ஒவ்வொருமுறையும் அப்பாவைப்பற்றி அம்மா புதிய புதிய கதைகளாக தான் சொல்லிக் கொண்டிருப்பார். அந்தக் கதைகளுக்கு முடிவே கிடையாது . ஒருமுறை சொல்லுவார் ‘உங்க அப்பா நம்மள எல்லாரையும் விட்டுட்டு ஓடிப் போய்ட்டாரு’ என்று. இன்னொரு முறை ‘ஒரு திருவிழாவுக்குப் போயிருந்தப்ப படகு மூழ்கி தண்ணீரில் விழுந்து இறந்துட்டாரு உங்கப்பா’ என்பார். அடுத்தமுறை உங்க அப்பா பிளேன்ல ஏறி துபாய்க்கு போயிட்டாரு. வருவதற்கு கொஞ்ச நாள் ஆகும்’ என்பார். இன்னொரு முறை ‘உங்க அப்பா வேற ஒரு பொண்ணு கூட எங்கேயோ ஓடிப் போயிட்டாருடா’ என்பார். அவரது கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. அப்படிக் காரணங்கள் கண்டுபிடிப்பதை ஒரு கலையாகவே அவர் பயின்று வருகிறாரோ என்று கூடத் தோன்றும். ஆனால், அப்படிப்பட்ட கற்பனைகளை அவர் என்னிடம் சொல்லுவதை நான் அனுமதித்திருந்தேன் என்பதே உண்மை. அவருடைய மனதிற்கு ஒரு சமாதானம் கிடைக்கட்டுமே என்றுதான் . இத்தனை கதைகளைக் கேட்ட பிறகும் ஒரு முறையாவது எனக்கு அப்பாவைத் தேடிச் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியதே இல்லை . ஒருமுறைகூட ! அதன் காரணம்தான் எனக்கும் புரியவில்லை.
கதைகளைத் தேடி எடுத்துச் சொல்வதில் அம்மாவுக்கு இருந்த சுதந்திரம் எனக்குக் கிடையாது. நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது ஒவ்வொரு முறையும் நான் இதுபோல் ஒவ்வொரு கதை சொன்னால் அதனால் விளையும் குழப்பங்கள் அனேகம். அனைவரின் கேலிக்கும் ஆளாவதுதான் மிஞ்சும். இன்னொரு காரணம் என்னவென்றால் இந்த விஷயத்தில் அம்மாவோடு போட்டி போட நான் விரும்பவில்லை. என்னைப் போன்றே அப்பா அருகில் இல்லாதவர்களையே நானும் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஒரேவிதமான துக்கமும், மனநிலையும் உள்ளவர்களிடையில் இருக்கும் நட்பு இன்னும் சற்று ஆழமானதாக இருக்கலாமோ என்ற எண்ணம்தான். ஆனால், நான் அடுக்கி வைத்திருந்த கனவுகளையும் கற்பனைகளையும் உடைத்தெறிகிற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதை ஒரு பெரிய நிகழ்வாக நான் கருதவில்லை என்பதுதான் உண்மை .
உச்சி வெயில் சுட்டெரிக்கும் ஒரு கோடை நாளில் , வியர்த்து நனைந்த உடலோடும் உடைகளோடும் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா ! ஒரு வெப்பக் காற்று வீசி வீடு முழுவதும் கொதிநிலையின் உச்சத்தை அடைந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். நரைத்த தலைமுடி, சோர்ந்து வற்றிய கண்கள், அழுக்குப் படிந்த கை நகங்கள், அறுந்த செருப்பு…..இந்தக் கோலத்தில் தான் அவரைப் பார்த்தேன். இதுவா என் அப்பா ? ஒருவேளை பிற்காலத்தில் எனக்கு வயதாகி தலை நரைத்து , கண்கள் குழிவிழுந்த பின்னால் நானும் அப்பாவின் இதே முகச்சாயலுடன்தான் தான் இருப்பேனோ என்னவோ? சொல்ல முடியாது!
என்னை ‘மகனே’ என்றும் அம்மாவை ‘விஜயா’ என்றும் அழுதுக்கொண்டே கூப்பிட்டவாறு உள்ளே நடந்து வந்தார் அப்பா. மிகுந்த அருவருப்புடனும், முன்பின் தெரியாத ஒருவரைப் பார்க்கும் அதே பார்வையுடனும் முறைத்துக்கொண்டே அம்மா உள்ளே சமையலறைக்குச் சென்று விட்டார், அடுப்பில் ஏதோ வைத்துவிட்டு மறந்த ஒரு பாவனையில் !
