(புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தில், ஒரு கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக் கொண்டிருக்கிறார்)
ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-
‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில், அனலில் திசைகளில் இயல்பு பிறழ்வதை உணர்கிறேன், இது பருவங்களிலும் பிறழ்வை முன்னறிவிப்பதாகும்.
ஆகவே இப்போதே மூலிகைகளை சேகரியுங்கள். இல்லையேல் அதன் இயல்புகள் பிறழ்ந்து விடும். ‘மூலிகைகளை சரியாக சேகரித்து, சரியாக பாதுகாத்து சரியாக வழங்க முடியும் என்றால் ஜனபதோதுவம்சத்தை கட்டுப்படுத்துவது ஒன்றும் அத்தனை கடினமல்ல.
அக்னிவேஷர்- பகவான், ஒவ்வொரு மனிதரின் முக்குற்ற நிலை, பிறப்பியல்பு, உணவு பழக்கம், போன்றவை தனித்துவமானவை, அப்படியிருக்க எப்படி எல்லோருக்கும் ஒரே மாதிரி நோய் ஒரே காலகட்டத்தில் நேர்கிறது?
ஆத்ரேயர்- இவையாவும் தனித்துவமானவை தான் ஆனால் அனைவருக்கும் பொதுவானவை என சில உண்டு. காற்று, நீர், தேசம் மற்றும் காலம் இவற்றில் மாறுப[டுகள் நேரும்போது தனித்துவங்களுக்கு அப்பால் அனைவரையும் அது பாதிக்கிறது.
- சரக சம்ஹிதை விமான ஸ்தானம் மூன்றாம் அத்தியாயம்- ஜனப்தோ துவம்சம்
இந்தக் கட்டுரையையும் காந்தியிடமிருந்தே தொடங்கலாம். பீகார் நிலநடுக்கம் நிகழ்ந்து அதற்காக நிதி திரட்டியபோது, காந்தி ஹரிஜன்களை நாம் நடத்திய விதத்திற்கு தண்டனையகாத்தான் கடவுள் நிலநடுக்கத்தை அனுப்பினார் என கூறியதற்கு தாகூர் ‘இந்த கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது’ என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த காந்தி, இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல, உள்ளுணர்வால் உணர்ந்ததையே சொல்கிறேன் என்றதுடன் அந்த விவாதம் முடிவுக்கு வந்தது. காந்தியின் கருத்து பாமரத்தனமானது என இன்றளவும் கூட இந்த நிகழ்வை மேற்கோள் காட்டி சொல்லப்படுவதுண்டு. அறிவியல் நிரூபணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் கூறியது போல இது காந்தியின் சிந்தனை அல்ல, ஒருவகையில் இந்திய அல்லது கிழக்கத்திய சிந்தனை முறை என சொல்லலாம்.
கிழக்கத்திய சிந்தனை முறையில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமையை காண முடியாது. இயற்கையின் ஒரு பகுதியாக, அதனுடனான பிணைப்பும், தொடர்பும் கொண்ட உறுப்பு மட்டுமே மனிதன். இந்திய மருத்துவ முறைகளில், ரசவாதத்தில், தாந்த்ரீகத்தில் என இவை அனைத்திலும் அண்டத்தில் உள்ளது பிண்டம்- பிண்டத்தில் உள்ளது அண்டம் எனும் கோட்பாடு கையாளப்படுகிறது. மேற்கிலும் கூட மறை ஞான மரபுகளில், ரசவாதிகளிடம், முந்தைய அணிமிஸ்ட்கள் பாகங்களிடம் இந்த நம்பிக்கை உண்டு. சங்க இலக்கியம் அகத்திணை புறத்திணை பற்றி பேசுகிறது. மனித உடல் நெகிழ்ச்சியற்ற இறுகிய எல்லை உடையது அல்ல. மானுடவியல் ஆய்வாளர் ழான் லாங்க்போர்ட் இந்திய மருத்துவர்கள் உடலை காணும் விதத்தைப்பற்றி எழுதிய நூலுக்கு ‘Fluent bodies’ என தலைப்பிட்டிருந்தது மிகப் பொருத்தம். ரே பிராட்பரியின் ‘இடிமுழக்கம்’ ஒரு சுவாரசியமான அறிவியல் புனைவு. கால இயந்திரத்தில் பயணித்து டைனோசரை வேட்டையாடச் செல்லும் கதைநாயகன் தவறுதலாக ஒரு பட்டாம்பூச்சியை மிதித்து கொன்றுவிட்டு திரும்பும்போது அவர்களுடைய மொழியும் வரலாறும் மாறியிருப்பதை கவனிப்பான். நவீன காலகட்டங்களில் விவாதிக்கப்படும் கேயாஸ் தியரி, பட்டாம்பூச்சி விளைவு போன்றவை புறத்திற்கும் அகத்திற்குமான உறவை சுட்டிக்காட்டுபவை. ஆயுர்வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றால் சரகர் ‘வாதகலாகலீயம்’ என்றொரு அத்தியாயத்தை இயற்றியுள்ளார். (ஸுத்ர ஸ்தானம் பன்னிரெண்டாம் அத்தியாயம்). முக்குற்றங்களில் ஒன்றான வாதம் உடலில் என்னவெல்லாம் நிகழ்த்தும் என சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் உலகை தாங்குகிறது, மேகங்களை அசைக்கிறது என எழுதுகிறார்.
