எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 2


எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி உடனான நேர்காணலின் தொடர்ச்சி..!

  • புனைவுகளில் சமகால அரசியலைப் பேசத்தேவையில்லை என்பதுபோல் ஒரு குரல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் அதுபோலொன்று இருக்கிறதா?

சிலர் அரசியலிலிருந்து ஒதுங்கி தூய்மையான இலக்கியவாதிகளாக இருப்பார்கள். இது எல்லாக் காலத்திலும் இருக்கிறது. இந்தியா முழுக்க சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த காலத்திலே கூட அவர்கள் பாட்டுக்கு அவர்களுடைய அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைத்தான் படைத்தார்கள். அது எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது. அது காலத்தின் குரல் இல்லை. படைப்பாளிகளின் தேர்வு. அது அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். புதுமைப்பித்தன் ஏன் அதை எழுதவில்லை? புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? என்று  கேட்பவர்களும் இருக்கிறார்கள். மௌனி ஏன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை என்றெல்லாம் நீங்கள் கேட்கமுடியுமா? ஒரு படைப்பாளி எதை எழுதவேண்டும் என்பதை அவன்தான் தீர்மானிக்கவேண்டும். சின்னப்ப பாரதி அதற்குப் பிறகு வந்த காலத்தில் எழுதிய தாகம் இருக்கிறது. பிறகு இடதுசாரி எழுத்தாளர்களுடைய வரிசை இருக்கிறது. அதே மாதிரி சமகால அரசியலை எழுதலாமா எழுதக்கூடாதா என்பதற்கு தீர்மானமான பதில் கிடையாது. ஒவ்வொரு படைப்பாளியும் முடிவு செய்யவேண்டிய விஷயம். எந்தக் கேள்விக்கும் எப்போதுமே ஒரே பதில் கிடையாது. அரசியலே இல்லாத Apolitical நாவலை மொழிபெயர்க்கலாமா என்ற கேள்வியே அபத்தம். அது ஒரு இலக்கியப் படைப்பாக இருந்தால் நீங்கள் பண்ணலாம். இன்னொன்று, அரசியல் இல்லாதது என்று எதுவுமே கிடையாது. டி.எம்.கிருஷ்ணாவுடைய புதிய புத்தகம் Sebastian and sons வந்துள்ளது. முழுக்க முழுக்க மிருதங்கம் செய்பவர்களைப் பற்றிய புத்தகம்தான் அது. டி.எம்.கிருஷ்ணா உங்களுக்கே தெரியும், அவர் மிகப்பெரிய இசைக் கலைஞர். அவர் ஒரு இசைக்கலைஞராக இருந்தாலும் அது ஒரு அரசியல் புத்தகம்தான். நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான் அது. அரசியல் இல்லாதது எது? அதில் ஜாதி அரசியல் இருக்கிறது. மிருதங்கம் செய்பவர்களைப் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு முன்பு நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. வீணை செய்பவர்களைப் பற்றிய கதைகள் வந்துள்ளன. நாதசுரம் செய்பவர்களைப் பற்றிய புத்தகங்கள் வந்துள்ளன. ராமகிருஷ்ணனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலும் இசைக்கருவிகள் செய்பவர்களுடைய கதையாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த புத்தகத்தில்  ஜாதி அரசியலும் சேர்ந்திருக்கிறது. அந்தத் தோல்… அதைப் பற்றி நீங்கள் பேசினாலே கலரே மாறிவிடுகிறது பாருங்க. அது வெறும் மிருதங்கம் என்ற தாள இசைக்கருவியை எப்படி செய்கிறார்கள் என்னும் கதை அல்ல. யார் அதை செய்கிறார்கள், எங்கிருந்து வருகிறது, அந்த தோல் என்பது என்ன? பசுவை தெய்வமாகப் போற்றுகிற இந்தக் காலக்கட்டத்தில்… இறந்துபோன பசுவை யாராவது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றால் பசுவைக் கொன்றவன் என்று அவனை அடித்துக் கொல்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிட்டதாக நினைத்து ஒரு குடும்பத்தையே அடித்துக் கொலை செய்கிறார்கள். இந்த மாதிரி பசு என்கிற விஷயத்தைப் புனிதமாக்கி, அதை வைத்து பெரிதாக ஒரு அரசியல், இந்துமத எழுச்சியை உண்டாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில்  மிகவும் ஆச்சாரமானப் பின்னணியில் இருப்பவர்கள் விரும்பிக் கேட்கிற  அவ்வளவு புனிதமாக நினைக்கிற கர்நாடக சங்கீதத்திலேயே மாட்டுத்தோலில்தான் தாளம் உண்டாகிறது என்று அவர் சொல்கிறார். இது அரசியல் இல்லாமல் வேறு என்ன? அதிலும் டி.எம்.கிருஷ்ணா தெளிவாகச் சொல்கிறார், “செத்துப்போன மாட்டிலிருந்துதான் அந்த மிருதங்கத்துக்கான தோல் எடுக்கிறார்கள் என்று சில பேர் சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. மிருதங்கம் செய்பவர்களைக் கேட்டுப்பாருங்கள், செத்துப்போன மாட்டினுடைய தோலில் அதன் ரத்தமெல்லாம் உறைந்துபோய் அதைப் பயன்படுத்தவே முடியாது. ஃப்ரெஷ் தோலில்தான் மிருதங்கமே செய்யமுடியும்” என்கிறார். இதைக் கேட்கிற மடியான கர்நாடக இசை ரசிகர்கள் எல்லாம் நெளிவார்கள். இது என்னவெனில் யாரையும் disturb பண்ணுற விஷயமே கிடையாது.  உண்மை  இப்படித்தான்  இருகிறது, ஒவ்வொன்றையும் அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான்.  மிகவும் தூய்மையானது என்று நீங்கள் நம்புவது எதுவுமே கிடையாது. தூய்மை எது என்று நீங்கள் வரையறை எதுவும் செய்யமுடியாது .இதுதான் அடிப்படையான விஷயம். மிகவும் புனிதமானது என்று எதை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உண்மையாகவே உங்களது கற்பனை. அந்த மாதிரி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பி உங்களை நீங்களே ட்யூன் பண்ணிப் பார்க்கிறீர்கள். ஆனால் நிதர்சனம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான். எனவே இது ஏதோ மனத்தில் நஞ்சைக் கலக்குகிற விஷயமெல்லாம் கிடையாது. பார்வை விரிவாகவேண்டும் என்பதுதான். எதையுமே நீங்கள் குதிரைக்கு பட்டா போட்டமாதிரி பார்க்கக்கூடாது என்பதுதான் நோக்கமே தவிர, இதை ஒரு முரணாகப் பார்த்து ஒரு அரசியலுக்காக, ஒரு சர்ச்சைக்காக பண்ணுவதெல்லாம் கிடையாது. டி.எம்.கிருஷ்ணா ஏற்கனவே மிகவும் பிரபலம். அவருக்கு இந்த சர்ச்சையெல்லாம் தேவையே கிடையாது. மொழிபெயர்ப்புக்கும் அதுதான். எல்லா எழுத்துக்கும் அதுதான்.

  •  புனைவை மொழிபெயர்ப்பதற்கும் அபுனைவை மொழிபெயர்ப்பதற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

நிறையே இருக்கிறது. நான் ஆங்கில இலக்கியத்தை கல்லூரிப் பாடத்தில் படித்துவந்தவன் கிடையாது. ரசனை விமர்சனம் மாதிரி நான் ஒரு ரசனை எழுத்தாளர்தான். அபுனைவு என்னும் Non-fiction-ஐ நீங்கள் மொழிபெயர்ப்பது என்பது இலக்கிய மொழிபெயர்ப்பிலிருந்து வேறுபட்ட  விஷயம்தான். எதை நீங்கள் மொழிபெயர்க்கிறீர்கள் என்பதையும் பொறுத்த விஷயம் அது. இப்போது செய்தித்தாள் அலுவலகத்தில் Reuters அல்லது PTI news உங்களுக்கு வருகிறது. அதை நீங்கள் ஒரு தமிழ் நாளிதழுக்காக நியூஸ் எடிட்டரோ சப் எடிட்டரோ தமிழில் மொழிபெயர்க்கிறார். அதை நீங்கள் authentic-ஆக மொழிபெயர்க்கவேண்டும். அதுதான் முக்கியம். அந்த நியூஸ் ஐட்டத்துக்கு பெரிய artistic value எதுவும் கிடையாது. அது ஒரு விஷயத்தை சொல்கிறது. அப்புறம் பாடப் புத்தகங்கள். கல்வி சார்ந்த மொழிபெயர்ப்புகள், செய்திகள், வரலாறு இவை எல்லாவற்றிலுமே புனைவுக்கும் இவற்றுக்கும் இருக்கிற முக்கியமான விஷயம் என்னவென்றால் சொல்லும் வழிமுறை (way of telling). Implied –ஆக இருக்கும் பல விஷயங்கள் புனைவில் உண்டு. சொல்லாத விஷயங்கள், மிகவும் பூடகமான விஷயங்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் புனைவுக்கே உரித்தான விஷயங்கள். இரண்டையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. இரண்டுமே அச்சில் வருகின்றன என்பதால் புனைவும் அபுனைவும் ஒன்று கிடையாது. கண்டிப்பாக அவை chalk and cheese மாதிரிதான். எப்படி பவுலிங்கையும் பேட்டிங்கையும் ஒப்பிட முடியாதோ அப்படிதான் இதுவும். இலக்கிய மொழிபெயர்ப்பாளர் இதை செய்யமுடியாதா என்றால் அப்படியெதுவும் கிடையாது. அவரும் இதைச் செய்யலாம், இவரும் அதைச் செய்யலாம். அதற்கு தகுதியானவராக உங்களை நீங்கள் வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

