கித்தானுடைய வண்ணப்பேழை

ந்தச் சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர் நோக்கிய கண்களில் இருக்கக் கூடிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது நண்பனும் சுமந்து கொண்டு வரும் போது ஏனோ அவனின் கைகள் நடுக்கமுற்று அவன் பக்கத்தின் பிடி நழுவியதை அறிந்து அவனுக்கு எச்சரித்தேன்.அவ்வளவு கணம் இல்லையென்றாலும் அதன் மேல் இருக்கும் ஒரு வித எச்சரிக்கை அவனின் முகம் எங்கும் விரவி பயத்தை உண்டு பண்ணுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.இருந்தும் இதை எனக்காகச் செய்கிறான் என்பதை மீறி அவனுக்கு இதில் துளி விருப்பம் கூட இருக்கவில்லை. இதைப் பற்றி முன்பே கூறியிருந்தாலும் அதன் நிகழ்காலத்தில் ஊடுருவும் அதன் இருப்பு அவனைக் கிறங்கடித்தது.
நாங்கள் தங்கியிருக்கும் இரண்டாவது மாடிக்கு அதை எடுத்துச் செல்கின்றோம்.முன் கூட்டியே அறையைத் திறந்து வைத்ததின் பேரில் அவை எங்களுக்குப் பெரும் வரவேற்பைக் கொடுத்திருந்தது.அதை இல்லத்தினுள் எடுத்துச் செல்ல ஒரு நிமிடம் இருவருக்குள்ளும் நிகழ்ந்த உரையாடலற்ற மொழி எவ்வளவோ தடுத்தாலும் எங்களை ஏதோ ஒன்று உள்ளிழுத்துக் கொண்டது போன்ற ஒன்றையை இருவரும் உணர்ந்திருந்தோம்.எவ்வளவோ உரையாடலுக்குப் பின்பே இப்படிப்பட்ட முடிவை இருவரும் எடுத்திருந்தோம்.வீட்டின் நடுவில் அப்பெட்டியினை இறக்கி வைத்து விட்டு வேகமாகத் திறந்திருந்த அக்கதவினை மூடச் சென்றேன்.ஏனோ சற்றும் எதிர் பாரா நிகழ்வாய் அச்சவப்பெட்டியில் பூசியிருந்த வண்ணக் கலவைகளின் வழித்தடங்கள் அந்தப் படிக்கட்டுகளில் தங்களின் வருகையை உறுதி செய்தது போலப் பரவிக் கிடந்தது.ஒருமுறை அது உண்மையே என்று உணரும் போது வேகமாகக் கதவை மூடிவிட்டு அச்சவப்பெட்டியினைப் பார்க்க நினைக்காது கதவின் மேல் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.இருந்தும் என்னை முழுமையாக அப்பெட்டியின் வண்ணக்குவியல்களுள் இறக்கிவிட்டு முழுவதுமாக என்னை அதனுள் அடக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்தியது.ஏனென்றால் அதன் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தது நான் தான்.அவளின் உருவத்தின் மாதிரியை மட்டும் இன்றி அவளுக்குப் பிடித்த அனைத்தையும் கண்டுணர்ந்து வேடிக்கை பார்த்தவன் நான் என்பதால் அதை இன்னும் தெளிவுற உணரக் கூடிய நிலைக்கு மனம் தானாகச் சென்றடைய அதை எவ்வளவோ தடுத்தாலும் நான்கடிக்குள் தன்னை சாவகாசமாக இருக்க வேண்டியது.தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றினை முழுவதும் கற்பனை என்று என்னால் கூறிடமுடியாது.போனமுறை நண்பர்களுடனான பயணத்தின் போதே இவளைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருந்தது.ஏனோ அவளின் இறுதி நிமிடங்களை மட்டுமே எனக்கு அவள் அளிக்க எண்ணினாள் போலும்.இப்படியாகக் கூட இருக்கும்,அவளின் கடைசி பார்வை முழுவதும் நிறைந்திருந்தவன் நான் என்பதை அவளின் நினைப்பு உறுதி செய்து கொண்டே இருந்தது.அவளுக்குப் பிடிக்கும் என்று கூறியிருந்த வண்ணங்களில் எனது மலர்வளையத்தை அவளுக்கு வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.அவளுக்கும் எனக்கும் எந்த விதச் சம்பந்தமும் இல்லை என்றாலும் அவளுக்குப் பிடித்த வண்ணங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவதின் பால் அவளைச் சுமந்திருந்த சவப்பெட்டி இதுவரை இறுதி ஊர்வலங்களுக்குப் பயன்படுத்தாத வண்ணக் கலவைகளால் நிரம்பியிருந்தது.அதன் சாயலிலேயே இதை முழுவதுமாக வடிக்கச் சொல்லியிருந்தேன்.அதன் ஓர் அங்குலம் கூட மாறாது நினைவில் இருக்கும் ஒன்றை மீண்டும் செய்யச் சொல்லி அதை இங்கு வரை சுமந்து வந்திருக்கிறேன்.


