ஜப்பானிய இலக்கியம்


ங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று சொன்னால், முரகாமியையோ இல்லை நோபல் பரிசு வாங்கிய மூவரையோ குறிப்பிடுவதே வழக்கம். இவர்களைத் தாண்டியும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் ஜப்பானில் உண்டு.

இந்தப்பதிவு நான் படித்த தரமான ஜப்பானிய எழுத்தாளர்களின் பத்து புத்தகங்கள் குறித்து மட்டுமே. நீளம் காரணமாக பத்துடன் நிறுத்திக் கொண்டாயிற்று. நான் படிக்காத முக்கியமான பிற எழுத்தாளர்கள் விடுபட்டிருப்பதற்கான வாய்ப்பும் நிறையவே இருக்கின்றது. ஒரு வசதிக்காக நாவல் இலக்கியம், திரில்லர் நாவல்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஜனரஞ்சகமான, சராசரி தரத்திற்கு கீழ் உள்ள நூல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாவல் இலக்கியம்:

Yasunari Kawabata :

Kawabataவின் மொழி எவ்வளவு கவித்துவம் வாய்ந்ததோ அவ்வளவு பூடகமானது. Kawabata எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஓரளவு ஜப்பானின் கலாச்சாரமும், சிறந்த வாசிப்பனுபவமும் தேவையாய் இருக்கும். முரகாமியின் சிதறிய வரிகளின் உள்ளர்த்தம், இணைக்கும் புள்ளி புரியாவிட்டாலும் படிக்க சுவையாய் இருக்கும், ஆனால் Kawabataவின் வரிகளின் பின்னால் தொக்கி இருக்கும் விசயங்களை அணுக முடியாவிட்டால், இவருடைய நூல்களின் வாசிப்பனுபவம் என்ற அற்புதத்தை இழந்து விடுவோம். 1968ல் நோபல் பரிசை வென்றவர்.

The Sound of Mountain, Snow Country என்ற இரண்டு நூல்களையாவது எல்லோரும் தவறாமல் படிக்க வேண்டும்.  லதா ராமகிருஷ்ணனின் நல்ல தமிழாக்கத்தில் இவருடைய மற்றொரு நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ வெளி வந்துள்ளது. 1968ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

Snow Country

Yasunari Kawabata- translated from the Japanese by Edward G. Seidensticker:

இந்த நாவல் ஜப்பானிய ஹைக்கூவும் நாவலும் சந்திக்கும் ஒரு முயற்சி. இந்த நாவலை ஹைக்கூ நாவல் என்று சொல்வார்கள். மொழிநடையின் செழுமை, நூல் முழுவதும். Kawabata வின் Masterpiece இந்த நாவல். முழுக்க ஜப்பானியக் கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டது. பவளசங்கரியின் மொழிபெயர்ப்பில் வந்த லெஸ்லி டவுனரின் கெய்ஷா நூலைப் படித்தவர்கள், இந்த நாவலை நன்கு புரிந்து கொள்ளமுடியும்.

Echigo-Yuzawa என்ற ஜப்பானின் பனிபொழியும் பகுதியில் நடக்கும் கதை இது. நிலப்பரப்பு, கலாச்சாரம் Kawabataவின் அழகியலில் இன்னும் அழகாகும். மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு கெய்ஷா, டோக்கியோவைச் சேர்ந்த Snobbish பணக்காரனை தீவிரமாகக் காதலிப்பது என்று ஒருவரியில் கதையைச் சொல்ல முடியாமல் உள்ளடுக்குகளும், சிடுக்குகளும் அதிகம் உள்ள கதை.