ஆயுர்வேதம் பொதுவாக கொள்ளை நோய்களை எப்படி பார்க்கிறது என்பதை இந்த பின்புலத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியும். தக்கன் அவமதித்ததில் வெகுண்டெழுந்த ஈசனின் வெஞ்சினமே நோய்களில் முதலாவதாக தோன்றிய ஜுரத்திற்கு காரணம் என ஆயுர்வேதம் சொல்கிறது. நோய் என்பது மனிதனை காட்டும் பெரும் ஆற்றலின் கோபம் எனும் நம்பிக்கை இன்றுவரை நீடிப்பதை காண முடிகிறது. சர்கரின் ஜனபதோ துவம்சம் அத்தியாயத்தில் கொள்ளை நோய் ஏன் உருவாகிறது என விவாதிக்கிறார். அற பிறழ்வே கொள்ளை நோய்களுக்கு காரணம், அற பிறழ்வுக்கு காரணம் தீய முன்வினைகள், தீய முன்வினைகளுக்கு காரணம் விளைவுகளை அறிந்தும் பிரக்ஞை பூர்வமாக அதை மீறுதல் என ஒரு சங்கிலித்தொடரை அடையாளப்படுத்துகிறார். அறம் என்பது இங்கு பவுத்தம் முன்வைக்கும் பிரபஞ்சமளாவிய பேரொழுங்கு. இந்த பேரோழுங்கில் ஏற்படும் பிறழ்வுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். அறப் பிறழ்வினால் ஏற்படுவதாக சொல்லப்பட்ட பின் அதற்கு தீர்வென சரகர் அறம் பேணுதலை முன்வைக்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் முறைகள் என ஜெபித்தல், தவம், நோன்பு போன்றவற்றை குறிப்பிடலாம்.
பருவநிலை மாற்றத்தை ஒரு நோய்க்காரணியாக ஆயுர்வேதம் அங்கீகரித்திருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் காண முடிகிறது.. காற்று, நீர், நிலம் மாசுபடுவதன் அறிகுறிகளை சொல்கிறது. நீர் மாசின் அடையாளங்களை சொல்லும்போது, நீர் பறவைகளின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து போவதை சொல்கிறார். இன்றளவும் இதன் பொருத்தப்பாட்டை காண முடிகிறது. நிலம் மாசுபட்டதற்குரிய சில அடையாளங்களை குறிப்பிடுகிறார். உயிரினங்களின் பதபதைப்பு, அச்சம், விதைக்கப்பட்ட தானியங்களின் அழிவு, அடிக்கடி தோன்றும் விண்கற்கள், இடி மற்றும் நிலநடுக்கம், சூரியனும் சந்திரனும் மேகங்களால் சிறைபிடிக்கப்பட்டது போல் காட்சியளிப்பது என அந்த பட்டியல் நீள்கிறது. காற்று, நீர், பருவத்தை விட நிலத்தில் ஏற்படும் மாசுபாடுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்கிறார். ஜனப்தத்தில் வாழும் மக்கள் தங்கள் அறத்தை, சத்தியத்தை, மானத்தை ஒழுக்கத்தை, நன்னடத்தையை இழந்துவிடுவார்கள் என மனிதர்கள் மீது நிகழும் மாற்றங்களை குறிப்பிடுகிறார். . சரகர் ஒரு விஷ சுழலை நுணுக்கமாக படம் பிடித்து காட்டுகிறார். அற பிறழ்ச்சி கொள்ளை நோயை உண்டாக்கும், கொள்ளை நோய் அதன் பங்கிற்கு அற பிறழ்வை மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கொள்ளை நோய்கள் சமூக கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை பெரிதாக்கும் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். எவருடைய அற பிறழ்வு அழிவை உண்டாக்கும்? சரகர் இன்னும் துல்லியமாக, ஆள்பவரின் அற பிறழ்வு பெரும் நாசத்தை விளைவிக்கும் என சொல்கிறார்.
