சுனிதா நாராயண்: நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை

காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண்.

சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக சுனிதா நாராயண் கடந்த ஐந்து தசாப்தங்களாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். மழைநீர் சேகரிப்பு சார்ந்த இவரது பணியாகட்டும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (CNG) டெல்லியில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளாகட்டும், ஏழைகள் நலம் சார்ந்த கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பதாகட்டும், காலநிலை மாற்றத்திற்கான ஒரு நடுநிலையான உடன்படிக்கைக்கான போராட்டமாகட்டும், காலநிலை நீதிக்கு ஆதரவாகப் போராடும் மிக வலிமையான ஒரு குரலாக ஒலிக்கும் சுனிதா ஒரு பத்மஸ்ரீ விருதாளர்.

நான் சுனிதாவிடம் பேசுகிறபொழுது, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) தேன் கலப்படம் குறித்த அறிக்கையான ‘ஹனி கேட்’டின் வெளியீட்டிற்குப் பிறகான அழைப்புகளுக்கும் மின்னஞ்சல்களுக்கும் பதிலளித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் புலனாய்வு மூன்று முழு மாதங்களை எடுத்துக் கொண்டது மற்றும் முற்றிலும் ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்டது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் மனிதகுல நல்வாழ்விற்கான முக்கியப் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிற எடின்பர்க் பதக்கத்தை 2020–ஆம் ஆண்டுக்காக கடந்த மாதம் வென்ற இந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு இது சராசரியான சாதனை இல்லைதான். “கோவிட்-19 படிப்படியாக மோசமடைந்து கொண்டிருக்கும் இயற்கையுடனான நமது கற்பனைத் துயருல (Dystopian) உறவின் பலன்தான்,” கணினிவழி நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் இவ்வாறு கூறிய அவர் தொடர்ந்து, காலநிலை சார்ந்த நெருக்கடி, உலகிலுள்ள ஏழைகளை மேலும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் ஆக்கிக் கொண்டிருப்பதாக கூறினார். நேர்காணலின் பகுதிகள்:

ஹனிகேட் புலனாய்விற்கு எது வழிவகுத்தது?  

வட இந்தியாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்களிடமிருந்து எங்களுக்கு தொடர்ந்து அபய-அழைப்புகள் வந்தன, தேனுக்கான சந்தை விலை வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், அதனால் விற்பனையாவதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். மற்றொரு புறம், தேனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் அழற்சியை எதிர்க்கும் பண்புகளின் காரணமாக கோவிட்-19 தேன் வாங்குதலில் ஒரு அதிகரிப்பிற்கு வழிவகுத்திருக்கிறது என்று சுட்டும் வதந்திகளின் அடிப்படையிலான தரவும் உள்ளது. தேனீ வளர்ப்பவர்களின் கூற்றுகளைக் கேட்டு நாங்கள் ஆர்வமடைந்தோம், ஒரு நேரடி ‘சைனீஸ் விஸ்பர்’ செயல்பாட்டின்போது, தேனுடன் கலப்படம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு சீன பாகினைப் (Syrup) பற்றி அவர்கள் பேசினார்கள். இந்திய விதிகளை மீறி வரமுடிந்த அந்த ‘வகை மாதிரி’ பாகினைக் நாங்கள் கண்டுபிடித்தோம், மேலும் கடந்த ஆண்டுகளில் அவை எவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றன என்றும் ஆராய்ந்தோம்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் இதைப் போன்ற ஒரு ‘அரிசிப் பாகினை’ப் பற்றி அறிவிப்புகளை வெளியிட்டு வந்திருக்கிறது. நாங்கள் அதைச் சுத்தமான தேனுடன் கலந்தபோது, அது அத்தனை ஆய்வக சோதனைகளிலும் வெற்றிபெற்றது. அது நிஜமாகவே அச்சுறுத்துவதாக இருந்தது. பிறகு, நாங்கள் 13 பெரிய நிறுவன வகைகளின் மாதிரிகளை உயர்நிலை ஆய்வுகளுக்காக ஜெர்மனிக்கு அனுப்பினோம், அவை அந்த ஆய்வுகளில் தோல்வியடைந்தன.

