ரஜ்ம்

 


ரையில் மல்லாந்து படுத்துக்கிடக்கிறேன். மரணம் ஒரு அரசியைப் போல் ஒவ்வொரு படிக்கட்டாக மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருக்கின்றது. காதிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் தரையில் பரப்பியிருக்கும் பழுப்பு நிற கிரவல் மண்ணுடன் சங்கமிக்கின்றதுஎனது உடல் அங்கங்கள் அசைந்து பின்னர் அமைதியாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. திறந்திருந்த உயிரின் வாசற் கதவிற்குள் மூச்சினை அணைத்துக் கொள்கிறேன். எனது உயிர்  இப்போது அதன் உடலிலிருந்து நீங்கி மரத்தின் இலைகள்போல உதிர்ந்துகொண்டிருக்கிறது.

மெல்லியதொரு குளிர் காற்று மரங்களை அசைத்த படி புரள்கின்ற இரவின் நடு நிசி கடந்த இரண்டாம் ஜாமம். அழகினை உரித்தெடுத்துவிட்டதைப் போல வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது . வானம் முழுவதும் இருளைத் துளைத்து நட்சத்திரங்கள் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. எனது உடலுக்கு முன்னால் சாம்பல் நிற இரும்புக் கேற்றில் ஒரு பாடசாலையின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. உள்ளே நெருப்புக் குச்சிகளை அடுக்கி வைத்த மாதிரி மாடிக்கட்டிடங்கள்.

நிலவின் ஒளிக் கீற்று பிளந்து வந்து இந்த இடத்தினை தொடும் பொழுது  உறைந்த ஓவியம் ஒன்றாக காட்சி விரிகின்றது. கருப்பு வெள்ளை நினைவுகளை வண்ணங்கள் தீட்டிப் பார்க்கின்றேன். புகை மூட்டத்திலிருந்து தெளிந்து வரும் ஒளிப்புள்ளி மனதினை நெருங்கி வருகின்றது.


 

இன்டைக்கு ஸ்கூலுக்கு போகணும்கெதியா எழும்பு”, உம்மா என்னை அவசரமாக ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தாள். “வெள்ளைத் துணி வாங்கி புது யுனிபோர்ம் தைக்க உம்மாவிடம் காசு இல்லை. வாப்பா வயலுக்க வேலை செய்ய போயிருக்காரு. வந்ததுக்கு பிறகு புதுசா  சட்டை தைச்சு தாரன். இப்ப இதை உடு”, என பக்கத்து வீட்டு காலிதாவின் பழைய யுனிபோர்ம் சட்டையை அணிவித்தார். அந்தச் சட்டை வெள்ளை நிறத்திலிருந்து விலகி சற்று இளமஞ்சள்  நிறத்தினை ஒத்திருந்தது. “காவல் காரனுக்கு உடுப்பு போட்ட மாதிரி இருக்கி, எனக்கி வேண்டாம்என எவ்வளவு நேரம் தேம்பி அழுதேன். வறுமையில் மிதக்கும் உம்மாவின் கண்கள் என்னை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தன. “வாப்பா வாங்கிட்டு வருவாரு, இன்றைக்கு மட்டும் போடுமா”, என்று உம்மா தனது விரல்களினால் எனது தலை முடியை கோதி சமாதானம் செய்தா.

அப்பியாசக் கொப்பியையும் பென்சிலையும் ஒரு பொலித்தீன் பையில் போட்டுகொண்டு எனது கைகளில் பற்றிக் கொண்டேன். பாடசாலைக்கு போகும் வழியில்நல்லா படிக்கணும், கொப்பியும் பென்சிலும் பத்திரம், யாரோடயும் சண்டை பிடிக்கக் கூடாது’,  நான் கால் வைத்து நடந்த ஒவ்வொரு அடியிலும்  உம்மா வார்த்தைகள் பதிந்து எழுந்தன. இறுதியில் இந்தப் பாடசாலை கேர்ட்டின் முன்னால் நின்ற பொழுது நான் டீச்சராக வர வேண்டும் என்ற ஆசை சிலிர்த்து ஒடுங்கிக் கொண்டது.

நான் எழுதிய உருண்டை வடிவிலான எழுத்துக்கள் அச்சடித்த போல இருக்கு என்று சாபிரா டீச்சர் அடிக்கடி கூறுவார். கணிதம் தான் எனக்குப் பிடித்த பாடம். இரண்டாம் வகுப்புப் பரீட்சையில் நான் முதலாமிடம் பெற்ற பெறுபேற்று அட்டையை நான் உம்மாவிடம் காட்டிய தருணம். அவவுடைய  கண்கள் பனித்தன. என்னைக் கட்டியணைத்துக் கொஞ்சி மகிழ்ச்சியில் திளைத்திருந்தா. வாப்பாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. பாராட்டவுமில்லை, சந்தோசப் படவுமில்லை. ஏதோவொரு அலட்சியம் நிறைந்த முகம். “பொம்புளப் புள்ள எப்படிப் படித்தாலென்ன, வீட்டு வேலைகளை  நல்லா செய்யப் பழகு”, என்று அழுத்தமாக கூறி விட்டு சென்றார். சிறிதளவேனும் உணர்வுகளை சிந்தித்துக் காட்டாத  வாப்பா எப்பவுமே இப்படித்தான். ஆண்டுக்கு ஒரு முறை தான் கதைப்பார்.

