ஒரு பிணத்தின் போர்வையைப் போல


மே கண்விழிப்பதற்குள் எழுந்து காலையுணவைத் தயாரித்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவன் தூங்கிப்போய்விட்டதால், அவள் கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்து சென்றுவிட்டிருந்தாள். அவள் அருகில் இல்லாததைக் குளியலறையின் தொட்டியில் களகளவென நீர்வடியும் மெலிந்த ஒலியைக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டான்.

எழுந்திருக்கும் நேரமாகிவிட்டது என்பது தெரியுமென்றாலும் கைகளை நெற்றிக்குக் குறுக்கே மடித்து மதிய நேரத்துச் சூரியவொளி கண்களில் படுவதைத் தவிர்க்க முயற்சிசெய்தான். கால்களை மடித்து உடலுக்கு அருகே கொண்டுவந்து அவற்றில் வலி இன்னும் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான்.

மேயின் குளியலறை வேலை முடிந்திருந்தது. உள்ளேயிருக்கும்போது ஒருநாளும் அவள் கதவைத் தாழிட்டுக் கொண்டதில்லையென்பதால் தெரிந்து கொள்ள முடிந்தது. டால்கம் பவுடரின் நறுமணம் முன்னறையைத் தாண்டி படுக்கையறைக்குள் தவழ்ந்து வந்தது. பின்னாடியே அவளும் வந்தாள்.

“ஹாய், குட்டி!” எனப் பாசத்துடன் அழைத்தாள்.

“ஹூம்,” என்று உறுமியபடி தலையின் மேலிருந்த கைகளை விலக்கி ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்தான்.

“எவ்வளவு அருமையான காலை இது!”

“ஆமாம்”, என்றபடி புரண்டு படுக்கையில் போர்வை அவனுடலை இறுகச் சுற்றிக் கொண்டு தொடைகளையும் மார்பையும் துல்லியமாக எடுத்துக்காட்டியது. “மத்தியானம்னு சொல்றியா, அதுதானே சரி?”

அவனைச் சுற்றியிருந்த போர்வையைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள் மே. “பிணத்தைச் சுற்றியிருக்கும் போர்வைபோல இருக்கு,” என்றாள். “சவச்சீலை—.” அவளுடைய சிரிப்பும் சொற்களும் ஒன்றோடொன்று சிக்கிக்கொண்டதால் கொஞ்சம் நிதானித்து அதற்கப்புறம்தான் பேசமுடிந்தது… “பிணப்போர்வையில் சுற்றப்பட்ட கறுத்த ஹக்கிள்பெரி பழம்போல இருக்கிறாய்!”

“இப்படியா பேசுவ, பொழுது துவங்கிற  நேரத்தில,” என்று ஆட்சேபித்தான்.

போர்வையால் மூடப்பட்டிருந்த தன்னுடைய கைகளின் வெளிக்கோட்டைப் பார்த்துக்கொண்டான். மைபோலக் கறுமையாக முரண்பட்டுத்தான் இருந்தது என்பதைப் பார்த்துத் தன்னையுமறியாமல் புன்னகைத்துக் கொண்டான். புன்னகைத்தபடியே மேயின் இனிமையான சிரிப்பை ரசித்துச் சுவைத்தான்.

“துவங்குதா?” ஒரு விரலை நீட்டிப் படுக்கைக்கு அருகிலிருந்த கடிகாரத்தைச் சுட்டிக் காண்பித்தபடியே மறுபடியும் கலகலவென சிரித்தாள். “மணி நாலாகப் போகுது. நீ இப்ப எந்திரிக்கலேன்னா திரும்பவும் தாமதமாத்தான் போகப்போறே,” என்றாள்.

“திரும்பவுமா, என்ன சொல்றே நீ?”

“போன வாரம் ரெண்டு தடவை. அதுக்கு முந்துன வாரம் மூணு தடவை. அதுக்கு முந்துன வாரம் ஒரு தடவை—”

“பகல் நேரத்துல தூங்கறது பழக்கமாகவே மாட்டேங்குது,” என்று எரிச்சலுடன் சொன்னான்.

போர்வைக்கு அடியிலிருந்து கால்களை நீட்டிப் பார்த்தான். கொஞ்சம் வலி குறைந்திருந்தது என்றாலும் முழுவதுமாகப் புத்துணர்ச்சி பெற்றிருக்கவில்லை. “நல்லா அசந்து தூங்கமுடியலை. எப்பவும் நின்னுக்கிட்டே இருந்தா கால்ல இருக்கிற வலுவு முழுக்கப் போயிடுது.”

“இந்த ரெண்டு வருஷத்துல உனக்கு இது பழகிப் போயிருக்கணுமே,” என்றாள் மே.

அவள் தலையைச் சீவி முடித்து, முகத்துக்குப் பவுடர் போட்டு, நீலநிற டெனிம் மேலங்கியை அணிந்துகொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். துரிதமாகச் செயல்பட்டாள், ஆனால் பரபரப்பாக இருப்பதுபோலத் தெரியவில்லை.

“நல்லாத் தூங்கி எழுந்திருச்சிருப்ப போல!” என்று சோம்பலுடன் சொன்னான். அவனும் எழுந்து கொள்ளத்தான் வேண்டுமென்றாலும் அசையவே பிடிக்கவில்லை. கால்களைத் தளர்ச்சியாக வைத்துக் கொண்டால் மீண்டும் தூங்கிவிடுவோம் என்ற பயம் வேறு. நேரமாகிக் கொண்டே இருந்தது என்றாலும் கால்களில் அழுத்தம் கொடுத்து எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே படுத்துக் கொண்டே இருக்கச் செய்தது.

ஒருவழியாக எழுந்து கொண்டபோது அவதி அவதியாகக் கிளம்ப வேண்டியிருந்தது. காலையுணவை அவசர அவசரமாக விழுங்கிய போது இவ்வளவு வேகமாக வந்துவிழும் உணவை வயிற்றினால் செரிமானம் செய்யமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. முன்னறைக்குப் போய் மே-யும், அவனும் கோட்டை அணிந்து கொள்ளும் போதும் அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் நிதானித்து காலெண்டரைப் பார்த்தாள் மே. “இன்னிக்கு பதிமூன்றாம் தேதி,” என்றாள். குரலில் சின்னக்கிளர்ச்சி தென்பட்டது. “இன்னிக்கு வெள்ளிக்கிழமை 13-ஆம் தேதி,” என்றாள். கோட்டினுள் நுழைத்த கையை அப்படியே நிறுத்திவிட்டு மீண்டும் காலெண்டரை உற்றுப்பார்த்தாள். “நான் இன்னிக்கு வீட்டுலயே இருக்கப்போறேன்,” என்றாள். “இன்னிக்கு வீட்டைவிட்டு வெளியில எங்கேயும் போகப் போறதில்லை.”

