வினோதக் கனவு

ல அழகான பொருட்கள் வைக்கப்பட்ட நீளமான மேஜை ஒன்றருகே நான் அமர்ந்திருந்தேன்.  அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது வெள்ளியில் செய்யப்பட்டது போலக் காட்சியளித்தது. கரண்டிகளும் முட்கரண்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆப்பிள்களும்,  வட்டவடிவ பசியூக்கி தின்பண்ட உருண்டைகளும்,  சமைக்கப்பட்ட வாத்தும் கூட மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. மேஜையின் அடிப்பாகமே  தெரியாத அளவுக்கு, அதன் மீது பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. உணவுப் பண்டங்களையும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களையும் கூட அவை மறைத்தன.

மேஜையின் நீளவாட்டு பக்கத்தில் என் அம்மாவும் அப்பாவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.  என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நபர் ஒருவரும் அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தார்.  நான் மேஜையின்  மறுகோடியில் தனியாக அமர்ந்திருந்தேன்.

நான் எல்லாப் பொருட்களையும் பார்த்துக்கொண்டும் அவற்றுக்கிடையே இருந்த தொடர்பையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது இந்த மேஜை ஏன்? ஏன் இந்த பொருட்கள்  இங்கு வைக்கப்பட்டுள்ளன?  ஏன் மற்ற பொருட்கள் இங்கு இல்லை? பெரும்பாலான பொருட்கள் வட்ட வடிவத்திலிருந்தன.  வாத்தைத் தவிர. நான் ஒவ்வொன்றாகப்  பார்க்க ஆரம்பித்தேன். கரண்டிகள்,  தண்ணீர் ஜாடி , கீரை, கைக்குட்டைகள்,  ஆப்பிள்,  கோப்பை இத்யாதி.

அப்போதுதான் மேஜையை ஒட்டி அமர்ந்திருந்த எவரும் மேஜையையோ அல்லது அதன் மீது வைக்கப்பட்டிருந்த பொருட்களையோ பார்க்கவில்லை என்பதைக் கவனித்தேன்.  அவர்கள் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறு எதையும் பார்க்கவில்லை.  தொடர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களின் பார்வை வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக, அந்த அறிமுகமற்ற நபர் பார்க்கையில்  என்னையே  விழுங்கி விடுவது போல இருந்தது அவரது பார்வை. அவரது கண்கள் ஒரே மாதிரியான இரு கற்களைப் போல இருந்தன.

சாதாரணமான முகம். நாமும் அவரை கவனிக்கிறோம் என்று உறுதி செய்து கொள்ள போதுமான முகம் “நீ உன் மணத்தேர்வை இப்போது அறிவிக்கப் போகிறாய் ” என அப்பா கூறினார்

“யாரிடம்?”  நான் கேட்டேன்.

திடீரென, மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த எல்லாப் பொருட்களுக்கும் சொந்தக்காரி நான் தான் என்கிற உணர்வு எழுந்தபோதிலும்,   நான் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை

“எங்களிடம்” அவர்கள் ஒருசேரக் கூறினார்கள்.

“எல்லோரிடமுமா?”

“என்னிடம் மட்டும் சொன்னால் போதும்”  பட்டன் போடப்பட்ட சட்டை அணிந்திருந்த,  என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அந்த நபர் கூறினார்.

என்னுடைய மன உணர்வுகளை வெளிப்படையாகப் பேசுவது எனக்குக் கடினமாக இருந்தது.

“என் திருமண நிச்சயம் குறித்து நான் உங்களிடம் சொல்லப் போகிறேனா?” நான் அவரை நோக்கி சைகை செய்து கேட்டேன் . “ஆம். மிகச்சரி” அவர் திருப்தியுடன் கூறினார். கச்சிதமான,  குழப்பமற்ற பதிலைப்  பெறக்கூடிய கேள்வியை  கட்டமைப்பதென்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

“என் திருமணம் யாருடன் நிச்சயமாகியுள்ளது?”

“என்னுடன் தான்”  இந்த முறை,  அவர் திருப்தியற்ற குரலில் கூறினார்.

அனைத்தும் கனவில் நிகழ்வதைப் போலத் தோன்றினாலும், ஏதோ பயங்கரமானதாகவும் என்  உள்ளுணர்வுக்குத் தோன்றியது. என்னுடைய பேச்சுதான் உரையாடல்களில் நான் இணைந்து கொள்வதும் என்னுடைய கருத்துக்களும் சூழலுக்கு வலு சேர்க்கும் என்பது போலத் தோன்றியது. அதற்கான அடிப்படைத் தேவைகளை அங்கீகரித்து, குரலை உயர்த்தாமல், சூழலுக்குத் தக்கவாறு என்னை மாற்றியமைத்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும் எனத் தோன்றியது.

“யாரேனும் வார்த்தை வெட்டித் துண்டம் போடுகிறீர்களா? குளிர்ந்து இறுகிவிடுவதற்கு முன்பாக அதைத் துண்டமிடுவதே நல்லது.  கெட்டுப்போவதற்கு முன்பாக நாம் அதைச் செய்துவிட வேண்டியது முக்கியம்” என நான் கூறினேன்.

