ஆதவனின் படைப்புலகம்

தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில், வெகு தற்செயலாகத்தான் ஆதவனின் மரணச்செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆதவனின் இரண்டு நாவல்களையும், அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும், புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படித்துப் பிரமித்திருந்த வாசகனுக்கு அந்த செய்தியின் கடைசியில்இவர் ஆதவன் என்ற பெயரில் கதைகள் எழுதி வந்ததாகத் தெரிகிறது என்பது எவ்வளவு பாதித்திருக்கும்? ஆதவன் எழுதிக் கொண்டிருந்த காலங்களில் அவர் கதைகள் அதற்குரிய மதிப்பைப் பெறவேயில்லை. இவர் NBTல் பணிபுரிந்திருக்காவிட்டால் சாகித்ய அகாதமி விருது கூட இவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

நடுத்தர வர்க்கத்தின் போலித்தனங்களை உரித்தெடுத்து, அவர்களின் பாசாங்குகள், வாழ்க்கையுடன் செய்யும் சமரசங்கள், தன்முனைப்புகள், பிம்பங்களின் சிதறல்கள், காதல் தோல்விகள், அறிவுஜீவிகளின் வாதங்கள், பிரதிவாதங்கள், அகமனதின் கூக்குரல்களும் சிக்கல்களும் போன்றவற்றை தன் எழுத்தில் நுணுக்கமாகக் கொண்டு வந்தவர். இவர் இறந்து முப்பத்திரண்டு வருடங்கள் ஆன பின்னும் இவரது நாற்காலி இன்னும் காலியாகவே இருக்கிறது.

சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்“-  ஆதவன்.

 

நாவல்கள்:

காகித மலர்கள்:

சுஜாதா போன்ற தேர்ந்த வாசகரால் இந்த நூல் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு மைல்கல் எனப் பாராட்டப்பட்டது. மோகமுள்ளைப் போன்றே இதுவும் முழுமையான நாவல். எழுபதுகளின் தில்லியின் நில அமைவை நுட்பமாகச் சித்தரித்த நாவல். கீழ் மற்றும் மேல் நடுத்தரவர்க்கத்தின் சமரசங்களை, போராட்டங்களை விளக்கும் நாவல். நிறையக் கதாபாத்திரங்கள் இருப்பினும் எல்லோருடைய தெளிவான சித்திரங்களையும் மனக்கண்ணில் வடிப்பது ஆதவனின் எழுத்தாற்றல். குறிப்பாகக் கணேசனும், பாக்கியமும். இருவருமே வேறுவேறு வகையில் முன்னேறத் துடிப்பவர்கள். பாக்கியம், குறைகளுள்ள, சமரசங்களுக்குத் தயாராகின்ற, குடும்பத்தில் பாசமுள்ள சராசரி பெண்மணி. பாக்கியம் என்ற கதாபாத்திரத்தின் துடிப்புகள் எத்தனையோ காலத்திற்குப் பிறகும் எனக்குத் தெளிவாகக் கேட்கிறது. ஏனோ பாக்கியம் அலங்காரத்தம்மாளைப் போலவோ அம்மணியைப் போலவோ பேசப்படவேயில்லை. அப்படியே இருந்தாலும் உன்னிடம் ஏன் என்று கணேசனிடம் கேட்கும் பாக்கியம், அழகை Exhibit செய்ய மகன் முன் உடை மாற்றும் பாக்கியம் எண்பதுகளில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத பெண்மணியாக இருந்திருக்கக்கூடும். சூழலியல், தத்துவம், அகமனதின் அலைக்கழிப்புகள், அரசியல், விடலைத்தனம், காதல் என்பது போல் எத்தனையோ முரண்கள் இருந்தாலும் நாவலின் வடிவத்தில் இருக்கும் பூரண அமைதி இப்போதும் கூட என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

என் பெயர் ராமசேஷன்:

மீண்டும் மத்தியவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் தன்னை காஸனோவாக நினைத்துக் கொள்வது. முகமூடி அணிந்த மனிதர்கள் நாவல் முழுவதும். எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பெருவாரியான நகரங்களில் பெண்கள் பேசுவதற்கே யோசனை செய்து கொண்டிருந்த வேளையில் ஆதவனின் பெண் கதாபாத்திரங்கள் ஆண்களை அல்சேஷன் நாய்க்குட்டி போல் நடத்திக் கொண்டும் வேறு ஒரு அல்சேஷனை எளிதாக மாற்றிக் கொண்டும் இருந்தார்கள். பெரியப்பா ஆதர்ச பிம்பம். அப்பாவைப்போல் முடிந்து விடக்கூடாது என்று பகீரதப் பிரயாத்தனம் செய்து அப்பாவாக முடிந்தவர்கள் எத்தனை இளைஞர்கள். காமமும் இதில் முக்கிய கதாபாத்திரம். காலத்திற்கு முன்பே முகிழ்ந்த நாவல் இது.