ஜனபதோ துவம்சத்தை பொதுவாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் epidemic எனும் சொல்லோடு இணை வைப்பார்கள். epidemic ஒரு கிரேக்க சொல், ஹோமர் பயன்படுத்தியது, பின்னர் ஹிப்போக்ரேடஸ் பயன்படுத்தியுள்ளார். ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமையானது. இதன் பொருள் ‘மக்களின் மேலே’ என்பதாகும். (epi- 0n, demos- people). பருவகால மாற்றங்களில் ஏற்படும் உடல் தொந்தரவுகளை குறிக்க ஹிப்போக்ரேடஸ் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார். காலப்போக்கில் இந்த சொல் பரிணாமம் அடைந்து கொள்ளை நோயை குறிப்பதாக ஆகிறது. ஜனபதோ துவம்சம் என்றால் ஜனபதங்களின் அதாவது தேசங்களின் அழிவு. சரகர் இந்த அத்தியாயத்தில் அரசரின் நெறி பிறழ்ந்த போர் தேசத்தையே அழிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். சூழல் சீர்கேட்டினால் விளையும் இயற்கை பேரிடர்கள், போர்கள், கொள்ளை நோய்கள் என மூன்றையும் உள்ளடக்கிய ஒன்றாகவே ஜனபதோ துவம்சத்தை வரையறை செய்ய முடியும்.
முப்பெரும் நூல்களின் ஆசிரியர்களில் எனக்கு எப்போதும் இணக்கமானவர் சரகர். காலத்தால் முந்தையவர், அதைவிட அவர் மெய்யியலாளர், கவி. சரகர் தேசங்களின் அழிவை பற்றிய அத்தியாயத்தில் தீர்வாக, சிகிச்சையாக ஒரு மருந்தை கூட சொல்லவில்லை. மாறாக அங்கிருந்து வாழ்வின் சில அடிப்படை கேள்விகளை நோக்கி பயணிக்கிறார். மக்கள் ஏன் இப்படி கூட்டம் கூட்டமாக மரிக்கிறார்கள்? நான்கு யுகங்களின் இயல்பு, அவற்றின் அற வீழ்ச்சி என்றொரு சமாதானத்தை நோக்கி முதலில் செல்கிறார். கண் முன் மரணங்களை காண்பவரின் திகைப்புதான் ஒரு மனிதரின் ஆயுள் எப்படி தீர்மானிக்கப்படுகிறது எனும் கேள்வியை இந்த அத்தியாயத்தில் எழுப்ப வைக்கிறது. சிகிச்சை சிலருக்கு பலனளிப்பதும் சிலருக்கு பலனளிக்காமல் போவதையும் கண்ட மனம் சென்றடையும் விடை என்பது மனித ஆயுள் முன் தீர்மானிக்கப்பட்டது என்பதே. பிழைக்க வேண்டும் எனும் ஊழ் இருந்தால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கும் என சொல்கிறார். மனிதரின் ஆயுட்காலம் முன்வினை பலன் (தைவம்) மற்றும் இப்பிறவி வினை (புருஷகாரம்) ஆகியவற்றின் வலுவால் முடிவாகிறது என சொல்லியபின் ஆயுள் முன் தீர்மானிக்கப்பட்டது என்றால் எதற்கும் யாரும் அஞ்ச வேண்டியதில்லை நன்மை தீமைக்கு பொருளில்லை இன்னும் சொல்வதானால் மருத்துவத்திற்கே எந்த பயனும் இல்லை என்றாகிவிடுமே என விவாதித்து, தற்கால செயல்வழியாக முன்வினையின் பலனை மட்டுபடுத்த முடியும் என்பதால் மருத்துவம் முக்கியம் எனும் இடத்தை வந்தடைகிறார். தைவம் எனும் சொல் நாம் தமிழில் கடவுள் எனும் சொல்லுக்கு நிகராக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக தெய்வம் நின்று கொல்லும் எனும் சொல்வழக்கை அவதானிக்கும்போது கடவுள் என்பதை விட அவ்விடத்தில் முன்வினை பயன் பொருந்தி வருவதாக தோன்றியது ஆயுர்வேதத்தில் சிகிச்சையை மூன்றாக வகுக்கிறார்கள். தைவ வியாபஸ்ரயம் (முன்வினை சமனாக்குதல்) யுக்தி வியாபஸ்ரயம் (உத்தியால் சமனாக்குதல்- உணவு, மருந்து இன்னபிற) மற்றும் சத்வாவாஜயம் (மனதை கட்டுப்படுத்துதல்). இதில் முன்வினை சமன்படுத்துதல் சிகிச்சை முழுக்க முழுக்க மந்திரங்கள், வேள்விகள், தவம், உண்ணா நோன்பு போன்ற வழி முறைகளால் ஆனது. ஆயுர்வேதத்தில் நோய்களை