“முட்டாள் மாதிரி பேசாதே,” என்றான். “இன்னிக்கு சம்பள நாள். எப்படிப் பாத்தாலும் சம்பள நாளுங்கிறது எப்பவுமே அதிர்ஷ்டமான நாள்தான்.” அவள் தயங்கி நிற்பதைப் பார்த்ததும் “சொல்றதைக் கேளு,” என்றான்.

வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்று வாக்குவாதம் செய்து அவளுக்குப் புரிய வைத்துவிட்டுக் கிளம்புவதற்குப் பதினைந்து நிமிடங்கள் ஆனதால் அவன் திரும்பவும் வேலைக்கு தாமதமாகப் போகும்படி ஆயிற்று. அவளிடம் அன்போடு பக்குவமாக எடுத்துச் சொல்லி ஒத்துக்கொள்ள வைக்க வேண்டியிருந்ததால் நேரமாகிவிட்டது. மற்ற ஆண்களைப் போல முரட்டுத்தனமாகப் பேசவோ அடித்து விடுவேன் என்று பயமுறுத்தவோ அவனுக்கு விருப்பமில்லை. அவன் அப்படிப் பட்டவனில்லை.

தொழிற்சாலையை அடையும்போது நேரமாகிவிட்டிருந்தது. பகல்நேரத் தொழிலாளர்கள் நீண்டவரிசையில் சாரிசாரியாக வெளியேறிக் கொண்டிருந்ததால் உள்ளே சென்று நேரம்காட்டியில் வருகையைப் பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டது.

வேலைநேரம் தொடங்குவதற்கு முன்பாகவே கால்கள் வலிக்கத் தொடங்கிவிட்டன. மனமுழுவதும் வீட்டுக்குப் போய் படுக்கையில் படுத்துத் தூங்குவது பற்றிய சிந்தனைதான் இருந்ததால் வெளியே வரும் தொழிலாளர்களைத் தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு போவது நேரம்காட்டியில் வருகையைப் பதிவுசெய்வது இரவு முழுவதும் தள்ள வேண்டியிருந்த சுமைவண்டியை எடுத்து வருவது என எல்லாவற்றையும் கட்டாயப்படுத்திக் கொண்டுதான் செய்ய வேண்டியிருந்தது.

தள்ளுவண்டியை கான்க்ரீட் தளத்துக்கு எடுத்து வரும்போது இதுவே தன்னுடைய தொழிற்சாலையாக இருந்தால் இங்கே பல மாற்றங்களைக் கொண்டு வருவேனென்று நினைத்துக்கொண்டான். முக்கியமாக நின்றுகொண்டே செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அவற்றில் பலவற்றை உட்கார்ந்தபடியே செய்வதற்கு வழிசெய்வான். சுற்றிலும் நிறைய பெஞ்சுகளைப் போடுவான். தான் செய்யும் இந்த வேலையை—தள்ளுவண்டியைத் தள்ளியபடியே தினமும் பத்து மணிநேரம் நடக்கவேண்டியிருந்த இந்த வேலையை—உட்கார்ந்தபடியே செய்யும் வேலையாக மாற்றுவான். ரயிலடியில் பயன்படுத்தும் சிறிய டிரக் வண்டிகளை உபயோகிக்கலாம். ஓட்டுபவர் உட்கார்ந்துகொள்ள இருக்கையொன்று  இருக்கும், எளிதாக எல்லா இடத்துக்கும் போகும், நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளாது, வளைந்து நெளிந்து செல்ல எளிதாக இருக்கும்.

வண்டியை மேற்பார்வையாளருக்கு அருகே தள்ளிச்சென்றான். மனதளவில்கூட மேற்பார்வையாளப் பெண்மணி என்று சொல்ல வேண்டுமென்று தோன்றவில்லை. இதுபோன்றதொரு தொழிற்சாலையில் ஒரு பெண் மேலதிகாரியாக இருப்பது வேடிக்கையாகத்தான் இருந்தது.

ஏதோ காரணத்தினால் எரிச்சலுடன் இருந்தாள். முகம்சிவந்து, கண்கள் பாதியளவுக்கு மூடி, சின்னக்கீறல் அளவுக்குத்தான் திறந்திருந்தன என்பதிலேயே தெரிந்தது. ஒருவேளை வெளியே போகவேண்டியிருந்ததால் சரியாகத் தூங்கவில்லையோ என்னமோ. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து தலையைக் குனிந்தபடி கொஞ்சம் வேகமாக நகர்ந்தான். ஆனால் தாண்டிச் செல்லும்போது கண்களின் ஓரத்தின் வழியாக அவளை ஒரு பார்வை பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அவள் அணிந்திருந்த வெளிர்நிற கால்சட்டையின் முனையையும் பெரிய பழுப்பு நிறக் காலணியின் நுனியையும் கவனித்தான்.

“ஏய் ஜான்சன்,” அந்தப் பெண் அழைத்தாள்.

இயந்திரங்கள் முழுமூச்சில் இயங்க ஆரம்பித்துவிட்டன. அரவை இயந்திரம்போல அவை எழுப்பிய பெரிய சத்தத்தில் அடுத்தவர் பேசுவதைக் கேட்கவே முடியாது. இயந்திரங்களில் பணிபுரியும் ஆண்களும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளுவார்கள் என்றாலும் தூரத்திலிருந்து பார்த்தால் வெறுமனே வாயசைப்பதைப் போலத்தான் இருக்கும். பேசுவது எதுவுமே காதில் விழாது. இருந்தாலும் இயந்திரங்களின் ஓசைக்கு மேலே அந்தப் பெண்மணியின் குரல் ஒலித்தது—கடுமையாகவும், கோபத்துடனும்.

மெதுவாகத் தலையைத் திருப்பி, “மாலை வணக்கம், திருமதி ஸ்காட்,” என்று கூறிவிட்டுக் காத்திருந்தான்.