“உன்னிடம் கூறப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்து. கொஞ்சம் பணிவாக நடந்து கொள்ள முயற்சி செய்”  அம்மா கூறினாள்.  “நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டுதானிருந்தோம் நீயும் கலந்து கொண்டால் அது குடும்ப கலந்துரையாடலாக அமையும்.”

வெளியேற வழி ஏதும் இருக்கவில்லை.  எல்லாக் கதவுகளும் தொலைவில் இருந்தன.  “சம்பந்தம் அற்றதாகவோ மரியாதைக் குறைவானதாகவோ எனக்குத் தோன்றவில்லை. இரண்டில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமேயோ  குறித்தோ  விவாதிக்க வேண்டியிருக்கும்” என நான் கூறினேன்

என் கணவராக வர இருந்தவர் தன் கடிகாரத்தைப் பார்த்தார்

“நீ மிகவும் பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றுகிறது”  அம்மா கூறினாள். “அமைதியாக உட்கார்ந்து பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு,  உன் திருமணம் குறித்த அறிவிப்பை நீ செய்ய வேண்டும் அதற்காக வாங்கி வைத்த ஐஸ்கிரீம் உருக ஆரம்பித்து விட்டது”எனக் கூறினார்.

அழைப்பு மணியை யாரோ அழுத்திய சத்தம் கேட்டு நான் கதவின் அருகே சென்றேன்.

வாயிலில், நான் முன்பின் பார்த்திராத அல்லது அதிகம் பழக்கம் இல்லாதவர் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு ஏதோ ஒரு முறை மட்டுமே சந்தித்திருந்த நபர் ஒருவர்  நின்று கொண்டிருந்தார். அவர் யார் எனக் கேட்க விரும்பினாலும் கேட்காமல் அவரது நடுத்தரமான வாயையும்,  பெரிய மூக்கையும், சாதாரண முகத்தையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

கை நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு, என் குழப்பத்தைப் போக்க உதவும் வகையில் “நான் உங்கள் நண்பன்? “என்று  சொன்னார்.

நான் தொடர்ந்து அவரை கேள்வி கேட்டிருப்பேன். மாறாக,  தொண்டைவரை ஈர மணலால்  நிரப்பப்பட்டது போல உணர்ந்து,  வேகத்தைக் குறைத்துக் கொண்டேன்.  அடுத்த அறையில் தன்னை என் வருங்கால கணவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபரைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். இதே சூழலில் தொடர ஏதுவாக நான் படைக்கப்பட்டிருக்கிறேனா அல்லது எல்லாவற்றையும் எப்படியாவது பழையபடி மாற்றி விடலாமா என யோசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வயதான மரத்தின் உடலில் செதுக்கப்பட்டிருந்த பழமொழி ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது.  கத்தி முலாம் பழத்தின் மீது விழுந்தாலும்,  முலாம்பழம் கத்தியின் மீது விழுந்தாலும்,  சேதாரம் முலாம்பழத்துக்குத் தான்.

“ஓ!  அப்படியா?  காதலனோ?”

நான் அவனைச் சமையலறைக்கு அழைத்துச் சென்று, மேஜை அருகே அமர்ந்திருந்த  அம்மா,  அப்பா மற்றும் என் வருங்காலக் கணவரிடம், “இது என் நண்பன்” என அறிமுகப்படுத்தினேன்.  என் வருங்காலக் கணவர் உடனடியாக சங்கடமாக உணர ஆரம்பித்தபோதும்,  தொண்டையில் ஏதோ உருளும் ஓசையைக் கவனித்திருக்கவில்லை நான் என் நண்பனை வருங்கால கணவருக்கு எதிராக அமரச் செய்து அவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.  ஒருவேளை அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்த்தேன். என நண்பன் “எப்படி இருக்கிறீர்கள்” என  ஒவ்வொருவரையும் நலம் விசாரித்தான் அப்பாவின் கைகளைக் குலுக்கினான்: அம்மாவின் கைகளை முத்தமிட்டான்: வருங்கால கணவரைப் பார்த்து கவனமாகத் தலையசைத்தான். தொண்டையில் சத்தம் அதிகரித்தது. அதற்குள் அம்மா எழுந்து,  பாத்திரம் கழுவும் எந்திரத்தைத் செயல்பட வைத்திருந்தாள். சற்று நேரத்தில்,  உணர்வுகள் உண்டாக்கும் எழுச்சியின் காரணமாகத் தொண்டையிலிருந்து எழும் கரகரப்பான ஓசைக்குப் பதிலாக இயந்திரம் இயங்கும் ஒலி கேட்கத் தொடங்கியது.

“மரியாதை தெரிந்தவன்”  என அப்பா,  யாரையும் குறிப்பிட்டு நோக்காமல்,  பொதுவாகச் சொன்னார்.