உம்மா சவுதியிற்கு போவதற்கு ஆயத்தமாகிய அந்த இருண்ட நாளின் நினைவுகள் மனதிற்குள் கருகிப் போயிருக்கும் வடுக்களாக துலங்குகின்றன. அன்று பாடசாலைக்கு என்னை அழைத்துச் செல்லும் பொழுது தலையை கவிழ்ந்து கொண்டு நடந்து வந்தா. நான் தான் நிறைய கேள்விகளை உம்மாவிடம் கேட்டுக் கொண்டே வந்தேன். நீர்சுரந்த கண்களை இறுக மூடுவதும் திறப்பதுமாக உம்மாவின் குரல் முறுகியிருந்தது. பாடசாலையை நெருங்குகையில் எதையோ கூற நினைத்தது போல் உம்மாவின் அதரங்கள் துடித்தன. ஆனால், மெதுவாக அடங்கி இயல்பு நிலைக்கு வந்தா. நான் உள்ளே சென்றதும் கேர்ட்டின் முன்னால் நீண்ட நேரம்  உம்மா நின்று பார்த்துக் கொண்டிருந்த என்னை விட்டுப்  பிரிவதற்கான  அந்த கடைசித் தருணம் வாழ்க்கையில்  கடக்க முடியாத படிமங்கள். அவ்வளவு தான் , பின்னர் நான் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய பொழுதுஉம்மா பசிக்குது, சோறு தாங்க”, என  சுற்றி சுற்றி வந்து கண்களால் வீட்டிற்குள் உம்மாவினை துழாவிக் கொண்டிருந்தேன்

உம்மா சவூதியிற்கு போயிட்டா, இரண்டு வருஷம் கழிச்சித் தான் வருவா, வாப்பாட உம்மா சோறாக்கி வச்சிரிக்கா. நீயே போட்டு திண்ணு. செல்லம் காட்டாம எல்லா வேலைகளையும் செய்ய பழகிக்க”, என்று வாப்பா இறுகிய உதடுகளை அசைத்து கூறிய பொழுது எரியும் கணங்களின் வெம்மையை தாங்காமல் அப்படியே நின்றிருந்தேன். உம்மா ஏன் இப்படி நடந்து கொண்டா, அவக்கு என்னைத் தனியே விட்டுட்டு போக எப்படி மனம் வந்தது. உடல் முழுவதும் விக்கலடித்தது போல் குலுங்கி குலுங்கி அழுதேன். எந்தவித கூச்சமும் இல்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவக்கு சவூதியிற்கு போவது தான் முக்கியமாய் போயிற்று. எனக்கு இனி உம்மா தேவையில்லை. எனக்குள் நானே கோபத்தினை நுரைத்துத் தள்ளினேன். இல்லை , இல்லை. உம்மா விரும்பி போயிருக்க மாட்டா. வாப்பாதான் கட்டாயப்படுத்தி அனுப்பியிருப்பார். என்று பிறிதொரு மனம் என்னை ஆற்றுப்படுத்தியது.

உம்மா இல்லாமல் போன பிறகு  பாடசாலைக்கு செல்வதற்கு எனது கால்கள் தயங்கின. கரும்பலகையை நிறைத்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களை உற்றுப் பார்க்கையில் அவை ஒன்று சேர்ந்து மணிக்குடுவை உடைந்தது போல்  உம்மாவின் நினைவுகளால் சிதறிக் கிடக்கும். அந்த   நிழல் என்னை நோக்கி  வந்து கொண்டிருப்பது போல்  இருக்கும். அந்த நிழலுடன் கதைப்பதற்கு மனம் ஏங்கியது. பின்னர் அந்த நிழலின் மீது கோபம். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையைப் போல் மனம் தாவிக் கொண்டிருந்தது. சவூதியிலிருந்து உம்மா கடிதம் அனுப்பத் தொடங்கிய காலம். அக் கடிதங்கள் உம்மாவினை அப்படியே மிம்பப்படுத்தியது.

கடிதங்களை பிரித்து நான் தான் வாப்பாவுக்கு வாசித்துக் காட்டுவேன். முதலாவது வரியிலேயே எனது பெயரைத் தான் விழித்துக் கூறியிருப்பாஅப்பொழுது எனது குரல் வண்ணத்துப் பூச்சி போன்று பட படக்கும். கடிதங்களை நெஞ்சிற்கு நெருக்கமாக வைத்து வாசிக்கையில்  உம்மா தனது அன்பின் மிகுதியில் தாள்களை கிழித்துக் கொண்டு வந்து எனக்கு முத்தம்  தருவதைப் போன்று உணர்ந்து கொள்வேன்.