நானும் எனது வயதான உருவத்தை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு உடனே இறங்கி வெளியே நடக்கலானேன், யாரையோ மிகவும் அவசியமாகப் பார்த்தே ஆக வேண்டும் என்பது போன்ற அவசரத்தில் ! நான் ஏன் அப்படி செய்தேன் ? எனக்குத் தெரியவில்லை ! ஏதோ தோன்றியது ; அதன்படி செய்தேன். அவ்வளவுதான்.
மாலை நேரம் வரை இடையிடையே அவரைப்பற்றி நான் நினைத்துக் கொண்டேதான் இருந்தேன். அவர் அங்கே தனியே இருந்தபோது என்னவெல்லாம் யோசனை செய்துகொண்டிருப்பார். என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பார்? நாற்காலியில் நான் வைத்திருந்த என் சட்டையை எடுத்து முகர்ந்து பார்த்து இருப்பாரோ மகன் என்ற பாசத்தில்? முற்றத்தில் அம்மாவின் துணிகள் கிடக்கின்றன. அதையும் ஒரு நோட்டம் விட்டிருப்பார் ! இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொண்டு நின்றுகொண்டே இருந்திருப்பாரோ? அல்லது மனமுடைந்து போய் ஒரு குட்டி சுவற்றைப் போல் கீழே விழுந்து கிடப்பாரோ?
ராத்திரிதான் நான் வீட்டை அடைந்தேன். அவரைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கவில்லை. வீட்டின் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு இருப்பாரோ என்ற சிந்தனை கூட எனக்கு எழவில்லை. ஆனால் என் மனம் சொன்னது, நான் பெரியதாக எதையோ இழந்து விட்டேன் என்று. அது என்ன? என் அம்மாவால் இனிமேல் அப்பாவைப் பற்றிய எந்தக் கற்பனைக் கதைகளையும் சொல்ல முடியாதே ! அதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருந்தது. அம்மா அப்பாவைப் பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. அவருடைய மனதில் இருந்த ஓராயிரம் கற்பனைகளுள் ஒன்று உடைந்து வெளிவந்து விழுந்துவிட்டது. அந்த ஒரு காரணத்தாலேயே எனக்கு ‘அந்த மனிதர் ஏன் எங்களைத் தேடி வந்தார்’ என்று கூடத் தோன்றியது.
அம்மா உறங்கிய பிறகு நான், அலமாரியின் கீழ்த்தட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்துப் பார்த்தேன். அது பள்ளிப் பருவத்தில் நான் உபயோகித்துக் கொண்டிருந்த ஜாமட்ரி பாக்ஸ் ! அதில்தான் அம்மா தன் தாலியை வைத்திருந்தார் . நான் பார்க்கும்போது அந்த சிறிய ஆலிலை வடிவமுள்ள தாலி அங்கே இருக்கவில்லை. எங்கே போய்விட்டது? அப்பாவிடம் அதை திருப்பி கொடுத்திருப்பார் அல்லது அம்மாவே அதை எங்காவது தூர எறிந்து இருப்பாரோ? அதுவரையில் தோன்றியிராத ஒரு கேள்வி இப்போது எனக்குள் தோன்றியது . “எதற்காக அந்தத் தாலியை அம்மா இத்தனை காலம் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்” என்பதே அக்கேள்வி !
அப்பா வந்து போன பின் இன்றுவரை அப்பாவைப் பற்றி அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவுடைய கற்பனைப் பட்டத்தின் நூல் அறுந்து போய்விட்டது. எங்கேயோ அந்த பட்டம் சென்று விழுந்திருக்கும் . ஒருவேளை வேறு யாரேனும் அந்தப் பட்டத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம், என் அம்மாவை போல வேறு யாராவது..?
(ஸாபு ஹரிஹரன் அவர்கள் மலையாளத்தில் எழுதிய ‘பட்டங்ஙள்’ என்ற சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)
தமிழில் : கிருஷ்ணமூர்த்தி பாலாஜி
ஆசிரியர் குறிப்பு:
ஸாபு ஹரிஹரன்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது நியூசிலாந்தில். ஸாபு ஹரிஹரனின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.
கிருஷ்ணமூர்த்தி பாலாஜி: பெங்களூருவில் வசிப்பவர். தி ஹிந்து நாளிதழில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர். தற்போது மொழிபெயர்ப்பு படைப்புகளை எழுதி வருகிறார்.