“நீ திரும்பவும் தாமதமா வந்திருக்கே.”

“ஆமாம். கால் ரொம்ப வலிச்சுது.”

அந்தப் பெண்மணியின் முகம் கோபத்தில் மேலும் சிவந்தது. “இந்த பணிநேரத்தில் வேலைக்கு வருபவர்களில் பாதிப்பேர் தாமதமாதான் வர்றீங்க. அதுல நீதான் ரொம்ப மோசம். எப்பவுமே தாமதம் தான். உனக்கு என்ன பிரச்சினை,” என்றாள்.

“என்னோட கால்கள்தான். அவற்றுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதேயில்லை. பகல்ல தூங்கிப் பழகவும் முடியலை. அதனால காலையில எழுந்துக்கவே முடியறதில்லை.”

“சாக்குப்போக்கு. உங்களுக்குன்னு ஏதாவது சாக்குபோக்குக் கிடைச்சுடும். தாமதமா வர்ற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு. பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை.  பாட்டி செத்துப்போயிட்டா. இல்லேன்னா வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லன்னு ஆசுபத்திரிக்கு போனேன்னு ஏதோ ஒண்ணு.” கொஞ்சம் நிறுத்தி ஆழ்ந்த மூச்சுவிட்டாள். “இந்த கறுப்பனுங்கதான் உள்ளதிலேயே ரொம்ப மோசம். உன் கால்ல என்ன பிரச்சினைன்னு எனக்குப் புரியலை. இனிமே நேரத்துக்கு வந்துடணும். இந்த கறுப்பனுங்களோட ஒரே தொல்லையாப் போச்சுー”.

“உங்க கோபத்துல நியாயமிருக்கு,” என்று அவரை மென்மையான குரலில் இடைமறித்தான். “நீங்க எவ்வளவு வேணும்னாலும் உங்க கோபம்தீரும் வரை என்னைத் திட்டலாம். ஆனால் யாரும் என்னைக் கறுப்பன் என்று கூப்பிடுவதைப் பொறுத்துக்க முடியாது.”

அவளை நெருங்கினான். அவன் முஷ்டிகள் மடங்கியிருந்தன. உதடுகள் ஒரு மெல்லிய கோடாக விரிந்திருந்தன. நெற்றியிலிருந்த நரம்புப் புடைத்துத் துடித்தது.

அந்தப் பெண்மணி பின்னால் நகர்ந்தாள், வேகமாக அல்ல, நிதானமாக, இரண்டு மூன்று அடி நகர்ந்தாள்.

“ஓ, நான் சொன்னத மறந்துடு. நான் எதையும் மனசுல வச்சுக்கிட்டு சொல்லலை. தவறி வந்துடுச்சு. எதிர்பாராத விபத்து.” அவள் முகம் மேலும் சிவந்து முகத்திலிருந்த இரத்த நாளங்கள் ஆழ்சிவப்பு வண்ணமாயின. “போ, போய் வேலையைப் பாரு,” என்று அவசரப்படுத்தினாள். இன்னும் மூன்று அடிகள் பின்னால் எடுத்து வைத்து நகர்ந்தாள்.

அவன் அசைவற்று ஒரு கணம் நின்றான். பின்னர் அந்த உதடுகளிலிருந்த சிவந்த உதட்டுச் சாயம் அவனுடைய மேற்பார்வையாளர் ஒரு பெண் என்பதை நினைவூட்டியதால் திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவனால் என்றுமே ஒரு பெண்ணை அடிக்க முடிந்ததில்லை. கைகளில் ஒருவித கிளர்ச்சியூறுவதை உணர்ந்து குனிந்து அவற்றைப் பார்த்தான். முஷ்டிகள் இறுகிக் கடினமாகி அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த ஆழ்சிவப்பு ரத்த நாளங்களை அடித்துநொறுக்கத் தயாராகியிருந்தன.

வண்டியைத் தள்ளியபடி மெல்ல நடக்கத் தொடங்கினான். தலையைத் திருப்பிப் பார்த்தபோது அவனிருந்த திசையைப் பார்த்தபடியே நீலக் கைக்குட்டையைக் கொண்டு நெற்றியிலிருந்து வேர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள். அவர்களுடைய கண்கள் ஒரு கணம் சந்தித்துப் பின் திரும்பிக்கொண்டன.

அவன் மறுபடியும் அவள் பக்கம் திரும்பவேயில்லை. ஒவ்வொரு பணியிடமாக நகர்ந்து முடித்துவைக்கப்பட்ட பாகங்களைக் கவனமாகச் சேகரித்தான். மேலும், கீழுமாகவும், குறுக்கேயும், நெடுக்கேயும் எனக் கட்டிடமுழுவதும் நடந்து கொண்டேயிருக்கும்போது அவனுடைய ஆத்திரத்தை விழுங்கி அதை முற்றிலுமாகத் தொலைத்துக்கட்ட முயற்சித்தான்.

என்ன நடந்தது என்று மட்டும் சிந்தித்து அதனால் சலனமடையாமல் இருந்ததன் மூலம், அதில் ஓரளவு வெற்றியும் பெற்றான். ஆனாலும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆகியும் அவன் கையில் இருந்த இறுக்கம் குறையவேயில்லை. குத்துவிடுவதற்குத் தயாராக இருந்தவைபோல வண்டியின் கைப்பிடிகளை ஒரு முடிச்சைப்போல இறுகப் பற்றியிருந்தன அவனுடைய முஷ்டிகள்.

அவளை அடித்திருக்கவேண்டுமென்று நினைத்தான். முகத்திலேயே சப்பெனக் குத்துவிட்டு மென்மையான சதை அவனுடைய கடினமான கரங்களின் வலிமையில் துவளுவதை உணர்ந்திருக்கவேண்டும். அவளை அடிப்பது எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பதன் வழியாக தன்னுடைய கரங்களை ஆசுவாசப்படுத்தலாம் என்று நினைத்தான். ஏனென்றால் அந்தக் கரங்கள் தன்னுடையவையல்ல என்ற வினோதமான உணர்வு ஏற்பட்டது. அவை தனியே உயிர்பெற்று அவனுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிட்டது போலவும் உணர்ந்தான். அவளை அடிக்கும்போது அவனுடைய கரங்கள் அடைந்திருக்கக்கூடிய இன்பத்தை ஊன்றி நினைத்துக் கொண்டான்—முதலில் ஒரு கை, பின்னாடியே அடுத்தது. அதைச் செய்திருந்தால் இரண்டு கைகளும் ஆசுவாசமடைந்து அமைதிபெற்றிருக்கும்.

