பின்-நவீனத்துவ விமர்சனங்களின் போதாமை


– டான் குயிக்ஸாட்டை முன்வைத்து – 

செர்வான்டிஸின் ‘டான் குயிக்ஸாட்’ ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நீட்ஷேவின் குயிக்ஸாட் வேறு, தஸ்தாயெவ்ஸ்கியின் குயிக்ஸாட் வேறு, காஃப்காவின் குயிக்ஸாட் வேறு.. அடோர்னோவின் நவீனத்துவ வாசிப்பில் முற்றிலும் வேறொரு குயிக்ஸாட்.

இன்று நிறைய குயிக்ஸாட்களை உருவாக்கி வைத்திருக்கும் தகவல் தொடர்பு ஊடகமும் நுகர்வுக் கலாச்சாரச் சூழலும் செர்வான்டிஸையும் குயிக்ஸாட்டாக்கிய குறுங்கதை இது.

குயிக்ஸாட்டின் அறிவாதாரக் குவியம்:

இருபொருள்களுக்கிடையே அல்லது செயல்களுக்கிடையே வகை மாதிரிகளையும் ஒற்றுமைகளையும் இனங்காண்பது மனிதர்களுக்குரிய பொதுப்பண்புகளுள் ஒன்று. நம்முடைய புராதன வேட்டை சமூகத்தில் எச்சரிக்கை உணர்ச்சியாக இது இருந்திருக்க வேண்டும்.எண்களை மற்றும் யதேச்சையான சம்பவங்களை இணைத்து conspiracy தியரிகளை உருவாக்குவது என நவீனமாக இப்போது யூட்டூப்புகளிலும் வாட்சாப்களிலும் வெளிப்படுகிறது. மற்றும் கவிஞர்களிடையே இவ்வாறு – ‘தூக்கில் இறந்தவள் கால்கள்போல சன்னல் சீலைகளை முடிச்சிடாதே’ – ( போகன் சங்கர்)

பூக்கோ ஒவ்வொரு காலகட்டத்தின் கருத்தாக்கச் சட்டங்களை அறிவுக்குவியம் (Episteme) என்கிறார். அவர் கருத்துப்படி ஒரு அறிவுக்குவியம் உருவாகும் தருவாயில் இன்னொன்று உருவெடுக்கிறது. [கோபிசந்த் நாரங்]

பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய அறிவுக்குவியமாக உவமானம் (similitude) இருந்தது. பொருள்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் தொகுக்கப்பட்டன. குறிகள்(signs) அவை உணர்த்திய உவமானத்தை ஒத்திருந்தன எனும் கருத்தாக்கம் நிலவியது. ஆனால், பதினேழாம் நூற்றாண்டுகளில் இதன் திசை மாறியது என்று பூக்கோ குறிப்பிடுகிறார். குறிகள் புறமேயுள்ள பெளதிக பொருள்களிலிருந்து மெல்ல விலக்கம் பெற்றன. உள்ளுறை (innate) பண்புகளை அவை கொண்டிருக்கவில்லை மாறாக அவை குறிகளோடு எதேச்சையான (arbitrary) உறவை மட்டுமே கொண்டிருக்கின்றன என்று முன்மொழியப்பட்டது. அவ்வுறவு இடுகுறித் தன்மையாலானது என்றனர்.

விரைவில் உவமானங்கள் அறிவுப்புலத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்தன.தொகுப்பு முறையியலும்(taxonomy) வெகுவாக மாற்றம் பெறத் தொடங்கியது. உவமானங்கள் வெறும் பிரதிநிதித்துவம்(representation) வாய்ந்தனவேயன்றி உண்மையான அறிவு அல்ல.மேலும், அவை மனித மனத்தின் உருவாக்கம் எனும் சிந்தனை வலுப்பெற்றது.

குயிக்ஸாட்டின் புலனுணர்வு, உவமானத்தை அடிப்படையாகக் கொண்ட மெய்க்கோள்களை(premises) உடையது.யதார்த்தத்தை உள்வாங்கிக்கொள்ள அவ்வறிவு பெளதீக உலகில் ஒற்றுமைகளை(similarities)  பயன்படுத்திக்கொள்கிறது.தான் படித்த கதைகளில் வரும் முறையே யதார்த்த உலகமும் இயங்குகிறதென புனைந்துகொள்ள உவமான அடிப்படையிலான அறிவு வழிசெய்கிறது.அது நிகழாத போது புத்தகங்களில் வரும் மந்திரவாதிகளைப்போல நிஜ உலகிலும் மந்திரவாதிகள் தன்னுடைய செயலைத் தடுக்க முனைகின்றனர் என்றெண்ணி அத்தோல்வியை உவமானம் மூலமே இலக்காக்கமும்(idealize) செய்துகொள்கிறது அக்கதாப்பாத்திரம்.இவ்வாறு உவமான தர்க்கம்(logic of similitude) குயிக்ஸாட்டின் உளவியல் சமநிலைக்கு வழிகோலுகிறது.

[ads-quote-center cite=’Alenka Zupancic ‘]The reality principle is not some kind of natural way associated with how things are.. The reality principle itself is ideologically mediated;one could even claim that it constitutes the highest form of ideology, the ideology that presents itself as empirical fact..[/ads-quote-center]

இரண்டாம் பாகத்தில் டான் குயிக்ஸாட் என்ற கதாபாத்திரம் மேலும் அடர்த்தி பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் வரும் மனிதர்கள் டான் குயிக்ஸாட்டை, நாவலின் கதாபாத்திரத்தோடு தொடர்புப்படுத்தியே அவனோடு உறவாடுகிறார்கள். அவர்கள் அனைவரும் முதல் பாகத்தின் வழியே குயிக்ஸாட்டை அறிந்துகொண்டவர்கள். எனில், இப்போது அந்த கதாபாத்திரம் அச்சமூகத்தில் ஒரு குறியாக (sign) பரிமாற்றம் அடைகிறது. முதல் பாகத்தில் அவன் மேற்கொண்ட பயணங்கள் மற்றும் ஆசிரியரின் கருத்தீடுகளும் ஏற்றப்பட்ட ஒருவனாக சமூகச்சூழலில் அனைவராலும் உள்வாங்கப்படுகிறான். உதாரணமாக தன்னுடைய முதல் பயணத்தில் குயிக்ஸாட் சென்றடையும் உணவு விடுதியின் உரிமையாளர் குயிக்ஸாட் போன்ற ஒருவனை முதன்முறையாக அப்போது தான் எதிர்கொள்கிறார். உணவு விடுதியைக் கோட்டை மாளிகை என்றும் அங்கு பரிமாறப்பட்ட மோசமான பண்டங்களைச் சிறப்பான அரசவை விருந்தென்றும் பொருள்மயக்கம் கொள்பவன் என்று அறிந்தவுடன் குயிக்ஸாட்டினுடைய விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் இயைந்து நடந்துகொள்கிறார். இரண்டாம் பாகத்தில் அவன் சந்திப்பவர்களிலிருந்து இவர் முற்றிலும் வேறுபட்டவர். இரண்டாம் பாகத்தில் குயிக்ஸாட் நடமாடிக்கொண்டிருக்கும் ‘கதை’யாக பார்க்கப்படுகிறான். உண்மையில், இரண்டாம் பகுதியில் அவன் பிறரால்(புனைவு வெளி சமூகத்தால்) வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று சொல்லவேண்டும்.