புழுதியில் வீணை:

.பா வின் பாதிப்பினால் எழுதிய நாடகமா இல்லை .ரா மற்றும் ராஜாஜியின் எதிர்க்கருத்துகளுக்கு விடை சொல்லும் பயணமா தெரியவில்லை. பாரதியின் ஆன்மீகம், தத்துவம், கவிதைகள், சிந்தனைகளை ஆதவன் அவருடைய பாணியில் சொல்ல முயற்சித்திருப்பார்.

ஆதவனின் சில சிறுகதைகள்:

புதுமைப்பித்தனின் துரோகம்ராம், வேணு நண்பர்கள். ராம் பணக்காரன் வேணு எழுத்தாளன். வேணு எழுத்தாளன் என்பதால் மேடையில் உட்கார்ந்து கீழே சம்மணமிட்டு ராம் கேட்கும் பிம்பம் உடைகிறது. ராம் ஹெமிங்வேயை அலசுகிறான். பெரிய எழுத்தாளரை அடிக்கடி சந்தித்திருக்கிறான். புதுமைப்பித்தனை அலசுகிறான். புதுமைப்பித்தனின் முழுமையற்ற மணவாழ்வு கதைகளில் தெரிகிறது என்கிறான். வேணு உடுத்தியிருக்கும் கடைசி வஸ்திரமும் உருவப்பட்டதாக நினைக்கிறான். நினைவில் புதுமைப்பித்தனுடனும், நேரில் மனைவியுடனும் கோபம் கொள்கிறான். இட்லியைச் சாப்பிடுவதில் அவசரம் காட்டக்கூடாது என்ற நடுத்தரவர்க்க கோதாவிலிருந்து வேணு செய்யும் எல்லா செயல்களுமே கூர்ந்து நோக்க வேண்டியவை. எழுத்தாளரின் ஒளிவட்டம் பறிபோவதைப் பார்க்கும் பரிதவிப்பு. இதில் ஆதவனின் மொழிநடை. a wish fulfillment story, then போன்ற இலக்கிய உரையாடல்கள். எண்பதுகளில் இவர் கதைகள் எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்?

கறுப்பு அம்பாஇயந்திர வாழ்க்கையின் இரும்புச் சக்கரங்களில் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்படும் ஒருவன், அவன் குழந்தையிடம் Bedtime storiesல் அவனது ஆசை நிராசைகளைக் கறுப்பு அம்பாவாக்கிச் சொல்கிறான். ஒவ்வொரு நாளும் கதையில் மாற்றம். Self Centered ஆக தான் குறித்த கழிவிரக்கங்களில் ஆழ்ந்து போகும் அவன் அறியாதது அவன் மனைவியின் மனம். ஒருவேளை கறுப்பு அம்பாவே அவள் தானோ!

தில்லி அண்ணா:

பொருளாதார ஏற்றத்தாழ்வு அண்ணன் தம்பி இருவர் குடும்பத்தின் நடுவே எவ்வளவு இடைவெளியை ஏற்படுத்துகிறதுமற்ற திறமைகள் ஏழ்மையினால் மிதிபடுகிறது, உறவுச்சிக்கல்கள் என எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.

நிழல்கள்காதலியிடம் காமத்தை எதிர்பார்க்கும் காதலனும், தவிர்க்கவுமில்லாமல் ஒப்புதலுமில்லாமல் நழுவும் காதலியும். அவர்களிடையே நடக்கும் உரையாடல்களே கதை. உணர்ச்சிகள், ஆசைகள்,பாசாங்குகள்.

