Wednesday, Aug 10, 2022

தினா நாத் நதிம் கவிதைகள்


1.

உடைந்த கண்ணாடி ஒன்று
உதவாப் பொருளாய் வீசப்பட்டது

ஒரு மாடு அதை
உற்றுப் பார்த்தது

நாய் ஒன்று வந்து
அதன் மீது மூச்சுவிட்டது

மனநிலை பிறழ்ந்த ஒருத்தி
அக்கண்ணாடியை எடுத்து
அவளின்
கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள்

அதற்குப் பிறகு
யாருக்கும் தெரியாது
அந்தக் கண்ணாடிக்கு
என்ன நேர்ந்ததென்று


2.

ஒரு மண் பாத்திரம்
மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு
பெண்ணின் இளகிய முகமாய்க்
காட்சியளிக்கிறது

மழைத்துளிகள்
அதன் பாவங்களைக்
கழுவிவிட்டன

எவரோ வந்து
பாத்திரத்தை எட்டி உதைத்தார்கள்
அங்கும் இங்குமாய்
அவற்றின் சில்லுகள்

இரண்டு நாட்கள் கழித்து
அச்சில்லுகளைக் கொண்டு
குழந்தைகள் விளையாடினார்கள்

நரகத்திற்கும், சொர்க்கத்திற்கும்
இடையே
இரண்டரைக் காலடிகள்தான்


3.

காற்று
சுள்ளிகளைச் சுமந்தபடிக்
குன்றினின்று கீழிறங்கி
ஆற்றின் கரையோரம் வீசியது

சுள்ளிகள்
மணல்மேடு ஒன்றில் சிக்கித்
தடைபட்டுத்
தன்னிடத்தைக் கண்டறிந்துவிட்டன

அன்றிலிருந்து
எல்லோரும் சொல்கிறார்கள்
“சுள்ளிகள்
எரிப்பதற்காகத்தானென்று”


4.

ஒரு சாலையின் முடிவு, சந்தாய் அமைந்தது
அதை ஆட்கொண்டது இருண்மை

அடுத்தடுத்த இரு கதவுகள்
சாலையைப் பார்த்தபோது
முணுமுணுத்தன
சிரித்துக் கொண்டன

அவை பேசியிருந்தால்
பேச்சு நீண்டிருக்கும்

கீழே
கண்ணீர் சிந்தும் மலர்கள்
மேலே
விண்மீன்கள் நிறைந்த வானம்


காஷ்மீரி : தினா நாத் நதிம்

ஆங்கிலம்: அர்விந்த் கிகூ

தமிழில்: கு.அ.தமிழ்மொழி

 

மூலக்கவிதை ஆசிரியர் குறிப்பு:

மார்ச் 18 1916 இல் ஶ்ரீநகரில் பிறந்த தினா நாத் நதிம் 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த காஷ்மீரி கவிஞர். காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்த டோக்ரா வம்சத்தை எதிர்த்து “காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற மக்கள் முழக்கம் தொடங்கிய காலத்தில் அந்தச் சூழலை ஒட்டி 1942 இல் “தாய் காஷ்மீர்” என்ற முதல் கவிதையைப் படைத்தார். தொடக்கக் காலத்தில் இந்தி, உருது ஆகிய மொழிகளிலும் எழுதி வந்தார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் இலக்கிய வாழ்க்கையில், நதிம் (1916-89) நிறைய எழுதினார். ஆனால் அவற்றை வெளியிடுவதில் ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. இதன் விளைவாக அவர் மிகவும் தகுதியான எழுத்தாளர் என்ற திறனாய்வு மிக்க பாராட்டுகளைப் பெறவில்லை.

காஷ்மீரி மொழியில் முதல் நவீன சிறுகதை, இசை நாடகம் மற்றும் சொனட் எனப்படும் செய்யுள்களை முதன்முதலில் எழுதியது மட்டுமல்லாமல் புதிய இலக்கிய வகைமைகளில் பரிசோதனை செய்தார். நதிம், நீண்ட காலமாக காதல் மற்றும் ஏக்கத்தின் கருப்பொருள்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காஷ்மீர் கவிதைகளை மாற்றிச் சமகால இயல்புடன், நவீன உணர்வையும் இணைத்து எழுதினார் . காஷ்மீரின் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் இயக்கத்திற்கும் தலைமை தாங்கினார். 1986 இல் “ஷிஹில் குல்” என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றார்.

மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு: 

கு.அ.தமிழ்மொழி கவிஞர், பண்பலை தொகுப்பாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தன்னுடைய 9 ஆம் அகவையில் எழுதத் தொடங்கியவர். சிறகின் கீழ் வானம், கல்! நில்!வெல்!, திரி திரி பந்தம் , புத்தனைத் தேடும் போதிமரங்கள் , நினைவில் வராத கனவுகள் , பறக்கும் பூந்தோட்டம் ஆகியவை இவரின் நூல்கள்.

“புத்தனைத் தேடும் போதிமரங்கள்” ஐக்கூ நூல் திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்ப்பட்டத்திற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாத்தூர், ஶ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குரிய “இக்காலக் கவிதையும், சிறுகதையும் மற்றும் சமய இலக்கியமும் புதினமும்” என்ற பாடநூலில் கு.அ.தமிழ்மொழியின் படைப்பு, துளிப்பா (ஐக்கூ) பிரிவில் இடம்பெற்றுள்ளது. இவர் 2007 ஆம் ஆண்டு நடுவண் அரசின் “தேசியக் குழந்தை விருதை” எழுத்தாற்றலுக்காகப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது


 

பகிர்:
Latest comments
  • மனம் தொடும் கவிக்கருக்கள். தேர்ந்த மொழிபெயர்ப்பு. பாராட்டுகள் தமிழ்மொழி

  • அருமையான கவிதை

  • நான்கு கவிதைகளுமே சிறப்பாக இருக்கின்றன. தமிழ்மொழி நன்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

leave a comment

error: Content is protected !!