நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1

இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களில் தெரிகின்ற தனித்துவமான அம்சங்களை முன்வைத்து படங்களை அறிமுகம் செய்து பேசும் தொடர். ஒரு குறிப்பிட்ட சாரத்தைப் பேசும் ஒரு அத்தியாயத்தில் ஐந்து படங்கள் அறிமுகம் செய்யப்படும்.

முதல் ஐந்து : சூழும் கரும்புழுதி.

மனிதன் இயல்பிலேயே தனக்கான சுயப்பிரதேச அமைப்புகளை இச்சை கொள்பவன்; அதை நிறுவிக் கொள்ள விழைபவன். தனக்கென ஒரு சுயமும், தன் குடும்பத்திற்கென ஒரு சுயமும், தன் இனத்திற்கென ஒரு சுயமும் அவனுக்கு அர்த்தத்தைக் கொடுத்துப் பாதுகாப்பின்மை எண்ணத்தைக் குறைக்கிறது.  ஏதோ சில இடையூறுகளால் அதில் குடும்பம் உறவுகள் பற்றிய சந்தேகங்களும், தர்க்கமின்மைகளும், கட்டுப்பாட்டு மீறல்களும், அதன் மீதான ஸ்திரமின்மையைக் குறித்த கவலைகளைத் தொடர்ந்து வழங்கி, அவனை எப்போதும் கொந்தளிப்பு மனநிலைக்குள் தள்ளி வரும். ஞாலத்தின் எந்த மூலையிலும் ஏற்பட்ட மொழிகளில் கலை ஆதிகாலம் தொட்டே அத்தகைய தவிப்புகள், அதனால் ஏற்பட்ட குருதிக் காட்சிகள் எல்லாம் பெருங்காப்பியங்களுக்குள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் குடும்பங்கள், உறவுகள் போன்ற அமைப்புகளின் மீதான அதிருப்தி குறித்து அறிவியல் நோக்கில் கடும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இது தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றை வலிந்து, கட்டமைத்து, பரப்புரை செய்து எழுப்பப்பட்டிருக்கும் ஒரு இயக்கச் செயல். ஆனால் எல்லா நீர்நிலைகளும் கடலில் சேராதது போல இந்த கட்டமைப்புகள் எல்லாம் நிஜத்தில் இறுதியில் சுதந்திரத்தைத் தருவதாக முடிவதில்லை. அப்படி சுதந்திரம் தந்தாலும் அது கரு நிழல்களென பீதியின் நினைவுகளைத் தனிமைக்குத் துணையனுப்பி வைக்கின்றன. 

இந்த சமூக உளவியல் சூழலின் பின்னணியில் திரைப்படங்கள், குறிப்பாக ஐரோப்பியத் திரைப்படங்கள் குடும்பங்களின் சிதைவுகளை, சக மனிதர்கள் மீதான அவநம்பிக்கையை, அபத்த உலகில் காற்றிலேயே உலவிவரும் பாதுகாப்பின்மையை எப்படியெல்லாம் முன்வைத்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம். காரணிகளின் தொகையை ஒற்றை கதாபாத்திரத்தின் மீதோ அல்லது ஓர் அணியின் மீதோ ஏற்றி அதன் கருணையற்ற, திட்டமிட்ட, வெறித்தனத்தை ஒரு குடும்பத்தின் மீது போலச் செய்து பார்த்திட முனைகிறது. 

இலக்கியத்தை விடவும் சினிமாவில் கத்தி போல முன்வைக்கப்படும் காட்சியின் சாத்தியம் படபடப்பினை எளிதில் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த வல்லது. அதனாலேயே வாழ்வின் பேரிருளை வாசிப்பில் கடப்பவர்கள் கூட துளி உதிரம், கிழிந்த சதைத் துணுக்கு, அடிவயிற்று ஓலம் போன்றவற்றை திரையில் பார்ப்பதை ‘தேவையற்ற வன்முறைக் காட்சிகள்’ என்று ஒதுக்கிச் செல்வதைக் காண முடிகிறது. அகத்தில் கற்பனையில் பெருகும் உதிரத்திற்கும், பிம்ப நிஜத்தில் திரையில் ஒழுகும் சிகப்பிற்கும் பல மடங்கு செறிவு வேறுபாடு உண்டு; திரை நிணத்தின் தாக்கம் அதிகம்.  

குடும்ப உறவுகளின் சிதைவுகளின் காரணப்புள்ளிகள் அந்நியர்களால், காமத்தின் தீயால், ஆற்றாது அளித்த சாபத்தால் என  பல படித்தானைவை. ஆனால் ஆச்சரியமாக அந்த சிதைவின் விளைவுகள் பெரிதும் ஒரே மாதிரியான படிநிலைகளைக் கொண்டவையாகவே படங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. இணையான பல உறவுகளின் மீது, அவர்கள் குழந்தையெனினும் விதிவிலக்கின்றி தொடுக்கப்படும் கருணையற்ற தாக்குதல்கள்; படிப்படியாக உச்சம் தொடும் வலியின் பயணம்; இந்த நிலைத்த கொடும் அத்தியாயத்தை வெற்றிகரமாகக் கடந்துவிட நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் மாறி மாறி அலையெனச் சுமக்கும் உளநிலை; இறுதியில் அழிவினால் உண்டாகி விட்டிருக்கும் ஆழ்வடு! இங்கு நாம் பேசும் எந்த படத்திலும் இந்த நான்கு விளைவுகளும் மறு சிந்தனைக்கு இடமின்றி நடந்தேறி விடுகிறது.

