கி. ராஜநாராயணனின் “பிஞ்சுகள்” – பிரபியின் குரல்

பாலியத்தை எழுதுதல் என்பது ஒருவகையில் எட்டப்போன வசந்தத்தை, எண்ணங்கள் மூலம் அசைப்போட்டு, எழுத்தாளன் மீட்டெடுக்க முற்படும் முயற்சிதான். நம்முடைய சாத்திய எல்லைகளை விரித்துக்கொள்வதற்கு முந்தைய குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு என்றைக்குமே நம் மனதில் நேசமானதொரு இடமுண்டு. யாராலும் அதிகம் நிர்ப்பந்திக்கப்படாத, யாராலும் அதிகம் பொறுப்பு சுமத்தப்படாத, நம்முடைய அன்றைய காலத்திய “அவன் / அவள்” உடைய குழந்தைப் பருவத்துப் புற உலகின் சுவர் மிக மெல்லிய ஓடாலானது. அதனுள் தான் இப்பெரும் பிரபஞ்சத்தைப் பற்றிய எண்ணிலடங்காத கற்பனைக்கும், தேடலுக்குமான விதை தூவப் படுகிறது. அந்த ஓடுடைய எடுக்கும் காலம் தூவப்பட்ட விதை வேர்விட நாம் அனுமதிக்கும் காலம்.

பிறராலோ அல்லது நம்மாலோ கூட, அவ்வோடானது உடைபட்டு நாம் வேறொரு ஆளாக மாறுவோமென்றோ அந்தக் காலம் மின்னல் வேகத்தில் கடக்கக் கூடியது என்றோ நாமறியாததாலேயே நம் மனதில் அக்காலகட்டம் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.

நமது அன்றைய அவனை / அவளை நம் உதிரத்தின் வழி காண ஒரு தலைமுறை காத்திருக்கவேண்டியுள்ளது. அவர்களும் சில மாறுதலோடே நம்மை நெருங்குகிறார்கள். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் குழந்தைகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கொரு முறையும், மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். இன்றைய காலத்திய குழந்தைகளுடைய புற உலகை சூழ்ந்திருக்கும் ஓட்டிற்குள், மிகையான கனவுகள் இல்லை, வரையறையில்லாத கதைகள் இல்லை. அவர்கள் வாசல் தாண்டி உலவ வெளியில்லை. தனக்கென்று சொந்தம் கொண்டாட அவர்களுக்கு ஒரு வானமில்லை. அவர்களுடைய குழந்தைப் பருவத்தைத் தக்க வைக்க உருவாகும் ஓடோ, உருவாகும் முன்னமே உடைத்தெறியப்படுகிறது. வேறு வழியின்றி அதை முதிர்வென்று நாமும் புனுகு பூசி ஏற்றுக்கொள்கிறோம்.

முன்பு எப்போதும் இல்லாமல் சமீபமாகத்தான் “குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ அனுமதியுங்கள்” என்ற மன்றாடலை அதிகம் கேட்கிறோம். ஒப்பீட்டளவில் நமக்கு முந்திய தலைமுறைகளின் குழந்தைப் பருவத்து புற “ஓடு” கொஞ்சம் பொறுத்துத்தான் உடைபட்டிருக்கிறது எனத் தெரிகிறது.

மனச்சிதைவும், பெரும் சோகமும் இதே குழந்தைப் பருவத்தில்தான் சிலருக்கு நடந்தேறியது என்பதுளவிற்கே எதார்த்தம், பலருக்கு விசாலமான – உரமான மனநிலையையும் அந்த வயதே வழங்கியிருக்கிறது என்பதும். ஒரு படைப்பாளன் அத்தகைய கோரத்தையும் சொல்லவேண்டியவன்தான். இருப்பினும் அது அவன் சுயத் தேர்வு சார்ந்தது. வெறுமனே புறவயமான அதிர்ச்சி மதிப்பீடுகளை விதைப்பதென்பது மட்டும் படைப்பின் தர அளவுகோலாகாது.

“நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” என்று சொல்லும் கி.ரா. தன் மனிதர்களை, மண்ணை, இளமையை, குழந்தையின் மனநிலையுடன் குஷியோடு வேடிக்கைதான் பார்த்திருக்கிறார்.

தமிழில் வெறும் வட்டார இலக்கியம் என்ற வரையறைக்குள் மட்டும் கி.ரா.வின் படைப்புகளைவைத்துவிட்டு நாம் விலகிவிட முடியாது. தமிழ் இலக்கியத்தின் குல / இன வரைவியலை சொன்னது தொடங்கி, பிஞ்சுகள் நாவல் மூலம் குழந்தைகளை வைத்துக்கொண்டே நேர்த்தியான முறையில் இலக்கியத் தரத்தில் ‘முதல்‘ இயற்க்கைசார் இலக்கியம் படைத்தது வரை அவரே முன்னோடியாக இருந்திருக்கிறார்.

ஒரு வருடமாகப் பள்ளிப் படிப்பை உதறி வீட்டில் இருப்பவன் வெங்கடேசு. அவனே இந்நாவலின்பிரதானப் பாத்திரம். பெரியம்மை நோய் தாக்கி அப்போதுதான் தேறியிருக்கிறான். அவனுடைய அம்மாவிற்கும் அவனுக்கும் ஒரே போலத்தான் பெரியம்மை கண்டிருந்தது. ஆனால் நோயின் தீவிரத்தால் அவள் இறக்க நேரிடுகிறது. அன்றைய காலச் சூழலின் மருத்துவ நிலை அந்த மாதிரி..

வெங்கடேசுடைய நண்பன் செந்தில் வேல், அச்சின்ன ஊரில் உள்ள காளி கோயிலின் பூசாரி(சின்னப் பூசாரி) மற்றொரு நண்பன் “அசோக்” பாளையங்கோட்டையில் தாங்கிப் படித்துக்கொண்டிருப்பவன். அவனே வெங்கடேசுவுக்கும், செந்தில் வேலுக்கும் வெளியூர் கதை சொல்பவன். உண்மையில் மற்ற இருவரையும் விடப் பறவைகள், பூச்சிகள், வளர்ப்பு பிராணிகள் என்ற மட்டில்அதிகச் சங்கதிகள் அறிந்திருப்பவன் வெங்கடேசுதான்.
இன்று, கான்கிரிட் காடுகளுக்கிடையில் வாழும் குழந்தைகளுக்கு “Bird Watching” எனப்படும்“பறவை பார்த்தல்” என்ற செயல்பாடு அறிமுகப் படுத்தப்படுகிறது. காலையில் மாடிக்கு வந்து தாம் பார்க்கும் பறவைகளைப் பற்றிக் குறிப்பெடுப்பதை “Birds Club” மூலமாகப் பறவை ஆர்வலர்கள் ஊக்குவிக்கிறார்கள். குழந்தைகள் இயற்கையை நேசிப்பதற்கும், இயற்கையோடு தங்களை இணைத்துக் கொள்வதற்கும் அது ஓர் பாலமாக அமையும் என்பது பெரும்பாலான இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். நெல்லுச்சோற்றுக்கு ஆளாய்ப் பறந்த அன்றைய காலக்கட்டத்து கரிசல் கிராமம். தானியத்தையும், உடைமைகளையும் பாதுகாப்பதற்கு மட்டுமே என்ற ரீதியில் அலக்கலக்கான இடைவெளியில் கட்டப்பட்ட வீடுகள் உள்ள தெருக்கள். சம்சாரித்தனமும் அதைச் சார்ந்திருத்தலுமே வாழ்வுக்கான ஆதாரம் என்ற நிலை. ஒன்றுக்கோ, ரெண்டுக்கோ முடுக்கினால் ஊரடிக்கு போகவேண்டிய நடை. அத்துணை பொழுதுபோக்கும் வாசல் தாண்டி வைக்கும் முதல் அடியிலிருந்தே துடங்கும் சூழல் என்ற பின்புலத்திலிருந்து வரும் குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பு கொள்ளும் அத்துணை கதவுகளும் திறந்தே இருக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் அந்த கதவின் வழி முன்னேறுகின்றனர். செந்தில்வேலை, அசோக்கை ஒப்பிடையில் கதவு தாண்டி முழுசாக தனக்கான ஆகாயத்தை பார்த்தவன் வெங்கடேசுதான்.