இரண்டாக பிரிக்கலாம். உள்ளிருந்து ஏற்படும் நோய், வெளியிலிருந்து ஏற்படும் நோய். உள்ளிருந்து ஏற்படும் நோய் முக்குற்றங்களின் சமநிலை குலைவு ஏற்படுவதன் விளைவு. உணவு, நடத்தை வழியாக ஏற்படும் சிக்கல். வெளியிலிருந்து தோன்றும் நோய்கள் உருக்கொள்ளும் போதே நோயாக வந்துவிடும், உதாரணமாக கீழே விழுந்து எலும்பு முறிதல் – இதிலும் முக்குற்றங்கள் சமநிலை குலையும் ஆனால் நோயின் காரணியாக அல்ல நோயின் விளைவாக. ஜனபதோ துவம்சம் வெளியிலிருந்து வரும் நோய். ஆகவே காரணிகளை தவிர்ப்பதே முதன்மை சிகிச்சைமுறையாக இருக்க முடியும். .
இந்த அத்தியாயத்தில் சரகர் மருந்துகளை குறிப்பிடவில்லையே தவிர சில சிகிச்சை அடிப்படைகளை பகிர்கிறார். காய்ச்சலுக்கு ஏன் வெந்நீர் பரிந்துரைக்கப்படுகிறது என கொள்ளை நோய் பற்றிய அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகிறது. பிறகு நோயின் தீவிரம் பொருத்து குறைந்த தீவிரம் உள்ள நிலையில் உடலை இலகுவாக்கும் (லங்கணம்) சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது இலகுவாக்குதலுக்கு உண்ணா நோன்பு, சூரிய ஒளி, மற்றும் காற்றில் வெளிக்காட்டுதல் ஆகியவை எளிய வழிமுறைகள் என சொல்லலாம். மத்திம நிலையில் இருக்கும்போது மேற்சொன்ன வழிமுறையுடன் சேர்ந்து மருந்து வழி வயிற்று அனலை ஓம்பச் சொல்கிறது. மிகத்தீவிர நிலையில் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான நியாயத்தை ஏரியின் கரை உடைக்கப்படாமல் நீரை வற்றவைக்க முடியாது என்றொரு உவமையின் வழி விளக்குகிறார்.
பிறகு கொள்ளை நோய் காலகட்டத்தில் எவருக்கெல்லாம் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சைகளை அளிக்க கூடாது என ஒரு பட்டியல் இடுகிறார். ஆற்றல் குறைந்தவர்கள், குருதி குறைந்தவர்கள், தீர்க்க முடியாத நோயுடையவர்கள், உடனடியாக மரணிப்பதற்குரிய அறிகுறிகளை கொண்டவர்கள் ஆகியவை அவருடைய பட்டியலில் குறிப்பிடத்தக்கவை. இத்தாலியிலும் அமெரிக்காவிலும் சிகிச்சைக்குரியவர்களை தேர்வு செய்யும் அளவுகோள்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவும் அவற்றுடன் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. சிகிச்சையின் கடுமை நோயின் கடுமையை விட அதிகமாகிவிட கூடாது. முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சையை தாங்குவதற்கு உடலில் ஆற்றல் வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் முன்னரே சொல்லப்பட்டுவிட்டது என்பதை வலியுறுத்துவதற்கு அல்ல, மாறாக மனிதகுலம் சுய பாதுகாப்பு என வரும்போது காலம் காலமாக ஒரே திசை நோக்கி செல்வதை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு என சொல்லலாம்.
பொதுவாக நோய் எந்த நிலத்தில் அதிகம் வரும்? எந்த பருவத்தில் அதிகம் வரும் போன்ற கேள்விகளை சரகர் எதிர்கொள்கிறார். கதிர் ஒளியும் காற்றும் தாராளமாக புழங்கும் வறண்ட பாலை நிலத்தில் நோய்கள் குறைவாகவும் நீர்நிறைந்த காற்றும் கதிர் ஒளியும் குறைவாக கிடைக்கும் மரங்கள் சூழ்ந்த இடங்களில் நோய் அதிகமாக இருக்கும் என்றும் சொல்கிறார். மற்றொரு அத்தியாயத்தில் விடம் நீரிலிருந்து எழுந்ததால் மழை காலத்தில் அதன் வீரியம் அதிகரிக்கும் என்றும் அதற்கு பின்பான இலையுதிர் காலத்தில் அதன் வீரியம் மட்டுப்படும் என்றும் கூறுகிறார்.