பாதுகாப்பற்ற உணர்வைக் கட்டுப்பாடின்மையும், தன்னம்பிக்கையின்மையுமே ஊதி வளர்க்கும் கிரியா ஊக்கிகள். கடலை முழுமையாகப் பார்ப்பதே இயலாத போது, அதன் அலைகளில் கால் நனைத்து விட்டு, கடலையே பிடித்து விட்டதாக எண்ணிக் கொள்வது யாருக்கும் அபத்தமானது. அப்படித்தான் உறவுகளின் கீழ்த் தளங்களிலிருந்து எழும் முடைநாற்றமும், ஆசிட் வார்த்தைகளும், வன்முறையும், அவைகள் பற்றிய அச்சமும். மூடிவைத்திருக்கும் கடிதத்தைக் கண்டு ‘என்னமோ ஏதோ’ என்று பயந்து கண்ணீர் வடித்தவர்கள் தானே நாமெல்லாம். அதனாலேயே அதற்கு ‘அஞ்சல்’ என்ற பெயரிட்டனரோ? 

இந்த பாதுகாப்பற்ற உணர்வே வன்முறையைச் செயலாக்குவதிலும், வன்முறைக்கு உள்ளாவதையும் தானே ஊர்ஜிதம் செய்கிறது. தன்னம்பிக்கை அதிகம் இருந்தால் தன்னால் உருவாகப் போகும் வன்முறையைத் தவிர்க்கவும் முடியும். தன் மதத்தில் நிறைவும், போதிய நம்பிக்கையும் கொண்ட காந்தி அவர்கள் அத்தனை எளிதில் மாற்று மதத்தினரை காயப்படுத்தவோ, இழிவு செய்யவோ முனைந்திடவே இல்லையே. ஆனால் தவிப்பும், சுய அவநம்பிக்கையும் கொண்ட எளிய மதப் பற்றாளர்கள் விரைந்து ஓடி, மாற்று மதத்தினரை மோதி உமிழ்ந்து வெட்டிச் சாகும் வெறி விழிகளை மாட்டிக் கொள்கின்றார்கள். 

வறுமை, உடலிச்சை, நடத்தை, உள/ உடல் நோய்கள், பிரிவினை எண்ணங்கள் என பலவும் குடும்ப அமைப்பிற்கான சீரழிவை ஏற்ப்படுத்தத்தக்க காரணிகளே எனினும், இன்றைய தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம், சுதந்திரமயமாக்கம் போன்ற பூதாகர கருதுகோள்களின் கொடூரமான மறுபக்கங்களும் இதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. திரைப்படங்கள் இத்தகைய காரணிகளைக் குறியீடுகளாகக் கதாபாத்திரங்களாகப் பொருத்தி ஒரு மானுட கதையையே சொல்லிச் செல்கையில் மட்டும் நல்ல படைப்புக்களாகின்றன. 

இத்தகு கதையம்சங்களுடனான ஐந்து திரைப்படங்களை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. இவை அத்தனையுமே பொதுவாக அதன் ஆழிருள் பொருளடக்கத்திற்காக மீண்டும் மீண்டும் பார்க்கத் தவிர்க்கும் திரைப்படங்களும் கூட. திரைப்படங்கள் மூலம் மனிதனின் இருளை அணுகுவது மிகவும் தேவையான, பலமான, உடனடியான வழி என்பதால், ஆழ்மனச்செவியை இப்ப்படங்களை நோக்கித் தீட்டி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

— 

1.The Killing of a Sacred Deer (2017) | Yorgos Lanthimos | Colin Farrell

முதல் சட்டகத்திலேயே கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் அண்மைக் காட்சி. அடிவயிற்றில் தீயெனப் பெருகும் பின்னனி இசையுடன் அறுவை சிகிச்சைக்காக , பசித்தவனின் மேசையில் திறந்து வைக்கப்பட்ட உணவு போல,  துடித்துக் கொண்டிருக்கிறது இதயம். அதனைச் சுற்றி இரு சோடிக் கரங்கள் ஒரு நிலையற்ற தையல்காரனுடையதைப் போல அசைகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் இரத்தக் கறைகள் மிகுந்த செங்கை உறைகள் தனித் தொட்டிக்குள் கழற்றி வீசப்படுகின்றன. அங்கு ஆரம்பிக்கும் அசௌகரியம் மெல்ல உயர்ந்து கொண்டே படமெங்கும் வியாபித்து விடுகிறது. வெளிப்பட்ட கைகள் அழகிய தூய்மையான தனித்துவமானவை; அவை சர்ஜன் ஸ்டிவனுடையது. கைகள் எப்போதும் மனதின் புற வடிவம். மிகவும் துல்லியமான வெண்மையுடனும், நேர்த்தியுடனும் இருக்கும் அழகு தன்னிடையே பெரும் சோகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. 

மார்டினின் விழிகளுக்குள் ஒரு வாளின் கூர்மை இருக்கிறது. அக்கூர்மை கருணையையும், நீதியையும், எத்தகைய தண்டனைகள் மூலமாகவும் நிலைநாட்ட தனக்கு அதிகாரம் இருக்கிறது, என்பதைப் பறைசாற்றும் மெளனங்களைத் தனதாக்கி வைத்திருக்கிறது.புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை மருத்துவரிடம் நல்ல நட்பு கிடைக்கப் பெறுகிறது. அவனிழந்த தந்தையின் இடத்தை தான் கொஞ்சமேனும் நிரப்புவதாகத் தோற்றம் ஸ்டீவனுக்கு. மார்டினை தன் குடும்பத்தின் உள்ளறை வரை அழைத்துச் செல்ல தயங்கவில்லை.

