எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 1


பைக்  நிறுத்திவிட்டு  கீழே இறங்கும் போது “ரைட் சைடுல படி இருக்கும் பாருங்க அதல ஏறி மேல வாங்க” என்று கணீரென்று ஒரு குரல் காதில் விழுகிறது.

மேலே நிமிர்ந்து பார்த்தால் … எழுத்தாளர் குப்புசாமி அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். படிகள் ஏறி மேலே சென்ற என்னையும் நண்பர் சந்தோஷ் குமாரையும்  ‘வணக்கம்’ சொல்லி வீட்டிற்கு வரவேற்கிறார். வீட்டில் உள்ள போய் உட்கார்ந்த பின்  “மனைவி யோகா கிளாஸ் எடுக்க போய் இருக்காங்க. இப்ப வந்துடுவாங்க, அதுக்கு முன்னே காபி சாப்பிடுங்க இரண்டு பேரும்” என்று வற்புறுத்தி நல்ல அருமையான காபி ஒன்றை தருகிறார்(அவர் நல்ல காபி ரசிகர் என்று தெரியும்). அதிலிருந்து பேச்சு தொடர்கிறது. அதைப்பற்றி பேச ஆரம்பித்தவுடன் குஷியாகிவிட்டார். காபி பற்றி நிறைய தகவல்களை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார். சட்டென்று ஒரு கணத்தில் பேச்சை மாற்றி “சார் நேர்காணல் ஆரம்பித்து விடலாமா” என்கிறேன்.
 “ஓ! யெஸ் கண்டிப்பாக, வாங்க என் ரூமுக்கு போய் விடலாம்” என்று கூப்பிட்டு போகிறார். அங்கு சென்று அமர்ந்து பின்பு அந்த அறையில் இருக்கும் சுத்தமும் அமைதியும் என்னவோ செய்கிறது, காரணம் இருக்கும் அவ்வளவு புத்தகங்களும், அவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. சுவற்றில் ரேமண்ட் கார்வாரின் அழகான புகைப்படம் ஒன்று. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது  “ஆரம்பிக்கலாமா விக்னேஷ் “ என்றே அதே கணீர் குரலில் கேட்கிறார்.

நேர்காணல் தொடங்கியது.


“He is only a translator என்று சொல்வதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். நான் என்னை ஒரு translator என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் எனக்கு கூச்சமே கிடையாது. Yes, I am a translator.”

– ஜி.குப்புசாமி

 • வணக்கம், வாசிப்புக்குள் நீங்கள் வந்தது பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் சிறு குறிப்பு தர முடியுமா ?

வணக்கம்.  வாசிப்பு என்பது எனக்கு இடையில் வந்த விஷயம் அல்ல. என்னுடைய குடும்பச்சூழல் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே வாசிப்பை நோக்கிதான் நகர்த்தியிருந்தது என்று சொல்லலாம். என்னுடைய அப்பா நல்ல வாசகர். என் அப்பாவும் தாத்தாவும் பெரிய அளவில் படித்தவர்கள் இல்லை என்றாலும் இருவருமே அந்தக் காலத்தில் SSLC  படித்தவர்கள். எங்கள் தாத்தா 1930-களிலே SSLC முடித்திருக்கிறார். என்னுடைய அப்பா பள்ளியிலும் மாவட்டத்திலும் முதல் மாணவனாய்த் தேறியவர். ஆனால் அவருடைய குடும்பச்சூழல் காரணமாக கல்லூரியில் படிக்கமுடியாமல் போனது. அதனாலேயே அவருக்கு ஆங்கில வாசிப்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. எங்கள் அப்பா, தாத்தா இருவருமே Anglophiles. ஆரணி மாதிரியான சின்ன ஊரில் பஜாரில் கடை வைத்திருக்கும் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஆங்கிலப்புத்தக வாசிப்பில் பெரும் ஆர்வம் இருந்தது என்பது மிகவும் சுவாரசியமான விஷயம்தான். அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு நிறைய பத்திரிகைகள் வரும். USIS- இலிருந்து SPAN வரும். ரஷ்யாவிலிருந்து சோவியத் நாடு, மாஸ்கோ நியூஸ் , ஸ்புட்னிக் இதெல்லாம் வரும். எங்கள் அப்பா TIME வரவழைத்து வாசித்துக்கொண்டிருந்தார். அடிப்படையில் அப்பாவும் தாத்தாவும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள். பொதுவாகவே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு கம்யூனிசத்தின் மேலும் கொஞ்சம் ஈடுபாடு இருக்கும்.

அப்பா, தாத்தா இருவருக்குமே புனைவுகளில் ஆர்வம் கிடையாது. இருவரும் வரலாறுகள் பற்றியும் அபுனைவுகள் பற்றியும் பேசும்போதெல்லாம் விநோதமாக இருக்கும். எனக்கு அந்த வயதில் கதைகள் மேல்தான் ஆர்வம் இருந்தது. சோவியத் நாடு இதழில் வருகின்ற கதைகள் மாதிரி. எங்கள் அப்பாவோ தாத்தாவோ கதைகள் படிக்க என்னை ஊக்குவித்ததே கிடையாது. ஆனால் வாசிக்கச் சொல்வார்கள். அதுவும் ஆங்கில வாசிப்பு. என்னுடைய வகுப்பில்  நன்றாகப் படிக்கும் பையன்களுக்குக் கூட ஆங்கிலம் என்பது கஷ்டமான பாடமாக இருக்கும். ஆனால் எனக்கோ அது மிகவும் ஆர்வமானதாக இருக்கும். அதற்கு எங்கள் வீட்டுச்சூழல்தான் காரணம்.

அப்பாவுடைய இங்கிலீஷ் டீச்சர் திரு. வி.எஸ்.சுந்தரமூர்த்தி முதலியார்.  நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவரிடம்தான் என்னை டியூஷன் சேர்த்துவிட்டார் அப்பா. அவர் இங்கிலீஷ் கிராமரைத் தவிர வேறு எதுவுமே நடத்தமாட்டார். Wren & Martin வைத்துக்கொண்டுதான் நடத்துவார். அந்த வயதிலேயே இங்கிலீஷில் composition எல்லாம் எழுதித் தரச்சொல்லுவார். எனக்கு கணக்கு ரொம்ப வீக். ஆனால் அவர் கணக்கே சொல்லித்தர மாட்டார். இப்படியே நான் அவரிடம் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். கணக்கில் நான் ஃபெயிலாக ஆரம்பித்த பிறகுதான் எங்கள் அப்பா டியூஷனையே மாற்றினார்.

எனவே ஆங்கில வாசிப்பு என்பது ரொம்பவும் இயல்பானதாகவே எனக்கு வந்துவிட்டது. எங்கள் பாட்டியும் நிறைய படிப்பார்கள். பெரும்பாலும் தொடர்கதைகள். அந்த ஊரில் அப்படிதானே இருக்கமுடியும். எனக்குப் பெரிய இலக்கிய நண்பர்களின் அறிமுகமெல்லாம் அப்போது கிடையாது. பாட்டிதான் நிறைய புத்தகங்களை கடத்திக்கொண்டுவந்து என்னிடம் கொடுப்பார். எங்கள் அம்மாவும் நல்ல வாசிப்பாளி. நான் கதைப்புத்தகம் படிப்பதைப் பார்த்தால் அப்பா திட்டுவார். அந்த வயதில் எனக்கு ஏகப்பட்ட ஆர்வங்கள் இருந்தன – eclectic என்று சொல்வோமே அதுபோல. படிப்பதில் மட்டும் இல்லாது  வரையவும் செய்வேன். எங்களுடைய ட்ராயிங் மாஸ்டரே கூட பாராட்டுவார். ஓவியம் வரைவது தவிர, இசையிலும் ஆர்வம் இருந்தது. இசை, ஓவியம், இலக்கியம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஆர்வம் இருந்த காரணத்தால் பள்ளிப்படிப்பில் என்னால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்லலாம்.

அப்பாவுக்கு நான் அவரைப்போலவே  First rank மாணவனாக இருக்கவேண்டும்  என்று பெரிய ஆசை இருந்தது. நானோ எப்போதுமே First rank எடுத்ததே இல்லை.  படிப்பில் முழுக்கவனத்தை செலுத்தாமல் இப்படி படம் வரைவதிலும் பாட்டு கேட்பதிலும் கதைப்புத்தகம் வாசிப்பதிலும் கவனத்தை சிதறவிடுவதுதான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்று அப்பாவும் அம்மாவும் திட்டுவார்கள். ஆனால் முரட்டுத்தனமான படிப்பாளியாய், ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் பையனாக இருந்து ஒரு டாக்டராகவோ என்ஜினியராகவோ போகாமல் இருந்திருக்கிறேன் என்று எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

 

 • இதிலிருந்து நவீன இலக்கிய வாசிப்புக்குள் எப்படி வந்தீர்கள்?