சுசுருதர் நடைமுறைவாதி. தத்துவ கேள்விகளுக்கு எல்லாம் அவரிடம் நேரமில்லை. அறுவை சிகிச்சை நிபுணருக்கு துல்லியம் தான் மிக முக்கியமான தகுதி. சரகரை போல் ஜனபதோ துவம்சம் குறித்து தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஸுத்ர ஸ்தானத்தில் பருவகால நடத்தை விதிகளை பற்றிய ஆறாம் அத்தியாயத்தில் ஒரு சிறிய பகுதியில் ஜனபதோதுவம்சம் குறித்து சொல்லிச் செல்கிறார். ஆனால் அவருடைய அவதானிப்பு இன்றைய காலத்தில் அச்சுறுத்தும் அளவிற்கு மிகத் துல்லியம்.
‘சில நேரங்களில், பருவங்கள் இயல்பாக இருந்தாலும் கூட, சாபத்தினாலோ, ராக்ஷஸ்களின் கோபத்தினாலோ, அற பிறழ்வின் காரணமாகவோ ஜனப்தம் அழியும். காற்றில் மலரின் சுவாசம் சுமந்து செல்லப்படுவது போல் காற்று சுமந்து செல்லும் விடம் மனிதர்களை பீடிக்கிறது. அப்படி பீடிக்கப்படும் தேசத்தில் முக்குற்ற அமைப்பு, பிறப்பியல்பு போன்றவை பொருட்டல்ல. இருமல், இளைப்பு, வாந்தி, மூக்கில் சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தி வதைக்கும். இதற்கு கோள்களும் நட்சத்திரங்களும் காரணமாக இருக்கலாம் அல்லது இல்லம், பெண்டிர், படுக்கை, இருக்கை, வாகனம், மணிகள், ரத்தினங்கள் மற்றும் இன்னபிற பீடிக்கப்பட்ட பொருட்கள் வழியாகவும் நோயுறலாம். .
விளக்கவுரையில்- மூக்கு துளை வழியாக செல்லும் காற்று இருமல், இளைப்பு, சளி, வாசனை அறியும் திறன் இழப்பு தலை சுற்றல், தலைவலி ஆகியவற்றை உருவாக்குகின்றன. தோலின் வழியாக நோய் பரவும் போது அம்மை போன்ற காய்ச்சல் நோய்கள் வருகின்றன என டல்ஹனர் குறிப்பிடுகிறார். .
இதற்கு தீர்வு என்ன? சுசுருதர் கூறும் முதல் தீர்வு – ஸ்தான பரித்தியாகம், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு அகல்வது. இதைத்தவிர பிற தீர்வுகள் யாவும் சரகர் முன்வினை பலனை சமனாக்க கூறிய மறைஞான சடங்குகள் மற்றும் வழிமுறைகள் தான்.
உண்மையில் சுசுருதரின் அவதானிப்பு இன்றைய சூழலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. விடமாகிப்போன நீரில் மனிதர்களோ குதிரைகளோ குளித்தால் அவர்களுக்கு வாந்தி, காய்ச்சல், மயக்கம், எரிச்சல் மற்றும் வீக்கம் வரும் என சொல்கிறார். மசூரிகா- அம்மை, விசூசிகா- காலரா போன்ற ஒரு நோய் ஆகிய கொள்ளை நோய்களை பற்றிய பதிவு ஆயுர்வேத நூல்களில் உள்ளன. கென்னத் ஜிஸ்க் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு காய்ச்சல் வகை நோயை மலேரியாவுடன் ஒப்பிட்டு, உலக அளவில் மலேரியா குறித்த முதல் பதிவாக இருக்கும் என சொல்கிறார். ஆயுர்வேதத்தில் கிருமி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நோய்க்கு காரணமாக சொல்லப்பட்டும் உள்ளது. ஆனால் ஆயுர்வேதத்தின் கிருமி கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் அல்ல. அதனுடைய விவரனைகள் புழுக்களை ஒத்திருக்கின்றன..நுண் கிருமிகளை பூதங்கள், ராட்சசர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இடமுண்டு. கொள்ளை நோய் குறித்த புரிதல் செவ்வியல் நூல்களை விட நாட்டு மருத்துவத்திலும் மக்களின் பழக்க வழக்கங்களிலும் அதிகமாக இருப்பதை காண முடியும். சின்னம்மை பற்றிய கடவுள்கள். கதைகள், சடங்குகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தனிமைப்படுத்துதல், தூய்மை பேணுதல் போன்றவை ஆன்மீக சடங்குகளாக பரிணாமம் அடைந்தன.