குயிக்ஸாட்டின் செயற்பாடுகள் ஆசிரியரால் அங்கதம் செய்யப்படுவது அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அறிவுக்குவிய பரிமாற்றம் எனும் வாசிப்பிற்கு இடம் தருகிறார் பூக்கோ.ஆசிரியரின் தார்மீக நிலையை உணர்த்தச் செய்வது அங்கதம். பகுத்தறிவு எனும் தார்மீக கருத்துப்புலத்தில் நின்று கொண்டு பிறழ் அறிவுடையவன் என குயிக்ஸாட்டின் நடவடிக்கைகளை செர்வான்டிஸ் கேலிக்குள்ளாக்குகிறார்.

குயிக்ஸாட், புனைவுப்பரப்பிற்கும் பௌதீக பரப்பிற்குமிடையேயுள்ள  வித்தியாசங்களை உணர்வதில்லை. அவ்விரு பரப்புகளையும் ஒப்பிட மட்டுமே குயிக்ஸாட்டால் முடிகிறது. அனுபவ உலகமாகட்டும் அவனுடைய உலகப் பார்வையாகட்டும் அனைத்தும் ‘உவமானச் செயற்பாடாக’ நிலை பெறுகிறது. அனுபவ புலத்திற்குள் நுழையும் அனைத்தின் மேலும் உவமானத்தை ஏற்றி சமநிலை கொள்கிறான். ‘நான் அப்படியொன்றை நம்பியிருக்கவில்லையென்றால் அதனைப் பார்த்திருக்க முடியாது’ எனும் மார்ஷெல் மெக் லூகனின் சொற்கள் நினைவிற்கு வருகின்றன.குயிக்ஸாட் தான் நம்பியதை மட்டுமே பார்க்கிறான்.

அவனுடைய புலன் உணர்வுச் செயற்பாங்கை இவ்வாறு எளிமையாக விளக்கலாம்.அவன் வாசித்திருக்கும் சாகசக் கதைகளில் சொல்லப்பட்டபடி தன்னுடைய யதார்த்தம் இருக்கிறதா என ஒப்பிட்டபடியே இருக்கிறான். ஆகையால், குயிக்ஸாட்டிற்கு எல்லாமே குறிகள் (signs),போலவே அனைத்து குறிகளும் ஒற்றையொன்று ஒத்திருக்கின்றன.எனவே அனைத்து ஒற்றுமைகளுமே அவனுக்கு குறிகள். இவ்வாறு, அவன் யதார்த்தத்தின் தொந்தரவின்றி புனைவுவெளியில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்க முடியும். புறவுலகத் தூண்டல்களை (stimulus)  புனைவுப்பரப்பின் விரிவாழத்திற்கு அக்கதாபாத்திரம் இவ்விதம் பயன்படுத்திக்கொள்கிறது. டான் குயிக்ஸாட் ஒரு நவீன தொன்மமாக வாசிக்கப்படுவதற்கு இடங்கொடுப்பது இப்பண்புதான்.

எதனால் குயிக்ஸாட் ?

இனி குயிக்ஸாட்டின் உளநிலையை உருவாக்கிய கூறுகளையும் பின்னணிகளையும் காண்போம்.

ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு படைமானியப் பண்ணை முறை ஐரோப்பா முழுமையும் உருப்பெற்றது. அந்த முறையில் அரசர், வைகவுண்ட், டியூக்,பேரன், பிரபு (King,Viscount,Duke,Baron and Lord) என்று பல மட்டங்களில் அவரவர் தகுதிக்குத் தக்க அளவில் படைகளைப் பராமரித்துக் கொள்ளும் உரிமை வேண்டுபவர்கள், அவற்றைத் தேவையான நேரத்தில் தங்கள் கூட்டணியின் தலைவரான அரசருக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்குப் பிரதிபலனாக அவர்களின் நிலங்களின் மீது மேலாண்மை செலுத்தும் உரிமையை அரசன் அவர்களுக்கு வழங்கிய முறையே படைமானிய பண்ணை முறை. இது விவசாய அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட ராணுவ ஏற்பாடு. (எஸ்.நீலகண்டன் – செவ்வியல் அரசியல் பொருளாதாரம்)

இம்முறை பதினான்காம் நூற்றாண்டிலேயே காலாவதியாகத் தொடங்கியது. சிறிய வடிவிலான துப்பாக்கிகளின் அறிமுகம் நைட்ஸ் (Knights)களின் ஆதிக்கத்தை மழுங்கடித்தது. நடந்தேறிய போர்களில் குதிரை வீரர்களான நைட்ஸ்களைக் காட்டிலும் காலாட்படை வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். எனவே, நைட்ஸ் மெல்ல அரசியல் அதிகார சார்பிலிருந்தும் நீக்கப்பட்டனர். பின்னர் வீரத்திருத்தகை அமைப்பு  (knighthood) மரபாகவும் வீரசாகசக் கதைகளிலுமே நிலைபெற்றன.

இம்முறை வீழ்ச்சி பெற்ற பின்னர் மக்களுக்கு அவர்கள் நிறைய அசௌகரியங்களை ஏற்படுத்தினர். சாலை பயணிகளுக்கும் தொல்லை கொடுத்தனர். கிறித்துவ ஆலய குருமார்கள் இதனைச் சமாளிக்க அவர்களைப் பண்படுத்தி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து பயன்பெற விரும்பினர். மடாலயங்களைப் பாதுகாக்கவும் வறிய மக்களுக்கு உதவவும் அவர்களைப் பயன்படுத்தினர். இவ்வாறு கிருத்தவ ஒழுக்க விழுமியங்களும் வீரத் திருமகன்களின் போர் குண விழுமியங்களும் (chivalric order) ஒன்றிணையப் பெற்றன.  வீரம், விசுவாசம், பாராட்டு, கண்ணியம், கருணை முதலியன அவர்களின் நடத்தைக்கு அலகாகின. இவற்றைப் பறைசாற்றும் வண்ணம் இலக்கியங்களும் அக்காலகட்டத்தில் வளர்ந்து வந்தன.

இயேசுவின் ரத்தம் யோசஃப் அரிமேத்தியாவால் கோப்பையில் சேமிக்கப்பட்டிருக்கிறது. வட்டமேசையைச் சேர்ந்த நைட்ஸ் அக்கோப்பையை அடைய விரும்புகிறார்கள் என்பது பின்னணி. கிறித்துவ அடிப்படைகளுக்கு இலக்கணமாக விளங்கும் வீரனால் தான் அடைய முடியும் என்றும் சொல்லப்பட்டது.  கலாஹாத் (galahad) மற்றும் அவனுடைய கூட்டாளிகள் கோப்பையைப் பெறுகின்றனர். இதில், பிற நைட்ஸ் உலகியல் ஆசை கொண்டவர்களாக வாசிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டாம் வகையினரே சாகசக் கதைகளின் ‘காதல்,சாகசம்’ முதலியவற்றுக்குச் சின்னமாகின்றனர். அவர்களையே கதாநாயகர்களாக அக்கதைகள் பாவிக்கின்றன.

இவ்விரு பின்னணிகளும் (உயரிய மதச் சின்னம் மற்றும் காதல் சாகச நாயகர்கள்) அக்கால சாகசக் காதல் கதைகளுக்கு அடிப்படையாகின்றன. (கிறித்துவமல்லாத மாயத் தந்திரங்களை வருணனைகளில் பயன்படுத்தியிருப்பதால் தேவாலயங்கள் சாகசக் கதைகளை விமர்சனம் செய்தன.)