  •  தடித்த அகராதிகள் பற்றி உங்கள் கருத்து என்ன? உங்களுக்குப் பிடித்த அகராதி எது?

அகராதிகள் எப்போதுமே தேவைக்கேற்றவைதான். என்னிடம் எத்தனை அகராதிகள் இருக்கின்றன என்று பாருங்கள். Original Oxford Dictionary எத்தனை வால்யூம் தெரியுமா? 22 வால்யூம். இப்போது அவற்றை பிரிண்ட் பண்ணுவதே இல்லை. இப்போது மார்க்கெட்டில் இருப்பவை கூட ஏற்கனவே பிரிண்ட் பண்ணப்பட்டவைதான். இப்போது பிரிண்டே கிடையாது. CD ஆகத்தான் வருகிறது. City Bank –இல் அந்த ஒரிஜினல் அகராதியை வாங்குவதற்கு லோன் தருவார்கள் தெரியுமா? சின்னப்பிள்ளைகளுக்கு நர்சரி ஸ்கூல் டிக்க்ஷனரி, ஹை ஸ்கூல் டிக்க்ஷனரி என்றெல்லாம் இருக்கும். அகராதி என்பது ஒன்றில்லை. பலவிதமான அகராதிகள் இருக்கின்றன. அதாவது அகராதி என்பது வருடந்தோறும் புதுப்பித்து வரவேண்டிய ஒரு விஷயம். புதிதாக நிறைய சொற்கள் வந்துகொண்டே இருக்கும். பிரபலமான அகராதி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். மிகப் பிரபலமான அகராதி COD (Concise Oxford Dictionary) என்று சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்து மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அதன் புதிய பதிப்பு வந்துகொண்டே இருக்கும். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதிதாக 200 சொற்கள் உள்ளே சேரும். Obsolete ஆகப் போய்விட்ட பல சொற்களை எடுத்துவிடுவார்கள். ஆனால் சில அகராதிகள் உண்டு. எதையுமே வெட்டாமல் அளவில் பெரிதாகிப் போய்க்கொண்டே இருக்கும். உங்கள் தேவைக்கேற்றபடி அந்த அகராதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மொழிபெயர்ப்பாளர் அகராதி என்றும் ஒன்று உண்டு. தமிழில் அதுபோல் எதுவும் கிடையாது. ஆங்கிலத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் இருக்கும் சூழலை சொல்லாமல் இருக்க முடியாது. இன்றைக்கும் தமிழில் இருக்கிற பெஸ்ட் டிக்ஷனரி என்பது  மெட்ராஸ் யுனிவர்சிடியுடைய டிக்ஷனரி. இதில் மிகவும் பெருமையாக 2010 என்று போட்டிருக்கிறார்களே தவிர உண்மையில் இது 2010-ல் வந்ததில்லை. 1963 -ஆம் வருஷம் வந்தது. அதற்குப் பிறகு இதை திருத்தம் செய்யவே இல்லை. சிதம்பரநாதன் செட்டியார் எடிட்டராக இருந்து உருவாக்கியது. பெரிய டீம் ஒர்க் அது. 1963-இல் எப்படி வந்ததோ அதை மறுபடியும் மறுபடியும் அப்படியே ரீபிரிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு அபத்தம். யோசித்துப் பார்க்கையில் இரத்தம் கொதிக்கும். ஆனால் இன்னும் இதுதான் நல்ல அகராதியாக இருக்கிறது. எப்படி என்றால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிக நல்ல அகராதி. ஒரு சொல்லுக்கு அத்தனை விதமான அர்த்தங்கள் மட்டுமல்ல, அதற்கு நிகராக அவ்வளவு தமிழ்ச்சொற்களைச் சொல்வார்கள். 1963-க்கு பிறகு ஏறத்தாழ அறுபது வருடங்கள் ஆகிவிட்டன. இந்த அறுபது வருடங்களில் எத்தனை புதிய தமிழ்ச்சொற்கள் உருவாகியிருக்கின்றன? எத்தனை ஆங்கிலச் சொற்கள் வந்திருக்கின்றன? அதையெல்லாம் சேர்த்தீர்கள் என்றால் இந்த ஒரு அகராதியை இதைப் போல நான்கு மடங்கு பெரிய அகராதியாக ஆக்கிவிடலாம். இத்தனைக்கும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து, தமிழுக்கென்று ஒரு யுனிவர்சிடி வந்து, தமிழை வைத்தே அரசியல் நடத்திக்கொண்டிருக்கிற இந்த ஒரு சூழலில் up to date ஆன ஒரு தமிழ் அகராதி நம்மிடம் இல்லை என்பதுதான் அவலம். ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்று சொல்வதற்கு மாத்திரம் இல்லை அகராதி. ஒரு அகராதியின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. ஒரு மொழி உயிர்த்துடிப்புடன், உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான அடையாளம்.

 

  • அடுத்தது கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகள் மொழிபெயர்ப்பில் விருப்பம் இல்லாமல் இருக்கிறீர்களா? அல்லது அடிப்படையிலேயே ஆர்வமில்லையா?

நான் நம்புகிற விஷயங்கள் என்று சொன்னேன் அல்லவா? கவிதைகளை மொழிபெயர்க்கமுடியும் என்று நான் நம்பவில்லை. நான் நம்பவில்லை. யாராலும் பண்ணமுடியாது என்று சொல்லவில்லை. காரணம் இரண்டு விஷயங்கள். கவிதையின் கவித்துவத்தை மொழிபெயர்க்க முடியுமா என்று எனக்கு சந்தேகம். இரண்டாவது நான் இயல்பிலேயே ஒரு கவிஞன் கிடையாது. அதனால் I will never indulge in translating a poetry. கவிதையிலேயே தோய்ந்திருக்கிற ஒரு மனம் மிக அழகாக கவிதையை மொழிபெயர்ப்புக்குள் கொண்டுவர முடியும். உதாரணத்துக்கு சுகுமாரன். இயல்பிலேயே அவர் ஒரு கவிஞர். நெருடாவுடைய கவிதைகளை எல்லாம் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் கவிதைகளை நீங்கள் பார்க்கும்போதே தெரிந்துவிடும். அவருக்கு நெருடா அவ்வளவு நெருக்கமான ஒரு கவிஞர். அதனால் நெருடாவுடைய கவித்துவத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் அவரால் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. அது மிகவும் அபூர்வம்தான். பெரும்பாலும் தமிழில் கவிதைகள் மொழிபெயர்ப்பு ஏன் அதிகம் வருகின்றன என்றால் அது மிகவும் சிறியதாக இருக்கிறது. நானும் மொழிபெயர்க்கிறேன் என்று உள்ளே நுழைபவர்களுக்கு எளிது. இருபது பக்க சிறுகதை ஒன்றைக் கொடுத்தால் பெண்டு நிமிர்ந்துவிடும். கவிதையை மொழிபெயர்ப்பது எளிது என்று நிறைய பேர் அதைச் செய்கிறார்கள். ஆனால் அது கவிதையாக இருக்கிறதா என்பதுதான் கஷ்டம். பல பேர் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதையும் பார்க்கிறேன். நிறைய ஆங்கிலப் பேராசிரியர்கள் தமிழில் இருக்கும் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு இறங்கிவிடுவார்கள். அது மிகவும் பயங்கரமாக இருக்கும். ஏன் என்றால் பெரும்பாலும் இந்த மாதிரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு வீட்டில் ஹிண்டு, எக்ஸ்பிரஸ் இவற்றையெல்லாம் படித்துக்கொண்டு வகுப்பில் மாணவர்களுக்கு நோட்ஸ் கொடுத்துக்கொண்டு, காம்போசிஸனை சரியாக இலக்கணப்பிழையின்றி ஆங்கிலத்தில் எழுதித் தருபவர்கள்.   அவர்களால் ஒரு இலக்கியப்பிரதியை கவிதையை மொழிபெயர்க்க முடியும் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் கிடையாது. அது அவர்களுக்குப் புரிவதே கிடையாது. ஆசிரியர்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

 

  •  மொழிபெயர்ப்பாளதன் படிப்படியான பின்னணியை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். உங்கள் முதல் மொழிபெயர்ப்புக்கும் இப்போது நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்புக்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்? அதில் எவ்வளவு சவால்கள் நிறைந்திருக்கின்றன? அதை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?