நவீன இலக்கிய வாசிப்புக்குள் நான் வந்ததற்கு எது ஆரம்பம் என்று பார்க்கப்போனால்… நான் எட்டாவது படிக்கும்போது எங்கள் பாட்டி எடுத்துக்கொண்டு வந்த ஒரு புத்தகம். இந்துமதி எழுதிய மலர்களிலே ஒரு மல்லிகை என்ற புத்தகம். அது ஒரு சாதாரணமான தொடர்கதைதான். அந்தக் கதையின் கதாநாயகன் இலக்கியப் பத்திரிகை நடத்துபவன். தீவிர இலக்கிய ஆசாமி. அந்தக் கதையில் இந்த மாதிரியான தொடர்கதை மற்றும் பொழுதுபோக்கு இலக்கியங்களுக்கு எதிராக எல்லாம் அவன் பேசுவான். அந்தக் கதாநாயகிக்கும் தீவிர இலக்கிய எழுத்தில் ஆர்வம் இருக்கும். இது எனக்கு மிகுந்த சுவாரசியமாக இருந்தது. ஓஹோ.. பொழுதுபோக்கு இலக்கியம் அல்லாமல் இன்னொரு விஷயமும் இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் காலத்தில்தான் ஜெயகாந்தன் எனக்கு அறிமுகமானார். உண்மையில் ஜெயகாந்தன்தான் ஒரு தீவிர இலக்கியத்துக்கான கதவைத் திறந்துவிட்டார் என்று சொல்லலாம். அதற்கான பொறி வேண்டுமானால் இந்துமதியின் அந்த நாவலில் கிடைத்திருக்கலாம். ஜெயகாந்தன் புத்தகங்கள் அப்போது எளிதில் எல்லார்க்கும் கிடைக்கும். ஆரணி மாதிரியான சின்ன ஊரில் எங்கள் பாட்டியே ஜெயகாந்தன் புத்தகங்களை எல்லாம் எங்கெங்கிருந்தோ கடன் வாங்கிவந்து படிப்பார்கள் . நான் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும்போது ஜெயகாந்தனுடைய எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஆரணியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கம்யூனிச இயக்கங்கள் தீவிரமாக ஆள் பிடித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆரணிக்கு ஜெயகாந்தனும் வருவார். ஜெயகாந்தன் கூட்டங்களுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன். ஆரணியில் இருக்கிற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் இந்த மாதிரி young prospects யாராவது இருந்தா அந்தத் தம்பிகளை எல்லாம் அழைத்துக்கொண்டு போய்  அரசியல் பாடம் நடத்துவார்கள். சமூகப் பிரக்ஞை உண்டாக்கி ‘தம்பி’ யை ‘தோழர்’ ஆக்கிவிடுவார்கள்.   அதை மூளைச்சலவை என்றெல்லாம் சொல்லமுடியாது. அது ரொம்ப சரியான விஷயம். எங்களையெல்லாம் கூப்பிட்டு படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் தருவார்கள். ஆரணியில் வெங்கட்ராமன் பூங்காவில்  என் நண்பர்கள்  சோமு  , பஜாரில் கடை வைத்திருந்த என்னுடைய கிளாஸ்மேட் ஆனந்தன், எனக்கெல்லாம் கம்யூனிச சித்தாங்களை அறிமுகப்படுத்தி நிறைய புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார்கள். நண்பர்கள் இரண்டு பேரும் கார்டு வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டார்கள். நான் இதற்கு சரிப்பட மாட்டேன் என்று அப்போதே   புரிந்துவிட்டது. என்னை அந்த உள்வட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை.

ஆரணியில் ஒருமுறை நூலகத்துக்குப் போனபோது அங்கு ஏற்கனவே இருந்த நூலகர் போய் புது நூலகர் வந்திருந்தார். அப்போது சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்கள் பகுதியில் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ பற்றி  எழுதியிருந்தார். அதனால் அந்த நூலகரிடம் ஜி.நாகராஜனுடைய நாளை மற்றுமொரு நாளே புத்தகம் இருக்கா என்று கேட்டேன். நான் அதைக்கேட்டபோது SSLC  விடுமுறையில் இருந்தேன். அந்த நூலகர் உனக்கு யார் அந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னது என்று கேட்டார். அதைப் பற்றிப் படித்தேன் என்றேன். அதெல்லாம் இன்னும் லைப்ரரிக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு நீ அசோகமித்திரன் படித்திருக்கிறாயா என்று கேட்டார். எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி இருந்தது. இல்லை என்றேன். அவர் உடனே தன்னுடைய காப்பி என்று சொல்லி தன் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ புத்தகம். படித்துவிட்டு வா என்றார். நான் அன்று காலையில் வாங்கிக்கொண்டு போனேன். மாலை  நூலகம் மூடும் வேளையில் போய் திருப்பிக் கொடுத்தேன். என்ன, புரியவில்லையா என்றார். இல்லை, படித்துவிட்டேன் என்றேன். ஒரு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு அசோகமித்திரனை எப்படி முழுமையாய்ப் புரிந்துகொண்டிருக்க முடியும்? அவர் சிரித்துக்கொண்டே சரி, நாளைக்கு நான் வேற எடுத்துட்டு வரேன் என்றார். விட்டல்ராவின் ஒரு புத்தகம், க.நா.சு.வின் ஒரு புத்தகம் என எடுத்துக்கொண்டுவந்து தந்தார். அந்த நேரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது சோவியத் நூல்கள். அவ்வப்போது வேனில் வருகின்ற நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் நடமாடும் புத்தகக் கடைதான் மிகக் குறைந்த விலையில் அற்புதமான இலக்கியங்களைக் கொண்டுவந்து சேர்த்தது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ், புஷ்கின் என் எத்தனை மாஸ்டர்கள்…

நான் ஊரீஸ் காலேஜ் போன பிறகு  தீபம், கணையாழி வழியா வந்ததுதான் மற்ற வாசிப்பெல்லாம். அதே நேரத்தில் இணையாக J D Salinger, அடுத்து நான் மொழிபெயர்க்கவிருக்கிற The Brave New World எழுதிய Aldous Huxley போன்றோரை வாசித்தேன். இவர்களையெல்லாம் வாசிக்கவில்லை என்றால் உங்களை ஒரு intellectual-ஆ ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அதற்காகவே அதையெல்லாம் வாசிப்பது. அடிப்படையில் நான் கொஞ்சம் விளையாடுபவனும் கூட. ஸ்போர்ட்ஸில் ஈடுபாட்டோடு உள்ளவர்கள் ரொம்ப இறுக்கமாக இருக்கமாட்டார்கள். எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளரான P. G. Wodehouse, வேகமாக கதை சொல்லும் Frederick Forsyth இவர்களையும் வாசித்துக் கொண்டிருந்தேன். இவர்களை வைக்க வேண்டிய இடம் எதுவென்பதும் தெரியும். டிஸ்க்ரிப்டிவாக எழுதும் Arthur Hailey எழுத்து மிக சுவாரசியமாக இருக்கும். அந்த மாதிரியான புத்தகங்களும் வாசிப்பேன். ஆனால் என்னுடைய தேர்வு எப்போதும் சீரியஸ் புத்தகங்களாக இருக்கும்.

நான் வெறும் வாசிப்பில் மட்டும்தான் இருந்தேன். பிறகு கொஞ்சம் எழுதவும் ஆரம்பித்தேன். எல்லாரும் எழுதுவது போல  கவிதைகள் . புதுக்கவிதைகள், வானம்பாடி இயக்கம் எல்லாம்  உச்சத்தில் இருந்த  நேரம் அது.  மீரா மு.மேத்தா சாயலில் அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த  கவிதைகள் எல்லாம் சரியான கவிதைகள் இல்லை,  கவியரங்கக் கவிதைகள் மாதிரியானவை என்று எனக்கே அபிப்பிராயம் இருந்தது.  அது ஒரு மாதிரியான dichotomy.  அந்தக்கால நோட்டுப்புத்தகங்களைப் பார்க்கும்போது  சிரிப்பாக இருக்கிறது. இப்போது சொல்லலாம் தப்பில்லை, அந்த வயதில் காதல், காதல் தோல்வி இந்த மாதிரி விஷயங்களையே எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு பசவய்யா, ஞானக்கூத்தன், சி.மணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். பிரமிள் கவிதைகள் எனக்கு புரியவில்லை என்றாலும் படித்தேன். அப்போது ஆத்மாநாம் பெரிய ஆதர்சமாக இருந்தார். ஆத்மாநாம் அளவுக்கு என்னை பாதித்த கவிஞர் அந்தக்காலத்தில் கிடையவே கிடையாது. அதற்குப் பிறகு கவிதை படிக்கிற, எழுதுகிற கெட்டப்பழக்கத்தை விட்டுவிட்டேன்.

பாமுக்கிடம் கூட ஒரு நேர்காணலில் கவிதை எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள் . ”கவிஞன் மூலமாக கடவுள் பேசுகிறார் என்று நினைக்கிறேன். கவிதை என்பது கடவுள் உங்கள் மூலமாகப் பேசுவதுதான். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். கடவுள் என்னிடம் பேசவே இல்லை. நான் எவ்வளவோ முயற்சித்து கடவுளைக் கூட்டிவந்து என் மூலமாகப் பேசவைத்தாலும் அது கடவுளின் குரலாக இல்லாமல் உரைநடையாகத்தான் இருந்தது.” என்கிறார். பாமுக்கின்  மொழிபெயர்ப்பாளனும் நானும் உரைநடை மைந்தன்தான். கவிதையைப் படிக்கலாம். என்னிடமிருந்து கவிதை வராது என்பது எனக்கு தெரிந்துவிட்டது.

 

 • அப்ப கவிதைக்குப் பிறகு உரைநடைக்கு வந்துவிட்டீர்கள் சரியா?

ஆமாம். அப்போதும் கூட பெரிதாக நான் ஒன்றும் எழுதியது கிடையாது. சில கதைகள் எழுதியிருக்கிறேன். கணையாழிக்கு அனுப்பியிருக்கிறேன். ஆனால் வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் எனக்கு எழுத்தில் இல்லை. உண்மையான காரணம் அதுதான். ஏனென்றால் நாம் வாசிக்கும் புத்தகங்களில் இருக்கும் வாழ்க்கை, அந்த எழுத்தாளர்களின் அனுபவம் அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் மிகவும் சௌகரியமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடமிருந்து என்ன ஒரு பெரிய இலக்கியப் படைப்பு வந்துவிட  முடியும்?