நைட்ஸ், அரசியர்களின் மேல் காதல் வயப்படுவதாகப் பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ‘அடைய முடியாத பெண்களுக்காக ஏங்குவது’ என்கிற கருத்தாக்கம் அவ்விலக்கியங்களில் தலைபெற்றிருந்தது. இதுவே துல்சினியா எனும் கற்பனைக் கதாபாத்திரத்திரத்தை உருவாக்க குயிக்ஸாட்டை உந்தியிருக்கிறது. குயிக்ஸாட்டின் உளவார்ப்பு இத்தகைய பின்னணியைக் கொண்ட சாகசப் பயண இலக்கியங்கள் உருவாக்கியவை.

குயிக்ஸாட்டின் உள இயக்கம் :

குயிக்ஸாட்டின் உள இயக்கம் லக்கான் குறிப்பிடும் குழந்தை ஆளுமை படிமலர்ச்சியை ஒத்தது. கார்டீசியன் தத்துவப் பார்வை மனிதர்களுக்கு சுயம் முன்னரே கொடுக்கப்பட்ட ஒன்று என்றும் படிமுறைகளால் பெறப்பட்ட ஒன்றல்ல என்றும் விவாதித்து வளர்ந்தது. இதற்கு எதிர்த்திசையில் லக்கானிய ஈகோ உருவாக்கம் உள்ளது.பிறந்த குழந்தை, சமூக மற்றும் குறியியல் தொடரமைப்பு (semiotic) நிறைந்த உலகத்திற்கு எவ்வித தொடர்புமில்லாமல் இருக்கிறது.மொழியின் மூலம்தான் “சுயம்” , “ஈகோ” , “நான்” முதலியவை உருப்பெற முடியும்.

முதல் முறை கண்ணாடியைப் பார்க்கும் தருணத்தில் தான் குழந்தை தன்னையொரு ஸ்தூலமான வடிவுடைய தனியர் என்றுணர்கிறது. இது ஆறு மாதங்களுள் நிகழ்வதாக லக்கான் கூறுகிறார். இவ்விதமான ஒன்றுதல் (identification) குழந்தையின் ஈகோ உருவாக்கத்திற்கு வழி செய்கிறது. கண்ணாடியில் தன்னுடைய பிரதிபலிப்பை ‘நான்’ என உருவகித்துக்கொள்கிறது. பிறகு Ideal-I யிலிருந்து அந்நியமாகி அதுவே தன் அகநிலை மீது வேட்கை கொள்கிறது. ‘பிற’வற்றை விரும்புவதற்கு மனிதர்கள் இவ்வாறுதான் பழகிக்கொள்கின்றனர் என விவரிக்கிறார். இந்தக் கண்ணாடிப் பருவத்தை (mirror stage) அடுத்துத்தான் அக்குழந்தை சமூக உறவாடல்களுக்குள் நுழைகிறது.

மாஸ் திரைப்படங்களிலும், விளம்பர போட்டோ ஷூட்களிலும் கதாநாயகர்கள் ஐடியலைஸ் (Idealized) செய்யப்படும்போது, பார்வையாளர்கள் எளிதில் அப்பிம்பத்தோடு ஒன்றிப்போகின்றனர். மாஸ் திரைப்பட நாயகர்களும் குயிக்ஸாட்டைப்போல ‘உலகைக் காப்பாற்றப் போகிறேன்’ என்று கிளம்புவது யதேச்சையாக நிகழ்ந்தவையல்ல.

சாகசக் கதை நாயகர்கள் பின்பற்றும் விழுமியங்களையும் நடத்தைகளையும் குயிக்ஸாட் தீவிரமாகக்  கடைப்பிடிக்கிறான். அவர்களோடு தொடர்ந்து தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு குறியீட்டு ஒன்றுதல் (symbolic identification) அடைகிறான். அக்கதைகளின் புனைவு வெளியும் ஒழுக்க விழுமியங்களும் குயிக்ஸாட்டின் Ideal-I.இது லக்கானின் குழந்தை சுய பிம்ப கட்டமைப்பை ஒத்த மனவியக்கம்.

(துல்சினியா எனும் கதாபாத்திரம்  குயிக்ஸாட்டின் ஈகோவினால் உருவாக்கப்பட்டது. மான்டசீனோஸ் (Montesenos) குகையினுள் குயிக்ஸாட் தான் கண்டதாகக் கூறப்படுபவைகளும் ஈகோவின் கற்பனைக் கூறுகளினால் உருவாக்கப்பட்டது என்றும் வாசிக்க இடமுண்டு.)

 

செர்வான்டிஸ் எழுதாத டான் குயிக்ஸாட்

(பாப் கலாச்சாரத்தின் தன்னிலை உருவாக்கம்) :

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கதாபாத்திர மன இயக்கம் சமகால ‘வைரல்’ கலாச்சாரத்தில் சில நுண்ணிய பரிமாற்றங்களை மட்டுமே பெற்று நிலைத்திருப்பதைப் பார்க்க முடியும். இன்றைய தகவல் தொடர்பு உலகில் நிமிடத்திற்குப் பலவகைப்பட்ட பிம்பங்களை(images) எதிர்கொள்கிறோம். அத்தனை பிம்பங்களும் ஒன்றிற்கொன்று தொடர்பற்றவை. ஓட்டப்பந்தய வீரர், தொழில் அதிபர், நகைக்கடை உரிமையாளர், இத்யாதி. ஒரு நாள் முழுக்க தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் விளம்பரங்களில் இதுபோல எண்ணிலடங்கா பிம்பங்களைப் பார்க்க நேர்கிறோம்.

நுகர்வு கலாச்சாரமும், பின்னை-முதலாளிய சமூகமும் பிம்பங்களுக்கு முக்கியத்துவம் தருவன.நுகர்வுச் சமூகத்தாரின் மிரர் ஸ்டேஜ் ஒன்றுதலை தூண்டவதே அப்பிம்பங்களின் பிரதான நோக்கம்.விளம்பரப்படம் வெற்றிபெற வேண்டுமெனில் அது பார்ப்போரிடையே ஈகோ உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். பார்வையாளரின் நிலையற்ற ஈகோ அப்பொருளை வாங்கும் வரை நீடிக்க வேண்டும். ஈகோ உருவாக்கம் துரிதமாக நிகழும் போதே பார்வையாளர்கள் அதிகமான நுகர்வுக்கு ஆட்படுகின்றனர். இப்படி எண்ணற்ற ஈகோக்கள் அகநிலையில் விரைவாகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும் படியாக உருவெடுக்கின்றன.

மனிதர்களின் கால உணர்வு, இன்பம்-  துன்பம் இடையிலான தாள கதி (rhythm) மாற்றத்தினால் உண்டாகிறது. இக்காலகட்டத்தின் வெகுஜன தாள கதி : துரிதம். ‘துரிதம்’ நுகர்வு கலாச்சாரக் கூறுகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றது. இரண்டுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களோடு அடையாளப்படுத்திக்கொள்ள வசதி தருவது இந்த ‘துரிதமான’ ஈகோ கட்டுமானம்.நுகர்வு கலாச்சாரம் தன்னை விஸ்தரிக்க வேண்டி, இத்தகைய லக்கானிய குழந்தைப்பருவ மிரர் ஸ்டேஜ் படிமுறைகளை மீள மீள (துரிதமான ஈகோ தகர்ப்பு-அமைப்பு செயல்பாடுகள்) பின்பற்றும் தன்னிலைகளை உருவாக்கி வந்துள்ளது.