இத்தனையும் சொன்னாலும், கொள்ளை நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் நவீன மருத்துவம் ஆயுர்வேதத்தை விட பன்மடங்கு செயல்திறன் வாய்ந்ததே. அதையே நம் காலனிய வரலாறு சுட்டிக்காட்டுகிறது. கொள்ளை நோயை எதிர்கொண்டு வெற்றிகண்ட விதத்தில் தான் நவீன மருத்துவம் இந்தியாவில் வலுவாக காலூன்றியது, உடலின் மீதான அதிகாரத்தை நவீன மருத்துவம் முழுவதுமாக கைகொண்டது என்பது முற்றிலும் உண்மை. காலனிய காலத்தில் ஆயுர்வேதம் ஏன் கொள்ளை நோய்களை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை என்பது மற்றொரு விவாதம். ஆய்விற்கு உரியதும் கூட. இன்றைய சூழலில் நவீன அறிவியலின், நவீன மருத்துவத்தின் கொடையை அனுபவித்தபடி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயற்கைக்கு திரும்புங்கள் மருத்துவத்தை நம்பாதீர்கள் என பிரசாரம் செய்வது அறியாமையினால் அல்லது அரசியல் உள்நோக்கத்தினால் மட்டுமே. இந்தியாவில் இன்றைய நிலையில் நவீன மருத்துவமே மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பு. அதன் அத்தனை சிக்கலுடனும் வெகு மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உதவுவது. இயற்கைக்கு திரும்புதலோ அல்லது ஆன்மீக/நம்பிக்கை சார்ந்த குணப்படுத்தும் முறைகளோ தனிப்பட்ட தேர்வுகளாக மட்டுமே இருக்க முடியும். சிக்கலான சமூக அமைப்பில் ஹீலர் பாஸ்கர்களுக்கும் தனிகாச்சலங்களுக்கும் எல்லா காலங்களிலும் ஒரு இடமிருக்கும். ஆனால் ஒருபோதும் மைய மருத்துவமுறையாக ஆக முடியாது. ஒரு வழிமுறையை எத்தனைமுறை பின்பற்றினாலும் ஒரே விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அறிவியலின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியாக அணுகும் மருத்துவ வழிமுறைகளுக்கு இது பொருந்தாது. .
2
ஆயுர்வேத மூல நூல்களில் கூறப்பட்டுள்ள நோய்களின் எண்ணிக்கை குறைவே. .நவீன மருத்துவமும் அறிவியலும், காலமும் பரிணாமம் கொள்ள கொள்ள கணக்கற்ற நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டு உள்ளன. ஆயுர்வேத நூல்களிலேயே கூட சரகரின் நோய் எண்ணிக்கையை விட சுசுருதரின் எண்ணிக்கை அதிகம், அவரை விட பதிமூன்றாம் நூற்றாண்டு நூலான மாதவ நிதானத்தில் எண்ணிக்கை அதிகம். ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலைகொண்ட ஒரு நூற்றாண்டிலேயே சிபிலிஸ் நோய் ஃபிரங்கம் என்ற பெயரில் (பறங்கியர் எனும் சொல்லுடன் தொடர்புடையது) ஆயுர்வேத நூல்களில் விவாதிக்கப்படுகிறது. புதிய நோய்களையும் புதிய மருந்துகளையும் உள்வாங்கி கொள்வது ஆயுர்வேதத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்று. அதற்கு அவற்றை ஆயுர்வேத சட்டகத்தில் வைத்து புரிந்து கொள்ள முடிந்தால் போதும். நோயின் பெயர் எதுவாகினும் அதன் இயல்புகளை கொண்டு முக்குற்றங்களின் நிலையை அறிந்து கொள்வதே சிகிச்சைக்கு முக்கியம் என்கிறார் சரகர். நோயின் இயல்பு என்ன? நோய் வெளிப்பட காரணங்கள் எவை? நோய் எந்த பகுதியை/பகுதிகளை பாதிக்கிறது? அதன் அறிகுறிகள் எவை? பின்விளைவுகள் எவை? நோய் அறிகுறிகளை தீவிரப்படுத்தும் காரணிகள் எவை?அதை சமன்படுத்தும் காரணிகள் எவை? இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தால் எந்த ஒரு நோயையும் ஆயுர்வேத சட்டகத்தில் கொணர்ந்து வந்து புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் புற்றுநோய் தொடங்கி மோட்டார் நியூரான் நோய் வரை எல்லாவற்றையும் நவீன மருத்துவ அறிதலின் துணையுடன் வகுத்துக்கொண்டு தற்காலத்தில் முன்னகர்கிறது. இப்படி ஆயுர்வேத சட்டகத்தில் புரிந்துகொல்வதாலேயே அந்நோயை குணப்படுத்திவிட முடியும் என்பது கிடையாது. ஆயுர்வேதம் இன்றைய போலி மருத்துவர்கள் அறைகூவுவது போல் எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என சொல்லவில்லை. சாதாரண நோய்களே கூட குணப்படுத்த முடியாத படிநிலைக்கு சென்றுவிடும் என கணிசமான தருணங்களில் சொல்கிறது.