அவனுடைய வேலையே போயிருக்குமென்றாலும் அவளை அடித்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் நீண்ட நாட்களுக்கு, சொல்லப்போனால் வாழ்நாள் முழுவதும் இனி யாரையும் கறுப்பன் என்று கூப்பிட்டிருக்கவே மாட்டாள்.

அவனுக்கிருந்த ஒரே பிரச்சினை பெண்களை கைநீட்டி அடிக்கமாட்டான் என்பதுதான். ஒரு பெண்ணால் ஆணைப்போலத் திருப்பி அடிக்கமுடியாது. ஆனால் பலத்தையெல்லாம் திரட்டி சரியான நேரத்தில் அவளுடைய குறுகலான உதடுகளை ஒரேயொரு குத்துவிட்டு பிளக்கவைத்திருந்தால் அது அவனுக்கு ஆழ்ந்த திருப்தியைத் தந்திருக்கும். கோபத்தால் திரண்ட ஆற்றலையும் இறுக்கத்தையும் தொலைத்துக் கட்டியிருக்கும். அவனுடைய இதயம் எப்படி வேகவேகமாகத் துடித்து இரத்தத்தை உடலெங்கும் பரவச் செய்து விரல் நுனிகளிலெல்லாம் சிலிர்ப்பை உணரச் செய்தது என்பதும் அவன் நினைவுக்கு வந்தது.

இராப்பொழுதான போது அசதி அவனைத் தின்னத் தொடங்கியது. வாயின் இரு முனைகளும் கீழ்நோக்கி மடிந்து கண்களுக்கிடையே இருந்த சுருக்கம் ஆழமாகி தோள்கள் துவண்டன. ஆனால் கைகள் மட்டும் இறுக்கமாகவும் பதட்டத்துடனும் இருந்தன. நேரமாக ஆக, பெண் தொழிலாளர்கள் பொறுமையிழந்து ஒருவர்மீது ஒருவர் எரிந்து விழுந்தும் கடிந்து கொண்டும் இருந்தனர் என்பதைக் கவனித்தான். இயந்திரங்களின் பெருத்த ஓசையில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது கேட்கவில்லை என்றாலும் வாயோரத்திலிருந்து சொற்களை வெளியே வந்து விழச் செய்த அவர்களின் உதட்டசைவைப் பார்க்கமுடிந்தது. சைகைகளின் வாயிலாக எரிச்சலையும் வாயசைப்பின்மூலம் கடுகடுப்பையும் காட்டிக்கொண்டனர்.

அவர்களுடைய பலவந்தமான அதிவேக இயக்கம் பணிநேரம் முடியப்போகிறது என்பதைச் சுட்டினாலும் இரவின் நீளம் குறையாமல் இருப்பது போலவும் இன்னும் முடிவில்லாத நேரத்துக்கு கால்நோக நடந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது போலவும் தோன்றும். இறுதியில் விசில் சத்தம் ஒலிக்கும்போது அதை நம்பமுடியாமல் வண்டியைத் தள்ளியபடி போய்க்கொண்டேயிருப்பான். இயந்திரங்களின் சத்தம் ஓய்ந்து ஒரு முனகலாகத் தேய்ந்து நிற்கும்போதுதான் விசில் சத்தம் ஒலித்தது என்பதை நம்பவே முடியும். ஒரு நொடி எதுவுமே செய்யாமல் நின்று ஒரு பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத்திக்கொள்வான்.

உடனே உற்சாகத்துடன் இயங்கி வண்டியைக் கொண்டுபோய் கிடங்கில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக சம்பளத்தைப் பட்டுவாடா செய்பவரின் முன்னால் நிற்கும் வரிசையில் வந்து நின்றான். தான் மாற்றம் கொண்டுவரும் இன்னொரு விஷயமாக இதுவும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சம்பளக் கவர்களைக் கொண்டுபோய்க் கொடுக்க ஏற்பாடு செய்வான். இதனால் வரிசையில் நின்று இன்னுமொரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் வீணாவதைத் தடுப்பான். மே வேலைசெய்யும் தொழிற்சாலையில் அப்படித்தான் வேலை செய்யும் இடத்திற்கே சம்பளக் கவர் வந்துவிடும்.

சம்பளக் கவரைக் கால்சட்டைப்பையில் திணித்துக்கொண்டு சப்வே ரயில் நிலையத்துக்கு ஊர்ந்துகொண்டிருந்த தொழிலாளர்களின் வரிசையில் நின்றான். அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அருமையான இரவு, வானத்தில் விண்மீன்கள் நிறைந்து வழிவதுபோல இருந்தது. வீடுபோய்ச் சேர்ந்ததும் அவனும் மே-யும் உடனடியாகப் படுத்துவிட்டால் சிலமணி நேரமாவது இருட்டில் உறங்கமுடியும். ஆனால் ஒருபோதும் அப்படி நடப்பதில்லை. ஒன்றாகப் பொழுதைப் போக்குவார்கள்—சமைப்பார்கள், சாப்பிடுவார்கள், வானொலி கேட்பார்கள். அவனுக்கு முன்னறையில் இருக்கும் பெரிய நாற்காலியில் உட்கார்ந்துகொள்வது என்றால் பிடிக்கும். இறுதியில் இருவரும் உறங்கப்போகும்போது விடியற்காலை ஐந்து அல்லது ஆறு மணியாகியிருக்கும். அதற்குள் விடியலின் வெளிச்சம் வானத்தின் ஓரங்களில் எட்டிப் பார்க்கத் துவங்கியிருக்கும்.

கூட்டத்துக்குள் புகுந்து ரயில்நிலையத்தை நோக்கி விரையும் நொடியை மெல்ல நடப்பதின் வழியாகக் கொஞ்சம் ஒத்திவைத்தான். ஹார்லெமைச் சென்றடைய நீண்டநேரம் பயணம் செய்யவேண்டும் என்ற எண்ணமே அச்சுறுத்துவதாக இருந்தது. சப்வேயில் தொழிலாளர்களின் முதல் அலை ஓயும்வரை நேரத்தைப் போக்குவதற்காக இரவு முழுதும் திறந்திருக்கும் உணவகமொன்றின் வெளியே நின்று வேடிக்கைபார்த்தான்.