மேஜைமேல் இருந்த வெள்ளி சாமான்களைத் துழாவியவாறே,  “நாம் வாத்தை  துண்டு போட்டு விடலாமே “என என் நண்பன் கூறினான். கத்தி எங்கே இருக்கிறது என அவன் கேட்டான் எனக்கு சில கத்திகளையும் வைரத்துகள்களால் வலுவேற்றப்பட்டிருந்த அவற்றின் கூர்மையான வெளிப்பகுதி குறித்த தகவல்கள் ஏனோ நினைவுக்கு வந்தன. “உங்கள் தேவைக்கும் விருப்பத்திற்கும் உகந்த ஒரே வகை கத்திகள் ‘ என அவை விளம்பரம் செய்யப்பட்டிருந்தன. அந்த விளம்பரத்தில்,  அடையாளம் தெரியாத கைகள்,  வெண்ணெய்யையும் மிருக எலும்புகளையும், ஏதோ அவை இரண்டும் ஒன்றே போல,  ஒருசேர வெட்டும் வல்லமை படைத்த பளபளக்கும் கத்தி முனைகளைப் பிடித்திருந்தன.  ஐஸ் கட்டியும், தசைநாரையும் பதப்படுத்தப்படாத மரத்தையும்,  பல்வேறு பொருட்களுக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லாதது போலவும்,  இரு துண்டுகளாக்கப் படுவதற்கு முன்னதாகவும் பிளந்த பின்பும், மிகச்சிறு அளவே வேறுபாடு இருப்பது போலவும் அந்த விளம்பரம் காட்சிப்படுத்தியிருந்தது.

எல்லாக் கண்களும் என்னை நோக்கித் திரும்பிய கணத்தில்,  நான் என் வீட்டிலேயே இருப்பதையும் அங்கிருக்கும் பொருட்கள் எல்லாம் என்னுடையவையே என்றும் உணர்ந்தேன்.

“எனக்குத் தெரியாது ” என்றே நான் எல்லாவற்றுக்கும் பதில் அளித்தேன்.

அதே நொடியில் எங்கிருந்தோ ஆட்கள் அறைக்குள் நுழையத் தொடங்கினர். அவர்கள் அறையின் மூலைகளிலும் தாழ்வாரத்தின் முக்கிய பகுதிகளிலும் சென்று நின்று கொண்டனர். அவர்கள் அமைதியைக் குலைக்காமல் இடத்தை நிரப்பினர். அவர்கள் தங்களுக்குள் இடமாற்றம் செய்துகொண்டு கூர்மையாகக் கவனித்தபடியே நின்றனர். அவர்களது மௌனத்தில் ஒரு ஆர்வம் தென்பட்டது.

“எங்களை அறிமுகப்படுத்த மாட்டீர்களா?”  என்று அவர்கள் கேட்டார்கள்.

“இவர்கள்…. என நான் வாக்கியத்தை ஆரம்பிக்க எண்ணி,  வார்த்தைகளின் போதாமையால்,  வாக்கியத்தை முடிக்கத் தடுமாறினேன்.

நீங்கள் யார் என நான் கேட்டேன்

நாங்கள் உன் நண்பர்கள் துணைவர்கள் கள்ளக்காதலர்கள் என அவர்கள் தடைப்பட்டுவந்த கூட்டுக் குரலில் பதிலளித்தார்கள்

நான் முதலில் கதவைச் சரியாகத் தாழிட்டேனா  என்று பார்க்க நினைத்தேன். உடனடியாகக் கதவைத் தாழிடாவிட்டால் இன்னும் பலர் விரைவாக உள்ளே நுழைந்து விடக்கூடும். என்னை மணம் புரிய நினைப்பவர்களுக்கும் வீட்டிலுள்ள வசதிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மேஜை நாற்காலிகள்,  திரைச்சீலைகள்,  பாத்திரங்கள்,  உணவு என எனக்குப் பழக்கமாய் இருந்த நான் பிறந்த நாள் முதலாய்  பார்த்துக்கொண்டிருந்த அனைத்து கட்டமைப்புகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டிருந்தது. அதேசமயம் அவற்றுக்கிடையே வினோதமான பரஸ்பர இணக்கமும் தென்பட்டது. மணமகனின் இருப்பு , சிறப்பான விருந்தோம்பலைக் கோரியதாலும்,  அதிகப்படி தட்டுகள்,  நாற்காலிகள்,  கைக்குட்டைகள் போன்றவை தேவைப்பட்டதாலும்,  அவை வீட்டுக்குள் மேலும் அந்நியர்களின் வருகையை ஈர்த்தன.

நான் வாயிலுக்கு வந்த போது,  சீருடை அணிந்து ஒரே ஒரு நபர் மட்டும் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருப்பதைக் கண்டேன்.

“நான் தபால்காரர் மட்டுமே”

“ஓ!  அப்படியா!  தயவு செய்து உள்ளே வாருங்கள்”

“நீ என்னை விட்டு விலகியதிலிருந்து….. அவர் வாக்கியத்தை முடித்தார்.

“ஓ! கனத்த மௌனம் காற்றை நிறைத்திருந்தது. எனக்கு அவரைப் பற்றி ஏதேனும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தால் கூட நான் அதை உரக்கச் சொல்லி விடலாம் என நினைக்கிறேன்.  “அழகான சட்டை” என நான் மேம்போக்காகக் கூறினேன்.

அவர் என்ன  கூற விழைகிறார் என்பதை நான் நிச்சயம் புரிந்து கொள்வேன் என நினைத்தாரோ என்னவோ, “ஆம். நீ என்னை விட்டு விலகியதிலிருந்து…என்று கூறினார்.