நிறைய. You always change with your age. நான் வெகு காலமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. 2002 முதல்தான் செய்கிறேன். என்னுடைய ஆரம்பகால மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது அதற்கும் இதற்கும் சில நுட்பமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்னொன்று, நான் போன வருஷம் மொழிபெயர்த்த ஒரு கதையை இந்த வருஷம் கொடுத்து புதிதாக என்னை மொழிபெயர்க்கச் சொன்னால் அப்படியே 100% அப்படியே பண்ணமுடியும் என்று தோன்றவில்லை. நீங்கள் இதை அப்படியே நீட்டித்துக்கொண்டே போகலாம். ஒரு வருஷம் என்று கூட இல்லை. இந்த இடத்தில் பொருத்தமில்லாத ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. இளையராஜாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில்  கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு காட்சிக்கான பின்னணி இசையை எப்படி நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஸ்கிரீனில் நான் பார்க்கும்போது எனக்கு எந்த மியூசிக் தோன்றுகிறதோ அதை நான் அப்படியே எழுதி இசையமைத்திடுவேன் என்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் கேட்கிறார், சரி, அதே காட்சியை அடுத்த நாள் அல்லது அடுத்த வாரம் உங்களுக்குப் போட்டுக் காண்பித்தால் இதே இசையைத்தான் நீங்கள் அமைப்பீர்களா என்றால் இல்லை, கிடையாது. அடுத்த நாள் எனக்கு வேறு மாதிரியாகக் கூடத் தோன்றும். அடுத்த வாரம், அடுத்த வருஷம் வேறுமாதிரியாகத் தோன்றும்  என்றார். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். இது மொழிபெயர்ப்புக்கும் பொருந்தும். இது மனநிலையைப் பொறுத்த விஷயம். Utmost happiness நான் மொழிபெயர்த்து ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது. மொத்தமும் முடித்துவிட்டேன். இப்போது revise பண்ணிக்கொண்டிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் பண்ணிய, நான் மிகச்சரியாக பண்ணியிருக்கிறேன் என்று நினைத்திருக்கிற பல வாக்கிய அமைப்புகளை இப்போது மாற்றித் திருத்திக்கொண்டிருக்கிறேன். இது எதைக் காட்டுகிறது? இதுதான் சரி என்று எதுவுமே நிரந்தரம் கிடையாது. இன்றைய தேதிக்கு நான் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் பண்ணிய வாக்கிய அமைப்பு அவ்வளவு சரியில்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, புத்தகம் வந்ததற்குப் பிறகு, அடுத்தப் பதிப்புக்கு மறுபடியும் நான் படிக்கும்போது சில வாக்கியங்களை மாற்றலாம், மாறும். வே.ஸ்ரீராம் இருக்கிறாரில்லையா? அவர் திரும்பத்திரும்ப அந்நியன ஒவ்வொரு பதிப்பு வரும்போதும் ஒவ்வொரு பதிப்புக்கும் இல்லையென்றாலும் பல முறை திருத்திய பதிப்புதான் வெளிவருகிறது. ஆர்.சிவக்குமாருடைய மொழிபெயர்ப்பு பற்றி சொல்லவேண்டும் என்றால் காஃப்காவுடைய உருமாற்றம் பல வருஷங்கள் கழித்து மறுபடியும் ரீபிரிண்ட் வந்துள்ளது. ரீபிரிண்ட் வந்தபொழுது நிறைய அவர் மாற்றினார்.

 

  • வாசிக்கும்போது மொழிபெயர்ப்பில் நிறைய பிழைகளை இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். அது எந்த அளவுக்கு சரிபிழைகளோடுதான் ஒரு படைப்பை அணுகவேண்டுமா? ஏனென்றால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகுதான் ஒரு படைப்பைக் கொண்டுவருகிறார்கள். வாசிக்கும்போதே நான் பிழைகளைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று வாசிப்பது போன்ற சூழ்நிலை இந்த மொழிபெயர்ப்பில் இருப்பது போல் சின்ன ஒரு எண்ணம்.

இதில் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. இதைப் பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றவேண்டிய அளவுக்கான ஒரு விஷயம். மிகப் பெரிதாகப் போய்விடும். இந்தக் கேள்விக்கான பதில் A, B, C, D என்று நிறைய தளங்களில் சொல்லிக்கொண்டே போகலாம். மிகவும் விரிவாகப் போய்விடும். சுருக்கமாக சொல்கிறேன். அதாவது குறை கண்டுபிடிப்பதற்கென்றே படிப்பவர்களைப் பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். “இவன் என்ன, மொழிபெயர்ப்பாளன்தானே? இவனுக்கென்ன பெரிய இது? இவன் ஒரிஜினலாக எழுதுபவனா?” என்ற எரிச்சல் எல்லோருக்குமே உண்டு. ஒரிஜினலாக எழுதுபவன் எப்போதுமே உசத்தி. இவன் மொழிபெயர்ப்பாளன். ஏற்கனவே எழுதியதைத்தானே தமிழில் கொண்டுவருகிறான். அவனை ஒரு எழுத்தாளன் என்று கூட சொல்லக்கூடாது. He is only a translator என்று சொல்வதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். நான் என்னை ஒரு translator என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் எனக்கு கூச்சமே கிடையாது. Yes, I am a translator. ஹிண்டு பேட்டியில் நான் நாவல் எழுத மாட்டேன் என்றே நான் சொன்னேன். நான் ஒரு படைப்பாளி கிடையாது என்பதில் எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. வெறும் மொழிபெயர்ப்பாளன் என்ற அடையாளத்துடன் இருப்பது எனக்குப் போதுமானது. இது ஒரு விஷயம். ஜெயமோகன், கனடா இலக்கியத் தோட்ட விருதை போயும் போயும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றார். அந்த போயும் போயும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பது எப்படியென்றால் நானெல்லாம் ஒரு படைப்பாளி, ஒரு படைப்பாளிக்குக்  சமமாக ஒரு இயல் விருதை  ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்கிறீர்களே என்ற ஒரு மேட்டிமைத்தனம் . ஒரு கிரியேடிவ் ரைட்டருக்கு, தன்னைவிட   மொழிபெயர்ப்பாளர் ஒரு படி, இரண்டு படி அல்லது மூன்று படி தாழ்வானவன்தான் என்று தோன்றினால் அது அவனுடைய பிரச்சனை. அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. மறுபடியும் கிரிக்கெட் உதாரணத்தைச் சொல்லப்போனால் ஒரு பேட்ஸ்மேன் பவுலரைப் பார்த்து, “நான்தான் ஹீரோ, நான் பேட்டிங் பண்ணுவதற்குதான் எல்லாரும் கை தட்டுகிறார்கள் என்று சொன்னால் பவுலர் சொல்வான், Bowler wins matches. நான் விக்கெட் எடுத்தால்தான் மேட்சை வெற்றிகொள்ள முடியும். அது அப்படியல்ல. பவுலர் உசத்தியா பேட்ஸ்மேன் உசத்தியா என்று ஒன்றுமில்லை. அதே மாதிரிதான். அப்புறம் மொழிபெயர்ப்பில் தப்பு கண்டுபிடிக்கக்கூடாதா என்றால் தாராளமாய்க் கண்டுபிடியுங்கள். அதில் தப்பே கிடையாது. என்னுடைய மொழிபெயர்ப்பிலும் தப்பு கண்டுபிடித்திருக்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் காலச்சுவட்டில் வந்த ரேமன்ட் கார்வருடைய கதையில் ‘nuts’ என்பதை நான் ‘கொட்டை’ என மொழிபெயர்த்தது ஒருத்தருக்குப் பிடிக்கவில்லையாம். அதைப் படித்தவுடனே ஏதோ கெட்டவார்த்தை போல இருந்ததாம். புத்தகத்தை மூடிவைத்துவிட்டாராம். அது அவருடைய பிரச்சனை. கொட்டை என்பது அவருக்கு வேறு ஏதோ ஆபாசமான சொல்லாகத் தெரிகிறதாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொல் எப்படி ஆபாசமாகத் தோன்றுமா இல்லை வேறுமாதிரி தோன்றுமா என்றெல்லாம் பார்த்துப் பண்ணமுடியாது. ஆங்கிலத்திலும் ‘nut’ என்றால் வேறு ஒரு அர்த்தம் உள்ளது. ‘லூசு’ ‘கிறுக்கன்’ என்பதை ‘nut’ என்பார்கள். நான் அதை ‘பருப்பு’ என்றுதான் எழுதியிருக்க வேண்டுமாம். இது ஒரு முடிவிலி. இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்கிறீர்கள். அதே மாதிரி Tobias Wolff –ன் Bullet in the brain சிறுகதை மிக முக்கியமான ஒரு கதை. புதிய எழுத்து மனோன்மணி என்னிடம் அந்தக் கதையை மொழிபெயர்க்கச் சொல்லிக் கொடுத்தார். மிகச்சிறிய கதை. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட விருதுகள் வாங்கிய பரிசு பெற்ற கதை. கதை என்னவென்றால் வங்கியில் ஒரு கொள்ளை நடக்கும். அப்போது அந்த ஹீரோவை வங்கிக் கொள்ளையன் சுட்டுவிடுவான். தலையில் அந்தக் குண்டு பட்டு வெளியில் தெறிப்பதற்கு எத்தனை மைக்ரோ செகண்ட்ஸ் ஆகியிருக்கும்?