அழகிய தூய்மையான தனித்துவமான கைகள் கொண்ட ஸ்டிவனைப் பதிலீடாக தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுகையில் கணவனை இழந்திருந்த மார்டினின் தாய் ஸ்டீவனின் கைகளின் மேல் மையல் கொண்டு தன் மயக்கத்தை வெளிப்படையாகவே முன்வைக்கிறாள்.மெல்ல ஸ்டீவனின் குற்ற உணர்வு தன்னையே விழுங்கிவிடும் மோசமான நச்சுயிரி போல அளவில் பெருத்து உள்ளாடுகிறது. வாயுமிழ்தலைக் கட்டுப்படுத்துவது போலத் துயரத்தை கட்டுப்படுத்திட முயல்கிறான். உண்மையை அவன் ஏற்றுக் கொள்வதற்கும் அதை மறுப்பதற்குமான தயாரிப்புகள் அவனைக் கைவிடுகின்றன. 

அதற்கு நேர்மாறாக மார்டினோ உண்மையின் மையத்தை முயலின் மத்தியைக் கவ்விப்பிடித்த சிம்மமெனக் கறாராகவும் நிதானத்துடனுமே அணுகி வருகிறான். ஸ்டீவனின் மகனிடம் ஸ்டீவனது அக்குள் பகுதியிலிருக்கும் உரோமத்தினைப் பற்றிப் பேசுகிறான். இன்னொரு காட்சியில் அதைத் தன்னிடம் காண்பிக்கச் சொல்லி ஸ்டீவனையே நிர்ப்பந்திக்கிறான். உலகமே பரிசுத்தமான புறக்கைகளைப் பார்க்கையில் அக்குளில் இருக்கும் இருளைக் கணக்கிடுகிறான் அந்த கொலைத் தேவன். அவனது ஒடுங்கிய கண் குழிக்குள் வீசும் நீலத்தின் ஒளி அவனை மறுதலிக்க எவரையும் அனுமதிப்பதில்லை.  

ஒரு கட்டத்தில் மார்டின் தன்னை வெளிப்படையாக முன்வைக்கிறான். தன் தந்தையைக் கொன்றதை தூய கைகளை உடைய ஸ்டீவன் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்குக் கொஞ்சமேனும் தகுதியான தண்டனை, அவரது குடும்பத்தில் உள்ள நபர்களைத் தண்டிப்பது என்று சொல்கிறான். பண்டைய கிரேக்கத் தொன்மத்தின் கோபக்கார தெய்வம் போல, ஸ்டீவனின் குடும்பத்தின் மீது பழிவாங்கும் சபித்தலின் நான்கு படிநிலைகளை விவரிக்கிறான். முதலில் வாதம், பிறகு உணவு ஏற்காமை, பின் கண்பின்குருதி கசிதல், கடைசியில் மரணம் என்பவை அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக அவன் உருவாக்கித் தந்திருக்கும் நோயின் படிநிலை அறிகுறிகள். அது நேரடியாக அவனால் ஏற்படுத்தப்பட்ட நோய் என்பதனாலேயே மிகச் சிறந்த மருத்துவரின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் விந்தையான நோய் பற்றி எந்த முறையிலும் கண்டறிந்துவிட முடியாமல் போய் விடுகிறது.

வேறு வழியே இல்லை என்று புரிந்த பிறகு குழந்தைகளுள் ஒருவரைப் பரிகாரமாகப் பலி கொடுத்து குறைந்தபட்ச தண்டனையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கின்றனர் பெற்றோர். அவர்கள் இருந்தால் இன்னொரு பிள்ளையை உருவாக்கிக் கொள்ள முடியுமே என்பது பகுத்தறியப்படுகிறது! ஆனால் தன் மகளையோ மகனையோ என முடிவாகத் தேர்வு செய்ய முடியவில்லை. ஒவ்வொரு நாளும் மணிகளும் நொடிகளும் வெப்பம் நிறைந்த உலோகக் கலமென அச்சம் ஆட்டிப் படைக்கிறது. அலறல்களுக்கோ, மன்றாடல்களுக்கோ ஏதும் பலனிருக்கப் போவதில்லை என்பதை அறிவு சொல்லி இன்னும் அச்சத்திற்கே துணை போகிறது. 

ஸ்டீவனின் மனைவியும் மகளும் இந்த தீச்சட்டியில் அமர்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் கொடுமையானது. அவர்கள் கையறு நிலையின் பாரம் தாளாமல் உண்மையை அறிந்து கொள்ள தன் பாலியலைத் துச்சமாகப் படைக்கிறார்கள். உண்மை வந்து விழுந்த பிறகோ மடியின் கணம் பல படித்தாகிறது. ஆடையணிந்தால் கொந்தளித்து எரிகிறது. நிர்வாணமானால் தோலினைத் தீச்சுடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மகன் பாப் அந்த புனித விலங்கு என நேரடியாகவே பொருந்திப் போகிறான். கொலைத் தேர்விற்குப் பயந்து தன் முகத்தை மூடிக்கொண்டு துப்பாக்கியுடன் சுற்றிவிட்டுக் கிடைக்கும் திசையில் சுடுகிறான் ஸ்டீவன். அவனது முதலிரண்டு சுற்று காற்றில் விழுகிறது. மூன்றாம் குண்டு அந்த மானைக் கிழித்து செந்நீரை வழிய விடுகிறது. 