இந்நாவலில் கதை என்றோ, சிடுக்குகளான அடுக்குகள் என்றோ பெரிதாக ஒன்றும் கிடையாது. பறவைகளுடனும், இயற்கையுடனும் வெங்கடேசு கொள்ளும் தொடர்பே இக்குறுநாவல்.

நாமும் நம்முடைய சாளரத்தைத் திறந்து வரையறை செய்யப்பட அளவு இடைவெளியின் வழியே இயற்கையை அறிந்து கொள்ள நம் குழந்தைகளை அனுமதிக்கிறோம். அவர்களும் தெரிந்துகொள்கிறார்கள். எதை? தகவல்களை. களிறு, வேழம், மாதங்கம், வல்விலங்கு, வாரணம் என நம் மரபார்ந்த சமூகம், பல பெயர் கொண்டு அழைத்த பெரும் விலங்கை “ELEPHANT” என்று ஒற்றை சொல் மூலம் குறிக்கும் தகவலைத் தெரிந்து கொள்கிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தமிழக வேட்டை நாயினமான “கன்னி” இன நாய் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு என்னை அழைத்துப் பாராட்டிய சூழியலாளர் தியோடர் பாஸ்கரன் அவர்கள் இவ்வாறு சொன்னார்.

“மேம்போக்கான சொற்கள் அல்ல நீங்கள் இக்கட்டுரையில் பயன்படுத்தியது. அத்துனையும் மண்ணோடு இணைந்த மனிதர்கள் மூலம் நாய்களுக்கு வழங்கப்பட்ட கலைச் சொற்கள். நமது நாயினத்தை மதிப்பிடும் அன்னியன் “The Breed is kanni, it comes under a hound Category” என்ற ஒற்றை வரியில் முடித்து விடுவான். உங்களால் அந்த குறிப்பிட்ட வகையினுள் 50 மாறுபாடுகளைக்கிராமிய கலைச் சொல்லோடு சொல்ல முடிகிறது. உண்மையில் ஆவணப் படுத்தப் பட வேண்டியது இந்த கிராமிய அறிவுதான்.”

ஒரு உயிரினத்தை குறிக்கப் பயன்படுத்தப்படும் பிரத்தியேகமான சொல் அழியும் போது, அதன் பொருள் மறைந்து அதன் பயன்பாடு குறுகுகிறது. பின் அதுவே அந்த உயிரினம் அழிவதற்கு காரணமாகிறது என்பதே சூழியலாளர்களின் கருத்தாக இருக்கிறது, இவ்வாறாயின் அத்தகைய பிராந்திய கலைச்சொற்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்! கி.ரா. “பிஞ்சுகள்” குறுநாவலில் அதைத்தான் பதிவு செய்கிறார்.