Kawabataவின் கதைகளில் கண்ணாடி எப்போதுமே சிறப்பம்சம் வகிக்கும். ‘அன்று கண்ணாடி முன்னாலே நான் கண்ட கோலங்கள் வேறல்லவோ” போன்ற கண்ணதாசனின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள், காதலர்களுக்கும், கண்ணாடிக்கும் இடையேயான Kawabataவின் தாத்பரியத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

உறவுச்சிக்கல் இந்த நாவல் முழுவதுமே. முதலில் Shimamura Vs Komako. ஒருவர் காதலில் தீவிரமாய் இருப்பதும் அடுத்தவர் விட்டேத்தியாய் இருப்பதும், காலம் செல்லச்செல்ல, முதலாவது வருகைக்கும் மூன்றாவது வருகைக்கும் இடையில் நிறைய மாற்றங்கள் நடந்து இடைவெளி அதிகமாவதும் அதை இருவருமே புரிந்து கொள்வதும் Kawabata எதையும் விளக்காமலே நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்து Shimamura Vs Yoko. அவளை நினைக்கும் போதெல்லாம், இவனுக்கு பரிசுத்தமும் இனிமையான குரலும் நினைவுக்கு வருகிறது. அவள் தூய்மையானவள், தாய் போல பராமரிப்பவள் என்று இவன் மனதில் உருவம் தோன்றுகிறது. Yokoவே ஓரளவிற்கு Shimamura- Komako உறவிற்கிடையில் வருகிறாள்.  ஆனால் அவள் இவனுடன் Tokyo வருகிறேன் என்கையில் இவன் ஏன் பதில் சொல்லாது இருக்கவேண்டும்! Hamletன் To be or not be என்ற Indecisionனின் மறுவார்ப்பு Shimamura.

அடுத்து Komako vs Yoko. ஆரம்பத்தில் Komako அவளைப் பற்றி பேசவே மறுக்கிறாள். பின்னர் அவளுக்குப் பொறாமை என்கிறாள். இரண்டு பெண்கள் இடையே பரஸ்பரம் சுமூகமான உறவு இல்லை. ஆனால் Yoko அவளை நன்கு கவனித்துக்கொள் என்று இவனிடம் சொல்கிறாள். கடைசிக்காட்சியில் Komako நடந்து கொள்ளும் முறை, இருவருடைய உறவு பற்றிய புரிதலைத் திருப்பிப் போடுகிறது.

பாட்டு டீச்சரின் மகனுக்கும், Komako மற்றும் Yokoவுக்கிடையேயான உறவு. ஒருத்தி குழந்தையில் இருந்தே தெரிந்தவள், திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இருந்தது. ஆனால் அவனை விரும்பியதேயில்லை என்று அவள் சொல்வதும், அவனுடைய மருத்துவச் செலவுக்காக கெய்ஷா ஆவதும் அந்த உறவின் பெரிய முரண்பாடுகள். Komako என்ற பெண், மனதில் அன்பும் வெளியில் ஒரு பிடிப்பின்மையையும் அநேகமாக எல்லா உறவுகளிலும் காட்டுகிறாள். மாறாக தற்செயலாக வந்த பெண் கடைசிவரை பணிவிடை செய்வதும், இறந்தபின் தவறாமல் கல்லறைக்குப் போவதும் அந்தப் பெண்ணின் குணாதிசயத்தைத் தெளிவாகச் சொல்கிறது.

Snow Country, Milky way போன்ற பதங்களை நாவலெங்கும் Kawabata கையாண்டிருக்கும் விதத்தினாலேயே, இதை ஹைக்கூ நாவல் என சொல்லியிருக்க வேண்டும்.

Sayaka Murata

Sayaka Murata Inzaiல் பிறந்தவர். எழுத்தாளர் Akio Miyaharaவின் மாணவி. சிறுகதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டே ஒரு Convenience storeல் வேலை பார்த்தவர். அந்த அனுபவங்கள் இந்த நாவலுக்கு உதவியிருக்கக் கூடும்.