புனிதப்பசுவைச் செய்த கொலை கூட, இன்னொரு புனித சிசுவின் கொலையில் மட்டுமே சற்று இளைப்பாறும் என்று சொல்வதற்கு இசையும், ஒளிப்பதிவும், முகங்களும் பெரும் பொருந்திப் போகின்றவையாக இருக்கின்றன. குறிப்பாக இருளில் எங்கோ ஒட்டிக் கொண்டிருக்கும் ஒளியைக் கூட உறிஞ்சி எடுத்துவிடும் இசை, ஒவ்வொரு சட்டகத்திலிருந்தும் நாம் மகிழ்ச்சியை, நம்பிக்கையை, உவகையை எனத் தேட முனைகையில் முட்டுக்கட்டையாக முன்னின்று, நம் அடிவயிற்றைத் தொடர்ந்து அறுத்த வண்ணம் இருக்கிறது.

அழகிய முகங்கள் தம் கோரத்தன்மையின் முகமூடி மட்டுமே என உணர்த்திய பிறகு நம்மைத் துளி எச்சமின்றி, ஆட்கொண்டு அதன் போக்கில் நம்மை அலைக்கழிப்பதில் ஒரு தொய்வும் ஏற்படாமல் பயணிக்கிறது, திரைக்கதை. புன்னகைகள் வழியே நச்சினைப் பரிசளிப்பதும், கடவுள்கள் கண்களை வானத்தை நோக்கித் திருப்பிக் கொண்டதும் வேறு வழியின்றி தனக்கான சாத்தானின் பாதங்களை முத்தமிடுவதும், பலி கேட்கும் உக்கிரத்தை மெளனமாக நிகழ்த்துவது எனத் தொடர்ந்து வலி தருகிற படைப்பிது.

Thimios Bakatakis தொடர்ந்து லாந்திமோஸின் படங்களின் ஒளிப்பதிவாளர். இந்த படத்தின் நகர்வுகளின் நிதானமும் பரந்த வெளிகளில் கூட திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருக்கும் க்ளாஸ்ட்ரோ போபியாவும் பறவைக் கோணங்களின் ஆக்கிரமிப்பும் எங்கும் தப்பமுடியாத சிறைதான் இவ்வுலகம் என்பதை நிறுவி விட்டிருக்கிறது. நடிப்பு பற்றிக்கொள்ளும் தொற்று நோய் போல அளவெடுத்தும் அரக்கத்தனமாகவும் நிறைந்திருக்கிறது. காலின் ஃபேரல், நிகோல் கிட்மேன் போதாதென பேரி கியோகன் செய்யும் கடத்தல்கள் நம்மை, கதையைத் தாண்டியும் பல கொடுங்கனவிற்கு அழைத்துச் செல்கிறது. ‘இபிஜீனியா’ என்ற கிரேக்கத் தொன்மம் அதன் கோரத்துடன் மீண்டும் நவீனப் படுத்தப்பட்டிருக்கிறது. 

உலகமே கற்றுக் கொடுக்கப்படாத வன்முறைகளை எப்படியோ இயல்பாகவே கண்டடைந்துவிடுகிறது. பல கடவுள்களுக்கும் வன்முறையே தன்னை நிலைநாட்டும் கருவியெனத் தெரிந்திருக்கிறது. காலத்தைக் கருவியாக்கிக் கொண்டு நின்று கொல்லும் வன்முறை. ஒளியின் கீற்றைக் கிழிக்கும் செறிவான லேசரின் வன்முறை. சோலையில் நிற்கும் மரத்தை விடவும் பாலையில் கருகும் மரத்தின் நிழல் எப்பேர்ப்பட்டது. அப்படிக் கருகி நிற்பினும் கருணை பெறத்தகாத மனிதர்களின் ஊழ் எத்தகையது.

ஒவ்வொரு தனிமனிதனிடமும் அனிச்சை செயலாய், நிலைபெற்றிருக்கும், – சக அந்நியர்கள் மீதான – வலி திணிப்புகளுக்குத்தான் வாழ்க்கை எத்தனை புதிர்களை உருவாக்கி, அதற்கான தீர்வையும் சொல்லிப் பதற வைக்கிறது. தொட்டு விடவே முடியாத குருதியில் குளித்துவிட்டாக வேண்டிய நிஜமே நம் வாழ்க்கை என்பதும், அவ்வாடல் முடிந்து வெளியேறும் ஆசுவாசப் பெருமூச்சே நம் கீழ்மைக்கான மீட்சி என்பதும் எத்தகைய வலிச்சுழலில் நம்மை உள்ளிழுத்தாட்டுகிறது.

  1. Lady Macbeth (2016) | William Oldroyd | Florence Pugh

இந்த வரிசையில் முற்றிலும் வேறுபட்ட படம். உறவுகளின் அழிவைப் பற்றி நேரடியாகப் பேசாமல், கொலைத் தேவியின் கண்களிலிருந்து வரும் வஞ்சத்தின் பேராற்றலைப் பேசும் படம். விழித்துக்கொண்ட பேயின் தீராப்பசி, எத்தனைச் சதைகளைக் கிழித்துப் போட்டு விளையாடும் என்ற கேள்வியை, கலவிக்கும் வன்மத்திற்குமான இணைப்பு தளங்களில் வைத்துப் பார்க்கும் படம். வருங்காலத்தைப் பற்றிய திட்டமிடல்களும், புரிதல்களும், கோரக் கனவுகளுக்கு அளவாகினும் அருகில் இல்லை. 

