மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை.
தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு இடையே ஒருமாத காலஅளவு எடுத்துக்கொண்டு வாசித்து நிறைவு செய்ய முடிந்தது.
‘கடந்த காலங்களைப் பற்றிய தெளிவான, தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் பணி வரலாற்று ஆசிரியர்களுக்கு உண்டு’ என்ற ரொமிலா தாப்பரின் கூற்று சேப்பியன்ஸ் போன்ற நூல்களை நாடிச் செல்ல வைக்கிறது.
கால எந்திரமும், மாயக் கம்பளமும் யுவால் நோவா ஹராரிக்கு கிடைத்து விட்டது போலும்.
பலகோடி ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று, பெருவெடிப்பிலிருந்து துவங்கி இயற்பியல், வேதியியல், உயிரியல் உருவான காலங்களைக் கடந்து, குறைந்தது ஆறுவகையான மனித இனங்கள் பூமியில் தோன்ற நேரிட்ட சூழல்களை விளக்கி, சேப்பியன்ஸின் ஆதிக்கத்தையும், அழிவுக்கான சாத்தியங்களையும் நுட்பமாக எழுதிச் செல்கிறார் ஹராரி.
அறிவு, உணவு, அறிவியல் புரட்சிகள் பூமியையும், உயிரினங்களையும் எவ்வகையிலெல்லாம் பாதித்திருக்கின்றன என்று அறியமுடிகிறது.
குறைந்தது ஆறு வகையான மனித இனங்கள் தோன்றியும், தன்னைக் காட்டிலும் உடல்ரீதியாக மிக வலிமையுடன் இருந்த நியாண்டர்தால் இனத்தினருடன் போட்டியிட்டு, பூமியின் தனித்த மனித இனமாக நீடித்திருக்க சேபியன்ஸால் முடிந்திருக்கிறது.
ஆண்டுகள் பற்றிய குறிப்புகளுடன் மட்டும் இந்நூல் எழுதப்பட்டிருக்கவில்லை. மதிப்பீடுகளுக்கு நியாயம் கற்பித்தலுக்கான மெனக்கெடல்கள் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
சேப்பியன்ஸ் அனைவரும் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான் என்று குறிப்பிடும் ஹராரி, அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார்.
மற்ற விலங்குகள் அனைத்தும் பிறந்த சில மணி நேரங்களில் தமது பெற்றோரின் இயல்பான செய்கைகளை பற்றிக் கொள்கின்றன. மனிதன் மட்டுமே குறைந்தது சில ஆண்டுகளுக்காவது பெற்றோரை சார்ந்திருக்கிறான்.
நான்குகால் நடமாட்டத்திலிருந்து நீங்கி, இரண்டு கால்களில் நிமிர்ந்து நடமாடத் தொடங்கியதும் கர்ப்பவாய் சுருங்கிவிடுகிறது. இதன் காரணமாக பிரசவகால மரணங்கள் சம்பவிக்கின்றன.
உரிய காலத்திற்கு முன்பே நிகழ்ந்துவிடும் குறை பிரசவங்களே உயிரை பாதுகாக்கின்றன என்ற நிலை வந்து விடுகிறது. இதன் நீட்சியாகவே குறை பிரசவங்களும் நீடித்துவிடுகின்றன.
நம்மில் அனைவருக்கும் வேகமாக, அதிகமாக உண்பவர்களைக் காண்கையில் குறும்பும், நையாண்டியும் தோன்றும். உண்மையில் நாம் அனைவருமே அதேபோன்ற இயல்பினை உடையவர்கள் தான். மெதுவாக, குறைவாக, உண்பவர்களாக அறியப்பட்டவர்களை ஒரேயொரு வேளை பட்டினி போட்டுவிட்டு அவர்களின் உண்ணும் வேகத்தையும், அளவையும் கண்டறியவேண்டும்.
நாடோடிகளாக, வேட்டைக்காரர்களாக அலைந்து திரிந்த ஆண்டுகளில் சேப்பியன்ஸ் மனிதர்கள் உணவுப் பற்றாக்குறையால் மிக அதிக அளவில் மடிந்திருக்கின்றனர்.
அதிக கலோரி உணவுகளை மிகுதியாக உண்ணுதல், உயிர்த்திருத்தலுக்கான வழிகளில் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
காடுகளில் இனிப்புச் சுவையுடைய பழங்கள் மிக அரிதாகவே மனிதனுக்கு கிடைத்திருக்க, தேவை-அளிப்பு விகிதப்படி இயல்பாகவே இனிப்புச் சுவைக்கு ஒரு மதிப்பு உண்டாகிவிட்டது. இனிப்புக்கான விழைதல், நமது டிஎன்ஏவில் ஆழமாக பதிந்திருக்கிறது.