வேறு சில:

மணமுடித்த இரு தம்பதிகள் பலவருடங்கள் கழித்து வெளியே செல்கிறார்கள். ஒரு தம்பதியின் கணவனும் இன்னொரு தம்பதியின் மனைவியும் கோயிலுக்குச் செல்கிறார்கள். இவர்கள் வரவில்லை என்று அங்கேயே இருந்து சிறிது நேரத்தில் இவன் அவளிடம் கேட்கிறான். என்னிடம் இல்லாதது எது அவனிடம் இருக்கிறது என்று அவனை மணந்து கொண்டாய். அவள் பதில் நீ ஒருமுறை கேட்டு பதில் எதிர்பாராமல் போய்விட்டாய். அவன் இரண்டாவது தடவையும் கேட்டான்! அதனால் தான்.

அவனுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் எதற்கு அடிக்கடி வருகிறார் என்ற சந்தேகம். தோட்டத்தில் கணவன் மனைவி இருக்கையில் வருகிறார். அவர்கள் இருவரையும் பேசச் சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று இடைவெளி வழியே அவர்களைப் பார்க்கிறான். அவர்கள் சுவாதீனமாக இருப்பதாகவும், மனைவி சிரித்துப் பேசுவதாகவும் தெரிகிறது. இவன் Flush இழுக்கும் சத்தம் கேட்டவுடன் அவர்கள் முகபாவத்தில் சிரிப்பும், நெருக்கமும் மறைகிறது.(இந்த மரம் சாட்சியாக நானும் இவர்களும்)

மாறும் உலகில் மாறும் உறவுகள் பற்றிய கதை பட்டுமாமாவும் குட்டி மாலுவும். தொட்டாற்சுருங்கி மனைவியின் உடல் குறித்த தேடுதல்கள் முடிந்து படுக்கையில் அவள் இடத்தை அடைக்கும் தொல்லையை உணரும் நூறாவது இரவு எல்லாமே  எண்பத்து ஏழுக்கு முன் எழுதப்பட்ட கதைகள்உதாரணத்திற்கு சொல்வதற்குக்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் கதைகள். நகர வாழ்வைச் சித்தரித்தார், ஆங்கிலத்தைத் தமிழ்ப்படுத்தி எழுதினார் என்பது போன்ற விமர்சனங்கள் அரைவேக்காட்டில் வந்தவை. காலத்திற்கு முன் பிறந்த கலைஞர்களில் ஆதவனும் ஒருவர். எத்தனையோ ஆயிரம் கதைகள் படித்த பின்னும் ஆதவனின் சாயலில் ஒருகதை கூட கடந்த நாற்பது வருடங்களில் படிக்கவில்லை. ஆதவனின் கதைகள் ஒருவர் வாழ்வைப் பார்க்கும் பார்வையையே மாற்ற வல்லவை. ஆதவனைப் படிக்காதவர்கள் இப்போதேனும் அவரைத் தேடிப்படியுங்கள். மகத்தான எழுத்தாளருக்கு நாம் செய்யக்கூடிய கடைசி மரியாதை அதுதான்.


உதவிய நூல்கள்:

  1. காகித மலர்கள்
  2. என் பெயர் ராமசேஷன்
  3. புழுதியில் வீணை
  4. இரவுக்கு முன் வருவது மாலை
  5. முதலில் இரவு வரும்
  6. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
  7. புதுமைப்பித்தனின் துரோகம்
  8. கனவுக் குமிழிகள்
  9. கால்வலி
  10. ஆதவன் கதைகள்தொகுப்புகிழக்குப் பதிப்பகம்.

ஆசிரியர் குறிப்பு:

ஆதவன் 1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ளநேஷனல் புக் டிரஸ்டின்தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.


-சரவணன்

3 COMMENTS

  1. சமீபத்தில் ஆதவனை வாசித்து பிரம்மித்திருந்தேன்.. ‘ஆதவனின் நாற்காலி காலியாக இருக்கிறது’ முற்றிலும் உண்மை.. வாழ்த்துகள் சிறந்த கட்டுரை

  2. ஆதவன் அவர்களின் கதைகள் குறித்த அற்புதமான பார்வையும், பகிர்வும் ! உடனே அனைத்தையும் படித்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் எழுத்து! நன்றி !

  3. In the late 80’s I adventured to Bangalore collecting his address, then I was 18 only, after a long struggle I could able to reach his house, his wife let me in, his children’s were disturbed on my entry in their simplest home, I just been there, sat in the cane sofa where Athavan used to sit, glass of water I drink, stunned after I heard that until the death of the great author even the neighbouring community didn’t know that a writer lived with them, walked with them, smiled at them who is very unique. We all miss him.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.