இருள் சூழ்ந்த திரைகளில் காண்பிக்கப்பட்ட பழைய படங்களில் ஏற்கனவே பார்த்து இருந்ததால்,

அவரது கண்களில் புகைப்படலம் போல நிறைந்திருந்த நீரை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

“ஆனால் உனக்கு என்னை நினைவிருக்கப் போகிறதா என்ன?”  அவரது குரலில் கசப்பு நிறைந்திருந்தது.

எந்த மாதிரியான மனுஷி நான்? என்னிடம் நினைவுகளின் களஞ்சியமே இருந்தது. சமீபத்திய நினைவுகளும்,  காலப்போக்கில் ஓரங்கள் சீராக மழுங்கடிக்கப்பட்ட மிகப் பழைய நினைவுகளும் அதில் நிறைந்திருந்தன. நான் சிபிஆர் செய்யும் தகுதி பெற்றவள் என்பதும், கோடை மாதங்களை கல் உடைக்கும் சுரங்கத்தின் மூன்றாம் தர நீச்சல்குளத்தில் செலவழித்தேன் என்பதையும் என்னால் நினைவு கூற முடிந்தது. அங்கு கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களின் தலையின் வடிவத்தில் ஐஸ்க்ரீம் குச்சிகள் விற்பார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. ஆனால், இந்த நபர் யார் என்றோ அல்லது வீட்டின் உள்ளே மேஜையை அடுத்தும் அதற்கு அருகேயும் நின்று கொண்டு,  என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நபர்கள் யாரென்று எனக்குச் சத்தியமாகத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் எனக்காக அல்ல,  என்னிடம் அன்பு கொண்டிருப்பதாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் புன்னகைக்கையில்,  அவர்களது கண்களையும் வாயையும் சுற்றி இருந்த தசைகள் ஒன்று சேர்ந்து கொண்டன. அவர்கள் எல்லோருமே ஒரே மூலப் பொருளால் படைக்கப்பட்டவர்கள் என எனக்குத் திட்டவட்டமாகத் தோன்றியது.

சதைகளாலான பெரும் துணிக் குவியலின் சொந்தக்காரர் எவரோ தான் அவர்கள் அனைவரையும் படைத்திருக்க வேண்டும். எந்த காலத்திலோ நான் அவர்களை சந்தித்திருக்கக்கூடும்: காதலித்திருக்கக்கூடும். மகிழ்வான தருணங்களை உடனிருந்து அனுபவித்திருக்கக்கூடும். ஆனால்,  இப்போது அவர்கள் ஒரு வகையான வெறுப்புணர்வை,  தெளிவற்ற மனவருத்தத்தை மட்டுமே தூண்டினார்கள்.

நான் இந்த புதிய நபரை மேஜைக்கு  அருகே அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே, அங்கிருந்த அனைவரும் ஒருவித ஆவலோடு காத்திருந்தார்கள். ஒருவர் சொன்னார் –  நான் அவளது வருங்கால கணவர். மற்றொருவர்,  நான் அவளது காதலன் என்றார்.  நானும் என மூன்றாமவர் கூறினார். மேஜையின் இரு பக்கத்திலிருந்தும் அவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்தார்கள்.  ஒருவர் தனக்கு அடுத்தவரின் தட்டிலிருந்த உணவை எடுத்து கோபத்துடன் சாப்பிட்டார்.  எந்தவித குழப்பமும் தேவையில்லை என நான் நம்பிக்கையுடன் கூறினேன். அவர்கள் என்னை முறைத்தார்கள். இவர்களில் எவரேனும் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டி வருமோ? இங்கு, இப்போது, இவர்கள் அனைவருக்கும் எதிரே வெளிப்படையாகப் பொதுவெளியில் எப்படி? அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்க அனுமதித்தாலும்,  நான் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்? எனக்கு இவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது.  இன்னும் சொல்லப்போனால், எனக்கு இவர்களைத் தனித்தனியாக அடையாளம் காணக்கூடத் தெரியாது. அவர்களைப் பார்க்கும்போது அவர்களது சிகை அலங்காரத்தில் இருக்கக்கூடிய நுண்ணிய வேறுபாடுகளை அடையாளம் காணக்கூட நான் கஷ்டப்படுவேன். அவர்களது சிகை அலங்காரங்களை வித்தியாசமான பெயர்களைக்கொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகர்களுடன் மனரீதியாக ஒவ்வொரு விண்ணப்பதாரரையும்  வகைப்படுத்த உதவும் வகையில் தொடர்புபடுத்திக் கொள்வேன். இப்பெயர்களை அவை தற்காலிகமானவை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வதற்காக “மேற்கோள் குறிகளுக்குள்”  இட்டுகுறித்து வைத்துக்கொள்வேன். உதாரணமாக “பாட்ரிக்”, “டேவிட்” “ஜான்”,  “மைக்கேல் “, “மார்க்கோ”,  “ஜாக்” இத்யாதி. பெரும்பாலும் நான் அவர்களைப் பார்க்கும்போது அவர்களது முகத்தைப் பார்த்ததில்லை அல்லது அவர்களுக்கு முகம் என ஒன்று தனியாக இருந்ததா என அறியக்கூட முயன்றதில்லை. இதுதான் காதல் என்பதா?