உண்மையில் நான் ரொம்ப cozy-ஆகத்தான் வளர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு பேரிலக்கியம் படைக்கும் அளவுக்கு நான் எதையும் பார்க்கவே இல்லை. எதுவும் நிகழவே இல்லை. வண்ணதாசன் சொல்வது போல என் வேட்டியின் நுனி கூட முள் பட்டு கிழிந்திருக்காது. அவ்வளவு சௌகரியமாக இருப்பவர்களிடம் இருந்து இலக்கியம் வராதா என்றால் அதுவல்ல விஷயம். பேரிலக்கியம் படைத்தவர்கள் எல்லாமே வாழ்க்கையில் அடிபட்டவர்கள்தானா என்றால் அப்படி ஒன்றும் கிடையாது. தல்ஸ்தோய் பிரபு வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் அப்படி எதுவும் இல்லை. ஆனால் அதுவும் ஓரளவு இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. என்னைச் சுற்றி இத்தனை அவலங்கள் இருக்கும்போது என்னுடைய வாழ்க்கையைப் பற்றி மட்டும்தான் எழுதவேண்டும் என்று கிடையாது. என்னைச் சுற்றி எவ்வளவோ அவலங்கள் இருக்கின்றன. என் நண்பர்களிடம் இருக்கின்றன. மிகச் சிறிய வயதிலேயே என்னுடைய நண்பர்களிடம் இருந்த ஜாதி என்னும் விஷயம்… அதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற விஷயங்கள்தானே. அதையெல்லாம் அவர்களே எழுதவேண்டும் என்று இல்லை. நான் எழுதியிருக்கலாம். ஆனால்.. எனக்கு படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதில் இல்லை. அதுதான் உண்மை. நான் ஒரு இயல்பான எழுத்தாளன் கிடையாது என்பது எனக்கு ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது.

 

 • இதிலிருந்து எங்கள் அடுத்த கேள்வி எழுகிறது. வாசிப்பிலிருந்து எழுத வந்தீர்கள். முதலில் கவிதை எழுதினீர்கள். அது திருப்திகரமாக இல்லை. பிறகு உரைநடைக்கு வந்துவிட்டீர்கள். உரைநடைக்கு வந்த பிறகு உங்களுடைய படைப்புகளை அனுப்பியிருக்கிறீர்கள். அவை வெளியிடப்படவில்லை. எங்களுடைய கேள்வி என்னவெனில் அதிலிருந்து மொழிபெயர்ப்புக்கு வந்ததன் பின்னணி என்ன?

நான் மொத்தமாக ஐந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இரண்டு நாவல் எழுத ஆரம்பித்து நான்கைந்து அத்தியாயங்களுடன் நிறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு கணக்கே கிடையாது. எல்லாமே 87-உடன் முடிந்துவிட்டது.  82-இல் நான் ஊரீஸ் காலேஜ் படிக்கும்போது எழுதிய ஒரு சிறுகதை அடுத்து நான் எம்எஸ்ஸி படிக்கும்போது என்னுடைய காலேஜ் மேகசினில் வந்தது. அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு நான் எதுவும் இல்லை எழுதவில்லை. வாசித்துக்கொண்டேதான் இருந்தேன்.

2002-ல் நான் மொழிபெயர்ப்பாளன் ஆனதற்குக் காரணம் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி. அவருக்கு நான் நன்றி சொல்லியாகவேண்டும். இன்று தேதி பிப்ரவரி 28 இல்லையா?  2002 பிப்ரவரி 27-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அதற்குப் பிறகு அங்கு நடந்த கோரம் எல்லாருக்கும் தெரியும். 2002 மே அவுட்லுக் இதழில் அருந்ததி ராயின் கட்டுரை ஒன்று வெளியானது.

திருவண்ணாமலையில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கமும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் சேர்ந்து மத நல்லிகணக்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு பண்ணியிருந்தது. அதற்கு கே என் பணிக்கரை அழைத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் கே என் பணிக்கர் எழுதிய கட்டுரைகளை எல்லாம் மொழிபெயர்த்து சின்னப் புத்தகமாக வெளியிடலாம் என்று பவா,  சந்துரு இவர்களெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவுட்லுக்கில் வந்திருந்த அருந்த்தி ராயின் கட்டுரையைப் பரிந்துரைத்தேன்.

அருந்ததி ராயுடைய அந்தக் கட்டுரையை மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியதும் சட்டென்று நானே அதை மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டேன். அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. காரணம் அருந்ததி ராய் அதற்குள் என் மனசுக்குள் மிகவும் நெருக்கமாகிவிட்டார். நான் சொன்னேன் அல்லவா, என் மனைவி உடல்நிலை மோசமாக இருந்த அந்த சமயத்தில் 97-ல்தான் God of Small Things புத்தகம் வெளியானது. புக்கர் பரிசு கிடைத்தது. பிறகு திரும்பிய பக்கமெல்லாம் அருந்ததி ராய் புகைப்படங்கள், அருந்ததி ராய் நேர்காணல்கள், அவர் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் இருந்தன. 98- ஆரம்பத்தில்தான் நான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதை நான் வாசித்தவுடனேயே என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. ஏன் என்று சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். இதை நான் அருந்ததி ராயிடம்கூட சொல்லியிருக்கிறேன், ‘உங்கள் நாவலை உலகத்திலேயே அதிக முறை படித்தவன் நானாகத்தான் இருப்பேன்’ என்று.

98-இல் அந்த நாவலைப் படித்தபோது அந்த நாவல் எப்படி என்னைத் தாக்கியது என்றால் It was like a bolt from the blue. அந்த நாவலில் சொல்லப்படுகிற கேரளா, கேரள கிராமம் அவற்றையெல்லாம் நான் பார்த்தது கிடையாது. அந்த நாவலில் வருகிற சிரியன் கேத்தலிக் குடும்பம்  எனக்கு அறிமுகம் இல்லாத குடும்பம். வீட்டிலேயே இங்கிலீஷ் பேசும் ஒரு குடும்பம். அதுவும் எனக்குக் கிடையாது. ஆனாலும் பாமுக் நாவலில் வருவது போல் எனக்கென்னவோ இணையாக இன்னொரு உலகம் இருப்பது போலவும் என்னுடைய இரட்டை ஒருத்தன் அந்த நாவலில் வருவது போலவும் இருந்தது. அந்த நாவலில் வரும் எஸ்தப்பன் என்னுடைய alter ego மாதிரியே இருந்தான் . என்னுடைய கதையை அருந்ததி ராய் எழுதியிருப்பது போலவே தோன்றியது. அந்தக் கதையில் வருகிற ஒரே ஒரு சம்பவம் கூட என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது இல்லை. ஆனால் அந்த எஸ்தா எனக்கு ரொம்ப நெருக்கமானவனாக என்னுடைய ஒரு பகுதியாகத் தெரிந்தான். திரும்பத் திரும்ப அந்த ஒரு நாவலையே 98 -99 பாதி வரைக்கும் படித்துகொண்டிருந்தேன். எப்படி என்றால் முதல் பக்கத்திலிருந்து கடைசிவரைக்கும் நாலைந்து தடவை படித்திருப்பேன்.புக்மார்க் எல்லாம் இல்லை. அப்படியே வைத்துவிட்டுப் போவேன். அலுவலகத்திலிருந்து வந்ததும் ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்புவேன். இரவுணவு வரை வாசிப்பேன். பிறகு மூடிவைத்துவிடுவேன். இப்படியே இந்தப் புத்தகத்தையே தொடர்ந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு இது ரொம்ப விநோதமாக இருந்தது. “நீங்க இன்னும் இந்தப் புத்தகத்தை படிச்சு முடிக்கலையா?” என்று கேட்டார்கள். இல்லை, நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். “ஏன், புரியலையா?” என்று கேட்டார்கள்.

 

 • அந்த நூலகர் அசோகமித்திரன் புத்தகம் பற்றிக் கேட்ட மாதிரியே புரியலையா என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆமாம். அந்தப் புரியலையா வேறு, இந்தப் புரியலையா வேறு. இப்படி அருந்ததி ராயுடைய அந்த நாவல் என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஊறிப்போயிருந்தது. அருந்ததி ராயுடைய நடை, அந்த நடையில் இருக்கிற கிண்டல், அதிலிருக்கிற உக்கிரம் எல்லாமே எனக்குள் பூரணமாக ஊறிப்போயிருந்தது. அதனாலேயே அந்த அவுட்லுக் கட்டுரை என்னை தனக்குள் இழுத்துக்கொண்டது. அந்தக் கட்டுரையை மொழிபெயர்க்குமுன் ஒரு பத்தி கூட நான் மொழிபெயர்த்திருக்கவே இல்லை. ஒரு ஞாயிறு மாலை ஆரம்பித்தேன். அப்போது நான் திருவண்ணாமலையில் கலெக்ட்ரேட்டில் ஆடிட்டிங்கில் இருந்தேன். திங்களன்றே முடித்துவிட்டேன். முடித்துவிட்டு பவாவிடம் கொடுத்தேன். சி. மோகன் அவர்களுடைய பிரஸ்ஸில் கொடுத்து சிறிய புத்தகமாக வெளியானது. அதுதான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பு. அந்த மொழிபெயர்ப்பு எனக்குள் ஒரு பெரிய கதவைத் திறந்துவிட்டிருந்தது.

என் மன இறுக்கம் எல்லாமே இந்த மொழிபெயர்ப்புப் பணியின்போது விடுபட்டது. ஏனென்றால் நீங்கள் இன்னொரு எழுத்தாளரரின் சுயத்துக்குள் போய் நீங்கள் மொழிபெயர்ப்பு செய்யும்போது நீங்கள் இன்னொருவராக மாறிவிடுகிறீர்கள். அந்த நேரத்தில் குப்புசாமி என்ற இந்த சுயத்திலிருந்து விலகியிருப்பதை மிகப்பெரிய விடுதலையாக உணர்ந்தேன். நீங்கள் மொழிபெயர்ப்பு செய்யும்போது நீங்கள் நீங்களாக இருப்பதில்லை. அருந்ததி ராயின் எழுத்தை மொழிபெயர்ப்பு செய்யும்போது நீங்கள் தமிழில் எழுதும் அருந்த்தி ராயாகவே மாறிவிடுகிறீர்கள். அப்படைப்பின் படைப்பாளியாகவே உங்களை நீங்கள் உருவகப்படுத்திக் கொள்கிறீர்கள். என்னிடமிருந்து நானே விலகி இருப்பது பெரிய நிவாரணியாக இருந்த்து. அருந்ததி ராயை முடித்தவுடனே மறுபடியும் இந்த குப்புசாமி என்ற சோகமான சுயத்துக்குள் போக எனக்கு விருப்பமில்லை. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள். Kazuo Ishiguro-வின் village of dark என்னும் சிறுகதை New Yorker-ல் வெளிவந்திருந்தது. அதை மொழிபெயர்த்தேன். அருந்ததி ராயிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியான எழுத்தாளர். எனக்கு மிகமிகப் பிடித்தமான எழுத்தாளர் Julian Barnes. ரொம்ப பிரபலமான எழுத்தாளர். நாவல்தான் பிரதானமாக எழுதுவார். Granta பத்திரிகையின் இசைச் சிறப்பிதழில் அவருடைய Silence என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. நிசப்தம் என்னும் அக்கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை மொழிபெயர்த்தேன். மற்றொரு கதையையும் மொழிபெயர்த்தேன். அது அப்படியே பற்றிக்கொண்டுவிட்டது. அந்த நேரத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டது உண்மையாகவே என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்ளவும் அமைதிப்படுத்திக்கொள்ளவும்தான். அப்போது இருந்த என்னுடைய சூழலில் நான் மட்டும் மொழிபெயர்ப்பில் ஈடுபடாமல் இருந்திருந்தால் உள்ளே இருக்கும் அழுத்தம் தாளாமல் என்றைக்காவது  வெடித்திருப்பேன். மொழிபெயர்ப்பு என்ற ஒரு வழியை எனக்குக் காட்டிவிட்டதற்காக பவாவுக்கு என் நன்றி.