Convenience Store Woman –   Sayaka Murata-

Translated from the Japanese by Ginny Tapley Takemori:

வங்கியில் நீங்கள் கவனித்திருக்கக்கூடும், காசாளர் கூண்டில் சிங்கம் போல் கர்ஜிக்கும் நபர், வெளியே வந்ததும் சாதாரண நபர் போல் மாறிப்போவதை. ஒரே வேலையைத் திரும்பத்திரும்ப நீண்ட காலம் Donkey’s years போல் செய்வதில் வேலையில் ஒரு ரிதம் கிடைப்பது போல் எளிதாக முடிக்கமுடிவது மட்டுமல்லாது அந்த வேலை நம் ஒவ்வொரு அணுவிலும் புகுந்து விடுகிறது. Heiko என்ற Convenience storeல் வேலை செய்யும் பெண்ணின் அனுபவங்களே இந்தக்கதை.

பத்து வருடங்களாயிற்றே, இன்னும் பதவி உயர்வு கிடைக்கவில்லையா, குழந்தை பெறவில்லையா, சொந்த வீடு இல்லையா என்று சமூகம் கொடுக்கும் நெருக்கடிகள் பொதுத்தன்மையிலிருந்து சின்ன வித்தியாசம் தெரிந்தாலே ஆரம்பிக்கும். Heikoவுக்கு ஆண் நண்பர் இல்லை, காதல் வசப்பட்டதில்லை, பகுதிநேர வேலையில் 18 வருடங்கள் என்று Weird ஆன சமாச்சாரங்கள் ஏராளமாய் இருக்கையில் குடும்பம், சமூகம் எல்லாம் சேர்ந்து அவளை நெருக்குகிறது. (இந்தியாவில், அதிலும் குறிப்பாக ஆண்கள் பெண்களிடம் பழக எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், முப்பத்தாறு வயதிலும் பெண் வாசம் கூடத் தெரியாமல் இருப்பது Weird இல்லை, இயல்பான ஒன்று என்று அறிக)

Shiraha போல் பல பெரிய விசயங்களைப் பேசி, ஒட்டுண்ணியாய் வாழும் மனிதர்கள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்கள். மிகவும் யதார்த்தமான ஒரு கதையை, வினோதமான ஒரு பெண்ணை மையக் கதாபாத்திரமாக்கி நாவல் புனையப்பட்டிருக்கிறது. நாவலாசிரியர், Convenience Storeல் பணிபுரிந்ததால் அது குறித்த தகவல்கள் எல்லாமே முதல்படித் தகவல்களாக உள்ளன Robin Cook ஆஸ்பத்திரியை வர்ணிப்பதைப் போல.

மொழிநடை இருண்மையாகவும், நகைப்பூட்டும் வகையிலும் (Dark and hilarious) எளிதாகப் படிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. “சிலர் அவர்களது ஜீன்களின் தொடர்ச்சியை இந்த பூமியில் விட்டுச்செல்லத் தகுதியில்லாதவர்கள்” என்பது போல் Heiko எளிதாகக் கடக்கும், நம்மால் எளிதாகக் கடந்து செல்ல முடியாத வரிகளும் உண்டு. Sayaka ஜப்பானின் புதிய குரல். புதியகுரலில் ஜப்பானின் கலாச்சாரம் கூட மாறியிருப்பது தெரிகிறது. ஒரே அமர்வில் படிக்கக்கூடிய நாவல்.

Yoko Ogawa

The Memory Police – Yoko Ogawa- Translated by Stephen Snyde:

David Baldacciன் கதைகளில் Amos Decker என்று ஒரு கதாபாத்திரத்திற்கு நினைவில் இருந்து எதுவுமே மறையாது. பத்து ஆண்டுகளுக்கு முன் ஒருவருடன் பேசியது கூட வார்த்தைக்கு வார்த்தை திரும்பச் சொல்ல முடியும். இந்த நாவல் அதற்கு நேரெதிர். அந்தத்தீவை ஆள்பவர்கள் என்ன மறைய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ அவை நிரந்தரமாக மறைந்து விடும். மக்களின் நினைவில் இருந்தும் மறைந்து விடும். மறைந்தவற்றை நினைவுகூரும் எதையும் வைத்திருத்தல் குற்றம். நினைவுகளை மனதில் பதுக்கி வைத்திருப்பவர்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படுவர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது யாருக்கும் தெரியாது.