நான்  அம்மாவை நோக்கித் திரும்பினேன். இவர்களிலிருந்து எவரையுமே தேர்ந்தெடுக்காமல் இருந்துவிட முடியுமா எனக் கேட்க நினைத்தேன். இறுக்கமான உதடுகளுடன்,  தலையை வேகமாக அசைத்தவாறே அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார். நாசித்துவாரங்கள் விரிந்து சுருங்க வேகமாக மூச்சு விட்டார். முடியாது என்பதே விடையாக இருக்கும் என எனக்குத் தெரிந்தது.

ஆண்களின் வடிவ ஒற்றுமையும் லியோனார்டோவின் உதாரண புருஷனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் திறனும் மிகச்சாதாரணமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் உதாரணமாகக் கருதப்பட்ட மையால், உயரம், அகலம், அறிவு,  உணர்வுகள் போன்றவற்றின் பொதுவான மற்றும் மாற்றக்கூடியவற்றின் அலகாக ஆண்கள்  கருதப்படுகிறார்கள். கண்டங்களுக்கு இடையேயான அல்லது நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தைக் கணக்கிட நாம் அவர்களை உபயோகிக்க முடியும். வானிநிலையின் எடையை அளக்கவோ,  மளிகைக்கடையில் பொருட்களை வாங்கவோ நாம் அவர்களை எளிதாக உபயோகித்துக்கொள்ள முடியும். ஆண்கள் இவ்வளவு அதிகமாக இருப்பதால் நாம் விரும்பும் எதைப் பற்றியும் அறிந்துகொள்ள அவர்களை எளிதாக உபயோகித்துக்கொள்ள முடியும்.

நான் ஆண்களைக் குறித்து மோசமான மதிப்பீடுகளை வைத்துள்ளேன் என்று எனக்குத் தெரியும். என்னால் அவர்களது சொற்களையோ ஓசைகளையோ கவனிக்க முடியவில்லை.  என் இடப்புறம் இருந்த விண்ணப்பதாரர்,  என் கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துகொள்ள முயன்றபோது சாப்பிடுவதற்காக வைத்திருந்த ரோல் ஒன்றை என் கைகளுக்குப் பதிலாக அவரது கையில் திணித்து அவரை வருத்தத்துக்குள்ளாக்கினேன்.அவர்கள் மேஜையைச் சுற்றி வந்து பட்டியலிடப்பட்ட பெயர்ச்சொற்களும் பெயரடைகளும் ஏதோ ஒரு விதத்தில்,  அங்கிருந்தவர்களுக்குப் பொருத்தமாக இருந்தன. ஆண்களின் உலகத்தைக் குறித்து அவர்களது மீமிகைத்தன்மை,  அவர்களது  குழு மனப்பான்மை, இங்கிதம், சமூக ஈடுபாடுகள் போன்றவை குறித்து அதிகம் யோசிக்காமல் இருக்க விரும்பினேன். ஆண்கள் முரண்கள் நிறைந்தவர்கள்.

“சரி,  நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்?  என அம்மா கேட்டாள்.

பூங்கொத்து கொண்டுவந்த நபரைக் காட்டி ‘இவர் மலர்களைக் கொண்டுவந்தார்’ என்றேன்.

“அந்தப் பூக்கள் தங்கள் உறையிலிருந்து,  சிறைப்பட்டிருந்த நறுமணத்தைத் தந்தன.”

அந்த நபர் எழுந்து நின்று “அது உண்மைதான்” என்றார். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் என்பதை நான் கூறியாகவேண்டும். நீ எனக்கு மிகவும் பொருத்தமானவளாக இருப்பாய் என நான் நினைக்கிறேன். ஆனால், நான் உன்னிடம் சொல்லப் போகிற விஷயம் உன் முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாமே என உன்னை எண்ண வைக்கக்கூடும்.”

“நீ ஏன் சமையலறைக்குச் சென்று முடிவு செய்யக்கூடாது? இது உங்கள் இருவருக்கும் இடையேயான விஷயம் போலத் தோன்றுகிறது ” என அப்பா கூறினார்.

நான் சம்மதித்தேன்.

அந்த நபர், என் முழங்கையைப் பிடித்துக்கொண்டு என்னை அறையிலிருந்து வெளியே கூட்டிச் சென்றார். அறையை விட்டு வெளியேறும் முன், பின்பக்கம் திரும்பி,  என்னையே பார்த்துக்கொண்டிருந்த என் பெற்றோரையும் அங்கு குழுமியிருந்த மற்ற ஆண்களையும் நோக்கி,  அநாகரீகமான முறையில் கண்ணடித்தார். நான் எனது வருந்தத்தக்க நடத்தைகளுக்காகவும் பிழைகளுக்காகவும் மன்னிப்பு கேட்கும் விதமாகக் கையசைக்கவோ,  சைகை காட்டவோ விரும்பினேன். ஆனால் அந்த நபர், கட்டை விரலால் என் உள்பக்க எலும்பை உறுதியாக அழுத்திப் பிடித்திருந்ததாலும், அவரது கைகள் என் முதுகைச் சுற்றி அழுத்தமாகப் படிந்து இருந்ததாலும்,  என்னால் திரும்பிப் பார்க்கக்கூட முடியவில்லை. என் கால்களை விடுவித்துக்  கொள்வதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது என உணர்ந்தேன்.