பண்டமாற்று முறையில் அறிமுகமான வணிகம், தேவையுள்ள பொருட்களின் மீது சென்று மையப்படுத்திக்கொண்டு, தங்கத்தின் பக்கம் நகர்ந்து, அச்சிடப்பட்ட காகிதப் பணத்திற்கு நீடித்து, மின்னணு பணப்பரிமாற்றம்வரை சென்றுவிட்டது.
அலுமினியத்தின் கண்டுபிடிப்பு மிகக் குறைவாக இருந்த காலகட்டங்களில், தங்கத்தைக் காட்டிலும் அவ்வுலோகத்திற்கு பெரும் மதிப்பு கிடைத்திருக்கிறது.
நவீனகால சேப்பியன்ஸ்களான நாம், தேவைகளினால் உந்தப்பட்டு, கலையுணர்வு அற்ற, நுகர்வு மோகம் கொண்டு சில டஜன் முறைகளாவது கடிகாரங்களை பார்த்துக் கொண்டு வாழும் எந்திரத்தனமான வாழ்க்கையைக் கைக்கொண்டு விட்டதாக கூறுகிறார் ஹராரி.
கடல் பயணங்கள் பாதுகாப்பற்ற, துணிச்சலான செய்கைகளாகவே அறியப்பட்ட போதிலும், கடலோடிகளின் வெற்றிகள், புதிய கண்டங்களின் கண்டுபிடிப்பு, மிகுதியான வளத்திற்கு ஐரோப்பிய நாடுகளைக் கொண்டு சென்றிருந்த போதிலும், தொடர்ச்சியான அதே போன்ற சாகசப் பயணங்கள் தோல்விகளிலும், கசப்புடனும் முடிவடைந்திருப்பதை அறியலாம்.
உணவுச் சங்கிலியை மாற்றி அமைத்ததில் பெரும்பங்கு வகித்தது மட்டுமின்றி, மிகப்பெரிய விலங்கினங்களை தான் சென்று சேர்ந்த சில நூறு ஆண்டுகளில் முற்றிலுமாக அழித்துவிட்ட பெருமையையும் சேப்பியன்ஸ் இனம் பெற்றிருக்கிறது.
ஆப்பிரிக்க மண்ணில் தோன்றிய அவ்வினம், பிற கண்டங்களை வெற்றிகரமாக அடைந்த போதெல்லாம் மற்ற உயிரினங்கள் கருணையின்றி அழிக்கப்பட்டிருக்கின்றன.
மனித இனத்தின் நீட்சி, அதிமனிதர்கள் எனப்படும் அறிவாற்றலில் பல ஆயிரம் மடங்கு அதிகமான நபர்களை உற்பத்தி செய்து சேப்பியன்ஸ் இனத்தையே இல்லாமலாக்கிவிடும் வாய்ப்புகளையும் ஹராரி மறுக்கவில்லை.
சில நூறு ஆண்டுகளில் புவியின் மக்கள் தொகை பல மடங்குகளாக ஆகிவிட்டமை, மருத்துவத்துறையின் அபரிமித வளர்ச்சி, நுகர்வு யுகத்தின் மிக மோசமான தாக்கங்கள், நவீன முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் என அனைத்து சவால்களையும் இந்நூல் தெளிவாக விவாதிக்கிறது.
முதல் கட்டத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினங்கள், பறத்தல் குறித்த சிந்தனை எழுந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, பறவையினங்கள் தோன்றியதாக அறியும் போது மிகவும் வியப்பாக உள்ளது.
அறிவுப்புரட்சி சேப்பியன்ஸ்களின் இடப்பெயர்ச்சியை சாத்தியமாக்கி, அவ்வினத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது போன்று, விவசாயப்புரட்சி உணவுப் பஞ்சத்தை போக்கி, பட்டினி மரணங்களைக் குறைத்திருக்கிறது.
வெறும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அறிவியல் வளர்ச்சி, நினைத்துப் பார்த்திராத எல்லைகளுக்கு மனித இனத்தை கொண்டு சேர்த்தது மட்டுமின்றி, அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
20 லட்சம் ஆண்டுகள் நீடித்த எரக்டஸ் மனித இனத்தைப் போன்று மிக அதிகமான காலங்கள் சேப்பியன்ஸ் இனம் இப்பூமியில் பிழைத்திருக்க சாத்தியங்கள் அரிதாகவே உள்ளதாக ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார் ஹராரி.