தான் கண்டவற்றினை எதிரில் இருப்பவனுக்குச் சொல்லத் திராணி இல்லாதவாறு எனது குரலினை மட்டுப்படுத்த வேண்டினேன்.கண்களைத் திறக்கும் போது அவனை அங்குக் காணவில்லை.அதிலிருந்து எவ்வளவு தூரம் அவனால் விலகி இருக்க முடியுமோ அங்கு அதனைக் காணாதவாறு எதிர்த் திசையில் திரும்பி அமர்ந்து கொண்டிருந்தான்.அவனை மீண்டும் சமாதானம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.இந்த முறை அதை மேற்கொள்ளும் பச்சத்தில் அதனைத் தொடர வேண்டிய சூழல் ஏற்படுமாயின் அதனைச் செய்யக் கூடாது என்கிற எண்ணம் எழ அவனை அணுகாது நின்றுவிட்டேன்.மூன்றே அறைகளைக் கொண்ட அந்த இல்லத்தினுள் அவன் எங்கே ஓடி ஒளிந்தாலும் இதைக் காண வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு எழுந்தே தீரும்.அவனுக்காக என்னால் இப்போது பரிதாபம் கொள்ள வேண்டிய நிலையில் நான் இல்லை.வெகுவாக என்னையும் பாதித்திருந்தது.அதை இல்லை என்று எவ்வளவோ மறுத்தாலும் அதுவே உண்மை என்று கூறிடவிளைகிறேன்.ஏனென்றால் அதன் இருப்பு மேலும் மேலும் எங்களை பீதியூர செய்துகொண்டிருந்தது.அங்கிருந்து கிளம்பி ஓடிவிட வேண்டும் என்கிற தீர்மானத்தில் என் நண்பன் இறங்கியிருக்க அதற்கு முக்கிய காரணம் இருளின் வருகை.அது எங்களுடன் இணைந்துகொள்ள வேண்டி அவசர கதியில் இருந்ததை அறிந்து அந்த முடிவை அவன் எடுத்திருந்தான்.அவனுக்கு நான் கூறிய அந்நிகழ்வின் சாரம் மேலும் அதை உண்மையின் பக்கமாக நகர்த்த, அந்த இருள் மேலும் பயத்தையும் ஓர் அங்கத்தினரின் பொருட்டு இணைக்க. எவ்வளவோ அதைத் தடுக்க முயன்றாலும் அதன் பலத்தினுள் வீழ வேண்டியே இருந்தது.ஏனோ அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரணங்களின் நீட்சியைக் குறைக்க அப்பெட்டியினை மீண்டும் கைக்கொள்ள வேண்டியிருந்தது.அதற்கென தனி அறை கொடுத்து அதற்குக் காவலாக இருவரும் வீட்டின் மையப் புள்ளிக்கு வந்தடைந்தும்..ஏனோ அந்தப் புள்ளியின் சுழற்சி எந்த மனக் கணக்குகளுக்கும் சரிவரத் தீர்வளிக்காது சுதந்திர போக்கைத் தேர்ந்தெடுத்திருந்தது.ஒரு போதும் அக்கதவைத் திறக்கக்கூடாது என்கிற எனது நண்பனின் கட்டளைக்கு இணங்க வேண்டியிருந்த காரணத்தினால் அவ்வறையின் சாவியை அவனிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது.அவன் மேல் கோபம் வர எந்தக் காரணமும் இல்லை.எனக்காக இதனை ஏற்றுக் கொண்டு இதில் அல்லாடும் அவனை நினைக்கும் போது ஒரு வித சகிப்புத் தன்மை எழுவது இயல்பாகிப் போனது.