இன்றைய நுகர்வுச் சமூக இயக்கம் அதன் எதிர்விசைகளையும் ஊக்குவிக்கிறது. ஆதிக்கம் தனிநபர்களின் விருப்புறுதிக்கு மாறாக இருந்த நிலை மாறி தன்னிலையின் விருப்புறுதியோடே நுகர்வு சமூகத்தில் தன்னை பங்கு கொள்ள ஊக்குவிக்கிறது.Black Mirror Fifteen Million Merits episode-இல் Bing எனும் கதாபாத்திரம் நுகர்வு முதலாளியத்தின் எதிர்க்குரலாக மாறுகிறார். ஆனால்,அவருடைய எதிர்ப்புக்குரலுமே கூட நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டு பார்வையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. எதிர்ப்புணர்வு நுகர்வுப்பொருளாக மாற்றப்படும் பட்சத்தில் நாம் வெளிப்படுத்த வேண்டிய எதிர்ப்புணர்வுச் செயல்பாட்டை நமக்காக அந்த நுகர்வுப் பொருளே ஆற்றுகிறது. இவ்வாறு தனியர்களின் மனநிலையில் மந்தத்தன்மையை (passiveness) தோற்றுவித்து நுகர்வு முதலாளியம் தன்னை பரிணமித்துக்கொள்கிறது.

Bing : Show us something real and free and beautiful. You couldn’t. Yeah? It’d break us. We’re too numb for it. [Black Mirror-Fifteen Million Merits]

ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டுச் சமூகம் :  

அனைத்து தொழிற்துறைகளிலும் முன்னேற்றத்தைக் கணக்கிட கணக்காய்வுகள்(auditing) வழக்கில் உள்ளன. வேலையாட்களின் செயல்திறனும் இதன்மூலம் ஒப்பிடப்படுகின்றது. நேரடியாக, அவர்களின் உழைப்பும் வெளியீடுகளும்(outcomes) ஒப்பிடப்படுவதற்குப் பதில் அவர்களுடைய உழைப்பு மற்றும் வெளியீடுகளின் கணக்காய்வுகளை ஒப்பிடுவதன் அடிப்படையிலேயே அவர்களின் செயல்திறன் மதிப்பிடப்படுகிறது.

ஸ்டாலினுடைய ஆட்சியின் போது உண்மையான முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தருவதை விடவும் முன்னேற்றத்தை ‘பறைசாற்றிய’ செயல்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. நுகர்வு மற்றும் பின்னை-முதலாளியம்  இம்முறையைப் பின்பற்றுபவையாக இருக்கின்றன. – மார்க் ஃபிஷர்

[ads-quote-center cite=’Mark Fisher – Capitalist Realism’]What late capitalism repeats from Stalinism is just this valuing of symbols of achievement over actual achievement. [/ads-quote-center]

இணைய சேவைகளில் இம்முறையே வழக்கில் உள்ளது. அவ்வகையில் முன்னேற்றத்தைக் ‘குறிக்க’ பயன்படும் சாதனங்களுள் ஒன்றாக ரேட்டிங்ஸ் (ratings) வளர்ந்து வந்துள்ளது. இணைய சேவைகள் அனைத்தின் தரமும் இதன் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

இன்றுள்ள ஸ்விக்கி பணியாளர்களின் உழைப்பினுடைய பதிலியனாக ரேட்டிங்ஸ் உள்ளது.ரேட்டிங்ஸ் அடிப்படையில் அமெசான்,ஸொமேட்டோ உள்ளிட்ட இணையதள சேவை பக்கங்கள் நுகர்வுப் பொருட்களைத் தர வரிசைப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.ஒரு பொருளின் மதிப்பை ரேட்டிங்ஸ் பிரதிபலிக்கிறதானதோரு தோற்றம் இதன்மூலம் கடத்தப்படுகிறது.

கணக்காய்வுகள் தனியர்களை வார்ப்படத்தில்(matrix) பொருத்தி அடையாளம் காண்கின்றன. மதிப்பிடவும், வரிசைப்படுத்தவும், வகைப்படுத்துவதன் மூலமும் மனிதர்களை ஒழுங்கிற்கு உட்படுத்த முடியும். இதனை ஒழுங்குமுறைச் சமூகம்(disciplinary society) என பூக்கோ குறிப்பிடுகிறார். இன்று ஒழுங்குமுறைச் சமூக அமைப்புகள் தேக்கமடைந்து கட்டுப்பாட்டுச் சமூக அமைப்புகள் வளர்ந்து வருவதாக Post-Script on the Societies of Control எனும் கட்டுரையில் தெல்யூஸ் குறிப்பிடுகிறார்.

பிக் பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மரபான மையப்படுத்தப்பட்ட அதிகார பரிமாணமாக அல்லாமல் பார்வையாளர்களின் விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கும் விசையை (force) அளித்து நிறைவைத் தரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. வீட்டிலிருந்தபடியே பங்கேற்பாளர்களுக்கு ஓட்டுப் போடுவதும் அவர்களைக் குறித்தான கருத்துகளையும் தெரிவிக்கும் புதிய அதிகார அமைப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.

Jack:  Look we–we don’t need politicians, we’ve all got iPhones and computers, right? So any decision that has to be made, any policy, we just put it online. Let the people vote–thumbs up, thumbs down, the majority wins. That’s a democracy. That’s a–that’s an actual democracy.

Jamie:  So’s YouTube, and I don’t know if you’ve seen it, but the most popular video is a dog farting the theme tune to Happy Days. (The Waldo Moment – Black Mirror)

இன்றைய பெற்றோர்கள் மரபான அடக்குமுறை யுக்திகளைக் கையாளாமல் நண்பர்களைப் போன்ற பாவனையை உருவாக்கி கட்டுப்பாட்டிற்கு ‘இணங்க’ வைக்கின்றனர். ‘இந்த வேலையைச் செய்து முடி’ என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தவர்கள், ‘இந்த வேலையைச் செய்தால் நன்றாக இருக்குமே. செய்யாவிட்டாலும் பரவாயில்லை’ என்று ஆலோசனை கூறும் தொனிக்கு மாறியுள்ளார்கள். மரபான அதிகாரத்தைப்போல் அல்லாமல் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிப்பதனுள் நுணுக்கமாகக் கட்டுப்பாட்டு அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அடக்குமுறை அதிகாரத்தை ‘செய்ய முடியாது’ என்று கூறுவதன் மூலம் எளிமையாக எதிர்க்கலாம். ஆனால், இரண்டாம் வகை அதிகாரத்தை எதிர்க்கும் போது தயக்கம் ஏற்படுகிறது. நம்முடைய ‘சுதந்திரத்தை’ எதிர்க்கிறோம் எனும் உணர்வை உண்டு பண்ணுகிறது. (‘பெற்றோர்கள்’ எனுமிடத்து சமூக உறவாடல்களையே குறிப்பிடுகிறேன்.)

ஒழுங்கு முறைச் சமூகம் கடைப்பிடிப்பதுபோல தனிநபர்களின் மீது அதிகாரம் வெளியிலிருந்து செயல்படுத்தப்படாமல் இன்றைய அதிகார இயந்திரங்கள் தன்னிலைகளை தகவல் தொடர்பு வெளியின் வார்ப்படத்தில் (matrix) பொருத்துகின்றன. மலிந்துவரும் ஒழுங்குமுறை சமூகக் கூறுகளும், அதிகரித்துவரும் கட்டுப்பாட்டுச் சமூகக் கூறுகளும் உடனுறைகின்றன.கட்டுப்பாடு அடக்குமுறையால் வருவதன்று. அது  இயைபினால் வருவது. எனவே, பிடித்தமான பாடகருக்கு ஓட்டுப்போடச் சொல்லி கட்டுப்பாட்டுக் கருவிகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன. அவர்களுக்குச் சுதந்திரமான தேர்வை அளிக்கின்றன.