“வல்லயத்தான், தேன்கொத்தி, தேன்சிட்டு, தட்டைசிட்டு, செஞ்சிட்டு, பூஞ்சிட்டு, பட்டுச்சிட்டு, வேலிச்சிட்டு, முல்சிட்டு, மஞ்சள் சிட்டு, கருஞ்சிட்டு, தன்னிக்கோழி தாரக்கோழி, குங்குமத்தட்டான், இந்திரகோபம், குழிநரி” என்ற எத்தனையையோ… துளி கூட கட்டுரை நெடியில்லாமல் நாவல் வழியே சொல்லிச் செல்கிறார். பறவை முட்டைகளைச் சேகரிக்கும் வெங்கடேசுக்கு பறவைகளைப்பற்றிய அறிமுகத்தை வழங்குபவர், எந்த நேரமும் வில்லோடு திரியும் திரிவேதி நாயக்கர். அவர் ஒருவேட்டையாடி. இப்படியான சின்ன சின்ன முரண்களை உள்ளடக்கியதுதானே நம்முடைய எளிய வாழ்க்கை. காடு சார் அறிவு கொண்ட பழங்குடிகளும் வேட்டையாடிகளே! மேலும் இது பகட்டுக்கோ, காசுக்கோ நிகழ்த்தப் படுவதல்ல, திரிவேதி நாயக்கரின் வெஞ்சனப் பாட்டுக்காக ஒண்டுவில்கொண்டு நிகழ்த்தப்படும் பறவை வேட்டை.

வெங்கடேசுவுக்கும் அன்றைய கால குழந்தைகள் போல இந்த வேட்டை பிடிக்கும் தான். அதே நேரம் அந்த இடத்திலிருந்துதான் வெங்கடேசு பறவைகளை உள்ளன்போடு நேசிக்கவும் துவங்குகிறான்.

தன் உலகம் இது என்று திரிந்த கிராமத்தைச் சுற்றிக் கொண்டே இருப்பது சரியா? என்ற எண்ணம் வெங்கடேசுக்கு வர அவனுக்குப் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கோடை விடுமுறையில் அசோக் வந்து சேர்கிறான். எப்போதும் நடந்து போய் வந்து வேடிக்கை மட்டுமே பார்த்துத் திரும்பிய இரயிலில், அசோக்குடன் இம்முறை வெங்கடேசும் ஏறுகிறான்.

அவனை வழியனுப்பும் பொருட்டு கூடவே ஆதரவாக அந்த ஊரின் காளி கோயில் சின்னப் பூசாரியும், வெங்கடேசுவின் நண்பனுமான செந்தில்வேல் ரயில்நிலையம் வரை வருகிறான். வண்டி கிளம்பிய மறுநொடி இருவருக்கும் இனி இரு உலகம்.

இரயிலினுள் நிறைய முகங்கள் வெங்கடேசுவை சிரிப்போடு எதிர்கொள்கிறது. அத்துணை முகங்களும் அவனைப் போலவே படிக்க வண்டியேறிய முகங்கள். தனதுலகைவிட்டு அவனை தள்ளிக்கொண்டு போகும் “ரயில் ஜிகு ஜிகு ஜிகு ஜிகுவென்று போய்க் கொண்டிருந்தது” எனக் கி.ரா. முடிக்கும்போது ஒரு மொட்டு அவிழ்வது போல வெங்கடேசுவின் குழந்தை உலகைக் காத்து நின்ற புற ஓடு தன்னியல்பாக உடைபட்டுக் கொள்கிறது.

இக்குறுநாவலை கி.ரா. இப்படித்தான் சமர்ப்பணம் செய்கிறார். “எனது குழந்தைப் பிராயத்தில் என்னில் வாழ்ந்த பிரபிக்கு”. நீங்களும் கூட நெடு நாளைக்கு முன் உங்களுள் வாழ்ந்த பிரபிக்கு இதை கையளியுங்கள்.


அரக்கு வண்ணத்தாள் அட்டையில் ஓவியர் ஆதிமூலத்தின் “நடைவண்டி” ஓவியத்துடன் “பிஞ்சுகள்” என்ற பெயரும், “கி.ராஜநாராயணன்” என்ற பெயரும் குழந்தை மொழியில் அச்சிடப்பட்டு, நேர்த்தியான வடிவமைப்புடன் “அன்னம்” பதிப்பகம் இக்குறுநாவலை 2017 ஆம் ஆண்டு செம்பதிப்பாகக் கொண்டு வந்துள்ளது.


-இரா.சிவசித்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.