உணவகத்தில் பளீரிட்ட விளக்குகள் வசீகரிப்பவையாக இருந்தன. உள்ளே உயிர்ப்பும் துள்ளலும் இருந்தது. ஜன்னலின் வழியே பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லாமே பளபளப்புடன் இருப்பதுபோலத் தோன்றியது—சலவைக்கல்லால் ஆனதுபோன்ற பெரிய நீண்ட விற்பனை மேடை, உயரமான முக்காலிகள், வெள்ளைப் பீங்கான் மேசைகள், முக்கியமாக ஜன்னலருகே இருந்த பெரிய உலோகக் காஃபி உருளை. அதன் உச்சியிலிருந்து ஆவி வெளியேறியது, அடியில் எரிவாயு அடுப்பு எரிந்தது—அதன் நீலநிறச் சுவாலை உயிர்ப்புடன் நடனமாடியது.

இந்தப்  பணிநேரத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள், ஆண்களும் பெண்களுமாக, காஃபி உருளையின் அருகில் வரிசையில் நின்றனர். ஆவிபறக்கும் காஃபி கோப்பைகளுடன் பீங்கான் மேசைகளை நோக்கி அவர்கள் நடக்கும்போது காஃபியின் மணம் அவர்களின் முகத்தில் இருந்த களைப்பைக் குறையச்செய்ததுபோலத் தோன்றியது. முதல் உறிஞ்சலுக்குப் பிறகு அவர்களுடைய முகங்கள் மென்மையாகின, புன்னகை மலர்ந்தது, பேசவும் சிரிக்கவும் ஆரம்பித்தனர்.

திடீரென ஏதோ உந்துதலால் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து காஃபி உருளையின் முன்னால் இருந்த வரிசையில் நின்றான். வரிசை மெதுவாக நகர்ந்தது. அங்கே நின்று கொண்டிருந்தபோது காஃபியின் மணமும் குரல்களும் சிரிப்பொலியும் கால்களிலிருந்த வலியை மரத்துப் போகச்செய்தது.

உருளையிலிருந்து காஃபியைப் பரிமாறிக்கொண்டிருந்த பெண்ணை முதலில் கவனிக்கவில்லை. அவனுக்கு முன்னால் நின்றிருந்த ஆண்களின் கையிலிருந்த கோப்பையையே பார்த்துக் கொண்டிருந்தான். காஃபி நிரம்பிய கனத்த வெள்ளைக் கோப்பையை ஏந்தியபடி வரிசையில் இருந்து ஒவ்வொரு தடவையும் ஒருவர் வெளியேறும்போதும் அந்த மணமிகுந்த ஆவி நாசியில் நுழைந்தது. ஒரு சொட்டுக்கூட கீழே சிந்திவிடாதபடி கவனத்துடன் அவர்கள் நடப்பதைக் கவனித்தான். கோப்பையின் மேல்பகுதியில் நுரைமொட்டுக்கள் ததும்பியதைக் கவனித்தான். தன் முறை வரும்போது காஃபியை விழுங்குமுன் நுரைமொட்டுக்களை உதட்டில் உடையவிடுவேன் என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்தது அவன் முறைதான். மற்றவர்களைப் போலவே “ஒரு கோப்பை காஃபி,” என்று சொன்னான்.

அந்தப் பெண் அவனைத் தாண்டிப் பார்வையைச் செலுத்தியபடி கையைத் தூக்கிக் கழுத்துக்கு கீழேயிருந்த முடியை மெல்ல மேலே தூக்கி தலையை மெதுவாக அசைத்தாள். “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு காஃபி கிடைக்காது,” என்றாள்.

அவள் சொல்வதைச் சரியாகக் கேட்டோமா என்று சந்தேகம் வந்ததால் “என்ன?” என்று வெறுமையாகக் கேட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு காஃபி கிடைக்காது,” என்று மறுபடியும் சொன்னாள்.

அவனுக்குப் பின்னால் மௌனத்தையும் பிறகு அசௌகரியமான அசைவுகள் ஏற்படுவதையும் உணர்ந்தான். யாராவது ஏதாவது சொல்லுவார்கள், ஏனென்று கேட்பார்கள், எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால், மௌனம் மட்டுமே நிலவியது. பிறகு பின்னால் நிற்கும் ஆண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கால்மாற்றி நிற்பது போன்றதொரு மங்கலான ஒலிமட்டும் கேட்டது.

எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்தான். அவன் கைகள் குறுகுறுக்க ஆரம்பித்து விரல்நுனிவரை கிளர்ச்சி பரவ ஆரம்பித்ததால் குனிந்து கைகளைப் பார்த்தான். இறுக்கமான கடினமான முஷ்டிகளாக மடங்கியிருந்தன. மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்த்தான். பலங்கொண்டமட்டும் அடித்து அவளுடைய சிவந்த உதட்டுச் சாயம் கலைந்து மூக்கு, தாடை, கன்னங்களில் பரவச்செய்யவேண்டும் என்று நினைத்தான். விழுந்த அடியில் அவள் இனிமேல் தலையைச் சிலுப்பவும் கூடாது, கறுப்பன் என்பதற்காக ஒரு மனிதனுக்கு ஒரு கோப்பை காஃபியைக் கொடுக்கமாட்டேன் என்றும் சொல்லக்கூடாது.

விற்பனை மேடைக்கு அந்தப் பக்கம் இருக்கும் தூரத்தை அளந்தபடி குத்துவிடுவதற்குத் தயாராகத் தன்னுடலின் எடையைக் கால்களில் தாங்கியபடி முன்னால் எம்பினான். ஆனால் கைகளை கீழே இறக்கி முஷ்டியின் பிடியையும் கைகளையும் தளர்த்தவேண்டும் என்று தன்னையே கட்டாயப்படுத்திக் கொண்டதால் அவை பக்கவாட்டில் கீழே இறங்கின. இந்த முயற்சியில் அவன் கைகளே அவனுக்கெதிராக சண்டைபிடித்ததால் மூச்சுத் திணறியது. ஆனாலும் அவளை அடிக்க முடியவில்லை. அவனால் ஒருபோதும் பெண்களை அடிக்கமுடியாது, இவளைக்கூட, ஒரு தலையசைப்பின்மூலம் அவனுக்குக் காஃபி கொடுக்கமுடியாது என்றவளைக்கூட. அவன்மேல் இருந்த வெறுப்பை வெளிக்காட்டும் சைகையாகக் கழுத்தின்மீது விழுந்திருந்த தங்கநிற முடியை அவள் தூக்கிய காட்சி மீண்டும் மீண்டும் கண்முன்னே தோன்றிக் கொண்டேயிருந்தது.