 

 •  மொழிபெயர்ப்பின் போது ஓரான் பாமுக் உடன் பல வருடங்களாக தொடர்ந்து ஒன்றாக இருந்திருக்கிறீர்கள். என் பெயர் சிவப்பு, வெண்ணிறக்கோட்டை, பனி இப்படிப் பல. தொடர்ந்து பாமுக்காகவே மாறி தமிழ் சூழலில் இருக்கும்போது உங்களுடைய மனநிலை எப்படிபட்ட மாற்றங்களை சந்தித்தது மேலும் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் எப்படி இருந்தது. ?

பாமுக் என்னுடைய மிகப் பிடித்தமான எழுத்தாளர் என்று சொல்வதே குறைமதிப்பீடுதான். உண்மையில் நான் அவரை ஆராதிக்கிறேன். பாமுக்கின் My name is Red பற்றி எஸ். ராமகிருஷ்ணன்தான் முதலில் எனக்குச் சொன்னார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது 2001 கடைசியில் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது ஆரணிக்கு வந்த ராமகிருஷ்ணன்  தமிழுக்கு வந்தாகவேண்டிய ஒரு நாவல் என்று சொன்னார். அவர் சொன்னதன் பிறகு, அடுத்த முறை நான் சென்னை போனபோது ஹிக்கின்பாதம்ஸில் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்கும்போது எனக்குத் தோன்றிய முதல் விஷயம் தமிழில் இதற்கு உதாரணம் காட்டக்கூடிய மாதிரி இதுவரைக்கும் எந்த நாவலுமே வந்ததில்லை என்பதுதான்.

அதற்குள் நானும் மொழிபெயர்ப்புகளில் இறங்கியிருந்ததால் பாமுக்கை கண்டிப்பாக மொழிபெயர்த்தே ஆகவேண்டும் என்று உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. காலச்சுவடு கண்ணனிடம் இந்த நாவலுக்கு உரிமை வாங்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். My Name is Red பற்றி நான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்ததால் திலகவதி மேடமும் அதற்கான உரிமை வாங்க முயற்சி செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. எனக்கு எப்படியாவது உரிமை வாங்கி My Name is Red-ஐ தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்பது என் ஆசை. அப்போது பாமுக்குக்கு நோபல் எல்லாம் வரவே இல்லை. பாமுக் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரையை அமிர்தாவில் நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கண்ணன் 2005-2006-இல் முயற்சி செய்தார். முதல் முயற்சியில் அவருக்கு கிடைக்கவில்லை. 2006-ல் பாமுக்குக்கு நோபல் பரிசு கிடைத்தது. மறுபடியும் அவர் முயற்சி செய்து அந்த உரிமையை வாங்கிக் கொடுத்தார்.

நான் மிகவும் ரசித்து லயித்து செய்த மொழிபெயர்ப்பு அது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அருந்ததி ராயின் கதையில் வரும் எஸ்தப்பன் பற்றி சொன்னேன் இல்லையா, அந்த எஸ்தப்பன் ஏதோ ஒரு வகையில் என்னுடைய சுயத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறான் என்று சொல்லியிருந்தேன். ஒரான் பாமுக் என்ற அந்த எழுத்தாளர், அவருடைய பார்வை, ஒரு கதையை கட்டமைக்கிற விதம், அவர் சொல்லுகின்ற விஷயம் இவை எல்லாமே என்னுடைய உண்மை இயல்புக்கு வெகு அருகில் இருக்கின்ற விஷயம். ஏன் என்றால் என்னுடைய இயல்பை மாற்றி பாமுக்கை அறிந்துகொள்ளவேண்டிய அவசியமே எனக்கு இல்லை. பாமுக் ஒரு நாவலை எப்படி கட்டமைக்கிறார், எப்படி எழுதுகிறார் என்று சொல்கிறார். பல தமிழ் எழுத்தாளர்கள் கூட நாவல்கள் தங்களிடமிருந்து இயல்பாய் வெளிவரும் என்பார்கள். ஆனால் பாமுக் அப்படியெல்லாம் சொல்லவில்லை.

ஒரு நாவலை ஒரு கட்டிடக்கலைஞன் போல முதலில் இருந்து கடைசி வரை எழுதாமலேயே உள்ளுக்குள்ளேயே மிகச்சரியாக வடிவமைத்து வைத்துக்கொண்டு அதற்குப் பிறகே அவர் எழுதுவார். ஆனால் எழுதும்போது ஒரு அவுட்லைன் மட்டும்தான் அவருக்குள் தீர்மானமாக இருக்கும். எழுதும்போது அந்த எழுத்து எழுத்தாளரை தானாகவே அழைத்துச்சென்றுவிடும். எழுத்து என்பது ஒரு மாயசக்தி. ஆனாலும் ஒரு எல்லை உண்டல்லவா, அதற்குள் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரமாகப் போகலாம். ஒரு எழுத்தாளர் இப்படிதான் எழுதவேண்டும் என்று கிடையாது. பாமுக் ஒரு நேர்காணலில் சொல்வார், “ஒரு கேரக்டரை ஒரு அறைக்குள் அனுப்புகிறேன். அவன் நேரே போவானா, வலப்பக்கம் திரும்புவானா? இடப்பக்கம் திரும்புவானா என்று எனக்குத் தெரியாது. என் கை தானாக எழுதிக்கொண்டே போகும். என் கை எழுதிக்கொண்டே போவதற்கு நான் பொறுப்பு கிடையாது.” இது பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும் சொல்லும் ஒரு விஷயம்தான்.

படைப்பாற்றல் இருக்கிறதல்லவா, அந்த செய்முறையை நீங்கள் கவனித்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அது எனக்கு மிகுந்த கவர்ச்சிகரமாக இருந்தது. பாமுக் ஒரு கனவுலகவாசி கிடையாது. “எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னுடைய சுயநினைவில்லாமல் கதை என்னிடமிருந்து ஆற்றொழுக்காக வருகிறது” என்று அவர் சொல்லவில்லை. அவரிடம் ஒரு தீர்மானம் இருக்கிறது. இந்த விஷயத்தை இப்படி சொல்லவேண்டும் இந்தக் கதாபாத்திரம் இப்படிதான் இருப்பான் என்ற தீர்மானமான நிர்ணயம் இருக்கிறது. அந்த நிர்ணயத்துக்குள் அவர் மிக சுதந்திரமாக தன் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார். இது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

கதைசொல்லலில் ஒரு ஒழுங்குமுறை உண்டு. மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த ஒழுங்குமுறை பாமுக்கிடம் மிகச்சரியாக இருக்கும். ஒழுங்குமுறை என்பது படைப்பாற்றலுக்கு எதிரானது என்று யாராவது சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். அதை விடுங்கள். எனக்கு அந்த ஒழுங்குமுறை மிக முக்கியமானதாகப் படுகிறது. அந்த ஒழுங்குமுறைக்கு உள்ளே ஒரு சுதந்திரம் இருக்கிறது. பாமுக்கின் எல்லா எழுத்திலும் நான் பார்க்கிற மிகப்பெரிய விஷயம், சுதந்திரத்தோடு கூடிய அந்த ஒழுங்குமுறை.

நான் ஒரு ஓவியன். My Name is Red நாவலும் ஓவியத்தைப் பற்றியதுதான். ஆனால் அது miniature painting எனப்படும் நுண்ணோவியம். Miniature painiting என்பது ஆட்டமன் கலாச்சாரத்தைப் பற்றியது.  கலைஞனுடைய சுதந்திரத்தை அரசியல், மதம் இவையெல்லாம் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துகின்றன? கட்டுப்படுத்துமா? கட்டுப்படுத்தும் நேரத்தில் கலைஞனின் பங்கு என்ன? கலைஞனுக்கும் அவன் படைக்கிற படைப்புக்கும் இடையில் வேறு யாருக்காவது இடம் இருக்கிறதா? இருக்கிறது, இல்லை இரண்டுமே இருக்கிறது. அப்படிதான் இருக்கிறது இந்த உலகம்.

இஸ்தான்புல் என்ற ஒரு பகுதி இருக்கிறதே அது, மிகச்சரியாக கிழக்குக்கும் மேற்குக்கும் நடுவில் இருக்கும் ஒரு விஷயம். நேரெதிர் கலாச்சாரங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு விஷயம். ஆட்டமன் சாம்ராஜ்யம் செழித்தோங்கிய பதினாறாம் நூற்றாண்டில் பல பேர் உலகத்தின் மையமே இஸ்தான்புல்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உலகத்துக்கு ஒரு மையம் என்பதே கிடையாது என்பதுதான் உண்மை. பிறிதொன்று என்பது முக்கியமான விஷயம். எப்போதும் ஒரே ஒரு மையப்புள்ளியில் இருந்து உலகம் இயங்குவதே கிடையாது. அதற்கு ஏராளமான மையப்புள்ளிகள் உண்டு.