இதன் ஆரம்பப் புள்ளியை முன்பே அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தாலும் இதன் வீரியம் இதைக் கதையாகப் புனையத் தொடங்கியது முதலே ஏற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது.அதன் எல்லை எதுவாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இன்றி அதை முன்னெடுக்கத் தொடங்கினேன்.ஏனோ அதிலிருந்து அவளை வெளியேற்ற முயன்றாலும் அச்சிறுமியைச் சுற்றிப் புனையப்பட்ட கதையில் அவளின் வண்ணச்சவப்பெட்டி முக்கிய பங்காற்றியது.ஏனோ அதை ஆரம்பித்த வேகத்தில் அதன் எந்த விசையும் என் கைகளின் பிடியில் இன்றி தானாக உருவம் கொண்டு கதை வெளிக்குள் உலாவிக்கொண்டிருந்தன.அவைகளை நான் வேடிக்கை மட்டுமே எப்போதும் போலப் பார்க்கத் தொடங்கியிருந்தேன்.அதன் ஒவ்வொரு அசைவுகளைக் கவனிக்கும் ஒருவனை எனது கித்தானில் அது மேலும் தெளிவுறச் செய்தது.அச்சவப்பெட்டியின் மாதிரி தயாரானது.இக்கதையின் ஆரம்பமும் அக்கதையின் பொருட்டு புனையப்பட்ட அனைத்தையும் கேட்ட நண்பனால் அவளின் முகத்தைச் சரிவர வரித்துக்கொள்ள முடியவில்லை.முடிந்தளவு அவனுக்கு விளக்கிட முயன்றாலும் அது எடுபடவில்லை.இப்புனைவில் அவளின் மாறுபட்ட எண்ணவோட்டங்களினால் கூட அது நிகழ்ந்திருக்கும்.ஆனால் என்னால் அவளின் முகத்தையும்,அவளின் சவப்பெட்டியினையும் மறக்க முடியாது.ஆகையால் அக்குழந்தை முகத்திற்குப் பொருந்தும் வகையில் இக்கதையில் நடிக்கக் குழந்தை கதாபாத்திரத் தேர்வை நிகழ்த்தினேன்.எத்தனையோ பேர் வந்து போய்க் கொண்டு தான் இருந்தனர்.ஆனால் அவளின் முகத்தை என்னால் ஒருவர் மேலும் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் என்னவோ காட்சிப் பதிவு தள்ளிப் போய்க் கொண்டே இருந்த காரணத்தினால் அவளுக்கான சவப்பெட்டியினைத் தயார் செய்ய முடிவெடுத்தேன். அதை முடிக்கும் போது அவளுக்குப் பிடித்த மாதிரி வந்திருப்பதாக அவள் சொல்லுவதாய் இருந்தது.ஆனால் அதன் படி கையில் கிடைக்குமா என்கிற சந்தேகத்திற்கு எனக்குத் தெரிந்த கலை இயக்குநரிடம் என்னுடைய எண்ணங்களையெல்லாம் சொல்லி ஓர் அந்நியனாக ஒருத்தியின் இறுதி ஊர்வலத்தில் சென்று அவளின் சவப்பெட்டியினைத் திருடி வந்த மனநிலையில் தான் அது எங்களின் கைகளுக்கு வந்து சேர்ந்திருந்தது.


