நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?
நான் இருக்கின்றேன்.
பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.
இலேசான ஓர் இரவுணவு.
குளியல்.
அவ்வளவு போதையேறாத குடி.
அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும் அந்த ‘விடயம்‘.
படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ–போன்களைப் பார்ப்பது.
[ads_hr hr_style=”hr-fade”]
கூட்டுக் களியாட்டம்
இலை உதிர்காலம்.
சாம்பல் முகில்களும், குளிரும்.
காற்றில் மரமெரியும் வாசம்.
முற்றத்தில் இலைகள்.
வரிசையாக உயர்ந்து நின்ற மரங்கள்
உதிர்த்த இலைகளைப் பையில் சேகரிப்பதற்காய்
நாங்கள் திரும்பவும் வெளியே போகத் தீர்மானித்தோம்.
நீ மிகு கவர்ச்சியான குரலில்,
“குப்பை போடும் பைகள் முடிந்துவிட்டன.”
உனது தோள்களைக் குலுக்கிச் சொன்னதில் நான் பார்த்திருக்கக்கூடும்
உன் முலைகள் அசைவதை,
உன் மெல்லிய சுவட்டராலோ,
நீ வேலைக்கென அணியும் சேர்ட்டாலோ
உன் ரீ-சேர்ட்டாலோ
அவை மறைக்கப்படவில்லை அல்லவா
“சரி, உள்ளே போகின்றேன்,” நான் சொன்னேன்.
பிறகு, நாங்கள் மாட்டிறைச்சி சூப்பை சூடாக்கிக் குடித்தபின்
நீ படுக்கைக்குச் சென்றாய்,
நான் Jason Bourne படத்தின் அரைவாசியைப் பார்த்தேன்.
நான் இதை கூட்டுக்களியாட்டம் எனச் சொன்னேனா?
மன்னிக்க, எனது மனம் அலைபாய்ந்திருக்கிறது.
முற்றத்து வேலையைத்தான் நான் அப்படிச் சொன்னேன்.
[ads_hr hr_style=”hr-fade”]
இது அதற்கான சரியான நேரந்தானா?
போவதற்குத் தயாராக
கதவடியில் நின்றுகொண்டிருக்கின்றேன்,
காலால் தட்டுகிறேன்
(நாங்கள் எனது சகோதரியின் எதிர்பாரா விருந்துக்கு தாமதமாகி இருக்கின்றோம்)
நான் திரும்பி உன்னைச் சமையலறையில் பார்க்கின்றேன்,
கோடை மாலையில் வாவியில் ஒரு மனிதன் தன் தூண்டிலை இயல்பாய்
நேர்ப்படுத்துவதுபோல (நீ)
அது தூண்டில் அல்ல.
நகம் வெட்டி
அத்துடன் நீ நகங்களை ஸிங்கிற்குள் வெட்டிக்கொண்டிருக்கின்றாய்.
நீ என்னை பார்த்து, சிலவேளை என் முகத்தில் தோன்றிய உணர்வாலோ என்னவோ
“என்ன?” என்கிறாய்.
இதை எதற்கானதென்பதை நீ ஏற்கனவே விளங்காதுவிட்டிருந்தால்
என்னால் ஒருபோதுமே அதை விளங்கப்படுத்தவே முடியாது.
[ads_hr hr_style=”hr-fade”]
எப்போது உனது கிண்டிலை அணைப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றாய்?
காதல் ஒளியென்று அவர்கள் சொல்கிறார்கள்.
நான் நினைக்கின்றேன் அது ஒளிதானென்று.
எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
நான் சுபாரு கார் விளம்பரத்தில் இதைக் கேட்டிருக்கலாம்.
முக்கியமான விடயம் என்னவென்றால் நானுனது ஒளியை இப்போது பார்க்கின்றேன்.
அதைப் பார்க்காமல் இருந்திருக்கலாமென்றும் விரும்பினேன்.
ஏனெனில் நான் மிகக் களைப்படைந்துவிட்டேன்.
எனக்கு இது ஒரு நீண்ட நாள்.
அத்துடன் நாளை விடிகாலையில் எழும்பவேண்டியும் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் நீயும் அறிவாய்.
அவர்கள் சொல்லும் இன்னொரு விடயம்
ஒரு தங்கமீனைப் போல
ஒரு மனிதன் எதையாவது அறியும்போது, உடனேயே அதை மறந்தும் விடுகின்றான்,
தொந்தரவுக்குட்படும்போது நான் பெரூமூச்சின் பெருமூச்சை விடுகின்றேன்.
ஆனால் நீ இதைக் கேட்கவில்லை.
ஏனெனில் உனது காதுகளில் ஹெட்போன் .
புடீங்கில் மக்கள் நீச்சல் போடும் விடீயோவைப் போன்ற ஒன்றை நீ பார்த்துக்கொண்டிருக்க
நான் நினைத்தேன் நீ புத்தகம் வாசித்துக்கொண்டிருந்ததாய்.
சிலவேளை காதல் ஒளியைப் போல இருக்கலாம்.
அவ்வாறே அது மங்கியும் போகலாம்.
உண்மையா? குளியலறையில் இருந்து நீ பார்க்க, அது உன்னைக் கொல்லுமா?
- ஜோன் கென்னி
தமிழில்: டிசே தமிழன்
[ads_hr hr_style=”hr-vertical-lines”]
ஆசிரியர் குறிப்பு:
[tds_note]
மூல ஆசிரியர்:
ஜோன் கென்னி, ப்ராக்ளின்- நியூயோர்க்கில் வசித்து வருகின்றார். இதுவரை இரண்டு நாவல்களையும், மூன்று கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவருடைய கவிதைகள் மிகுந்த எள்ளல் தன்மையுடையவை. யதார்த்த வாழ்வின் நெருக்குவாரங்களையும், அதை நகைச்சுவையுடன் தாண்டிச் செல்வதுகின்ற தருணங்களையும் நேர்த்தியாகப் பதிவு செய்பவை இவரது எழுத்துக்கள்.
கவிதைத் தொகுப்புக்கள்:
திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்
குழந்தைகளுடன் உள்ளவர்க்கான காதல் கவிதைகள்
கவலையான மனிதர்க்கான காதல் கவிதைகள்
[/tds_note]
புதினம் ஒன்றைப்பேசும் கவிதை , சிறப்பு , சிறந்த மொழி பெயர்ப்பு