வாசலைத்தாண்டி வெளியேறியபோது அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை. அப்படிச் செய்திருந்தால் அந்த உலோகக் காஃபி உருளையின் கீழே துடித்துக்கொண்டிருந்த நீல சுவாலை அணைக்கப்படுவதைப் பார்த்திருப்பான். வரிசையில் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ஆண்கள் ஒரு நொடி நின்று தம்மைச் சுற்றியும் மேசைகளில் அமர்ந்து காபியைக் குடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு அவனைப்போலவே தாங்கள் அருந்த விரும்பிய காபியைக் குடிக்காமலேயே நகர்ந்தனர். விற்பனை மேடைக்குப் பின்னால் நின்ற பெண் உருளையில் நீரை ஊற்றித் துடைத்துவிட்டு அது முழுவதுமாக வெளியேறக் காத்திருக்கையில் கழுத்தின்மீது விழுந்திருந்த முடியை மென்மையாகத் தூக்கிவிட்டு தலையைச் சாய்த்தபடி மீண்டும் காபியை புதிதாகத் தயாரிக்கத் தொடங்கினாள்.

ஆனால் திரும்பிப் பார்க்காமலேயே தலையைக் கீழே குனிந்தபடி, கைகளைப் பாக்கெட்டுக்குள் விட்டபடி, அடித்து நொறுக்கவேண்டும் என்று தோன்றியபோது அவனுள் இருந்த எது அமைதியாகவும் செயலற்றும் நிற்கச் செய்ததோ அதன்மீதும் தன்மீதேயும் ஆத்திரத்தைக் கொட்டியபடியே நடந்தான்.

சப்வே நெரிசலாக இருந்ததால் அவன் நிற்கவேண்டியிருந்தது. தலைக்குமேல் தொங்கிய பிடிவாரைப் பிடித்துக்கொள்ள முயன்றாலும் கைகள் மிகுந்த பதட்டத்துடன் இருந்ததால் பற்றமுடியவில்லை. ரயிலின் கதவுக்கருகே நகர்ந்துசென்று அதன் அசைவுடன் சேர்ந்து தானும் முன்னும்பின்னும் ஆடியபடியே நின்றுகொண்டான். ரயிலின் பேரிரைச்சல் தலைக்குள் இடித்து வலியில் துடிக்கவைத்தது. காலிலிருந்து பிறாண்டியபடி தொடைகளுக்கிடையேவரை பரவிய சொல்லொணாத வலி உடலெங்கும் வெடித்தது. கோபம் தோற்றுவித்த ஆற்றல் பயன்படுத்தப்படாமல் உடலிலேயே தேங்கி விஷம்போலப் பாதங்களிலிருந்து கால்களுக்கு ஏறித் தலைக்குப் பரவுகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அவன் போவதற்கு முன்னரே வீட்டில் இருந்தாள் மே. அபார்ட்மெண்ட் கதவில் சாவியைப் போடும் முன்னரே அவள் வந்துவிட்டாள் என்பது தெரிந்துவிட்டது. வானொலி பாடிக் கொண்டிருந்தது. அதைச் சத்தமாக வைத்துவிட்டு கூடவே தானும் பாடிக்கொண்டிருந்தாள்.

“ஹலோ கண்ணு,” அவன் கதவைத் திறந்ததும் குரல் கொடுத்தாள்.

அவனும் ஹலோ என்று சொல்வதற்கு முயற்சித்தான், ஆனால் அது பாதி உறுமலாகவும் பாதி பெருமூச்சாகவும்தான் வெளிப்பட்டது.

“ரொம்ப கலகலப்பா இருப்பது போல இருக்கே,” என்றாள்.

படுக்கையறையில் இருந்தாள். உள்ளேபோய் நிலைவாசல்படியில் சாய்ந்துகொண்டான். அவள் வேலைக்கு அணிந்துசென்ற டெனிம் மேலங்கி படுக்கைக்கு அருகிலிருந்த நாற்காலியின்மீது கவனமாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியின் முன் நின்று வீட்டில் அணியும் மஞ்சள் நிற மேலாடையின் கயிற்றை இடுப்பில் முடிந்துகொண்டிருந்தாள். வாயில் சூயிங்கம்மை வேகவேகமாக மென்றபடி கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.

“என்ன விஷயம்? மேற்பார்வையாளரோ வேறு யாராவதோ திட்டுனாங்களா?” என்றாள்.

“ரொம்ப அசதியா இருக்கு,” என்று மெதுவாகச் சொன்னான். “கடவுளே, அந்தச் சூயிங்கம்மை சத்தம் வர்ற மாதிரி இப்படிப் போட்டு அரைச்செடுக்கணுமா?”

“நீ அதைக் காதுல போட்டுக்காம இருக்கலாமே,” என்று அமைதியாகச் சொன்னாள். தலையின் பக்கவாட்டில் இருந்த சுருண்ட முடிக்கற்றையைத் தட்டிக்கொடுத்தாள். பிறகு கழுத்தின் மேலிருந்த முடியைக் கையால் தூக்கிவிட்டபடி தலையைத் தாழ்த்தி முதலில் முன்னும் பிறகு பின்னும் ஆட்டினாள்.

அந்தச் செய்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். “எப்போ பார்த்தாலும் முடியைப் போட்டு எதையாவது பண்ணிகிட்டே இருக்கணுமா?” என்று எதிர்ப்பைத் தெரிவித்தான்.

“அதுல உனக்கென்ன பிரச்சனை?” கண்ணாடியை விட்டுத் திரும்பி இடுப்பில் கைகளை ஊன்றியபடி அவனைப் பார்த்துநின்றாள். “வீட்டுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு நிமிஷம் ஆகல. அதுக்குள்ளே என்னைக் குறை சொல்ல ஆரம்பிச்சுட்டே.”