கொவிட் சார்ந்து பல்வேறு ஆயுர்வேத நிபுணர்கள் ஆயுர்வேத சட்டகத்தில் வரையறை செய்ய முயன்றுள்ளார்கள். அதில் நான் ஆசிரியராக கருதும் தெரிசனம்கோப்பு டாக்டர். இல. மகாதேவன் மற்றும் மேலும் இரு மருத்துவர்கள் உருவாக்கியிருக்கும் வரையறை எனக்கு ஏற்புடையதாகவும் நெருக்கமாகவும் உள்ளது. கொரோனாவின் அறிகுறிகள் கப- வாத கூட்டில் வரும் காய்ச்சல் என கருதலாம் என்கிறார்கள். சில நோயாளிகளுக்கு முக்குற்ற இணைவு காய்ச்சலாக பரிணாமம் அடைகிறது. அவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அஷ்டாங்க ஹ்ருதயத்தில் கப வாத காய்ச்சலின் அறிகுறிகள் என உடல் வெப்பம் குறைதல், ருசியின்மை, மூட்டு வலி, தலை வலி, மூக்கடைப்பு, இளைப்பு, இருமல், மலச்சிக்கல், குளிர், அசதி, கண் இருட்டிக்கொண்டு வருதல், தலை சுற்றல், சோர்வு ஆகியவை கூறப்பட்டுள்ளன. இதில் சில அறிகுறிகள் கொவிட்டுக்கு பொருந்தி வருவதை கவனிக்க முடியும். லேசான நோய் தொற்று நிலை, நிமோனியா- தீவிர நிமோனியா- கடும் மூச்சிளைப்பு- செப்சிஸ்- செப்டிக் ஷாக்- மரணம். இதைத்தான் படிநிலையாக வகுத்துள்ளனர். 85 சதவிகிதத்தினர் லேசான நிலையிலேயே மீண்டு விடுகின்றனர். இந்த பதினைந்து சதவிகிதத்தினரில் பெரும்பாலும் முதியவர்கள், குறிப்பாக வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களாக இருப்பதால் பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்கிறது. முக்குற்றகூட்டு காய்ச்சலில் வரும் தாது பாகம் எனும் நிலையை ஒத்திருக்கிறது. பித்தம் அதன் சூட்டின் காரணமாக வறண்டு போக செய்கிறது. இளைப்பு அதிகரிக்கிறது, ஒஜசை அழிக்கிறது. ஒவ்வொரு படிநிலைக்கும் உகந்தது போல மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். மருத்துவமனையில் பின்பற்றத்தக்க வழிமுறை என துணிந்து சொல்லலாம். இது பலனளிக்கவும் கூடும். கொவிட்டை அணுகுவதற்கு செவ்வியல் நூல்களில் காய்ச்சல், காசம் (இருமல்), சுவாசம் (இளைப்பு), ராஜ யக்ஷ்மம் (உடலை உருக்கும் பெரு நோய்) ஆகியவற்றின் சிகிச்சை அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள மருந்துகள் பலன் தரக்கூடும்.