கேத்தரீன் என்னும் தழும்பும் இளமையும், நுண்ணழகும் கொண்ட அவளை, நிலத்துடன் இனாமாக வாங்கி தன் மகன் அலெக்ஸாண்டர் லெஸ்டருக்கு வாரிசு வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மணமுடித்து வைக்கிறார் போரிஸ் என்ற நிலக்கிழார். அலெக்ஸாண்டர் கேத்தரீனை தீண்டுவதோ, பொருட்படுத்துவதோ இல்லை, மாறாய் அவளைச் சுவர் புறம் திரும்பி திகம்பரமாய் நிற்க வைத்துத், தன்னைத் தொட்டுக் கொள்வது மட்டுமே அவன் செய்வது. இன்னும் வாரிசு உண்டாகாதது குறித்து தன் அதிருப்தியைத் தெரிவித்த போரிஸ் தன் மகனுடன் நீண்ட தொலைவு செல்லவே, கேத்தரீனுக்கு தான் தங்கியிருக்கும் அந்த சிற்றுலகின் தடைகளே அற்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. வீட்டு வேலைகளுக்கோ அன்னா இருக்கிறாள். எனவே கேத்தரீன் தானாய் கால் வலிக்க நடக்கிறாள் கண்ட  பூவைத் தழுவிக் கொள்கிறாள். கலப்பின பணியாள் செபாஸ்டினின் குறும்பின் உவப்பும் தன் தனிமையின் அலுப்பும் தொட்டுக் கொள்ளும் மின்சாரப் புள்ளியில் அவளுக்குள் அதுவரை அவளே அறியாத காமப் புரவி விழித்துக் கொண்டு விடுகிறது.

அன்னாவின் விழிகளில் விழுவதையும் பொருட்படுத்தாமல் தன் மணப் படுக்கையிலேயே தன் நிற்றலறியா புரவிக் கனவுகளை நிஜமாக்கிச் சுகிக்கிறாள். விழிக்குப் புலப்படாத கோடுகள்தான் எனினும் தன்னெஞ்சறிந்தே அவள் கடக்கும் எல்லைகளைக் கண்டு தவிக்கும் அன்னாவின் எண்ணம் போலவே நிஜம் நடந்தேறிவிடுகிறது. உணவில் விடம் சேர்த்து மறு அறையில் போரிஸ் தவித்துச் சாகையில் தன் உணவைத் திடத்துடன் உண்கிறாள். அவனது அறிவுரைகள் வசையை விடவும் அவளுக்கு அதிக எரிச்சல் தந்திருப்பது போலிருந்தது. பச்சைப் படுகொலை பண்ணப் பழகிவிட்டதும் அவள் கொண்டிருந்த மீறல்கள் முகாந்திரத்தின் சமநிலையைக் கடந்து விடத் தொடங்குகிறது.

கறாரான உலகின் நியதிகளைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் பொறுமை அவளுக்கில்லை. அவளைச் சரி பிழை என்ற தராசில் வைத்துப் பார்க்கும் ஆற்றலும் பார்வையாளர்களுக்கு மெல்ல இல்லாமலே போய் விடுகிறது. ஓங்கரித்து அலறி மலைச்சரிவிலெல்லாம் ஓடும் யட்சியை எவரேனும் பெண்ணென்றழைப்பரோ! செய்யத்தக்கது எல்லாம் வெறித்துப் பார்த்தல் மட்டுமே. உட்கடலின் திசை இழுத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற தீராப்பசி மட்டுமே எஞ்சி இருக்கிறது அவளிடம். மெல்ல அதில் விழுந்து மயக்கம் கொண்டு நெளிகிறாள். தன் கணவன், அவனுக்குப் பிறந்ததாக விண்ணப்பத்துடன் வந்து சேரும் மதலை, தன் காதலன் என ஒவ்வொருவரையும் விழுங்கும் அக்கினிக் குஞ்சு அவளிடம் செறிந்தெழுகிறது. 

கட்டளைகள் வழங்கிடும் கணவனுக்கெதிரேயே தன் காதலனைப் புணரும் பைத்தியக்காரத்தனம், மென்னொளியில் கடற்கரைப் பாறைகளில் காதலனிடம் உறுதியாய் முத்தமிடும் உருக்கம், இள முலைகள் குலுங்கக் கண்கள் சிதற கைகளாலேயே மதலையைக் கொல்லும் வெறி, குற்ற உணர்வு தாளாமல் உண்மையைச் சொல்லும் செபாஸ்டினை இலாவகமாகச் சேதப்படுத்தும் தந்திரம் எனக் கொற்றவை எழுந்திருக்கிறாள் ஃப்ளாரன்ஸ் ப்யூ வின் நடிப்பில். அலெக்ஸாண்டரின் குதிரையை அழைத்துச் சென்று ஒற்றையாளாகக் கொன்று புதைக்கும் காட்சியில் நாளைய மிகச்சிறந்த நடிகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என உணர முடிந்தது. 

இசையை விட மெளனத்தின் இறுக்கத்திலும் காபி கோப்பைகள் அதன் தட்டில் உரசும் ஒலிகளிலும் பேய்க்காற்றின் நிலை கொள்ளாமையில் நிர்ப்பந்திக்கும் சத்தங்களிலும் மஞ்சத்துணிகள் கசங்கும் ஸ்வரத்திலும் மேனி சிலிர்க்கும் தவிப்பும் அச்சமும் ஒருங்கே உண்டாகி எழுகிறது. படம் முழுக்க ஊமையாகியும் பேசிக் கொண்டிருக்கும் அன்னா மட்டும் கேத்தரீனுக்குக் கொஞ்சம் அருகில் வரும் பாத்திரம். அவளது தவிப்பும் மலைப்பும் இறைஞ்சும் கண்களும் செய்வதறியாது தடுமாறும் உள்ளக்கிடக்கும் கூட வானை நோக்கி எழும் கூர்குன்று போல வெளிப்பட்டிருக்கிறது.