இந்தக் கதை முழுக்க அமெரிக்க  வசைச் சொற்கள் நிறைந்திருக்கும்.  குறிப்பிட்ட வட்டாரத்தில், அல்லது ஒரு நாட்டில் மட்டும் புழங்கும் வசைச் சொற்களைத்  மொழிபெயர்ப்பது மிகவும் சிக்கலானவிஷயம். எனவே அவற்றை தமிழில் மிகச்சரியாக சொல்லமுடியாத வசைச்சொற்களை ஆங்கிலத்திலும், ஓரளவு தமிழில் சொல்லக்கூடியவற்றை தமிழிலும் எழுதியிருந்தேன். மிக ஆபாசமான வசனங்கள்தான். ஆனால் அதை அப்படியே நீங்கள் கனலியில் வெளியிட்டிருந்தீர்கள். கனலியில் வெளியிட்டது சரியான வடிவம். ஆனால் முதலில் பலவிதமான சித்திரவதைகளுக்குள்ளானது அந்தக்கதை. எப்படியென்றால் முதலில் ஒரு இலக்கியப்பத்திரிகைக்கு அனுப்பினேன். அந்தப் பத்திரிகை ஆசிரியரும் ஒரு இலக்கியப் படைப்பாளிதான். இதென்ன இவ்வளவு கெட்ட கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன என்று அவர் வெளியிடவே இல்லை. இன்னொரு பத்திரிகையில் பாதி எடிட் செய்து வெளியிட்டார்கள். பண்ணவில்லை. பிறகு உயிர்மையில் அது ஒருமாதிரி sanitize செய்யப்பட்டு வெளிவந்தது. இந்த மாதிரியான தமாஷ் எல்லாம் நடந்தது. அதில் என்மேல் ஒரு விமர்சனமும் வந்தது, நான் சரியாக அந்தச் சொற்களை மொழிபெயர்க்கவில்லை என்று. என் கையை மீறி நடந்த விஷயம். இதற்கெல்லாம் நான் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. மொழிபெயர்ப்பை மூலத்தோடு ஒப்பிட்டு விமர்சிப்பது தப்பே கிடையாது. ஆனால் “நீ சொன்ன ஒரு வார்த்தை எனக்கு அப்படியே கூச்சத்தை ஏற்படுத்துது. கொட்டைன்னு எழுதிட்டியேப்பா” என்பதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.

  • அப்ப மொழிபெயர்ப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை என்று சொல்கிறீர்களா?

மொழிபெயர்ப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையே அல்ல. ரஷ்ய கிளாசிக்குகளின் மொழிபெயர்ப்புகள் பற்றி நபக்கோவ் விமர்சிக்காததா?  காஃப்காவுக்கு எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன.  மோசமான மொழிபெயர்ப்புகள் என்பவை இன்னொரு விஷயம். நுட்பமான வாசகனுக்கு அதைப் படிக்கும்போதே கண்டுபிடித்துவிட முடியும்.  மொழிபெயர்ப்பை படிப்பது வறட்சியாக இருக்கிறது, மனத்தில் ஒன்றவே இல்லை என்பவையெல்லாம் பொதுவாகவாசகர்களிடம் இருக்கும் மேம்போக்கான கருத்து. Again, இதைப்பற்றி பேசினால் மிகவும் விரிவாகப் பேசவேண்டியிருக்கும். நானும் நிறைய எழுதியிருக்கிறேன். Spoon feeding மாதிரியே எல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. நான் கவனித்தவரையில், தமிழ்வாசகர்களுக்கு, ஆங்கிலத்தில் ஒரு கதையோ கட்டுரையோ எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதில் அவர்களுக்கு பிரச்சனையே இல்லை, சந்தோஷமாக படித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதையே நீங்கள் தமிழில் சொல்லும்போது மிகவும் எளிமையாக, இருந்தால்தான்  அது சரியான மொழிபெயர்ப்பு என்றொரு நம்பிக்கை இருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென்று அவர்கள் மனத்துக்குள் ஒரு அளவுகோல் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்படியென்றால் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும்.  தமிழ்நாவல் படிப்பது போலவே இருக்கவேண்டும். எளிதில் புரியும்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் பா.வெங்கடேசனிடம் சொல்வீர்களா? பிரம்மராஜனிடம்? கோணங்கியிடம்? சொல்லமுடியுமா? கோணங்கியுடைய எழுத்தை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது. பா.வெங்கடேசனுடைய தாண்டவராயன் கதையை மிகவும் கடினமாக இருந்தாலும்  அது அவருக்கேயுரிய தனித்துவ நடை என்று உங்களால் ரசிக்கமுடிகிறது. ஆனால் ஓரான் பாமுக் கதையை எளிதாகப் படிக்க முடியவில்லை என்கிறீர்கள். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். இதைப்போல மொழிபெயர்ப்பு மிகவும் கடினமாக இருக்கிறது என்று இலங்கைத் தமிழ் வாசகர்கள் யாரும் என்னிடம் சொன்னதேயில்லை. புகார் சொல்வதெல்லாம் மெயின்லேண்ட் தமிழர்கள்தான். எனக்கென்னவோ,  பாமுக் மொழிபெயர்ப்புகளுக்கு இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும்தான் அதிக வாசகர்கள் இருக்கிறார்களோவென்று தோன்றும். ஒரு மொழிபெயர்ப்பு எளிமையாக இருப்பதையும் கடினமாக இருப்பதையும் மொழிபெயர்ப்பாளர் முடிவு செய்வதில்லை. மூலப்படைப்பு முடிவு பண்ணுகிற விஷயம். என்னுடைய நண்பர் மறைந்த கவிஞர் நா,முத்துக்குமார் திரைப்படப் பாடலாசிரியர், நிறைய வாசிப்பவரும் கூட. அவர் மறைவதற்கு சில நாட்கள் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் ஒரு கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். “ஜி.கே. நீங்க முரகாமியை மொழிபெயர்க்கும்போதெல்லாம் சரியாக பண்ணுறீங்க. ஆனால் பாமுக்கை பண்ணும்போது என்னால் உள்ளே நுழையவே முடியவில்லை” என்றார். நானும் முத்துக்குமாரும் கடைசியாக சந்தித்துப் பேசிய அந்த உரையாடல் சண்டையில்தான் முடிந்தது. இன்னமும் என்னை உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் அது.  இறந்து போகப்போகிறார் என்று எப்படித்தெரியும்? நண்பர் அவர். “முரகாமியின் மொழிபெயர்ப்பு எளிமையாய் இருப்பதற்குக் காரணம், நான் முரகாமிக்கென்று தனி பேனா, தனி கையால் எழுதுவதில்லை. பாமுக்குக்கென்று தனி பேனா, தனி கை என்று என்னிடம் இல்லை. நீங்கள்படித்தவர்தானே? முரகாமியையும் பாமுக்கையும் ஆங்கிலத்தில் படிங்க. இருவரும் ஒரே மாதிரியாகவா எழுதுகிறார்கள்? மொழிபெயர்ப்பு என்பது உங்களுக்குப் பாடம் நடத்துவது கிடையாது. முரகாமியையும் பாமுக்கையும் சிலபஸ்ஸில் வைத்து நானொரு ஆங்கில விரிவுரையாளனாக கல்லூரியில் இருந்தால் அந்த மாணவர்களுக்கு நான் அந்தக் கதைகளை எளிமையாக விளக்கி அவர்களுக்கு நோட்ஸ்கூட கொடுப்பேன். ஆனால் ஒரு வாத்தியார் பண்ணும் வேலை கிடையாது, ஒரு மொழிபெயர்ப்பாளனின் வேலை” என்று சொன்னேன். அவர் சமாதானமாகவில்லை.