கலப்படம் செய்யும் வணிகம் அதிநவீனமான ஒன்றாகும். பெரிய கவலை என்னவென்றால் தேனீக்களுக்கு இருக்கிற அச்சுறுத்தல்தான். அவை தான் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தின் வருவதை உரைக்கும் முன்னோடிகள், அவை இல்லாவிட்டால், நமக்கு உணவு உற்பத்தி இருக்காது. தேனீக் கூட்டங்களின் அழிவுதான் உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்தியாவிலும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டை சுட்டிக்காட்டியது.

நிறுவனங்களிலிருந்து வரும் பதிலடிகளைப் பொருத்தமட்டில் இது ஒரு சரியான உதாரணம். முதல் பதில் மறுத்தலாக இருக்கும், பின் ஆய்வு முடிவுகளுடன் அறிவியல்பூர்வமான ஏமாற்று வித்தைகளைக் கொண்டுவருதல், தொடர்ந்து, ‘வெளிநாட்டு முகவர்கள்’ என எங்களைத் தாக்குதல். நாங்கள் இப்போது எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர்கள் எங்களைக் குறிவைக்கவும், எங்கள் தரப்பை தவறென நிரூபிக்கவும் அரசாங்கத்தைப் பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர்களை நம்ப வைப்பதற்காக அவர்கள் மிகப்பெரிய விளம்பரச் செலவு செய்கிறார்கள், இது நம்மை பெரிதும் கவலைப்படச் செய்கிறது. எங்கள் ஆய்வை FSSAI-க்கு விளக்கிக் காட்டியிருக்கிறோம், அதன் கட்டுப்பாட்டாளர் அதை முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறோம்.

காலநிலை நெருக்கடியைச் சரிசெய்ய நேரம் கடந்துவிட்டதா?

நேரம் கடந்துவிட்டதென நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். ஆனாலும், ஆம், நேரம் கடந்துவிட்டதுதான். காலநிலை மாற்றம் குறித்து 1991-லிருந்தே குறைந்தபட்சம் சர்வதேச பேச்சுவார்த்தைகளிலாவது தீவிரமாகப் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அப்போதிருந்து உலகம் தீவிர நடவடிக்கைகளை தள்ளிப்போடவும், மழுப்பவும், தாமதப்படுத்தவும்தான் செய்திருக்கிறது, விளைவுகளை நாம் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை. ஆனால், பசுங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான வழிகள் இருக்கின்றன என்பதில் உலகம் முழுவதிலுமுள்ள அரசாங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கு எந்த ஒரு நாடும் உண்மையில் பெரிய அளவிலான முதலீடு செய்யவில்லை. சில விதிவிலக்குகளும் உள்ளன – அமெரிக்கா (நிலக்கரியிலிருந்து எரிவாயுவிற்கு மாறியுள்ளன, அதுவும் புதைபடிவ எரிபொருள் தான்), ஜெர்மனி (சூரிய சக்தி), ஐக்கிய ராஜ்ஜியம் (UK), நார்வே மற்றும் டென்மார்க் (கடல் காற்று) மற்றும் ஸ்வீடன் (உயிர்சக்தி, நீர்சக்தி மற்றும் அணுசக்தி).

எரிசக்தி துறையிலிருந்து வெளிவரும் உமிழ்வைக் குறைக்க முடியுமாயின் வேறெங்கும் அதை அதிகரிக்கவும் கூடாது. உதாரணமாக, அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் எரிசக்தி சார்ந்த உமிழ்வைப் பெருமளவிற்கு, கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைத்திருக்கிறார்கள், ஆனால் மலிவாக கிடைப்பதால் நாட்டின் எரிபொருள் உபயோகம் அதிகரித்திருக்கிறது. 2016-இல் இருந்ததைக் காட்டிலும் இப்போது உமிழ்வு அதிகமாக உள்ளது. எரிசக்தி சார்ந்த உமிழ்வை நாம் குறைக்க வேண்டியிருக்கிறது, மேலும் மற்ற ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தைக் கொண்டுவருவதை நாம் உறுதி செய்யவும் வேண்டும், குறிப்பாக போக்குவரத்துத் துறையில்.