அவள் கண்கள் கோபமாக இருந்ததால் அவன் பதிலேதும் சொல்லவில்லை. அவளுடன் சண்டைபோடுவதிலும் விருப்பமில்லை. திருமணமான இத்தனை ஆண்டுகளில் இருவரும் ஒத்திசைவோடுதான் இருந்திருக்கின்றனர். எதுவுமே சொல்லாமல் அறைக்குள் நுழைந்து கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் காலை நீட்டிக் காலணியின் குதிகாலில் எடை முழுவதையும் சரித்து நன்றாகப் பின்னால் சாய்ந்து சௌகரியமாக உட்கார்ந்தான்.

“இங்க பாரு,” என்று வெடுக்கென்று சொன்னாள். அந்த மேலங்கியை நான் நாளைக்கு போட்டுட்டுப் போகணும். அப்பிடி சாஞ்சு உட்கார்ந்தேன்னா கசங்கிப்போயிடும்,” என்றாள்.

அவன் நகரவில்லை. சோர்வாக இருந்தது. கால்கள் வலியில் துடித்ததால் உட்கார்ந்துவிட்டான். மேலங்கி ஏற்கனவே கசங்கிப்போய் அழுக்காகத்தானே இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். வாரமுழுவதும் அதையேதான் போட்டுக்கொண்டிருந்தாள், வேறெப்படி இருக்கும். நாற்காலியில் இன்னும் சாய்ந்து உட்கார்ந்தான்.

“இங்க பாரு, மேலே எழுந்திரு,” என்று அதிகாரம் செய்தாள்.

“சே, என்ன நரகம் இது!” என்று களைப்புடன் சொன்னபடி நாற்காலியைவிட்டு எழுந்துகொண்டான். “பேசாம சப்வேயிலேயே குடியிருக்கலாம். உட்காரவாவது கொஞ்சம் இடமிருக்கும்.”

அவளுடைய கோபமும் நகைச்சுவை உணர்வும் ஒன்றோடொன்று போட்டிபோடுவதைக் கவனித்தான். நகைச்சுவை உணர்வுதான் வெற்றி பெற்றது என்பதால் கலகலவென்று சிரித்தாள்.

“சரி வா, சாப்பிடலாம்,” என்றாள். அவனைச் சமாதானப்படுத்த முனையும் தொனியிருந்தது குரலில். “வேற ஒண்ணுமில்ல. நீ ஒரு வயிறு பசிச்ச கிழக் கறுப்பன், இருந்தாலும் கடுமையா இருக்கிறா மாதிரி நடிக்கிற,” என்று கொஞ்சம் நிறுத்திவிட்டு கலகலவென சிரித்தபடி தொடர்ந்தாள்,  “நீ-”

அவளுடைய கலகலவென்ற சிரிப்பு இதமாக இருக்குமென்பதால் அவள் சிரிப்பதற்காக எதையாவது சொல்லிவிட்டு அந்த மென்மையான ஒலி அவளின் தொண்டையைவிட்டு வெளியே வருவதற்காகக் காத்திருப்பான். இந்த முறை சிரிப்பொலி அவன் காதில் விழவில்லை. அவள் சொல்லவந்ததை முடிக்கவும் விடவில்லை. அவனுக்கு மிக அருகில் அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்த விநோதமான கிளர்ச்சி மீண்டும் அவனுடைய விரல் நுனியில் ஆரம்பித்து கைகளில் விறுவிறுவென ஏறி அவன் முஷ்டியை அவளின் முகம் நோக்கிச் செலுத்தி ஒரு குத்துவிட வைத்தது.

மென்மையான தசை கடினமான பொருளால் அடிக்கப்படும்போது வரும் சொத்தென்ற ஒலி கேட்டது. அவளுடைய அலறலைக் கேட்டபிறகுதான் அவளை வாயில் அடித்து விட்டோமென்பதையே உணர்ந்தான். எவ்வளவு பலமான அடியென்றால் அவளுடைய கருஞ்சிவப்பு உதட்டுச் சாயம் கலைந்துபோய் வாய்முழுவதும் பின் மேலே மூக்கின் நுனிவரையிலும் கீழே தாடைவரையிலும் கன்னமுழுவதும் எனப் பரவியிருந்தது.

அவளை அடித்துவிட்டோமென்ற புரிதல் அவனுக்குள் மெல்ல கசியத்துவங்கியது. இருந்தாலும் தன்னால் கைகளை அவளுடைய முகத்திலிருந்து பின்னிழுத்துக்கொள்ள முடியவில்லை என்பது திடுக்கிட வைத்தது. அவளை அடித்துக்கொண்டேயிருந்தான். அவனுக்குள்ளிருந்த ஏதோவொன்று அவனை இழுத்துப்பிடித்து இந்தச் செயலோடு பிணைத்துப் போர்வைபோலச் சுற்றி முறுக்கி நிறுத்தாமல் செய்யவைத்தது என்பதைத் திகிலுடன் உணர்ந்தான். கைகளின்மீது தனக்கிருந்த கட்டுப்பாட்டையெல்லாம் இழந்துவிட்டான். தனக்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை விவரிக்க ஒரு சொல்லை, சொற்றொடரை தட்டுத்தடுமாறித் துழாவினான். பிணத்தைப் போர்த்தும் போர்வையைப் போல தன்னை இது சுற்றியிருக்கிறது என்று தோன்றியது—அதே தான்—பிணத்தைப் போர்த்தும் போர்வை. இந்த எண்ணம் மனதில் உருப்பெற்ற பின்னரும்கூட தொடர்ந்து அவன் கைகள் அவளுடைய முகத்தை நோக்கி நகர்ந்தன, மீண்டும் மீண்டும் நகர்ந்துகொண்டே இருந்தன.


கறுப்பர்கள்மூலக்கதையில் நிக்கர் (nigger) என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் கதாசிரியர். Negro என்பதன் மரூஉச்சொல்லான அது, அடிமைகள் என்ற பொருளுடையது. அரைநூற்றாண்டுக்கு முன்வரையிலும்கூடப் பரவலாக நிக்கர் என்ற சொல்லே பொதுவழக்கில் இருந்தது. இனவெறியையும் வெறுப்பையும் உமிழும் சொல்லென்பதால் கறுப்பின மக்களுக்கு தங்களைக் குறிப்பிடுவதற்கு அதைப் பயன்படுத்துவது பிடித்ததேயில்லை. அதற்கு மாற்றாக இப்போது கறுப்பர்கள் (Blacks) அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் (African Americans) போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றையும் எப்போது எங்கே எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். இன நிறப் பாகுபாட்டை நிலைநிறுத்தவோ சுட்டிக்காட்டவோ என்றால் சரியில்லை.