பூக்கோவின் பான்-ஆப்டிக் (Pan Optic) தலைகீழாகியுள்ளது. இன்று, ஸ்தூலமான கட்டுமானங்கள் இல்லாமலேயே பான்-ஆப்டிக் செயல்பட முடியும். மொபைல் போன் மூலம் நம்முடைய செய்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

கூகிள், அமெசான், பேஸ்புக் போன்ற தனியார் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய தன்விவரக்குறிப்புகளைத் தயாரித்து வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் நமக்குச் செய்திகளையும் விளம்பரங்களையும் அளிக்கின்றன. இதனை ‘சேவை’ என்கிற போர்வையில் அவை மேற்கொள்கின்றன. இத்தகைய சேவையாற்றுவதற்கு அந்நிறுவனங்கள் நம்மைத் தொடர் கண்காணிப்பிற்கு உள்ளாக்குகின்றன. இச்சேவைக்கு விலையாக நாம் தருவது நம்முடைய அந்தரங்கம். எனவே பான்-ஆப்டிக் ஒரு ஸ்தூலமான அமைப்பாக மட்டுமே இல்லாமல் இதுபோன்ற புதிய வடிவங்களைப் பெற்று வருகின்றன.

காட்சி ஊடகங்கள் :

யூட்டூப் சேனல்களின் மூலம் விளம்பரங்கள் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. அவை கதைக்கருவினுடைய யதார்த்தத்தின் ஒரு பகுதியாகவே வருவதைப் பார்க்கிறோம். விளம்பரம் என்கிற குறிப்போடு வீடியோவின் ‘இடையே’ வருவதன்றி கதையுலக யதார்த்தத்தின் ‘உள்ளேயே’ வரத் தொடங்கியிருக்கின்றன. அதாவது, விளம்பரம் என்று தனியாக அல்லாமல் கதை நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே இரு கதாபாத்திரங்கள்  ‘யதார்த்தமாக’ விளம்பரத்தில் ‘பேசிக்கொள்கின்றனர்’.

மதன் கெளரி தகவல்களைத் தொகுத்துச்சொல்ல, அதனை நுகர பார்வையாளர்கள் ஏராளமாகவே உள்ளனர். கூறப்படும் தகவல்களுக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த உறவும் இல்லை. அவை Context free-தகவல்கள் என்பதால் எதற்காக இதனை நுகர்கிறோம் என்ற எண்ணமே பார்வையாளர்களுக்கு எழப்போவதில்லை. அதீத தகவல் நுகர்வின் பிரதிநிதிகள்.இம்மாபெரும் தகவல் திரட்டில் இணைய நேயரின் நிலை குறித்து நோம் சோம்ஸ்கி கூறுவதாவது :

இணையத்தின்மூலம் அளவற்ற தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் எவ்வளவு பொருத்தமானவை ? எவ்வளவு பொருத்தமற்றவை ? எவ்வளவு அர்த்தமுள்ளவை ? எவ்வளவு அர்த்தமற்றவை ?இந்தத் தகவல்களால் நீங்கள் பயனடையவும் புரிந்து கொள்ளவும் அர்த்தப்படுத்திக்கொள்ளவும் ஒரு வரைசட்டம் தேவைப்படுகிறது.இதற்கான அறிவாற்றல் சார்ந்த உபகரணங்களை அளிக்கவல்லதாக நமது கல்விமுறையோ கலாச்சார முறையோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை.எனவே, மக்கள் இணைத்தில் மூழ்கிக் காணாமல் போய்விடுகிறார்கள்.(சோம்ஸ்கி, 2012 – தமிழில் :சு.இராசாராம்)

இந்த ஊடகங்களின் மாற்று ஆக்கங்கள் எனப் பார்த்தோமானால் அங்கும் தகவல்களே பிரதானம். நக்கலைட்ஸின் Walk in India குறும்படத்தை எடுத்துக்கொண்டோமேயானால், அக்குறும்படம் முழுக்க அப்போதைய trend-களால் ஆனது. காட்சிகள் அனைத்தும் தகவல்களே. தகவல்களை வைத்துக் கொண்டு என்ன சிந்திக்க முடியும் ? என்ன விவாதிக்க முடியும் ? வருங்காலத்தில் யார் எத்தனை தகவல்களைக் குவிக்கப்போகிறார்கள் என்பதே அறிவியக்கச் செயல்பாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திரையரங்கம் ஒழுங்கு முறையியலான காட்சி ஊடகம் என்றால் OTT-தளம் கட்டுப்பாட்டு ஊடகம். தேர்வு சுதந்திரத்தினை பார்வையாளர்களிடமே அளிக்கிறது. திரையரங்கப் பார்வையாளர்களிடம் குறைந்த அளவிலான அதிகாரம் மட்டுமே உள்ளது. இன்று பார்வையாளர்கள், விருப்பப்படி திரைப்படத்தின் எந்தப் பகுதியிலும் நிறுத்தி விட்டு வேறு படத்தைப் பார்க்கத் தேர்ந்தெடுக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இது கூடுதல் பதற்றத்தை அளித்துள்ளது. எனவே,யூட்டூப் சேனல்களைப் போலவே ஒவ்வொரு காட்சியிலும் முடிந்தளவிலான தகவல்களை இணைக்கப் பார்க்கின்றனர். திரைப்பட எடிட்டிங் யுக்திகளும் ‘துரிதமான’ வினைக் காலத்தைக் கடத்தவே நினைக்கின்றன.

தனிமனித விடுதலையை எக்காலத்திலும் இல்லாத அளவிற்குப் பேசிவந்த இணையவெளி ஊடகங்களின் பயனாளர்களும் முன்னமே நிறுவப்பட்டதைத் திரும்ப ‘உறுதிப்படுத்தும்’ (conformists) கருவிகளாக மாறி வருகின்றனர்.ஒத்த சிந்தனையை உறுதிப்படுத்துபவர்கள் × உறுதிப்படுத்தாதவர்கள் எனும் இருமை நிலை உருவாக்கத்தினால் அதன் ‘உரையாடல்’ தன்மையும் தேக்க நிலையில் உள்ளது.இந்த இருமைநிலை, முரணியக்கத்தைக் குறிப்பதன்று.முரணியக்கம் உரையாடலைத் தோற்றுவிக்கும்.ஆனால் இது வெறுமனே ஒற்றைப்படையான(homogeneous) சிந்தனைப் போக்கை ஊக்குவிப்பது.

[..inter-passive networks of like-minds who confirm ,rather than challenge each others’ assumptions and prejudices.The inter passive participation in post modern media ,the network narcissism of MySpace, and Facebook, has,in the main ,generated content that is repetitive, parasitic and conformist. Mark Fisher – Capitalist Realism ]

பிம்ப முதல்வாதம் :

பிம்பங்கள் ஏமாற்றக்கூடியவை மற்றும் அவை ‘சாரம்’ அற்றவை என்று பிளாட்டோ காலந்தொட்டே அதனை ஒட்டிய தத்துவ விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. இன்று அவ்விவாத எல்லை விரிவாக்கப்பட்டு, விவாதிப்பதற்குச் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.

