்?. நீங்கள் உத்தரவிட்டால் சிறுத்தை கூட்டத்தையே ஒழித்து விடலாம். உத்தரவிடுங்கள் ராஜா”

சிங்கராஜாவிற்குக் கோபம் வந்தது. அதைவிடக் காலையில் சாப்பிடாததால் பசி அதிகமானது. நரி பட்டியலிட்ட தாவர உணவுகளைச் சாப்பிட நினைத்ததும் மீண்டுமொரு முறை குமட்டிக் கொண்டு வந்தது. அந்தக் கணத்தில் சிங்கராஜாவின் மனம் மாறியது.

“இல்ல வேணாம் மாமா. நான் தவறு செய்திட்டேன். பாவம் ஊனுண்ணிகள். அதுக கஷ்டப்படுகிறதைப் பார்க்கவே ரொம்ப வேதனையா இருக்கு. ஆமா… தாவர உண்ணிகள் எப்படி இருக்கு?” எனச் சிங்கராஜா கவலையோடு கேட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.