ஆட்டமன் சாம்ராஜ்யம் சிதறுகிறது. அது சிதறுவதற்குப் பல காரணங்கள். அதிகாரக்குவிப்பு ஒரு முக்கியமான காரணம். அந்தப்பக்கம் வெனீஸிலிருந்து வருகிற மேலைக் கலாச்சாரம், இந்தப்பக்கம் ஆசியாவிலிருந்து வருகிற கீழைக் கலாச்சாரம் இந்த இரண்டு கலாச்சாரங்களும் ஆன்மீகத்தை வெவ்வேறு விதமாகப் பார்க்கிற கலாச்சாரங்கள். அதாவது மேலோட்டமாக. ஆன்மீகம் என்பதை நீங்கள் தத்துவமாகப் பார்த்தாலும் சரி, அல்லது வழிபாட்டு முறைகளாப் பார்த்தாலும் சரி.

இஸ்லாமியக் கலாச்சாரப்படி உருவ வழிபாடு, உருவம் இவற்றில் அவர்களுக்குத் தீர்மானமான பல கருத்துகள் உண்டு. அதனால் இந்த மினியேச்சர் பெயிண்டிங்கின் பரப்பார்வை (perspective) எல்லாமே டாப் ஆங்கிளில்தான் இருக்கும். இறைவன் மேலே இருந்து கீழே உலகத்தைப் பார்க்கிற அதே மாதிரிதான் நீங்கள் படம் வரையவேண்டும்.  மினியேச்சர் பெயிண்டிங்கில் கேமராவை தரையில் வைத்து நீங்கள் பார்ப்பது போல கோணம் கிடையாது. ஒரு அரண்மனை என்றால் மேலே இருந்து பார்ப்பது போலத்தான் இருக்கும். ஆனால் ஒரு கோணத்தில் பார்க்கும்போது ஒரு வீடு, சுவர் எல்லாம் இருக்கும். அந்த சுவருக்கு உள்ளே இருப்பவர்களையும் வரைந்திருப்பார்கள். அவர்கள் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் வரைந்திருப்பார்கள். ஆனால் இந்த வெனீஷியன் பெயிண்டிங் அதாவது மேற்கத்தியக் கலாச்சாரத்தின் ஓவியங்கள் எல்லாம் மிக யதார்த்தமான ஓவியங்களாக இருக்கும். ஒரு முகத்தைப் பார்த்து அப்படியே வரைவதாக இருக்கும். ஆனால் மிகவும் பொருள்வாய்ந்த இந்த நுண்ணோவியங்களை வரைபவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அந்த ஓவியமுறை அதிர்ச்சிகரமாக இருக்கிறது. நாமும் ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் நம்மால் இப்படி வரையமுடியவில்லையே என்று புலம்புகிறார்கள். அதனால் அந்த சுல்தான் அந்த நுண்ணோவிய ஓவியர்களுக்கு மேற்கத்திய ஓவியங்கள் வரைவதற்கு அனுமதி அளிக்கிறார், பெரிய ஓவியத்தொகுப்பொன்றை உருவாக்கும் பொருட்டு. அதில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்த நாவல். ஓவியத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாகப் பேசுவதே எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஒரு குதிரையை வரையும்போது அவனுடைய கை விரல்கள் எவ்வளவு சுதந்திரமாக குதிரையின் பிடரி பறப்பதையெல்லாம் வரைகிறான் என்று வாசிக்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் வரையும் கைகளுக்குதான் அந்த சந்தோஷம் புரியும்.

My Name is Red வந்தவுடன் அடுத்து வரும் பாமுக்கின் புத்தகங்கள் சிலவற்றுக்கு உரிமை வாங்கவேண்டுமென்று கண்ணனை நச்சரிக்க ஆரம்பித்தேன். சரி, ஏதேனும் நான்கு புத்தகங்களைச் சொல்லுங்கள் என்றார். Snow, Istanbul, White castle, The Black book இந்த நான்கின் உரிமையையும் வாங்கிவிட்டார். அவர் வாங்கும்போது ஒவ்வொரு புத்தகத்தையும் மொழிபெயர்க்க அந்த ஏஜன்ட் கொடுத்த கால அளவு ஒன்றரை வருடம். ஏனெனில் ஒன்றரை வருட கால அளவில் நான் My name is Red–ஐ முடித்துவிட்டேன். அந்தக் கணக்குப்படி White castle சின்ன புத்தகம். அதை சீக்கிரம் முடித்துவிடலாம். ஏனெனில் அது பாமுக்கின் நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான நாவல். அடுத்து இஸ்தான்புல் கொஞ்சம் பெரிய புத்தகம். நிறைய படங்கள் எல்லாம் இருக்கும். அதையும் சீக்கிரம் முடித்துவிடலாம் என்றெல்லாம் கணக்குப்போட்டு கண்ணனிடம், “ஒரு புத்தகத்துக்கு ஒன்றரை வருடம் கணக்கில் ஆறு வருடங்களில் நான்கு புத்தகத்தையும் முடித்துவிடுவேன்’ என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவரும் என்னை நம்பி உரிமையை வாங்கிவிட்டார். ஆனால் நான் Snow-ஐ மொழிபெயர்க்க அதிக காலம் எடுத்துக்கொண்டுவிட்டேன். அது அப்படியே இழுத்துக்கொண்டே போய்விட்டது. அதற்கடுத்து இஸ்தான்புல் மொழிபெயர்க்கவும் காலம் அதிகமாகிவிட்டது. ஆறுவருடங்களில் மூன்று புத்தகங்கள்தான் என்னால் முடிக்க முடிந்தது.

தொடர்ச்சியாக பாமுக்கின் எழுத்துகளில் வாழ்ந்துகொண்டிருப்பதில் ஒரு பெரிய அழுத்தம் இருந்தது. இதிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து இளைப்பாற வேண்டும்போல் இருந்தது. உளவியல்ரீதியாக இது என்னுடைய மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லலாம். ஏனென்றால் என்னை நானே பாமுக்காக என் மனசுக்குள் உணரத் தொடங்கியதுபோலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எப்படி என்றால் தினமும் நான் வேலைக்கு பைக்கில் கிளம்பி நண்பரின் கடையில் நிறுத்திவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறிப்போவதெல்லாம் குப்புசாமியாக அல்லாமல் பாமுக்காகவே பைக் ஓட்டி பாமுக்காகவே பஸ்ஸில் ஏறி பாமுக்காகவே வழியெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது மாதிரி.. கலசப்பாக்கத்தில் சாலையோரம் ஏதாவது விற்பனை செய்வார்கள். இதையெல்லாம் பாமுக் பார்த்து எழுதினால் எப்படி எழுதுவார்… இதே மாதிரி நான் பார்க்கும் ஒவ்வொரு பார்வையையும் பாமுக் பார்த்தால் எப்படி எழுதுவார்? பாமுக் பார்த்தால் எப்படி சொல்லுவார்? நம்மிடம் யாராவது பேசினால் பாமுக்காக இருந்தால் எப்படி பதில் சொல்லுவார்? இந்த மாதிரி பாமுக் பாமுக் என்று பாமுக் என் தலையில் மிகப்பெரிய ஒரு பிசாசாய், மலையேற முடியாத ஒரு பிசாசாய் இருந்தார். அது ஒரு விதத்தில் நல்லது. எந்த விதத்தில் என்றால்.. White castle மொழிபெயர்ப்பு பற்றி சொல்லவேண்டும். அது அவருடைய ஆரம்பகால ஆங்கில மொழிபெயர்ப்பு. அதை Victoria Holbrook மொழிபெயர்த்திருந்தார். My name is Red – ஐ Erdağ Göknar மொழிபெயர்த்திருந்தார். அதன் பிறகு The black book-ஐ முதலில் Güneli Gün என்கிற துருக்கிய மொழிபெயர்ப்பாளர்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால் பாமுக்குக்கு அந்த மொழிபெயர்ப்பில் திருப்தி ஏற்படவில்லை. பிறகுதான் அவருக்கு Maureen Freely கிடைத்தார். Maureen Freely பாமுக்குக்கு மிகப் பிடித்தமான மொழிபெயர்ப்பாளர். பாமுக்குக்கு ஆங்கிலமும் தெரியும். அதனால் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை அவரே ஒப்பிட்டுப் பார்ப்பார். Güneli Gün-ன் மொழிபெயர்ப்பு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அந்த அளவுக்கு உண்மையானதாக இல்லை என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. அதனால் Maureen Freely-யிடம் சொல்லி மறுபடியும் அதை மொழிபெயர்த்திருக்கிறார். இப்போது மார்க்கெட்டில் Maureen Freely  மொழிபெயர்ப்புதான் கிடைக்கும். பெரும்பாலும் Güneli Gün  மொழிபெயர்ப்பு கிடைக்காது.