பிம்பங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். பொருள்வய உலகில் அவை சுட்டும் பொருளையொட்டி ஒவ்வொன்றின் அடையாளமும் அமைகிறது. ஒன்று யதார்த்தத்தை இருப்பது போலவே அதன் இயல்பு நிலையைப் பிரதியெடுக்கிறது. புகைப்படத்தையும் அது சுட்டும் குறிப்பீட்டையும் (signified) பார்வையாளர்களால் வித்தியாசப்படுத்த முடியும். நம்மை நாம் கண்ணாடியில் பார்ப்பதுபோல.

இரண்டாவது வகை பிம்ப உருவாக்கத்தில் பிரதிநிதித்துவப் பண்பு இருந்தாலும், குறிப்பானை இருப்பது போலவே அது வெளிக்காட்டுவதில்லை. யதார்த்தத்தைக் கலப்படம் செய்து அளிக்கிறது. உதாரணமாக இன்ஸ்டாகிராம் filter அல்லது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம். முதல் வகை, குறிப்பானை ‘இருப்பதுபோல’ தருகிறது. இரண்டாவது வகை சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. என்றாலும், இரண்டிற்கும் பௌதீக உலகில் ‘குறிப்பான்'(signified) இருக்கின்றது.

உயர் மெய்மை (hyper-real) பிம்பங்களை விளம்பரப் படங்களில் பார்க்க முடியும். அவை பார்வையாளர்களுக்கு மயக்கத்தை அளிக்கின்றன. தங்களுடைய தேவைகளுக்காக, சேவை செய்வதற்காக சமூகம் இயங்குகிறது என்கிற மாயையை அது உருவாக்குகிறது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல. இவ்வகை பிம்பங்கள் ஓரளவு நிஜ உலகப் பருப்பொருட்களைக் கொண்டிருந்தாலும் அதைக்கொண்டு பார்வையாளர்களை வெல்லவே எண்ணுகின்றன.

நான்காவது வகை, குறிப்பான் என்கிற மையத்தையே தகர்க்கிறது. இதில் அந்த பிம்பம் தான் குறிப்பானாகவும் செயல்படுகிறது.

பௌதீக உலகில், அது குறிப்பது என எதுவுமில்லை, உள்வயப்படுத்தித் தன்னையே அடையாளப்படுத்திக் கொள்கிறது.இந்த நாலாவது வகை பிம்பங்களை போத்திலார்ட் கூறும் முறையே காண்போம். இவ்வகை பிம்பங்களுக்கு வைரல்(viral) மற்றும் பின்னம் (fractal) எனும் இருதன்மைகள் உண்டு என்கிறார்.

  • ஒட்டுவார் ஒட்டி போலப் பரவுகிறது என்பதால் வைரல். (வைரலான பாடல் ,வைரலான புகைப்படம் எனும் போது வைரஸைப் போல ‘பரவுகிறது’ என்று அர்த்தமாகிறது.)
  • இரண்டாவது தன்மை பின்னம்.ஏனென்று கேட்டால் அது தன்னையே பெருக்கிக்கொள்கிறது. அதன் பெருக்கத்திற்கு எல்லையில்லை. கட்டற்று விரிந்துகொண்டேயிருக்கும். மூலப்பிரதிக்கும்(original) , பிரதிக்குமான வித்தியாசம் இங்கு இல்லை. பின்னத்தின்(fractal) பகுதி ஒவ்வொன்றும் பிரதியின் பிரதி. சமீபத்தில் என்னுடைய கல்லூரியில் PUBG Canteen எனும் உணவகம் திறக்கப்பட்டது. பெயர்ப்பலகைகளும், விளம்பர அட்டைகளும் PUBG விளையாட்டில் வரும் சித்தரிப்புகளாக நிறைந்திருந்தன. அவை பௌதீக உலகிலுள்ள எந்தப் பொருளையும் தாங்கி நிற்கவில்லை. அதன் விளம்பரப் பலகையிலுள்ள படங்கள் தங்களையே தான் குறித்துக் கொள்கின்றன.

இன்று ஒருவரால் உலகத்தில் ஸ்தூலமாக இல்லாத பொருளைப் பணம் கொடுத்து வாங்க முடியும்.மொபைல் விளையாட்டுகளில் எழுபது ரூபாய் கொடுத்து விர்ச்சுவல் இருப்பை மட்டுமே உடைய முப்பது crystal-களை வாங்கலாம்.குறிப்பிட்ட விளையாட்டு உலகில் மட்டுமே அதற்குப் பயன் உண்டு.

30 Crystals – Rs 70 என்றால் இந்த crystal-களின் மதிப்பு எவ்வாறு உருவாகிறது ? அல்லது இந்த crystal-கள் மனிதர்களின் எந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன ?

மதிப்பு(value) என்கிற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பதை ஸ்மித் உணர்ந்திருக்கிறார். சில சமயங்களில் அது பயன் முக்கியத்துவத்தை அளிக்கிறது. மற்ற சமயங்களில் அது அப்பொருளை மற்ற பொருள்களுக்காகப் பரிவர்த்தனை செய்யக்கூடிய அளவைக் காட்டுகிறது. முன்னதை பயன் மதிப்பு(value in use) என்றும் பின்னதை பரிவர்த்தனை மதிப்பு (value in exchange) என்றும் ஸ்மித் வேறுபடுத்துகிறார். [எஸ்.நீலகண்டன் – ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை]

செவ்வியல் பொருளாதாரம் இவ்விரண்டு வகைகளை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்து வந்துள்ளது. நாம் மூன்றாவதாகக் குறியீட்டு மதிப்பையும் (sign value)சேர்க்க வேண்டியிருக்கிறது. இவை மூன்றும் ஒரு பொருளின் பரிவர்த்தனையில் பிரதான இடம் வகிக்கின்றன.  இயற்கையான நிலை (natural stage),பரிவர்த்தனை நிலை(commodity stage), குறியீட்டு முறைமை நிலை (structural stage) எனும் மூன்று நிலைகளுக்கடுத்து பின்னம் நிலையை (fractal stage) போத்திலார்ட் அறிமுகப்படுத்துகிறார்.

முதல் நிலையில் மதிப்பு என்பது பெளதிக உலகில் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அமைந்தது. பயன் மதிப்பிற்கும் பரிவர்த்தனை மதிப்பிற்கும் இடையே உள்ள உறவு இரண்டாம் நிலையை நிர்ணயித்தது. குறியீட்டு நிலை தனித்துவமான விதிகளால் முறைபடுத்தப்படுகின்றன. இம்மூன்று நிலைகளையும்போல எவ்வித உளமை (ontological) விதிகளும் நான்காம் நிலைக்கு இல்லை. அதில், மதிப்பு எல்லா திசைகளிலும் பிரவாகமாகச் செல்கிறது. எவ்வித குறிப்புப்புள்ளியும்(point of reference) இல்லாமல் பரவுகிறது. அப்படியிருக்கையில் அதனை ‘மதிப்பு’ கொண்டு அளவிடவோ விளக்கவோ முடியாது.

சங்கிலித்தொடரென பின்னப்படும் இந்த நான்காம் வகை பிம்பங்கள் அடிப்படை மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதில்லையென்பதால், அவற்றுக்கு எந்தப் பயன்மதிப்பும் இல்லை. மதிப்பு கொண்டு அளவிட முடியாதென்பதால் பரிவர்த்தனை மதிப்பும் இவற்றுக்கு இல்லை. அதேபோல குறியீட்டு மதிப்பும் இல்லை. ஏன் ? குறியீட்டு மதிப்பு குறிகளின் அமைப்பு சார் இயக்கத்தை உடையது. [லாங்(langue)-பரோல்(parole) போன்றதொரு அமைப்பைக்கொண்டு இயங்குவது.]  பின்னல் பிம்பத்தின் மதிப்பை அதன் வைரலிட்டி(virality) தான் தீர்மானிக்கிறது. எவ்வளவு வேகமாகப் பரவுகிறதோ அவ்வளவு மதிப்பு.