ஏழைகளும் விவசாயிகளும்தான் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள். வளிமண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்களுக்கு அவர்கள் பொறுப்பில்லை, ஆனால் நம்முடைய மிதமிஞ்சியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களே. காலநிலை மாற்றத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் நம்மை வலியுறுத்துகிறார்கள். அந்தக் குரல்களுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். இந்தக் காலகட்டம் சுவாரசியமானது, இதிலிருந்து நாம் கற்றுக்கொண்டு நாம் செயலாற்றும் விதத்தை மாற்ற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நமது நிர்வாக அமைப்புகள் இன்னும் பழைய வழிகளையே சார்ந்திருக்கின்றன, மாறுவதற்கும் தயாராக இல்லை.

சர்ச்சைக்குரிய சூழல் தாக்க மதிப்பாய்வு வரைவு (EIA) 2020, மற்றும் முன்மொழியப்பட்டிருக்கும் விரிவாக்கத் திட்டங்களினால், உதாரணமாக, மோலம் மற்றும் ஜாலி கிராண்ட் விமான நிலையம் திட்டங்களினால், இந்தியாவின் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்த உங்கள் கருத்துகள் என்ன?  

ஒரு சவப்பெட்டியின் கடைசி ஆணி இது. சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதி நடைமுறைகளில் உள்ள ஊழலினால் உருவாக்கப்பட்ட ஒரு சவப்பெட்டி ஏற்கெனவே நம் வசம் இருக்கிறது. இப்போது திட்டங்களின் கண்காணிப்பு முகம் தெரியாத குழுக்களால் செய்யப்படுகிறது, தங்கள் முடிவுகளுக்கு அவை பொறுப்பேதும் ஏற்பதுமில்லை. உதாரணமாக, நவி மும்பை விமான நிலையத் திட்டம் முடிவெடுப்பதில் சிக்கல் நிறைந்த பல ஆண்டுகளைக் கடந்துவந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதனை எதிர்த்தார்கள், ஆனால், இறுதியில் அரசாங்கம் அதனை நிபந்தனைகளோடு அனுமதித்தது. விமான நிலையம் கட்டப்பட்ட பிறகு, அந்த நிபந்தனைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சோதிக்க ஏதேனும் வழி உள்ளதா? இல்லை, ஏனென்றால், இங்கே கண்காணிப்பே இல்லை. EIA அறிவிப்பு தற்போதையது மட்டுமல்லாமல், ஏற்கெனவே அடுத்தடுத்த அரசாங்கங்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவை நம்பிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிக்கு இன்னும் மேம்பட்ட ஒரு நடைமுறையை நாம் கோர வேண்டும்.

22 ஆண்டு கால சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்தின் (EPCA) அங்கமாக நீங்கள் இருந்தீர்கள், தேசியத் தலைநகர் பகுதி (NCR) மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையத்தை உருவாக்குவதற்காக அது கலைக்கப்பட்டது. சுருள் போலத் தொடர்ந்து நடக்கும் நெருக்கடிகளை இந்தப் புதிய அமைப்பு சமாளிப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

EPCA-வில் நாங்கள் செய்திருக்கும் பணிகளைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பல்வேறு கடுமையான, கேள்விக்குள்ளான நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடிந்தது – சரக்கு வண்டிகளின் மீதான கட்டுப்பாடாகட்டும் அல்லது புது தில்லி, பதர்பூரில் இருந்த கடைசி அனல் மின் நிலையத்தின் மூடலாகட்டும். EPCA நீதிமன்றத்தால் அதிகாரம் வழங்கப்பட்ட வாரியமாக இருந்ததால் எங்களால் அதைச் செய்ய முடிந்தது. இன்று அரசாங்கம் அதைக் கலைத்துவிட்டு இந்த ஆணையத்தை அமைத்திருப்பது நல்ல விஷயம்தான், ஏனென்றால் நமக்கு நிரந்தரமான ஓர் அமைப்பு வேண்டும். பிரச்சினையின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்வதாக அரசாங்கம் சமிக்கை காட்டியிருக்கிறது, நான் இதை ஒரு முக்கியமான முன்னோக்கிய நகர்வாகப் பார்க்கிறேன். நடைமுறைப்படுத்துவதையும் மாசுபடுதலுக்கான உள்ளூர் மூலங்கள் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதையும் பொருத்துதான் இனி எல்லாமே இருக்கிறது.

ஒருமுறை-பயன்படுத்தப்படும் நெகிழிக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் போரை கோவிட்-19 திருப்பிப் போட்டிருக்கிறது. இது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன? 