Erdağ Göknar மொழிபெயர்ப்பில் My name is Red-ஐ படித்துவிட்டு Maureen Freely மொழிபெயர்ப்பில் Other colours என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட பாமுக்கின் மற்றப் படைப்புகளைப் படிக்கும்போது வித்தியாசமே தெரியாது. பாமுக்கின் உண்மையான குரலை இருவரும் மிகச்சரியாக அவர்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதனால் பாமுக்கின் நடை, அவர் எந்த மாதிரியான சொற்களைப் பிரயோகிப்பார் , தமிழில் இன்ன சொல்லைத்தான் பயன்படுத்துவார் என்றெல்லாம் உங்கள் வயிற்றுக்குள் உணர முடியும். என்று சொன்னான்  என்பாரா? என்று கூறினான் என்பாரா? வலது புறம் என்று எழுதுவாரா? வலப்புறம் என்று எழுதுவாரா? இவை எல்லாவற்றுக்கும் பாமுக் எப்படி எழுதுவார் என்று யோசிக்கும்போது வலதுபுறமா? வலப்புறமா? சொன்னானா? கூறினானா? அல்லது உரைத்தானா? எந்த இடத்தில் குதிரை என்பார்? எந்த இடத்தில் புரவி என்பார்? இந்த மாதிரி ஒவ்வொரு சொல்லும். அவருக்கு தமிழ் ஒருபோதும் தெரியாது. ஆனாலும் லா.ச.ரா. சொல்வது மாதிரி ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. பாமுக்கின் அந்த ஆன்மாவுக்கு எந்த சொல் பொருத்தமாக இருக்கும் என்பது பாமுக்கை முழுமையாக உள்வாங்கியிருப்பவனுக்குப் புரியும். விக்டோரியா ப்ரூக்ஸின் மொழிபெயர்ப்பில் அது கொஞ்சம் தடம் மாறுகிறது. White castle படிக்கும்போது பாமுக் பல வரிகளை இப்படி எழுதியிருக்க மாட்டாரே என்று எனக்குத் தோன்றுகிறது. இது மிகவும் அதிகப்பிரசங்கித்தனமான கருத்துதான். ஏனென்றால் அது பாமுக்கின் ஒப்புதலோடுதான் வந்திருக்கிறது. ஆனால் பாமுக்கின் மிக அணுக்கமான வாசகன் என்ற வகையில் அந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது விக்டோரியா ப்ரூக்ஸின் மொழிபெயர்ப்பு sounds more like an English Novel. பாமுக்கின் துருக்கியத்தன்மை, பாமுக்கின் தனித்துவ நடை அதில் சரியாகப் பொருந்தவில்லை. அதனால் நான் தமிழில் மொழிபெயர்க்கும்போது பாமுக் அதை மூலத்தில் எப்படி எழுதியிருந்திருப்பார் என்பதை நானே உத்தேசித்து அந்த நடையை, தொனியை பாமுக்தனமாக மாற்றி தமிழில் மொழிபெயர்த்தேன்.

ஒரிஜினலைப் படித்து நான் வெண்ணிறக்கோட்டை மொழிபெயர்ப்பை செய்யவில்லை. விக்டோரியா ப்ரூக்ஸ் மொழிபெயர்த்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்துதான் நான் செய்தேன். ஆனால் அந்தப் புத்தகத்தில் இல்லாத எதையும் நான் மொழிபெயர்க்கவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் இல்லாத எதையும் எழுதவே கூடாது. எழுதிய எதையும் விட்டுவிடவும் கூடாது. இது இரண்டும் நிச்சயம். ஆனால் அந்த தொனி (tone) இருக்கிறதல்லவா அதை நீங்கள் கொஞ்சம் ஆல்டர் பண்ணலாம். மொழிபெயர்ப்பாளனுக்கு என்று இருக்கிற சுதந்திரம் மிகக் குறுகிய வழி. அதற்குள் நீங்கள் செய்யலாம். எனவே விக்டோரியா ப்ரூக்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு பாமுக்கை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்று எனக்குத் தோன்றியதால் பாமுக்கின் ஒரிஜினல் முகத்தைப் பிரதிபலிக்கும் நடையில் நான் வெண்ணிறக்கோட்டையை நான் மொழிபெயர்த்தேன். மறுபடியும் சொல்கிறேன், எந்த ஒரு வார்த்தையையும் கூடுதலாகவோ, குறைச்சலாகவோ, சேர்த்தோ விடுபட்டோ நான் மொழிபெயர்க்கவில்லை. அப்படி மொழிபெயர்க்கும் உரிமையும் கிடையாது. ஆனால் எல்லா விஷயத்தையும் சொல்லி அந்தத் தொனியை நீங்கள் மாற்றலாம்.

 

 • ஓரான் பாமுக் புத்தகங்களுக்கு பிறகு நிலைமை எப்படியிருந்தது?

இந்த நான்கு புத்தகங்களையும் தொடர்ந்து மொழிபெயர்த்து முடித்தவுடனேயே என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள காலம் தேவைப்பட்டது. கண்ணன் ஒவ்வொரு முறையும் ஃப்ராங்க்பர்ட் போய்விட்டு வரும்போது நிறைய புத்தகங்களை வாங்கிவருவார்.  இவற்றில் எந்தெந்த புத்தகங்களை எல்லாம் நாம் மொழிபெயர்க்க உரிமை வாங்கலாம் என்று அவருடைய நண்பர்கள் எல்லோரிடமும் கொடுத்து கேட்பார். அப்போது Dag Solstad ன் Shyness and Dignity-ஐ கொடுத்திருந்தார். அது எனக்குப் படித்ததும் மிகவும் பிடித்துவிட்டது. கண்ணனிடம் நீங்கள் இதற்கு உரிமை வாங்கலாம், இதை நானே பண்ணுகிறேன் என்றேன். “நீங்க பண்ணுறீங்களா? அடுத்ததாக Black Book பண்ணனுமே?” என்றார். “இது ஒரு சின்ன புத்தகம்தான். இதை முடித்துவிட்டு Black Book வருகிறேன். அதற்கான கொஞ்ச கால நீட்டிப்புக்கான அனுமதி வாங்கிக்கொள்ளுங்கள்.” என்றேன். என்ன பண்ணுவது? ஒரு பதிப்பாளர் என்னை மாதிரியான மொழிபெயர்ப்பாளரிடம் மாட்டிக்கொண்டு படுகிற கஷ்டமெல்லாம் என்னவென்று நீங்கள் கண்ணனிடம்தான் கேட்கவேண்டும். கண்ணனுக்கு இப்போது ரத்த அழுத்தம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ரத்த அழுத்தம் வந்திருந்தாலோ, வயிற்றில் அல்சர் வந்திருந்தாலோ அதற்கு முக்கியமான காரணம் என்னை மாதிரியான ஆட்களாகத்தான் இருப்பார்கள். அவருக்கு வேறு வழியில்லை. சரி என்று சொல்லிவிட்டார். Dag Solstad  நாவலைப் படிக்கும்போது நான் ஜாலியாகப் படித்துமுடித்துவிட்டேன். ஆனால் மொழிபெயர்க்க உட்காரும்போதுதான் பெண்டு நிமிர்த்திவிட்டது. அது மிக மிக மிக மிக intense-ஆன ஒரு நாவல். அதை மொழிபெயர்க்க 650 நாட்களுக்கு மேல் ஆயிற்று. அது மிகச்சிறிய புத்தகம். கண்ணன் வெறுத்துப்போய்விட்டார். பாவம். மிக உள்முகமான ஒரு நாவல் அது. உடைந்த குடை நீங்கள் படித்தாலே தெரியும். அவ்வளவு எளிதாய் அதை மொழிமாற்றம் செய்யவே முடியாது. உடைந்த குடை முடித்துவிட்டு Black Book பண்ணலாம் என்றிருந்த நேரத்தில், அப்போது உடைந்த குடை முடிக்கவில்லை, அந்த நேரத்தில் அருந்ததி ராய் அவருடைய அடுத்த நாவலோடு வந்துவிட்டார். அருந்ததி ராய்க்கு முன்னால் பாமுக், முரகாமி, ஜூலியன் பார்ன்ஸ் யாருமே எனக்குப் பொருட்டில்லை. அருந்ததி ராய் என்னை எஸ்தா என்று அழைப்பார். நான் அவரை ராகேல் என்பேன். அருந்ததி ராகேல், குப்புசாமி எஸ்தப்பன். எஸ்தப்பனுக்கு ராகேல்தான் முக்கியம். நாங்கள் ஒரு கருவில் உருவான இரட்டை சகோதர சகோதரிகள். அதனால் என்னுடைய சகோதரி புத்தகம்தான் எனக்கு முக்கியம் என்று கண்ணனிடம் நான் அருந்த்தி ராயின் புத்தகத்தை மொழிபெயர்க்கப்போறேன் என்றேன். அப்படியென்றால் Black Book யார் பண்ணுவாங்க என்றார். வேறு யாரிடமாவது கொடுத்து பண்ணிக்கொள்ளுங்கள் என்றேன். அகிலன் மிக அற்புதமான மனிதர். உண்மையில் என்னை மிகவும் கூச்சத்தில் நெளிய வைத்துவிட்டார். அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். ஒரு கல்லூரியின் பிரின்சிபலாக இருந்து ஓய்வு பெற்றவர். எவ்வளவு சீனியர். அவர் எனக்கு ஃபோன் செய்து, பாமுக் என்றாலே நீங்கள்தான். நான் செய்யலாமா என்று கேட்டார். எனக்கு சிரிப்பாக இருந்தது. பாமுக்குக்கு நான் என்ன பாத்தியமா? அப்படியெல்லாம் இல்லை. பாமுக்குக்கு எவ்வளவோ மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். என்னிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. அதற்கான எந்த ஒரு தேவையும் இல்லை. ஆனால் அதுதான் அவரது பணிவடக்கம். அவ்வளவு பெரிய மனிதர் அவர். பாமுக்கை எப்படி அணுகவேண்டும் என்பதையெல்லாம் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கும் அவசியமே இல்லை. 35 வருடங்களாக ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தவர். என்னை மாதிரியான பையனிடம் பாமுக்கை மொழிபெயர்க்கும்போது என்னென்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என்றெல்லாம் கேட்கிறார் என்றால், நான் யோசிக்கிறேன், நான் இதுபோல் யாரிடமாவது போய்க் கேட்பேனா என்று. மானசீகமாக என் தலையில் இரண்டு அல்ல, ஏழெட்டு கொம்புகள் வளர்ந்திருப்பது போல எனக்குத் தோன்றும். அந்த மாதிரியான திமிர்த்தனத்தோடு இருக்கும் எனக்கு இவரைப் பார்க்கும்போது வெட்கமாக இருந்தது. எவ்வளவு பெரிய மனிதர் இப்படி இருக்கிறாரே என்று. இன்னும் அவருடையதைப் படிக்கவில்லை. ஆனால் அவர் மொழிபெயர்த்து முடிக்கும் தருவாயில் சொன்னார், “நான் பாமுக்கை எப்படி மொழிபெயர்த்திருக்கிறேன் என்றால்…  உங்களைப் போல அப்படியே ஒவ்வொரு வார்த்தைக்கும்.. அப்படியெல்லாம் பண்ணவில்லை, பையன்களுக்கு நான் எப்படி பாடம் நடத்துவேன்? கஷ்டமான ஒரு விஷயத்தை பையன்களுக்கு புரிகிற மாதிரி விளக்குவேன் இல்லையா? என்னுடைய மொழிபெயர்ப்பையும் பையன்களுக்கு பாடம் நடத்துவதைப் போலவே பார்க்கிறேன்.” என்றார். அப்படிப் பண்ணக்கூடாது என்றெல்லாம் கிடையவே கிடையாது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இதுதான் இறுதி வடிவம் என்று ஒன்றுமே கிடையாது.