புத்தகங்கள் ஒரே கதையை இருவருக்கு சொல்வதில்லை. அதே போல் இருபத்தைந்து வருடம் கழித்து மொழிபெயர்க்கப்படும் புத்தகம் வேறு கதையைச் சொல்லக்கூடும். Anne Frankன் டைரியை நினைவு கூறும்விதமாக இவர் எழுதிய இந்த நாவல், அரசாங்கங்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் தனிப்பட்ட மனிதரின் வாழ்வில் நுழைந்து அவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதைச் சொல்லும் காலத்தில், இந்தக்கதை வேறுவிதமான புரிதல் தருகிறது.

கதைசொல்லி உட்பட எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர் இல்லை. நினைவுகள் அழியும் தீவில் பெயரை நினைவுகொள்வதில் பயனில்லை. கதைசொல்லி நாவலாசிரியர் என்பதால் அவர் எழுதும் கதையின் பகுதிகள் சிலவும் இடையில் வருகின்றன. தவிர்க்க முடியாது இரண்டு கதைகளுமே கடைசியில் ஒரே கதையாகின்றன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எழுதிய நூல், இந்த வருடம் மொழிபெயர்க்கப்பட்டு, இப்போது எழுதப்பட்ட நூல்களுடன் போட்டியிட்டு புக்கர் இறுதிப்பட்டியல் வருவது எப்போதுமே நடக்கும் நிகழ்ச்சி இல்லை.

 

Yukio Mishima

Thirst for Love – Yukio Mishima:

இவர் சாமுராய் குடும்பத்தில் பிறந்தவர். சாமுராய்கள் மனத்தையும் உடலையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்து பேரரசருக்கு நம்பிக்கையுரியவர்களாய் இருக்கும் விதியைக் கடைபிடிப்பவர்கள். அதே விதிதான் Zenன் அடிப்படையான கடும்பயிற்சி, சுயதியாகத்தை உருவாக்குவது. ஏராளமான சிறுகதைகள், முப்பத்து மூன்று நாடகங்கள், பல நாவல்கள் எழுதியவர். தொடர் நாவலை முடித்ததும் இறப்பேன் என்றவர் The decay of the cycle என்ற கடைசி நாவலை முடித்து விட்டு 1970ல் தற்கொலைச்சடங்கு செய்து தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் இறந்தார்.

புத்தகத்திலிருந்து:

“காதல் என்பது என்ன? அடையாளம், இன்னொரு அடையாளத்திடம் வீழ்வதைத் தவிர வேறில்லை.  கலவிக்கு வருவோமானால்- அநாமதேயம், அநாமதேயத்திடம் வீழ்வது. கூச்சலும் மேலும் கூச்சலும்.  தன்னிலை இழந்தது தன்னிலை இழந்ததுடன் செய்யும் இருபாலினக்கலப்பு.  ஆண்மை. பெண்மை. உன்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியாது.”

நாவலின் தலைப்பே மிக ஆச்சரியமான ஒன்று. பிரதான கதாபாத்திரத்தின் இதயம் காதலால் நிறையாதபோது இந்தத் தலைப்பு. ஏன் நிறையவில்லை, நிறையாததன் விளைவுகள் என்ன என்பதே இந்த நாவல். இதுவரை நீங்கள் பார்த்திராத மிகச்சிக்கலான கதாபாத்திரம் இந்த நாவலின் கதாநாயகி.

காதல் பெரும்சக்தி, காமம் பெரும் உந்துதல் என்ற நம்பிக்கையைத் தகர்த்து பொறாமையே எல்லாவற்றையும் விட பெரும் சக்தி என்கிறது இந்த நாவல்.  காதல் இல்லாத Infatuation கூட ஒரு வழிநடத்தும் சக்தியாக இருக்கக்கூடும்.

பெண்பித்தன், வன்முறை செய்யும் கணவன் அவளிடமிருந்த காதலின் பெரும்பகுதியை விழுங்கியிருக்கக்கூடும். அதன் பிறகு மாமனார். அதன் பிறகு அந்தத் தோட்டக்காரப்பையன். மீதமிருப்பவள் வன்மமும் பொறாமையும் விட்டேத்தியான மனம் கொண்ட இந்தப் பெண் தான்.