சமையல் அறைக்குள் நுழைந்ததும், அந்த நபர் என் பக்கம் திரும்பி என்னை இறுகக் கட்டிப் பிடித்தார். என்னுடைய முடிக்கற்றை ஒன்றைப் பிடித்தவாறு, நீளமான தன் இரு விரல்களால் என் தாடையை வருடினார். “எப்படி உணர்கிறாய் என் செல்லமே?”  என மென்மையாகச் சிரித்தவாறே கேட்டார்.

“நான் குழப்பத்தில் இருக்கிறேன்” என பதில் அளித்தேன்

ஆமாம் என அந்த நபர் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவாறே பதிலளித்தார். ” நான் உன் உணர்வுகளை அறிய விரும்புகிறேன். நான் உன் மீது அக்கறை கொண்டிருக்கிறேன். நான் உன்னை விரும்புகிறேனா என உனக்கு உறுதிகள் தேவையாக இருக்கிறது  இல்லையா என அவர் கேட்டார்.

இதுகுறித்து யோசித்ததில் நான் தெரிந்து கொள்ள விரும்புவதை விட இது மிகக் குறைவே என்றும் எதையுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பதே சரி என்றும் தோன்றுகிறது. இதுவும் சரி என்றே தோன்றுகிறது என்றேன்.

“ஆம், சரியாகத்தான் இருக்கிறது” என பதிலளித்தவாறே கேலியாகச் சிரித்தார்.  இது பெரும்பாலும் உண்மையே. ஆனால்,  நான் உன்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தேன் என்பது எனக்குத் தெரிந்திருப்பதைப் போலவே உனக்கும் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்

“என்ன?”

“நான் உன்னைக் கொலை செய்யவே இங்கு வந்தேன்” என்றார் அவர்..

அவர் ஏற்கனவே சமையலறை அலமாரிகளில்,  என் மார்பில் இறக்குவதற்காக,  கத்தியைத் தேட ஆரம்பித்துவிட்டிருந்தார். பேச்சைத் துவக்க இது சரியான சமயம் இல்லை. ஒருவேளை பின்னர் சரியான சமயம் வாய்க்கக் கூடும்.

“சமையலறையில் எந்த விதமான கத்திகளும் இல்லாத  ஒரே நபர் நீதானா” குரலில் எந்தவித எரிச்சலும் இல்லாமல் அவர் கேட்டார்.

“அப்படித்தான் தோன்றுகிறது” என்றேன்.  நான் இதை எந்தவிதமான எள்ளலும் இல்லாமல் உண்மையாகக் கூறினேன். ஆனால், நான் கேவலமான ஒருத்தியைப் போல இருப்பது எனக்கே தெரிந்தது.

“நீங்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால்,  நெடுநாட்கள் முன்னரே திருமணமாகிவிட்ட வயதான தம்பதிகளைப் போலத்தான் தோன்றுகிறீர்கள்” என,  தற்செயலாகச் சமையலறைக்குள் நுழைந்துவிட்ட, என்னை மணக்க விண்ணப்பித்திருக்கும் நபர்களில் ஒருவர் கூறினார்.

“எனக்கு உதவி செய்வீர்களா?” என நான் அவரைக் கேட்டேன்

“என்ன உதவி?” என அவர் கேட்டார்.

“என்னைக் கொல்ல வந்திருக்கும் இந்த நபரிடமிருந்து நான் தப்பிக்க” என்றேன்.

தயவு செய்து உதவி செய்யுங்கள் என்பதைக் கேட்கத்தான் நான் காத்திருந்தேன் என அந்த நபர் வறண்ட குரலில் பதில் அளித்தார்.

சில அடிகள் தூரத்தில்,  என் கொலைகாரர் தனது கடிகாரத்தைத் பார்த்தார்.

நான் தேர்ந்தெடுத்த நபர் கூர்மையான பொருள் எதையோ தேடிக் கண்டெடுத்து என்ன சொல்லப் போகிறார். அதற்கான காரணங்களை அவர் சொல்ல மாட்டார். இதற்கிடையே நான் அவரால் குத்திக் கொலை செய்யப்படாமல் இருக்க வேண்டியதன் அவசியத்திற்கான என் காரணங்களைச் சொல்லி விடவேண்டும். கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுவதென்பது, கூர்மையான ஆயுதத்தால் குத்தப்படுஎன்பது,  என் உடலின் உறுப்புகளினி டையே நிலவும் பொதுவான நல்லிணக்கத்துக்கு கேடுவிளைவிக்கும். அதன் செயல்பாடுகளை தாக்கும். சுயசார்பு வாய்ந்த மற்றும் பூரண பாதுகாப்பைத் தருகிற, முழு கவசம்  போன்ற என் உடலை பாதிக்கும். அது என் நரம்பு மண்டலத்தை,  சுற்றோட்ட உறுப்புகளை,  சுவாச மண்டலத்தை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பை வெகுவாக பாதிக்கும்‌‌ . என் உடலின் உட்புறம்,  ஏதேனும் ஒரு வித  கசிவைவை உண்டாக்கி விடக்கூடும்.  எல்லாவற்றுக்கும் மேலாக,  என்னை உலகத்திற்கு முன்பாக விரித்துப் போட்டு என்னை கையறு நிலைக்குத் தள்ளிவிடும். உதவும் குணம் வாய்ந்த  விண்ணப்பதாரர்,  இதற்கிடையில் வேறொரு அறைக்குச் செல்லும் கதவைக் கண்டுபிடித்திருந்தார்.