ஆங்கில மூலம்: ஆன் பெட்ரி (Ann Petry)

தமிழில்: கார்குழலி


ஆசிரியர்கள் குறிப்பு:

ஆன் பெட்ரி (1908-1997) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வரிசையில் இருப்பவர்; நாவல்கள், சிறுகதைகள் கூடவே இளம் பருவத்தினருக்கான புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். மருந்தகத் துறையில் பட்டம் பெற்று கனக்டிகட் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தபோது சிறுகதைகளை எழுதத் துவங்கினார். மணமாகி நியூ யார்க்குக்குப் போனபின் கறுப்பர்களும் வெள்ளையரல்லாத மற்ற இனத்தவர்களும் வசிக்கும் ஹார்லெம் என்ற பகுதியில் இயங்கிவந்த ‘ஆம்ஸ்டர்டாம் நியூஸ்’ என்ற செய்தித்தாளில் பெண்கள் பகுதியின் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று இதழியல் துறையில் தன் பணியைத் துவக்கினார். முற்போக்கு அரசியல் நிகழ்வுகளில் ஈடுபட்டதோடு சமூக சேவகர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், கலைஞர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் இருக்கும் மன்றமொன்றில் தன்னை இணைத்துக்கொண்டார். 

ஹார்லெம் வாழ்க்கை பெட்ரிக்குக் கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றவற்றை எழுதுவதற்குத் தேவையான கதைக்களன், புனைவாற்றல் கற்பனை, நாடகம், நிகழ்வு எல்லாவற்றையும் வழங்கியது. சாதாரணமான, சட்டத்தை மதித்து நடக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்க மக்கள்தான் அவருடைய புனைவுகளின் முதன்மைக் கதாபாத்திரங்கள்: கடும் உழைப்பு, மத்திய வர்க்கத்தினரின் விழைவுகள், அமெரிக்கக் கனவில் உறுதியான நம்பிக்கை இவற்றை உடையவர்களாகத்தான் கதையின் துவக்கத்தில் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட மற்றும் அமைப்புசார்ந்த இனவெறியினால் முடக்கப்படுவதாலும் பெண்களென்றால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதாலும் இறுதியில் மனம்விட்டுப்போய், மனங்கசந்து, நம்பிக்கையிழந்து அழிவிலும் வன்முறையிலும் ஈடுபடுபவர்களாக மாறிவிடுவார்கள்.

‘ஒரு பிணத்தின் போர்வையைப் போல’ (Like a Winding Sheet) என்ற இந்தச் சிறுகதை 1946-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே வருடம் வெளிவந்த ‘தி ஸ்ட்ரீட்’ (The Street), பெட்ரியின் முதல் நாவல் என்பதோடு கறுப்பினப் பெண்ணால் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற வகையிலும் சிறப்புப் பெற்றது. ஒரு மில்லியன் பிரதிகள் விற்றதோடு பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசிய, ஜப்பானிய மொழிகளிலும் வெளிவந்தது.

இளம்பருவத்தினருக்கான வரலாற்றுப் புத்தகமொன்றில் பெட்ரி எழுதியதை நினைவுகூர்வது முன்னெப்போதையும்விட இப்போது அவசியமாகிறது: “ காலங்காலமாக கறுப்பர்கள் இந்த நாட்டின் முக்கியமான அங்கமாக இருந்து வந்திருக்கின்றனர். அமெரிக்காவின் உறுதியான அழிக்கமுடியாத அற்புதமான ஒரு அங்கமாக அதன் இதயத்தினுள்ளும் ஆன்மாவினுள்ளும் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”

    • கார்குழலி தற்போது மென்பொருள் நிறுவனமொன்றில் கணினிவழிக் கற்றலுக்கான துறையில் பணியாற்றுகிறார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘சந்தமாமாஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI) துளிர் (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
Previous articleஇராவணத் தீவு – பயணத் தொடர் 3
Next articleஎழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 2
Avatar
கார்குழலி தற்போது மென்பொருள் நிறுவனமொன்றில் கணினிவழிக் கற்றலுக்கான துறையில் பணியாற்றுகிறார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘சந்தமாமா‘ ஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI) துளிர் (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்

7 COMMENTS

  1. ஒதுக்கபட்ட சமூகத்தின் அடிபட்ட ஆழ்மனதின் வலியை அழகாக சொல்கிறது இந்த கதை! வாழ்த்துகள் தோழர்

  2. மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள் தோழர் கார்குழலி! இலகுவாகவும் உயிரோட்டத்துடனும் கொண்டுவந்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! 1946-ல் வந்த கதைபோல தோன்றவே இல்லை. இன்றைக்கும் இந்த வலியும் வேதனையும் நிறையப் பேருக்கு நிதர்சனம்.

    • பஞ்சு மில்லில் வேலை செய்த குடும்ப நண்பரொருவரை நினைவு படுத்துகிறது இந்தக்கதை. எட்டாவதுக்கு மேல் படிப்பைத் தொடர முடியாதது, கறுத்த நிறம் பற்றிய மற்றவர்களின் கேலிகள், 3 ஷிப்ட்டுகள் கொண்ட வேலையால் ஏற்பட்ட உடல், மனச்சோர்வுகள் என சேகரமான எல்லாமும் சேர்ந்து ஒருநாள் குடும்பத்தில் வெடித்த வன்முறை.. அவருடைய கதையை நேரில் பார்த்தது போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பு கதையென்ற உணர்வே வரவில்லை. அருமை.

  3. வாசகர் தளத்திற்கேற்ற பரீட்சயமான பேச்சு வழக்கு உரையாடல்களுடன், மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்பதை நினைவுறுத்தாத வகையில் இரசிக்கத் தக்கதாகவும் செம்மையானதாகவும் அமைந்திருந்தது தங்கள் மொழிபெயர்ப்பு. எல்லா எதிர்கால முன்னெடுப்புகளும் வெற்றிகரமாக அமைய நிறைவான வாழ்த்துகளும், அகமார்ந்த பிரார்த்தனைகளும் தோழி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.