சவூதியில் வீட்டு வேலைகள் கடினமானதாக இருப்பதாகவும் ஓய்வு நேரம் கிடைப்பதில்லையெனவும் உம்மா குறிப்பிட்டிருந்தா. ஏதோவொரு பாலைவனத்தில் கழுத்தளவு மட்டும் மண்ணில்  உம்மாவின் உடல் புதைந்திருப்பது  போல் அக்கடிதங்கள் அபாய எச்சரிக்கை விடுத்தன. நாட்கள் கரைய உம்மாவின் தொடர்பும் வழுகிக்கொண்டே சென்றது. ஊரில் உள்ளவர்கள்,அவள் வெளிநாட்டில யாராவது ஒரு அறபிக்காரன கலியாணம் முடிச்சிருப்பாள் என்ற வசவு மழையை உம்மாவின் மீது பொழிந்தார்கள். வாப்பா ஆரம்பத்தில் சற்று பதற்றமடைந்தார். பின்னர் அவரது மனம் கனன்று பெரியதொரு பாறாங்கல்லாக உருப்பெற்றது. அவளுக்கு புதுசா ஒருத்தன் கிடச்சிருப்பான் என்ற சீற்றம் பீறிட்டுப் பிரவகித்தது.

காலத்தின் திரட்சி என்னைப் புதிதாக வனைத்தன. அப்பொழுது எனது வயது பதினான்கு. காலைப் படுக்கையிலிருந்து எழுந்த பொழுது எனது படுக்கை விரிப்பில் ரத்தப்புள்ளிகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. உம்மா என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினேன். பின்னர் வாப்பம்மாவும் மாமிமார்களும் என்னைக் குளிப்பாட்டி புதிய சல்வாரினை அணிவித்தார்கள். “இனிமேல் நீ வெளியே திரியப் போடா, ஸ்கூலுக்கு போகத் தேவல, தாவணிய கலட்டக் கூடாது”, இப்படி எழுதாத விதிகள் எனக்கு பிறப்பிக்கப்பட்டன. எனது இரத்த ஊற்றுக்கும் அந்தக் கட்டளைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது மட்டும் எனக்குப் புரியவேயில்லை.

இருள் கலைந்து கொண்டிருக்கும் விடியல் நேரம். அதிகாலையை அறிவிக்கும் நீர்ப்பதக்காற்றும் குளிரும் கிளம்பி விட்டது. பக்கத்தில் இருக்கின்ற பள்ளிவாசலில் சுபஹ் தொழுகைக்கான அதான் சன்னமாக ஒலிக்கின்றது. ஆடைகளின் சர சரப்புக்கள், செருப்புக்களின் உராய்வுகள், சைக்களின் சக்கரங்கள் சுழல்கின்றன. திடீரென்று எல்லாச் சத்தங்களையும் ஒரு பெரிய மெளனம் விழுங்குகின்றது. சருகுகளில் பாம்பு விரைவது போல் முணு முணுக்கின்றார்கள். திரையரங்குகளில் படக்காட்சி பார்ப்பது போல எனது உடலை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றார்கள். காலடியொன்று மெதுவாக  நெருங்கி வருகின்றது. “தம்பி கிட்டப் போகாதீங்க, முதல்ல பொலிஸ் வரட்டும்”, என்று கதவினை ஓங்கி அறைந்தாற் போன்று விளிப்புக் குரலின் சத்தம். அருகே வந்தவர் முகத்தினை கூர்ந்து நோக்கி விட்டு பின்னோக்கி நகர்கின்றார். இப்றாஹீம் மெளலவி என்ற பெயரின் உச்சரிப்புக்கள் அந்த இடத்தினை நிரப்புகின்றன.                        

இப்றாஹீம் மெளலவியின் வீட்ட வேலைக்கு ஒரு பொம்புள புள்ளயொன்று தேவையாம். மாசம் இரண்டாயிரம் ரூபா தருவாங்க. உடுப்பு , சாப்பாடு எல்லாம் கிடைக்கும் , நீ போய் அங்க இரிஎன்று என்னுடைய அபிப்பிராயத்திற்கு இடமே தராத வாப்பாவின் கட்டளை இன்று வரை ஓராயிரம் முறை நினைவில் மீண்டு எழுகின்றன. உடுப்புக்களை அடுக்கி வைத்த துணிப்பையை கையில் தூக்கிக்கொண்டு நானும் வாப்பாவும் இப்றாஹீம் மெளலவியின் வீட்டை நோக்கி நடந்தோம்.