“இங்கே ” என்றார் அவர்.

இப்போது நாங்கள் அந்த கதவருகே நின்று கொண்டிருந்தோம். அவர் “இங்கே” எனக் குறிப்பிட்ட இடம் என்னுடைய படுக்கை அறை. நான் நடுநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து என்னிடமிருந்த மின்னி மௌஸ் அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. நான் எப்போதும்  எதையேனும் வேண்டாம் எனத் தூக்கி எறிந்ததில்லையா?

கதவைப் பூட்டி விடுங்கள் என்றேன். கைப்பிடியைச் சுற்றியவாறு ” இப்படியா?” என அவர் கேட்டார். இல்லை,  மூடிவிடுங்கள். திறக்க முடியாதபடி மூடி விடுங்கள் என நான் விளக்கினேன்.

அவர் கவனிக்காதது போல நின்று கொண்டிருந்தார். கதவைப் பூட்டுங்கள் என நான் கோபத்துடன் சத்தமாகக் கூறினேன்.

நீ என்னிடம் கத்த வேண்டிய அவசியமில்லை என்றார் அவர். நான் கதவைப் பூட்ட முயன்றேன். ஆனால், பூட்டு சுழன்று கொண்டே இருந்தது. வீட்டில் வேலை செய்யாத பூட்டு உள்ள ஒரு அறையைத் தான் அவர் தேடிக் கண்டுபிடித்து இருக்கிறார். நான் மாடிப்படிகளில் காலடி ஓசையைக் கேட்டேன். ஓசை அடுத்த படுக்கை அறையின் வாசலில் நின்றது. பின்னர் குளியலறைவாசலில் நின்றது. பிறகு என் படுக்கை அறையின் கதவுக்கு முன்பாக நின்றன.

“என்னை உள்ளே வர விடு” என கதவின் வெளிப்பக்கத்தில் இருந்து குரல் கேட்டது.

“கதவு பூட்டப் பட்டிருக்கிறது. உங்களால்  உள்ளே வரமுடியாது என நான் கூறினேன்.  நான் பொய் சொன்னேன் .  பொய்யை உண்மையாக மாற்ற  எனக்கு மேலும் தகவல்கள் தேவைப்பட்டன. ஆனால் என்னிடம் வார்த்தைகள் ஏதும் எஞ்சியிருக்கவில்லை. நீண்ட மௌனம் நிலவியது. கதவுக்குமிழைத்  திருப்பி கதவைத் திறக்க அவர் முயன்றுவிடக்கூடாது என்று நான் வேண்டினேன்.

சற்று யோசனைக்குப் பிறகு, ” சரி பரவாயில்லை” என அவர் கதவின் அந்தப்புறம் நின்றுகொண்டு கூறினார். ” நான் கூர்மையான கத்தி ஒன்றைக் கண்டுபிடித்து விட்டேன். கதவு பூட்டப்பட்டிருந்தாலும் அது உன்னை வந்தடையும். நீ இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கும் வரை அது நிகழாது” என்றார் அவர்.

நான் தயங்கினேன் பொய் சொல்கிறாரா?

“பெரிய கத்தியா ?”கதவுக்கு இந்தப்புறம் நின்றுகொண்டு அவரிடம் கேட்டேன்.

“அதைப்பற்றி உனக்கென்ன? என்றார் அவர்.

நான் ஆழ்ந்து யோசித்தேன் “நீங்கள் மாடிப்படி ஏறி வந்த ஓசையை நான் கேட்டேன். நீங்கள் மறந்துவிட்டிருப்பீர்கள் என நினைத்தேன்” என்றேன். “அப்படி இல்லை என்றார் அவர்.

“நல்லது. அந்தக் கத்தியை கதவுக்குமிமிழின்  மீது தட்டுங்கள். நான் அதன் ஓசையைக் கேட்க வேண்டும்” என்றேன்.

கிளிக் கிளிக் என அவர் வாயால் சத்தம் எழுப்பினார்.

“இல்லை. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றேன்.  “சரி,  கதவு பூட்டப்பட்டிருப்பதால்  நீ முன்பு சொன்னதையும் நான் நம்பப் போவதில்லை” என்றார் அவர்.  கதவு பூட்டப்பட்டிருந்ததால் நீ  என்னுடன் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்க மாட்டாய்.  இந்நேரம்  ஜன்னலருகே சென்று வெளியேறுவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருப்பாய். மாறாக,  நான் உன்னுடன் பேசிக்கொண்டிருந்ததில் நான் தான்  நேரத்தை வீணாக்கி விட்டேன் என்றார் அவர்.  நான் திரும்பிப் பார்த்தேன். குட்டை முடி கொண்ட நபர் ஒருவர்,  என்னுடைய கட்டிலில் படுத்துக்கொண்டு என் புத்தகங்களில் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.