இந்த தொற்றுநோய் ஞெகிழிக் கழிவின் அளவை அதிகரித்திருக்கிறது, இது நம்மை மிகப்பெரிய அளவில் கவலைப்படுத்த வேண்டும், ஏனென்றால் ஒரு நெருக்கடி இன்னொன்றிற்கு வழிவகுக்கிறது. நம்மை ஞெகிழியை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தச் செய்வதற்காக ஞெகிழித் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் தீங்கற்றதாகத் தெரியும் வார்த்தையான ‘மறுசுழற்சி’ என்பதில் தான் இதன் அரசியல் இருக்கிறது. மறுசுழற்சி செய்யப்பட முடியாத ஞெகிழிகளில் நிறைய வகைகள் உள்ளன, ஏனென்றால் இது பொருளாதாரரீதியாகச் சாத்தியமில்லை. நமது செயல்களின் தாக்கங்களைப் பற்றி விழிப்புணர்வோடு இருப்பது ஞெகிழியைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க இந்தியர்களான நமது பொறுப்பே.

அமெரிக்கா காலநிலை நெருக்கடியை இதுவரை கையாண்ட விதத்தை பைடன்-ஹாரிஸ் அணி மாற்றும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அமெரிக்காவின் உயர்நிலை தலைமை மாற்றம் காலநிலை இயக்கத்திற்கு முக்கியமானது, ஏனென்றால், முன்னாள் அதிபர் யதார்த்தத்தோடு மிகவும் ஒத்துப்போகாதவராக இருந்தார், மேலும் காலநிலை மாற்றத்தை மறுத்தவர். காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகளில் தாங்கள் உறுதியாக இருப்பதாக பைடன்-ஹாரிஸ் அணி தெளிவாகச் சொல்லியிருக்கிறது, அவர்கள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமெரிக்கா என்ன செய்கிறது என்பது காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியம், ஏனென்றால், ஒரு விதத்தில், அவர்கள் ஒரு சுட்டிக்காட்டும் இனத்தினர். அவர்களால் ஒரு விஷயத்தைச் செய்ய முடிந்தால், பின் மொத்த உலகமும் அதைச் செய்யும்.

இந்தியாவில் நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு உயர்நிலை தலைவர்களிடையே இருக்கிறது, ஆனால், நாம் எந்தளவு செயல்பட வேண்டும் என்பதைக் குறித்த போதுமான அறிவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. உதாரணமாக, காற்று மாசுபாட்டைப் பொருத்தவரையில், வாகனங்களுக்கு நாம் CNG கொண்டுவந்ததைப் போல தொழிற்சாலைகளுக்கு நாம் இயற்கை எரிவாயுவைக் கொண்டுவர வேண்டும் என்று நான் வாதிட்டுக் கொண்டே இருக்கிறேன். அது இரு பக்கங்களுக்கும் வெற்றி எனும் நிலைமையாக (win-win) இருக்கும், ஏனென்றால், தொழிற்துறை வளர்ச்சி இருக்கும், ஆனால் மாசுபாடு இருக்காது. ஆனால், அதற்கு ஒரு மாறுபட்ட வரிவிதிப்புமுறை தேவைப்படுகிறது. இணை-நன்மை அணுகுமுறை (Co-benefit Approach) என்று நாம் சொல்வதுதான் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது: நமக்குப் பொருளாதார வளர்ச்சி வேண்டும், ஆனால் காற்று மாசுபடுதலை குறைக்கும் ஒரு வழியில் நாம் அதைச் செய்ய வேண்டும்.

ஏழைகளுக்கு எரிசக்தி வசதிகளைச் செய்துகொடுப்பதில் முதலீடு செய்வது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் ஏன் முக்கியமாக இருக்கிறது?  

காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் மிகச்சிறந்த சமன்படுத்திகள், அவை பணக்காரர்களையும் ஏழைகளையும் சமமாக பாதிக்கின்றன. இன்று ஏழைகள் தாக்கப்பட்டால், பணக்காரர்களும் இறுதியில் பாதிக்கப்படுவார்கள். காட்டுத் தீயும் பெருவெள்ளமும் வரும்போதெல்லாம் இதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த மொத்த உலகமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது, மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா, தேவையான நடவடிக்கைகளை எடுப்போமா என்பதை நம் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


தி ஹிண்டு-வில் வெளியான நேர்காணல்; நேர்கணவர் நிதி அதல்கா

தமிழில் சுஷில் குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.