இப்றாஹீம் மெளலவி போடியார் பரம்பரையைச் சேர்ந்தவர். அவருடைய வாப்பா உசன் போடியார் , வருடா வருடம் கந்தூரிச் சாப்பாடு , பாத்திஹா கத்தம் என உசன் போடியாரின் வீட்டில் பெரிய அண்டாக்களில் சமைத்து ஊருக்கே விருந்து வைத்த பரம்பரை என்று பெயர் பெற்ற குடும்பம். உசன் போடியார்  தன் ஒரேயொரு மகனான இப்றாஹீம் மெளலவியை சவூதியிலிருக்கின்ற மத்ரஸாவிற்கு அனுப்பி ஓத வைத்தார். இப்றாஹீம் மெளலவி ஐந்து வருடங்களின் பின்னர் ஊர் திரும்பிய போது உசன் போடியார் குடும்பம் தலைகீழானது. கந்தூரி, கத்தம் எல்லாம் வழங்குவது நிறுத்தப்பட்டது. அந்தக் குடும்ப பெண்களின் முகம் திரையிட்டு மறைக்கப்பட்டது. எல்லாவற்றினையும் அது பிழை இது பிழையென உசன் போடியாருடன் இப்றாஹீம் மெளலவி சண்டை பிடித்ததாகவும் தனது மகனில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு மனம் தாளாது உசன் போடியார் மாரடைப்பில் மெளத்தாகி விட்டதாக ஊரில்  உள்ளவர்கள் பேசிக் கொள்வார்கள்.    

வீட்டின் கூரையைத் தொடுமளவு ஓங்கி உயர்ந்த மதில். முதலையின் வாயைப் போன்று கிரீச் என்ற சத்தத்துடன் விரிந்து செல்லும் கேர்ட். போத்தலுக்குள் அடைத்து வைத்தது போல் காற்று கூட உட் போகாத அந்த நிலத்தில் உள்ளே செல்வதற்கு தயங்கிய எனது  கால்கள் பின்னின. எழுதாத தாளின் வெண்மையைப் போன்ற ஜூப்பாவும் தலையில் தொப்பியுமாக இப்றாஹீம் மெளலவி கதிரையில் வீற்றிருந்தார். அவரது முகத்தின் அரைவாசித் தோற்றத்தினை அடர்த்தியான பழுத்த தாடி மூடியிருந்தது. சிவப்பு நிறக் கோடுகள் நெளியும் வெளிர் மஞ்சள் விழிகள் எனது உடலின் கழுத்துக்கு கீழே விழுந்து கொண்டிருந்தது. இப்றாஹீம் மெளலவியின் ஆடையிலிருந்து வெளிப்பட்ட அத்தர் வாசனையின் அடர்த்தி வீடு  முழுவதும் பரவியிருந்தது. ஆனால் அந்த வாசனையை இப்பொழுது நினைத்தாலும் நாறுகின்றது.

இதோ எனது வாயிலிருந்து உதிரும் சொற்களில் அத்தர் நெடியும் கலந்திருக்கின்றது. “இவள் சின்னப் புள்ளயா இருந்தவள் இவ்வளவு கெதியா பெருத்துட்டாள்”, என்று அடிக்கொரு தடவை இப்றாஹீம் மெளலவி கூறிக் கொண்டேயிருந்தார். அந்த வீட்டில் இப்றாஹீம் மெளலவியையும் பீவி மாமியையும் தவிர வேறு யாரும் இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது. “வீட்டு வேலை எல்லாம் அவசரமா செய்வாள்”, என்று வாப்பா கூறிக் கொண்டே வலிந்து சிரிக்க முயன்றார். பின்னர் எனது கண்களிலிருந்து மெளனத் தாரையாக நீர்த்துளிகள் இறங்குவதை பார்த்ததும் இயல்பு நிலைக்கு வந்தார். “நீங்க பயப்பட தேவல, நாங்க பார்த்துக்குவோம்”, என்ற பீவி மாமியின் குரல் மெல்லியதாக ஒலித்தது. ஆனால் எனக்கு மூச்சிரைத்தது.

வாப்பா எனக்கு பயமாருக்கு , கூட்டிட்டு போங்க’, சொற்கள் உதட்டின் நுனி வரையிலும் தவழ்ந்து பின்னர் வாப்பாவுக்கு கோபம் வந்து விடுமோ என்ற பயத்தில் சுவருக்குப்  பின்னால் ஒளிந்து கொண்டன. பழியிடப்படப்போகும் மிருகம் போல நான் மிரண்டு போய் நின்றிருந்தேன். எனது மூச்சுக் காற்றினைக் கூட கவனிக்காது இப்றாஹீம் மெளலவியிடம் வாங்கிய பணத்தினை கைகளில் இறுகிப் பொத்திய படி வாப்பா போய்க்கொண்டிருந்தார்நீரில் போட்ட உப்புப் போல இப்றாஹீம் மெளலவியின் நிழல் மறைமுகமாக  என்னைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்து. “நீ நல்ல கெட்டிக்காரி”, என்று கூறியவாறே இப்றாஹீம் மெளலவியின் கைகள் எனது இடுப்பினை சுற்றியிருக்கும் நாகப் பாம்பு போல சுருண்டு கிடக்கும். பீவி மாமியின் நிழலைக் காணும் பொழுது நமக்கு பிள்ளைகள் இல்லாத குறையை இறைவன் இவள் மூலம் பூர்த்தியாக்கி உள்ளான் என எனது தலையை தடவிக் கொண்டிருப்பார் . அந்த நேரத்தில் பீவி மாமியின் கண்கள் நீர்த்தடம் போன்று கண்ணீரில் தளும்பிக் கொண்டிருக்கும் . ஒரு பிசாசைப் போல எனது தலைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த இரவின் இருண்ட கணங்களை தூசு தட்டிப் பார்க்கின்றேன். நாங்க கலியாணத்திற்கு போயிட்டு வருவோம். வீட்டின் கதவினை பூட்டிட்டு தூங்கு என கூறி விட்டு பீவி மாமியும் இப்றாஹீம் மெளலவியும் கிளம்பினார்கள். அன்றைய எனது தனிமை எல்லா அபாயங்களையும் சேர்த்து மறைத்து வைத்திருந்தது. இருள் கவியத் தொடங்கியது. மேகங்கள் சண்டையிட்டு மோதி முழங்கின. போர் வீரர்களின் காலடி ஓசையைப் போல நிலத்தில் விழுகின்ற மழைத்துளியின் சத்தம் அதிர்ந்து கொண்டிருந்தது.