நல்லவள், கெட்டவள் என்ற ஒற்றைப்படை கேள்விகளுக்கு, இடமேதும் கொடுக்காமல் தீச்சுடும் தீப் பொறியாயினும் காட்டை வெந்து தணிக்கும் என்பது மட்டுமே தெரிவு செய்து காட்டப்பட்டிருக்கும். இறுதியில் உருவாகும் தனிமை நித்தியத் தனிமை என்றோ தண்டனை என்றோ சொல்லிக் கொள்வது பார்வையாளர்களின் தவிப்பிற்கான சுய தேற்றலாக இருக்கலாமே அன்றி, பெரும்புயல் கொண்ட அமைதியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். வெய்யோனிலாத உலகின் தாமரை என்ற மீளாத் தனிமையில் தஞ்சம் புகுந்து விட்ட கேத்தரீன் தோற்றவளா இல்லையா என்பதன் கேள்வி தேவையற்றது. 

3.Funny Games (2007) | Michel Haneke | Naomi Watts

அருகிலிருப்பவன் தன் பொழுதுபோக்கிற்காகக் கூட இன்னொருவனை வதையின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் படலங்கள் உலகெங்கும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஜெர்மானிய நாசிப் படைகள் கொல்லாத குழந்தைகளா. சிரியாவின் குழந்தைகள் முகத்தில் தொடர்ந்து விழும் குண்டுகளின் தயாரிப்பு மனிதனின் மூளைகளிலிருந்து உதித்தவை தானே. மனிதன் வெறும் புகழுக்காகவும் பதவிக்காகவும் சக மனிதனின் மண்டையோடுகளில் தேநீர் அருந்த முடியுமா? அவனுக்கு முகாந்திரமற்ற ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது. அந்த மாயக் கருமையை எளிதில் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார் ஹனெகே. 

Funny Games திரைப்படம் முதலில் 1997 இல் ஐரோப்பிய வடிவத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன் அச்சரம் மாறாத வடிவமே 2007 இன் அமெரிக்க வடிவம். நான் 1997 பதிப்பினைப் பார்க்கவில்லை. காரணம், இனி எப்போதும் எந்த மொழியில் இந்த திரைப்படம் மீளாக்கம் செய்யப்பட்டாலும் என்னால் பார்க்க இயலாது என்பதே! அந்நியர்களின் மீதான அவநம்பிக்கையை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வின் தென்றலை ரசிப்பது. ஹனெகேவின் Cache (2005) திரைப்படத்தையும் இந்த திரைப்படத்தையும் பார்த்து விட்டு சில நாட்கள் மனிதர்கள் மீதான அவநம்பிக்கையுடனேயே இருந்தேன். நிழலையும் சந்தேகிக்கும் பதற்றம் உள்ளே ஏற்பட்டிருந்தது.

இரண்டு சாந்தமான முகமணிந்த அந்நியர்கள் அவர்கள் வீட்டிற்குள் சிறு விண்ணப்பத்துடன் நுழைகிறார்கள். அவர்களது விளையாட்டின் விதிமுறைகள் எளிமையானது. நாளை காலை குடும்பத்தின் உறுப்பினர்களுள் எவரேனும் ஒருவராவது கொல்லப்படாமல் தப்பிவிடுவோம் என்று பந்தயம் கட்ட வேண்டும். அந்த இரண்டு அந்நியர்கள் இல்லை அனைவரும் இறந்து விடுவீர்கள் என்று பந்தயம் கட்டுவார்கள். அவ்வளவுதான். ஆனால் உடனேயே கொல்வதைப் பற்றி அவர்கள் நடைமுறைப் படுத்துவதில்லை. மெல்ல ஒவ்வொரு எதிர்வினையையும் ஆற்ற விட்டு அவர்கள் மீது தங்களது வன்மத்தினைப் பிரயோகிப்பார்கள்.

பின் தொடர்ந்து வரும் நிழலின் வன்முறை எவரும் அறியாதது. முகங்களின் அசட்டுத்தனம் உள்ளத்தின் தூய்மைக்கு உத்தரவாதம் தருவதில்லை. வெண்ணிற ஆடை அணிந்தவர் எவரும் அறத்தின் காவலர்கள் இல்லை என்பதும், குடும்பம் என்பதன் பலவீனத்தை எந்த ஒரு வெளியாட்களும் எளிதாகக் கைப்பற்றி அழிக்க முடியும் என்பதும் கடும் உளைச்சலைத் தருவது அது உண்மையென்பதாலேயே!

இந்த திரைப்படத்தினை மறுமுறை ஏன் பார்க்கவே மாட்டேன் என்று சொல்வதற்கான காரணம் இல்லாமல் இல்லை. முதன்மை காரணம் பாதிக்கப்படும் குடும்பத்தில் இருக்கும் சிறுவனது தவிப்பும் பீதியும். தன்னைத் துரத்தி வரும் கொலை காரனிடமிருந்து தப்பி ஓடி அருகிலிருக்கும் வீட்டிற்குள் நுழைந்து அங்கே தன் தோழி இவர்களால் முன்பே கொல்லப்பட்டிருப்பதை அறிந்து கொண்டதும் எழும் பீதி. அந்த முகம் அதன் உதடு கோணல்கள் எல்லாம் துல்லியமாகப் பதிவாகி விடுகிறது கசக்கப்பட்ட மனதில். 