இப்போது நடந்து கொண்டிருப்பவையை குறித்து என் நண்பனிடம் உரையாடலைத் தொடங்க நான் நினைத்தது நிகழ்ந்து விட வேண்டும் என்பதற்காக முன் தயாரிப்புகளில் ஈடுபட்டேன்.அவளின் முகத்தைத் தேடி அலைந்து திரிந்ததால் படப்பிடிப்பு ஆரம்பிக்கக் காலம் சென்று கொண்டே இருந்தது.ஆனால் அந்த வண்ணப்பேழை தயார் நிலையில் இருக்க அதனை எப்படியாவது என் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவை அவனிடம் சொல்ல.’பைத்தியமா நீ!’ என்கிற பாவனையிலேயே அவனின் முதல் உதறல் இருந்தது.அதிலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வருவதற்குள் அத்தனை பேச்சுக்களை நிகழ்த்த வேண்டியிருந்தது.இருந்தும் அவன் சம்மதிப்பதாகத் தெரியவில்லை.அதனால் கலை இயக்குநரின் உதவியோடு அதைத் திட்டமிட்டு ‘அங்கிருந்து அதை எடுக்கவில்லை என்றால் குப்பைக்குப் போய் விடும்,செலவு செய்ததும் வீண்’ என்கிற விளையாட்டில் அவன் இறங்கிவந்தான்.ஏனோ அதைக் கொண்டு வந்து இங்குச் சேர்த்த பின்னர் நினைத்ததை விட ஒரு வித மாறுதல்கள் பயத்தினால் மூளையைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.ஏனோ இருவரும் அச்சவப்பெட்டி வந்தது முதல் சரியாகப் பேசிக்கொள்ளவில்லை.அவன் கிறுக்குப் பிடித்தது போல எதையோ உளறிக்கொண்டே இருந்தான்.ஒவ்வொரு முறை அங்கும் இங்கும் பதற்றத்தில் நடந்து கொண்டிருப்பவன் நிகழ்பவைகள் குறித்துப் புலம்பும் போது அவனிடமிருந்த சாவி தன்னுடைய இருப்பை நிரூபிக்க,என்னுடைய கவனம் முழுவதும் அது வெளிப்படுத்தும் செய்திகளிலேயே இருந்தது.ஒரு வேலை, இவனை வைத்தே தான் நினைப்பதைக் கூற விளைகிறதோ? என்கிற முடிவுக்கு வந்து அதனைத் தெளிவுற விளங்கிட முயற்சி செய்து கொண்டேன்.ஏனோ எனக்கு அவன் இன்று முடிப்பதாகத் தெரியவில்லை. அவன் தன்னுடைய பயத்தை எல்லாம் பேசியே கடந்து விட முடியும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றியது.ஒரு கட்டத்தில் எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருளிடம் எதையோ கூறியவன், தான் வைத்திருந்த சாவியை எடுத்துப் பல்லிளித்தான்.அதைப் பத்திரப்படுத்துவதிலேயே அவனது முழுக் கவனமும் இருந்தது.அதனால் நான் இரவு முழுவதும் விழித்திருக்கப் போவதாக அவன் சொல்லும் போது அவனை ஆற்றுப்படுத்தும் முயற்சி இனி எடுபடாது என்கிற முடிவுக்கு என்னை அவன் தள்ளிவிட்டு அதிலிருந்து வெகுதூரம் பயணிக்கத் தொடங்கிவிட்டான் என்று மட்டும் புரிந்தது.


இருவரும் அருகருகில் படுத்திருந்தோம்.அவனின் விடாத பேச்சுக்கள் என் தூக்கத்தை மட்டும் இல்லாது என்னையும் அவன் பொருட்டு ஈர்க்க முற்பட்டுக் கொண்டிருக்க.அவன் என் மீதான வசைகளைத் தொடுக்கத் தொடங்கியிருந்தான்.இதுவரை அவன் என்னிடம் கண்ட குறைகளையெல்லாம் வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான். அதை நிறுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தின் பொருட்டு அவனுடன் உரையாட முடிவெடுத்தேன்.
“அது உனக்கான ஒன்றல்ல என்பதில் உறுதியாக இரு..” என்றேன்..என்னை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தவன்..
“அப்படியா..நீ கூறியது போலவே அச்சவப்பெட்டியினை என்னால் காண முடிந்தது..ஆனால் அதில் தீட்டப்பட்டிருக்கும் வண்ணங்களைப் பற்றிய கதையை என்னிடம் நீ சொல்லவே இல்லை …”
ஆம் அது உண்மையே.ஏனோ அது என்னுடனேயே இருக்க விரும்பி அதை அவனிடம் முதல் பிரதியில் சொல்ல மறந்துவிட்டேன் அன்றி சொல்ல கூடாது என்கிற முடிவெடுத்திருந்தேன்.அதை ஏன் அவ்வளவு விளக்கத்துடன் பிரித்துணர்ந்தான்.மீண்டும் ஆரம்பித்தவன் ..
“என்னால் நீ சொன்ன கதையில் அவளைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நீ அறிவாய் ..அது மட்டுமின்றி அவளின் முகம் என்னிடம் வெளிப்படாது போக்கு காட்டியதையும் அறிவாய்..ஆனால் இப்போது எனக்கு அதை அவ்வண்ணங்கள் தெளிவுபடுத்திவிட்டது..”
இவன் என்ன உளறிக்கொண்டிருக்கிறான் என்றே ஆரம்பத்தில் நினைத்த எனக்கு அவளின் மேல் ஏற்பட்ட அந்நியத்தை அவனும் அந்த வண்ணங்களின் மூலம் அறிந்திருக்கிறான் என்று தோன்றியது..மேலும் அவனைப் பேச வைக்க அமைதி காத்தேன்.