சீனாவில் அவர்களுடைய பாரம்பரிய சீன மருத்துவம் லேசான மற்றும் மத்திம அளவிலான நோய் தொற்று நிலைகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை அளித்து உள் நோயாளிகளாக கண்காணித்து வருகிறார்கள். இது ஒரு மிக முக்கியமான முயற்சி. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சில பரிந்துரைகளை நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் அளித்துள்ளது. தமிழகத்திலும் முதன்முறையாக ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட அரசாணைவெளியாகியுள்ளது. கேரளத்தில ஆயுஷ் மருத்துவமனைகள் திறம்பட செயல்பட்டு வருவது பற்றி செய்திகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளின் முக்கியத்துவம் மற்றும் பலனை பற்றியோ அல்லது மருந்துகளின் பட்டியலை அளிப்பதோ இந்த கட்டுரைக்கு பொருந்தாது. அவசியம் ஏற்பட்டாம் அவற்றை பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறேன். எனினும் கொள்ளை நோய் காலத்தில் ஆயுர்வேத மருந்துகளை கொடுப்பதில் உள்ள சவால் என்பது சரியான மற்றும் தரமான மருந்து பொருட்களை பெறுவதிலும் அதை உரிய முறையில் தயார் செய்து மக்களிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதிலும் உள்ளது. புற்றீசல் போல நிறுவனங்கள் மருந்தை தயாரித்து வழங்குகின்றன. வெறும் லாப விளையாட்டாக முடிந்துவிடக்கூடாது. ஒப்பீட்டளவில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு மருந்து இடுபொருட்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்து அதிக சிக்கலில்லை.
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுர்வேதம் மூன்று எல்லைகளில் உதவக்கூடும். முதலாவதாக, நோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை கூறாக்கும் உணவுகள் மற்றும் எளிய மருந்துகள் வழியாக இது சாத்தியம். மஞ்சள், நெல்லிக்காய், துளசி போன்றவை நமக்கு எளிதாக கிடைக்கும் அருமருந்து. இரண்டாவதாக நோய் தொற்று நிலையில் நவீன மருத்துவத்துடன் இணைந்து குணப்படுத்துதலை துரிதமாக்கவும் தீவிர நிலைக்கு செல்வதை தவிர்க்கவும் உதவக்கூடும், உடலே இயல்பாக எதிர்கொண்டு கடந்துவிடக்கூடிய லேசான தொற்று நிலையில் இம்மருந்துகள் இன்னும் அதிகமாக உதவக்கூடும். மூன்றாவதாக நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடல்வலுவை மீட்க மேலதிக உதவியாக இருக்கக்கூடும்.
இந்திய பாரம்பரிய சிகிச்சைகளை பயன்படுத்துவதில் நமக்கு என்ன தயக்கம்? சிக்கல் இரு பக்கங்களிலும் உள்ளது. கொவிட் என்னவிதமான நோய் என புரிந்து கொள்வதற்கு முன்னரே இங்கு குணப்படுத்தும் அறைக்கூவல்கள் எழுந்து விட்டன. இந்தியாவின் பெரும்பாலான நவீன மருத்துவர்களுக்கு தங்கள் பாரம்பரிய மருத்துவம் சார்ந்து மரியாதையோ புரிதலோ இல்லை. இதற்கு இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் ஒரு காரணம். உடல்களின் மீதான அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் நவீன மருத்துவம் காண்கிறதோ எனும் ஐயம் எனக்கிருக்கிறது. பாரம்பரிய மருத்துவர்களும் விட்டுப்போனதை மீட்க அதீத எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள் என்பதையும் காண முடிகிறது. எது எப்படி ஆயினும் இது நம் வரலாறு அறிந்திராத இக்கட்டு. இத்தருணத்தில் வாய்ப்பிருக்கும் ஆபத்தற்ற அத்தனை வழிமுறைகளையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். பரஸ்பர ஐயங்களை களைந்து நல்லெண்ணம் மற்றும் நன்னம்பிக்கையுடன் மக்களின் நன்மைக்காக சாத்தியமான எல்லா வழிகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய மருத்துவர்கள் நவீன மருத்துவத்தை ஒரு உலகளாவிய சதி செயலாக சுருக்குவதோ நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை ஒரு ஏமாற்று வித்தையாக மட்டும் கருதுவதோ எவ்வகையிலும் உதவப்போவதில்லை. நவீன அறிவியலாளர்கள் நவீன மருத்துவர்களுடன் சேர்ந்து இந்திய பாரம்பரிய மருத்துவர்களும் தங்களுக்குரிய பங்கை ஆற்ற வேண்டியது காலத்தின் அவசியம். நோயின் தன்மையை அறிந்து அதற்கு உகந்த பாதுகாப்பு முறைகளுடன் இந்திய மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இந்த போரில் நாமும் முன்வரிசைக்கு அழைக்கபடுவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த பொறுப்புணர்வு நம்மை இயக்கட்டும்.
-சுநீல் கிருஷ்ணன்.
நல்ல கட்டுரை
Appreciable article for coordination of different fields of medicine to defeat epidemics