Black Mirror ‘The Waldo Moment’ எபிசோடில் வரும் Waldo எனும் கார்ட்டூன் கதாபாத்திரம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்குமென்று நினைக்கிறேன். அக்கதாபாத்திரம் நிஜ உலகில் உள்ள எதனையும் குறிக்க முடியாது.யதார்த்த உலகில் அதற்கு referent என்று எதுவுமில்லை. அதற்கு உளமைவெளியோ(ontological boundary) ஆதாரப்புள்ளி என்பதோ டிஜிட்டல் இமேஜ் ஒன்றே. அக்கதாபாத்திரம் வைரலாகிறது. மதிப்பு கூடுகிறது.அதன் பிம்பம் தன்னாட்சி உடையதாக பரிணாமம் அடைகிறது. இறுதியில் அந்தக் கார்ட்டூன் கதாப்பாத்திரம் ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கிறது.

முன்னர், பிம்பங்கள் யதார்த்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தின. இன்று பிம்பங்கள் தன்னாட்சி(autonomous) வாய்ந்தவையாக மாறியுள்ளன. முகப்புத்தக அவதார்கள் (நம்முடைய பிம்பங்கள்)நம்மைக் காட்டிலும் சமூக-மெய்மை உடையன. எனவே, நம்முடைய பிம்பங்கள் நம்மைக் காட்டிலும் மெய்யானவை போல மயக்கம் ஏற்படுகிறது. அனைத்து சமூக வலைத்தளங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன. வலைத்தள அவதார்கள் பிரம்மாண்டமான நிகர் சமூகமாக உருவாகி நிற்பது போன்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தத் தவறவில்லை.

Images detached from every aspect of life merge into a common stream,and the former unity of life is lost forever.Fragmented views of reality regroup themselves into a new unity as a separate pseudo-world that can only be looked at. The specialization of images of the world has culminated in a world of autonomized images where even the deceivers are deceived. -Guy Debord (The Society of the Spectacle – page 2)

பேயுறைந்த வீடுஇல்லாது இருத்தல் :

Specters of Marx நூலில் hauntology எனும் சொல்லை ழாக் தெரிதா அறிமுகப்படுத்துகிறார். இருந்தும் இல்லாதிருக்கும் ஒருவித இடைப்பட்ட நிலையை இச்சொல் குறிக்கிறது.

இறந்தவர்களின் முகப்புத்தகக் கணக்கு.  புறவயமான இடத்தில், இன்மையும்-இருத்தலும் ஒருசேர நிகழ்கிறது என்று மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை விளக்கலாம்.

(மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் ஒரு ‘இழப்பு’ நேர்கிறது. இறந்தவரின் முகபுத்தக கணக்கு அதன் ‘பயனாளரை’ இழந்திருக்கிறது. புறவய யதார்த்தம் அதன் உளமையை இழந்திருக்கிறது. நாம் பார்க்கும் எல்லா பிம்பங்களும் ஒருவகையில் இத்தன்மையுடையனவே.)

நிகழ்காலத்திற்கென தனியாக ஒரு அர்த்தமும் இல்லை. கடந்த காலம், மற்றும் வருங்கால பார்வையைக் கொண்டே நிகழ் காலத்தை நாம் அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். இருத்தல்(நிகழ் காலம்) என்பது இவ்விரு இன்மைகளோடு(கடந்த காலம்,வரும் காலம்) உறவாடும் போதே முழுமைபெறுமென்கிறார் தெரிதா. வருங்காலத்தைக் கடந்த காலத்தோடும், கடந்த காலத்தை வருங்காலம் கொண்டும் ஆராய்கிறோம். இவற்றுக்கிடையேயுள்ள உறவு தடைப்படும்போது காலப் பிரஞ்ஞை உறைவு நிலையைச் சந்திக்கிறது.

இதற்கு மார்க் ஃபிஷர் Memento திரைப்படத்தின் லியனார்ட்  கதாபாத்திரத்தை உதாரணம் காட்டுகிறார். அக்கதாபாத்திரத்தினால் காலத்தைச் சரியாக ஒருங்கிணைத்துக்கொள்ள இயலாது. லியனார்டிற்கு ஒரு சில கடந்த கால நினைவுகளும் சம்பவங்களுமே நினைவில் உள்ளன. அக்கதாபாத்திரத்தினால் ‘புதிய’ நினைவுகள் என எதையும் ஏற்படுத்த இயலாது. அவனுள் காலம் ‘உறைந்து’ கிடக்கிறது.தன்னைச் சுற்றி நிகழும்  மாற்றங்களைப் புகைப்படங்கள், குறிப்புகள்,டாட்டூக்கள் மூலமே தெரிந்துகொள்கிறான். இது போலொரு உறைவு(impasse) நிலையைத்தான் நவ-தாராளவாத (neo liberal) சிந்தனைக் கொள்கைகள் நம்மிடையே ஏற்படுத்தியுள்ளன.

அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள தாராளவாதச் சிந்தனைகளின் பெருக்கம், வருங்காலத்தை நோக்கிய பார்வையை நிலையற்றதாக்குவதன்மூலம் கடந்த காலத்தின் மேல் நினைவேக்கம்(nostalgia) கொள்ள வைக்கிறது. மேலும் ,வருங்காலத்தை அனுமானிக்கக் கூடிய சாத்தியங்கள் மெல்ல மலியத் தொடங்கிவிட்டமையால் கலை இலக்கிய செயற்பாடுகளில் ‘காலத்தைக் கடந்த’ ஆக்கம் எனப் பெரிதாக எதுவும் வளரவில்லை. மாறாகக் கடந்த கால ஆக்கங்களின் அழகியல் கூறுகளே மீண்டும் மீண்டும் பிரதியெடுக்கப்படுகிறது.

When Ilaiyaraaja meets Gaspar Noe :

மீம்களில் பயன்படுத்தப்படும் டெம்ப்ளேட்’ உறைந்த நிலையில் இருக்கும் ஒரு காட்சி. அதனுள்ளோ மேலே நிரப்பும் ‘கேப்ஷன்’கள் அந்த உறைநிலையின் ‘தொனி’கள். பரிச்சயமான அர்த்தத்திலிருந்து அவை விலக்கப்பட்டு புதிய அர்த்தம் தரப்படுகிறது. இதனைச் சாத்தியப்படுத்துவது ‘தொனி’. பழைய உருவாக்கங்களுக்கு புதிய தொனி தருவதையே மீம் கலாச்சாரம் செய்து வருகிறது. கருத்தியல் மேலாதிக்கம் நிறைந்த திரைமொழியைக்கொண்டு விடுதலையுணர்வை பேசும் திரைப்படங்களும் இந்த மீம் கலாச்சார வகைகளே.

வடிவேலு, தீபிகா படுகோன் முதலியோரின் புகைப்படங்களைக் கத்தரித்துப் புகழ்பெற்ற ஓவியங்களின் மேல் ஒட்டி புதிய அர்த்தம் தருவதான பாவனையை உருவாக்கும் முயற்சியில் கலக்கி எனும் இணையப்பக்கம் சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டது. உலக சினிமா காட்சிகளுக்கு இளையராஜாவின் பாடல்களை பின்னணியில் ஓட விட்டு அழகு பார்க்கும் புதிய ஆக்கமுறைச் செயல்பாடுகளும் வளர்ந்து வருகின்றன.