பிறகு, நான் தேர்ந்தெடுத்திருந்த அந்த நபர் வேகமாக அறைக்குள் புகுந்தார். அவர் துணி அலமாரியில் கண்டுபிடித்த  பொருட்கள் சிலவற்றைக் கையில் வைத்திருந்தார். அவற்றை எனக்கு எதிரான ஆயுதங்களாகப்  பயன்படுத்த எண்ணியிருந்தார் என நான் நினைத்தேன். முதலில் அவர் துவாலைகளையும், துவைக்கப்பட வேண்டிய  துணிகளையும் என் முதுகில் நுழைக்க முயன்றார். பிறகு மடக்கக்கூடிய துணிக்கூடை ஒன்றை என் தலையை நோக்கி வீசினார்.  துணி துவைக்க உதவும் திரவம் நிரம்பிய கண்ணாடிப் புட்டிகளை  என்னை நோக்கி எறிந்தார். இறகுகளால் ஆன துடைப்பானை  என் மார்பில் பலமுறை பலமாக அழுத்த முயன்றார். பிறகு துணிகளைப் பெரிய உருண்டையாக உருட்டி என்மீது விட்டெறிந்தார்.

இதே ரீதியில் போனால் இது முடியப்போவதே இல்லை.

வேகமாக மூச்சு விட்டுக்கொண்டே அவர் நிறுத்தினார். “சரி, நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை ஏன் கொலை செய்ய முயல்கிறேன் என்று எனக்கே நினைவில்லை. நாம், மறுபடியும் முதலிலிருந்து புதிதாக ஆரம்பிக்கலாமா?” என்றார்.  நான் இது குறித்து யோசித்துப் பார்த்தேன். ” நாம் என்ன செய்யலாம்?” என நான் கேட்டேன். “நாம் ஏதேனும் ஒரு திரைப்படத்திற்குச் செல்லலாமே” என அவர் ஆலோசனை கூறினார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதேனும்  பெரிய முடிவொன்றை நான் எடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் புரிந்தது. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு,  அவரை நேசிக்க முயற்சி செய்யலாம். நம்ப முயற்சி செய்யலாம். எதையேனும் நிரந்தரமாக,   சிறந்ததாக  உருவாக்க முயலலாம். என்னைக் குறித்து அவருக்கு ஆழ்ந்த உணர்வுகள் இருந்தன. இப்போது அவர் ஒன்றும் அவ்வளவு கொடூரமாக நடந்து விடவில்லை. உறுதி வாய்ந்த, ஆழமான ஒன்றை எங்களால் நிச்சயம் உருவாக்க முடியும். அல்லது நான் சாப்பாட்டு மேஜையின் கீழேயிருந்து தவழ்ந்து சென்று கதவை நோக்கி ஓட முடியும். எப்படிப்பார்த்தாலும்,  பின்னால் ஒரு சமயம்  அவர் என்னைக் கொல்லவும்  வாய்ப்பு இருக்கிறது.

நான் சாப்பாட்டு மேஜையின் கீழே இருந்து தவழ்ந்து கதவை நோக்கிச் சென்றேன்

அவர் இன்னமும் எனக்குப் பின்னால் நின்றுகொண்டு,  கீழே விழுந்து கிடந்த நாற்காலிகளையும், எனக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த பத்தடி தூர வித்தியாசத்தையும் சபித்துக் கொண்டிருந்தார். நான் கதவை நெருங்கி அதன் குமிழைச் சுழற்ற முயல்கையில்,  அது சுழலவில்லை. கதவின்  தாழ்ப்பாள் வெளிப்புறம் இருந்தது.  தாழ்ப்பாள் வெளிப்புறம் இருந்தது யாருக்குத் தெரியும்?  தற்சமயம்,  மற்றுமொரு முற்றிலும் அறிமுகமில்லாத அன்னியர் மட்டுமே நான் வெளியே அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை முடிவுசெய்ய முடியும்.

மறுபடியும் ஓடித் தப்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். அவர் அந்த அறையில் வேறு ஏதேனும் ஆயுதம் கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தார் . பெரும்பாலும் அவர் அதைக் கண்டுபிடித்துவிடவும் கூடும்.  நான் வெளியேறக் காத்திருந்தேன். நான் எவரையேனும் இறுக அணைத்துக்கொண்டு,  அது யாராக இருப்பினும் சரி, ,  ஏன் இந்த நபரேயாயினும்கூட சரிதான்,  திங்கட்கிழமை காலை வேலையைத் தொடங்கும் வரை,  நிம்மதியாக உறங்க விரும்பினேன் . எனக்குப் பிடிக்காத முறையிலிருந்தாலும் கூட,  என் முகத்திலும், தாடையின்  மீதும், அது எவருடையதாக  இருந்தாலும் சரி , விரல்களின் ஸ்பரிசத்தை உணர விரும்பினேன்.

அலெக்ஸாண்டரா க்ளீமேன்

தமிழில்: அனுராதா கிருஷ்ணசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.