அறிவார்ந்த மனிதன் என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் தற்போதைய மனித இனம், பிற உயிரினங்களின் அழிவுக்கு மட்டுமின்றி சுயஇன அழிப்புக்கும் ஏதுவாகி விட்டது.
ஐரோப்பிய, ஆசிய மனித இனம் சேப்பியன்ஸ் மற்றும் நியாண்டர்தால் மனித இனங்களின் கலவையாகவும், சீன, கொரிய மனிதஇனம் சேப்பியன்ஸ் மற்றும் எரக்டஸ் மனித இனங்களின் கலவையாகவும் அறியப்படுகிறது.
சாதியைத் தாண்டி வெளியே செல்லாத திருமண உறவுநிலைகள் இனங்களைத் தாண்டி நிகழ்கையில் அடுத்த தலைமுறைகளின் வீச்சு சிறப்பாக அமையும் வாய்ப்புகளை அறியமுடிகிறது.
நெருப்பின் கண்டுபிடிப்பு 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருப்பினும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனத்திற்கு பெரும் ஆயுதமாகவும், மற்ற உயிரினங்களால் அறிந்துகொள்ள இயலாத பெரும் அச்சுறுத்தலாகவும் நீடித்து வந்திருக்கிறது.
சிம்பன்சி குரங்குகளில் ஆல்ஃபா ஆண்கள் என்ற பிரிவு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆல்ஃபா ஆண்களில் முதன்மை இடத்தை அடைய நடைபெறும் போட்டிகளில், மனித இனத்தைப் போன்று ஆட்களை சேர்த்தல், பிரச்சாரம் செய்தல், தலைமைப் பண்புகளுடன் செயல்படுதல் உள்ளிட்ட தகவல்கள் பெரும் வியப்பை அளிக்கின்றன.
வங்கிகளின் தத்துவத்தை வெகு அழகாக, எளிமையாக விளக்குகிறது இந்நூல். நவீன பொருளாதாரம் எதிர்கால நம்பிக்கைகளின் மீது பலமாக கட்டப்பட்டிருப்பதையும், ‘கடன்’, வளர்ச்சிக்கான தவிர்க்கவியலாத நடைமுறை செயல்பாடாகவும் இருப்பதை வாசித்து உணர முடிகிறது.
நவீன முதலாளித்துவம் கருணையுடன் ஒருவேளை செயல்பட்டால், நிகழக்கூடிய இணக்கமான சூழல்களையும், ‘வளரும் பீட்சா’ என்ற தத்துவத்தின் மூலம் தேவைக்கு மிகுதியான உற்பத்தி பெருக்கம், நுகர்வினை அபரிமிதமாக்கி எப்பொருளையும் முழுமையாக பயன்படுத்த எண்ணாத மனநிலைகளை மனிதனுக்கு ஏற்படுத்துதல், பழையனவாக அறியப்பட்டவைகளை தயக்கமின்றி தூக்கியெறிதல் உள்ளிட்ட கூறுகளை எளிதாக உணர்த்துகிறது இந்நூல்.
இப்படியொரு நூலினை எழுதிய நபர் 50 வயதைக்கூட எட்டாதவர் என்பதை அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. மனித மனங்களின் நுட்பங்களை தீவிர இலக்கியங்கள் கற்பிப்பது போன்று, மனித வரலாறு குறித்த குறைந்தபட்சத் தெளிவுகளை இதுபோன்ற நூல்கள் ஏற்படுத்துகின்றன. மொழிபெயர்ப்பாளர் நாகலட்சுமி சண்முகம் பெரும் பாராட்டுக்குரியவர்.
வாசித்து விட்டேன், அருமை. இலகுவாக புரியும் படி எளிமையாகவும் கருத்து செறிவாகவும் எழுதி உள்ளீர்கள். இந்த புத்தகத்தை பற்றி நிறைவாக ஒரு பதிவை எழுதுவது அத்தனை சுலபம் இல்லை. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ✌
Thank-you very much Bro
அருமை
நன்றி சகோ
வெகு நாள் வாசிக்க நினைத்த பனுவல் மிக சுருக்கமாக காண முடிந்தது . மனித இன மூலத்தை தேடி அடைவது என்பது ஒவ்வாத விசயம் என்றாலும் ஒரு நேர்த்தியான தேடல் தேவைக்கு வழி வகை செய்வதாகவே உணர்கிறேன்
மிக்க அன்பும் நன்றியும்