திருவிழாக் காட்சிகளும், ஒரு வேலைக்காரப் பெண்ணைக் காரணமேயில்லாமல் வேலையை விட்டு எப்படி நிறுத்துவது என்று குடும்பமே தவிப்பது போன்ற இடங்கள் ஜப்பானியக் கலாச்சாரத்தின் கூறுகள்.

மருத்துவமனையில் அவள் நடத்தும் ஓரங்கநாடகம், டைரியைப் பிறர் பார்ப்பதை ஏற்றுக்கொண்டு அது பொய் டைரி, ஒன்றும் பிரச்சினை இல்லை என்பது, தோட்டக்காரனும் வேலைக்காரியும் விளையாடுவதைப் பார்த்து எழும் கோபம் என உளவியல் நாவல் முழுதும் முக்கியப் பங்காற்றுகிறது.

நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி ஆறுபேரில் ஒருவராக இருந்திருக்கிறார். பரிசுகள் எல்லாவற்றையும் தாண்டிய Master Story teller. நாவலின் முடிவு ஆசிரியர் தீர்மானிக்காமல் கதாபாத்திரம் முடிவெடுத்தது போல் தோன்றுகிறது. Third personல் சொல்லப்படும் கதை அழுத்தம் தேவைப்படும் இடங்களில் Italicsல் First person ஆக மாறுகிறது. மிகமிக அழுத்தமும் ஆழமும் கொண்ட நாவல்.

Kenzaburo Ōe

The Silent Cry by  Kenzaburo Ōe Translated by John Bester:

இருபதாம் நூற்றாண்டின் ஜப்பானின் முக்கியமான இலக்கிய ஆளுமை இவர். அறுபதுகளில் பாரிஸில் வசித்ததால் சார்த்தரின் பாதிப்பு ஏற்பட்டது. இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1994ல் வென்றபோது, இந்த நாவல் அவருடைய படைப்புகளில் முக்கியமானதாக அடையாளப்படுத்தப்பட்டது. இவருடைய அநேகமான கதைகள், ஒரு இளைஞன் போருக்குப் பின்னான இழப்பை உணர்வதையோ, இல்லை வரும் போரை எண்ணி நம்பிக்கை இழப்பதையோ பற்றிப் பேசுபவை.

இந்த நாவல் நூறுவருடங்கள் முன்னும் பின்னும் செல்கையில் அந்தக் காலத்திய சமூகம், அரசியலைச் சொல்லிப் போகிறது. வார்த்தைகள் ஆரம்பகட்ட வாசகருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், Metaphors நிறைந்து, இரண்டுகாலகட்டங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிவது போன்ற உணர்வை அளிக்கும் வகையில், அதிகபட்ச வாசக கவனத்தைக் கோரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

ஜப்பானிய மரபில் தோய்ந்த கதை, பிரஞ்சு இருத்தலியல் பாதிப்பில் எழுதப்படுகையில் வித்தியாச உணர்வைத் தருகின்றது. தாஸ்தயேவ்ஸ்கியின் Demons படித்தவர்கள் ஏராளமான Similarityஐக் காணலாம். படிப்பதற்கு, விரும்பத்தகாத, துயர் நிறைந்த கதையை இவ்வளவு ஆழமாக, வாசகர்களை ஈர்க்கும் வகையில் சொல்வது எளிதில்லையே!


திரில்லர் நாவல்கள் : 

Fuminori Nakamura

The Thief – Fuminori Nakamura:

யாரேனும் திரில்லர்/Crime நாவல்களுக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றால், நான் அவர்களுக்குப் பரிந்துரை செய்வது இந்த நாவலை. பரவலாகப் படிக்கும் வாசகர் மத்தியிலும் கூட அதிகம் கேள்விப்படாத பெயர் இவருடையது என்பதில் நட்டம் இவருக்கில்லை.