கதைச் சுருக்கத்தினைச் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அறவே தேவையற்றது. ‘அருந்தியே ஆக வேண்டிய நஞ்சு’ என்று மட்டும் லேபிள் இடுகிறேன். அதைத் தவிர்க்க முடியாமல் அருந்தி பின் பாதியிலேயே தடுமாற்றம் கொண்டு விழிகளை மூடிக் கொள்வதும் முழுதாய் பார்த்துத் தவிப்பதும் பார்வையாளர்களின் பாடு. 

அசலான பீதி என்பது திரையெங்கும் உதிரப்புனல் பொங்குவதைக் காண்பிப்பதால் மட்டும் நிறைவேறிவிடக் கூடியதன்று. சொற்களின் திட்டமிடப்பட்ட வன்மங்களை, சீண்டி தண்டிக்கும் கொடூரங்களை, படிப்படியாக இரசித்து குழியில் தள்ளும் நோயின் நடனத்தைச் சொல்வதிலேயே படைப்பின் மையம் இருக்கிறது. 

4.Hereditary (2018) | Ari Aster | Toni Collette

காலத்தின் நெடுஞ்சாலைகள் நுண்ணியது. அதன் வழியே இருளின் பாரம்பரியங்கள் தன் இருப்பை உறுதி செய்து கொள்ளும். அதர்மம் எழுச்சி கொள்ளும் போதெல்லாம் தேவகுமாரன் பிறத்தல் என்பது எப்போதும் உள்ள தேய்வழக்கு. இருள் தேவனுக்கு அப்படி ஒரு கொண்டாட்டமான அவதாரமெடுப்பு இல்லை. மாறாக இருள் நித்திய இருப்பு கொண்டது. இருளின் பின்னணியில் தான் ஒளி இயங்கிக் கொண்டிருக்கிறது. இருள் என்பது இரவில் மட்டும் வரும் ஒன்றல்ல. பகலிலும் நம்மிடையே இழைந்தோடுவது. விரல்களுக்கிடையில், பெருமூச்சுகளின் இடைவெளியில் என எங்கேயும் எப்போதும்.

இருளை வழிபடும் ஒரு சங்கேத அணியின் உறுப்பினராக இருந்தமையால் தன் மகளால் வெறுக்கப்பட்டு வந்த கிழவி தன் பேத்தி சார்லியின் மர்மமான பக்குவத்தை வெகுவாய் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாள். சார்லிக்கு ஒவ்வாமையின் தொகை இருக்கிறது.  ஒருமுறை களிகூடுகைக்கு நண்பர்கள் சேரும் இரவிற்கு தன் தங்கை சார்லியைத் தவிர்க்க முடியாமல் அழைத்துச் செல்கிறான் பீட்டர். அன்பான ஒரு அக்காளின் அழைப்பால் தன்னுடலுக்கு எதிரான உணவொன்றை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டு, கடுமையான ஒவ்வாமைக்கு வித்திடுகிறது. அவள் நிலை கடும் நோய்மையை நோக்கி வளர்கிறது. பதற்றத்தில் அவளை மகிழுந்தில் அழைத்து விரைகிறான் பீட்டர். காரில் நெஞ்சை அடைக்கும் உள்வலியைப் போராட முடியாமல் காற்று வேண்டி சன்னலைத் திறந்து தலை துண்டிக்கப்பட்டு மடிகிறாள் சார்லி. 

இந்த காட்சியின் வலிமையும், அதைத் தொடர்ந்து நிகழும் பெரும் அலறல்களும், இந்த தசாப்த்தத்தின் திரைப்படங்களில் வந்த முக்கியமான வலி மிகுந்த காட்சிகள். ஒவ்வொரு முறையும் அமானுஷ்ய தளத்திற்கும், யதார்த்த இழப்புகளுக்குப் பின்னான துயரங்களுக்கும் இடையே தொடர்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. வரைபடங்கள் நிறைந்த நூலினையும், தன் தாயின் குறியீடுகளையும், அன்னி க்ரஹாம் தொடர்ந்து நோக்கத் துவங்குகிறாள். இருக்கையில் புறக்கணிக்கப்பட்ட முதியோரின் தடங்கள், அவர்கள் இறப்பிற்குப் பின் ஆராய்கையில் பல மடங்கு உருப்பெருக்கம் கொள்கிறது. மரித்தவர்களின் படங்கள், சிலைகள் போன்றவை, அவர்களது உடல்களை விட, பிரமிப்பும், சிலிர்ப்பும் மட்டுமின்றி, அதுவரை விழிக்குப் புலனாகாத பொருள்தருதலையும் ஏற்படுத்தும். 