இன்னொன்று இருக்கிறது. அதைச் சொல்லவே சங்கடமாக உள்ளது. வாசகர்கள் பலருக்கும் ஒரு மோசமான மொழிபெயர்ப்புக்கும், சிறப்பாக செய்யப்பட்ட ஒரு கடினமான நாவலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை உணராமல் இருப்பது. . உடைந்தகுடை – மிகவும் கடினமான ஸ்கிரிப்ட். மூலமே மிகவும் கடினமானது. அதைப் படிக்கவே முடியவில்லை என்று ஆரம்பநிலை வாசகன் சொன்னால் புரிந்துகொள்ளலாம். ஆனால் சில எழுத்தாளர்களே அப்படிச் சொல்வது  வியப்பாக இருக்கிறது. வாசிப்புப் பயிற்சியற்ற ஒருவன் ஏதோ ஒரு முன்தீர்மானத்துடன் புதக்கத்துக்குள் வருகிறான். இது என்ன உள்ளேயே நுழைய முடியவில்லையே என்று அவனுக்குத் தோன்றுவது இயல்பானது. ஆனால் இலக்கிய வாஸகர்கள் சிலரும் அப்படிச் சொல்வது நம்மிடியே ஒரு மொழிபெயர்ப்பை எப்படி அணுகுவது என்ற பார்வை இல்லாததே என்று எனக்குத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அது மிகவும் authentic –ஆன ஒரு மொழிபெயர்ப்பு. என்னுடைய மொழிபெயர்ப்பையே ஒரு authentic மொழிபெயர்ப்பு என்று உதாரணமாகச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது, வேறு வழியில்லை.   மிகச்சரியாக செய்யப்பட்ட மிகக்கடினமான மொழிபெயர்ப்பு ஒன்றை எடுத்துக்கொள்வோம்.  அதை சரியாகத்தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  ஆனால் அதை வேகமாக வாசிக்கும்போதே எளிமையாக வெள்ளிடைமலை போல புரியவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் மூலப்படைப்பே சிக்கலான நடையில் இருக்கும். ஆனால் மோசமான மொழிபெயர்ப்பின் விஷயமே வேறு. அந்த மொழிபெயர்ப்பாளருக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரிந்திருக்காது,  மூலத்தையும்சரியாகஉள்வாங்கியிருக்கமாட்டார்,  அவருக்கு தமிழும் ஒழுங்காக எழுதத் தெரிந்திருக்காது. இதற்கு உதாரணங்கள் நிறைய சொல்லலாம். வாக்கிய அமைப்பு கடாமுடாவென்று இருக்கும், அவருக்கு சரியாகப் புரியாத இடத்தை ambigousஆக, குழப்படியாக மொழிபெயர்த்திருப்பார், அல்லது சொந்தமாக எதையாவது உத்தேசமாக எழுதியிருப்பார்.   மூலத்தில் அந்த மாதிரியெல்லாம் இருந்திருக்கவே இருந்திருக்காது. இது எதுவுமே தெரியாத ஒரு வாசகருக்கு மோசமாக மொழிபெயர்க்கப்பட்ட பிரதியும், சரியாக மொழிபெயர்க்கப்பட்ட கடினமான பிரதியும் ஒன்றாகத்தான் தெரியும். ஆனால் நுட்பமான வாசகனுக்கு இது மொழிபெயர்ப்பில் இருக்கும் கோளாறு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். எல்லோராலும் முடியாது. ஒரு மொழிபெயர்ப்பு படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் அதற்குப் பின்னால் பல விஷயங்கள் இருக்கும். அந்த ஸ்க்ரிப்ட் அப்படி இருக்கலாம் அல்லது மொழிபெயர்ப்பாளர் மோசமாக இருக்கலாம்.


 

  • கண்டிப்பாக சார். இன்னொரு கேள்வி. நாவல் எழுதுவதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். இந்து பேட்டியில்கூட சொல்லியிருந்தீர்கள், நாவல் எழுதமாட்டேன் என்று. அதைப்பற்றியதுதான். மொழிபெயர்ப்பைத் தவிர்த்து சுயபடைப்பாக நாவலோ, சிறுகதைத் தொகுப்போ எழுத வாய்ப்பிருக்கிறதா? அதோடு இன்னொரு கேள்வியும். பெரும்பாலான எழுத்தாளர்கள் நிலத்தை அடிப்படையாய் வைத்துதான் எழுதுகிறார்கள். நீங்கள் ஆரணி என்ற இந்த ஊரில் பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே இருக்கிறீர்கள். இதை அடிப்படையாய் வைத்து ஒரு நாவலோ அல்லது தொகுப்போ எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? கனவுகள் இருக்கின்றனவா?

மிகவும் பர்சனலான ஒரு இடத்தைத் தொட்டுவிட்டீர்கள். உண்மையிலேயே இருக்கிறதுதான். நான் நாவல் எழுதமாட்டேன் என்றும் சொன்னதற்குக் காரணமே திமிர்தான். ஏனென்றால் படைப்பாளிகளுள் மொழிபெயர்ப்பாளனை ஒரு இரண்டாந்தரக் குடிமகன் மாதிரி பேசுவதைக் கேட்பதால் உண்டான எரிச்சல், அதனால்தான், நீ என்னய்யா என்னை இரண்டாந்தரக் குடிமகன் என்று சொல்வது? நானேசொல்கிறேன். நான் வெறும் மொழிபெயர்ப்பாளன்தான். இதி எனக்கு எந்த இழிவும் இல்லை, இதை சொல்லிக்கொள்வதில் எந்தக் கூச்சமும் இல்லை. பல மொழிபெயர்ப்பாளர்கள் விரைவில் சொந்தமாக ஒரு பெரிய நாவல் எழுதப்போகிறேன், பார்த்துக்கொண்டெ இருங்கள், என்பார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே சொந்தப் படைப்பில் ஆர்வம் இருக்குமென்றால் ஓகே. ஆனால்  வெறும் மொழிபெயர்ப்பாளன் என்று அழைக்கப்படுவதால் ஏற்பட்ட கூச்சத்தில் சொல்வதாக இருந்தால் அது அபத்தம். அது என்ன பதவி உயர்வா? ஒரு மொழிபெயர்ப்பாளர் நாவல் எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் பதவி உயர்வெல்லாம் கிடையாது.

நீங்கள் சொன்னது போல நிலம் சார்ந்த சில விஷயங்கள் எனக்கு இருக்கின்றன. இந்தநிலத்திலேயே பிறந்து வளர்ந்தஎனக்கு எப்படி இல்லாமல் இருக்கும்? சில இடங்கள் உள்ளன. படைவீடு அமைந்திருக்கும் நிலப்பரப்பே அலாதியானது. சரித்திர எச்சங்களும், புனைவுகளுக்கான கூறுகளும் கொடிக்கிடக்கும் ஸ்தலமாகத் தோன்றும். மிகவும் முக்கியமான இன்னும் ஒரு இடம் சத்ய விஜய நகரம். ஜாகிர்தாருடையவரலாறு இன்னும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவே இல்லை. அது  எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிற ஒரு விஷயம். அவர்களுடைய பங்களா தெரியுமல்லவா, அதற்குப் பின்னாலிருக்கும் சரித்திரம் பெரியது. அவர்களுடைய பூசிமலைக் குப்பம் கண்ணாடி பங்களா  அலாதியானது. அதன் பின்னால் ஒரு மகத்தான நாவல் இருக்கிறது. ஜாகிர்தாருடைய பேத்தி சம்ஹிதா ஆரணி ஆங்கிலத்தில் எழுதும் ஒரு முக்கியமான எழுத்தாளர். என் நண்பர். அவளைக் கூட்டிவந்து  அவள் மூதாதையர்களின் அரண்மனையையும் பூசிமலைக்குப்பம் பங்களாவையும் காண்பித்தேன். உண்மையில் அந்த நாவல் அவள் எழுத வேண்டியது. அவளுடைய கொள்ளுப்பாட்டனார் சம்பந்தப்பட்ட வரலாறுதான் அது. ஆனால் அவள் எழுதுவாளா என்று தெரியாது. என்னை எழுதச் சொல்வாள்.  இன்னும்சிலவிஷயங்கள்உள்ளன. புராணத்தில் கிருஷ்ணன் பாத்திரம் என்னை மிகவும் வசீகரிப்பது பல வருஷங்களாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் விஷயம் அதில் உண்டு.  சொல்லமுடியாது, எழுதலாம், எழுதாமலும் போகலாம். அதையெல்லாம் கமிட் பண்ணிக்கொள்ளவே முடியாது.

