“ஐ டிட் இட் மேன்… ஐ டிட் இட்” என்று கைபேசியில் ஜனனி அலறினாள். அவள் முகம் நூறுபேரை ஒருவனாக அடித்து வீழ்த்திய கதாநாயகனின் முகம் போன்றிருந்தது.
சன்னதம் வந்து ஆடி அருள் வாக்கும் அளிப்பதின் இறுதி வாக்கியமாக ஐ டிட் இட் மேன் இருந்ததாகத் தோன்றியது.
எனக்குச் சூழல் பிடிபட ஒரு நிமிடம் ஆனது. அது புரிந்த உடனே, “அடிப்பாவி… முடிச்சிட்டியா… எங்கே?” என்று பதிலுக்கு அலறினேன். என்னையறியாமல் இருக்கையிலிருந்து நான் எழுந்திருந்தேன் என்பது பிறகுதான் புரிந்தது.
“தலைநகரில்தான்…”
“எத்தனை மணிக்கு?”
“பட்டாப்பகல் பதினோரு மணிக்கு…”
“அடிப்பாவி… அங்கே பயங்கரக் கூட்டமாக இருக்குமே”
“அதுதாண்டா த்ரில். அப்புறம் ஆளில்லாத இடத்திலே என்ன ………………… க்குச் செய்யணும்?”.
“சரி சாயங்காலம் ஒரு தலைப்பாக்கட்டி பிரியாணி. கூடவே அதுவும். சரியா…?”
“இப்போதே பத்து பிரியாணி சாப்பிட்டது போலிருக்குதடா… இருந்தாலும் உங்கிட்ட சொல்லணும். வர்றேன்.”
ஜனனி…
என்னைவிட நான்கு வகுப்புகள் கீழே. ஒரே பள்ளியில் படித்தோம். அதுவும் உறைவிடப் பள்ளி. மட்டுமல்ல நான் தலைமை தாங்கிய குழுவில் உறுப்பினராக வந்தாள். பள்ளியில் படிக்கும்போதெல்லாம் அவளைக் கவனித்ததேயில்லை. பாட்டு, நடனம், மிமிக்ரி, நாடகம் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பள்ளிக் கலைவிழாவில் எங்கள் குழுவுக்கு வெற்றிப் புள்ளிகள் வாங்கித்தருபவள் என்பதால் மட்டும் நினைவிலிருந்தாள்.
நான் பள்ளி விட்டு வந்து, பட்டப்படிப்பு முடித்து, வேலைக்காக அலைந்துகொண்டிருக்கும்போது அவள் பட்டப்படிப்புக்கு எங்கள் பகுதியிலுள்ள கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
அவளும் தோழிகளும் தங்கியிருந்த விடுதி. என் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. விடுதியில் எப்போதெல்லாம் சிறு தேவைகள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம் உதவி கேட்பாள். அப்படி நட்பு மீண்டும் தழைத்தது.
அவளுக்கு மனமும் உடலும் சிவப்பு. அதுதான் நெருக்கம் சற்று அதிகமானதுக்குக் காரணம். தென்னை ஏறுவாள், தேங்காய் போடுவாள், விறகு வெட்டுவாள். புல்லட் ஓட்டுவாள். இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் “ஆனால் ஒன்று மட்டுந்தான் பாக்கியிருக்கிறது. கூடிய விரைவில் அதை நான் செய்வேன். செய்துவிட்டுச் சொல்கிறேன்” என்றாள். அது என்னவென்று கேட்டபோது அவள் கூறிய பதிலால் உண்மையில் அவள் யாரென்று புரிந்தது. பிரிவின் பிளவை விரும்பாதவள். இடைவெளியைக் குறைப்பவள், குறைப்பதற்காக பாடுபடுபவள், இடைவெளியைக் கூட்டுபவர்களை வெட்டிக் கூறுபோட நினைப்பவள் என்று புரிந்தது. அதனாலேயே அவளை எனக்குப் பிடிக்கவும் செய்தது.
சிவப்பு நிற கெட்டி அட்டை போட்ட புத்தகங்ககளில் மூழ்கிப்போயிருந்த அவளிடம் ஒருநாள்கேட்டேன் “என்னை எதற்காக…?”
“உனக்குத்தான் டிமாண்டே இல்லையேடா…” என்றாள் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே.
அதைத்தான், அந்த ஒன்றைத்தான், இன்று நடத்தித் தன் ஆசையை நிறைவேற்றியிருக்கிறாள்.
மாலையில்…
என் புல்லட்டை வாங்கிக்கொண்டே “ஏறு வண்டியில்” என்றாள். ஏறினேன். அந்த இடத்திற்குச் சென்றாள். இல்லையில்லை பறந்தாள். “அதோ அங்கேதான்” என்றாள்.
“அடக்கடவுளே” என்றுகத்திவிட்டேன்.
ராஜபாதையின் முக்கிய சந்தி.
அந்த நாற்சந்தியின் மையத்தில் இருந்த மரத்திற்குக் கீழே.
ஆயிரம் பேர் பார்க்கும் இடமாயிற்றே…
“யாரும் படம் பிடிக்கலையா?”
“அவர்கள் உறைந்துபோய்விட்டார்கள். சுதாரித்துக்கொண்டு கைபேசி எடுப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.” சிரித்தாள். நான் அவளைக் கட்டிக்கொண்டேன்.
“போவோமா?” என்று வண்டியைத் திருப்பினாள்.
அப்போதுதான் நான் கவனித்தேன். என்ன இங்கே ஒரு நாற்றம்… சிறுநீர் தேங்கி நிற்கும் நாற்றமா. நான் சுற்றும் பார்த்தேன். எதுவும் இல்லையே. என்று கூர்ந்து பார்த்தபோது என் அருகே நடந்துகொண்டிருந்தவனின் இரண்டு கால் பாதங்களும் நனைந்திருப்பதைக் கண்டேன்.
முகத்தைச் சுழித்துக்கொண்டே எதிர்திசைக்குத் திம்பினேன்… அங்கு நடந்துகொண்டிருக்கும் எல்லா ஆண்களின் பாதங்களும் நனைந்திருக்கின்றன.
புல்லட்டின் பின்னாலிருந்த நான் எல்லா ஆண்களின் பாதங்களையும் கவனித்துக்கொண்டே வந்தேன். எல்லாம் ஈரமாகயிருக்கின்றன. கூடவே நாற்றமும் அடித்தது.
அறியாமல் கண்கள் என் பாதங்களைப் பார்க்கத் தாழ்ந்தன