தன்னைப் புதிதாக இணைத்துக் கொண்டிருக்கும் ஒரு குழுவில் தென்பட்ட மந்தன சமிக்ஞைகளைத் தன் ஆய்வில் கண்டுகொண்டு ஒரு முடிவிற்கு வரும் கெடுவிற்குள் கரும் புழுதி அவளையும் அவளது மிச்ச உறவுகளையும் சூழ்ந்து விட்டிருக்கிறது. இந்த தொடர் வினையை நிறுத்த அவள் ஒரு உத்தியைக் கண்டறிந்து தன்னை பலி தரவும் தயாராகி விடுகிறாள், அது அவளுக்குப் பதில் அவள் கணவனை உள்ளிழுத்துக் கொள்கிறது. கருவல்லமைகள் ஆர்ப்பரிப்பு செய்வதை உணர்ந்து கொண்டு, தன் மரபியலை நொந்து கொள்கிறாள். எத்தனை நீளமாகக் கால்களை வைத்து எத்தனை வேகமாக ஓடினாலும் தான் மரபுடன் வேர் பற்றிப் பரவியிருப்பதை உணர்கிறாள். அவளால் அவ்வேரினை உதறிவிட வாய்ப்புகளே இல்லை என்று அறிகிறாள். கெடுவாய்ப்பாக அந்த மரபியலின் வழியே ஒழுகிச் செல்லும் அமானுஷ்ய வல்லமைகள் தன் மகனைத் தொட்டுவிடப் போகிறது என்ற அனர்த்தம் மெல்ல அர்த்தம் கொள்வதைப் பார்க்கையில் அவளுக்குள் ஆற்றாமை எழுந்து உன்மத்தம் பெருகுகிறது. 

’பெய்மான்’ என்ற ஒரு ஆவியின் கூடு ஆணாக இருக்க வேண்டும் என்பதன் விதி பிட்டர் மூலம் சரிசெய்யப்பட்டு விடுகிறது. தலையிழந்தும் மண்டியிட்டு வழிபடும் அத்தனை பேரின் நீட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படத்தின் மூலம் பார்வையாளர்களின் அச்சத்தைக் கிளறி மேலெழுப்பி இருள் தன்னிருப்பை உணர்த்திச் செல்கிறது.

5.Borgman (2014) | Alex Van Warmerdam

ஆயுதங்களுடன் சிலரைத் தேடிக் கொலை செய்ய எத்தணிக்கும் ஒரு அணி பாதாளத்தில் வாழும் Hobo க்களைத் தேடுகிறது. எலி போல் நிலத்தினடியில் வாழும் போர்க்மேன் தன் நண்பர்களை எச்சரித்து விட்டு சாதாரணர்கள் வாழிடம் நோக்கி பாதசாரியெனக் கிளம்புகிறான்.

அவர்களுக்கு அவனது இருப்பே தெரியாதவாறு அவர்கள் இடையே தங்கி வாழ்கிறான். முற்றிலும் ஒலியற்ற அசைவுகள் அனைத்தையும் உட்செரிக்கும் ( உச்சரிக்கும் )விழிகள் அவனுடையன. இரவில் அக்குடும்பத்தின் மனைவியின் மீதேறி அமர்ந்து அவளுக்கான துர்கனவுகளைச் சமைக்கத் தெரிகிறது அவனுக்கு. மெல்ல கணவன் மனைவியிடையே விரிசல்களை ஏற்படுத்தி பாதாளப் பிளவாகப் பெருக்கம் செய்கிறான். 

இவ்வாண்டு வெளியாகிப் பல விருதுகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் Parasite திரைப்படத்தின் மைய இழை அப்படியே இத்திரைப்படத்தில் இருப்பது எதார்த்தமான ஒன்றல்ல. மைய ஓட்டத்திற்கு உகந்ததாக உருவாக்கப்படும் எந்த திரைப்படமும் அதற்கு முன்னர் அந்த வகைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தனித்துவமான திரைப்படத்திலிருந்து நேரடியான உண்மைகளையும் தைரியமான காட்சியாக்கங்களையும் உருவி எடுத்திருக்கும். அதில் சந்தையில் புழங்கும் திரைக்கதை விதிகளைக் கணக்கிட்டு உள் நுழைத்து இன்னும் மெருகான திரைக்கதையாக முன்வைக்கும். 

இந்த கட்டுரையிலேயே இந்த படத்தில் மட்டும்தான் சிறுவர்கள் மீதான நேரடி வன்முறை குறைவாகப் பதிவாகி உள்ளது. ஆனாலும் எளிதாகப் பார்க்க முடியாத தயக்கத்தினை ஏற்படுத்திடும் அளவிற்கு மெஸ்மரிசத்தினைப் பிள்ளைகள் மீது பயன்படுத்துவதும், அவர்களை கடும் வன்முறைகளுக்கு எளிதாகப் பழக்குவது போன்ற காட்சிகள் சில உள்ளன. 

கோடான கோடி மூதாதையர்களின் சதைக் குருதித் தொடரில் சங்கிலிபோல் தொடர்ந்து வரும் இருள் இன்றைய சிறு குடும்பங்களின் தனிமையைச் சந்திக்கும் புள்ளியில் எத்தனை பலவீனமான அமைப்புகளில் மனிதன் வாழ்கிறான் என்பதே ஆச்சரியம்தான். அந்த பீதியை கண்முன் நிறுத்தும் திரைப்படங்கள் இவை. 

தொடரும்…!

 


-கமலக்கண்ணன்

 

2 COMMENTS

  1. அ௫மையான தொகுப்பு தோழர்! உங்களது எழுத்தும் நடையும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. வரும் பகுதிகளுக்காக காத்திருப்பேன். உங.களுக்கும் கனலிக்கும் என் வாழ்த்துக்களும், நன்றிகளும்!

  2. எப்டி இப்படிப்பட்ட வார்த்தைகளை தேர்ந்து கோர்த்து பிரயோகிக்கிறீர்கள். இதில் நிறைய வார்த்தை கோர்வைகள் பயன்படுத்தலிலேயே இல்லாமல் போய் விட்டாலும், உயிர்ப்பு நிறைந்தவைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.