“உள்ளிருந்து அவள் வெளிப்படுத்தும்..அல்லது தீட்டிக்கொண்டிருக்கும் வண்ணங்கள் என்று அதைப் பார்த்த உடன் புரிந்து கொண்டேன்…”
அவன் அதைச் சொல்லியதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.அவளுடனும்,என்னுடைய கதையினுடனும் பயணிக்காத ஒருத்தன் வேறொரு புள்ளியை வந்தடைந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.அவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை ..
“அவள் அதை மாற்றிக்கொண்டே இருக்கிறாள்..அதனுள் இன்புற்றுக் கிடக்கும் தொனியினில் நம்மிடம் வேடிக்கை காட்டுகிறாள்.தனது கித்தானின் மூலம்..அது எதை ஞாபகப்படுத்துகிறது என்பதை உன்னால் உணர முடிகிறாதா?..” என்கிற அவனின் கேள்விக்குத் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன்.என்னைப் பார்த்துச் சிரித்தவனாக “.உறுதியாக இரு இது உனக்கானது இல்லை..நிம்மதியாக உறங்கு ..” என்று என்னை ஏறிட்டுப் பார்க்க மறுத்தவன் தனது கண்களை மூடிக்கொண்டான்…
எதை ஞாபகப்படுத்துவதாக அவன் உளறிக்கொண்டிருக்கிறான்..என்று மீண்டும் மீண்டும் தூங்க விடாது என்னை அவனின் கேள்வியில் அடைத்து இடுப்பில் அதன் சாவியைப் பத்திரப்படுத்திக்கொண்டான்.அவனின் இறுதிச் சிரிப்பில் எனக்கான சவப்பெட்டியைத் தயார் செய்து வைத்திருப்பதன் சாட்சியாகவே என்னால் அதை உணர முடிந்தது.எனக்கு அதனுள் மூச்சு முட்டக் கண்களை மூடி அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர ஏதும் முடியவில்லை.அவன் நன்றாக உறங்கி விட்டிருந்தான்.அவனிடமிருந்து அச்சாவியினை எடுக்க முயன்றபோது தான் தெரிந்தது. அவன் அதை எங்கோ நான் முன்பு சொன்னது போலப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.அதைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனது தான் மிச்சம்.


“உள்ளே இருந்து அவள் தீட்டிக் கொண்டிருப்பது நமக்கானது..”என்று அவன் சொல்லும் போது விளங்காத சில கூறுகள் இப்போது ஒன்றுபடத் தொடங்கியிருந்தது.
இது என்னுடைய கதை,மரணக் கூவல்.அதில் பார்வையாளனாக வந்து விட்டு அவனுடைய போக்கில் ஒன்றைக் கைக்கொண்டு திருப்தி அடைந்து விட்டான் என்று புரிய வருகிறது.அவள் எழுதிய இறுதி வாசகமாக அதை அவன் கைக்கொண்டுவிட்டான்.அதை வாசிக்க வாசிக்கவே அவனுடைய கைகள் நடுக்கமுறச் செய்திருக்கிறது.நான் மறைக்க வேண்டி நினைத்ததை அந்தப் படிக்கட்டுகளில் அவன் வாசித்து வந்திருக்கிறான்.இருவருக்குள் நடந்த உரையாடல்கள் இன்னும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.அதை அறிந்து கொள்வது என்பது என்னால் முடியாத ஒன்று. அது என்னிலிருந்து வெளிப்பட்டுப் போன,அதாவது என்னுடைய புரிதலுக்கு அப்பாலும் அது தன்னுடைய வலிமையை நிரூபிக்கக் கூடியது.அது ஒரு கொண்டாட்ட,துயர,சலிப்பு,ஏக்கம்.அழுகை போன்ற மனநிலையை வெளிப்படுத்தக்கூடியது.அது தன்னுடைய செயலின் ஊக்கத்தை பிரித்தரியாது அந்தரங்கப் புரிதல்கள் அவை.ஆம்.
ஏனோ மனதில் ஒரு தெளிவு ஏற்பட்ட பின்பும் தூக்கம் எட்டாததை அறிந்தவனாய் என்னை உறக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தவன் என்னிடம் பேச முற்பட்டான் அதற்காகவே நான் விழித்திருப்பதாகச் சொல்லச் சிரித்தவன்.