மணல் கரைந்தோடியது. மின்னல் ஒளிக்குப் பயந்தது போல்  மின்சார விளக்குகள் ஒளிர்வதும் அணைவதுமாக இருந்தன. வீட்டின் முன் வராந்தாவில் தங்கியிருந்த புறாக்கள் படபடத்து அமைதியாகின்றன. தாங்க முடியாத ஒரு ரகசியம் அந்த இடத்தினை வியாபித்திருந்தது. குரல் முறுகி சிரிப்பாக அதிர்வது போல் கதவு திறந்து கொண்டது. யாரது என்ற கேள்வியை திரும்பத் திரும்ப நாக் குழற கேட்டுக் கொண்டிருந்தேன். அத்தர் வாடை நெருங்கி வர என்னால் கண்களை திறக்க முடியவில்லை. ஏதோவொரு பெரிய பாரமொன்றினை எனது உடலில் ஏற்றி வைத்து அழுத்துவது போல் உணர்ந்தேன். தள்ளி உதற முயற்சித்தேன். மீண்டும் மீண்டும் எனது உடலை அமுக்கிக் கொண்டேயிருந்தது. எனது தொடைகள் இரண்டுக்குமிடையில் கருக்கு வாலை உருவியது போல் வலி பீறிட்டுப் பாய்ந்தது. பின்னர் ஏதோவொரு பிசுபிசுப்புத் திரவம் கால்களின் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. பின்னர் அந்த உருவம் சட்டென்று மறைந்து விட்டது. சிறிது நேரத்தில் இப்றாஹீம் மெளலவியின் இருமல் ஒலி அறையை நிறைத்து இருந்தது.

என்னுடைய புருஷனை நீ தான் கெடுத்துப் போட்டாய், நாசமாய்ப் போனவளே! நீதான் அவரை வளைச்சுப் போட்டாய்”,  உரத்த காற்றில் செடி கொடிகளைப் பிடுங்கி எறிவதைப் போல் பீவி மாமியின் குரல் முறுகி வார்த்தைகளால் என்னைப் பிய்த்தெறிந்தாள். போதை தலைக்கேறியவள் போல் கண்களைச் சொருகி சாய்ந்திருந்தேன். வயிற்றுக்குள் நெளிந்து கிடக்கும் குடல் வெளியே வருவதற்காக சண்டை பிடித்துக் கொள்வது போல் எனக்கு  குமட்டிக் கொண்டிருந்தது. வாயிலிருந்து வடியும் வீணியில் புளிப்பும் கசப்புமாய் கலந்த திரவம் உறைந்திருந்தது. பீவி மாமி அவசரமாக ஹபாயாவினை அணிந்த படியேஷைத்தானே காருக்குள்ள ஏறுடி”, என்று என்னை அதட்டினாள். இருள் கவிந்திருந்த அந்த இரவில் பாம்பு ஊருவது போல் கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.

சுலைஹா , எம்.பி.பி.எஸ் என்ற பெயர்ப்பலகையின் முன்னால் இருந்த வீட்டின் வாசலில் கார் நின்றது. பீவி மாமி முதலில் இறங்கி அந்த வீட்டிற்குள் ஓடினாள். பின்னர் என்னை உள்ளே வருமாறு தலையை அசைத்தாள். வீட்டின் முன் அறையினுள் எனது பெயரை கூறி அழைக்கின்ற சத்தம் கேட்டதும் உள்ளே சென்றேன். மங்கலான வெளிச்சமொன்று அந்த அறையினுள் ஊடுருவிச்சென்றது. மருந்துப் பெட்டிகள், சவப்பெட்டிகள் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டிலும் அதற்குப் பக்கத்தில் சேலைன் பாய்ச்சுவதற்கான தாங்கியும் என்னை வரவேற்க தயாராக இருந்தன. சூனியக்காரி வடிவத்தில் இறுகிப் போன முக அமைப்பில் ஒரு பெண் அந்த அறைக்குள் இருந்த கதிரையில் வீற்றிருந்தாள். நாகப் பாம்பின் கண்களைப் போல அவளது கண்கள் மினுங்கிக் கொண்டிருந்தன . தனது இடது கையில் இருந்த இருதயத் தொனிகளைச் சோதிக்கும் கருவியை சாட்டையை சுழற்றுவது போல் சுழற்றியபடியே என்னை கட்டிலில் சாய்ந்து கொள்ளுமாறு  சைகை காட்டினாள்.