இந்த நாவல் ஒரு பிக்பாக்கெட்டைப் பற்றியது. கதாநாயகனுக்குப் பெயரில்லை. கூட்டத்தில் தொலைபவருக்கு பெயர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?  இந்த நாவல் இருத்தலியலும், போஸ்ட் மாடர்னிசமும், கலந்த திரில்லர். கதாநாயகன் தனிமையில் தவிப்பவன். ஆழ்மனதில் உறவுகளை நினைப்பவன். அவனுக்கு Tower என்பது கடவுளின் உருவகம். அதனுடைய தொடர்ந்த இருப்பு அவனை நிலைகுலையச் செய்து, அவனுடைய தொடர் திருட்டுக்கள், அவனுக்கும் கடவுளுக்குமான இடைவெளியை அதிகரிப்பதாக நம்புகிறான். உடைமை எவருடையது என்ற நிரந்தரம் இல்லா உலகில் பொருட்கள் கைமாறுவது எப்படி திருட்டாகும் என்று தத்துவ விளக்கம் சொல்கிறான்.

புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட நாவல். நிறைய இடங்களில் நாம் வாசக அனுபவத்தினால் இடைவெளியை நிரப்பும் எழுத்து. சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும் நாவல். 

Keigo Higashino 

New Comer – Keigo Higashino:                              

மோகன்லாலின் திருஷ்யம் படம் வருவதற்கு ஒரு வருடம் முன்பு, புத்தகக்கடையில் ஒரு புத்தகத்தை எடுத்து, இடையில் படித்து, அந்த மொழிநடை கவர அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அப்போது எனக்கு ஜப்பானியக் கதைசொல்லலில் மாஸ்டர் ஒருவரை அந்த நூல் அறிமுகம் செய்தது என்பது தெரிந்திருக்கவில்லை. திருஷ்யம் கதையின் உயிர்நாடி இந்தக்கதையில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் பெயர் “The Devotion of Suspect X”.

New Comer ஸ்டூடியோ அபார்ட்மெண்ட்டில் தனியாக வாழ்ந்த, விவாகரத்து பெற்ற பெண்ணின் கொலை விசாரணையில் ஆரம்பிக்கிறது. காப்பீட்டு முகவர் ஒருவரே அந்தப்பெண்ணைக் கடைசியாகப் பார்த்தது. அவரால் கொலைநடந்த நேரத்தில், அவருக்கு அலிபி இல்லாமல் விடுபட்ட முப்பது நிமிடங்களுக்கு, சரியான காரணம் சொல்ல முடிவதில்லை. எங்கெங்கோ சுற்றி கடைசியில் கொலையாளியைக் கண்டு பிடிப்பார்கள்.

Keigo Higashino என்ற பெயர் இருந்தாலே தயங்காமல் அந்தப் புத்தகத்தை வாங்கலாம். ஜப்பானிய Crime Fictionல் இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் இவரே. கதையில் விழும் சிக்கல் நிறைந்த முடிச்சுகள் இவர் கதைகளின் பலம்.

Hideo Yokoyama

Six four By Hideo Yokoyama:

இவருடைய மாஸ்டர்பீஸ் இந்த நாவல். அறுநூறுக்கும் மேல் பக்கங்கள் இருப்பது கையில் கனப்பதால் மட்டுமே தெரியும்.

மிகாமி, காவல்துறையில் பத்திரிகைத் தொடர்பு டைரக்டர். நீண்டகாலம் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் Field workல் இருந்துவிட்டு, அவருக்கு Desk work என்பது தண்டனையாய்த் தெரிகிறது. அந்தப்பணியில் இருக்கும் உள்அரசியலும், தாய்வீடு போன்ற குற்றப்பிரிவில் இவரது பழைய நண்பர்கள் இவரை அந்நியன் போல் பார்ப்பதும் மேலும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இவையெல்லாம் போதாதென்று அவருடைய ஒரே மகள், வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுகிறாள். காவல்துறையில் இருந்து, அவள் வயதுப்பெண்ணின் பிரேதம் கிடைக்கும் போதெல்லாம் அடையாளம் காட்டச்சென்று, அவரும், அவர் மனைவியும் விரக்தியின் எல்லைக்கே செல்கிறார்கள். கணவன் மனைவி உறவு சீர்குலைகிறது.