ஒரு படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் வரலாம். இப்போது பாருங்கள், தஸ்தாயெவ்ஸ்கிக்கு எத்தனை? Constance Garnett- இலிருந்து ஆரம்பித்து எவ்வளவோ மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டன. நான் எல்லோரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன், Richard Pevear மொழிபெயர்ப்புதான் இருப்பதிலேயே மிகவும் நெருக்கமான மொழிபெயர்ப்பு. அப்படிதான் எல்லோருமே சொல்கிறார்கள். நபக்கோவ் கூட அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கிறார். Garnett- மொழிபெயர்ப்பை கிழிகிழி என்று கிழித்திருக்கிறார் மனிதர். அவரைக் கிழவி என்றுதான் குறிப்பிடுவார். கார்னெட் இல்லையென்றால் ரஷ்யன் மாஸ்டர் பீஸஸ் எல்லாம் வெளியுலகுக்குத் தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. ஆனால் அந்தக் கிழவி மொழிபெயர்க்கவே இல்லை, மறுகூறல்தான் செய்திருக்கிறது. தல்ஸ்தோய்,  தஸ்தயேவ்ஸ்கி, புஷ்கின், செக்காவ் எல்லா கதைகளையும் இந்தக்கிழவி தன்னுடைய குரலிலேயே சொல்கிறது, எல்லாமே மறுகூறல்தான். அந்தக் கதைகளைப் படிக்கும்போது தஸ்தாயேவ்ஸ்கியுடைய குரலே கேட்கவில்லை என்றெல்லாம் அவர் சொல்லியிருக்கிறார். அது வேறு விஷயம். ஆனால் Pevear and Volokhonsky மிக நுட்பமாக அந்தப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார்கள். நீங்கள் Pevear and Volokhonsky மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்கும்போது நிச்சயமாக அது வேறு மாதிரியான அனுபவமாகத்தான் உள்ளது. நீங்கள் ஏற்கனவே வேறு மொழிபெயர்ப்புகளில் அவருடைய இடியட்டையும் கரமசோவையும் படித்துவிட்டு பிறகு Pevear and Volokhonsky மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் Crime and Punishment- Oliver Ready ன் புது மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. ஆலிவர் ரீடியின் மொழிபெயர்ப்பு  Pevear and Volokhonsky-இன் மொழிபெயர்ப்பை விடவும் மிகுந்த உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று ஒரு கருத்து உள்ளது. எனக்குத் தெரியவில்லை. நான் அதைப் படித்தால்தான் தெரியும். அதனால் ஒரு படைப்புக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் இருக்கலாம். காலந்தோறும் புதிய மொழிபெயர்ப்புகளுக்கான அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.

அகிலன் சார் அப்படிப் பண்ணுகிறார் என்றால் அவரைப் பொறுத்தவரை அதுதான் சரியான மொழிபெயர்ப்பு. தேவதாஸ் அவருடைய மொழிபெயர்ப்புகளை அவருடைய பாணியில் பண்ணுகிறார் என்றால் அவரைப் பொறுத்தவரை அதுதான் சரி. எனக்கு என்னுடையது. அது அப்படிதான். நான் நம்புகிற சில விஷயங்கள் எனக்கு உண்டு. என்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் சில விஷயங்களை செய்கிறேன். இது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம்தான். என்னைப் பொறுத்தவரை என்னுடைய நம்பிக்கை என்னவென்றால் தமிழில் மொழிபெயர்ப்பது என்பது தமிழாக்குவது (Tamilize) கிடையாது. யாராவது என்னுடைய மொழிபெயர்ப்பை படித்துவிட்டு “உங்களுடைய மொழிபெயர்ப்பு ரொம்ப நல்லா இருக்கு. தமிழிலேயே எழுதப்பட்டது போல இருக்கு. பாத்திரங்களுடைய பெயர்களை எல்லாம் தமிழ்ப்பெயர்களாக மாற்றிவிட்டால் ஒரு தமிழ்ப்படைப்பை படிப்பது போலவே இருக்கு , ” என்று சொன்னால்  நான் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றுதான் தோன்றும். எப்படி என்றால் ஒரு துருக்கிய நாவலுடைய பாத்திரங்களின் பெயர்களை தமிழில் மாற்றிவிட்டால் அது தமிழ் நாவல் மாதிரியே இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? முடியவே முடியாது.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு குரல் இருக்கிறது. மிமிக்ரி பண்ணுவது போலத்தான். மிக எளிமையான உதாரணம் ஒன்று சொல்கிறேன். எம் ஆர் ராதாவுக்கென்று ஒரு குரல், உச்சரிப்பு எல்லாம் இருக்கிறது. எம் ஆர் ராதா தமிழில்தான் பேசுவார். ஆனால் கல்லூரிப் பையன்கள் செய்வார்களே அது போல எம் ஆர் ராதாவை நீங்கள் வேறு மொழியில் மிமிக்ரி பண்ணும்போது, ஆங்கிலத்தில் பேசும்போது எப்படி இருக்கும்? தமிழில் பேசுவது மாதிரிதானே ஆங்கிலத்திலும் பேசுவார்? அதை நீங்கள் சிவாஜித்தனமாக ஆங்கிலத்தில் செய்தால் நன்றாக இருக்குமா? மொழிபெயர்ப்பு என்பதும் மிமிக்ரி மாதிரிதான். அதனாலேயே நான் மிகுந்த சிரமப்பட்டுதான் மொழிபெயர்ப்பு செய்வேன்.

 • மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கும்போது அதற்கு ஏதாவது அந்தரங்கமான வரையறை இருக்கிறதா? அதைப் பற்றி சொல்லுங்களேன்.

கண்டிப்பாக உண்டு. முதலில் எனக்குப் பிடிக்கவேண்டும். எனக்கு எது பிடிக்கும் என்பதற்கு வரையறையே கிடையாது. எனக்குப் பிடிப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கும். I should love it. ஏனென்றால் அந்தப் புத்தகத்துடனேயே ஒரு வருடத்துக்குமேல் வாழப்போகிறேன். அதனால் எனக்கு வேண்டா வெறுப்பாக ஒரு விஷயத்தைப் பண்ண முடியாது. இரண்டாவது அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தோடு நான் உடன்பட்டிருக்க வேண்டும். உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை என்னால் செய்யமுடியாது. அருந்ததி ராயுடைய The Ministry of Utmost Happiness முழுக்க முழுக்க ஒரு அரசியல் நாவல் . அருந்த்தி ராயுடைய அரசியலுக்கு நான் எதிராக இருந்தால் அந்தப் பணியை என்னால் தொடவே முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். இன்னொன்று தமிழுக்கு அந்த நாவல் வந்தாகவேண்டிய கட்டாயம் என்று எனக்குத் தோன்றுகிறது.  இந்த காலகட்டத்துக்கு இந்த நாவல் தமிழில் வந்தாகவேண்டும் என்று நான் நினைப்பதுதான் முக்கிய காரணம். இப்போது உடைந்த குடை இருக்கிறதல்லவா, அதை நனவோடை என்று சொல்லமுடியாது, முழுக்க முழுக்க உள்முகமான ஒரு நாவல். அந்த மாதிரியான நாவல்கள் தமிழில் படிக்கக் கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பண்ணினேன். Modern life ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை உறவுமுறைகளை உண்டாக்குகிறது என்பது எல்லோர்க்கும் பொதுவான ஒரு விஷயம். அந்நிய நிலத்தில் நடந்தாலும் modern life கொடுக்கும் மனச்சிக்கல், உடைந்த குடையில் மிக முக்கியமானதாகப் பட்டது. இந்த மாதிரியான காரணங்கள்தான் நான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள். இன்னொன்றும் இருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பதற்கு மிகச்சிக்கலாக இருக்கும் என்னும் ஸ்கிரிப்டையும் நான் சவாலாக எடுத்துக்கொள்வேன்.  Raymond Carver எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவர் இருந்ததே பாவம் ஐம்பது வருஷம்தான். அவருடைய மொத்த சிறுகதைகளையும் ஒரு தொகுப்பில் அடக்கிவிடமுடியும். அதனால் அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்திருக்கிறேன் என்பது ஒன்றும் சாதனை கிடையாது. ஆனால் எல்லா கதைகளையும் என்னால் மொழிபெயர்க்க முடியுமா? பாமுக்கை விடவும் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர், முரகாமியை விடவும் மிக நெருக்கமான எழுத்தாளர் Raymond Carver. ஆனால் அவருடைய எல்லா கதைகளையும் என்னால் மொழிபெயர்க்கமுடியுமா என்று கேட்டால் பயம்தான் எனக்கு. இப்போது பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் வந்திருக்கிறதே இறகுகள், இந்த சிறுகதையை பத்துவருடமாக untranslatable என்ற வரிசையில் நான் வைத்திருந்தேன். ஒரு sensible translator-க்கு untranslatable என்று சில விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிய வேண்டும். எல்லாவற்றையும் மொழிபெயர்த்திட முடியாது. உதாரணத்துக்கு ஜே.டி.சாலிங்கரின் Catcher in the Rye.  என்னிடம் பத்து கோடி ரூபாய் கொடுத்து யாராவது பண்ணச்சொன்னாலும் பண்ண மாட்டேன். அது தமிழில் வந்திருக்கிறது. அது வேறு விஷயம். அதை மொழிபெயர்த்தவருக்கு பண்ண முடியும் என்று தோன்றியிருக்கிறது. பண்ணியிருக்கிறார். அதில் நான் போகவிரும்பவில்லை. என்னால் சாலிங்கருடைய Franny and Zooey-ஐக் கூட மொழிபெயர்க்க முடியாது. அவர் ஒரு மொழிபெயர்க்க முடியாத எழுத்தாளர் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் சொன்னேன் இல்லையா, நான் நம்புகிற சில விஷயங்கள் என்று. அந்த மாதிரிதான். Tobias Wolff எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர். அவருடைய எழுத்தை மொழிபெயர்ப்பது என்பது என்னால் முடியாத ஒரு விஷயம் என்பேன்.