இடுப்பிற்கு கீழேயுள்ள ஆடைகளை கழற்றுமாறு கூறினாள். எந்தவித கேள்வியுமின்றி அவளது மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவளது ஒவ்வொரு கட்டளைகளையும் நான் நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். எனது உடலை பரிசோதித்த பின் ஒரு மாத்திரையை தந்து விழுங்குமாறு கூறினாள். இன்னுமொரு மாத்திரையை அகல விரித்திருந்த எனது  இரண்டு கால்களுக்குமிடையில் உள்ளே செலுத்தினாள். மீண்டும் ஒரு தடவை கருக்கு வாலை உடலுக்குள் உருவிய வலி போல துடி துடித்தேன். அன்று இரவு எனது படுக்கையில் இரத்த ஆறு பீறிட்டுப் பாய்ந்தது.

வாப்பாவும் வாப்பம்மாவும் தங்களது கைகளை இறக்கைகள் போல் அடித்துக் கொண்டே இப்றாஹீம் மெளலவியின் வீட்டினை நோக்கி ஓடி வந்தார்கள். உணர்ச்சியற்ற கண்களால் வாப்பாவினை உற்றுப் பார்த்தேன். அவரது உறைந்த முகத்தில் அதிர்ச்சி கலையவில்லைஅவர் நின்ற இடத்திலேயே மூச்சிரைக்கத் தொடங்கியது.  “என்ட பேத்தியை கெடுத்துப் போட்டியே, வாடா வெளியே”, என வாப்பம்மா அலறிக் கொண்டிருந்தார். ஆனால் இப்றாஹீம் மெளலவி வெளியே வரவில்லை. “அப்ப உங்கட மகள் மட்டும் சும்மாவா இருந்தாள்?”, என்ற பீவி மாமி கூக்குரல் இட்டாள். இனி இவங்களுக்கிட்ட நியாயம் கேட்க தேவையில்லை ,பொலிஸூக்கு போவோம் என்ற படியே வாப்பா எனது கையை இறுகிப் பிடித்துக் கொண்டு வேகமாய்  நடந்தார்.

பொலிஸ் வாகனங்களும் நீதவானின் காரும் அந்த அதிகாலையின் நிசப்தத்தினை கிழித்துக் கொண்டு வந்து எனது உடலின் முன்னால் வந்து நிற்கின்றன. கருப்பு நிற கோர்ட் அணிந்திருந்த நீதவான் காரிலிருந்து இறங்கி வந்து எனது முகத்தினை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றார். நீதியின் கண்களின் முன்னால் எனது உருவம் வெற்றுத் தராசினை ஏந்தியிருப்பது இத்துடன் இரண்டாவது தடவை. இம்முறையாவது எனக்கு  நியாயமான தீர்ப்பு வழங்கப்படாதா? என்று எனது சூட்டுக் காயத்திலிருந்து வடிகின்ற ரத்தக் கோடு நீண்டு சென்று நீதவானின் காலடியில் மண்டியிடுகின்றது. ஏற்கனவே அவர் வழங்கிய தீர்ப்புக்கான குற்றவாளியினை காணவில்லை. அதற்குள் இன்னுமொரு குற்றம் . இந்தச் சங்கிலித் தொடரின் மர்மத்தினை அவிழ்ப்பதற்கான சிந்தனையில் நீதவானின் முகம்  அந்தக் காலை நேரத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. இன்றிலிருந்து பத்து வருடங்களின் பின்னால் பேசப்படப்போகும் என் ஆன்மாவின் முக்கிய சாட்சியங்களிலொன்றான எனது உடலை கமராவில் படம் பிடித்துக் கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு நீதவான் கட்டளையிடுகின்றார். பின்னர் எனதருகே நின்று தடயக்குறிப்புக்களை எழுதிக்கொண்டிருக்கின்றார்.

சட்டத்திற்கு கட்டுப்பட்டவனைப் போல் நீதவானின் முன்னால் சலூட் அடித்து எனது சம்பவத்தினைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் . . சி இன்ஸ்பெக்டரின் முகம் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைத்ததைப் போல் தெட்டத் தெளிவாக இருக்கின்றது. இல்லையென்றால் அவன் ஒவ்வொரு தவணைக்கும் எனது வழக்கின் பயில்களை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்து நைச்சியமாக பதில் சொல்ல வேண்டும் , பின்னர் சவூதியிலிருக்கும் இப்றாஹீம் மெளலவி தொலைபேசியில் அவனை அழைக்கும் பொழுது அன்றைய தவணையின் தரவுகளை விளக்க வேண்டும். இனிமேல் அந்த . . சியிற்கு  விடுதலை கிடைத்து விட்டது.