மனைவி மனச்சிதைவு அடைய ஆரம்பிக்கிறார். இந்த சூழ்நிலையில் 14 வருடங்களாக தீர்வு காணாத (ஜப்பானில் அப்போது கொலைக்கான Law of limitation 14 வருடங்கள்) வழக்கு ஒன்று இவரிடம் புலன் விசாரணைக்காகக் கொடுக்கப்படுகிறது.

ஜப்பானிய வாழ்க்கை, அரசாங்க அலுவல் நடைமுறைகள், குடும்ப உறவுகள், போலீஸ் விசாரணை வழிமுறைகள் என்று பலவும் இந்த நாவலில் படம்பிடிக்கப் பட்டதைப்போல நான் வேறு எந்த நாவலிலும் படித்ததில்லை. ஜப்பானிய வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளத் தவறவிடாது படிக்க வேண்டிய புத்தகம்.

Kanae Minato

Penance and confessions by Kanae Minato:             

இவரைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, ஆச்சரியத்தில் ஆழ்த்திய விசயம், வீட்டு வேலைகளின் நடுவே நேரம் கிடைக்கையில் திரில்லர் நாவல் எழுதுபவர் என்பது. இரண்டு நாவல்களுக்கும் ஒரே கதைக்கரு, தாயின் பழிவாங்கல். என்னைப் பொருத்தவரை, Penance பலவகையில் Confessionஐ விட சிறந்தது, இரண்டாவது நாவல், நிறையப் பேசப்பட்ட பொழுதிலும், பல பரிசுகளை வென்ற போதிலும்.

Minatoவின் மொழிநடை, மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இவரது கதை சொல்லும் யுத்தி, பெரும்பாலும் நீண்ட கடிதங்கள், பொதுக்கூட்டத்தில் ஆற்றும் உரை வாயிலாக.

Penance, நான்கு பள்ளிச்சிறுமிகள், அவர்களது விளையாட்டுத் தோழியின் கொலைக்கு சாட்சியாக இருப்பது. ஒவ்வொரு சிறுமியும் அவரவர் கோணத்தில் கதை சொல்கையில் அதற்கேற்ப மொழிநடை மாறுகின்றது. இறந்து போன பெண்ணின் தாயும் ஒரு கதைசொல்லி. எதிர்பார்த்திராத முடிவு.

ஒரு திரில்லருக்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய நூல்.

Confession ஒரு தாய், தன் குழந்தை இறப்பதற்குக் காரணமான இரு பள்ளிச்சிறுவர்களைப் பழிவாங்குதல்.

Minatoவின் கதைகள், ஜப்பானியப் பெண்களின் மனம், சிந்தனை, ஆத்மா போன்றவற்றை நுட்பமாகச் சித்தரிப்பவை. நிறைய இடங்களில் இந்தியப் பெண்களுடனான அவர்களது ஒப்புமையைக் காண்கிறோம். எல்லோருமே Venusல் இருந்து வந்தவர்கள் தானே!

Junichiro Tanizaki

Devils in Daylight by Junichiro Tanizaki:

சிறிய, விமானப்பயணத்திலேயே முடிக்கக்கூடிய நாவல். உன்மத்தம், வெறி, பிறழ்காமம் ஆகியவற்றின் கதை. வக்கிரமான, படிக்கத் தூண்டக்கூடிய மொழிநடை. 1918ல் எழுதப்பட்ட நாவல். Tanizaki,  ஜப்பானின் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

குறித்த நேரத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்து, பதிப்பாளருக்கு அனுப்ப வேண்டிய அவசரம் மற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் எழுத்தாளரின், Cynic நண்பன், நடக்கப்போகும் ஒரு கொலையைப் பார்வையிட அழைக்கையில் எல்லாமே ஆரம்பிக்கிறது. தவிர்க்க முடியாது செல்லும் எழுத்தாளரை விதி தன் குழந்தையாகத் தத்து எடுத்துக் கொள்கிறது.

