மாயச்சுவர் -குறுங்கதை

புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும்.
தன் வீட்டிலும் அடிக்கடி எழத்தயாராயிருந்த அப்படியானதொரு சுவரை மிதிலா நிலைக்கவிடக் கூடாதென ஆசைப்பட்டாள்.  அவளுக்கும் அவனுக்குமான வாக்குவாதங்கள் நிறைவு பெற முன்னமேயே அத்தகைய சுவரொன்று உருக்கொள்ள அலைந்தபடியிருந்தாலும் அந்த அருவச்சுவர் அத்திவாரம் கொள்ளும் ஆரம்ப நிலையிலேயே மிதிலா அதனை உடைத்துச் சிதறடித்து ஊதி பறக்கவைத்து விடுவாள். தவறி உடையாமல் அது நிலைகொள்ளத் திமிறும் போதெல்லாம் சில மென் வார்த்தைகளாலும் காதல் சொட்டும் ஓரிரு முத்தங்களாலும் அதனைத் தகர்த்து பொடி செய்வாள்.

நீண்ட காலமாய் தன்னால் தடுத்துடைக்கப்பட்டாலும், தான் சிறிதேனும் தாமதிக்க நேரின் அதிவேகமாய் வளர்ந்து இருபக்க திரைமறைப்பாகிவிடும் அபாய நிலையை அச்சுவர் கொண்டிருந்ததை மிகத்தாமதமான ஒரு இரவுப் பொழுதிலேயே மிதிலா உணர்ந்திருந்தாள்.
ஏதோ ஒரு உந்துதலில் இரண்டு நாட்களாய் அவனாகப் பேசும் வரை காத்திருந்தாள். ஐந்தாம் நாள் தாண்டியும் அவனது அலட்சியம் குறைவதாயில்லை. தன்னை விடுத்த பிரிதொரு ஜீவன் அவ்வீட்டில் உலாவுவதாகவே அவன் காட்டிக்கொள்ளவில்லை.
ஆறாம் நாள் தொட்டு ஏக்கம்… அழுகை… கோபம் எல்லாம் தாண்டியதொரு விரக்தி நிலை உருவானது.

அச்சுவர் அசைக்க முடியாததொரு திண்மமாய் மாறத்தொடங்கியது. அவன் அச்சுவர் தொடர்பாக எதனையும் எண்ணாமல் இருந்திட்ட போதிலும் வழமை போல அவளே அதனைத் தகர்த்தெறிவாள் எனக் காத்திருந்தான். அத்துடன் தன் காத்திருத்தல் தொடர்பான துளியளவு நம்பிக்கையைத் தானும் அவளுக்கு தரக்கூடாதென்பதிலும் உறுதியாயிருந்தான்.

இப்படியொரு மாயச்சுவர் தோன்றிட, தான் காரணமேயில்லாத போதிலும் ஒவ்வொரு முறையும் தானே இரண்டாம் பட்சமாகி சுயமிழந்து அச்சுவருடைக்கும் இயந்திரமாய் தன்னை ஆக்கிக்கொண்ட மடமையை எண்ணி மிதிலா வருந்தினாள். அவனுக்குக் கேட்கும்படியாக கொஞ்சம் சத்தமாகவும் அழுது பார்த்தாள்.
நிஜத்தில் அவளை அணைத்துக்கொள்ள அவனது மனம் அவாவித் தாவிய போதிலும், அச்சுவரை உடைக்க அவன் கொஞ்சமும் தயாராக இருக்கவில்லை.  அவனது  ஒவ்வொரு தசை கலங்களுக்குள்ளுமாய் ஊறி உறைந்து போயிருந்த பெயர் தெரியா அந்த ஏதோ ஒன்று… தவறியும் அவன் அச்சுவரை அணுகாவண்ணம் மறித்தபடியேயிருந்தது.
இப்போது அவர்களே விரும்பினாலும் அச்சுவரை உடைத்தெறிய முடியாததொரு நிலை உருவாகியது. இருவரும் இருபுறத்திலுமாய் தாம் முதல் நபராகி விடக் கூடாதெனத்  தயங்கி நின்றனர். அந்த மாயச்சுவரை மையத்தில் வைத்தபடியேயான உறவுமுறையொன்றைப் பேணிக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில், வழமை போலாக தானே இதையும் கடந்திருக்கலாமோவென அவளுக்குத் தோன்றியது. வாழ்வின் மீதான பயம் அவளை வேகமாய் துரத்தியது. அதற்கு மேலுமாய் பொறுமையற்றவளாகினாள். தன்மானம் பற்றியதான சிந்தனையற்றிருந்தலுக்கு இன்னொரு பெயர் தான் பொறுமை என்றெண்ணிக்கொண்டாள்.

தன்னால் மாத்திரமே இதனைச் சரி செய்யவியலும் எனவும். தாங்கள் அத்தகையதொரு தியாகத்திற்காகவே படைக்கப்பட்டு வணக்கத்திற்கு உரியவர்களாகப் போற்றப்படுகிறோமோ எனவும் சந்தேகித்தபடி அவனிடம் மன்னிப்பு கேட்கத் தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.

அவனும் மிக நீண்ட நாட்களாக அவளை மன்னிப்பதற்காகவே காத்திருந்தான். அவனுக்கு மட்டும் தென்படாமல் சிதைவடைந்த இன்னுமோர் சுவரொன்று உருவாகத்தொடங்கியதை அறியாதவனாய்.


-பிரமிளா பிரதீபன்

1 COMMENT

  1. குடும்ப வாழ்வின் சீர்குலைவைச் சொல்லும் கதை. பலர் வீட்டில் இத்தகைய மாயச்சுவர்கள் புள்ளியில் தொடங்கி பூதங்களாக வளர்ந்து ஆட்டி வைக்கின்றன.
    ஆண் பெண் இருவரில் யார் முதலில் மௌனம் கலைவார்கள் என் எதிர்ப்பார்க்கும் இடத்தில்தான் தம்பதிகளுக்குள் சிக்கல் தொடங்குவதாக நம்புகிறேன். குறுங்கதை என்றாலும் பெரும் வாழ்விற்கான நினைவூட்டல்தான் இக்கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.