 

 • அப்படியென்றால் மொழிபெயர்க்க முடியாத ஒன்று என்றும் ஒரு விஷயம் இருக்கிறது அல்லவா?  

நிச்சயம் இருக்கிறது. அதை நான் இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டும். ஏன் மொழிபெயர்க்க முடியாது என்றால் அந்த மூலத்துக்கு நியாயம் கற்பிக்க முடியாது. இந்த இடத்தில் தமிழையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். Tobias Wolff-ன் Hunters in the snow என்ற சிறுகதை. மிகவும் திட்பம் வாய்ந்த சிறுகதை. அதில் அமெரிக்காவில் இருக்கிற வேட்டைகாரர்கள் வேட்டைக்குப் போவார்கள். அவர்களுக்குள் கொச்சையாக கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் போகிற, அவர்களுக்குள் இருக்கிற love and hate பற்றிய கதை. அந்தக் கதையை ஏன் மொழிபெயர்க்கமுடியாது என்றால் அவர்கள் பேசுவது முழுக்க முழுக்க வசைச் சொற்கள். அமெரிக்க வசைச் சொற்கள். அமெரிக்க வசைச் சொற்களிலேயே இனவெறியும் இருக்கிறது. பேச்சுமொழியில் கருப்பர்களுடைய வசைச்சொற்கள் ஒரு மாதிரியாகவும் வெள்ளைக்காரர்களுடைய வசைச்சொற்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும். அமெரிக்கா என்பது மிகப்பெரிய நிலப்பரப்பு. ஒவ்வொரு நிலப்பரப்புக்கும்  உரித்தான வட்டார வழக்குகள்.  தமிழ் மாதிரிதான். திருநெல்வேலி வசை, தஞ்சாவூர் வசை, வட ஆற்காடு வசை என்று இருக்கின்றன அல்லவா? அதைப் போலவேதான். இத்தனை விஷயங்கள் இருக்கின்றன. இதை நீங்கள் துல்லியமாகத் தமிழில் எப்படிக் கொண்டுவர முடியும்? தமிழில் அந்தக் கெட்டவார்த்தைகளை மொழிபெயர்க்க முடியாது. Hunters in the Snow கதையை இதுதான் கதை என்று வாய்வழி நான் உங்களுக்கு சொல்லலாம். ஆனால் மொழிபெயர்க்க உட்கார்ந்தால் இந்த மாதிரி untranslatable வரிகளை ஏதோவொன்றைப் போட்டு இதைத்தான் அந்த வரி சொல்லவருகிறது என்று ஒப்பேற்றி அந்த மொழிபெயர்ப்பை செய்வதற்கு என்னால் முடியாது. அதனால் எல்லாருக்கும் அது untranslatable என்று சொல்லவில்லை. நான் நம்புகிற, என்னுடைய மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளுக்கு untranslatable நிறைய உள்ளன. ஆனால் காலச்சுவட்டில் வந்திருக்கின்ற ரேமண்ட் கார்வருடைய இறகுகள் கதை மிக நுட்பமான விஷயத்தைச் சொல்லும் கதை. அவ்வளவு நுட்பத்தை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியுமா என்று என் மீதே எனக்கு நம்பிக்கையின்மையும் சந்தேகமும் இருந்தது. கோணங்கி அண்ணனிடம் பேசும்போது, எப்போதுமே என் வாயைக் கிளறி “நல்ல கதைகளையெல்லாம் சொல்லுடா” என்பார். அவரிடம் இந்தக் கதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது மிகுந்த உற்சாகத்துடன் “பண்ணுடா அந்தக் கதையை” என்றார். “இல்லண்ணா, அந்தக் கதை ரொம்ப நுட்பமான கதை, அதை மொழிபெயர்க்கிறது கஷ்டம்” என்றேன். “அதெல்லாம் இல்லை, நீ மொழிபெயர்த்து கல்குதிரைக்கு அனுப்பு” என்றார். அவரை நான் ஏமாற்றிவிட்டு காலச்சுவட்டுக்கு அனுப்பிவிட்டேன். ஏன் என்றால் அவர் கொடுத்த கால அவகாசத்துக்குள் என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அடுத்த முறை கோணங்கியைப் பார்க்கும்போது அவர் என்னைத் திட்டுவார், முதுகில் குத்துவார், அடிவாங்கிக் கொள்வேன். ஆனால் பண்ணிமுடித்துவிட்டேன். அது காலச்சுவட்டில் வந்துவிட்டது. ஏறக்குறைய பத்து வருஷமாக எனக்கு நம்பிக்கையில்லாமல் இருந்தது. ஆனால் கோணங்கியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கதையை மொழிபெயர்த்தே ஆகவேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.  ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் untranslatable கதைகள் என்பவை ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

 

 • இப்போது நிறைய மொழிபெயர்ப்புகள் வருகின்றன. உலகமயமாக்கல் காரணமாக நிறைய புத்தகங்களும் கிடைக்கின்றன. நவீன உலகத்தில் புத்தகங்கள் எளிதாக வாசிக்கத்தக்க வகையில் பிடிஎஃப், கிண்டில் மூலமாகவும் கிடைக்கின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு மொழிபெயர்ப்பைப் பண்ணும்போது இந்த சூழலுக்கு இந்த மொழிபெயர்ப்பு வருவது சரியாக இருக்குமா என்ற புரிதல் இங்கு உள்ளதா? காம்யு அந்நியன், ராக், லத்தீன் அமெரிக்கன் என நிறைய வந்திருக்கின்றன. இவையெல்லாம் கடந்த பத்து வருஷங்களாக ஒரு பெரிய மாற்றம் உண்டாக்கியிருக்கின்றன. அந்த மாதிரி உண்மையிலேயே மொழிபெயர்ப்பு இங்கு பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறதா?

கண்டிப்பாக. அதில் சந்தேகமே இல்லை. அந்நியன் என்று சொன்னீர்கள் இல்லையா? அந்நியன் எல்லாம் உலகமயமாக்கல் என்ற பதம் உருவாவதற்கு முன்பே தமிழுக்கு வந்துவிட்ட ஒரு நாவல் அது. அந்நியன் தமிழ் இலக்கியச்சூழலில் ஏற்படுத்திய பாதிப்பு மிக முக்கியமானது. இது பற்றி விரிவாகவே நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். மொழிபெயர்ப்புகள் எல்லாக் காலக்கட்டத்திலும் அந்தக்காலத்தின் முக்கியமான ஒரு பார்வையை முன்வைத்திருக்கின்றன. அவை எழுத்தாளர்களையும் பாதித்திருக்கின்றன. புதுப்புது விஷயங்களை, இதுவரை எழுதியிராத விஷயங்களை எழுதவைத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் தமிழின் நேரடி படைப்புகளில் உண்டாக்கிய தாக்கம் மிகப் பெரிது. சாகித்ய அகாடமிக் கூட்டம் ஒன்றில் என்னுடைய கட்டுரையின் தலைப்பும் இதுதான், ‘ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழிபெயர்ப்புகள் தமிழ்ப் படைப்புகளில் ஏற்படுத்திய தாக்கம்’ அது ஒரு நீண்ட கட்டுரை. அது மிகவும் விரிவாகப் பேசவேண்டிய விஷயம்.

 • அப்படியென்றால்மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறதா?

மொழிபெயர்ப்புக்கான தேவை எப்போதுமே இருக்கிறது. ஏனென்றால் உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தந்த விஷயங்களின் பிரதிபலிப்பாகத்தான் அந்தந்த படைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் இந்த மாதிரியான நெருக்கடியான காலக்கட்டத்தில், ஏற்கனவே வெளிவந்த பல விஷயங்கள் மறுபடியும் ஞாபகத்துக்கு வருகின்றன. அடுத்து நான் மொழிபெயர்க்க Brave new world-ஐத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே இன்றைய காலச்சூழல்.

George Orwell ன் Nineteen Eighty-Four -ஐ கா.நா.சு. மொழிபெயர்த்தது ஏறக்குறைய ஐம்பது அறுபது வருடத்துக்கு முன்பு. அந்த நாவல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வந்த நாவல். அவருடைய Animal Farm- 1984- இரண்டையும் அறுபதுகளில் கா.நா.சு. மொழிபெயர்த்திருக்கிறார். அதை அவர் மொழிபெயர்க்கும்போது ஆர்வல் சொல்கின்ற விஷயம், அந்த கம்யூனிசம், நாசிசம் வீழ்ந்த கதை எல்லாம் முடிந்துவிட்ட காலக்கட்டத்தினுடைய விஷயங்கள். ஆனால் அதே Nineteen Eighty-Four இன்றைய காலக்கட்டத்துக்கு இப்போதுள்ள Neo-Nazism-க்கு மிகப் பொருத்தப்பாட்டுடன் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அதன் முக்கியத்துவம் வேறு மாதிரி இருக்கிறது. 1984 ஒரு விஷயத்தை சொல்கிறது. அதன் பிறகு அது சொல்லாத ஒரு பெரிய ஏரியா ஒன்று இருக்கிறது. 1984-ஐ அவர் எழுதியதே அதற்கு முன்னால் Huxley எழுதிய Brave new world-ன் பாதிப்புதான். Brave new world முழுக்க முழுக்க வேறு மாதிரியான dystopian நாவல். இன்றைய காலக்கட்டத்துக்கு அந்த நாவல் வெளிவந்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. கிளாசிக் நாவல்களும் இந்தக் காலக்கட்டத்துக்கு புது அர்த்தத்தைக் கொடுப்பதாக உள்ளன. லத்தீன் அமெரிக்காவிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ ஜப்பானிலோ அங்கிருக்கும் அரசியல் சூழலின் பிரதிபலிப்பாக வெளிவரும் நாவல் நமக்கும் ஏதொவொரு ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கிறது.


நேர்காணல்  தொடர்ச்சி கீழுள்ள இணைப்பிலுள்ளது.

எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 2


           

 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.