எட்கர் ஆலன் போவின் சிறுகதை ஒன்றிலிருந்து இதற்கு உத்வேகம் பெற்றதாகக் கதாசிரியர் குறிப்பிடுகிறார். Poeவின் Cryptogram technique இந்த நாவலிலும் கையாளப்படுகிறது. இரண்டு விசயங்கள் இந்த நாவலில் ஆச்சரியப்படுத்துபவை. முதலாவது 1918- லேயே இது போன்ற நாவல் எழுதப்பட்டிருப்பது. இரண்டாவது, நாவல் எழுதப்பட்டு நூறு வருடங்கள் கழித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது.

முரகாமியை அநேகமாக எல்லோரும் படித்திருக்கக்கூடும் என்பதால் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. முரகாமி இன்று உலகஅளவில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் முதல் பத்து எழுத்தாளர்களில் ஒருவர். இவரது நூல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவருடைய எந்த நாவல் எடுத்தாலும் சுவாரசியம் குன்றாது. அதே நேரத்தில் இவருடைய சிறுகதைகள் நுட்பமானவை. சிறந்த வாசிப்பனுபவம் தருபவை. இவரது அறிமுக உரையுடன் கூடிய, The Penguin Book of Japanese Short Stories, ஜப்பானிய சிறுகதைகளைப் படிக்க விரும்புவர்களுக்கு, சிறந்த அறிமுகத்தைத் தரும் நூல். கணேஷ் ராமின், ‘சுழலும் சக்கரங்கள்’ என்ற தலைப்பில் அகுதாகவாவின் அருமையான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு என்ற நூல் சமீபத்தில் வந்த நூல்களில் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய இலக்கியத்தின் உள்நுழைகையில், நீங்கள் அதற்கும் மேலைநாட்டு இலக்கியங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டை, கதை சொல்லலில், எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கண்டு கொள்வீர்கள். மேலைநாடுகளை விட நாம் இவற்றுடன் நெருக்கமாக உணர முடிவதற்கு, ஒரே கண்டத்தைச் சேர்ந்த இருநாடுகள் என்பதுவும், ஆயிரம் ஆண்டுகள் தொன்மையுடைய தேசங்கள் என்பதுவும் காரணமாக இருக்கக்கூடும். தீவிர இலக்கியம் படிப்பவர்கள் திரில்லர் நாவல்களை ஒதுக்காதீர்கள். அவற்றில் அவர்களுடைய கலாச்சாரத்தின் பெரும்பகுதி ஒளிந்திருக்கிறது. ஒரு நாட்டின் எல்லா Genreகளையும் படிப்பவர்கள், அந்த நாட்டில் எப்போதோ வாழ்ந்த உணர்வை அடைகிறார்கள்.


 –  சரவணன் மாணிக்கவாசகம்  

[tds_info] 

சரவணன் மாணிக்க வாசகம், தீவிர இலக்கிய வாசகர்,  அபுனைவுகளை இதழ்களுக்கு எழுதி வருகிறார். தமிழிலக்கியம் மற்றும் அயல் இலக்கியங்கள் குறித்து ஆழ்ந்த வாசிப்பும் தேடலும் உள்ளவர்.

[/tds_info]

2 COMMENTS

  1. மிகவும் மகிழ்ச்சி உங்களின் அயலில் சிறந்த இலக்கியத்தேடல் இன்னும் வரும் பட்சத்தில் தேடி வாசிக்கும் நண்பர்களுக்கு இப்பதிவு மிகவும் காத்திரமானது மகிழ்ச்சியுடன் நன்றிகள்

  2. மிக அருமையான விமர்சனம். இதுநாள் வரை எந்த அந்நியதேச மொழிக் கதைகளைப் பற்றியும் அறியாமலிருந்த எனக்கு இக்கதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை உண்மையாகவே தூண்டுகிறது. மகிழ்ச்சி.மிக்க நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.