சேர் என்ட புள்ளய கொலை செய்தவன கண்டு பிடிச்சு தண்டனை வழங்குங்க சேர்”, என்று வாப்பா பெருங்குரலெடுத்து அழுதவாறே இந்த ..சியின் காலில் விழுகின்றார். அவரது நெஞ்சுக்கூடு உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கின்றது. எட்டு வருடங்களின் முன் இதே மாதிரி அழுகைக்குரலுடன் இப்றாஹீம் மெளலவியிற்கு தண்டனை வழங்குமாறு வாப்பா . .சியிடம் மன்றாடிய தருணம் நெருப்புத் தணல் போல் மனதிற்குள் சுடர் விட்டெரிகின்றது.

நான் சட்டத்திற்கு கட்டுப்பட்டவன், நீங்க பயப்படத் தேவையில்லை என்று கூறிய . . சி இப்றாஹீம் மெளலவியின் பணத்திற்கு அடிபணிந்தான். அதனால் தான் சம்பவத்தினை பதிவதற்கு நாங்கள் பொலிஸ் ஸ்டேஸனில் நிற்கின்ற பொழுதே இப்றாஹீம் மெளலவி சவூதியிற்கு பறந்து போனார்.  

அன்றிலிருந்து சந்தேகநபரின்றியே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதித்துறை அதிகாரிகள் என்னைத் துருவி துருவி விசாரித்தார்கள். ‘பாலியல் பலாத்காரம் , துஷ்பிரயோகம்’, என்று எதையெல்லாமோ கூறினார்கள். சில வேளைகளில் அவர்களின் கேள்விகளுக்கு என்னால் பேச முடியவில்லை . யாராவது பக்கத்தில் வரும் பொழுதே அலறிக் கொண்டு ஓடினேன்.

ஒரு முறை கொழுத்த வெயிலில் வாப்பா வழக்குத் தவணை முடிந்து வீடு வந்து சேர்ந்தார். வெயிலின் அகோரமும் வழக்குத் தவணையில் எதுவுமே நடக்கவில்லை என்ற சோர்வும் ஒன்று சேர்ந்து வியர்வையாக அவரது முகத்தில் வழிந்து கொண்டிருந்தன. எல்லாவற்றிற்குமே காரணம் நான் தான் என்பது போல் வெறித்தபடி என்னை நோக்கி  “இப்றாஹீம் மெளலவி உனக்கிட்ட வரும் வரையிலும் என்ன செய்து கொண்டிருந்தாய்? அவர் உன்னைத் தொடும் பொழுது ஏன் நீ சத்தம் போடாமல் இருந்தாய்”, என கன்னத்தில் அறைந்தார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழுந்த அடிகளையெல்லாம் வாங்கிக் கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தேன். “நம்மட மானம் போயிட்டு , இவளுக்கும் இவள்ற உம்மாவின் குணம் தான்”, என வாப்பம்மா ஓல மிட்டு அழுதாள். “உனக்கு சாப்பாடு இல்லை , வெளியே போஎன்று விரட்டினாள்.

அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோருடைய கண்களும் என்னைக் காணும் பொழுது விட்டேத்தியாக விலகி நின்றன. யாருமே என்னைப் பார்த்து புன்னகைப்பது கூட இல்லை. சங்கீதங்களற்ற வெற்றுக் கருவிகள் போல அவர்களுடைய முகங்களில் அன்பு வற்றியிருந்தது. ஏன் எல்லோருமே என்னை வெறுத்தார்கள் என்று புரியவில்லை. நான் அடியற்ற மரம் போலானேன். எனது வாழ்க்கை சிறுது சிறுதாக அழுகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவின் கனவிலும் அத்தர் நெடியும் சூனியக்காரியும் துரத்திக் கொண்டேயிருந்தார்கள்.

பகல் இரவாகவும் இரவு பகலாகவும் எனக்குக் காட்சியளித்தன. அறுந்து போன எனது உணர்வுகளின் நரம்புகளை ஒட்டவைப்பதற்காக, பழுத்துப் போன இதயத்தின் காயங்களை சீர் செய்வதற்காக நான் அலைந்து கொண்டிருந்தேன். பசியும் தாகமும் எனது உடலுக்குள் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்தன. சில ஆண்கள்  உணவுகளையும் உடைகளையும் நிறைத்திருந்த வலையை நோக்கி என்னை அழைத்தார்கள். அவையனைத்தும் எனக்கு உயிர் வாழத் தேவையாய் இருந்தது. பதிலுக்கு எனது உடலை நிலமாகக் கேட்டார்கள். முழு விருப்புடன் நான் வழங்கினேன். வேட்டைக்காரர்களுக்கு இரையாகிய எனது உடலில் ஒரு நூறு கீறல்களும் காயங்களும் குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தன.