  • புதிதாக நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

புது எழுத்தாளர்களுக்கு சொல்வதற்கென்று எதுவும் கிடையாது. நான் சொன்னால் அவர்கள் கேட்கப்போகிறார்களா, என்ன?

  • அதே நேரத்தில் உங்களுடைய சமகால மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

நிறையப் படிக்கவேண்டும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அடிப்படைத் தேவை, தகுதி என்னவென்றால் அவர் நல்ல கூரறிவுடைய வாசகராக இருக்கவேண்டும். இரண்டு மொழியிலும் அவர் திறமைசாலியாய் இருக்கவேண்டும். மேலும் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். எல்லாவற்றையும் படிக்கவேண்டும் என்றால் எல்லாவிதமான எழுத்துக்களையும் படிக்கவேண்டும். இரண்டு மொழியிலும் திறமைசாலியாய் இருக்கவேண்டும் என்பதை நான் அழுத்திச் சொல்லக் காரணம், நிறைய மொழிபெயர்ப்புகளில் நான் பார்க்கிற, பரிதாபத்துக்குரிய தவறுகள் என்னவெனில் idioms & phrases இவற்றையெல்லாம் idioms & phrases என்று தெரிந்துகொள்ளாமலேயே அதை லிட்ரலாக மொழிபெயர்க்கும் அபத்தமெல்லாம் இருக்கிறது. இந்த மாதிரியான பல உதாரணங்களை சொல்லலாம். நகைச்சுவையாகவே ஒரு கட்டுரை எழுதிவிடலாம். அது சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களையெல்லாம் புண்படுத்துவது போல இருக்கும். நான் ஒரு உதாரணம் சொன்னால், யார் அதை மொழிபெயர்த்தது என்று கொஞ்சம் கஷ்டப்பட்டால் கண்டுபிடித்துவிடலாம். யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. விஷயம்.  என்னுடைய மொழிபெயர்ப்பிலிருந்து கூட யாராவது கண்டுபிடித்து சொல்லலாம். நான் மட்டும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனா, என்ன? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.

  • சமகாலத்தில் உங்களுடன் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? அவர்களுடைய மொழிபெயர்ப்பைப் பற்றி அல்ல, இவர்கள் எல்லாம் மொழிபெயர்க்கிறார்கள் என்பதைப் பற்றி. கண்டிப்பாக நீங்கள் அவர்களையெல்லாம் பார்த்திருப்பீர்கள்.

ஆமாமாம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் ஒவ்வொரு மாதிரி. சத்தியமூர்த்தி ரூமியுடைய கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். மிகுந்த சிரத்தை எடுத்துப் பண்ணியிருந்தார். மிகவும் பிரமாதமான மொழிபெயர்ப்பு. நான் மிகவும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர். அதிகமாக அவர் பண்ணுவதில்லை. கார்த்திகைப் பாண்டியன், கணேஷ் ராம் என்று நிறைய பேர் சின்சியராக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். தமிழில் நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் வருவதே மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஒவ்வொரு கல்குதிரை இதழ் வரும்போதும் அதில் எத்தனை புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நிறைய பெண்கள், லதா அருணாசலம், ஷாகிதா இவர்களெல்லாம் மொழிபெயர்க்க வருகிறார்கள். முன்பெல்லாம் மொழிபெயர்ப்பில் சீனியர்ஸ் அமரந்தா, லதா ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் பெரிய அளவில் இல்லை. இப்போது நிறைய பேர் வருகிறார்கள். கடினமான உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கியத் தேவைகள்.  வெறும் ஆர்வம் மட்டும் போதாது.  ஏதோ கையில் கிடைத்தது, நான் பிரவுஸ் பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு எழுத்தாளர் பற்றிய குறிப்பைப் பார்த்தேன். அதைக் கிளிக் பண்ணினால் அவர் எழுதிய ஒரு கதை வந்தது. அதை நான் படித்தேன். அதை நான் மொழிபெயர்த்துவிட்டேன் என்பதெல்லாம் சரியில்லை. நான் ஒரு எழுத்தாளரை மொழிபெயர்ப்பதாக இருந்தால் அந்த எழுத்தாளரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இது நான் நம்புகிற விஷயம். எல்லாருக்கும் பொருந்தும் என்றில்லை. கிட்டத்தட்ட அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் நீங்கள் படித்திருக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர் என்பது முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். அவருடைய நடை, தொனி, உத்திகள் இவற்றை முற்றிலுமாக உள்வாங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் நான் அப்படிதான் செய்வேன்.  நான் மொழிபெயர்த்திருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் முழுமையாக அறிந்துகொண்ட பிறகுதான் அவர்களுடைய படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். Dag Solstad –க்கு ஆங்கிலத்தில் நிறைய மொழிபெயர்ப்புகள் வந்திருக்கவில்லை. அவருடைய Shyness and dignity-ஐ நான் மொழிபெயர்க்கும்போது நார்வேயில் அவர் மிகப் பிரபலமான எழுத்தாளராக இருக்கலாம். ஆங்கிலத்தில் அவருடைய மூன்று புத்தகங்கள்தான் வந்திருக்கின்றன. அவை எல்லாவற்றையும் வாங்கிப் படித்துவிட்டு, இணையத்தில் அவரைப் பற்றி வந்துள்ள குறிப்புகள், அவர் அளித்த பேட்டிகள் என்று கிட்டத்தட்ட இருநூறு பக்கங்களை டவுன்லோட் செய்துவைத்துக் கொண்டு படித்து முடித்த பிறகுதான் உடைந்த குடையை மொழிபெயர்க்கத் தொடங்கினேன்

 