இத்தகைய போக்குகளையெல்லாம் நாம் ஏன் கவனிக்க வேண்டியுள்ளது என்றால் அவை இக்காலகட்டத்தின் ஊடகங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களின் மனவோட்டத்தை எடுத்துக்காட்டுகின்றன. அவர்களின் ஆக்கமுறைத் திறனில் உள்ள தேக்கத்தை நாம் அடையாளங்கண்டு அதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள உதவுவன.

புகழ்பெற்ற வாள் :

[ads-quote-center cite=’ஃப்ரெட்ரிக் ஜேம்சன்’]

நிலையற்ற சுயங்கள் உறவாடும் கலாச்சார வெளியில் நுகர்வுச் சமூகம் விமர்சனமே பெறாமல் நிலைத்திருக்க முடியும். இந்த நிலையற்ற  அடையாள உணர்வை ஏற்படுத்துவதே பின்னை- முதலாளியத்தின் கலாச்சார தருக்கம்.

 [/ads-quote-center]

பின்னை-ஃபோர்டிய (Post-Fordist) உழைப்பாளர்களுக்கு நிலையான வேலை இல்லை. நிரந்தரமற்ற பணிச் சூழல் என்பதால் ஒன்றிற்கும் மேற்பட்ட திறன்களைப் பழக வேண்டியிருக்கிறதோடு வருங்காலத்தையொட்டி பெரியளவில் முடிவுகள் எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஃபோர்டிய பொருளாதாரச் சூழலில் உழைப்பாளர்களுக்கு நிலையான இடம் இருந்தது. முதலாளி×தொழிலாளி எனும் நிலையான முரணியக்கம் இருந்தது. குறிப்பிட்ட ஒரு திறனை வளர்த்துக்கொண்டு அதிகாரப் படிநிலையில் மேலே செல்ல முடியும். தொழிலாளராக இருந்து மேலாளராக உயர முடியும்.

புறநிலையான எதிரி என யாரையும் அடையாளங்கண்டு அவர்களுக்கு எதிராக ஒன்றுகூடும் எண்ணத்தை, தொழிலாளர்களுக்கு பின்-ஃபோர்டிய சூழல் உருவாக்கித் தராது. மேலும், வேலைச் சூழலும் நிலையற்றது எனும் எண்ணத்துடனேயே இருக்கும் யாரும் கட்டுப்பாட்டுக்கு உடன்படுவர். இத்தகைய பொருளாதாரச் சூழல்களே இன்றைய உள நிலைகளைக் கட்டமைக்கின்றன. வெகு ஜன களிப்பு நிகழ்ச்சிகள் இந்த தன்னிலைகளைக் கைப்பற்றவே முயல்கின்றன. அவற்றின் மேல் பழக்க வழக்கங்களையும், நடத்தைகளையும், கருத்தியல் மேலாதிக்கத்தையும் செலுத்துகிறது. வெகுஜன ஊடகங்கள் தான் இவர்களுக்கு எதை நுகர வேண்டும் என்று அறிவிக்கின்றன. எதை நுகர்வது இப்போதைய ஃபேஷன் என்றும் ஆலோசனை கூறுகின்றன. ஆகவேதான் இன்றைய சமூக ஊடகங்களில் ஏற்பட்டுள்ள அமைப்பாக்க மாற்றங்களை மேலே பார்த்தோம்.

சாகசக் கதைகள் உருவாக்கிய குயிக்ஸாட்டின் உளநிலைக்கும், தற்போது நுகர்வு கலாச்சாரம் உருவாக்கி வரும் உளநிலைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால், டான் குயிக்ஸாட்டின் பொருள் மயக்கத்தை  செர்வான்டிஸின் நவீனத்துவம் விமர்சனப்பூர்வமான அங்கதத்திற்கு உட்படுத்தியிருக்கிறது. பின்-நவீனத்துவம் அங்கதத்தை விடவும் பகடியை முன்னிலைப்படுத்துகிறது. யாரையும் எப்படியும் பகடி செய்யலாம். ஆனால் , அங்கதம் என்பது ஒரு ஆதாரப்புள்ளியில் நின்று விமர்சனம் செய்வது. நவீனத்துவ நாவல்கள் பெரும்பாலும் விமர்சன ஆக்கங்களே. வரும் காலகட்டத்தின் பாப் கலாச்சாரத் தன்னிலைகள், துரிதமான சுய தகர்ப்பமைப்பைக் கொண்டு எவ்விதமான விமரிசன கருவிகளை உருவாக்கிக்கொள்ள முடியும் ? இக்காலகட்டத்தின் ‘சுயம்’ இவ்வளவு நிலையற்றதாக இருக்கும் பட்சத்தில் அதனால் நவீனத்துவத்தின் ‘தார்மீக விமர்சன ஆசிரியர்’ எனும் இடத்தை நிரப்ப முடியுமா? அல்லது இக்கட்டுரையைப் போலவே ஒழுங்கற்ற தெறிப்புகளையே விமர்சன வடிவாகக் கொண்டு தொடருமா ?

நவீனத்துவ விமர்சகர்கள் ஃபோர்டிய(Fordist) பொருளாதாரச் சூழலின் போது தீவிரமாக இயங்கி வந்தனர். அடோர்னா, வால்டர் பென்ஜமின் போன்றோர் முதலாளியத்தின் கலாச்சாரப் பரிமாணங்களான ஜனரஞ்சக ஊடகங்களைக் கடுமையாகச் சாடினர். இன்று மாறிவரும் தாராளவாத பொருளாதாரச் சூழலின் எதிர்நிலையில் பின்-நவீனத்துவ விமர்சன கருவிகள் வலுவிழந்து கொண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது.

ஆதிக்க மற்றும் மைய நீரோட்ட சிந்தனைகளின் கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிராக, பின்-காலனிய மற்றும் குயர் முதலான பன்மைத்துவ சொல்லாடல்களை எதிர்நிலையில் நிறுத்தி வலுவான கருத்தியல் போர்களை நிகழ்த்தியிருக்கிறது. ஆனால், நடப்பில் உள்ள கருத்தியல் மேலாதிக்கங்களோடு ஒருவித சோர்வுடனும் நிச்சயமின்மையுடனுமே போராடி வருகிறது. அந்தச் சோர்வின் காரணிகளையும், தற்கால தன்னிலை உருவாக்கம் கூர்மையான பகுப்பாய்வு விமர்சனக் கருவியின் உருவாக்கத்திற்கு எவ்வாறு தடையமைக்கிறதென்பதையுமே இவ்வளவு நேரம் சுட்டிக் காட்ட முயன்றிருக்கிறேன்.


  • நிஷாந்த்

2 COMMENTS

  1. This is my first time reading postmodernism in Tamil language, I understand the challenges in writing this article! Kudos to the writer! But I am confused as to why you feel that these creations are representation of “inability to create”, while discussing meme culture, the exact word you use is “ஆக்கமுறை திறனில் உள்ள தேக்கத்தை” … can you elaborate more on this?

    • I am very pessimistic about Meme culture.Be it Marxist Dank or Modi propaganda ones.I see no creativity there.The very form of meme itself is reminiscent of modern cultural production.One downloads a template and gets to fill it with their views and post it,for others to consume.This is no different from the production line of Barbie Dolls.One can argue the ‘progressive’ aspects of Memes.Like say, Memes inverse the traditional top-down authority and can go on.But I’m concerned about the ‘medium’ of that message..And Thank You ! ✌🏽

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.