பிரேதப் பரிசோதனைக்காக எனது உடல் மருத்துவ மனையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. எனது தலையில் துளைத்த  துப்பாக்கிச் சன்னங்களை  சட்ட வைத்தியரின் கைகள் புரட்டிப் பார்க்கின்றன. எவ்வளவு ஆழத்தில் சன்னங்கள் புதையுண்டுள்ளன என்பதை அவருடைய மருத்துவ மூளை  அளவிட்டுக் கொண்டிருக்கின்றது. சம்பிரதாயபூர்வமான விசாரணைக்காக இங்கே சிலர் ஒன்று கூடியுள்ளனர். குற்றவாளிகள் யாரென்று  கண்டுபிடிக்கும் பரீட்சையில் எல்லோருடைய மூளைகளும்  இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

எத்தனை மணிக்கு உங்களுடைய மகள் வீட்டினை விட்டு வெளியேறினார்? யாராவது வீட்ட வந்து கூட்டிக் கொண்டு போனார்களா? கொலை செய்தவர்களை தெரியுமா?”, நீதவானின் கேள்விகள் சன்னங்களாக வாப்பாவின் நெஞ்சில் துளைக்கின்றன. வாப்பாவின் கண்கள் சுருங்கியும் விரிந்தும் விடைகளுக்காக அலைகின்றன. மூக்கினைச் சீறி கைகளினை குழைந்து கொண்டு அவருடைய குரல் தழுதழுக்கின்றது. நிச்சயமாக எனது வாழ்வின் இறுதிக் கணங்களை கூறுவதற்கான தகுதி என்னிடமே உண்டு.

எனது கண்களைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டிருந்ததால் ஏதோவொரு குகைக்குள் இருப்பது போல் உணர்ந்தேன். அனிச்சையாக கைகளை அசைத்தேன். கைகளில் கயிறு கட்டப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. கால்கள் குருத்து மணலில் நட்டு வைத்த மாதிரி புதையுண்டிருந்தன. அது ஒரு திசைகளற்ற வெட்ட வெளி. காற்றில் மிதக்கின்ற பனை மர இலைகளின் சடசடப்பும் காகங்கள் கரைகின்ற சத்தமும் எதிரும் புதிருமாக நிகழ்கின்றன. “ஏன் என்னை நீங்க இங்கே கூட்டிட்டு வந்தீங்க , ஏன் இப்படி செய்றீங்க, உன்னோட இன்டைக்கு நான் இருக்கணும் என்று தானே போன் பண்ணி கூப்பிட்டீங்க, பிறகு ஏன் இப்படி செய்றீங்க, என்ன விடுங்க , நான் வீட்ட போகப்போறன்…” என்னுடைய தீனக் குரல் அந்த இரவின் நடுநிசியில் அவர்களிடம் மன்றாடியது.

  அடியேய் வேச, நீ எதுக்கு டீ எங்களுக்கு , ஊரில உள்ள எல்லா ஆண்களையும் நீ கெடுத்துக் கிட்டு இருக்கிறாய், உன்ட கஷ்டம் இனியும் தாங்க ஏலாது. உன்ட பிரச்சனைய இன்றோட முடிக்கணும். நியாயமாப் பார்த்தால் கல்லெறிந்து கொல்லனும், ஆனால் இரண்டு தோட்டாக்கள் தான் இன்றைக்கு உனக்கு தண்டனை தரப்போகுது.”

அவளுக்கிட்ட என்னடா கதச்சிட்டு இருக்காய் , லோர்ட் பண்றா. நான் சரியாக ஊகித்திருந்தேன். எனது நெற்றியின்  முன்னால் துப்பாக்கி நீள்கின்றது. அனைத்தையும் மூடிய திரையாக சன்னங்கள் எழுகின்றன. அல்லாஹ் அக்பர்.                                 

கபனிடப்பட்ட எனது உடல் சந்தக்கில் ஏற்றப்படுகிறது. மகிழ்ச்சி கம்பளம் விரிக்கப்பட்டு வெற்றி ஊர்வலமாக நான் எடுத்துச் செல்லப்படுகின்றேன். எனது உடலில் காமம் துய்த்தவர்களும், எனது உயிரைக் குடித்தவர்களும் எனது இறுதிப் பயணத்தில் சாவகாசமாக நடந்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டின் கேர்ட்டிலும் பெண்களின் கண்கள் மறைந்திருந்து எனது ஜனாஸாவினை உற்றுப் பார்க்கின்றன.

இதோ நான் இறைவனின் மாளிகையை  நெருங்கி விட்டேன். மக்கள் எனது ஜனாஸாத் தொழுகைக்காக  இங்கே ஒன்று கூடியிருக்கிறார்கள். கைகள் இரண்டையும் நெஞ்சுப் பகுதியோடு சேர்த்து இணைத்துக் கட்டப்பட்டு வெள்ளைத் துணியால் மூடப்பட்ட எனது உடல் எல்லோருக்கும் முன்னால் வைக்கப்படுகின்றது. மெளனத்தின் பெருவெளியொன்றில் வீற்றிருக்கும் அந்த பிரமாண்டமான மண்டபத்தில் திடீரென்று அத்தர் நெடி பரபரப்புடன் மேலெழுந்து வருகின்றது. சூனியக்காரிகள் தோன்றுகின்றார்கள். தமது சாட்டைகளை உருவி அத்தர் நெடியின் மேல் வீசுகின்றார்கள். மூக்கினை எரியச் செய்யும் அந்த நெடி உக்கிரமாக மண்டபத்தினை நிறைக்கின்றது.


-பாத்திமா மாஜிதா

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.