  •  இலக்கியத்தை நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டும் இல்லாமல் வாசகராகவும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறீர்கள். தமிழிலக்கிய சூழல் இப்போது எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 ப்ளஸ், மைனஸ் என இரண்டுமே சொல்லலாம். 90களுக்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் வந்தது. 90களின் ஆரம்பத்தில் வந்த உலகமயமாக்கல் தமிழ் வாசிப்பு தளத்திலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய கல்லூரி நாட்களில் இதுபோல் சீரியஸ் பத்திரிகைகள், சீரியஸ் லிட்டரேச்சர் என்பது மிக மிக சிறிய வட்டம். அது வெளியுலகத்தில் யாருக்கும் தெரியவே தெரியாது. ஊரீஸ் கல்லூரியுடைய தமிழ் விரிவுரையாளர்களிடமே நான் “சுந்தர ராமசாமி தெரியுமா உங்களுக்கு? அசோகமித்திரன் தெரியுமா? ஜி.நாகராஜன் தெரியுமா?” என்றெல்லாம் வம்பு பண்ணிக்கொண்டிருப்பேன்.  மிகவும் ஃப்ரெண்ட்லியான லெக்சரர்ஸ் இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒருவரையுமே தெரியாது. நான் பிரசிடென்சியில் எம்எஸ்ஸி சேர்ந்தவுடனே முதல் வேலையாக தமிழ்த்துறைக்குச் சென்று  மு.மேத்தா -பாவம், நல்ல மனிதர் –   அவரை தேவையில்லாமல் சீண்டுவேன். “நீங்க எழுதறதெல்லாம் கவிதையே கிடையாது” என்பேன். விஷயம் என்னவென்றால் இந்த தீவிர இலக்கியம் என்பது யாருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ரகசியக் குழு மாதிரி மிகவும் சின்ன வட்டத்தில் மட்டுமே இயங்கிவந்தது. வெளியில் யார்க்கும் தெரியவே தெரியாது. வெளியில் மிகவும் ஜகஜோதியாக வெகுஜன இலக்கியவாதிகள் எல்லார்க்கும் தெரிந்தவர்களாக இருந்தனர். பாக்கெட் நாவல்கள் வந்துகொண்டிருந்தன. சுஜாதா எல்லாம் பெரிய ஸ்டார்.  பாலகுமாரன்…. ஹைய்ய்யோ..! என்று நிறைய கல்லூரிப் பெண்கள் உருகிக் கொண்டிருப்பார்கள்.  இவர்களை எல்லாம் மிகவும் இளக்காரமாகப் பார்த்துக்கொண்டு, தலையில் கொம்பு முளைத்த சின்ன குரூப் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தோம். தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை தீவிர இலக்கிய வாசகர்கள்  இருப்பார்கள்? ஒரு இரண்டாயிரம் பேர் இருப்பார்களா? என்று பேசிக்கொண்டிருப்போம்.  நிறைய பத்திரிகைகள் திடீர் திடீரென  வரும். மீட்சி, பாலம்,  ழ, கவனம், நிமிடம், கசடதபற இந்த மாதிரியான மிகவும் முக்கியமான பத்திரிகைகள் கொஞ்சகாலம் தாக்குப் பிடிக்கும். பிறகு மறைந்துவிடும். இந்த மாதிரியான சூழல்தான் எப்போதுமே இருந்தது. ஆனால் ஒரு பத்திரிகை எவ்வளவு காலம் நீடித்து நிலைத்து இருந்தது என்பதல்ல விஷயம். தமிழ் இலக்கிய உலகை உயர்த்திப் பிடித்தது, பல அற்புதமான படைப்பாளிகளை உருவாக்கியதும் இந்தச் சிறு பத்திரிகைகள்தான். வெகுஜன இதழ்கள் அல்ல. ழ, கவனத்திலெல்லாம் ஆத்மாநாம், ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகள் எல்லாம் தமிழ்க்கவிதைகளுடைய landmark ஆக இருந்திருக்கின்றன. பிரம்மராஜன் செய்த விஷயங்கள் எல்லாம் இருக்கே, வண்ணதாசனுடைய அற்புதமான கதைகளை எல்லாம் வெளியிட்டிருந்தார். எவ்வளவு முக்கியமான எழுத்தாளர்களை எல்லாம் பிரம்மராஜன் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் பிரம்மராஜன் என்ற பெயரும், சுந்தர ராமசாமி எண்பதுகளின் கடைசியில் நடத்திய காலச்சுவடும் வெளியில் யாருக்குமே தெரியவே தெரியாது. அசோகமித்திரன் அவ்வளவு பெரிய அற்புதமான எழுத்தாளர். உலக எழுத்தாளர். அவர் பெயர் எத்தனைப் பேருக்குத் தெரியும்? தெரியவே தெரியாது.  ஜேஜே சில குறிப்புகள் வந்தபொழுது ஒரு பெரிய அலை ஏற்பட்டது என்று திருப்தியாக சொல்லிக் கொள்ளலாம். ஒரு பெரிய அலை என்றால் a storm in the tea cup தான் அது. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்கும் ஜேஜே சில குறிப்புகள் தெரிந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. சீரியஸ் இலக்கிய வட்டாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. சாரு நிவேதிதா அதை விமர்சித்து அவர் ஒரு புத்தகமே போட்டார். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஒரு சின்ன குழுவுக்கு நடுவில்தான் நடந்துகொண்டிருந்தது. இப்படிதான் இருந்தது 90 வரைக்கும். 90-களுக்குப் பிறகு அரசியல்ரீதியாக பல விஷயங்கள் மாறின. புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் அதெல்லாம் நடக்கும்போது தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கில்லையா, அதிலும் நிறைய மாற்றங்கள் வந்தன.  காட்சி ஊடகங்கள் பெரிய அளவில் உள்ளே வருகின்றன.  பின்னாலேயே இணையம். உடனடி பாதிப்பு எதில் வருகிறது என்றால் இந்த மாதிரி பொழுதுபோக்கு, மேம்போக்கான இலக்கியங்கள், வெகுஜன இலக்கியங்கள் இவைதான் முதலில் பாதிக்கப்படுகின்றன. எப்படி என்றால் பாக்கெட் நாவல்கள் படித்துக்கொண்டிருந்தவர்களிடம் திடீர் வீழ்ச்சி ஏற்படுகிறது. இன்னமும் பாக்கெட் நாவல்கள், மாமிகள் எழுதிய புத்தகங்கள் எல்லாம் நிறைய விற்கின்றன என்று சொல்வார்கள். அதற்கென்று வாசகர்வட்டம் இருக்கிறது. கிண்டிலில் கூட நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. நாம் சும்மா கிண்டலாக மாமி நாவல் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால் இந்த மாமி நாவல்கள் விற்கின்ற எண்ணிக்கையைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். இதெல்லாம் எங்கேயிருந்து இப்படி விற்கிறது என்று. அது வேறு கதை. ஆனால் இப்போது நீங்கள் ஆனந்தவிகடனையே எடுத்துக்கொள்ளுங்க. ஒரு நான்கு தொடர்கதை விகடனிலும் குமுதத்திலும் வந்துகொண்டிருக்கும். அந்த இடத்தை தொலைக்காட்சித் தொடர்கள் replace பண்ணிவிட்டன. இப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே ஒரு சிறுகதை, ஒரு தொடர்கதை என content மாறிவிட்டது. Non-fiction அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் எல்லாம் மாறிவிட்டன. நீங்கள் 1970s விகடன் ஏதாவது பழைய பிரதி இருந்தால் எடுத்துப் பாருங்க. இப்போதுள்ள ஆனந்தவிகடன் எடுத்துப் பாருங்க. எத்தனைப் பல்சுவைக் கட்டுரைகள் இப்போதிருக்கும் ஆனந்த விகடனில் இருக்கின்றன, 70-களில் எப்படி இருக்கின்றன என்று பாருங்க. குமுதத்தில் முப்பத்தாறாம் பக்கம் மூலை என்று ஒன்று இருக்கும். மேலும் மேலும் சிறுகதைகள், தொடர்கதைகள், சரித்திரக் கதை அது மாதிரி எதுவுமே இல்லை. இது ஒரு பெரிய மாற்றம். இதற்கு காட்சி ஊடகங்கள், தொலைக்காட்சி வந்தது முக்கியக்காரணம். அடுத்தது இணையம். இணையம் வந்ததும் இலக்கிய உலகை ஜனநாயகப் படுத்திவிட்டது. எப்படி என்றால் எங்களுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த இரண்டாயிரம் பேர் கொண்ட குழு இருக்கிறதல்லவா, அந்த குழுவுக்குள் நிறைய encroachment வந்துவிட்டது. உண்மை அதுதான். எல்லாரும் எழுதுவது எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதை நீங்க நல்லது என்றும் சொல்லலாம். கெட்டது என்றும் சொல்லலாம். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. சுந்தர ராமசாமியின் புத்தகங்களும் அசோகமித்திரனின் புத்தகங்களும் எவ்வளவு விற்றிருக்கின்றன, அசோகமித்திரனுக்கு அது புரியவே இல்லை. கவிதாவில் அவருடைய சிறுகதைத் தொகுப்பை இரண்டு வால்யூம்களாக போடப்போகிறேன் என்று சொன்னபோது அவர் almost கவிதா சொக்கலிங்கத்தை கையைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார், “இந்த மாதிரியெல்லாம் பண்ணி கையை சுட்டுக்காதீங்க, இவ்வளவு விலை வித்தால் எங்கே என் புத்தகங்கள் விக்கும்? விக்கவே விக்காது. லட்ச ரூபாய் முதலீடு செய்வீங்க போலிருக்கே, வேண்டவே வேண்டாம்.” என்றார். “அதெல்லாம் விக்கும். நீங்க சும்மா இருங்க” என்று அடக்கிவிட்டு அவர் அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுதி 1, 2 என்று போட்டார். மொத்தமும் விற்றுவிட்டன. அடுத்தப் பதிப்புக்காக அவரிடம் ராயல்டியைக் கொடுத்துவிட்டுக் கேட்டபோது அசோகமித்திரன் அதிர்ந்துவிட்டார். “என்னது, என் புஸ்தகம் அத்தனையும் வித்துடுச்சா? ஆயிரத்து இருநூறு காப்பியும் வித்துடுச்சா? ஏன் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது?” என்றார். அவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்றைக்கும் காலச்சுவடு பதிப்பகத்தில் ஒவ்வொரு வருஷம் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் அதிகமாக விற்கிற நாவல்கள் புளியமரத்தின் கதையும் ஜேஜே சில குறிப்புகளும்தான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் இந்தப் பெயர்களெல்லாம் ஒரு சிலர் மட்டுமே அறிந்த பெயர்களாக இப்போது இல்லை. இப்போது நிறைய சீரியஸ் ரைட்டர்ஸ் எல்லாம் blog எழுதுகிறார்கள். ஆனால் எனக்கு ஒரு தியரி இருக்கிறது. அதைக் கேட்டால் நிறைய பேருக்கு கோபம் வரலாம். அதாவது இந்த வெகுஜன எழுத்தாளர்களுடைய சதவீதம் இருக்கிறதல்லவா, அது always remains the same. மக்கள்தொகைக்குத் தகுந்தபடி அந்த இரண்டாயிரம் என்பது ஐந்தாயிரமாக மாறியிருக்கலாம். ஜெயமோகனுடைய தளத்தைப் படிக்கிற எல்லாருமே நுட்பமான வாசகர்கள் என்பதை நம்ப நான் தயாராக இல்லை. ஜெயமோகனே நுட்பமான எழுத்தாளரா என்பது அடுத்தக் கேள்வி. இப்போது ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா எல்லோரும் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்களுடைய பெயர்கள் பிரபலமாக எல்லாருக்கும் தெரிகிறது. எல்லோரும் படிக்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால் names-dropping இப்போது அதிகமாகிவிட்டது. உண்மையாகவே இப்போது இருக்கும் வாசகர்கள் சீரியல் ரைட்டர்ஸ் உடைய பெயர்களைத் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு உண்மையான ஆழ்ந்த வாசகர்களா என்ற சந்தேகம் இருக்கிறது.  ஆழமான வாசிப்பு இல்லாமல் சும்மா விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொள்கிறார்கள். அதில் என்னவோ எழுதுகிறார்கள். மிகவும் தெனாவெட்டாக பதிவுகள் போடுவது இதெல்லாம் பார்க்கும்போது சீனியர்ஸ்க்கு சிரிப்புதான் வருகிறது. டேய் நீயெல்லாம் என்னடா, நானெல்லாம் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்பதெல்லாம் அர்த்தமே இல்லை. இது உலகளாவிய ஒரு விஷயம். ஒரு சீரியஸ் புத்தகம் எல்லார்க்கும் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே. இன்டர்நெட் என்பதில் சாக்கடையும் இருக்கிறது, அற்புதமான விஷயங்களும் நிறையக் கிடைக்கின்றன. அதே மாதிரிதான். ஃபேஸ்புக்கோ, எதில் வேண்டுமானாலும் பாருங்க. நல்ல விஷயங்கள் வரும். மெஜாரிடி வேறு மாதிரிதான் இருக்கும். நீங்க தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும். வாசிப்பிலும் அதேதான். ஜெயமோகனை ஆசான் என்று கொண்டாடி ஒரு பெரிய குரூப்பே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிரிப்பாக இருக்கிறது. அவருக்கு அது தேவையாக இருக்கலாம். ஆனால் ஜெயகாந்தன் தன் வாசகர்களை சஹ்ருதயர்கள் என்றுதான் சொன்னார். ஒரு எழுத்தாளனை பீடத்தில் வைத்து பாதாபிஷேகம் பண்ணுவதை எந்த ஒரு உண்மையான எழுத்தாளனும் விரும்பமாட்டான். அந்த மாதிரி இருந்ததே கிடையாது. எந்த ஒரு எழுத்தாளனும் மலைப்பிரசங்கம் பண்ண வந்த தேவதூதர்கள் கிடையாது. எழுத்தாளனுக்கு சமமானவன்தான் வாசகனும். அந்த புரிதல் இப்போது மாறிவிட்டது. Hero worship நிறைய வந்துவிட்டது. எழுத்தாளர்களை Hero worship பண்ணினால் எனக்கு செம கடுப்பாகிறது. எழுத்தாளன் துதிக்கப்படக்கூடாது. ஒரு வாசகன் எழுத்தாளனைத் தாண்டிப் போகவேண்டும். கையைக் கட்டிக்கொண்டு என்னுடைய குரு இவர்தான், இவர் எழுத்து தவிர வேறு யாருடைய எழுத்தையும் படிக்கவே மாட்டேன் என்று சொன்னால் அவன் ஒரு வாசகனே அல்ல. இந்த மாதிரியான போக்கெல்லாம் இப்போது நிறைய இருக்கிறது. அதை ஒன்றும் பண்ணமுடியாது. முக்கியமான நிறைய புத்தகங்களெல்லாம் மறுபதிப்பு காண்கின்றன. எனக்கெல்லாம் காஸ்யபனின் அசடு மறுபடியும் மறுபதிப்பு காணும் என்ற நம்பிக்கையே இருந்ததில்லை. அதெல்லாம் வந்திருக்கிறதே. சாகித்ய அகாடமி மாதிரியான தூங்கிவழிகிற பப்ளிஷர்ஸ் கூட டிமாண்டுக்காக அவர்களுடைய பழைய நல்ல புத்தகங்களையெல்லாம் கொண்டுவருகிறார்கள். அக்னிநதியெல்லாம் இப்போது வந்திருக்கிறது. டிமாண்ட் இருக்கிறது. நூறு பேர் ஒரு புத்தகத்தை வாங்குகிறார்கள் என்றால் இரண்டு பேர் ஒழுங்காகப் படிப்பார்கள். 98 பேர் சும்மா வாங்கி, நானும் அக்னிநதி வைத்திருக்கிறேன் என்று அலமாரியில் வைத்துக்கொள்வார்கள். அதையெல்லாம் ஒன்றும் பண்ண முடியாது. ஆனால் புதிதாக இரண்டு வாசகர்கள் உள்ளே வருகிறார்கள் இல்லையா, பாசிடிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். நானும் எல்லாம் தெரிந்தவன் என்பது போல் சில அரைகுறைகள் சத்தம் போட்டால் போடட்டுமே. அரைகுறைகள் முழுதாக வளரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? கொஞ்சநாள் துள்ளிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு ஒருவேளை அவர்களே முதிர்ச்சி அடைந்தவுடன் ஒழுங்கான வாசகர்களாக மாறலாம். எழுத்தாளர்களாக வரலாம். வாய்ப்பு இருக்கிறதல்லவா? யாரையும் எள்ளி நகையாடி அலட்சியப்படுத்திவிட முடியாது. ஃபேஸ்புக் மாதிரி இடங்களில் நிறைய சின்னப் பையன்கள் ஒரேயடியாகத் துள்ளுவதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் வருவதில்லை. நீ மெள்ள வாப்பா என்று தோன்றும். வருவான், வரலாம்.