“நாம் அதை இங்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் போது ..நம் அருகில் வசிப்போரின் எண்ணத்தை உன்னால் உணர முடிந்ததா ..”
“கண்டிப்பாக..நம்மை இங்கிருந்து வெளியேற்ற எல்லா முயற்சிகளையும் அவர்கள் எடுக்கக் கூடும்..”
“நிச்சயமாக ..நம்மைப் பைத்தியம் என்று கூட நினைக்கக் கூடும்..”என்று சிறிது பேச்சைவிட்டுத் தொடர்ந்தவன்.. “ஒரு இரண்டு நாட்கள் நாம் வெளியில் செல்ல வில்லை என்றால் அதை இன்னும் சுவாரசியப்படுத்தலாம் ..” என்று சொல்லும் போது அவனுக்குள் இருந்த பயத்தை அவன் கண்காணாத திசையில் செல்ல அனுமதித்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.அந்தப் பயத்தில் இவ்வளவு நேரம் அவன் உலண்டு கொண்டிருந்தவைகளே தீர்வுகாண வழிவகை செய்திருக்கும் என்று நம்புகிறேன்.
“கண்டிப்பாக ..ஆனால் இச்சவப்பெட்டியினுள் இருவர் அடங்க மாட்டோம் என்கிற எண்ணம் எழாதா அவர்களுக்கு ..”என்று அவனுடைய தொனியிலேயே பதில் சொல்ல
“ எழ வேண்டும்..” என்று சிரித்து முடித்தான்..நான் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்தவன் என்ன என்பது போன்ற செய்கையை வெளிப்படுத்த…அவனிடம் “அந்த அறையின் சாவியைக் கொடு ..”என்று கேட்டேன்..
இதுவரை கேட்டிடாத சிரிப்பலைகள் அவை..இருளில் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகளைக் கண்கொண்டு காணமுடிந்தது…
“ நீதான் அதை வைத்திருக்கிறாய்..”


அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.அவன் மீண்டும் தன் நண்பனிடம் அதைப் பற்றி விவாதிக்க அதே பதிலே வந்தது.அதை நம்பாதிருந்த என்னை அவன் கரம் பிடித்து அவளின் வண்ணப்பேழையை வைத்திருக்கும் அறையின் முன்பு சாத்திய கதவினை இருவரும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம்.அவன் என்னைப் பார்த்து “நம்பிக்கை இல்லையென்றால் முயன்று பார்..”என்று கூற என் கைகள் நடுக்கமுற அக்கதவினைத் திறக்கச் சென்றது.ஒரு பெருமூச்சுடன் அதனைத் திறக்க முயன்றேன்.ஆனால் அது எடுபடவில்லை.மீண்டும் எனது முயற்சியினைத் தொடர ஒருகட்டத்தில் அதை ஒரு போதும் என்னால் திறக்க முடியாது என்று தோன்றிய கணத்தில் என் சாவு நிகழ்ந்ததாக எண்ணினேன்.என்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பன் இப்போது ‘திற’ என்றான்.சாவியாக என்னை ஏற்றுக் கொண்டதன் விளைவாய் அக்கதவு தன்னை துறக்க..கண்களை கூச்செறியும் வகையில் அவ்வறை முழுவதும் தீட்டியிருந்த வண்ணங்கள் என்னை மூச்சு முட்டச் செய்தது.அதன் ஒவ்வொரு நுணுக்கங்களிலும் வெளிப்படும் குரலை அறிந்திட விளைந்த எனக்கு இது மகிழ்வின் வெளிப்படுத்துதல் என்பதை உணர்ந்தேன்.அந்த ஆனந்தக் கூவலை இதுவரை பார்த்திடாத வலி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது.முடிவுறா அவ்வண்ணங்களில் அவளின் முகத்தைத் தேட முற்பட்டேன்.என்னிடமிருந்து மறைந்து விளையாடத் தொடங்கியிருந்தாள்.அந்த வண்ணப்பேழையின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது.

Previous articleசிங்கராஜாவின் விருந்து
Next articleநூறு கல்யாணிகள்
லட்சுமிஹர்
லட்சுமிஹர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர். தற்போது திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் யாவரும் வெளியீடாக வந்திருக்கிறது.2022 ஆம் ஆண்டு வாசகசாலையின் 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' விருதுபெற்றவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.