  •  மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஆதர்சம் என்று நீங்கள் நினைக்கும் நண்பர்கள் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

நிறைய பேர் இருக்கிறார்கள். நான் எப்போதுமே என்னுடைய முன்னத்தி ஏர்கள் என்று ஆர்.சிவக்குமார், வெ.ஸ்ரீராம் இவர்கள் இருவரையும்தான் சொல்வேன். தேவதாஸ் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரை என்னுடைய Friend, philosopher and guide என்று சொல்வேன். 90-லிருந்து அவர் எனக்குப் பழக்கம்.  அப்போது ஆரணியில் தேவதாஸ் இருந்தார் . நானும் அவரும் கிட்டத்தட்ட  ஒவ்வொரு வாரமும் சந்தித்துக்கொள்வோம். அவருடன் நடந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை. மிக உன்னதமான மனிதர், பெரிய வாசிப்பாளி . சிவக்குமாரும், வெ.ஸ்ரீராமும் நான் பின்பற்ற விரும்புகிற, விழைகிற என்னுடைய ஆதர்சங்கள். அடுத்து, மிகக்குறைவாக மொழிபெயர்த்திருந்தாலும் மிக அற்புதமான மொழிபெயர்ப்பாளர் சி.மணி. வெ.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்துதான் பண்ணியிருப்பார். ஆனாலும் அவருடைய மொழிபெயர்ப்புகள் எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத்தந்தன. அவருடைய சின்சியாரிடி, வெ.ஸ்ரீராமுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவருடன் பேசுவது, I love talking to him. ஆர். சிவக்குமார் என்னுடைய குரு.  இப்போது என் சந்தேகங்களுக்கு இவர்களிடம்தான் செல்கிறேன்.


நேர்காணல் கேள்விகள் : க.விக்னேஷ்வரன் மற்றும் வே.நி.சூர்யா

புகைப்படங்கள்: மதன்

சிறப்பு நன்றி:  கீதா மதிவாணன்.


     

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.